Monday, April 13, 2020

சிறுகதை -வெளிக்கும்

சிறுகதை 
வெளிக்கும் 

வருசம் பிறந்திட்டுது. இது புதுசுதான். இதப்போலை ஒவ்வொரு வருசமும் புதுசுதான். ஆனா, பஞ்சாங்கந்தான் அதை அறுபதாய்ப் பிரிச்சு, அறுபது பேர் வைச்சு, அறுபது வருசத்துக்கொவ்வொண்டாய் வருசம் திரும்பத் திரும்ப வருமெண்டு சொல்லுது. இந்தப் பஞ்சாங்கத்தைப் பற்றியே ஆரும் இப்ப நினைக்கிறேல்லை. பஞ்சாங்கங்கள் கூட ஒவ்வொண்டும் ஒவ்வொரு போக்கிலை போய்க் கொண்டிருக்குதுகள். அதாலை, அது கூட இப்ப பெரிசாய்த் தெரியுறேல்லை. நான் பிறந்ததிலையிருந்து இப்ப வரைக்கும் பதினெட்டு வருசத்தைக் கண்டிட்டன். இருந்தாலுமென்ன?
அம்மா ஒவ்வொரு வருசமும் புதுப் புதுச் சட்டையள் எடுத்துத் தருவா. அக்கம் பக்கத்து வீடுகளிலை பொங்கல் நடக்கும். கோவிலுகளிலை திருவிழாக்கள் நடக்கும். நானும் தங்கச்சியும் புதுப் புதுச் சட்டையளோடை கோவிலுகளுக்கும், சொந்தக்கார வீடுகளுக்கும் போவம். வெடி கொளுத்தியும், கிட்டி, கிளித்தட்டு விளையாடியும் திரிவம். அவ்வளவுதான்.
எனக்குச் சின்னனாய் இருக்கே;கை ஒண்டும் தெரியாது! அம்மா உடுப்பு எடுத்துத் தருவா. பலகாரங்கள் சுட்டுத் தருவா. பூவாணம் வெடியெல்லாம் வாங்கித் தருவா. எங்களுக்குச் சந்தோசமாயிருக்கும். துள்ளிக் கொண்டு திரிவம்.
அம்மா கூட நாளிலை வெள்ளைச் சீலைதான் உடுப்பா. மாமி மாதிரியோ, மற்றப் பெரிய பொம்புளையள் மாதிரியோ அம்மா சிவப்புப் பொட்டுப் போடமாட்டா. கழுத்திலை, கையிலை நகை நட்டொண்டும் போடமாட்டா. ஒரு இடத்துக்கும் வரவும் மாட்டா. கேட்டால் “ நான் வரேல்லை” என்பா. “ஏன் வரேல்லை?” எண்டால் “அப்பிடித்தான்” என்பா. நாங்கள் நெடுக ஆய்க்கினைப்படுத்தினால் “நான் வரக்கூடாது. அப்பா இல்லாட்டால் நான் கோயில் குளமொண்டுக்கும் போகக் கூடாது. நீங்கள் கவனமாய்ப் போட்டு வாங்கோ” என்பா. அப்பா சாமியிட்டைப் போயிட்டாரெண்டுதான் அம்மா சொன்னா.
நான் கொஞ்சம் வளந்தாப் பிறகுதான் தெரியும் அப்பா செத்ததும், அப்பா இல்லாமல் அம்மா கஷ்ரப்பட்டதும், அந்த நேரம் வெளியிடத்திலையிருந்து இஞ்சை வந்து வேலை செய்த பொம்பிளைப் பிள்ளையளுக்கு அம்மா சமைச்சுக் குடுத்ததும், அந்த வருமானத்திலை எங்களை வளர்த்ததும். இன்னும்…இன்னும்…
அதுவரையிலை அந்த அக்காமார் வருவினை. சாப்பிடுவினை. ஏதாவது கேட்பினை. போவினை. அவ்வளவுதான்!
இப்ப நினைக்கேக்கை மனதுக்குள்ளை ஏதோ குமையுது.
“அவள் நெருப்புத் திண்டு உங்களை வளத்தவள். நீங்கள் ஏதோ அதை உணந்து படிச்சு ஒரு தொழில்துறையிலை சேந்திட்டியளெண்டால்தான் அவள் பாடுபட்டதுக்குப் பலனாகும்” எண்டு நாகம்மா ஆச்சி நெடுகச் சொல்லுறது இப்பதான் முழுசாய்ப் புரிஞ்சிருக்குது.
இனியாவது நாங்கள் அம்மாவைக் கஸ்டப்படுத்தக் கூடாது எண்டு என்னை நினைக்க வச்சிருக்குது.
