Saturday, November 6, 2010
நேர்காணல்
விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம் நிறுவனத்தின் தலைவராக இருந்து அங்கு விடுதி வசதியுடன் தங்கியுள்ள மாணவர்களை வழிப்படுத்தி வருபவர் விழிப்புலனிழந்தும் தளரா உறுதியோடும் முயற்சியோடும் செயற்படும் ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள்.கல்வித்துறையில் முதுகல்விமானிப் பட்டம் பெற்ற அவர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விசேட கல்வித்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.ஒக்ரோபர் 15ஆந்திகதி வெள்ளைப்பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் பார்வைச் சவாலுடையவர்கள் மத்தியில் நட்சத்திரமாக மிளிரும் அவரைக் கேசரிக்காக நேர்கண்டோம்.
நேர்கண்டவர் இயல்வாணன்
கேள்வி – விழிப்புல வலுவிழந்தவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையால் உயர முடியும் என்பதை நிலைநிறுத்தும் வகையில் செயற்படுகிறீர்கள்.முதலில் உங்களைப் பற்றிக் கூறுங்கள்.
பதில் - நான் சட்டநாதர் வீதி திருநெல்வேலியில் பிறந்தேன்.அப்பா ஆறுமுகம்.அம்மா தங்கமணி. அக்கா,நான்,தம்பி மூவரும்; அவர்களது பிள்ளைகள்.அக்காவுக்கு பார்வைக் குறைபாடு ஏதுமில்லை.அவர் திருமணம் செய்து கனடாவில் வாழ்கிறார்.எனக்கும் தம்பிக்கும் பிறப்பிலிருந்தே பார்வையில்லை.தம்பி மட்டக்களப்பில் கலாசார உத்தியோகஸ்தராகப் பணியாற்றுகிறார். அவரது குடும்பம் அங்குள்ளது.
நான் ஆரம்பக்கல்வியை கைதடி நவீல்ட் விசேட பாடசாலையிலும்,இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் முடித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவானேன்.அங்கு1986 முதல் 1990 வரை கற்று பொதுக் கலைமானி பட்டப் படிப்பை நிறைவு செய்தேன்.அங்கு என்னுடன் பயின்ற மோகனவதனி வாழ்க்கைத் துணையானார்.இருவரும் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றோம். எமக்கு இரு பெண்களும், ஒரு ஆணுமாக மூன்று பிள்ளைகள் உள்ளனர். நான் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியாற்றி, தற்போது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறேன்.இந்த இடைக்காலத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா மற்றும் முதுகல்விமானி பட்டங்களையும் பெற்றுள்ளேன்.
கேள்வி- விழிப்புல வலுவிழந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் நிறுவனமாக,பலரை நன்நிலைப் படுத்திய அமைப்பாக விளங்கும் வாழ்வகம் பற்றியும்,அதனுள் உங்களின் பிரசன்னம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றியும் கூறுங்கள்.
பதில்- கைதடி நவீல்ட் விசேட பாடசாலையில் கல்வியை முடித்த நான் இலங்கை ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ் 1978இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேர்ந்தேன். விசேட கல்விக்கென யாழ்.மாவட்டத்தின் பல பாடசாலைகளில் ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் வழிப்படுத்தி மேற்பார்வை செய்வதற்கு ஒரு ஆசிரியரே இருந்தார். அவர்தான் செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்கள். நான் உட்பட பலர் அவரது மாணவர்கள். விழிப்புல வலுவிழந்தவர்களைத் தேடிச் சென்று அவர்களைக் கல்வியின் வழி கடைத்தேற்றுவதில் அவரது ஈடுபாடு விதந்து கூறத்தக்கது. 1988இல் விழிப்புல வலுவிழந்த மாணவர்களைப் பராமரிக்கவும், அவர்களுக்குக் கல்வியளிக்கவும் கூடிய வகையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க எண்ணினார். அறிஞர்கள் பலர் கூடி ஆராய்ந்து வாழ்வகம் என்ற பெயரில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது நான் யாழ்ப்பாணத்தில் இயங்கிய விழிப்;புலனற்றோர் சங்கத்தின் தலைவராக இருந்தேன். எனவே, நானும் சங்க நிர்வாகிகளுள் சிலரும் அவரது மாணவர்களாக இருந்தமையால் வாழ்வகத்தை ஆரம்பிப்பதில் அம்மா அன்னலட்சுமி அவர்களுக்கு உதவினோம். வாழ்வகத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து நான் அதன் நிர்வாக சபையில் இருக்கிறேன். நீண்ட காலமாக உபதலைவராகப் பணியாற்றினேன். தனக்குப் பின் வாழ்வகத்தை வழிநடத்த வேண்டும் என்ற அவரது வேண்டுகோளுக்கு அமைய அவர் அமரரான பின் நான் தலைமைப் பொறுப்பை ஏற்று இன்றளவும் செயற்படுகிறேன்.
