Saturday, July 27, 2019

கவிதை -இயக்க வியூகம்

ஒளிப்படம் : இயல்வாணன் 

போர் வீரர்கள் செப்பனிடுகிறார்கள்
தங்கள் துப்பாக்கிகளை
அடுத்த யுத்தத்துக்காக.

அரசியல்வாதிகள் ஈடுபடுகின்றனர்
பிரச்சாரப் பயிற்சியில்
அடுத்த தேர்தலுக்காக.

வணிகர்கள் ஒழுங்கமைக்கிறார்கள்
பண்டங்களையும் உத்திகளையும்
அடுத்த பண்டிகைக்காக.

ஊடகங்கள் தேடுகின்றன
குறைகளையும் இயல்பின்மையையும்
அடுத்த செய்தி அளிப்புக்காக.

தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்
அடுத்த பட்டத்துக்காகவும்
மடாலயத் தலைமைப் பதவிக்காகவும்.

கருமங்களைச் சுமந்தபடி அலையும்
மனிதர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்
அடுத்த சம்பளத் தேதியை.

தெருவோர நிழலில்
எந்த விவஸ்தையுமற்றுப் படுத்துறங்கும்
பிச்சைக்காரனது மனதில்
நாளைய யாசகத் தெருவின் வரைபடம்.

                      நடுகை மாசி-பங்குனி 2004

கவிதை -ஒப்பனை ஊர்வலம்





புள்ளிவிபரங்களே வாழ்க!

உங்களால்தான்

நாட்டின் கல்வி மேம்பாடடைகிறது.

பொருளாதாரம்

சுபீட்சம் காண்கிறது.

அரசியல்

திடம் கொள்கிறது.



அறிக்கைகளே வாழ்வீர்களாக!

நீங்களே

இன மத மொழிகளுக்கிடையிலான

ஐக்கியம் பேணுகிறீர்கள்.

சமத்துவம் சகோதரத்துவம் உரிமைகளை

நிலைநிறுத்துகிறீர்கள்.

சுவர்க்கபுரியான நாட்டையும்

தார்மீக சமூகத்தையும்

கட்டியெழுப்புகிறீர்கள்.



உங்களின் ஒளிக்காட்சி

எங்கும் படிவதாக.

குருதியும் நிணமும் நாறும்

தெருக்களுக்கு

பன்னீரின் நறுமணம் தாருங்கள்.

உடைந்து சிதிலமான

வீடுகளைப் போர்த்தி

அழகு முல்லைகளை மலர்ப்பியுங்கள்.

ஊனமடைந்தவர்களை வனைந்து

இயல்பான மனிதர்களை உருவாக்குங்கள்.

கல்லறைகள் தேவையில்லை.

அவற்றை இருக்கைகளாக்கி

அழகான பூந்தோட்டம் அமையுங்கள்.

துயர் சுமக்கும் வாழ்வு குறித்தும்

துவண்டழும் மனிதர்கள் குறித்தும்

அக்கறை கொள்ளாதீர்.

செழிப்பான நாடெனும் கனவை

நிலை நிறுத்துங்கள்.

அதற்காக நீவிர் வாழ்க!

                 உதயன் 26-09-2004



கவிதை -விதிப்பு


இது பூமரங்களின் காலம்.

விதவிதமாய் வருகின்றன
வண்ணத்துப் பூச்சிகள்.

அவை
முகர்ந்து முகர்ந்து
தேனருந்துகின்றன.

தேனின் சுவை குறித்துப் பெருமிதமாய்
பேசுகின்றன.
வண்ணத்துப் பூச்சிகள்
எப்போதும் வருவதில்லை.

பூக்கள்தான்
அவற்றை வரவழைக்கின்றன.
தேனற்ற பூக்களில்
அவை பெருமை கொள்வதில்லை.

பூக்கள் உதிர்ந்து காயாவன.
பூவுதிர்த்த மாற்றம்
பூமரங்களுக்கில்லை என்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்.

                 தெரிதல் கார்த்திகை-மார்கழி 2005

கவிதை -அங்கிடுதத்திகள் பற்றிய குறிப்பு




நின்று நிலைக்கின்றன

இந்தக் கள்ளிச் செடிகள்

எந்தக் காற்றையும் வரவேற்றபடி

எந்தக் காலத்துக்கும் வாயுதிர்த்தபடி

எல்லாச் சமரசங்களோடும்.



மழையில் அவை நீராடுகின்றன.

வெயிலில் தலையுலர்த்துகின்றன.

பழங்கறை நீங்கி

புதுக்கோலம் புனைகின்றன.



புதிய அரசர்கள் வருகிறார்கள்

கள்ளிச் செடிகள்

துதிபாடி வரவேற்கின்றன.

அந்தப்புரத்துக்கு

அழைத்துச் செல்கின்றன.



கள்ளிச் செடிகளுக்குண்டு ஓரிலக்கு

வாழ்வதுதான்!

எப்படியேனும்

எவருடனேனும்.


