மின்னி மறைந்த பேரொளி எஸ்போஸ்
இயல்வாணன்
எஸ்போஸ் என்கிற சந்திரபோஸ் சுதாகர் கலகக்காரனாகவே அறியப்பட்ட ஒருவர். உண்மைதை; தரிசிக்க விளைந்த கவிஞனின் முன் பொய்யும் பித்தலாட்டங்களுமே யதார்த்தமான போது கவிதைகள் மூலமும் தனது செயல்கள் மூலமும் எதிர்வினையாற்றிய அவனை இந்தச் சமூகம் அப்படித்தான் அடையாளப்படுத்தும். பாரதிக்கு நேர்ந்ததுதான் சுதாகருக்கும் நேர்ந்தது. பாரதியின் அந்திமம் பிணியுடன் மோசமாய் கடந்து, சிலருடன் இறுதி ஊர்வலம் நடந்து முடிந்தது. சுதாகருக்கோ வாழ்வு மறுக்கப்பட்டு, இனந்தெரியாதவர்களின் துப்பாக்கி ரவைகளால் மரணம் பரிசளிக்கப்பட்டது.
ஒரு கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, பத்திரிகையாளராக, சஞ்சிகை ஆசிரியராக, விமர்சகராக தன்னை அடையாளப்படுத்திய சந்திரபோஸ் சுதாகர் கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரத்தில் 24-08-1975இல் பிறந்தார். தந்தையார் சந்திரபோஸ் பளை முகமாலையைச் சேர்ந்தவர். தாயார் லீலாவதி நெடுந்தீவைச் சேர்ந்தவர். அவர்களது குடும்பத்தினர் ஸ்கந்தபுரத்தில் வசித்து வந்தனர். பாஸ்கர் என்ற மூத்த சகோதரரும், சுசீலா என்ற தங்கையும், சுதாகரின் உடன்பிறந்தோர். தாயார் ஒரு பரிசாரகராக பணியை ஆரம்பித்து நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் பணிபுரிந்தார்.
அதனால் சுதாகர் நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை மேற்கொண்டார். அந்தக் காலத்தில் ஒரு சிறார் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். சிறிது காலத்தில் அதிலிருந்து விலகினார்.
தாயார் அக்கராயன் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த பின்னர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்கள் அக்கராயன் மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் இருந்து உயர்தரம் வரை கற்றார். பாடசாலைக் காலத்திலேயே ஒரு வித்தியாசமான ஆளுமையாக அவர் வெளித் தெரிந்தார். யாருடனும் அதிகம் பேசாத, புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கிய ஒருவராக அவர் தோற்றந் தந்தார். திமிர்ந்த ஞானச் செருக்கு அப்போதே அவரிடம் இருந்தது. எந்த விடயத்திலும் மற்றவர்களின் பார்வையில் இருந்து சுதாகரின் பார்வை மாறுபட்டிருந்தது. மாற்றுச் சிந்தனைகள் அவரிடம் இருந்தன. அவை ஒத்தோடிகள் நிறைந்த சமூகத்தில் மறுத்தோடியாக அவரை அடையாளப்படுத்தின. தர்க்க ரீதியாகச் சிந்திப்பது, விமர்சனபூர்வமாகச் பேசுவது, ஏன்? எதற்கு? எப்படி என்று கேள்வி கேட்பது என்பன அறிவியலில் முக்கியமானது. சமூக முன்னேற்றத்துக்கும் இன்றியமையாதது. ஆனால் நடைமுறை உலகில் அத்தகைய நிலை என்பது அவ்வாறு இருப்பவரை கலகக்காரனாக்கி விடுகிறது.
பாடசாலையில் ஆசிரியர்களுடன் முரண்படும் ஒருவராகப் பார்க்கப்பட்டார். பின்னர் அவர் பணியாற்றிய அலுவலகங்களிலும் அதேநிலைதான். அதிகாரம் எந்த வடிவில் வந்தாலும் சுதாகர் அதை எதிர்த்தார். அவர் எதிர்பார்த்ததெல்லாம் அன்பையும் பாசத்தையும் மனிதநேயத்தையுமே.
