Sunday, July 2, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 12


முன்றில்  12
இயல்வாணன்

ஓவியர், நாடகர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, உளஆற்றுப்படுத்துநர், இசையாளர், கல்வியியலாளர் எனப் பலதளங்களில் செயற்பட்டவர் மூத்த கல்வி நிர்வாகசேவை அதிகாரியாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள முத்து இராதாகிருஸ்ணன். இவர் தெல்லிப்பழை வறுத்தலைவிளானை பூர்வீகமாகக் கொண்டவர். 23-06-1963இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தந்தையார்  முத்துக்குமாரு தொழில்முறையில் சட்டத்தரணி. தாயார் தனேஸ்வரி சுதுமலைச் சகோதரிகளுள் ஒருவராய் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தியவர்

தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் வித்தியாலயம், திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரி, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம், யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றார்(1986). 1993இல் பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டத்தையும், 2005இல் முதுகல்விமாணிப் பட்டத்தையும் பெற்றார்.
1982
ஆம் ஆண்டு சித்திர பாட ஆசிரியராக நியமனம் பெற்று ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கடமையாற்றிய இவர் புவியியல் பட்டதாரி ஆசிரியராக அனலைதீவு சதாசிவ வித்தியாலயம், வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றினார்.

 1999இல் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து பிரதிக் கல்விப் பணிப்பாளராக, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக, வவுனியா தெற்கு மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர் தரம் 1 சிரேஸ்ட அதிகாரியாக  விளங்குகிறார்.
கல்வித்துறையில் வடக்கு கிழக்கு மாகாண ஆரம்பக்கல்வி, அழகியற் கல்வி, விசேட கல்வி, உளவளத்துணை, கண்ணிவெடி அனர்த்த விழிப்புணர்வு முதலான செயற்திட்டங்களின் இணைப்பாளராகவும், பொறுப்புவாய்ந்த அதிகாரியாகவும் கடமையாற்றி, பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.  தொலைக்கல்விப் போதனாசிரியராகவும், தேசிய கல்வியியற் கல்லூரி வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


ஓவியத்தில் ஆர்வங் கொண்ட இவர் சன்மார்க்க வித்தியாலயத்தில் தரம் 10 மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் சித்திரக்கதைப் புத்தகம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பயின்றவேளை புவியியலாளன் சஞ்சிகையில் கட்டுரை எழுதியிருக்கிறார். 80களின் நடுப்பகுதியில் மாணவர் போராட்ட அமைப்புகளின் சஞ்சிகைகளில் எழுதியிருக்கிறார். களத்தில், ஊற்று, நெம்பு, தாயகம், வெளிச்சம், சுபமங்களா, சரிநிகர், கணையாழி, தாமரை, புதிய ஊற்று, புதுவசந்தம் முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
வெளிச்சம் சஞ்சிகையில் கோபாலி என்ற பெயரில் இவரது ஓவியங்கள் வெளிவந்தன. அவ்வாறே தாயகம், சுபமங்களா சஞ்சிகைகளிலும் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன. இவரது நூல்கள் உட்பட பல நூல்களுக்கு அட்டைப்படங்களையும் இவர் வரைந்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட கவின்தமிழ், முழுநிலா முத்து, கல்விக்கதிர் செய்தியேடு என்பனவற்றின் ஆசிரியராக இருந்து இவற்றை வெளியிடுவதில் பங்காற்றியிருக்கிறார்.
இவரெழுதிய 9 சிறுகதைகள் உதிரவேர்கள்(2000) தொகுதியாகவும், 13 சிறுகதைகள் உள்மனச் சித்திரம்(2013) தொகுதியாகவும் வெளிவந்துள்ளன. ‘இராதாகிருஸ்ணனின் கதைகளில் சூழலின் விபரமான பதிவு, கட்புலமயப்பாடு நன்கு தெரிகிறது. அல்லல்களை, அவலங்களை நுண்திறனுடன் இனங்கண்டு கொள்ளும் ஒரு சமூக நோக்கும் உள்ளது. போர்ச்சூழல், வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களையும் நுணுக்கமாக அவதானிக்கும் சக்தியும் உள்ளதுஎன்று பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது போன்று மனித வாழ்வில் நாம் காணும் சிறு சம்பவங்களையும் ஒரு ஓவியத் துளிர்ப்போடும், பாத்திர அசைவோடும் கதையாக்கம் செய்வதில் இராதாகிருஸ்ணனுக்குத் தனிச்சிறப்புண்டு எனலாம். இவரது அந்தப் பெட்டைக் குட்டிகள் என்ற சிறுகதை அரச பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தரம் 7 தமிழ்மொழியும் இலக்கியமும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இவரது கவனம் நாடகத்துறையிலும் இருந்தது. நண்பர்களுடன் இணைந்து மண் சுமந்த மேனியரில் பணியாற்றியதிலிருந்து வவுனியாவில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியது வரை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு உள்ளது. இவரெழுதிய நாடகங்கள் 1998இல் மானிடச் சிக்கல் என்ற நூலாக வெளிவந்ததுடன் அரச சாகித்திய விருதினையும் பெற்றுக் கொண்டது. 2006இல் துயரப்பாறை நாடக நூல் வெளிவந்ததுடன் அந்த நூலுக்கும் அரச சாகித்திய விருது கிடைத்தது. பூலோக மோட்சம்(2022) நாடக எழுத்துருக்களளையும் கவிதாநிகழ்வையும் உள்ளடக்கிய தொகுதியாகும்.
சிறுவர் இலக்கியத்துக்கும் இவர் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். சிறுவர் நாடக எழுத்துருக்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். அவ்வகையில் சிறுவர் அரங்கு(சிறுவர் நாடகங்கள் - 2004), உள்ளாளி பெருக்கும் சிறுவர் அரங்கு(2004), பசுமைத்தாயகம்(சிறுவர் நாடகங்கள் 2009), பூதம் காத்த புதையல்(2011), காட்டில் மாநாடு (2011), நரிமேளம்(2011), கடலின் துயரம்(2011), சிறுவர் கதைகள்(2017), கூவும் குயிலின் ஏக்கம்(2020) ஆகிய இவரது சிறுவர் இலக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன.
கற்றலும் கற்றல் சூழலும்(2014), பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு(2008) முதலான கல்வியியல் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளதுடன் இவர் எழுதிய கவிதைகள் நிலம் தொடாத மின்னல்(2019) தொகுதியாக வெளிவந்துள்ளது.
தேசிய சாகித்திய விருதுகள் 3, வடக்கு கிழக்கு மாகாண விருதுகள் 4, வடக்கு மாகாண விருதுகள் 3, கிழக்கு மாகாண விருதுகள் 3 என்பன இவரது நூல்களுக்குக் கிடைத்துள்ளன. கிழக்கு மாகாண வித்தகர் விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.


