Friday, July 26, 2019

கவிதை -மகனே! எங்கிருக்கிறாய்?




மகனே! நீ எங்கிருக்கிறாய்?

பிள்ளைக்கு விசுக்கோத்து வாங்கி வருவதாய்
சொல்லிச் சென்றாய்.
வழியில் 
சீருடை அணிந்தவர்கள்
உன்னைப் பிடித்துச் சென்றதாய்
சொன்னார்கள்.

எல்லாப் படை முகாம்களுக்கும்
சென்று வந்தாயிற்று.
நினைப்பு வரும் போதெல்லாம்
படை முகாம்களை நோக்கியே
கால்கள் ஏகிற்று.
எவருமே கண்டதில்லையாம் உன்னை.

விதானையார் வீட்டிலிருந்து
கச்சேரி வரைக்கும்
நடந்து தேய்ந்த செருப்புகள்
மூலையில் கிடக்கின்றன.
எவரும் அறிந்ததில்லையாம் உனது செய்தியை.

அரசியல்வாதிகள் அனைவரையும்
பார்த்தாச்சு
கண்டுபிடித்துத் தருவதாய் 
வாக்குறுதிகள் தந்தார்கள்.

அவர்கள் வாக்குறுதி அளித்த போது
மடி தவழ்ந்த உன் சின்ன மகன்
இப்போது மீசை அரும்பும் 
வாலிபனாகி விட்டான்.
அப்பா எங்கே என்று கேட்டலுத்து
அவனும் ஓய்ந்து விட்டான்.

எல்லோரும் மறந்து கொண்டிருக்கின்றனர் உன்னை.
நான் எப்படி மறப்பேன்
என் குலக் கொழுந்தே!

யோசியக்காரர்களும் குறி சொல்வோரும்
விதைக்கும் நம்பிக்கையுடன்
உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

மரணம் நெருங்கும் கணம் வரை 
தேடிக் கொண்டிருப்பேன்.
எங்கிருக்கிறாய் மகனே?

                              எதிரொலி 01-04-2018

கவிதை -சாளரம் துப்பியது அல்லது உனக்கும் நேர்ந்ததா?


நான் தூஷிக்கப்பட்டேன் 
மிகக் கொடிய வார்த்தைகளால்.

நான் பயமுறுத்தப்பட்டேன்
பெயரறியாப் பிசாசுகளால்.

நான் தாக்கப்பட்டேன்
இதயமற்றவர்களின் இரும்புக் கம்பிகளால்.

சிறைக்கதவுகள் திறக்கப்பட்டிருப்பது
எனக்காகவென்று
எச்சரிக்கப்பட்டேன் பலநூறு பேரால்.

உனக்கும் இது நேர்ந்ததா
நண்பனே?

எங்கள் தெருக்கள் வழிமறிக்கப்பட்டன
எங்களுக்கு.

நிர்வாணமாக வருவதே
புத்திசாலித்தனமென்று
சோதனைச் சாவடிகள்
ஆலோசனை சொல்லின.

மலங் கழிக்கவும்
சலம் விடவும்
பற்றைகளை நாடுவோர்
கொல்லப்பட வேண்டிய கெரில்லாக்காரரென
சட்டவிதிகள் உருமாற்றின மனிதர்களை.

தெரு,வீடு,பாடசாலை,அலுவலகம்
எங்காயினும்
மரணத்துக்கும் பிடிவிறாந்துக்கும்
அவசர அனுமதி தரப்பட்டது.

உன்னூரிலும் இது நடந்ததா
நண்பனே?

ஒரு துப்பாக்கியையோ இரும்புக் கம்பியையோ
கனவு
திரும்பத் திரும்ப திரையிடுகிறது.

தூக்கம் கெடும் போதெல்லாம்
சுற்றிலும் 
பிசாசுகளின் அரவம் கேட்கிறது.

சூனியத்தில் சுழலும் மனது
திடீரென
பரந்து வீரியம் கொள்கிறது.

எல்லாவற்றிலும் மோதி
எதிரொலிக்கும் உணர்வில்
குருதி 
குதித்துப் புரள்கிறது.
உனக்கும் தோன்றியதா
இந்த உணர்வு?

           வெளிச்சம் 50வது சிறப்பிதழ்
 ‘20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ நூல்

Thursday, July 25, 2019

கவிதை -சிலுவை சுமக்கும் தருணம்




ஒவ்வொரு காலையிலும்
வீட்டு வளவைத் தாண்டுகையில் 
அடையாள அட்டைகளைப் பத்திரப்படுத்தி வை.

உன்னை அடையாளப்படுத்த
எத்தனை அட்டைகளையும்
சேமித்துக் கொள்.

ஒவ்வோர் வளைவுகளிலும்
அவர்கள் நிற்பார்கள்.
அவர்கள் எப்படி நோக்கினும்
புன்னகைக்க மறக்காதே.

அடிக்கடி
சோதனை நிலையங்கள் குறுக்கிடும்.
எரிச்சலடையாதே.
வாகனங்களிலிருந்து இறங்கு.
உடலையும் பொதிகளையும்
அவர்கள் பரிசோதிக்க இடமளி.

உனது அங்கங்களில்
சேஷ்டை புரிவதாய்க்
கற்பனை செய்யாதே.

‘எங்கே’
‘யாரிடம்’
‘ஏன்’
அவர்கள் வினாக்களுக்கு விளக்கமளிப்பது
உனது கடமை.

உன்னை ஏசவும் எள்ளவும் செய்வார்கள்.
கோபம் கொள்ளாதே.