பாடசாலைக் காலத்திலேயே அவரிடம் வாசிப்பு பெரிய பாதிப்பாக இருந்தது. மேத்தா, வைரமுத்துவில் இருந்துதான் அவரது கவிதை வாசிப்பு ஆரம்பமானது. ஆனால் அவரது வாசிப்பு தீவிரமானது. அசுரத்தனமானது. வாசிப்பும் தேடலுமாகவே அவரது பாடசாலைக் காலம் கழிந்தது. அந்த வாசிப்பு கவிதைகளை எழுத வைத்தது. அப்பியாசப் புத்தகத் தாள்களை இரண்டாக மடித்து கவிதைகள் எழுதினார். எளிமையான காதல் கவிதைகளுடன் அவரது கவிதைப் பயணம் தொடங்கியது. சந்திரபோஸ் சுதாகர் என்ற இயற்பெயரில் எழுத ஆரம்பித்த அவர் பின்னாளில் எஸ்போஸ், போஸ் நிஹாலே, போசு என்ற பெயர்களிலும் எழுதினார்.
ஆனால் அவரது வாசிப்பும், பார்வையும், தீவிரமும் கவித்துவமும் பொருண்மையும் கொண்ட கவிதைகளை எழுதுபவராக அவரை மாற்றியது. அன்பையும், பாசத்தையும் அவாவியவை அவரது கவிதைகள். வாழ்வின் நிராசைகளே அவரது பெரும்பாலான கவிதைகள் எனலாம். வாழ்வின் நிராசைகள் என்பது அவரது சொந்த வழ்வு குறித்தானதல்ல. அவரது வாழ்காலம் குறித்தானது.
அன்பு எவ்வாறிருக்கும் என்ற கவிதையில் அது இவ்வாறு கட்டவிழ்கிறது.
நீண்ட நாட்களாய் அது பற்றிய கேள்விகள்
மனதை உலுக்கிச் சிதைக்கின்றன.
சிலவேளை வர்ணங்கள் பூசப்பட்ட இனிப்பு மாதிரி,
அல்லது நான் உண்ணும் உப்பிடாத ரொட்டி மாதிரி
புரியவில்லை.
அதனால் சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும்
கொல்லவும் கூட முடியுமாம்,
அயலவர்கள் இவ்வாறு பேசிக் கொள்கிறார்கள்.
எனக்கு அன்பு பற்றி
பாசம் பற்றி
காதல் பற்றி
அயலவரோடு பேசப் பயமாயிருக்கிறது.
அவரது பால்ய காலம் முழுவதும் யுத்தத்தின் வலிகளோடுதான் கழிந்தது. சுற்றிலும் பீதி படர்ந்த வாழ்க்கையே அவர் கண்முன் நின்றது. மரணங்கள், இடம்பெயர்வுகள், வெடியோசைகள், சொத்தழிவுகள் என்று அவர் கண்டதனைத்தும் இந்தக் காட்சிகளே.
நான் எனக்கான ஒவ்வொன்றையும் இழந்தேன்.
தலைநகரம்
வீதிகள்
பூக்கள்
சுடுகாடுகள் எல்லாவற்றையும்.
சில மனிதர்களோடு
காடுகளை நோக்கி என் பயணம் தொடங்கியது.
மனிதர்கள் மனிதர்களை அழித்தார்கள்.
மனிதர்கள் காடுகளையும் மிருகங்களையும் அழித்தார்கள்.
எங்கும் பாழ்வெளிகளே எஞ்சின.
அந்த வாழ்வு சந்திரபோஸ் சுதாகரை இன்னொரு பக்கம் நகர்த்தியது. நித்தமும் காணும் அவல வாழ்வைக் கடந்து செல்ல எண்ணினார். அதனால் அவர் ஒரு போராளியானார்.
ஆணவத்தாலும் அதிகாரத்தின் வழியாகவும்
கோரமாக்கப்பட்டு
அழைத்துச் செல்லப்பட்டேன்
மனிதர்களற்ற சூனியத் தீவிற்குள்.
வேதனைகளால் கரைகின்றன நிமிடங்கள்.
தமிழனின் ஆதிக்குடி பற்றியும்
இந்த மண்ணுக்கு அவனே சொந்தக்காரனென்றும் சொல்லிக் கொண்டிருப்பதில்
சலித்துப் போயிற்று என் பேனா?
நான் தமிழன்
எனக்கொரு அடையாளம் வேண்டும்.
