Thursday, October 19, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 20



 முன்றில் - 20

இயல்வாணன்
இலங்கை அரசாங்கத்தால் இலக்கியத்துறைப் பங்களிப்புக்காக வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய ரத்னா விருதை இவ்வாண்டு தமிழ் மொழி சார்ந்து மூத்த எழுத்தாளர் க.சட்டநாதன் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, குறுநாவல், நாவல், விமர்சனம் எனத் தொடர்ந்து புனைவிலக்கியம் படைத்து வரும் க.சட்டநாதன் 22-04-1940இல் வேலணையில் பிறந்தார். இவரது பேரனார் பேரம்பலம் வேலணையில் பெயர்பெற்ற தமிழ்ப் புலவர்.  தந்தையார் கனகரத்தினமும் ஒரு தமிழ்ப் புலவராக விளங்கினார்.


இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் நிறைவு செய்து இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். இவரது உயர் கல்வியை சென்னை விவேகானந்தா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கற்று 1964இல் விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஊர் திரும்பிய இவர் சிறிது காலம் சுயமுயற்சியாளராக கால்நடைப் பண்ணையொன்றை வேலணையில் நிர்வகித்தார். தொடர்ந்து 1967 முதல் 1971 வரை வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்திலும், விளம்பரப் பிரிவிலும் பணியாற்றினார். 1971இல்  பட்டதாரி ஆசிரிய உதவியாளர் நியமனம் பெற்று ஆங்கில ஆசிரியராக புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் பணியாற்றினார். 1976இல் பட்டதாரி ஆசிரியராக நியமனம் கிடைத்தது. 1980இல் ஆரம்பித்த பொது வேலைநிறுத்தத்தில் இவரும் பங்கேற்றதால் வேலையிழந்தார்.

மீண்டும் 1982லேயே பணியில் அமர முடிந்தது. மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்துக்கு நியமனம் கிடைத்து சில நாள்களிலேயே மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார். 1987வரை அப்பாடசாலையில் கடமையாற்றிய இவர் அவ்வாண்டு கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று 2000ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை அங்கு கடமையாற்றினார். 27வருட ஆசிரிய சேவையில் ஆங்கிலம், விஞ்ஞானம், சுகாதாரம் ஆகிய பாடங்களைக் கற்பித்ததோடு, இலக்கியத்துறையில் வழிப்படுத்தலையும் செய்து நன்மாணாக்கர்களை உருவாக்கியிருக்கிறார்.

இந்துக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் சிவராமலிங்கமும் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் விரிவுரையாளர் ஜெகநாதாச்சாரியரும் இவரை  இலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்தியிருந்தனர். கூடவே இவரது பரம்பரைத் தமிழ்ப்புலமையும் கைகொடுத்தது.
1970இல் வீரகேசரியில் வெளிவந்த நாணயம் சிறுகதையுடன் இவரது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது. தொடர்ந்து வீரகேசரி, உதயன், மல்லிகை, பூரணி, அலை, திசை, நங்கை, அஞ்சலி, தாயகம், வெளிச்சம், நங்கூரம், மூன்றாவது மனிதன், கலைமுகம், மகுடம், எதுவரை, ஜீவநதி, தூண்டி, தெரிதல் முதலான பத்திரிகைகள், இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
இவரது 6 சிறுகதைகள் கொண்ட மாற்றம்(1980),  8 சிறுகதைகள் கொண்ட உலா (1992), நீளும் பாலை குறுநாவல் மற்றும் ஏற்கனவே வெளிவந்த 12 சிறுகதைகளைக் கொண்ட சட்டநாதன் கதைகள்(1995), 13 சிறுகதைகள் கொண்ட புதியவர்கள்(2006), 12 சிறுகதைகள் கொண்ட முக்கூடல் (2010), 12 சிறுகதைகள் கொண்ட பொழிவு(2016), 10 சிறுகதைகள் கொண்ட தஞ்சம்(2018) ஆகியன நூல்களாக வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏ.ஜே.கனகரத்னா, சி.கனகநாயகம், சோ.பத்மநாதன், கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பத்து சிறுகதைகள் The Shower(2020) என்ற நூலாக வெளிவந்துள்ளது.
கவிதைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் நீரின் நிறம் (2017), துயரம் தரும் அழகு(2019) ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவல் உயிரில் கலந்த வாசம்(2020) பால்ய காலத்தை நினைவுகூரும்  இயல்பான கிராமத்து வாழ்வையும், உணர்வனுபவங்களையும் பேசுகின்றது. இவர் எழுதிய பல்வேறு இலக்கியக் கட்டுரைகள் சட்டநாதன் கட்டுரைகள்(2021) நூலாக வெளிவந்துள்ளது.
கலை இலக்கிய விமர்சன இதழான பூரணியை(1972) என்.கே.மகாலிங்கத்துடன் இணையாசிரியராக இருந்து வெளிக்கொணர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட ரசனை மிக்கவராகவும் இவர் விளங்கினார்.
சட்டநாதனின் கதைகள் இயல்பான குடும்ப வாழ்வையும், அகச் சிக்கல்களையும் பேசுவன. கிராமத்து மாந்தர்களை இயல்பான பாத்திரங்களாக வார்த்து, சொற்சிக்கனத்தோடு நளின நடையில் கதையை நகர்த்திச் செல்வதில் சட்டநாதன் முக்கியத்துவம் மிக்க படைப்பாளியாக விளங்குகிறார். தி.ஜானகிராமன் போல பாலியல் சார்ந்த விடயங்களை, மென்மையான உணர்வுகளை தனது கதைகள் ஊடாக நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்துள்ளார். பெண்களை, குழந்தைகளை உயர்வாகச் சித்திரிக்கும் வகையிலும் இவரது படைப்புகள் முக்கியத்துவமுடையவை.