சிலவேளை
அவர்கள் உன்னை
போராளியாகவோ
போராளிகளின் ஆதரவாளனாகவோ
சொல்லலாம்.

தடுத்து வைக்கப்படவும்
நையப்புடைக்கப்படவும்
காணாமற் போகவும் சந்தர்ப்பமுண்டு.

காலம் சுருக்குக் கயிறான பின்
நாமென்ன செய்வது?
நாம் கீழமிழ்ந்துள்ளோம் அவர்களிடம்.
மிதிபடுவது நியதியென
காலம் பணிக்கிறது.
நாங்கள் பணிய வேண்டும் நண்பர்களே!

வரலாறு புரளும்
ஒரு சந்தர்ப்பம் கூடுகிற போது
கீழமிழ்ந்தவர் மேலெழத்தான் வேண்டும்.

அப்போது
காலம் நம் கரம் பற்றும்.
அதுவரை
பணிந்திரு.. பதுங்கிடு..
அதிகமதிகமாய்
உன்னைப் புடம் போடு.

           வெளிச்சம் 50ஆவது சிறப்பிதழ் 1997

கவிதை -நாமே அறியாத நம்மைப் பற்றியவை


தெரு நாய்களின் ஊழயொலி நிறைந்த
நிலவெறித்த முன்னிரவொன்றில்
காதல்
எம்மிடம் தோற்ற கதையழுதேன்
அன்பே!

நம்மைப் பிரித்திடவும்
நாம் பிரிந்திடவும்
காரணமில்லையென்ற
கற்பிதங்கள் சிதைந்ததை
என்னவென்போம்?

சித்திரையின் பகலொழித்து
மழை பெய்த முழுநாளும்
நீயழுத கதை கேட்டேன்.
குற்றஞ் சொன்னாய் என்மீது.

நான் என் பெற்றோர் மீதும்
அவர்கள்
தாலிக் கனவுடனிருக்கும்
என் சகோதரிகள் மீதுமாய்
மாற்றிக் கொண்டோம் குற்றத்தை.

தாள்களின் பின்னால்தான்
இந்த உலகமும் உறவுகளும் என்பதை
அறியாதிருந்தோம் நாம்.

அறிந்திடில்
நமக்குக் காதல் வாய்த்திராது.
அன்றேல்
பிரிவு நேர்ந்திராது.

                                                   தாயகம் செப்ரெம்பர் 1998


கவிதை -எதிர் நீச்சல்


கண்வழி நடந்தேன்
கானலே எதிர்ப்பட்டது.

கால்வழி நடந்தேன்
தூரம் முடிவிலாதிருந்தது.

மனம் வழி நடந்தேன்
நிஜத்தைத் தொலைக்கலானேன்.

அடுத்தடுத்து
எப்படி நடப்பதென
என்னுள்ளே முரன்பட்டேன்.

ஈற்றில் 
எதிரென நடப்பதாய்
இசைவு கண்டேன்.

நடக்கிறேன்.
வாழ்க்கையும் நானுமாய்

கவிதை -இருள் விழுத்திய குரல்


காலம் விழுத்தியிருக்கிறது
சில துண்டு முட்களை,
நம் இதயத்தின் மீது.

சின்னனும் பெரியதுமாக
வலிமை மிக்கதாக
ஒவ்வொரு வடிவிலும் பெயரிலும்.

அவை
மனச்சாட்சியின் முனை வரை
ஊடுருவிப் பரவியிருக்கின்றன

சிலுவையில் அறையப்பட்டதாய்
நமது இதயம்
செயலற்றுத் தவிக்கின்றது.

கோபம் வரும்போது முடியவில்லை.
அவஸ்தைப்பட்டு
வெந்து மறுகிவிட்டுச் சோர்கிறது.

இரக்கமும் கூடவில்லை
வலி கொண்டு அழுதழுது தேறுகின்றது.

துடிப்பில் எந்த லயமும் இல்லை.
தன்னிருப்பைச்
சொல்லவும் வகையில்லை அதற்கு !

யாரிடமிருக்கின்றது
நைந்து போகாத ஒரு இதயம் ?

காலஞ் சபிக்காத
அந்த மனிதனைக் காண ஆசை.

                                                                              சஞ்சீவி 01-11-1997

கவிதை -துயர் மருங்கிலிருந்தொரு குரல்




புன் சிரிப்பால் உலகாண்ட

மைனாப் பொன் குஞ்சே!

ஆயிரம் வசீகரங்களின் பிறப்பே!


தளையறுந்த உணர்வுகளின் வெளிப்பாடே

கவிதையெனில்>

நீ கவிதை.


உனக்குள் சிக்கித் தவிக்கும்

நமது ஞாபகங்கள் அரற்றுகின்றன.


விழிகள்

நிலவொளிரா இரவின் தனிமையில்

சாக்குருவிக் குரலெழும்ப

உனது முகம் தேடுகின்றன.


நமது மூச்சுக் காற்றுக்கப்பால்

புழுதி வயல்களில் ஈரங் குழைத்து

உன் உடலம் வீழ்ந்த கதையறிந்தோம்.


பிரபஞ்சம் அவாவும்

உனது காதலைச் சொல்லவும்

அழுது மறுகியுன்

சாதலைச் சொல்லவும்

இயலாப் பிணமானோம்.


உனது உடலுமின்றி

நமது உயிருமின்றி

பரிதவித்துச் சுழல்கிறது பூமி.

                                                                                                (மைதிலிக்கு..)

                                                                                              சஞ்சீவி 20-09-1997