அதற்கு கவிதை போதாது.
துப்பாக்கி, கத்தி, கோடரி
ஏதாவது ஒன்று அல்லது மூன்றும் உடனே வேண்டும்.
காலமும் சூழலும் இளம் வயதினனான சுதாகரைப் போராளியாக்கிற்று. ஆனால் அவன் போராட்டத்துக்குள் நுழைந்த வேளை போராட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் ஒரு கட்டமைப்பாக, நிழல் அரசாங்கமாகப் பரிமித்திருந்தது. அரசாங்கம் என்பது அதிகாரத்தின் மையம். அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வழக்கமான நடைமுறைகள் சுதந்திரத்தை அவாவி நின்ற சுதாகருக்கு ஒத்து வரவில்லை. அந்த வாழ்வும் அவருக்குச் சலிப்பூட்டியது. அதன் மீதும் கேள்விகளை முன்வைத்தார். இறுதியில் அதிலிருந்து விலகினார்.
கட்டளையிடுதல் உணவை விட அவசியமாயிருந்தது அவர்களுக்கு
தமது கனவுகளால்
மிகப்பெரிய கோட்டைகளையும்
சாம்ராஜ்ஜியங்களையும்
சூரியனைக் கூடத் தமது காலடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.
………………
எல்லோருக்கும் ஆத்திரத்தையும் எரிச்சலையும் அளிக்கக்கூடிய
அவர்களின் குரல்
ஒரு நதியில் கலந்த வி~த்துளியைப் போல
காற்றில் எறிந்து விடப்பட்ட பஞ்சுப் பொதியைப் போல
எங்கும் பரவுகிறது.
மக்கள் தங்கள் கனவுகளை இழந்தார்கள்.
தங்களின் எழில்மிகு நகரங்களின் கூரைகளை இழந்தார்கள்.
வனங்களின் வழியே
திக்கற்றதாயிற்று அவர்களின் வாழ்வு.
அதிகாரத்தின் குரல் அவர்களைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது
என்று அவர் ஒரு கவிதையில் பாடுகிறார். அரசாங்கம் - புலிகள் என்ற அதிகாரப் பலப் பரீட்சையில் சிக்கித் தவிக்கும் சனங்களின் பாடுகளை அவர் இப்படித்தான் பார்த்தார். இங்கு அவர் அதிகாரம் சார்ந்தே கருத்துரைக்கிறார். அது எங்கிருந்து எவரிடமிருந்து வந்தாலும்.
எஸ்போஸின் கவிதைகள் முழுவதும் மிருகங்கள், பாம்புகள், வி~ ஜந்துகள் வருகின்றன. துர்க்குணமுடைய எவையும், மரணத்தை வருவிக்கக்கூடிய எவையும் அவரது கவிதைகளில் படிமமாக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தை அவர் அவற்றின் வடிவில் காண்கிறார். அதேவேளை சனங்கள் பறவைகளாகவும், சிறு பூச்சிகளாகவும் படிமப்படுத்தப்படுகிறார்கள். ரஞ்சகுமாரின் சிறுகதையில் கபரக்கொயா படிமப்படுத்தப்பட்டது போல, சுதாகருடைய கவிதைகளில் அடிக்கடி மிருகங்கள் இழுத்துச் செல்வதாகக் காட்டப்பட்டுள்ளது. வீடு, தெரு, அலுவலகம் எங்கும் அந்தக் காலத்தில் இதுதான் நடந்தது. மரணம் பற்றிய பீதியில் உறைந்த நாட்கள் அவை. எந்த நேரத்திலும் எவ்வாறும் மரணம் நிகழலாம் என்ற நிலை. யாராலும் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு உயிர் பறிக்கப்படலாம் என்ற நிலை.சுதாகரை இந்த நிலைமை மிகவும் அலைக்கழித்தது. ஒருமுறை கைது செய்யப்பட்டு, சித்திரவதை அனுபவித்த அவருக்கு மரணம் நிழலாகத் துரத்துவது தெரிந்திருந்தது. எந்த நேரத்திலும் தான் இழுத்துச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, மரணத்தைத் தழுவலாம் என்று அவரது உள்ளுணர்வு சொல்லிக் கொண்டேயிருந்தது. அதனால் அவரது பெரும்பாலான கவிதைகள் அது பற்றியே பேசியுள்ளன. அந்த உள்ளுணர்வு சக மனிதர்கள் பற்றிய பிரக்ஞையோடு பொதுமைப்பட்டதாகவும் இருந்திருக்கலாம்.
