பொன்விழாக் காணும் தேசிய கலை இலக்கியப் பேரவை
இயல்வாணன்
ஈழத்தில்
பல இலக்கிய அமைப்புகள் காலத்துக்குக் காலம் உருவாகி, இயங்கி வந்துள்ளன. சிறு குழு முயற்சிகளாகவும்
ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகளாகவும் அவை தோற்றம் பெற்றன. இலக்கிய நண்பர்கள் சிலர்
இணைந்து உருவாக்கிய அமைப்புகளாகவே பெரும்பாலும் அவை ஆரம்பிக்கப்பட்டன. நோக்க அடிப்படையில்,
சித்தாந்தப் பின்னணியில், அரசியல் பின்னணியில் அவை அதிகம் அமைக்கப்படவில்லை. எனினும்
அவற்றுக்குள் நுண் அரசியல் இல்லாமலில்லை.
வரதரின்
முயற்சியில் 1942இல் 20பேர் சேர்ந்து உருவாக்கிய தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கமே
முதலாவது எழுத்தாளர் சங்கமெனக் குறிப்பிடப்படுகின்றது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், யாழ்.இலக்கிய
வட்டம், அதன் இணை அமைப்பான இலங்கை இலக்கியப் பேரவை, கத்தோலிக்க கலை இலக்கிய வட்டம், தமிழ் எழுத்தாளர்
ஒன்றியம், தமிழ்க் கதைஞர் வட்டம், தெல்லிப்பழை கலை இலக்கியக் களம், யாழ்.இலக்கியக்
குவியம் என்பன என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கன.
பல அமைப்புகள் இன்றில்லை. சில அவ்வப்போது தமது இருப்பை அறிவித்து ஓய்கின்றன. ஓரிரு அமைப்புகள்தான் – சில தனிமனிதர்களின் செயற்பாட்டால்- தொடர்ந்தும் இயங்குகின்றன. அத்தகைய ஒரு அமைப்பே தேசிய கலை இலக்கியப் பேரவையாகும்.
புதிய
ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட
இவ்வமைப்பு மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றி வருகின்றது. யாழ்ப்பாணம்,
கொழும்பு, வவுனியா, மலையகம் ஆகிய இடங்களில் தனது செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது. அந்தந்த இடங்களில் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றும் உறுப்பினர்கள்
இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவ்வமைப்பு
அந்த இடங்களில் பல்வேறு ஆய்வரங்குகளையும், கருத்தமர்வுகளையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளது.
இந்த நிகழ்வுகளில் விவாதம், கவியரங்கம், நாடகம் முதலான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது.
தேசிய கலை இலக்கியப் பேரவை வாசிப்பை ஊக்குவிப்பதில் பெரிதும் சிரத்தையெடுத்து தொடர் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. 1996 இடப்பெயர்வின் பின்னர் மக்கள் மீளத் திரும்பி மெல்ல மெல்ல இயல்புச் சூழல் ஏற்பட்ட 2000 ஆண்டளவில் கிராமங்களுக்கு வந்து மக்கள் மத்தியில் நூற்கண்காட்சிகளை நடத்தி, விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது. சனசமூக நிலையங்கள், ஆலய மண்டபங்களை மையப்படுத்தி இந்தச் செயற்திட்டம் அப்போது முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகள் எல்லாவற்றிலும் மறைந்த கவிஞர் முருகையன் கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துரையாற்றிமை முக்கியமானதாகும். அத்துடன் வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அத்துடன்
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம்,
ஆய்வு, அறிவியல், மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்ட நூல்கள் நூற்றுக்கும் அதிகமாக தேசிய
கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தை ம.சண்முகலிங்கம், சி.சிவசேகரம்,
இ.முருகையன், மாவை வரோதயன், க.தணிகாசலம், இணுவையுர் சிதம்பர திருச்செந்திநாதன், சட்டநாதன்,
சுபைர் இளங்கீரன், மாதவி உமாசுதசர்மா, சோ.தேவராஜா, நந்தினி சேவியர், இரா.சடகோபன், முல்லை
அமுதன், அழ.பகீரதன், சி.மௌனகுரு, சோ.கிருஸ்ணராஜா, கே.எஸ்.சிவகுமாரன், தாமரைச்செல்வி,
நீர்கொழும்புர் முத்துலிங்கம், சுபத்திரன், ந.ரவீந்திரன், தில்லைச்சிவன், செ.குணரத்தினம்,
சோ.பத்மநாதன், சுல்பிகா, மஹாகவி, இதயராசன், பவித்திரன், ரஞ்சகுமார், சுதாராஜ், சி.பற்குணம்,
இளவாலை விஜயேந்திரன், சபா ஜெயராசா, க.சிதம்பரநாதன் எனப் பலரது படைப்புகள் தேசிய கலை
இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டு, மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின்
சவுத் ஏசியன் புக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பல நூல்கள் வெளியிடப்பட்டமையால் இந்தியாவிலும்
ஈழத்துப் படைப்புகளை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. தாயகம் 66 முதலான தொகுப்பு
நூல்களும் இவற்றுள் அடங்கும்.