தொழில்சார் நெருக்கடிளுடன் ஒரு கல்வித்துறை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய போதும் அவ்வப்போது சமூக அக்கறையோடு படைப்புகளை வழங்கியதில் இராதாகிருஸ்ணன் முக்கியமானவர். கல்வித்துறையிலும், இலக்கியத்திலும் அவரது பங்களிப்பு முக்கியமானது. சிறந்த தொடர்பாடல் திறன், கூர்ந்த சூழல் மற்றும் சமூக அவதானிப்பு, மனிதாய அணுகுமுறை, படைப்பாக்கத் திறன் என்பன ஏனையவரிலிருந்து அவரை வேறுபடுத்தும் தனியடையாளமாகும். தனது மணிவிழாவைக் கண்டுள்ள இராதாகிருஸ்ணன் இனி உத்வேகத்துடன் ஈழத்து இலக்கியத்துக்கு வளஞ்சேர்ப்பார் என நம்புகிறோம்.

25-06-2023 உதயன் சஞ்சீவி

 

இயல்வாணன் பத்தி - முன்றில் 11

 

முன்றில் 11

இயல்வாணன்



நடிகராக, நாடக இயக்குநராக, நாடகப் பயிற்சியினை வழங்கும் வளவாளராக, எழுத்தாளராக, அரங்க ஆய்வாளராக, விமர்சகராக, கூத்துக் கலைஞராக அரங்கும் கூத்துமாக வாழ்வைக் கொண்டாடிய கலைஞர் ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு. அவர் கடந்த ஜுன் 9ஆந் திகதி அகவை 80இல் அமுதவிழாக் கண்டுள்ளார். ஈழத்தின் அரங்கத்துறை ஆளுமைகளில் முக்கியமானவரான இவர் கிராமங்களில் வழக்கொழிந்து கொண்டிருந்த கூத்துகளை மீளுருவாக்கம் செய்வதிலும் ஆவணப்படுத்துவதிலும் முதன்மையான பங்களிப்பை வழங்கிய ஒருவராவார்.

மட்டக்களப்பு அமிர்தகழியிலுள்ள சீலாமுனை கிராமத்தில் 09-0-1943இல் பிறந்த மௌனகுரு தனது ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும்(1965), தமிழ் முதுமாணிப் பட்டத்தையும்(1973) பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.கைலாசபதியின் வழிகாட்டலில் கலாநிதிப் பட்டத்தைப்(1982) பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டத்தையும்(1975) பெற்றுக் கொண்டார்.

1966இல் ஆசிரியப் பணியில் இணைந்து கொண்ட இவர் 5 ஆண்டுகள் கொழும்பு பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் அரச பாடநூல் எழுதும் பணியில் ஈடுபட்டார். மீண்டும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு, 1981வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1979இல் இருந்து மூன்றாண்டுகள் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1984இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியை ஆரம்பித்த அவர், விரிவுரையாளராக, முதுநிலை விரிவுரையாளராக அங்கு பணியாற்றினார்.

1991இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்ற இவர் நுண்கலைத்துறைத் தலைவராகவும், கலைப்பீடாதிபதியாகவும் பணியாற்றினார்.

தனது இந்த பணிகளின் போது பல நூற்றுக் கணக்கான அரங்கவியல் கலைஞர்களையும், கூத்துக் கலைஞர்களையும் உருவாக்கியுள்ள இவர் அரங்கு சார்ந்தும், கூத்து சார்ந்தும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனது வாழ்நாளைச் செலவிட்டுள்ளார். அத்துடன் கிராமப்புறத்துக்குள் முடங்கியிருந்த கூத்தினை பேராசிரியர் வித்தியானந்தனின் அடியொற்றி புலமைத்துவ மட்டத்துக்கு எடுத்துச் சென்ற பெருமையும் இவரைச் சாரும்.

இவரது கிராமம் வடமோடிக்கூத்தில் பிரபலம் பெற்ற ஒரு கிராமமாகும். அங்குள்ள செல்லையா அண்ணாவியரிடத்தில் கூத்துப் பயின்ற மௌனகுரு அவரது அண்ணாவியத்தில் ‘பாசுபதாஸ்திரம் கூத்தில் நடித்தார். அந்த நடிப்பைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்து வைத்திருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் பல்கலைக்கழகம் சென்ற மௌனகுருவை சிக்கெனப் பிடித்துக் கொண்டார். அவர் மரபுவழித் தமிழ் நாடக மறுமலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்து நாடகங்களை மேடையேற்றிய காலமது. மௌனகுருவை பிரதான பாத்திரமாகக் கொண்டு இராவணேசன், நொண்டி நாடகம், கர்ணன் போர், வாலிவதை முதலான நாடகங்களை மேடையேற்றினார்.

ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கருத்துநிலைப்பட்டு இயங்கிய இவர் பின்னர் மார்க்ஸிய சிந்தனைகளால் கவரப்பட்டார். அதன் விளைவாக   1969ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி அரங்கில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டுக்காக அவர் தயாரித்து அளிக்கை செய்த சங்காரம் நாடகம் அக்காலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதெனலாம்.

சிறுவர் அரங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபட்ட இவர்  வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள், தப்பி வந்த தாடி ஆடு, ஒரு முயலின் கதை, பரபாஸ் முதலான நாடகங்களைத் தயாரித்து மாணவர்களை நடிக்க வைத்து மேடையேற்றினார். அத்துடன் சக்தி பிறக்குது, சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள் முதலான பெண்ணிய நாடகங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

அரங்கு சார்ந்தும், தமிழிலக்கியம் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் பல நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அரங்கு ஓர் அறிமுகம் (பேராசிரியர் கா.சிவத்தம்பி,க.திலகநாதன் ஆகியோருடன் இணைந்து – 1999), அரங்கியல்(2003), 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழிலக்கியம் (எம்.ஏ.நுஃமான், திருமதி சித்திரலேகா மௌனகுருவுடன் இணைந்து – 1979), ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(1999), கலை இலக்கியக் கட்டுரைகள்(1997), சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்(1993), மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்(1998), தமிழர் வரலாறும் பண்பாடும்(2005), தமிழ்க் கூத்துக்கலை(2010), சங்ககால இலக்கியமும் சமூகமும் ஒர் மீள்பார்வை(2003), சடங்கிலிருந்து நாடகம் வரை(1988), நாடகம் - அரங்கியல் பழையதும் புதியதும்(2005), பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்(2005), பழையதும் புதியதும்(1992), பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்(1997) கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்(1994) முதலான பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

 அவர் எழுதிய நாடக ஆக்கங்கள் இராவணேசன்(1998), சக்தி பிறக்குது(1997), நாடகம் நான்கு(இ.முருகையனின் கடூழியம், நா.சுந்தரலிங்கத்தின் அபசுரம், இ.சிவானந்தனின் காலம் சிவக்கிறது, மௌனகுருவின் சங்காரம் ஆகியவை – 1980), மௌனகுருவின் மூன்று நாடகங்கள்(மழை, நம்மைப் பிடித்த பிசாசுகள், சரிபாதி ஆகிய நாடகங்கள் - 1987), சங்காரம், தப்பி வந்த தாடி ஆடு, வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள், புத்துயிர்ப்பு முதலான பலவும் நூல்களாக வெளிவந்துள்ளன.

மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு அதிகாரப் போட்டியால் உருவாகும் யுத்தத்துக்கு எதிரான குரலாக  சார்வாகன் (2000) என்ற குறுநாவலையும் இவர் எழுதியுள்ளார். மக்கள் இலக்கியக் கவிஞர் சுபத்திரனது கவிதைகளையும்(2002) இவர் தொகுத்துள்ளார். பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் சிறுகதைகள், கவிதைகளை எழுதிள்ளார். அத்துடன் இலங்கை வானொலியிலும் சங்கநாதம், கிராம சஞ்சிகை நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியுள்ளார். சிறுவர் பாடல்களையும் எழுதியுள்ளார். பொன்மணி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவரது கலைச்சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட நாடககீர்த்தி(2013), கொடகே தேசிய சாகித்திய வாழ்நாள் சாதனை விருது(2014), தேசநேத்துரு விருது(2015), இலங்கை அரசின் பாரம்பரிய மற்றும் நவீன கலைச்சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது(2019), சாதனைத் தமிழன் விருது(2020) போன்றன இவருக்கான மணிமகுடங்களாக அமைந்துள்ளன. 2017இல் மகுடம் சஞ்சிகை இரட்டைச் சிறப்பிதழை வெளியிட்டு மௌனகுருவைக் கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றும் வாலையில் ஆடிய துடிப்போடு மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தை நிறுவி, தனது அறிவையும் அனுபவங்களையும் இளைய சந்ததிக்கு கடத்தும் பணியில் தொடர்ந்தும் செயலாற்றி வருகிறார்.

 11-06-2023 உதயன் சஞ்சீவி

இயல்வாணன் பத்தி - முன்றில் 10

முன்றில் – 10

இயல்வாணன்

கவியரங்குக்கோர் கந்தவனம் என இரசிகமணி கனகசெந்திநாதனால் சிறப்பிக்கப்படுமளவுக்கு ஒரு காலத்தில் சந்தெவெழில் தவழும் கவிதைகளால் அரங்கை அதிர வைத்தவர் கவிஞர் வி.கந்தவனம். கவிஞராக, பாடநூல் எழுத்தாளராக, நடிகராக, பல்துறை அறிஞராக, பேச்சாளராக, சமயச் சொற்பொழிவாளராக, கல்வியியலாளராக, சிறுவர் இலக்கியகர்த்தாவாக பல நிலைகளில் கலை இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் பெருந் தொண்டாற்றியவராக அவர் விளங்குகின்றார்.

28-10-1933 அன்று நுணாவில் மேற்கு, சாவகச்சேரியில் பிறந்த விநாயகர் கந்தவனம் தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் மேற்கு கணேச வித்தியாசாலையிலும் ( இன்று நுணாவில் மேற்கு அ.த.க.பாடசாலை -  மூடப்பட்டுள்ளது) இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் நிறைவு செய்தார். சிரேஷ்ட பாடசாலைச் சான்றிதழ் பரீட்சையில் (எஸ்.எஸ்.சி)  சித்தியடைந்த அவர் ஓராண்டு டிறிபேக் கல்லூரியில் எழுதுவினைஞராகக் கடமை புரிந்தார்.

இக்காலத்தில் வடமாநில ஓவியப் பரிசோதகர் கனகசபையிடம் ஓவியமும், சங்கீத பூஷணம் நடேசனிடம் சங்கீதமும் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும், கோவை அரசினர் கலைக்கல்லூரியிலும் தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1958ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்து கொண்ட அவர் 6 ஆண்டுகள் மாத்தளை சென்.தோமஸ் கல்லூரியில் கற்பித்து, இடமாற்றம் பெற்று வந்து வயாவிளான் மத்திய கல்லூரியில் கற்பித்தார். குரும்பசிட்டி அவர் திருமண பந்தத்தால் புகுந்த இடமாயிற்று.

கல்வி அமைச்சின் பாடநூற் சபையில் பணியாற்றியதுடன் அரச புவியியல் பாட நூல் எழுத்தாளர் குழுவில் ஒருவராகக் கடமையாற்றினார். புவியியல் பாடத் துணைநூல்களையும்(1970) எழுதினார்.1973ஆம் ஆண்டு அதிபர் நியமனம் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் யோகபுரம் மகாவித்தியாலயத்தில் பணியாற்றினார். ஆசிரிய ஆலோசகராகவும் கடமை புரிந்தார். பின்னர் அளவெட்டி அருணோதயக் கல்லூரியிலும் சிறிது காலம் அதிபராகக் கடமையாற்றினார். கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார்.

இந்தக் காலங்களில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா தகைமையைப் பெற்றார். இலங்கையில் க.பொ.த. உயர்தரத்தில் நாடகவியல் ஒரு பாடமாக ஆரம்பிக்கப்பட்ட போது தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வளாகத்தில் நாடக டிப்புளோமா பயிற்சி வழங்கப்பட்டது. அதில் இவர் பங்குபற்றிச் சிறப்புச் சித்தியடைந்ததுடன் வடபுலத்தில் முதன்முதலில் (வயாவிளான் மத்தியகல்லூரியில்) நாடக பாடத்தைக் கற்பித்த ஆசிரியராக இவர் விளங்கினார். அத்துடன் நாடகபாட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் வளவாளராகவும் விளங்கினார். உயர் ஆங்கில டிப்புளோமா படிப்பையும் நிறைவு செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்தகன்று கற்ற அறிவும், அனுபவமும் அவரை ஒரு அறிஞனாகவே ஆக்கியது.

1980ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு கற்பித்தல் பணிக்காகப் பயணமான அவர் அந்நாட்டின்  டிரான்ஸ்கி பிராந்தியத்தில் (நெல்சன் மண்டெலா பிறந்த இடம்) புனித கத்பேட்ஸ் உயர் பாடசாலையில் மானிடவியல்துறைத் தலைவராகக் கடமையாற்றினார். 1988ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற அவர் இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகிறார்.

1948ஆம் ஆண்டு தனது 15வது வயதில் ஈழகேசரியின் சிறுவர் பகுதியில் ‘ஒரு கால் மூன்று தலை என்ற தலை;பில் எழுதிய கட்டுரையுடன் இவர் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார். 1952இல் ஈழகேசரி  பொதுநலவாய பொருட்காட்சி தொடர்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 1954ஆம் ஆண்டு இவரது முதலாவது நூலான ‘ஒன்றரை ரூபாய் குறுநாவல் வெளிவந்தது. இதனை கவிநாயகன் என்ற புனைபெயரில் எழுதினார். பல்வேறு துறைசார்ந்து 50ற்கு மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். வித்தியானந்தமாலை, அரும்பு,பூச்சரம், தேவைக்கேற்ற திருமுறைத் திரட்டு உள்ளிட்ட பல நூல்களைத் தொகுத்துள்ளார்.