வருசம் பிறந்தால் ஊரெல்லாம் வெடி வெடிக்கத் தொடங்கி விடும். வருசம் பிறக்க முதலே வெடி வெடிக்கத் தொடங்கி, வருசம் பிறக்கிற நேரம் உச்சக் கட்டத்திலை நிக்கும். மொத்தமாய் வெடிச் சத்தம் ஓய ஒரு கிழமையாவது செல்லும். வருசப் பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் எண்டு வந்தாலே போதும்! எங்கடை ஒழுங்கையெல்லாம் வெடி வெடிச்ச கடுதாசித் துண்டுகள் மழை காலத்து ஈசல் இறகுகள் போலை குவிஞ்சு கிடக்கும். சின்னச் சின்னத் தகரப் பேணியள் எல்லாம் சப்பையாய்ப் பிரிஞ்சு போய்க் கிடக்கும். பட்டணசபைக்காரர் பார்வையிலை படாவிட்டால் அதுகள் மாதக் கணக்காய்க் குவிஞ்சு போய்க் கிடக்கும். ஒரு சில வீட்டுக்காரர்கள் மட்டும் தங்கடை வீட்டுக்கு முன்னாலை வீதியில் குவிஞ்சு போய்க் கிடக்கும் குப்பையளைக் கூட்டி, தங்கடை எல்லை கழிய வீதியிலையே குவிச்சு விடுவினை.
வருசம் பிறக்க முதலே அம்மா எங்களுக்குச் சொல்லிப் போடுவா…            
“வருசப் பிறப்பா நாத்துக் குழப்படியேதும் செய்யக்கூடாது. சண்டை பிடிக்கக்கூடாது. அழக்கூடாது. விளங்குதோ? வருசப் பிறப்பிலை குழப்படி செய்தால் அந்த வருசம் முழுக்க அதைத்தான் செய்வீங்கள்… அதை விட்டிட்டு நல்ல பிள்ளையளாய் இருக்க வேணும்… நல்லாய்ப் படிக்க வேணும்…விளங்குதோ?” எண்டு அவ சொல்லச் சொல்ல நாங்களும் ஓமெண்டு சொல்லுவம். அம்மா சொன்னபடி நடக்க வேணும் எண்டுதான் விடிய எழும்பினவுடனையே நினைப்பம். ஆனா, அண்டைக்கு ஏதோ ஒரு விதத்திலையெண்டாலும் குழப்படி விடாமலிருந்ததாய் ஞாபகமில்லை.
நான் கொஞ்சம் வளந்தாப் பிறகு வருசப் பிறப்பு நாளிலை கொஞ்ச நேரம் படிக்கிறது… கொஞ்ச நேரம் விளையாடிறது… கொஞ்ச நேரம் பாட்டுப் பாடுறது எண்டு கொஞ்சக் கொஞ்ச வேலையளைச் செய்து கொண்டிருப்பன். ஏனெண்டால் வருசம் முழுவதும் அப்பிடிச் செய்யலாம் எண்ட நம்பிக்கையிலை!
இந்த முறையும் ஏதோ ஒரு வருசம் பிறந்திட்டுது. அந்த வருசத்தின்ரை வடமொழிப் பெயர் மனசுக்கை நிக்குதில்லை. இப்ப நினைக்கிற போதுதான் தமிழ் எவ்வளவு மொழியளைத் தனக்குள்ளை இரவல் வாங்கி வச்சிருக்கெண்டு தெரியுது. அதாலைதான் நாங்களும் இண்டைக்கு நடுத்தெருவிலை நிக்கிறமோ?
இப்ப கொஞ்சக் காலமாய் வருசப் பிறப்புகள் சோபையில்லாமலேயே வந்து போகுதுகள். வெடி கொளுத்திறேல்லை. பொங்கிப் படைச்சு, புது உடுப்புகளோடை உல்லாசமாய்த் திரியுறேல்லை. ஒவ்வொரு வீட்டிலையும் ஒவ்வொரு பிரச்சினையள்! ஒரு வீட்டிலை பொம்பர் அடிச்சு, வீட்டிலை சமைச்சுக் கொண்டிருந்த பொம்பிளை செத்திருப்பா. ஒரு வீட்டிலை ஷெல் விழுந்து இன்னொருத்தர் செத்திருப்பார். இன்னொண்டிலை அடுத்த நேரக் கஞ்சிக்கு வழியில்லாமல், உலருணவு நிவாரணத்தை மட்டும் பாத்துக் காத்திருப்பினை. இப்பிடியே வீட்டுக்கு வீடு வாசல் படியாய்ச் சனம் ஒவ்வொரு பாடாய் இருக்கேக்கை வருசமென்ன.. தீபாவளியென்ன…
இந்த வருசம் இறுக்கம் கொஞ்சம் கூட. சாமானுகளின்ரை விலையள் சாதாரணமாய் எங்களைப் போலை வறிய சனங்கள் எட்டிப் பிடிக்கேலாத அளவுக்கு உயர்வாயிருக்குது. இப்பவெல்லாம் மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் சாமான்களின்ரை விலை ஏறிக் கொண்டே போகுது. கொஞ்சம் பிரச்சினையெண்டு கேள்விப்பட்டாலே அந்தண்டு சாமான்கள் - முக்கியமாய் மண்ணெண்ணெய்- காணக் கிடைக்காது. நாங்கள் ஏதாவது பிரச்சினை இருக்கோ இல்லையோ எண்டதைப் பேப்பரைப் பாக்க முன்னமே மண்ணெண்ணெய்க் கடையைப் பார்த்தாலே தெரிஞ்சு போகும். பிறகு அடுத்த நாள் இருபதோ முப்பதோ ரூபாயாலை சாமானுகளின்ரை விலை கூடியிருக்கும்.
