முன்றில்
15
இயல்வாணன்
எள்ளலும்,
சுவையும் மிக்க மண் மணம் கமழும் படைப்புகளால் அறியப்பட்டவர் எஸ்.எல்.எம்.ஹனீபா. இவர் எழுதிய கதைகளை விட இவரால் சொல்லப்படுகின்ற கதைகளை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம். திகட்டத் திகட்டச் சுவை கூட்டி அவர் சொல்லும் அழகே தனி. சு.வில்வரத்தினம் போல
பாடவும் செய்வார். ‘ஒவ்வொரு கணமும்
உயிராற்றல் பீறிடும் இவரைப் போன்ற மனிதரை சமீப காலத்தில் நான் காணவில்லை’ என்பது
இவர் தொடர்பிலான ஜெயமோகனின் பார்வை.
மட்டக்களப்பு
மாவட்டம் மீராவோடையின் சட்டிபானை தெருவில் தம்பி சாய்பு சின்னலெவ்வையின் மூன்றாவது மகனாக 01-04-1946இல் எஸ்.எல்.எம்.ஹனீபா பிறந்தார். ஆற்றில் மீன் பிடித்து விற்கும் தொழில் புரிந்து வந்த இவரது தந்தையார் பின்னர் மூன்று கிராமங்களுக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராகக் கடமையாற்றினார்.
ஹனீபா
தனது ஆரம்பக் கல்வியை மீராவோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஒட்டமாவடி முஸ்லீம் கலவன் பாடசாலையிலும் கற்றார். ஹிதாயதுல்லாஹ் மௌலவியிடம் இஸ்லாமிய சமயக் கல்வியைக் கற்றார். தொழிற் கல்வியை கிளிநொச்சி விவசாயப் பாடசாலையில்(1966-67) பெற்றார்.
தொடர்ந்து
மலேரியா ஒழிப்புப் பிரிவில் மேற்பார்வையாளராக தொழிலுலகுக்குள் நுழைந்தார். சிறிது காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கால்நடை போதனாசிரியர் பணியினை ஆற்றினார். ஓராண்டின் பின்னர் 1969இல் விவசாய அபிவிருத்திப் போதனாசிரியர் நியமனம் கிடைத்து, கண்டி வத்தேகம, வாழைச்சேனை, கெக்கிராவ, புத்தளம், மட்டக்களப்பு, பொலநறுவை, வெலிக்கந்த, திரிகோணமடு ஆகிய இடங்களில் கடமையாற்றி 1990இல் ஓய்வு பெற்றார். இவர் ஒரு குறுந்தூர ஓட்ட வீரராக அகில இலங்கை ரீதியில் விருதுகள் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கால்நடை சார்ந்தும், விவசாயம் சார்ந்தும் ஆலோசனைகளை வழங்கி வரும் இவர் அவ்வப்போது அது தொடர்பில் எழுதியும் வந்துள்ளார்.
இவர்
ஒரு இலக்கியக்காரனாக மட்டுமன்றி அரசியல்வாதியாகவும் விளங்கினார். அந்த அரசியலே இலக்கியத்தில் பேராளுமையாக உருவாகாமல் அவரை முடக்கி விட்டது என்றால் மிகையல்ல. அதுபற்றி அவரே பிரஸ்தாபித்துள்ளார். இடதுசாரிய சிந்தனைகளில் ஈடுபாடு காட்டிய இவர் இடதுசாரிகள் கூட்டுச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குச் சார்பாக முதலில் மேடையேறினார். 1963இல் கல்குடா தொகுதி சுதந்திரக் கட்சிக் கிளையை உருவாக்கினார். 1969இல் அக்கரைப்பற்றில் எம்.எச்.எம்.அஷ்ரப்பைச் சந்தித்ததையடுத்து அவர் பால் ஈர்ப்பு ஏற்பட்டது. 1970இல் அஷ்ரப்
தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதில் முதன்மைப் பாத்திரம் வகித்தார். காங்கிரஸின் பிரசாரப் பீரங்கியானார்.
1989இல்
வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மூன்று ஆரம்பப் பாடசாலைகளை உருவாக்கியமை உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை
தனது பிரதேசத்துக்குச் செயற்படுத்தினார். அக்காலத்தில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முகநூலில் இவர் பதிவு செய்துள்ளார்.
மட்டக்களப்பு
பொது நூலகம் இவரது ஆரம்பகால வாசிப்புக்குத் தீனி போட்டது. இவரது
முதற் சிறுகதையான நெஞ்சின் நினைவினிலே 1962இல் ராதா சஞ்சிகையில் வெளிவந்தது. இன்சான், இளம்பிறை, வீரகேசரி, சுதந்திரன், சுடர், சிந்தாமணி,கணையாழி,பூரணி,பாமிஸ், ராவய(சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது) ஆகியவற்றிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஐம்பது சிறுகதைகள் வரையே இவர் எழுதியுள்ளார்.