தேசிய
கலை இலக்கியப் பேரவை ஆரம்பிக்கப்பட்ட 1974ஆம் ஆண்டிலேயே தாயகம் என்ற சஞ்சிகையும் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 7 இதழ்களுடன் நின்று போன இவ்விதழ் 1983ஆம் ஆண்டிலிருந்து ஓரளவு தொடர்ச்சியாக
வெளிவந்து கொண்டுள்ளது. “தாயகம் சஞ்சிகை கலை
கலைக்காக என்பதையும், வணிக நோக்குக்கு நிகரான மிக மலினப்படுத்தப்பட்ட இலக்கியப் போக்கையும்
நிராகரித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி சமரசமற்ற பாதையில் வழிநடந்து
வந்துள்ளது. அத்துடன் அனைத்து முற்போக்கு, ஜனநாயக மக்கள் சார்பு கலை இலக்கியங்களை என்றும்
வரவேற்று வருவதுடன் படைப்பாளிகளுக்கிடையேயான புரிந்துணர்வையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி
வந்துள்ளது“ என தாயகம் சஞ்சிகையின் 100வது இதழில் குறிப்பிடப்பட்டுள்ளமை அதன் நோக்குநிலையை
வெளிப்படுத்தி நிற்கிறது.
தாயகம்
சஞ்சிகை தனிமனித முயற்சியாக அல்லாமல் கூட்டுச் செயற்பாட்னூடாகவே வெளியிடப்பட்டு வருகிறது.
அதன் ஆசிரியராக க.தணிகாசலம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார். முருகையன், குழந்தை ம.சண்முகலிங்கம்,
சி.சிவசேகரம், மாவை வரோதயன், சோ.தேவராஜா, கே.ஏ.சுப்பிரமணியம், ந.ரவீந்திரன், அழ.பகீரதன்,
ச.சத்தியதேவன், ஞா.மீநிலங்கோ, சிவ.ராஜேந்திரன் எனப் பலரது பங்களிப்போடு காலத்துக்குக்
காலம் தாயகம் மலர்ந்துள்ளது. 50 ஆண்டுகளில் பொருளாதார நெருக்குவாரங்கள், இடப்பெயர்வு
என மக்கள் சந்தித்த எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டே தாயகம் சஞ்சிகையும் தேசிய கலை
இலக்கியப் பேரவையும் பயணித்துள்ளது. வெளிநிதிப் பலமற்ற நிலையில் மெல்ல அடி வைத்து 107 இதழ்களையே அது பிரசவிக்க முடிந்துள்ளது.
108வது தாயகம் மலையகம் 200 சிறப்பிதழாக வெளிவரவுள்ளது.
தாயகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் பல படைப்பாளிகள்
இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். காத்திரமான பல படைப்புகள் இச்சஞ்சிகையில்
வெளிவந்தன. சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு விடயங்கள் சார்ந்து சமூக விஞ்ஞானக்
கண்ணோட்டத்திலான ஆக்கங்கள் பலவும் இந்த இதழ்களில் வெளிவந்தன.