‘எனது கதைகளில் வரும் பெண்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் நின்றபடி தலைநிமிர்ந்து பார்ப்பவர்கள். சரியெனப்படுவதைத் தீர்மானமாகச் செய்பவர்கள். எனது எழுத்தின் அடிச்சரடாய், தொடரிழையாய் இருப்பது இப்பெண்கள் பற்றிய அக்கறையும், அவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளிக்கொணரும் முயற்சிதான்’என்று சட்டநாதன் குறிப்பிடுவது அவரது கதைகளின் பிரதான பாத்திர வார்ப்பைத் துலாம்பரப்படுத்துகின்றன.
‘பிளிறிக் கொண்டு அட்டகாசம் செய்யும் யானையைப் போலன்றி, மிக அடக்கமாகவும் மனிதத்தன்மையோடும் பாத்திரங்களை நோக்கி அவர்களின் உறவுகளினூடாக சமுதாயத்தைப் பற்றி குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சமூகத்தைப் பற்றி நாசூக்காக சிந்திக்கத் தூண்டினார்’ என இவரது கதைகள் தொடர்பில் ஏ.ஜே.கனகரத்ன குறிப்பிட்டது முக்கியமானதாகும்.

83 வயதில் ஆயிரம் பிறை கண்டு வாழும் சட்டநாதன் அடிப்படையில் சிறந்த – தொடர்ந்த - வாசகர். அந்த வாசிப்பே அவரது படைப்புகளின் உயர்தரத்துக்கும் அடிப்படையானது. தொடர்ந்தும் அவரது இலக்கியப் பங்களிப்பை ஈழத்தவர்கள் நுகரும் வாய்ப்பு கிட்ட வேண்டி வாழ்த்துகிறோம்.

உதயன் சஞ்சீவி 15-10-2023








இயல்வாணன் பத்தி முன்றில் 19



 முன்றில் -19

எழுத்துலகில் தொடர்ச்சியறாது இயங்குவதென்பதுஅதிலும் பெண்கள் இயங்குவதென்பது கடினமானதுதிருமணமாகி இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் தாயாகி அவர்களது கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்ட ஒரு குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதி வருவதென்பது முக்கியமானதுஅத்தகைய எழுத்தூழியத்துக்காக அண்மையில் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் தாமரைச்செல்வி.

பரந்தன் குமாரபுரத்தில் சுப்பிரமணியத்தின் மகளாக 04-08-1953இல் பிறந்த தாமரைச்செல்வியின் இயற்பெயர் ரதிதேவிஇவர் தனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.

தனது 20 வயதில்(1973) இலங்கை வானொலியில் எழுதத் தொடங்கிய இவர் 1974இல் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த ஒரு கோபுரம் சரிகிறது என்ற சிறுகதையுடன் அடையாளம் காணப்பட்டார்அதிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார்ஈழநாடுஈழமுரசுஈழநாதம்முரசொலிதினகரன்சிந்தாமணிதினக்குரல் முதலான பத்திரிகைகளிலும்மல்லிகைஅமிர்தகங்கைவெளிச்சம்நாற்றுஆதாரம்களம்சிரித்திரன்சுடர்ஞானம்மாணிக்கம்கலாவல்லிகிருதயுகம்விளக்குபெண்ணின் குரல்தாயகம்மாருதம்ஜீவநதிதாயகம்வளையோசையாழ்மதிநுட்பம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

தமிழ்நாட்டிலும்புலம்பெயர் தேசங்களிலுங் கூட இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளனதமிழ்நாட்டில் ஆனந்த விகடன்குங்குமம்மங்கைஇதயம் பேசுகிறது ஆகிய சஞ்சிகைகளிலும்பரிஸ் ஈழநாடுபரிஸ் ஈழமுரசுஎரிமலைகளத்தில்தாய்வீடு(கனடா), எதிரொலி(அவுஸ்திரேலியா), நடு(பிரான்ஸ்), வணக்கம் லண்டன்அக்கினிக்குஞ்சு(அவுஸ்திரேலியாஆகிய புலம்பெயர் ஊடகங்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

