ஆழியாள் மொழிபெயர்த்த
பூவுலகைக் கற்றலும் கேட்டலும்
ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ஈழத்தின் ஆளுமை மிக்க கவிஞர்.உரத்துப் பேச, துவிதம், கருநாவு ஆகிய கவிதைத் தொகுதிகள் மூலம் இவரது கவிதா ஆளுமையைக் கண்டு கொள்ளலாம். ஆங்கிலத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்று யாழ்.பல்கலைக் கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றி, தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தும் கடமையாற்றியும் வருகிறார்.
ஒரு குடியேற்ற நாடாக இன்றளவும் அடையாளப்படுத்தப்படும் அவுஸ்திரேலியாவில் இரத்தமும் சதையுமாக காலாதி காலமாக அங்கிருக்கும் ஆதிக் குடிகள் தொடர்பில் கண்டுகொள்ளப் படுவதில்லை. இயற்கை மீதான வாஞ்சையும், இயற்கையின் ஒவ்வொரு உயிரிகள் மீதான அன்பும் கொண்ட ஆதிக் குடிகள் பல இனப் பிரிவுகளாக பரவி வாழ்ந்தவர்கள். தமக்கெனச் சொந்த நிலத்தையும், ஆறுகள், மலைகள் முதலான இயற்கைச் செல்வங்களையும், பல்வேறு பாரம்பரியங்களையும், சடங்குகளையும், தமக்கே உரித்தான வாழ்முறைகளையும் கொண்டவர்கள். தமக்கான ஆட்சியினையும் கூட வைத்திருந்தார்கள். இந்த மக்கள் கூட்டம் வந்தேறு குடிகளாக வந்தவர்களால் அடக்கப்பட்டு ஓரத்தில் முடக்கப்பட்டனர். அவர்களது அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அவர்களது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் கட்டாய வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இன்று அவர்கள் தாம் யார்? என்பது தொடர்பில் பதகளிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
இந்த நிலைமைகளை அவுஸ்திரேலிய தொல்குடிக் கவிஞர்கள் பேசியுள்ளனர். ஆழியாளுக்கு இந்த உணர்வு ஒத்துணர்வாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈழத்தில் எங்களது நிலையும் அவ்வாறானதே! அவர்களது பாடலை மொழிபெயர்த்து ஆழியாள் தரும் போது அவர்களது குரல் எங்களது குரல் போலவே ஒலிக்கிறது. அவர்களது பாடுகளும், அடையாள இழப்புத் தொடர்பான அவர்களது ஏக்கங்களும் நெஞ்சைப் பிசைகின்றன.
இப்பூவுலகு
புத்தம் புதிதாய் இருந்த போது
நான் விழித்தெழுந்தேன்.
அப்போது அங்கு
ஈமுவும் ,வொம்பட்டும், கங்காருவும் இருந்தன.
வேற்று நிற மனிதன் எவனும் இருக்கவில்லை.
நானே இந்நிலம்
இந்நிலமே நான்.
நானே அவுஸ்திரேலியா.
(ஆதிக்குடியின் ஆன்மா –ஹைலஸ் மரீஸ்)
வெள்ளையர்களால் தொல்குடிப் பெண்கள் விரும்பியும், பலாத்காரப்படுத்தப்பட்டும் கர்ப்பிணிகளாக்கப்பட்டு, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் நிலையோ பரிதாபம். அவர்களை ஆதிக் குடிகளும் சரி, வெள்ளையரும் சரி சந்தேகத்துடனும் ஏளனத்துடனும் பார்க்கும் நிலையில் அவர்களது மனநிலையைப் பேசுகிறார்கள் கவிஞர்கள்.
குழந்தைப் பிராயத்து நினைவுகளில்
‘கலப்பு, கலப்புச் சாதி
கறுப்புப் பெட்டை’யில் தொனிக்கும்
இகழ்ச்சியும் ஏளனமும்
என் தலையைக் கிறுகிறுக்க வைக்கும்.
எத்தனை கேள்விகள்
இத்தாலியா? கிரேக்கமா?
நியூசிலாந்தின் மயோரியா?
அப்ப என்ன?
கறுப்புக் கலப்பு கூடிப் போனதால்
நான் வெள்ளைக்காரி இல்லை.
வெள்ளைக் கலப்புக் கூடினதால்
நான் கறுப்பி இல்லை.
இரண்டுக்கும் நடுவே
எங்கும் சேர்த்தியில்லாமல்.
(எங்கு சேர்த்தி? – லொரெயின் மக்கீ சிப்பெல்)
பொன்னிற முடியுடனும் நீல முடிகளுடனும்
கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடைநடுவில் நிற்கிறேன்.
என்னுடைய ஆன்மா கறுப்பாலானது.
இரவுகளில் நான் அழுகிறேன்.
எங்கு நான் உரித்தாய்ச் சேர்வது என்பது
எனக்குள் நடக்கும் ஒரு பெரும் போராட்டம்.
கறுப்பரும் வெள்ளையரும்
என்னை அவநம்பிக்கையோடும் பகையுணர்வோடும் பார்க்கின்றனர்.
யார் அவன்?
கறுப்பனா? அல்லது வெள்ளையனா?
இரவுகளில் என்னிடம் வரும்
மூதாதையோரின் ஆன்மாக்கள்
அதை ஒரு வேளை
எனக்குச் சொல்லக் கூடும்
(கறுப்பு மனத்தவன் -ஷேன் ஹென்றி)
ஆழியாளின் எளிமையான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள இக்கவிதைகள் அவுஸ்திரேலியாவின் ஆதிக் குடிகளது ஆன்மாவை மட்டுமல்ல பாரம்பரிய அடையாள இழப்பை மெல்ல மெல்ல ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எம்மினத்தினதும், இது போலவே உலகெங்கும் பரவி வாழும் இனங்களதும் ஆன்மாவையும் பேசுகின்றன.
தென்னமெரிக்காவை, ஆபிரிக்காவைக் கவிதைகளாலும், கதைகளாலும் தரிசிக்க முடிந்த நமக்கு ஆழியாள் புதியதொரு வாசலைத் திறந்துள்ளார். இந்தக் கவிதைகள் எம்மில் உணர்வுத் தொற்றலை ஏற்படுத்தி, எம்மை ஆதிக் குடிகளின் மனநிலையோடு ஒன்றச் செய்கின்றன. ஆழியாள் தந்திருக்கும் அறிமுகம் கவிதைகளை நோக்கி அழைத்துச் செல்லும் கைத்தடியாக இருக்கிறது. பூவுலகு சுவாசிப்பையும், தைல மரங்களின் வாசத்தையும் இந்தக் கவிதைகள் மூலம் எம்மாலும் உணர முடிகிறது. அதுவே ஆழியாளின் வெற்றியும் ஆகும்.
-இயல்வாணன்
தீம்புனல் 30-04-2018