கேள்வி விழிப்புல வலுவிழந்தவர்களுக்காக வாழ்வகத்தால் ஆற்றப்படும் பணிகள் எவை? இந்தப் பணியினூடாக வாழ்வகத்தின் சாதனைகள் என எவற்றைக் கூற முடியும்?
பதில் விழிப்புல வலுவிழந்தவர்களில் பலர் வறிய அதேவேளை கல்வியறிவு குறைந்த பெற்றோரின் பிள்ளைகளாக உள்ளனர். அதனால் அவர்கள் விழிப்புல வலுவிழந்தவர்களைச் சரியான முறையில் பராமரிக்கவோ, பாடசாலைக் கல்வியில் அவர்களை ஈடுபடுத்தவோ இயலாத நிலையிலேயே உள்ளனர். பெற்றோரால் பாடசாலைகளுக்கு அனுப்பப்படாமல் பல மாணவர்கள் வீட்டில் முடங்கியிருந்ததைக் கண்ணுற்றே இத்தகைய ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் அம்மா சின்னத்தம்பி அவர்களுக்கு ஏற்பட்டது. வீடுகளில் முடங்கிக் கிடந்த பிள்ளைகளை வாழ்வகம் நிறுவனம் பொறுப்பேற்று உணவு, தங்குமிடம்,ஏனைய உதவிகளை அளித்து விடுதி வசதியுடன் அவர்;களைப் பராமரித்தபடி அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வியளித்ததுடன் அவர்களது உள்ளார்ந்த திறமைகளை வளர்ப்பதற்கும் ஏற்ற வாய்ப்புக்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 1988 முதல் நூறிற்கும் அதிகமான மாணவர்கள் வாழ்வகத்தில் கற்று நன்னிலை அடைந்திருக்கிறார்கள். பலர் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பலர் திருமணம் செய்து வாழ்கிறார்கள். வாழ்வகத்தில் தங்கியிருந்து கற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இதயராஜன் முதுகல்விமானிப் பட்டம் பெற்றுள்ளார். அற்புதராஜ் சட்டம் படித்து சட்டத்தரணியாகத் தொழில் பார்க்கிறார். அதேபோல 10 பேர் வாழ்வகத்தில் இருந்து பட்டதாரிகளாக உருவாகியுள்ளனர். செல்வி சின்னத்தம்பி அவர்களால் உருவாக்கப்பட்ட பட்டதாரிகள் எனில் நான் உட்பட 20 பேருக்கும் அதிகமாகும். தற்போது 4பேர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வாண்டும் ஒரு மாணவன் சித்தியடைந்துள்ளான். அதேபோல எமது மாணவர்களில் இருந்து நல்ல பாடகர்கள், பேச்சாளர்களும் உருவாகி உள்ளனர். தற்போதய கல்விச் செல்நெறிகளுக்கு அமைய அவர்களை வழிநடத்தி வருகிறோம். விசேட தேவையுடையோருக்கான போட்டிகளில் எமது பிள்ளைகள் அதிகம் பரிசில்களையும் பதக்கங்களையும் பெறுவது வழக்கமாகும்.
நாம் பிள்ளைகளுக்கு கணனியைக் கையாள்வதற்கும் கற்பித்து வருகிறோம்.ஜோஸ் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி செவி வழியாகக் கிரகித்துக் கணனியைக் கையாளக் கூடிய நிலையில் எமது பிள்ளைகள் உள்ளனர். கணனிக்கூடம் ஒன்றும் வாழ்வகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
கேள்வி நீங்கள் விசேடகல்வியை ஆசிரியர்களுக்குப் போதிக்கும் ஒரு விரிவுரையாளர். விசேட கல்வி தொடர்பாக சீரிய சிந்தனை என்ற நூலையும் செல்வி இந்திராதேவி செல்வநாயகத்துடன் சேர்ந்து எழுதியுள்ளீர்கள். இன்றுள்ள சூழலில் விசேட கல்வி பெறும் முக்கியத்துவம் யாது?
பதில் உலகநாடுகள் பலவற்றிலும் விசேடகல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்த அடைவுகளை மாணவர்கள் பெற முடியாமல் இருப்பதற்குக் காரணம் விசேட கல்வி தொடர்பாகக் கவனம் செலுத்தப்படாமையே என்பது பின்னர்தான் இலங்கை போன்ற நாடுகளில் உணரப்பட்டது. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களில் பலரும் விசேடதேவையுடையோராக உள்ளனர். இதை உணராமல் பொது அடிப்படையில் கற்பிக்கும் போது எதிர்பார்த்த அடைவுகள் சாத்தியப்படாது.
ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களில் சாதாரண மாணவர்களோடு விசேட தேவையுடைய பலரும் இருப்பர். இலங்கையில் 13 வகையான விசேட தேவையுடையோர் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.கல்வியில் நாட்டமின்றி மெதுவாகச் செயற்படும் மெல்லக் கற்போர், எல்லாப் பாடங்களிலும் கெட்டிக்காரர்களாக இருக்கும் மீத்திறன் உடையோர், குறித்த ஒரு பாடத்தில் மட்டும் நிபுணத்துவம் பெற்றோர், மெதுவான உளவளர்ச்சியுடையோர், நெருக்கீடுகள் மனவெழுச்சிகளால் பாதிக்கப்பட்டோர், மொழிதல் குறைபாடுடையோர், நெறிபிறழ்ந்தோர்,உடற்குறைபாடுடையோர், சுகாதாரக் குறைபாட்டு நோய்களால் பாதிக்கப் பட்டோர், பார்வை,கேட்டல் தொடர்பான பிரச்சினைகள் உடையோர் இதில் உள்ளடங்குவர்.
இவ்வாறான பிள்ளைகளை இனங்கண்டு சரியான முறையில் அவர்களை வழிப்படுத்த விசேடகல்வி பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு அவசியமாகும். எனவேதான் விசேட கல்வியில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். தேசிய கல்வி நிறுவகம், திறந்த பல்கலைக் கழகம் ஆகியவற்றிலும் விசேட கல்வி பாடநெறிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. வலயக்கல்வி அலுவலகந் தோறும் விசேடகல்வி அலகுகள் நிறுவப்பட்டு ஆசிரியர்களுக்கு சேவைக்கால மற்றும் வதிவிடப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
கேள்வி அண்மைக்காலத்தில் உட்படுத்தல் கல்வி தொடர்பாகக் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறான முக்கியத்துவத்திற்குக் காரணம் என்ன?
பதில் ஸ்பெயின் நாட்டிலுள்ள சலமன்கார் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாடொன்றிலேயே உட்படுத்தல் கல்வி பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் இலங்கையும் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
இலங்கையில் விசேடகல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை விசேட பாடசாலைகளை உருவாக்கியமையாகும். இதன் இரண்டாவது படியாக 1972 இல் ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் விசேட பாடசாலைகளுக்குள் இருந்த மாணவர்கள் பொதுக்கல்வியில் இணைக்கப்பட்டனர். இதன் அடுத்த படியே உட்படுத்தல் கல்வியாகும். இதனால் பொதுக்கல்விக்குள் இணைத்த நிலை மாறி எல்லோரையும் போலவே பொதுக்கல்விக்குள் உட்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டது.இதன் பிரகாரம் எந்தப் பாடசாலையும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு விலக்களிக்க முடியாது.
கேள்வி விழிப்புல வலுவிழந்தவர்கள் தொடர்பாகச் சமூக மதிப்பீடுகள் இன்று எவ்வாறுள்ளன? விழிப்புல வலுவிழந்தோரின் நிலை தொடர்பாக உங்களது மதிப்பீடென்ன?
பதில் வெள்ளைப்பிரம்பைத் தாங்கிச் செல்வோர் தொடர்பாக சமூகத்தின் பார்வை இன்று ஓரளவுக்கு உயர்வாக உள்ளது.ஆனாலும் தென்னிலங்கையோடு ஒப்பிடுமிடத்து இங்கு விழிப்புல வலுவிழந்தவர்கள் தொடர்பில் காட்டும் கரிசனை குறைவாகும். வேலைவாய்ப்புக்களில்; எல்லாத் தகைமைகளும் இருந்த போதிலும் பார்வைக் குறைபாடொன்றைக் காரணம் காட்டி அவர்களுக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படும் சம்பவங்களும் இங்கு நடந்துள்ளன. இன்றும் கூடப்; பல விழிப்புல வலுவிழந்தோர் பாடசாலைகளுக்கு அனுப்பப்படாமல் வீடுகளில் இருக்கும் நிலையும் உள்ளது.
விழிப்புல வலுவிழந்தோரின் விசாலமான அறிவுத் தேடலுக்கான வாய்ப்புக்களும், சாதனங்களும் மிகவும் மட்டுப்பாடாக உள்ளன.மறுபுறத்தே கற்க வேண்டுமென்ற முனைப்பும் இத்தகையோர் பலரிடம் இல்லை. விழிப்புல வலுவிழந்த ஆண்களின் வாழ்க்கை குடும்பம், தொழில் என மேம்பாடுடையதாக இருக்கும் நிலையிலும், பெண்களின் நிலை மோசமானதாகும்.
விழிப்புல வலுவிழந்தோர் கணனி,ஆங்கிலம் ஆகியவற்றில் கூடுதல் அறிவைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டினால் பிரகாசமான எதிர்காலம் அவர்களுக்கு உண்டு என்பது எனது கருத்தாகும்.
Subscribe to:
Posts (Atom)