கீரிமலையினிலே குறுங்காவியம்(1969), பாடுமனமே கவிதைகள் (1972), இலக்கிய உலகம் கவிதைகள்(1964),  ஏனிந்தப் பெருமூச்சு கவிதைகள்(1965), கூனியின் சாதனை கட்டுரை (1966), நுணாவிலூர் இடவரலாறு(1971), உய்யும் வழி அரங்கக் கவிதைகள்(1972), கவியரங்கில் கந்தவனம்(1972), நல்லூர் நாற்பது(1971), முறிகண்டிப் பத்து, குரும்பசிட்டி விநாயகர் பத்து,  பரீட்சையில் சித்தியடைவதெப்படி?(1972), இலங்கையில் ஆசிரியத் தொழில்(1977), விநாயகப்பா பக்திப் பனுவல்(1993), ஒன்றுபட்டால் நாட்டிய நாடகம்(1994), மணிக்கவிகள்(1994), இயற்கைத்தமிழ்(1995), எழுத்தாளர்(2005), முத்தான தொண்டர்(1995), புதிய சைவ வினாவிடை(1997), தங்கம்மா நான்மணிமாலை(1997), பத்துப் பாட்டு(1998), ஆறுமுகம்(1998), 12 Short Stories (1998), Lasting Lights(1998), சிவபுராண தத்துவம்(1998), கனடாவில் சைவசமயம்(2000), அது வேறுவிதமான காதல்(2001), சிவவழிபாடு(2002), கந்தன் கதை(2002), ஓ கனடா(2002), வரிக்கவிகள்(2002), தமிழ்க் கவிதை மரபு(2005), பொங்குதமிழ்(2005), ஆன்மீகக் கவிதைகள்(2007), பாவாரம்(2007), கவிநாயகம் வாழ்வும் வரலாறும் வானொலி தொடர் நேர்காணல்(2009) முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கன. ஆலயங்கள் பலவற்றுக்கும் - குறிப்பாக கொல்லங்கிராய் விநாயகருக்கு – பல சிறுநூல்களை எழுதியுள்ளதுடன் சிறுவருக்கான சமயக் கதைநூல்களையும்(கந்தனும் ஒளவையாரும், விநாயகப் பெருமானும் அகத்தியரும்) எழுதியுள்ளார். இவ்வாறு தமிழன்னைக்கு மகுடம் சூடும் பல படைப்புகள் மூலம் தனது பல்துறை ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார்.

யாழ்.இலக்கிய வட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கவிஞர் கந்தவனம் எட்டு ஆண்டுகள் அதன் தலைவராகவும் கடமையாற்றினார். தான் வாழ்ந்த, பணியாற்றிய இடங்களில் இலக்கிய மன்றங்களை உருவாக்கியுள்ளார். கவிமணி, மதுரகவி, இலக்கிய வித்தகர், சைவதுரந்தரர் முதலான 20ற்கும் மேற்பட்ட பட்டங்கள் வழங்கி தமிழுலகம் இவரைக் கௌரவித்துள்ளது.

தனது ஆழ்ந்தகன்ற அறிவால் தமிழிலக்கியத்துக்கு வளஞ்சேர்த்த கவிஞர் வி.கந்தவனம் 90 அகவையில் கனடாவில் வசித்து வருகிறார். அவர் நூறாண்டு நிறைவு கண்டு தமிழுக்கு அணி செய்ய வாழ்த்துவோம்.

04-06-2023 உதயன் சஞ்சீவி

 

Tuesday, June 13, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 9

 

முன்றில் – 9

இயல்வாணன்

“வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் – கடல்

வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்

தள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் – மீன்

அள்ளிவர நீண்டநேரம் ஆகும்“

ஒரு காலத்தில் இந்தப் பாடலை முணுமுணுக்காத வாய்கள் இல்லையெனலாம். புதுவை இரத்தினதுரையின் உணர்வுறும் வரிகளுக்கு  வள்ளத்தில் அமர்ந்து அலைகளில் தவழ்ந்து பயணம் போவது போன்ற அனுபவத்தைத் தரக்கூடியதாக இந்தப் பாடலை இசையமைத்தவர்  கண்ணன் என அழைக்கப்பட்ட கோபாலகிருஸ்ணன்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பிரதேசத்தில் 23-03-1943இல் பிறந்த அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்து பதினொராந் தரத்தை நிறைவு செய்த பின்னர் இசைத்துறைக்குள் நுழைந்து கொண்டார். இவரது தந்தையார் முத்துக்குமாரு ஒரு தபேலா வாத்தியக் கலைஞராகவும், ஹார்மோனியம் வாசிப்பவராகவும் விளங்கினார். அதனால் அவரே இசைத்துறையில் இவரை வளர்த்து விட்டார்.

ஆரம்ப இசைப்பயிற்சியை புலவர் சண்முகரத்தினத்திடம் பெற்றுக் கொண்டார். பின்னர் சிதம்பரம் கிருஸ்ணமூர்த்தி, வேலணை சங்கீதபுஷணம் இராஜலிங்கம், நாதஸ்வர வித்துவான் கோவிந்தபிள்ளை  ஆகியோரிடம் முறையான இசைப்பயிற்சியையும் பெற்றுக் கொண்டார்.

16 வயதில் மேடையேறிய அவர் ஆரம்பத்தில் கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் இசைக்கச்சேரிகளில் வாத்தியக் கலைஞராகப் பங்குபற்றினார். 1960ஆம் ஆண்டில் ஒரு இசைக்குழுவை உருவாக்கினார். அந்த நேரத்தில் சில காலம் தென்னிந்தியக் கலைஞர்களுக்குத் தடை வித்திக்கப்பட்டிருந்தது. எனவே, உள்ளுர்க் கலைஞர்கள் பிரபலம் பெற்றனர். இந்த இசைக்குழுவும் மெல்ல மெல்லப் பிரபலமாகவே பெயர் சூட்டப்படாமலே மக்களால் “கண்ணன் கோஷ்டி“ என அழைக்கப்பட்டது. வண்ணை கலைவாணர் நாடக மன்றத்தினால் மேடையேற்றப்பட்ட நாடகங்களுக்கும் இசையமைத்தார்.

60களில் யாழ்ப்பாணம் முற்றவெளியில்  நடந்த தினகரன் விழாவின் ஒரு பகுதியாக வர்த்தக ஊர்தி பவனி இடம்பெற்றது. அதில் கண்ணன் இசைக்குழுவும் பவனியாக ஊர்தியில் இசைநிகழ்ச்சியை நடத்தியது. இதற்கு முதற்பரிசு கிடைத்தது. இது குழுவை உற்சாகப்படுத்தியது. சில பாடல்களை இசையமைத்து மேடைகளில் பாடினர். 