இவரது சிறுகதைகள் ஆங்கிலம்சிங்களம்ஜேர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனஇவரது இடைவெளி (The Gap), வாழ்க்கை (The Lifeசிறுகதைகள் பேராசிரியர் சி.சிவசேகரத்தாலும்பாதை (The Rugged Pathசிறுகதை  .ஜே.கனகரட்ணவாலும்முகமற்றவர்கள் (Faceless Peopleசிறுகதை பெ.இராஜசிங்கத்தாலும்எங்கேயும் எப்போதும் (The Invitableசிறுகதை கே.எஸ்.சிவகுமாரனாலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது ஒரு மழைக்கால இரவு சிறுகதை திருமதி ஜெயசித்ராவாலும்வன்னியாச்சி சிறுகதை திருமதி அனுராத ஜயசிங்கவாலும்வாழ்க்கை  சிறுகதை பேராசிரியர் பியசீலி விஜயமானவாலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனஎல்வின் மாசிலாமணியால் இவரது ஓட்டம் சிறுகதை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவரது ஆறு சிறுகதைகள் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளனஇவரது இடைவெளி சிறுகதை 1996 என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல இயக்குநர் உதிரிப்பூக்கள் மகேந்திரனால் குறும்படமாக்கப்பட்டதுஅவரது மகனான இயக்குநர் ஜான் மகேந்திரனால் பாதணி என்ற சிறுகதை குறும்படமாக்கப்பட்டதுஇவரது பசி சிறுகதை தமிழ்நாட்டைச் சேர்ந்த இமயவர்மனால் குறும்படமாக்கப்பட்டுலண்டனில் விம்பம் அமைப்பு நடத்திய குறும்பட விழாவில் பார்வையாளர் விருது வென்றதுதாயகத்தின் போராளிக் கலைஞர் திலகனால் இவரது சாம்பல்மேடு குறும்படமாக்கப்பட்டுள்ளதுபாதைவாழ்க்கை ஆகிய சிறுகதைகளும் குறும்படமாக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரச பாடநூலில் தரம் 11 பாடத்திட்டத்தில் இவரது இன்னொரு பக்கம் சிறுகதையும்தமிழ்நாடு அரசின் தரம் 11 பாடத்திட்டத்தில் இவரது பசி சிறுகதையும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்இவரது சிறுகதைகள் ஒரு மழைக்கால இரவு(1998), அழுவதற்கு நேரமில்லை(2002), வன்னியாச்சி(2005) ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

முரசொலி பத்திரிகை நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்ற வேள்வித்தீ   நூல் 1994இல் மீரா வெளியீடாக வெளிவந்ததுஇவரது வீதியெல்லாம் தோரணங்கள் நாவல் வீரகேசரி பத்திரிகையும் யாழ்.இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதுசுமைகள்(1977), விண்ணில் அல்ல விடிவெள்ளி(1992), தாகம்(1993), வீதியெல்லாம் தோரணங்கள்(2003), பச்சைவயல் கனவு(2004), உயிர்வாசம்(2019) ஆகிய நாவல்கள் இவரால் எழுதப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

சாகித்திய மண்டல விருது(பச்சை வயற்  கனவு), இலங்கை இலக்கியப் பேரவை விருது(பச்சை வயல் கனவுவிண்ணில் அல்ல விவெள்ளிதாகம்), வடக்கு கிழக்கு மாகாண விருது(ஒரு மழைக்கால இரவு), வடக்கு மாகாண விருது(வீதியெல்லாம் தோரணங்கள்), சுதந்திர இலக்கிய அமைப்பு விருது(தாகம்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது(உயிர்வாசம்என்பன இவரது படைப்புகளுக்காக கிடைத்த கௌரவங்களாகும்.

வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது(2001), கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் இலக்கியமணி விருது(2002), அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது(2000), கொழும்பு கலை இலக்கியக் கழகத்தின் விருது(2003), தமிழ்நாடு சின்னப்பபாரதிஅறக்கட்டளை விருது(2010), கண்டாவளை பிரதேச கலாசார பேரவையின் ஒளிச்சுடர் விருது(2011)  எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது(2012), யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் கௌரவிப்பு(2015) என்பன இவரது தொடர்ந்த இலக்கியப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட மணிமகுடங்களாகும்.

வாழ்க்கை யதார்த்தங்களை தானும் ஒரு சாட்சியாகபார்வையாளராக நின்று கொண்டு சித்திரிக்கும் யதார்த்தவாத எழுத்து தாமரைச்செல்வியினுடையதுவன்னி மண்ணின் குறிப்பாககிளிநொச்சி மண்ணின் வாசத்தைஅங்குள்ள மனிதர்களைஅவர்களின் பாடுகளைவாழ்க்கையை கமராக் கண்கொண்டு இவரது எழுத்துக்கள் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ளன. இவர் ஒரு ஓவியராகவும் விளங்கியுள்ளார் என்பது இந்தச் சித்திரிப்புக்கு மேலும் வளஞ்சேர்த்துள்ளது. 30 ஆண்டுகள் நீடித்த போரின் துயரத்தை இவரது எழுதுகோல் வரலாற்று இலக்கிய மூலாதாரமாகக் கொள்ளத்தக்க வகையில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளதுபோரில் உடமைகளை மட்டுமல்ல பல எழுத்துப் பிரதிகளையும் இழந்த போதும் இருப்பவை இவரது விஸ்வரூப பரிமாணத்தை எமக்கு வெளிக் காட்டுகின்றன

70 வயதை நிறைவு செய்துள்ள இவர் எழுத்துலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பெருமையோடுதனது கணவர்பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்இவர் தனது எழுத்துக்களால் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் வளஞ்சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.