என் அன்புக்கினிய தோழர்களே!
என் காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்னை இழுத்துச் சென்று விட்டது.
கடைசியாக நான் முத்தமிடவில்லை.
அவளது கண்களின் வழமையாயிருக்கும்
ஒளியை நான் காணவில்லை. (சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்)
அழகிய இரவு பற்றிய எனது கவிதைகளில்
எப்போதுமே மிருகங்கள் காவலிருக்கின்றன
மிருகங்கள் பற்றிய அச்சத்தால்
அழுகிச் சிதைந்தது நிலவு
நேற்றைய கவிதைகளையும் இன்றைய வாழ்க்கையையும்
நான் இழந்தேன்.
………..
துரத்தியடிக்கப்பட்ட ஒரு கவிஞனின்
எல்லையற்ற விதி பற்றியும்
மிருகங்களுடனான அவனது வாழ்வு பற்றியும்
இன்றைய கவிதையை காற்றுத்தானும் எழுதவில்லை
எனது முழுமையையும் மிருகங்கள் உறிஞ்சிய
கவிதைகளின்
பிரேதநதி இழுத்துச் சென்று விட்டது.
நூறு தடவைகளுக்கு மேல் நிகழ்ந்தது எனது இறப்பு.
எஸ்போஸ் அக்கராயனில் இருந்த போது அவர்களது விடுதிக்கு அருகே தங்கியிருந்த மருத்துவதாதியாகப் பணிபுரிந்த செந்தமிழ்ச்செல்வியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூகத்தின் பெரும்போக்கு நிலையிலிருந்து விலகியதாக செந்தாவை அவர் விரும்பித் திருமணம் செய்தார். இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.
ஆனால் அவர் குடும்பத்தினரோடு வாழ்ந்த காலத்தை விட வெளியில் வாழ்ந்த காலமே அதிகமாகும். கிளிநொச்சியிலும், கொழும்பிலும் அவர் வாழ்ந்தார். கொழும்பில் இதழியல் கல்லூரியில் கல்வி கற்றார். பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்ற நிலையில் அங்கு படிக்கும் காலத்தில் அவர் சந்தித்த பண நெருக்கடியை அவருடைய கடிதம் மற்றும் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். இந்தக் காலம் உட்பட பிரிவும் தனிமையும் அவரை எப்போதும் வாட்டிக் கொண்டேயிருந்தது. அந்த வலிகள் கவிதைகளாயின.
வெறுமனே யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன்.
கருணா அண்ணனுடனும்
அவர் போல் இன்னும் நால்வருடனும்
நடந்து முடிந்து விட்ட திருமணம்,
செந்தாவின் முகம்,
தெருவோரக் கடைகளின் ஈ மொய்க்கும் உணவு
சலிப்பூட்டும் மனிதர்களின் முகங்கள்
அவலங்களின் உரு அமைப்பிலான உறவுகள்
நரிகளோடும் எருமைகளோடும்
வாழக் கிடைத்து விட்ட நிகழ்காலம்
ஒன்றன்பின் ஒன்றாய்
எனது ஞாபகங்களையும்
தனித்திருக்கும் கணங்களையும்
அழித்துவிட முடியுமென்று தோன்றுவதேயில்லை,
என்னை அழித்து விடத் தோன்றுவதைப் போல. (செத்துவிட்ட கவிதைகளின் ஞாபகத்தில் நிற்கும் முதல் வரிகள்)
இது ஒரு மரணவேதனை
எனது மூளையை
திசைகள் ஒவ்வொன்றையும் வியாபித்திருக்கும்
ஒலிகளும் எண்ணங்களும் சிதைத்து விட்டன.
நான் உணர்கிறேன்
மீண்டும் விதிக்கப்பட்டிருக்கும்
தனிமையின் கொடூரத்தால்
நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேன் (தலைப்பற்றது)
எனினும் இந்தத் தனிமையையும் பிரிவையும் புத்தகங்கள் ஓரளவு போக்கின. புத்தகங்களோடு கழிந்த வாழ்வை அவர் இப்படிப் பாடுகிறார்.
