Saturday, July 27, 2019

கவிதை -பகிர வருதலின்


வேண்டும் ஓர் உறவெனக்கு.

போலியின் திரை விரிப்பில் 
மாயச் சுவரெழுப்பும்
பார்வையும் புன்னகையும்
யாரிடமுமிருக்கிறது தாராளமாய்.

தப்பின் குரல் மறைத்து
சந்தர்ப்பக் கூக்குரல்கள் 
நேசம் புரிவதாய்ப் பாவிக்கின்றன.

ஒவ்வொரு மாலையும்
கொஞ்சம் அருள் வார்த்தைகளுமாய்
குரூரங்கள்
தலைவாரி விடுகின்றன.

வீதிகளில் 
ஞாபகங்களின் இரை மீட்டி
சற்றே மிரட்டி,
பின் அபயமளிப்பதாய் ஆசீர்வதிக்கின்றன.

சில கண்களும்
கடந்த காலத்து மனிதனென மறுகி
தீண்டாமை விரதமிருக்கின்றன.

பரவாயில்லையே,
சில எச்சமிட்டல்லவா செல்கின்றன.

எனக்கெதற்கு இவை?

எனக்கு வேண்டும் ஓருறவு!

அன்பின் வார்த்தைகளால் தலை வாரி,
நமது மகிழ்ச்சியில் சுகம் கண்டு,
மனதின் வலிகளுக்கு ஒற்றடமிட்டு,
நமது துன்பங்களில் நமைத் தேற்றி,
நமக்கென்றொரு தளமின்றி
நாமே தளமாக.

                            காலைக்கதிர் ஏப்ரல் 10-18,1998

கவிதை -தொங்கும் இழைகள்


அவன் எனக்கு நண்பனாயிருந்தான்.
பல பொழுதுகளில்
பிரியாத பந்தமெனக் கதையளந்தோம்.

பரிவும் தண்மையும் பூத்த
இரு கிளைகளெனக் 
கற்பிதம் செய்தோம்.

ஒரு ஜீவனே 
நம்முள் புகுந்திருப்பதாய்
களி கூர்ந்தோம்.

பாடசாலையும் எங்கள் வீடுகளும்
வழுக்கியாற்று மதகும்
இன்ன பிறவும் நட்பின் இளைகளாயின.

ஒரு வசந்தப் பொழுதில்
அவனுக்குத் திருமணமாயிற்று.

அக்கணமே காணாமற் போனான்.

பின்,
நட்பின் இழைகள் அறுந்து தொங்கின.

எனதும் அவனதும் வீடாகவும்
பாடசாலையாகவும்
வழுக்கியாற்று மதகாகவும்
நானாகவும் அவனாகவும் கூட.

                                            சஞ்சீவி 31-01-1998

Friday, July 26, 2019

கவிதை -காலக்குருடன் ராஜ்ஜியம்


ஒரு கோலம் போட்டல்லவா 
நடந்து போனோம்!

திடீரென
புயற் சுழிப்பில்
சுழன்றறுந்து வீழ்ந்த நம் வாழ்வு

காலக் குருடன் காலடியில் கிடக்கிறது
நிலை மறந்து
திசை புரண்டு.

பாதங்களை ஊன்றி
குருடன் நடக்கிறான்
நம்மை நசித்து நசித்து.

திடீரென
எம்மி எம்பிக் குதிக்கிறான்.
முரட்டாட்டம் போடுகிறான்.

ஆங்காங்கே
உயிர்களை உருவியெடுத்து
வீதிகள் பற்றைகளில்
உடல்களை விழுத்திச் செல்கிறான்.

தனது பிரகடனங்களும் கட்டளைகளுமே
வாழ்வின் பயனென
உரத்துக் கூக்குரலிடுகிறான்.

உண்மையைத் தரிசிக்கும் வகையறியான்
ராஜாங்கம்
பரந்திருக்கிறது
நிழல் மீதும் நம் உடல் மீதும்.

                                                       வெளிச்சம் 1997

கவிதை -பரீட்சையில் எஞ்சிய வினாக்கள்


மழைமேகம் விலக்கி
சூரியக் கதிர்கள் பரவும் காலைப்பொழுது.

பசிய இலைகளை வருடி வருடி
பூந்தேன் ருசித்தன
வண்ணத்துப்பூச்சிகள்.