உதயன் சஞ்சீவி 24-09-2023

 








இயல்வாணன் பத்தி முன்றில் 18



 முன்றில் - 18


ஈழத்துப் படைப்பாளிகள் பலரை உருவாக்கிய பெருமை மகாஜனாக் கல்லூரிக்கு உண்டு. அதனை நிறுவிய பாவலர் துரையப்பாப்பிள்ளை பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் வழி வந்த சின்னப்பபிள்ளை, செ.கதிரேசர்பிள்ளை என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. அவர்களில் பலருடைய கவிதைகள் மகாஜனக் கவிதைகள் நூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளது. அந்தப் பண்ணையில் தோன்றிய முதன்மையான பெண் ஆளுமை கோகிலா மகேந்திரன். இவ்வாண்டு யாழ்ப்பாண மாநகர சபையால் வழங்கப்பட்ட இயல் துறைக்கான அரசகேசரி விருதைப் பெற்றுள்ளார்.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், கட்டுரை, பத்தி, சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் அனைத்துப் பக்கங்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய முதன்மைப் பாத்திரம் உளவியல்துறையே. பின்னாளில் அதுவே அவரது அடையாளப்படுத்தத்தக்க துறையாக அமைந்தது.
கவிஞரும் உரையாசிரியருமாக விளங்கிய சிவசுப்பிரமணியத்தின்(விழிசைச்சிவம்) மகளாக 1950ஆம் ஆண்டு நவம்பர் 17ஆந் திகதி தெல்லிப்பழை விழிசிட்டியில் பிறந்த கோகிலாதேவி பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில்(1955-58) தனது ஆரம்பக் கல்வியையும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில்(1959-68) இடைநிலைக் கல்வியையும் பெற்றுக் கொண்டார். 1970இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி மருத்துவத்துறையில் மூன்றாண்டுகள் கற்ற போதும் கற்கைநெறியைப் பூரணப்படுத்தவில்லை. உளவளத்துணையாளர்(1995), வட இலங்கை சங்கீத சபையின் நாடக கலாவித்தகர்(2002) பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

 1974இல் விஞ்ஞான பாட ஆசிரிய நியமனம் கிடைத்து பொலிகண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் பணியினை ஆரம்பித்தார். தொடர்ந்து கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயத்தில் கற்பித்தார்.(1976-78) பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் ஆசிரிய பயிற்சியினைப்(1979-81) பெற்றுக் கொண்டார். பயிற்சியின் பின்னர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியிலும்(1982-93), யூனியன் கல்லூரியிலும் கற்பித்தார்.
1994இல் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபர் பொறுப்பினையேற்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தில் 8ஆண்டுகள் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்றார். தொலைக்கல்வி போதனாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் மற்றும் அறிகைச் சிகிச்சை விரிவுரையாளர், சாந்திகம் நிறுவனப் பணிப்பாளர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பதவிகளையும் வகித்த இவர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழ் மற்றும் சமயபாட வருகை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

கோகிலா சிவசுப்பிரமணியமாக எழுத்துலகில் பிரவேசித்த இவர் திருமணத்தின் பின்னர் கோகிலா மகேந்திரன் என்ற பெயரில் எழுதி வருகிறார். விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் முதலிய புனைபெயர்களிலும் இவர் எழுதியுள்ளார். 1972இல் குயில் சஞ்சிகையில் எழுதிய அன்பிற்கு முன்னால் சிறுகதையுடன் இலக்கிய உலகிற் பிரவேசித்த இவர் சுடர், ஈழநாடு, மித்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், முரசொலி எனப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
 இவர் எழுதிய 75வரையான சிறுகதைகள் மனித சொரூபங்கள்(1982), முரண்பாடுகளின் அறுவடை(1983), அறிமுகவிழா(புலோலியூர் ஆ.இரத்தினவேலோனுடன் இணைந்து- 1984), பிரசவங்கள்(1986), வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்(1997), முகங்களும் மூடிகளும்(2003), வரிக்குயில்(2016) ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மனதைக் கழுவும் மகாசமத்தர்கள்(2008), புலச்சிதறல் நெஞ்சம்(2013), சிறுகதை(2014) முதலிய தொகுப்புகளும் இவரது புனைகதைத் துறைப் பங்களிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. 

