முன்றில் 14
இயல்வாணன்
ஒரு அனுபவிக்கத்தக்க உணர்நிலைக்கூடாக வாசகரைக் கதைக்குள் இழுத்துச் செல்லும் மொழியும், நுட்பமான காட்சிச் சித்திரிப்பும், பல்வேறு பழக்கமற்ற உலகங்களை, பண்பாடுகளை இயல்பாக எம்முள் புகுத்தும் லாவகமும் நிறைந்த ஒரு சாகச எழுத்தாளராக நாம் அ.முத்துலிங்கத்தை அடையாளங் காணலாம்.
எளிமையான மொழிநடையில், இயல்பாகக் கதை சொல்லும் பாங்கு வாசகரை அவரது கதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது.
கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 19-01-1937இல் பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் நிறைவு செய்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பட்டயக் கணக்காளர் மற்றும் முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் படிப்பினையும் நிறைவு செய்தார்.
தென்னிலங்கை காலியில் நிறுவனமொன்றில் நிதிமுகாமைத்துவப் பணியில் இணைந்து கொண்டார்.
1972இல் ஆபிரிக்காவுக்குப் பணி நிமித்தம் சென்றார். அங்கு அரச நிறுவனங்களில் பணியாற்றிய அவர் பின்னர் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் சேவைத்திட்ட அலுவலகத்திலும் பல பதவிகளில் பணியாற்றினார். ஆபிரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எனப் பல நாடுகளிலும் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அந்த இடங்களில் பெற்ற நிறைந்த அனுபவங்களே பின்னாளில் அவரது கதைகளில் தாக்கம் செலுத்தின.
பாடசாலைக் காலத்திலும், பல்கலைக்கழக காலத்திலும் எழுத ஆரம்பித்தாலும், 1958இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்த கடைசிக் கைங்கரியம் சிறுகதையுடனேயே இவரது இலக்கிய பிரவேசம் நிகழ்ந்ததெனலாம். கல்கி வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது அனுலா சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றது. தினகரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில்(1961) இவரது பக்குவம் சிறுகதை முதற்பரிசைப் பெற்றது. அக்காலகட்டத்தில் எழுதிய 10 சிறுகதைகள் அக்கா என்ற நூலாக (1964) பேராசிரியர் கைலாசபதியின் அணிந்துரையுடன் வெளிவந்தது.
அதன் பின்னர் அ.முத்துலிங்கம் அஞ்ஞாதவாசத்திலிருந்தார். அவரது தொழில் எழுதுவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை என்பதை ஒரு நேர்காணலில் அவர் பதிவு செய்துள்ளார். வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு பண்பாடுகளை, வேறுபட்ட மனிதர்களைச் சந்தித்த இவர் அவற்றை மனதுக்குள் புடம் போட்டு 30 வருடங்களின் பின்னர் 1995இல் மீண்டும் ஒரு இலக்கியப் படைப்பாளியாக புத்துயிர்த்தார்.
1995இல் வெளிவந்த திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகில் மீண்டும் அறிமுகமான இவர் இந்த இரு தசாப்த காலத்தில் ‘நவீன தமிழின் கொடை’ என இவரது எழுத்துக்களைப் பார்க்குமளவுக்கு விஸ்வரூபமெடுத்துள்ளார்.
வம்சவிருத்தி(1996),
வடக்கு வீதி(1998), மகாராஜாவின் ரயில்வண்டி(2001), அ.முத்துலிங்கம் கதைகள் - அதுவரையான முழுத் தொகுப்பு-(2003), அமெரிக்கக்காரி(2009), குதிரைவீரன்(2013), கொழுத்தாடு பிடிப்பேன் -தேர்ந்த சிறகதைகள்- க.மோகனரங்கன் தொகுத்தது(2015),
பிள்ளை கடத்தல்காரன் (2015),
ஆட்டுப்பால் புட்டு(2016) அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத்தொகுப்பு -இரண்டு பாகங்கள்(2016) என்பன இவரது ஏனைய சிறுகதைத் தொகுப்புகளாகும். இவரது சிறுகதைகள் ஒலிப்புத்தகமாகவும்(2008) கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை கலந்த நாட்குறிப்புகள்(2008), கடவுள் தொடங்கிய இடம்(2012) ஆகியன வெளிவந்த இவரது நாவல்களாகும். இவரது சிறுகதைகள் பத்மா நாராயணனால் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. Inauspicious Times (2008) After Yesterday(2018), Passwrd and Other Stories(2022) ஆகிய மூன்று தொகுப்புகளும் இவரது எழுத்துகளை ஆங்கில வாசகர்களுக்கு எடுத்துச் சென்றுள்ளன.