பின்,
இணை சேர்ந்து நடனமாடின.

மருதமரந் தழுவிய தென்றல்
பூந்தாதை ஏந்தி வந்து
முகத்தில் எற்றி விட்டு விலகியது.

நூற்றாண்டுப் பழமையின் நிழல் தேக்கி
உயிர்த்திருக்கிறது கல்லூரி
ஒரு அனுபவஸ்தனாய்.

பரீட்சை நடக்கிறது.

அங்குமிங்கும்
நடை பயில்கின்றனர் நோக்குநர்கள்.

விடைத்தாளில் கைகள் ஊர
புலன் நுழைகிறது எழுத்தாய்.

00

கிளைகள் அசைகின்றன

சற்றைக்கெல்லாம்
அவை தலைகளாகின்றன.

சுவரைத் தாண்டி வந்து
அலறுகிறது ‘மொபைல் செற்’

உள்ளே வந்தான் இராணுவ அதிகாரி
சில துப்பாக்கிதாரிகள் சகிதம்.

பின்னர்
அவர்களும் நோக்குநராயினர்.

அடையாள அட்டையைப் பரிசோதித்தனர்.

பின், 
மெல்ல மெல்ல அப்பால் மறைந்தனர்.

00

வண்ணத்துப் பூச்சிகளும் பூக்களும்
மருதங்காற்றும்
ஞாபகத்தில் அழிந்தன.

செவியில்
மொபைல்செற்றின் அலறலே எதிரொலிக்க
புலன் முழுவதும்
அவர்களே நிறைந்திருந்தனர்.

வானங் கறுத்த மதியத்தில்
வெளியே வந்தேன்
இரு வினாக்களுடன்.

இந்த மழைக்காற்றில் சுகம் காணும்
வண்ணத்துப் பூச்சியாவது எப்படி?

பரீட்சையில் எதை எழுதினேன்?

                                                            வெளிச்சம் 1997

கவிதை -மகனே! எங்கிருக்கிறாய்?




மகனே! நீ எங்கிருக்கிறாய்?

பிள்ளைக்கு விசுக்கோத்து வாங்கி வருவதாய்
சொல்லிச் சென்றாய்.
வழியில் 
சீருடை அணிந்தவர்கள்
உன்னைப் பிடித்துச் சென்றதாய்
சொன்னார்கள்.

எல்லாப் படை முகாம்களுக்கும்
சென்று வந்தாயிற்று.
நினைப்பு வரும் போதெல்லாம்
படை முகாம்களை நோக்கியே
கால்கள் ஏகிற்று.
எவருமே கண்டதில்லையாம் உன்னை.

விதானையார் வீட்டிலிருந்து
கச்சேரி வரைக்கும்
நடந்து தேய்ந்த செருப்புகள்
மூலையில் கிடக்கின்றன.
எவரும் அறிந்ததில்லையாம் உனது செய்தியை.

அரசியல்வாதிகள் அனைவரையும்
பார்த்தாச்சு
கண்டுபிடித்துத் தருவதாய் 
வாக்குறுதிகள் தந்தார்கள்.

அவர்கள் வாக்குறுதி அளித்த போது
மடி தவழ்ந்த உன் சின்ன மகன்
இப்போது மீசை அரும்பும் 
வாலிபனாகி விட்டான்.
அப்பா எங்கே என்று கேட்டலுத்து
அவனும் ஓய்ந்து விட்டான்.

எல்லோரும் மறந்து கொண்டிருக்கின்றனர் உன்னை.
நான் எப்படி மறப்பேன்
என் குலக் கொழுந்தே!

யோசியக்காரர்களும் குறி சொல்வோரும்
விதைக்கும் நம்பிக்கையுடன்
உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

மரணம் நெருங்கும் கணம் வரை 
தேடிக் கொண்டிருப்பேன்.
எங்கிருக்கிறாய் மகனே?

                              எதிரொலி 01-04-2018

கவிதை -சாளரம் துப்பியது அல்லது உனக்கும் நேர்ந்ததா?


நான் தூஷிக்கப்பட்டேன் 
மிகக் கொடிய வார்த்தைகளால்.

நான் பயமுறுத்தப்பட்டேன்
பெயரறியாப் பிசாசுகளால்.