துயிலும் ஒருநாள் கலையும்(1986), தூவானம் கவனம்(1989), சந்தனச் சிதறல்கள்(2018) ஆகியவை இவர் எழுதி  வெளியிட்டுள்ள நாவல்களாகும். சிறுவர் இலக்கியஞ் சார்ந்தும் இவர்  நூல்களை எழுதியுள்ளார். விஞ்ஞானக் கதைகள்(2000), அறிவியல் கதைகள்(2020) ஆகிய நூல்கள் மூலம் சிறுவர்களின் அறிவியல் விருத்திக்குப் பங்களித்துள்ளார்.
உளவளத்துணை சார்ந்து பல விரிவுரைகளை மேற்கொண்டும் பயிற்சிகளை வழங்கியும் உள்ள இவர் அது தொடர்பான நூல்களை எழுதியும் இணைந்து தொகுத்தும் உள்ளார்.  அவ்வகையில் மனக்குறை மாற வழி(1996), எங்கே நிம்மதி(2000), சிறுவர் உளநலம்(2002), மகிழ்வுடன் வாழ்தல்(2005), சின்னச் சின்னப் பிள்ளைகள்(2005), உள்ளக் கமலம்(2006), முற்றத்தில் சிந்திய முத்துக்கள்(2006), சுனாமியில் சிதறிய சித்திரங்கள்(2006), மனச்சோர்வு(2006), மனமெனுந் தோணி(2008), உள்ளம் பெருங்கோயில்(2009), உள்ளத்துள் உறைதல்(2011), சிறுவர் பாதுகாப்பு(2015), பதின்ம வயதுப் பிரச்சினைகளும் அவற்றைக் கையாளுதலும்(2016), வாழ்வின் முன்னேற்றத்துக்கான  கற்றல்(2020), சீர்மியத்தில் சிறப்பு முறைகள்(2020), குடும்பம் ஒரு கதம்பம்(2023) முதலான நூல்கள் மூலம் உளவளத்துணை சார்ந்த ஆற்றுப்படுத்தலுக்குப் பெரிதும் பங்களித்துள்ளார்.
இவரது நேர்கொண்ட பாவை(2015) பெண்ணிய உளவியல் சார்ந்த கட்டுரை நூலாகும். திருமனிதர் வாழ்வு(2017) சமூக உளவியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். தங்கம்மா அப்பாக்குட்டி பற்றிய தங்கத்தலைவி(2000) தனிமனித ஆளுமையை வெளிப்படுத்தும் நூலாகும். விழிமுத்து(1999), அரங்கக்கலையில் ஐம்பதாண்டு(2003), விழிசைச்சிவம்(2009) ஆகிய இத்தகைய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
நாடகத்துறையிலும் இவர் தனது அடையாளத்தைப் பதித்துள்ளார். நாடக எழுத்தாளராக, நடிகையாக, இயக்குநராக, தயாரிப்பாளராக, ஒப்பனைக் கலைஞராக பல்துறை ஆளுமையுடன் இவர் பயணித்துள்ளதுடன் சோலைக்குயில் அவைக்காற்றுகைக் கழகத்தை நிறுவி பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். கோலங்கள் ஐந்து(ஐந்து பேரின் ஐந்து நாடகங்கள்- 1994), கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு(1997), குயில்கள்(2001) ஆகியவை நாடகத்துறை சார்ந்த இவரது நூல்களாகும்.
தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தை நிறுவியவர்களில் ஒருவரான இவர் அதன்மூலம் பல நூல்களை வெளியிட்டும், நிகழ்ச்சிகளை நடத்தியும் இலக்கியத்துறைக்குப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இவரது கலை இலக்கிய சேவையைப் பாராட்டி இலக்கிய வித்தகர், சமூக திலகம், கலாபூ~ணம், சமூகஒளி, கலைப்பிரவாகம் முதலிய கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பலவழிகளிலும் இலக்கியம், அறிவியல், சமூகவியல், உளவியல், சமயம் சார்ந்து எழுதியும், பேசியும் வரும் கோகிலா மகேந்திரன் 73 வயதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவரது அறிவும் அனுபவமும் ஆளுமைப் பரிமாணமும் சமூகத்துக்கு மேலும் பயன்பட வேண்டும்.

உதயன் சஞ்சீவி 17-09-2023

இயல்வாணன் பத்தி முன்றில் 17




 முன்றில் 17

இயல்வாணன்

தமிழிலக்கண, இலக்கிய, சைவசமய அறிவு நிரம்பப் பெற்ற மரபுக் கவிதை கைவந்த வல்லாளர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம். பலநூறு மரபுக் கவிதைகளையும், பிரபந்தங்களையும், சிறுகதை, கவிதை, குறுங்கதை, நாவல் என உரைநடை இலக்கியங்களையும் படைத்த பன்முகப் படைப்பாளியாக இவர் விளங்குகிறார். 1939ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 28ஆந் திகதி இணுவிலில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை இணுவில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும்(தற்போதய இணுவில் இந்துக் கல்லூரி),  இடைநிலைக் கல்வியை உடுவில் மான்ஸ் ஆங்கில பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரியிலும்(தற்போதய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கற்றார்.  கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிநுட்பக் கல்வியைத் தொடர்ந்தார்.

நாவலர் பாடசாலையில் நடைபெற்ற பாலபண்டித வகுப்பில் கற்றுச் சித்தியடைந்ததுடன் 1967இல் பண்டித பரீட்சையில் திறமைச் சித்தி பெற்றார். ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 1964இல் நாவற்குழி அ.மி.த.க.பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். 1967இல் நல்லூர் ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியர் பயிற்சி பெற்று, 1968இல் கண்டி புசல்லாவ திருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றார். தொடர்ந்து புசல்லாவ சரஸ்வதி வித்தியாலயம், இணுவில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து பல நன்மாணாக்கரை உருவாக்கினார்.