‘என்னைச் சூழவும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்கள் அறியாமையோடும் வறுமையோடும் வானம் பார்த்த பூமியை வைத்து மாரடிக்கிறார்கள். இந்த மக்களை மூலதனமாகக் கொண்டு ராஜதர்பார் நடத்துகின்ற அரசியல் புறோக்கர்கள், ஏழைகளைச் சுரண்டி வாழும் தனவந்தர்கள். இந்த முரண்பாடுகளின் கோட்டமே நான் வாழும் கிராமம். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலே அவலப்படும் மக்களுடைய மானுஷீகத்தைத் தரிசிப்பதுதான் எனது எழுத்துப்பணி’ என
எஸ்.எல்.எம்.ஹனீபா பிரகடனம் செய்வது போலவே அவரது எழுத்துகள் அமைந்துள்ளமை சொல்லத்தக்கதாகும்.
சமூகப்
பிரக்ஞையுள்ள சத்தியக் கலைஞனுக்கு எழுத்தூழியமும் ஒரு புனித யுத்தமாக அமைந்து விடுகிறது என்று குறிப்பிடும் இவர் ‘சன்மார்க்கம் கதை
வெளிவந்த வேளை ஹனிபாட கையெ முறிச்சுப் போடணும் என்று சொம்பினார்களாம்’ என்று
எழுதியிருக்கிறார்.
1992இல் இவரது
15 சிறுகதைகள் மக்கத்துச் சால்வை என்ற தலைப்பில் வெளியானது. இவரது மக்கத்துச் சால்வை சிறுகதையே இவரைப் பலரும் அறிய வைத்த கதை. கிராமத்தில் பெருநாள் காலத்தில் நிகழும் சிலம்பாட்டத்தை மையப்படுத்திய இக்கதை மனிதர்களின் கௌரவம், வெல்லும் ஆசை என்பவற்றுக்கு அப்பால் அன்பின் வலிமையை உள்ளார்ந்து பேசுகின்றது. இக்கதை இலங்கை அரசினர் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தரம் 11 பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. அதேபோல மருமக்கள் தாயம், வேட்டை கதைகளும் பேசப்பட்ட கதைகளாகும்.
மக்கத்துச்
சால்வையில் இடம்பெற்ற சில கதைகளையும் உள்ளடக்கி 24 சிறுகதைகள் அவளும் ஒரு பாற்கடல் என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக 2007இல் வெளிவந்தது. மக்கத்துச்சால்வை வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும் என்ற தலைப்பில் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் சிறப்பு மலர் ஒன்று 2021இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு மலரில் எம்.ஏ.நுஃமான், தெளிவத்தை
யோசப், மல்லியப்பு சந்தி திலகர், ஜெயமோகன், எம்.கே.முருகானந்தன், கருணாகரன்
உள்ளிட்ட 56 பேரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இவரெழுதிய
‘என்டெ சீவியத்திலிருந்து பாகம் 1’ என்ற தலைப்பிலான
பத்திகளின் தொகுப்பு இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அத்துடன் இவரது சிறந்த சிறுகதைகளான மக்கத்துச் சால்வை, மருமக்கள் தாயம் ஆகிய கதைகள் பேஜஸ் புத்தக நிலையத்தின் சிறுநூல் வரிசையில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளது.
இவரது
மக்கத்துச் சால்வை தொகுதிக்கு 1992இல் தமிழ்நாடு லில்லிதேவசிகாமணி விருதும், இலங்கை அரசின் சாகித்திய விருதும் வழங்கப்பட்டது. ஆளுநர் விருது(2000), கலாபூஷணம் விருது(2005), ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார பேரவை விருது, மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவை விருது என்பனவும் இவரது இலக்கிய சேவையைக் கௌரவித்து வழங்கப்பட்டுள்ளன.
கரிசல்
காட்டுக்கு ஒரு கி.ராஜநாராயணன் என்றால்
மட்டக்களப்புத் தமிழுக்கு எஸ்.எல்.எம். தான் என்று எம்.கே.முருகானந்தன் குறிப்பிடுவது
போல மட்டக்களப்பு முஸ்லீம் பிரதேச பேச்சுவழக்கினை இவரது கதைகளில் அலாதியாய் சுவைக்கலாம். இவரது கதைகளில் வரும் சொற்கள், சொலவடைகள் ஒரு வட்டாரச் சொல்லகராதியை உருவாக்குவதற்கான மூலமாகலாம்.
77வயதில்
முதுமையின் தளர்ச்சியை இடையிடையே வெளிக்காட்டினாலும் இளைஞனைப்
போன்ற மனதுடன் இருக்கும் இவர் தனது அனுபவங்களை எழுத்தாக்கி ஈழத்து இலக்கியத்துக்கு புதிய ஒளி பாய்ச்ச வேண்டும்.