நான் தாக்கப்பட்டேன்
இதயமற்றவர்களின் இரும்புக் கம்பிகளால்.

சிறைக்கதவுகள் திறக்கப்பட்டிருப்பது
எனக்காகவென்று
எச்சரிக்கப்பட்டேன் பலநூறு பேரால்.

உனக்கும் இது நேர்ந்ததா
நண்பனே?

எங்கள் தெருக்கள் வழிமறிக்கப்பட்டன
எங்களுக்கு.

நிர்வாணமாக வருவதே
புத்திசாலித்தனமென்று
சோதனைச் சாவடிகள்
ஆலோசனை சொல்லின.

மலங் கழிக்கவும்
சலம் விடவும்
பற்றைகளை நாடுவோர்
கொல்லப்பட வேண்டிய கெரில்லாக்காரரென
சட்டவிதிகள் உருமாற்றின மனிதர்களை.

தெரு,வீடு,பாடசாலை,அலுவலகம்
எங்காயினும்
மரணத்துக்கும் பிடிவிறாந்துக்கும்
அவசர அனுமதி தரப்பட்டது.

உன்னூரிலும் இது நடந்ததா
நண்பனே?

ஒரு துப்பாக்கியையோ இரும்புக் கம்பியையோ
கனவு
திரும்பத் திரும்ப திரையிடுகிறது.

தூக்கம் கெடும் போதெல்லாம்
சுற்றிலும் 
பிசாசுகளின் அரவம் கேட்கிறது.

சூனியத்தில் சுழலும் மனது
திடீரென
பரந்து வீரியம் கொள்கிறது.

எல்லாவற்றிலும் மோதி
எதிரொலிக்கும் உணர்வில்
குருதி 
குதித்துப் புரள்கிறது.
உனக்கும் தோன்றியதா
இந்த உணர்வு?

           வெளிச்சம் 50வது சிறப்பிதழ்
 ‘20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ நூல்

Thursday, July 25, 2019

கவிதை -சிலுவை சுமக்கும் தருணம்




ஒவ்வொரு காலையிலும்
வீட்டு வளவைத் தாண்டுகையில் 
அடையாள அட்டைகளைப் பத்திரப்படுத்தி வை.

உன்னை அடையாளப்படுத்த
எத்தனை அட்டைகளையும்
சேமித்துக் கொள்.

ஒவ்வோர் வளைவுகளிலும்
அவர்கள் நிற்பார்கள்.
அவர்கள் எப்படி நோக்கினும்
புன்னகைக்க மறக்காதே.

அடிக்கடி
சோதனை நிலையங்கள் குறுக்கிடும்.
எரிச்சலடையாதே.
வாகனங்களிலிருந்து இறங்கு.
உடலையும் பொதிகளையும்
அவர்கள் பரிசோதிக்க இடமளி.

உனது அங்கங்களில்
சேஷ்டை புரிவதாய்க்
கற்பனை செய்யாதே.

‘எங்கே’
‘யாரிடம்’
‘ஏன்’
அவர்கள் வினாக்களுக்கு விளக்கமளிப்பது
உனது கடமை.

உன்னை ஏசவும் எள்ளவும் செய்வார்கள்.
கோபம் கொள்ளாதே.

சிலவேளை
அவர்கள் உன்னை
போராளியாகவோ
போராளிகளின் ஆதரவாளனாகவோ
சொல்லலாம்.

தடுத்து வைக்கப்படவும்
நையப்புடைக்கப்படவும்
காணாமற் போகவும் சந்தர்ப்பமுண்டு.

காலம் சுருக்குக் கயிறான பின்
நாமென்ன செய்வது?
நாம் கீழமிழ்ந்துள்ளோம் அவர்களிடம்.
மிதிபடுவது நியதியென
காலம் பணிக்கிறது.
நாங்கள் பணிய வேண்டும் நண்பர்களே!

வரலாறு புரளும்
ஒரு சந்தர்ப்பம் கூடுகிற போது
கீழமிழ்ந்தவர் மேலெழத்தான் வேண்டும்.

அப்போது
காலம் நம் கரம் பற்றும்.
அதுவரை
பணிந்திரு.. பதுங்கிடு..
அதிகமதிகமாய்
உன்னைப் புடம் போடு.

           வெளிச்சம் 50ஆவது சிறப்பிதழ் 1997