அத்துடன் புதுவசந்தம் இதழ்கள் வருடாந்த சிறப்பு மலர்களாக
வெளிவந்துள்ளன. பல்வேறு ஆக்கங்களையும் உள்ளடக்கிய கனதியான மலராக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த இதழ் 1973இல் ஆரம்பிக்கப்பட்டாலும் அது தொடர்ச்சியற்று, பின் 2000களில் ஆண்டு
மலர்களாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய
கலை இலக்கியப் பேரவையினால் சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆரம்பிக்கப்பட்டு, சமகாலத்தில்
பேசுபொருளாகவுள்ள விடயங்கள் பற்றி விடய அறிவுள்ளவர்களை அழைத்து கருத்துரைகள், கலந்துரையாடல்கள்
நடத்தப்பட்டு வருகின்றன. முழுமதி தினத்தை மையமாக வைத்து மாதாந்தம் இந்தக் கருத்தமர்வு
நடைபெறுவது வழமை. ஆரம்பத்தில் பலாலி ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற இந்தக் கருத்தமர்வுகள்
பின்னர் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
2011, 2012ஆம் ஆண்டுகளில் சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் கலந்துரையாடல் குறிப்புகள்
பிரசுரங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய
கலை இலக்கியப் பேரவை 50 வருடங்களை நிறைவு செய்வதையொட்டி பல்வேறு பிரதேசங்களிலும் நூறு
மலர்கள் மலரட்டும் என்ற தலைப்பிலான புத்தக அரங்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்தில்
வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், அரங்கு சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும்
மூன்று தினங்கள், இரண்டு தினங்கள் கொண்டதாக இந்த நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
நூற்கண்காட்சியைப்
பார்வையிட வரும் மக்களும், மாணவர்களும் நூல் அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.
சமகாலத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் தொடர்பில் இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள்
கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நாடகங்கள் இடம்பெறுகின்றன. சண்
நாடகக் குழு, செம்முகம் ஆற்றுகைக் குழு என்பன தன்னார்வ அடிப்படையில் இந்த ஆற்றுகையைச்
செய்கின்றன. இந்த நிகழ்வுக்கான நிதி கூட குறித்த பிரதேச மக்களிடம் இருந்தே சிறுநிதியாகத்
திரட்டப்படுகிறது. மக்கள் பங்களிப்புடன் மக்களை நோக்கிய இந்த நிகழ்வு நடைபெறுவது முக்கியமானதாகும்.
முதலாவது
புத்தக அரங்க விழா கொக்குவிலில் உள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை நடைபெற்றது. தொடர்ந்து
இவ்விழா மல்லாகம் மகா வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, கைதடி முத்துக்குமாரசாமி
வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, கிளிநொச்சி மத்திய
மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணோதயக் கல்லூரி, கரவெட்டி தேவரையாளி இந்துக்
கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
பேரவையின்
50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாதாந்த ஆய்வரங்குகளும் நடைபெற்று வருகின்றன. ஈழத்து அரங்கு,
நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் முதலான பல்வேறு கலை இலக்கிய விடயங்கள் சார்ந்து
இந்த ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வரங்குகளில் மக்கள் இலக்கிய முன்னோக்கில்
நாடகம் என்ற தலைப்பில் தே.தேவானந், மக்கள் கலை இலக்கியம் எதிர்நோக்கும் சவால்களும்
செல்திசையும் என்ற தலைப்பில் ஞா.மீநிலங்கோ, மக்கள் இலக்கிய முன்னோக்கில் நாவல் என்ற
தலைப்பில் கலாநிதி ந.ரவீந்திரன் ஆகியோர் ஆய்வுரையாற்றியுள்ளனர். மக்கள் இலக்கிய முன்னோக்கில்
சிறுவர் இலக்கியம் என்ற தலைப்பில் இயல்வாணனின் உரை எதிர்வரும் 21ஆந் திகதி(21-05-2023)
நடைபெறவுள்ளது.
ஈழத்தின்
கலை இலக்கிய சமூக மேம்பாட்டுக்கான காத்திரமான திசைவழியில் தேசிய கலை இலக்கியப் பேரவை
பயணித்து, சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதன் வரலாற்றுப் பாத்திரம்
பெரியது. தனிமனிதர்கள் 50 ஆண்டுகளை நிறைவு செய்வது போன்றதல்ல அமைப்புகளின் நிறைவு.
பல்வேறு சவால்களைச் சந்தித்து ஒரு அமைப்பாகத் தொடர்ந்து செயற்படுவது எளிதானதல்ல. ஒரு
கோட்பாட்டு ஒத்திசைவிலேயே இது சாத்தியமாயிருக்கும்.
தேசிய கலை இலக்கியப் பேரவை 50வது ஆண்டை நிறைவு செய்வதை
விழாக்களாக கொண்டாடாமல் பல்வேறு சமூக மாற்றத்துக்கான
வேலைத்திட்டங்களுடனேயே நினைவுகூரப்படுவதென்பது முக்கியமானதாகும்.
தாய்வீடு ஜுன் 2023








.jpg)
.jpg)

.jpg)
.jpg)


.jpg)