தினகரன் விழாவில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய  இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் நடராஜா வானொலிக்காக மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றினைத் தயாரித்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். அதையேற்று கொழும்பு சென்று நிகழ்ச்சிக்கான பாடல்களுக்கு இசையமைத்தார். மாதாமாதம் ரயிலில் பயணித்து, ஒரு வாரம் தங்கி நின்று இசையமைத்து ஒலிப்பதிவு செய்த பின்னர் யாழ்ப்பாணம் திரும்புவதாக அவரது ஆரம்ப காலம் இருந்தது. பின்னர் கொழும்பிலேயே தங்கி நின்று இசையமைத்தார்.

அந்தக் காலத்தில் நேசம் என்பவருடன் இணைந்து கண்ணன்-நேசம் இசைக்குழுவை உருவாக்கி கொழும்பில் இசைநிகழ்ச்சிகளையும் நடத்தினார். மெல்லிசை, பொப்பிசை, றொக்கிசை, திரையிசை, பக்திப் பாடல்கள் என எல்லாமே கண்ணன்-நேசம் இசைக்குழுவால் மேடைகளில் இசைக்கப்பட்டது. இதற்கென இவர்களால் உருவாக்கப்பட்ட  பாடல்களும் இசையமைக்கப்பட்டன.

அந்த வேளையில்தான் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தெய்வம் தந்த வீடு, கோமாளிகள், ஏமாளிகள் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். தெய்வம் தந்த வீடு படத்தில் தவில் வித்துவானாகவும் நடித்தார். கோமாளிகள் படத்தில் வந்த “சம்மதமா சொல்லித் தரவா என் உள்ளம் உன்னோடுதான்“ என்ற சில்லையுர் செல்வராசன் – கமலினி நடித்த, முத்தழகுவும் கலாவதியும் பாடிய பாடல் அக்காலத்தில் இலங்கை முழுவதும் பிரபலம் பெற்றிருந்தது. நீலாவணன் எழுதிய “ஓ..வண்டிக்காரா“ பாடலும் இவரால் இசையமைத்துப் பிரபலமான இன்னொரு பாடலாகும்.

1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வந்த அவர் நாடகங்களுக்கு இசையமைத்தார். குழந்தை ம.சண்முகலிங்கம், சிதம்பரநாதன் ஆகியோரின் அனேக நாடகங்களுக்கு இவரே இசையமைத்தார். அத்துடன் தாசீஸியஸ், பாலேந்திரா, மௌனகுரு போன்றோரின் நாடகங்களுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும் மாணவர்களின் இறுதியாண்டுப் பரீட்சையின் ஒரு பகுதியாக ஆற்றுகை செய்யப்படும் நாடகங்களுக்கும் இசையமைத்தார்.

1990ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து கண்ணனின் பயணம் விடுதலைப் பாடல்களுடன் ஆரம்பித்தது. அப்போது தமிழீழ இசைச் சாம்ராஜ்யத்தின் கொடுமுடியாக அவர் பார்க்கப்பட்டார். பலநுறு பாடல்கள் அக்காலத்தில் இவரது தனித்துவமான இசையில் வெளிவந்தன. நெய்தல், கரும்புலிகள் ஆகிய இசைநாடாக்களின் பாடல்கள் அக்காலத்தில் பெரும் உணர்வெழுச்சியோடு பாடப்பட்டன. புதுவை இரத்தினதுரை – கண்ணன் கூட்டணியில் மலர்ந்த பாடல்கள் சாசுவதமானவையாக இன்றும் நிலைத்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆந் திகதி பாடப்படும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே“ என்ற துயிலெழுச்சிப் பாடல் ஒவ்வொருவரையும் உறையச் செய்யும் உயிர்ப்பான இசைக்கோர்வையாலானதாகும். அது கண்ணனின் இசையில் மலர்ந்தது. இதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் இசைவாணர் பட்டமும், தங்கப் பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். கலாபுஷணம் முதலான பல பட்டங்களை அவர் பெற்றுக் கொண்ட போதும்  இசைவாணர் கண்ணன் என்பதே நிலைத்து விட்ட பட்டமாகும்.

சமாதான காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்து கிளிநொச்சியில் திரைப்படப் பயிற்சியை வழங்கிய உதிரிப்புக்கள் மகேந்திரனின் வழிகாட்டலில் ஆதவன் திரைப்படப் பயிற்சிக் கல்லுரியால் உரவாக்கப்பட்ட 1996 என்ற குறும்படத்துக்கும் இவரே இசையமைத்துள்ளார்.

அண்மையில் 80 அகவைகளை நிறைவு செய்து அமுதவிழாக் கண்ட இசைவாணர் கண்ணன் தற்போது இளையோருக்கான இசைப்பயிற்சியினை வழங்கி வருகின்றார்.  அவரது பிள்ளைகளான சத்தியன், சாயிதர்சன் ஆகியோர் இசையமைப்பாளர்களாக மிளிர்ந்து வருவதுடன் பேத்தி பவதாயிணி நாகராஜா தமிழ்நாட்டின் ஸீதமிழ் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்ச்சியில் பாடி அசத்திப் பிரபல்யம் பெற்றுள்ளார். இசைவாணரின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவை சுவைஞர் உதடுகளில் என்றும் நர்த்தனமாடும்.

21-05-2023 உதயன் சஞ்சீவி



பொன்விழாக் காணும் தேசிய கலை இலக்கியப் பேரவை

 





பொன்விழாக் காணும் தேசிய கலை இலக்கியப் பேரவை

இயல்வாணன்

ஈழத்தில் பல இலக்கிய அமைப்புகள் காலத்துக்குக் காலம் உருவாகி, இயங்கி வந்துள்ளன. சிறு குழு முயற்சிகளாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகளாகவும் அவை தோற்றம் பெற்றன. இலக்கிய நண்பர்கள் சிலர் இணைந்து உருவாக்கிய அமைப்புகளாகவே பெரும்பாலும் அவை ஆரம்பிக்கப்பட்டன. நோக்க அடிப்படையில், சித்தாந்தப் பின்னணியில், அரசியல் பின்னணியில் அவை அதிகம் அமைக்கப்படவில்லை. எனினும் அவற்றுக்குள் நுண் அரசியல் இல்லாமலில்லை.

வரதரின் முயற்சியில் 1942இல் 20பேர் சேர்ந்து உருவாக்கிய தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கமே முதலாவது எழுத்தாளர் சங்கமெனக் குறிப்பிடப்படுகின்றது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், யாழ்.இலக்கிய வட்டம், அதன் இணை அமைப்பான இலங்கை இலக்கியப் பேரவை,  கத்தோலிக்க கலை இலக்கிய வட்டம், தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், தமிழ்க் கதைஞர் வட்டம், தெல்லிப்பழை கலை இலக்கியக் களம், யாழ்.இலக்கியக் குவியம் என்பன என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கன.