வாணிதாசனின் கவிதைகள் மீதான ஈர்ப்பினால் தனது 13வது வயதில் கவிதை படித்த இவர்  பரமேஸ்வராக் கல்லூரியில் வித்துவான் க.வேந்தனாரிடம் கல்வி கற்ற காலத்தில் நண்பனுக்கு எழுதிய கவிதை மற்றவர்களால் பாராட்டப்பட்ட போது ஊக்கம் பெற்றார். சக நண்பனான சி.முருகவேள்(பின்னாளில் பேராதனை பல்கலைக்கழக நூலகராயிருந்தவர்) கொடுத்த காதல் என்ற தலைப்பிலான ஆங்கிலக் கவிதையை
குன்றின் சாரலில் வழியதனருகில்
நின்று சிதைந்த சமாதியின் மருங்கில்
அன்றொரு நாள் நான் கழித்ததோர் மணியை
என்றும் என் சிந்தையில் தேக்கி மகிழ்வேன்
என்று சில நிமிடங்களில் மொழிபெயர்த்துக் கொடுத்து ஆசிரியரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.

பரமேஸ்வராக் கல்லூரியில் கற்ற காலத்தில் அல்லி சஞ்சிகையில் இவரது முதல் கவிதை செந்தாமரை மலரே என்ற தலைப்பில் வெளிவந்தது. கல்லூரி சஞ்சிகையில் தீந்தமிழீழம் என்ற கவிதையை அன்று(1959) எழுதியமையும் குறிப்பிடத்தக்கது. பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் காவியம் தந்த அருட்டுணர்வில் இவரெழுதிய எழிலி காவியம் கலைச்செல்வி ஆசிரியர் சிற்பியின் ஆதரவுடன் செட்டிகுளம் பாலன் பதிப்பக வெளியீடாக 1962இல் வெளிவந்தது. இந்நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. சிற்பி சிவசரவணபவன் ஆசிரியராகவிருந்த கலைச்செல்வி கலை இலக்கிய சஞ்சிகையில் துணை ஆசிரியராக இவர் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

1963இல் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை மட்டக்களப்பில் 3 நாள் முத்தமிழ் விழாவினை நடத்தினார். அந்த விழாவில் நாவற்குழியூர் நடராசன் தலைமையில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. மஹாகவி, நீலாவணன், முருகையன், அம்பி, திமிலைத்துமிலன், சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் இணைந்து கவிபாடும் வாய்ப்பை எஸ்.பொ. இவருக்கு வழங்கினார். அன்று முதல் இலங்கை முழுவதும் எண்ணற்ற கவியரங்குகளில் இவர் பங்குபற்றித் தன் கவித்திறத்தால் சபையைக் கட்டி வைத்திருக்கிறார். இவரது தலைமையில் கவிதை பாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது பேறே. இவரது கவியரங்கக் கவிதைகள் தண்டலை என்ற பெயரில் 1966இல் வெளியாகியது.
இன்பவானில்(1971), எரிமலை தந்த விடுதலை(1988), நாடும் வீடும் - கவியரங்கக் கவிதைகள் (2001), ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள்(2002), திறந்தவெளிச் சிறையில் ஒரு தேசம்(2017), விலங்கு பறவைமுதலான கவிதை நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பாநாடகங்கள் பஞ்சாட்சரம் பாநாடகங்கள்(2005) என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

பல ஆலயங்களுக்குப் பிரபந்தங்களும் பாடியுள்ளார். இவை பல நூல்களாக வெளிவந்துள்ளன. இணுவை முருகன் பிள்ளைத்தமிழ், இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ், பொறிக்கடவை அம்மன் தலபுராணம், உடுப்பிட்டி மனோன்மணி அந்தாதி, கண்ணன் கவசம், தெண்டைமானாறு சந்நிதி வெண்பா, கனடா துர்க்கேஸ்வரம் அன்னை துர்க்கை அடிதொழு வெண்பா என்பன குறிப்பிடத்தக்கன. திருவூஞ்சல், அம்புலித்தூது, திருவிரட்டை மணிமாலை, திருப்பள்ளியெழுச்சி, மும்மணிக்கோவை, சிந்து முதலான பிரபந்தங்களை பல ஆலயங்களுக்குப் பாடியுள்ளார். இவற்றில் 30ஆலயங்களுக்குப் பாடிய பிரபந்தங்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியீடு காணவுள்ளது.
கீர்த்தனைகள், பக்திப் பாடல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். பிரபல பாடகர்கள் உன்னி கிருஸ்ணன், மனோ, மதுபாலகிருஸ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஹரிஸ் ராகவேந்திரா, மாணிக்கவிநாயகம், பம்பே ஜெயஸ்ரீ முதலானோரின் குரல்களில் இவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இவரெழுதிய 50ற்கும் மேற்பட்ட தாயக விடுதலைப் பாடல்களை சாந்தன், திருமலை சந்திரன், மணிமொழி, ராதிகா சுப்பிரமணியம், தவமலர் ஆகியோர் பாடியுள்ளனர். இசைவாணர் கண்ணன் இவரது பாடல்களுக்கு இசையமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவரெழுதி தமிழீழ வானொலியில் ஒலிபரப்பாகி வந்த பிரபாகரப் பெருங்காப்பியம் மூன்று பாகங்களும், 47 படலங்களும், 1300 கவிதைகளும் கொண்ட பெரும்படைப்பாகும். எனினும் அது யுத்தத்துக்குள் தொலைந்து போனமை அவருக்குப் பெரும் இழப்பாகும். மாவீரர் காவியங்களையும் இவர் பாடியுள்ளமை குறிப்பிடத்த்க்கது.
இவரது சிறுகதைகள் சின்னஞ்சிறுகதைகள்(1969), வேள்விநெருப்பு(2003), அன்னைமண்(2008), இந்தத் தீபாவளி தேவைதானா(2011), வண்டி முன்னாக மாடு பின்னாக(2012), கொம்புத்தேன்(2014) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. இவரெழுதிய நாவல் கூலிக்கு வந்தவன் என்ற தலைப்பில் 2003இல் வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். இவை சின்னப்பாப்பா பாட்டு(2004) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
இவரெழுதிய இலக்கணப் பூங்கா தமிழ் கற்கும் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் துணை நூலாக 15 பதிப்புகள் கண்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளமை முக்கியமானதாகும்.
சிறந்த சொற்பொழிவாளரான இவர் ஈழத்திலும், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சமய, இலக்கிய, அரசியல் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
மரபிலக்கியவாதிகள் நவீன உரைநடை இலக்கியங்களில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் புனைகதைத் துறைக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திய இப்பேராளுமை 84 வயதிலும் தளராத தமிழ்ப்பணியாற்றி வருகிறார். தனது தடத்தில் பல இளங்கவிஞர்களையும், பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமையும், பல இலக்கிய சமய அமைப்புகளை உருவாக்கிய பெருமையும் இவரைச் சாரும். இப்பேராளுமை நூறாண்டு நிறைவாக வாழ வாழ்த்துகிறோம்.