கொஞ்சம் புத்தகங்களோடு தொடங்கியது வாழ்க்கை
புத்தகங்களின் சொற்களில் சோறு இல்லை என்பதே
பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க.
……
நான் புத்தகங்களோடு வாழ்கிறேன் என்பதையும்
புத்தகங்களில் தூங்குகிறேன் என்பதையும்
இதயம் சிதையும் துயரின் ஒலியை
புத்தகங்கள் தின்னுகின்றன என்பதனையும்
ஓ கடவுளே! யாரும் அதை நம்பவில்லை.
என்னையும் அனுமதிக்கவில்லை.
புறாக்கள் வாழ்ந்த கூரைகளில்
உதிர்ந்து கிடக்கின்றன வெண்சிறகுகள் (புத்தகங்கள் மீதான எனது வாழ்வு)
எப்போதுமே சுயத்தை அவாவி நின்ற கவிஞன் சுதாகர்.
என்னைப் பேச விடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன.
எனது குரல் உங்களின் பாதச் சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைகிறது.
வேண்டாம்
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன் எப்போதும்.
……..
எனது உடைந்த குரலில்
நானும் பாட விரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை. (சுயம்)
தனது சுயத்தை வலியுறுத்திய, அன்பு நிறைந்த பாடல்களைச் சுதந்திரமாகப் பாட விரும்பிய ஒரு கவிஞனை அநாமதேயிகள் சுட்டுக் கொண்றார்கள். 16.04.2007 அன்று இரவு வவுனியாவில் உள்ள சுதாகரது வீட்டிற்குள் நழைந்த இனந்தெரியாத ஆயததாரிகள் அவரது பிள்ளையின் முன்னே அவரைச் சுட்டுக் கொன்றனர். அதிகாரத்துக்கு எதிரான அவரது குரலை ஆயுதங்கள் மௌனிக்கச் செய்தன.
1994இல் எழுத ஆரம்பித்த சந்திரபோஸ் சுதாகர் மரணத்தைத் தழுவும் கணம் வரை எழுதியும் செயற்பட்டும் வந்துள்ளார். அவரது படைப்புகள் ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், தமிழ் உலகம், இன்னொரு காலடி, மூன்றாவதுமனிதன், ஆதாரம், தடம் ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். நிலம் என்ற கவிதைக்கான இதழின் ஆசிரியராக இருந்து தனது முயற்சியில் வெளியிட்டார். நிலம் மூன்று இதழ்கள் வெளிவந்தன. லண்டனில் இருந்து வெளியிடப்பட்ட தமிழ்உலகம் இதழுக்கு ஆசிரியராக இருந்து, கொழும்பில் வைத்து அதனைத் தயாரித்து வழங்கியிருந்தார்.
கருணாகரன், ப.தயாளன், சித்தாந்தன் ஆகியோரால் சுதாகருடைய 62 கவிதைகள், 5 சிறுகதைகள், மனைவிக்கு எழுதிய கடிதம், நாட்குறிப்பு வடிவிலான குறிப்புகள், நூல் விமர்சனங்கள், நிலம் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கங்கள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுதாகரால் செய்யப்பட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி, கவிஞர் சோ.பத்மநாதன், உமாஜிப்ரான், கிளிநொச்சி மத்திய கல்லூரி தொடர்பான நேர்காணல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுதாகர் பற்றிய கட்டுரைகள் மற்றும் பதிவுகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்போஸ் படைப்புக்கள் என்ற வடலி வெளியீடான இந்நூல் சுதாகரைத் தரிசிக்க வைக்கும் முக்கிய ஆவணமாகும். மேலும் பல விடுபட்டிருக்கலாம் என்றே தொகுப்பாளர்கள் கருதுகிறார்கள்.
சந்திரபோஸ் சுதாகர் மின்னி மறைந்த பேரொளி. உண்மையைத் தரிசிக்க விளைந்த பேரொளி. பொய்மையில் சுழன்ற அதிகாரத்தின் அரூப கரங்கள் அந்த ஒளியைத் தின்று செமித்தன. ஆயினும் அவர் வரலாற்றில் வாழ்வார்.
இலக்கியவெளி ஜனவரி -ஜுன் 2022