பல அமைப்புகள் இன்றில்லை. சில அவ்வப்போது தமது இருப்பை அறிவித்து ஓய்கின்றன. ஓரிரு அமைப்புகள்தான் – சில தனிமனிதர்களின் செயற்பாட்டால்- தொடர்ந்தும் இயங்குகின்றன. அத்தகைய ஒரு அமைப்பே தேசிய கலை இலக்கியப் பேரவையாகும்.




புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றி வருகின்றது. யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மலையகம் ஆகிய இடங்களில் தனது செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது. அந்தந்த இடங்களில் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றும் உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.  இவ்வமைப்பு அந்த இடங்களில் பல்வேறு ஆய்வரங்குகளையும், கருத்தமர்வுகளையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் விவாதம், கவியரங்கம், நாடகம் முதலான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது.



தேசிய கலை இலக்கியப் பேரவை வாசிப்பை ஊக்குவிப்பதில் பெரிதும் சிரத்தையெடுத்து தொடர் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. 1996 இடப்பெயர்வின் பின்னர் மக்கள் மீளத் திரும்பி மெல்ல மெல்ல இயல்புச் சூழல் ஏற்பட்ட 2000 ஆண்டளவில் கிராமங்களுக்கு வந்து மக்கள் மத்தியில் நூற்கண்காட்சிகளை நடத்தி, விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது. சனசமூக நிலையங்கள், ஆலய மண்டபங்களை மையப்படுத்தி இந்தச் செயற்திட்டம் அப்போது முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகள் எல்லாவற்றிலும் மறைந்த கவிஞர் முருகையன் கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துரையாற்றிமை முக்கியமானதாகும். அத்துடன் வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும் தேசிய கலை இலக்கியப் பேரவை  வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வு, அறிவியல், மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்ட நூல்கள் நூற்றுக்கும் அதிகமாக தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தை ம.சண்முகலிங்கம், சி.சிவசேகரம், இ.முருகையன், மாவை வரோதயன், க.தணிகாசலம், இணுவையுர் சிதம்பர திருச்செந்திநாதன், சட்டநாதன், சுபைர் இளங்கீரன், மாதவி உமாசுதசர்மா, சோ.தேவராஜா, நந்தினி சேவியர், இரா.சடகோபன், முல்லை அமுதன், அழ.பகீரதன், சி.மௌனகுரு, சோ.கிருஸ்ணராஜா, கே.எஸ்.சிவகுமாரன், தாமரைச்செல்வி, நீர்கொழும்புர் முத்துலிங்கம், சுபத்திரன், ந.ரவீந்திரன், தில்லைச்சிவன், செ.குணரத்தினம், சோ.பத்மநாதன், சுல்பிகா, மஹாகவி, இதயராசன், பவித்திரன், ரஞ்சகுமார், சுதாராஜ், சி.பற்குணம், இளவாலை விஜயேந்திரன், சபா ஜெயராசா, க.சிதம்பரநாதன் எனப் பலரது படைப்புகள் தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டு, மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் சவுத் ஏசியன் புக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பல நூல்கள் வெளியிடப்பட்டமையால் இந்தியாவிலும் ஈழத்துப் படைப்புகளை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. தாயகம் 66 முதலான தொகுப்பு நூல்களும் இவற்றுள் அடங்கும்.

தேசிய கலை இலக்கியப் பேரவை ஆரம்பிக்கப்பட்ட 1974ஆம் ஆண்டிலேயே தாயகம் என்ற சஞ்சிகையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 7 இதழ்களுடன் நின்று போன இவ்விதழ் 1983ஆம் ஆண்டிலிருந்து ஓரளவு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுள்ளது. “தாயகம் சஞ்சிகை கலை கலைக்காக என்பதையும், வணிக நோக்குக்கு நிகரான மிக மலினப்படுத்தப்பட்ட இலக்கியப் போக்கையும் நிராகரித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி சமரசமற்ற பாதையில் வழிநடந்து வந்துள்ளது. அத்துடன் அனைத்து முற்போக்கு, ஜனநாயக மக்கள் சார்பு கலை இலக்கியங்களை என்றும் வரவேற்று வருவதுடன் படைப்பாளிகளுக்கிடையேயான புரிந்துணர்வையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி வந்துள்ளது“ என தாயகம் சஞ்சிகையின் 100வது இதழில் குறிப்பிடப்பட்டுள்ளமை அதன் நோக்குநிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.

தாயகம் சஞ்சிகை தனிமனித முயற்சியாக அல்லாமல் கூட்டுச் செயற்பாட்னூடாகவே வெளியிடப்பட்டு வருகிறது. அதன் ஆசிரியராக க.தணிகாசலம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார். முருகையன், குழந்தை ம.சண்முகலிங்கம், சி.சிவசேகரம், மாவை வரோதயன், சோ.தேவராஜா, கே.ஏ.சுப்பிரமணியம், ந.ரவீந்திரன், அழ.பகீரதன், ச.சத்தியதேவன், ஞா.மீநிலங்கோ, சிவ.ராஜேந்திரன் எனப் பலரது பங்களிப்போடு காலத்துக்குக் காலம் தாயகம் மலர்ந்துள்ளது. 50 ஆண்டுகளில் பொருளாதார நெருக்குவாரங்கள், இடப்பெயர்வு என மக்கள் சந்தித்த எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டே தாயகம் சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் பயணித்துள்ளது. வெளிநிதிப் பலமற்ற நிலையில்  மெல்ல அடி வைத்து 107 இதழ்களையே அது பிரசவிக்க முடிந்துள்ளது. 108வது தாயகம் மலையகம் 200 சிறப்பிதழாக வெளிவரவுள்ளது.

 தாயகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் பல படைப்பாளிகள் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். காத்திரமான பல படைப்புகள் இச்சஞ்சிகையில் வெளிவந்தன. சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு விடயங்கள் சார்ந்து சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலான ஆக்கங்கள் பலவும் இந்த இதழ்களில் வெளிவந்தன.

