Tuesday, July 23, 2019

கவிதை -வாழ்வைப் பற்றிய தேடல்



புரியாப் புதிரொன்றை
முடிச்சவிழ்க்கும் பாரம் எனக்குள்.

உலர்ந்து போன இரவுகளில் 
ஈரஞ் சொட்டச் சொட்ட 
விழித்திருந்த அந்த நாட்களில் கூட
அதைப் புரியும் சந்தர்ப்பமில்லை.

தூங்கும் போதும்
எழுதும் போதும்
காற்றை வலித்து
மிதிவண்டியில் செல்லும் போதும்
பாரம் என்னை அழுத்துகிறது.

பிரயத்தனங்களின் முடிவு
பூச்சியமாகும் போது
அது சூன்யமெனத்
தோற்றந் தருகின்றது.

இப்போது வரையில்
போலிகள் மதிலாகி
மனவீட்டைக் காக்க நான்
தூங்குகிறேன்
பயணிக்கிறேன்

உப்பகலாக் கடல் நீரெனவான
அதற்குள் நின்று கொண்டே
கேட்கிறேன்
“வாழ்க்கை எங்கிருக்கின்றது ? ”

புரியாப் புதிரின் முடிச்சவிழ்ப்பு
இன்னமும் தொடர்கிறது.

                    கவிதை சித்திரை-வைகாசி 1995

கவிதை சஞ்சிகைநடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது

கவிதை -முரண்





வண்ணங் குழைத்த மாலை

பொன்னின் குழியாய் கதிரோன்

அலை தவழும் கடல்

காற்றை உந்தும் புட்கள்

அழகழகாய் பூக்கள்



ஓய்வற்ற வெடியொலி.

மெய் பிளந்த பிணங்கள்.

முகமிழந்த வீடுகள்.

மகிழ் மறந்த மனிதர்கள்.

வண்ணங் கலைந்த மாலை.


             கவிதை மாசி-பங்குனி 1995

கவிதை -இருப்பு



காதைக் கூர்மைப்படுத்திக் கொள்.

உருவழிந்து போன அதன்

உள்ளிருந்தொரு பாடல் கேட்கிறது.

காதைக் கூர்மைப்படுத்திக் கொள்!


இறந்து போன வாழ்வை

அது முணுமுணுக்கிறது.

நிலவில் குளித்ததையும்

நெடுவானில் அலைந்ததையும்

மனதை அலைபாய்ச்சி

வாழ்வமைத்ததையும்

அழகான வரிகளில்

சொல்கிறது அப்பாடல்.


இனிப் பார்!

அதன் உருத் தெரியும்.


                      கவிதை மாசி-பங்குனி 1995

இராணுவ விஜயம்


ஒரு கனத்த நாளென்று 
அப்பு சொன்ன காலையில்
தெருவில் ஆடை கிழிந்து
ஏதோவொரு வெறியில் 
திரியும் விசரனைப் போல்,
கட்டவிழ்த்துப் பாயும் 
காளை மாடுகள் போல்,
வாலை நீட்டி அலையும்
தெரு நாய்கள் போல்,
வேலிகளைப் பிரித்தபடி
‘அது’கள் வந்தன.

மதியத்திற்குள் திரும்பின.

பின், 
கிராமத்திற்குள் 
காயமடைந்த நாங்கள் சிலரும்
சடலங்கள் பலவும்
எரிந்து எஞ்சியிருந்தவையும் 
மட்டுந்தான்!

                 கவிதை ஐப்பசி-கார்த்திகை1994

இடைவெளிகள்



நண்பனே!
எனக்கும் உனக்கும் இடையில்
எவ்வளவு இடைவெளிகள்!

நானும் நீயும்
எங்கள் தேசத்தில்தான் நிற்கிறோம்.
ஆனால்
இடைவெளிகள் மட்டும்
தொலைதூரத்தில்…

பள்ளிக்குச் செல்லும் தெருக்களில்
பிஞ்சுப் புளியங்காய்களைப் பறித்து
பை நிறையப் போட்டுக் கொண்டு
கை பற்றித் திரிந்த நாட்கள்…

வகுப்புக்குப் போகாமல்
வழுக்கியாற்றில் நீந்திய பொழுதுகள்…
கள்ளமாய் விளாங்காய்க்குக்
கல்லெறிந்த வேளைகள்…
இன்னும் நினைவிலுண்டு.

பச்சை உடையுடன் சந்திகளில் நிற்கும்
பாதகரைப் பீதியுடன் பார்த்து மிரண்டு
ஆமி என்றலறும் என்னைத் தேற்றும்
உன் ஆதரவுக் கைகள்…

ஆமியின் பூட்ஸ் கால்கள் உன்னைப்
பதம் பார்த்த போதும்
கலங்காத உன் விழிகள்…
எல்லாமே நினைவிலுண்டு.

நம் இடைவெளிகள் மட்டும்
தொலை தூரத்தில்…

எனக்கும் உனக்கும்
காதல் பெரரிதானது.
நான் பெண் மேல் காதல் கொள்ள
நீ மண் மேல் காதல் கொண்டாய்.

நான் அவளுடன் சுற்றித் திரிகையில்
இராணுவம் உன்னைத் தேடியலைந்தது.
நீ காட்டில் கரந்துறைந்தாய்!

நான் அவளைக் கைப்பிடித்து
தாலி கட்டிய போது
நீ ஆயுதத்தைக் கைப்பிடித்து
குப்பி கட்டி கொள்கை வழி நடந்தாய்.