                தெரிதல் தை-மாசி 2004

கவிதை -என்னுடையதும் அவர்களுடையதும் உலகங்கள்


சனங்கள்
வீசியடித்துப் போயினர்
சில குஞ்சுகளை,
எவரோ நட்டு வைத்த கூட்டில்
என்னைப் பராமரிப்பாளனாக்கி.

சின்னனும் பெரிதுமாய்
அசிங்கமாய் அழகதாய்
வெவ்வேறு மனத்தினதாய்
வெவ்வேறு உலகத்ததாய்

அவை மௌனத்தால் மொழிந்தன.
செயல்களால் தொடர்பாடின.
வார்த்தைகளால் புதிர் போட்டன.

எனது வார்த்தைகள்
அவற்றுக்குப் புதிராயின.
எனது செயல்கள்
அவற்றை மிரள வைத்தன.
எனது உலகம்
அவற்றை வலிந்திழுத்தது.

பால்வீதிக் கோள்களாய்
என்னைச் சுற்றின 
அவற்றின் உலகங்கள்.

எனது உலகம்
விழுங்கிச் சமித்தது
அவர்களது உலகத்தையும் எண்ணங்களையும்.

                 வெளிச்சம் மார்கழி-தை 2005
               ( 1997இல் எழுதப்பட்டது)

கவிதை -அதிகாரம் பற்றிய குறிப்பு



கனவான்கள் கண்ணியம் நிறைந்தவராய்க்
கருதப்படுவர்.

கனவான்களிடம் கைத்தடி இருக்கும்.
கைத்தடிகளின் நுனியில் 
அதிகாரம் பீறிடும்.

மாடு மேய்க்கும் இடையன்
பிரம்பால் அடிக்கும் ஆசிரியன்
குறுங்கம்பேந்திய காவற்காரன்
கம்பு சுழற்றும் சிலம்ப வீரன்
செங்கோல் தூக்கும் நீதியாளன்
வாளேந்திய அரசன்
சூலமும் வேலும் அங்குசமும்
தாங்கிய கடவுளர்
வெவ்வேறு கைத்தடிகள் எல்லோரிடமும்.

00

நடக்கும் கைத்தடியே
கனவான் சின்னம்.

அரசியல்வாதிகளும் பெருந்தனக் காரர்களும்
நடக்குந் தடியே பற்றுவர் வழமையில்

00

கைத்தடிகள் இல்லாக் கனவான்களுமுண்டு.

சிலரிடம்
ஆயுதங்கள் வெடிப்பொருட்கள்.
சீடர்கள் படை பரிவாரங்கள்

பலரிடம்
றபர்முத்திரை கடிதத்தலைப்பு பேனாவும்.

00

உங்களைப் போலவே
என்னிடமுமுண்டு அதிகாரம்
இவையெதுவும் இல்லாமல்.

கணவனாக… மனைவியாக…
தந்தையாக… தாயாக…

00

மரத்துக்கு அடித்தே
அதிகாரம் செலுத்துகிறார்கள்
நாளைய கனவானாகும்
நமது சிறார்கள்.

                          தாயகம் ஏப்ரல்-ஜுன் 2005

கவிதை -உறைந்து வந்த திருமுகம்


சிறு பராயத்துத் தோழனே!

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் 
நீ களைப்புற்றிருக்கிறாய்.

உனது வைராக்கியம் 
சீர் செய்ய முடியாமல் சிதறியிருக்கிறது.

புலன்களின் ஜீவனை 
நெருப்பு தின்று கொண்டிருக்கிறது.

எந்த நிர்ப்பந்தத்துக்கும் தலை சாய்த்து
இதயம் உருக்குலைந்து போயிருக்கிறது.

உனது பாரவையில்
குளறுபடி நேர்ந்திருக்கிறது.

தாங்க முடியாத இருளின் சுழலுக்குள்
உனதிருப்பு அலைக்கழிக்கப்படுகிறது.

000

சூம்பிய உனது இருதயத்தின் மீது
எனது கரங்களை வைக்கிறேன்.

எனது இதயத்தின் ஒலி 
உனக்குக் கேட்கிறதா?

நாம் கை கோர்த்துத் திரிந்த
ஞாபகங்களை மீட்டுவோம்.

பச்சை விரித்த மண் மீது
நமக்குப் பிடிப்பிருந்தது.
அயல் மனிதர்களை நேசித்தோம்.

இதயமிருந்த இடத்தில் 
நமது மொழியை இருத்தினோம்.
விடியலின் திசையோடும் தேரில்
இரு கை சேர்த்தோம்.

முழுநிலாப் படர்ந்த தெரு வழியே
புரட்சியின் சேதி சொல்லிப்
பாடலிசைத்தோம்.

000

இன்றென்ன புரட்சி நேர்ந்தது.

ஜாக்சனின் பாடலில் கவனம் சிதைத்து
நீ வரைந்த மடல் பெற்றேன்.
பனிக்குள் உறைந்து போகும்
உனது சூழல் போலவே
நீயுமானாய் என்ற செய்தியுடன்.

                                                         தாயகம் 34