 அத்துடன் புதுவசந்தம் இதழ்கள் வருடாந்த சிறப்பு மலர்களாக வெளிவந்துள்ளன. பல்வேறு ஆக்கங்களையும் உள்ளடக்கிய கனதியான மலராக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இதழ் 1973இல் ஆரம்பிக்கப்பட்டாலும் அது தொடர்ச்சியற்று, பின் 2000களில் ஆண்டு மலர்களாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை இலக்கியப் பேரவையினால் சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆரம்பிக்கப்பட்டு, சமகாலத்தில் பேசுபொருளாகவுள்ள விடயங்கள் பற்றி விடய அறிவுள்ளவர்களை அழைத்து கருத்துரைகள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முழுமதி தினத்தை மையமாக வைத்து மாதாந்தம் இந்தக் கருத்தமர்வு நடைபெறுவது வழமை. ஆரம்பத்தில் பலாலி ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற இந்தக் கருத்தமர்வுகள் பின்னர் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை அலுவலகத்தில் நடைபெறுகின்றது. 2011, 2012ஆம் ஆண்டுகளில் சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் கலந்துரையாடல் குறிப்புகள் பிரசுரங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை இலக்கியப் பேரவை 50 வருடங்களை நிறைவு செய்வதையொட்டி பல்வேறு பிரதேசங்களிலும் நூறு மலர்கள் மலரட்டும் என்ற தலைப்பிலான புத்தக அரங்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், அரங்கு சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் மூன்று தினங்கள், இரண்டு தினங்கள் கொண்டதாக இந்த நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

நூற்கண்காட்சியைப் பார்வையிட வரும் மக்களும், மாணவர்களும் நூல் அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். சமகாலத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் தொடர்பில் இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நாடகங்கள் இடம்பெறுகின்றன. சண் நாடகக் குழு, செம்முகம் ஆற்றுகைக் குழு என்பன தன்னார்வ அடிப்படையில் இந்த ஆற்றுகையைச் செய்கின்றன. இந்த நிகழ்வுக்கான நிதி கூட குறித்த பிரதேச மக்களிடம் இருந்தே சிறுநிதியாகத் திரட்டப்படுகிறது. மக்கள் பங்களிப்புடன் மக்களை நோக்கிய இந்த நிகழ்வு நடைபெறுவது முக்கியமானதாகும்.

முதலாவது புத்தக அரங்க விழா கொக்குவிலில் உள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை நடைபெற்றது. தொடர்ந்து இவ்விழா மல்லாகம் மகா வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி,  இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணோதயக் கல்லூரி, கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

பேரவையின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாதாந்த ஆய்வரங்குகளும் நடைபெற்று வருகின்றன. ஈழத்து அரங்கு, நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் முதலான பல்வேறு கலை இலக்கிய விடயங்கள் சார்ந்து இந்த ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வரங்குகளில் மக்கள் இலக்கிய முன்னோக்கில் நாடகம் என்ற தலைப்பில் தே.தேவானந், மக்கள் கலை இலக்கியம் எதிர்நோக்கும் சவால்களும் செல்திசையும் என்ற தலைப்பில் ஞா.மீநிலங்கோ, மக்கள் இலக்கிய முன்னோக்கில் நாவல் என்ற தலைப்பில் கலாநிதி ந.ரவீந்திரன் ஆகியோர் ஆய்வுரையாற்றியுள்ளனர். மக்கள் இலக்கிய முன்னோக்கில் சிறுவர் இலக்கியம் என்ற தலைப்பில் இயல்வாணனின் உரை எதிர்வரும் 21ஆந் திகதி(21-05-2023) நடைபெறவுள்ளது.

ஈழத்தின் கலை இலக்கிய சமூக மேம்பாட்டுக்கான காத்திரமான திசைவழியில் தேசிய கலை இலக்கியப் பேரவை பயணித்து, சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதன் வரலாற்றுப் பாத்திரம் பெரியது. தனிமனிதர்கள் 50 ஆண்டுகளை நிறைவு செய்வது போன்றதல்ல அமைப்புகளின் நிறைவு. பல்வேறு சவால்களைச் சந்தித்து ஒரு அமைப்பாகத் தொடர்ந்து செயற்படுவது எளிதானதல்ல. ஒரு கோட்பாட்டு ஒத்திசைவிலேயே இது சாத்தியமாயிருக்கும்.

 தேசிய கலை இலக்கியப் பேரவை 50வது ஆண்டை நிறைவு செய்வதை விழாக்களாக கொண்டாடாமல் பல்வேறு  சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டங்களுடனேயே நினைவுகூரப்படுவதென்பது  முக்கியமானதாகும்.

தாய்வீடு ஜுன் 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 8

 



                                      
முன்றில் – 8

இயல்வாணன்

ஒரு மொழிபெயர்ப்பாளராகவும், தேர்ந்த வாசகராகவும்,   விமர்சகராகவும் விளங்கியவர் தேவா என இலக்கிய உலகில் அறியப்பட்ட திருச்செல்வம் தேவதாஸ். இவர் கடந்த 25-03-2023 அன்று தனது 70வது வயதில் காலமாகி விட்டார்.

1952ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18ஆந் திகதி மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவில் பிறந்த தேவா யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்தவர். அதன் பின்னர் பட்டயக் கணக்காளர் படிப்பை மேற்கொண்டிருந்த நிலையில் மகாராஜா நிறுவனத்தில் பணியாற்றினார். அதையடுத்து பிறிமா நிறுவனத்தில் பணியாற்றினார்.  பணி நிமித்தமாக பாகிஸ்தான் பயணமான நிலையில் அங்கிருந்து சிரியா, துருக்கி, பல்கேரியா, ஆஸ்திரியா வழியாக நீண்ட இடர் மிகுந்த தரைவழிப் பயணத்தை மேற்கொண்டு 1983ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் அகதியாகத் தஞ்சமடைந்தார். தனது ஓய்வு காலம் வரை அங்கேயே பணி புரிந்தார்.

டொச், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் மிக்க அவர் அந்த மொழிகளில் வந்த தேர்ந்த படைப்புகளை வாசிக்கும் ஆர்வமும் தேடலும் கொண்டிருந்தார். வாசிப்பு, மாற்று இசை, பயணம் ஆகிய மூன்றுமே அவருக்கு ஈர்ப்பானதும், அதிக நாட்டங் கொண்டதுமான துறைகளாகும். இவை பற்றியே நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எழுதியும் இருக்கிறார்.

 இடதுசாரிய சிந்தனையிலும் தேவா ஈர்ப்புக் கொண்டிருந்தார். இடதுசாரிகளுடன் அவரது தொடர்பு இருந்தது. “செங்காலனில் இடதுசாரிகள் சந்திக்கிற கபேயில் அவரைச் சந்திக்கலாம்“ என்று அவரது நண்பர் ரவி குறிப்பிட்டுள்ளார். எனினும், இடதுசாரிய சிந்தனைகளை அப்படியே மந்திரம் போல ஏற்றுக் கொள்ளாமல் அதன் மீதான விமர்சனங்களையும் தேடி வாசித்து, அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவராகவும் விளங்கினார்.