20-08-2023 உதயன் சஞ்சீவி




இயல்வாணன் பத்தி முன்றில் 16



 முன்றில் 16

இயல்வாணன்






மிஸ்டர் மலைவேம்பு பேசுகிறேன் இப்படியொரு பீடிகையுடன் சிறுகதையொன்று அமிர்தகங்கை சஞ்சிகையில் வெளிவந்திருந்ததுகதையின் தலைப்பு ஸ்கூல் பிளஸ் மினிபஸ் ரைம்ரேபிள்கள்.  இதை எழுதியவர் அப்போது யூனியன் கல்லூரியின் அதிபராக இருந்த  .பாலசுந்தரம்யூனியனில் நான் இடைநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்அந்தக் கதை அந்த வயதிலேயே என்னை ஆகர்சித்திருந்ததுஅந்த மலைவேம்பு யூனியன் கல்லூரி வாசலில் பெருவிருட்சமாய்   நிழல் பரப்பி நின்றது.

  80களின் நடுக்கூறில் - இனவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் - பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு ஏங்கும் பெற்றோரின் மனநிலையை மிகத் தத்ரூபமாக அக்கதை வெளிப்படுத்தியிருந்ததுபின்னர் அக்கதை உட்பட 10 சிறுகதைகள்  தொகுக்கப்பட்டு அந்நிய விருந்தாளி என்ற தலைப்பில் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக வெளிவந்தபோது அதைத் தேடி வாங்கி ஏனைய கதைகளையும் படித்தேன்உயர உயரும் அன்ரனாக்கள்முட்டைப் பொரியலும் முழங்கையும்மூன்று பரப்பும் முக்கால் குழியும் என்று ஒவ்வொரு கதைகளும் வித்தியாசமான தலைப்புகள் கொண்டவையாக அமைந்திருந்தன.

1928ஆம் ஆண்டு ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று ஆவரங்காலில் பிறந்த கதிர் பாலசுந்தரம் தனது ஆரம்பக் கல்வியை மூன்றாம் வகுப்பு வரை  மதவாச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும்,  ஆங்கில மொழி மூலக் கல்வியை புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியிலும் கற்றார்ஐந்தாம் தரத்துடன் கல்வியை இடைநிறுத்திக் கொண்டார்.  இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில்(1939-1945) திருகோணமலை சீனன்வாடி வான்படைத் தளத்தில் பொறியியலாளர்கள் நெய்பர்கிளாக் ஆகியோரின் அலுவலகத்தில் பணியாற்றினார்பின்னர் அங்குள்ள கிளப்பன்பேக்கில் (கடற்படை முகாம்வெள்ளை அதிகாரி கில் என்பவரின் அலுவலகத்தில் பணியாற்றினார்யுத்த முடிவைத் தொடர்ந்து 1946இல் சொந்த ஊரான ஆவரங்காலுக்குத் திரும்பிய இவர் மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி (சிரேஷ்ட இடைநிலை தராதரப் பத்திரம்பரீட்சையில் சித்தியடைந்தார்.