நான் என் பின் வழிமுறைகளை
உருவாக்கிய வேளை
நீ உன் பின்னால்
ஒரு தலைமுறையையே
அணிதிரட்டியிருந்தாய்.

நான் வாழ்வுப் பிரச்சினைகளுக்கு
முகம் கொடுத்த வேளை
நீ சமூகப் பிரச்சினைக்குத்
தீர்வு கண்டிருந்தாய்.

நம் இடைவெளிகள் மட்டும்
தொலைதூரத்தில்…

இடம்பெயர் வாழ்வும்
இலக்கின்றிய பயணமுமாய்
நான் ஓட,
இவ்வவல வாழ்வு நீக்க
நீ
இலக்கு நோக்கிப் பயணிக்கிறாய்
கையில் இலகு இயந்திரத் துப்பாக்கியுடன்…

விடிவெள்ளி பூக்கவில்லை
வீதியிருள் தொலையவில்லை

விடியலின் பாடலுக்காய் - உன்
விரலசையும்; தாளமிடும்.
உனதும் உனது தோழரதும்
உறுதி குழைத்த உயிர் விதைகள்
புதிய உலகொன்றைப் பிரசவிக்கும்;;
நாளைய தலைமுறைகள்
அதிலே நிழல் ஆறும்.
உமை நோக்கி
நம்பிக்கைக் கீற்றுடன் நாம்…

எனினும்
நம் இடைவெளிகள் மட்டும்
தொலை தூரத்தில்….

             காலம் எழுதிய வரிகள் ஐப்பசி 1994

தலைமுறைகள்














தாத்தாவும் அப்பாவும்
வாழ்ந்த வாழ்க்கை
என்னிடமில்லைத்தான்!

தாத்தா
பால் தயிரும் வரகரிசி எனவெல்லாம்
வாய் நிறையத் தின்றார்கள்.

அப்பா
தேயிலை கோப்பியும்
கோதுமையும் பாணுமாய்
குறைவற்றுத் தின்றார்கள்.

எனக்கு நிவாரண *அம்மாப் பச்சைதான்!
சிலவேளை அதுவுமில்லை.

தாத்தா நாற்சார வீட்டில்.
அப்பா சீமெந்து வீட்டில்.
இன்றெனக்கோ வீடில்லை.
அகதி முகாமே சொந்தமென.

தாத்தா மலாயன் பென்சனியர்
அப்பா அரசாங்க பென்சனியர்
எனக்கென்று ஒன்றுமில்லைத்தான்!

தாத்தா வெள்ளையனுக்கு அடிமை.
அப்பா சிங்களவனுக்கு அடிமை.
நானோவெனில் யாருக்குமில்லை.


                   வெளிச்சம் ஐப்பசி 1994

* இடம் பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகை பழுப்பு வெள்ளை அரிசி.அதிகம் விரும்பி உண்ணப்படுவதில்லை.

மூன்றாம் மண்டலத்தின் காயப்பட்ட மண்ணிலிருந்து


இந்த ஆண்டு குடும்பத்தினர்க்கானதாம்!
 ஐ.நா.பிரகடனம் காதைக் கிழிக்கிறது.
 கறுத்துப் போய் இதயம் கன்றிப் போய் வயிறு.

 00

 கடந்த இரவுகளில் எனது உறவுகள் தொலைந்தன.
 எங்களுக்குள் அந்நியம் வேர் விட்ட நினைவுடன் நான்.

 00

 இருளின் கருமைக்குள் எல்லாம் அரங்கேற
புலர்ந்த பொழுதில் நான் தூர விரட்டப்பட்டேன்.
முகம் மலர்த்தும் எனது முற்றத்தில் அந்நிய முகங்கள்.
 அவர்தம் கரங்களில் உயிர்பறி கலங்கள். 
உறவுகள் பிளந்தன!
 கிழட்டு அம்மாவின் கால்கள் அகதிக் கொட்டிலுக்குள்.
அக்காவும் அத்தானும் அப்படியே அப்பால்…
அண்ணன்மாரோ கடல் கடந்து மேற்குலகில்
வள்ளம் சிலருடன் இந்தியா நோக்கி.
 எங்களுக்குள் அந்நியம் வேர் விட்ட நினைவுடன் நான்.

00

 இடையிடை கடிதங்கள் அன்பை ஒட்டி வரும்.
 கிழிபடும் அதற்குள் காய்ந்த குருதி.
வேர்கள் இல்லாது கிளைகள் பரப்பினோம்
உலகமெல்லாம் நிறைந்து உலகமில்லா நாங்கள்.

 00

 எனது மண்ணைப் பிடித்தவன்
 எனது உறவுகளைத் தொலைத்தவன்
 என் மீது ரவைகளைப் பொழிகிறான்.
எனது இருப்பை நான் பரிசீலிக்க வேண்டும்.

 00

 ஐ.நா.பிரகடனம் காதைக் கிழிக்கிறது.
கறுத்துப் போய் இதயம்
கன்றிப் போய் வயிறு.

 00

 மூன்றாம் மண்டலத்தின் மூலையிலொரு காயப்பட்ட மண்ணிலிருந்து குரல் கொடுக்கிறேன். எனக்கு வேண்டும் எனது மண்! எனக்கு வேண்டும் எனது மொழி! எனக்கு வேண்டும் எனது உறவுகள்!

 கவிதை சித்திரை-வைகாசி 1994