1987இல் சுவிஸில் வாசகர் வட்டமாக உருவாக்கப்பட்டு, பின்னர் மனிதம் குழுவாக அடையாளப்படுத்தப்பட்டவர்களுடன் இணைந்து செயற்பட்ட அவர் ஜனநாயகம், மனித உரிமைகள், மாற்றுக் கருத்துகள் சார்ந்து பேசியும், எழுதியும் வந்துள்ளார். டொச் மொழியில் வந்த நூல்களை மட்டுமல்லாது பத்திரிகைகளையும் வாசித்து தனது அறிவை இற்றைப்படுத்திக் கொண்டிருந்த தேவா வாசகர் வட்ட நிகழ்வுகளில் முக்கிய உரையாளராகவும், விமர்சகராகவும் விளங்கினார்.

அவர்களால் வெளியிடப்பட்ட மனிதம் இதழ்கள் பலவற்றில் டொச் மொழியில் இருந்து தேர்ந்த கட்டுரைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவற்றில் பொப் மார்லியும் றேகே இசையும், நிக்கரகுவா – புரட்சியின் பின், ஜபபான் – சூரிய சாம்ராஜ்யம், சூறாவளியின் கண்களில் 120 மில்லியன் குழந்தைகள், உளவியல் பார்வையில் நாசிசம் முதலான கட்டுரைகள் அதிகம் பேசப்பட்டன.

ஜோன் ஜெனேயின் The Maid நாடகத்தை பணிப்பெண் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இது கருப்பு தொகுப்பில்(2002) இடம்பெற்றது.

அவர் டொச் மொழியில் இருந்து மொழிபெயர்த்த முதல் நூல் குழந்தைப் போராளி(2007). தனது ஒன்பதாவது வயதில் உகண்டாவின் புரட்சிப் படையான தேசிய எதிர்ப்புரட்சி இராணுவத்தில் (என் ஆர் ஏ) இணைந்த சைனா கெயிற்றற்சியின் அனுபவங்களை தமிழுக்கு கொண்டு வர விரும்பி அதனை மொழிபெயர்த்தார். அவர் தமிழில் மொழி பெயர்த்த பின்னரே பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் அந்நூல் வெளிவந்தது. எனினும் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் பிறகே வெளிவந்தது.உகண்டாவின் இனக் குழுக்களுக்கிடையிலான மோதல்களில் குடும்ப உறவுகள் இறந்து போதல், பலதார மணப் பிரச்சினைகள், வறுமை, குடும்ப வன்முறை, ஆயுதக் குழுக்களின் வீராவேசப் பேச்சுகள் எனப் பல காரணங்களால் பதின்ம வயதுக் குழந்தைகள் போராளிகளாகிய வாழ்க்கை அனுபவங்களை கெயிற்றச்சியின் குழந்தைப் போராளி பேசுகிறது. கருப்புப் பிரதிகள் வெளியிட்ட இந்நூல் இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது.

அவரது அடுத்த நூல் அனொனிமா- முகம் மறைத்தவள்(2010). இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு பெண்ணின் கதை. யுத்தத்தின் கொடூர முகத்தை வெளிக்காட்டும் கதையாக அது அமைந்திருந்தது. “அவள் யுத்தத்தின் பார்வையாளராகவோ, பங்கெடுப்பாளராகவோ இருந்திருக்கவில்லை. யுத்தம் அவள் மீதேதான் நடந்து முடிந்திருக்கிறது“ என்பதே இந்நாவலின் சாரமாகும். புபாளம் புத்தகப் பண்ணை வெளியிட்ட இந்நூலும் இரண்டு பதிப்புகள் கண்டது.

அதன் பின்னர் இலங்கை எழுத்தாளரான உசுல பி.விஜயசூரிய எழுதிய அம்பரய(2016) இளைஞர் நாவலை ஆங்கிலம் வழியே தமிழுக்கு கொண்டு வந்தார். சிங்கள கிராமப்புற வாழ்வியலை ஒரு இளைஞனின் பாத்திரத்துக்கூடாக அழகாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் இந்த மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது.

அவரது மொழிபெயர்ப்பில் வந்த இன்னொரு நூல் என் பெயர் விக்டோரியா(2018). தொந்தா விக்டோரியா எழுதிய சுயகதை. ஆஜென்ரீனாவில் 1976இல் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்கள் ஒருபுறம். கர்ப்பிணிகளாக்கப்பட்டவர்கள் மறுபுறம். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் சர்வாதி காரத்துக்குத் துணை போனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதைதான் இந்நூல்.

1994ஆம் ஆண்டு சாகரவர்த்தனா கப்பலில் பணியாற்றிய போது விடுதலைப் புலிகளால் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களின் காவலில் இருந்து நீண்ட காலத்தின் பின்னர் விடுதலையான கொமடோர் அஜித் போயகொட தனது அனுபவங்களைச் சொல்லச் சொல்ல சுனிலா கலப்பதி அதனை எழுதி Long Watch நூலாக வெளிவந்தது. இதனை தேவா நீண்ட காத்திருப்பு(2020) என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். சிறை அனுபவங்களையும், சிறை மீண்ட பின்னர் அரசாங்கம் நடந்து கொண்ட முறையையும் அவர் இந்த நூலிலே தந்துள்ளார். அம்பரய, என்பெயர் விக்டோரியா, நீண்ட காத்திருப்பு ஆகிய நூல்கள் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளன.

இந்த ஐந்து நூல்களிலும் தேவாவின் துல்லியமான, வாசகரிடத்தில் ஒத்துணர்வைத் தொற்ற வைக்கும் மொழிபெயர்ப்பைத் தரிசிக்கலாம். அந்தந்தச் சூழலை  உணரச் செய்து, பாத்திரங்களை எமக்கு நெருக்கமாக்கத்தக்க எளிமையான நடை அந்த நூல்களுடன் எம்மை ஒன்றச் செய்து விடுகின்றது. இதுவே ஏனைய மொழிபெயர்ப்பாளரிடமிருந்து தேவாவை வேறுபடுத்துவதாகும்.

எட்வர்டோ கலியானோ எழுதிய “லத்தீன் அமெரிக்காவின் பிளவுண்ட இரத்த நாளங்கள்“, காலித் ஹுசைனி எழுதிய  “ஓராயிரம் ஒளிரும் சூரியன்“ ஆகிய நூல்களையும் அவர் மொழிபெயர்த்திருந்தார். எனினும் அவை இன்னமும் நூல்களாக வெளிவரவில்லை.

தேவா பணி ஓய்வின் பின்னர் இலங்கை திரும்பி மனைவியுடன் தலைமன்னாரில் வசித்து வந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்து மரணத்தைத் தழுவினார்.

ஒரு இலக்கியச் செயற்பாட்டாளராக, விமர்சகராக, தமிழ்ச் சூழலுக்கு நெருக்கமான படைப்புகளை மொழிபெயர்த்தவராக, பழக இனியவராக, நல்ல மனிதப் பண்புகள் கொண்டவராக எம்மிடையே வாழ்ந்தவர் தேவா. அவரது படைப்புகளை வாசிக்குந் தோறும் தேவாவை நாம் தரிசிக்கலாம்.

14-05-2023 உதயன் சஞ்சீவி