1950ஆம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் 6 மாதங்கள் தற்காலிக பணியை ஆரம்பித்த இவர் பின்னர் இந்துபோட் நிர்வகித்த வவுனியா வடக்கிலுள்ள ஆயிலடி பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றினார்ஓராண்டிற்குள் மட்டக்களப்பு ஒலுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இடம்மாறினார்அங்கு ஆறரை ஆண்டுகள் பணியாற்றினார்தொடர்ந்து ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில்(1958) புவியியல் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

1965இல் படிப்பு விடுமுறை பெற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் படித்து கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்தொடர்ந்து கேகாலை ஹெம்மாந்தகம அல் அஸார் மகா வித்தியாலயம்நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியூனியன் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தார். 1977இல் யூனியன் கல்லூரியில் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார்அடுத்த ஆண்டில் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தார்தொடர்ந்தும் அங்கேயே அதிபராகக் கடமையாற்றி 1987இல் ஓய்வு பெற்றார்இவரது காலத்தில் யூனியன் கல்லூரி புகழ் பூத்த பாடசாலையாக விளங்கியதுடன் .பொ..உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதத்துறையில் நா.சுகந்தன் முதலிடத்தைப் பெற்ற வரலாற்றுச் சாதனை அக்காலத்தில் நிகழ்ந்தது.

ஒலுவிலில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை இவர் எழுதிய சிறுகதையொன்று தினகரனில் வெளியானதுவானொலி நாடகமொன்று இலங்கை வானொலியில் ஒலிபரப்பானதுதொடர்ந்து வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார்.  மேடைநாடகங்கள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினார்.அமிர்தகங்கைசிரித்திரன்றோசாப்பூசிரித்திரன் ஆகியவற்றில் இவரது ஆரம்பகாலப் படைப்புகள் வெளிவந்தன.

இவரது சிறுகதைகள் அந்நிய விருந்தாளி(1986) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளதுகதைகளை அமைக்கும் முறையிலே வெவ்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார்பெரும்பாலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உத்தியில் அமைந்துள்ளனபாத்திரங்களின் உரையாடலோடு கதையை நகர்த்திச் செல்லும் பண்பும்பாத்திரங்களின் உணர்வோட்டத்தினூடாகக் கதை சொல்லும் பண்பும் ஆசிரியருக்குக் கைவந்த கலையாக உள்ளமையை அவதானிக்க முடிகிறதுபொதுவாக இக்கதைகள் முழுவதையும் தொகுத்து நோக்கும் போது பாலசுந்தரம் அவர்களால் ஈழத்துச் சிறுகதைத் துறையில் புதிய வளர்ச்சி நிலைகளைப் புலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது

மறைவில் ஐந்து முகங்கள்(2004), வாரிசுகள்(2016), சிவப்பு நரிஅங்கத நாவல்(2004), கனடாவில் ஒரு சாவித்திரிவன்னி(2015) முதலான நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்ஆங்கிலத்தில் His Royal Highness, The Tamil Tigers(2011)> The Five Hidden Faces(2004)> The Militant’s Silence(2015), Blood and Terror ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

கல்வித்துறையில் தடம் பதித்த இவர் யூனியன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய கால அனுபவங்களை பொற்காலம் என்ற நூலில் தந்துள்ளார்அத்துடன் யூனியன் கல்லூரியின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை பல ஆதாரங்கள்ஆவணங்களுடன் தங்கத்தாரகை(2016) என்ற நூலாக எழுதியுள்ளார்அத்துடன் சிவதலம் என்ற தலைப்பில் ஆவரங்கால் கிராமத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக விளங்கிய இவர் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பற்றிய பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்அவற்றில் அமிர்தலிங்கம் சகாப்தம்(2004), சாணக்கியன்கோப்பாய் கோமான் வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு மலர்(2011), ஆவணம்பல்வேறு இயக்கங்களால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள்தொண்டர்கள் கொல்லப்பட்ட ஆவணத் தொகுப்பு(2023),சத்தியங்களின்சாட்சியம்  முதலான நூல்களையும் பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

1950களில் பேரறிஞர் அண்ணாத்துரையின் வேலைக்காரி நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று நடித்ததுடன் வேறு பல நாடகங்களிலும் நடித்துள்ளார்பிரெஞ்சு நாடகமேதை மொல்லீரின் பறக்கும் டாக்டர் நாடகத்தை மொழிபெயர்த்து மேடையேற்றியுள்ளார்இவர் எழுதி மேடையேற்றிய சாம்பல் மேடுவிஞ்ஞானி என்ன கடவுளா?, விழிப்பு என்பன இவருக்குப் பெயர்தேடித் தந்த நாடகங்களாகும்.

இவ்வாறு கல்வித்துறையிலும்இலக்கியத்துறையிலும் தடம்பதித்த இவர் ஒரு காலத்தில் பிரபலமான ஆங்கில ஆசிரியராகவும் விளங்கினார்ஆங்கில இலக்கணத்தை தெளிவுறக் கற்பித்ததால் இவரது வீட்டில் நடைபெற்ற ஆங்கில வகுப்புகளில் மாணவர்கள் பெருமளவில் படையெடுத்துக் கற்றமையும் குறிப்பிடத்தக்கது.

95 வயதில் கனடாவில் வாழும் இப்பேரறிஞர் சகாப்தம் கண்டு தமிழுக்குச் சேவை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

13-08-2023 உதயன் சஞ்சீவி