இவரது கட்டுரைகளும் ஒரு கதை போல சுவாரஸ்யத்தை ஏற்படுத்துபவை. அங்கதச் சுவையோடு கட்டவிழ்பவை. அங்கே இப்ப என்ன நேரம்(2004), பூமியின் பாதிவயது(2007), கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது(2006), அமெரிக்க உளவாளி(2010), ஒன்றுக்கும் உதவாதவன்(2011), தோற்றவர் வரலாறு(2016) ஆகிய இவரது கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளன. அ.முத்துலிங்கம் கட்டுரைகள்(2018) என்ற பெருந்தொகுப்பும் இரு பாகங்களாக வெளிவந்துள்ளன.
வியத்தலும் இலமே(2006), தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை(2013) என்பன இவரது நேர்காணல்களின் தொகுப்பாகும். பிறமொழிப் படைப்பாளிகள் பலரை இவர் நேர்காணல் செய்திருப்பதும், இவரைப் பலர் நேர்காணல் செய்திருப்பதும் முக்கியமானதாகும்.
இவரது திகடசக்கரம் சிறுகதைத் தொகுதிக்கு லில்லி தேவசிகாமணி பரிசு(1995) கிடைத்தது. வம்சவிருத்தி சிறுகதைத் தொகுதிக்கு தமிழ்நாடு அரசின் முதற்பரிசு, இந்தியன் ஸ்டேட் வங்கியின் முதற்பரிசு(1996) என்பன கிடைத்தன. வடக்கு வீதி சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய விருதும்(1999), குதிரைக்காரன் சிறுகதைத் தொகுப்புக்கு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதும்(2012), அமெரிக்க உளவாளி கட்டுரைத் தொகுப்புக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும்(2012), அமெரிக்காகாரி சிறுகதைத் தொகுப்புக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் புலம்பெயர் தமிழர்களுக்கான தமிழ்ப் பேராய விபுலானந்தர் படைப்பிலக்கிய விருதும்(2013) வழங்கப்பட்டுள்ளன.
கனடா தமிழர் தகவல் தமிழிலக்கிய சாதனை விருது(2006), கனடா மார்க்கம் நகரசபை இலக்கிய விருது(2014), கி.ராஜநாராயணன் இலக்கிய விருது(2022) என்பனவும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சொல்வனம் இணைய இதழ்(பெப்ரவரி 2017), ஞானம் சஞ்சிகை(ஏப்ரல் 2018), காலம் சஞ்சிகை(மார்ச் 2005) என்பன சிறப்பிதழ்களை வெளியிட்டு இவரைக் கௌரவப்படுத்தியுள்ளன.
இவரது முதன்மைப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கனடா இலக்கியத் தோட்டம்(2001) அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கும் (இயல் விருது) விருதளித்து வருகிறது. அத்துடன் உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடமிருந்து 6 மில்லியன் டொலர் நிதி திரட்டி அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை(2018) அமைப்பதில் பெரும் பங்காற்றினார். அந்த அனுபவங்களை காலைத் தொடுவேன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாகவும் ஆக்கியுள்ளார்.
வாசிப்பின்பம் தரக்கூடிய படைப்புகளால் தமிழுக்கு அணிசேர்த்துள்ள அ.முத்துலிங்கம் ஆயிரம் பிறை கண்டு 86வயதிலும் தளராத தமிழ்ப்பணி ஆற்றி வருகிறார். கதைசொல்லலில் கி.ராஜநாராயணனுக்கும், குறைத்துச் சொல்லலில் அசோகமித்திரனுக்கும் தொடர்ச்சியாக இவர் உள்ளதாக ஜெயமோகன் இவரை மதிப்பிடுகிறார். உலகத் தமிழர்கள் பெருமைப்படக்கூடிய ஆளுமையாக அவர் இருப்பது ஈழத்தவரான எமக்கு பெரும்பேறே.
உதயன் சஞ்சீவி 9-7-2023