இந்த முறை சனத்தின்ரை கை நல்லாய் வறண்டு போச்சுது. அதாலை புது வருசம் எண்டது கூடப் பல பேருக்குத் தெரியாமலே போச்சுது. ஒண்டிரண்டு வெளிநாட்டுப் பணக்காரற்றை வீடுகளிலைதான் வருசத்தின்ரை அடையாளத்தைக் காணேலும். எங்கடை வீட்டிலையும் இந்த முறை வருசப் பிறப்புக் கொண்டாடேல்லை. பொங்கலுமில்லை. புது உடுப்பும் எடுக்கேல்லை. விடிய வெள்ளணவே ஐயரிட்டை ரண்டு ரூபா தெட்சணை குடுத்திட்டு, ஒரு செம்பு மருத்துநீர் வாங்கியந்து தோஞ்சிட்டு, அக்கம் பக்கத்திலையுள்ள கோவில்களுக்குப் போட்டு வந்ததோடை சரி.
ஆனால் மாமா வீட்டுக்காரர் வருசப் பிறப்புக் கொண்டாடினவை. அவையிட்டை கனடாப் பணமிருக்குது. அதாலை விதம் விதமாக உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு வந்து போச்சினம்.
இதைப் போலைத்தானே நாங்களும் விதம் விதமான உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு வெடியளையும் பூவாணங்களையும் கொளுத்திக் கொண்டு திரிஞ்சனாங்கள். ஆனா, இந்தப் பிரச்சினையளாலை இப்ப இதையெல்லாம் எங்களாலை கொண்டாடேலாமல் போச்சுது. எண்டைக்கோ ஒரு நாளைக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் தீர்ந்து நாங்கள் இதுகளையெல்லாம் சந்தோசமாய்க் கொண்டாடுவம்தானே எண்டு நான் எனக்குள்ளை ஆறுதல் பட்டன். வீட்டு நிலமை புரிஞ்சதாலை என்னாலை பேசாமலிருக்க முடிஞ்சுது. ஆனா, தங்கச்சிக்கு அது புரியேல்லை. அவள் சின்னப் பிள்ளைதானே! அதாலை
“மச்சாளவையெல்லாம் புதுப் புதுச் சட்டையளோடை வரேக்கை நான் மட்டும் இந்தப் பழசோடை நிக்கிறதே?” எண்டு அம்மாவோடை சண்டைக்குப் போனாள். அவள் அப்பிடிக் கேக்கேக்கை கண்ணீரும் வந்திட்டுது. அதைப் பார்க்க எனக்கும் பரிதாபமாய்த்தான் கிடந்தது. அதை விட அம்மாவைப் பார்க்க…
அம்மாவுக்கும் கண் கலங்கி விட்டுது. அவளுக்குப் பதிலொண்டும் சொல்ல ஏலாமல் நிண்டா. என்னாலை கூடத்தான் எதுவும் செய்ய முடியேல்லை. பிறகு நான்தான் அவளைக் கூப்பிட்டு “புது வருசத்திலை புது உடுப்புப் போடுறதாலை ஒண்டும் வந்திடாது. நாங்கள் எங்கடை மனங்களைப் புதுசா… வெள்ளையா வச்சிருந்தாலே போதும். அதுதான் உண்மையான புது வருசம்” எண்டு சொன்னன். ஆனால் அவள் சமாதானம் அடையேல்லை.
என்னாலையுந்தான் அவளுக்கு ஒரு உடுப்பை எடுத்துக் குடுக்க முடியேல்லை. அம்மாதான் அப்பா இல்லாதவ. அவவாலை என்னதான் செய்யேலும்? பாழாய்ப் போன ஆமியள் அப்பாவைச் சுடாமல் இருந்திருந்தால் இந்தப் பத்து வருசத்திலையும் எவ்வளவு முன்னேறியிருப்பம்? இப்பதான் எனக்கு கொஞ்சம் உலகம் பிடிபடுகுது. இனி நான் கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டுப் பாடு பயனுகளைப் பார்க்க வேணும்.
வீணாய் நாளுகள்தான் ஓடிப் போயிட்டுது. ஓடி ஓடி அது இண்டைக்கு என்னடடையிருந்து பதினெட்டு வருசத்தையும் இழுத்துக் கொண்டு போயிட்டுது. இந்தப் பதினெட்டு வருசத்திலையும் நான் எதையும் உருப்படியாகச் செய்யேல்லை. செய்ய முடியாமல் போச்சுது. இதுக்காண்டி நான் ஆரைக் குறை சொல்லுறது? காலத்தையா?
கடந்த காலங்கள் கசப்பாயே கழிஞ்சு போயிட்டுது. அம்மா கஸ்டப்பட்டுப் படிப்பிச்சா. நானும் படிச்சன். இடையிலை பிரச்சினையள்… மனக் குழப்பங்கள்... இப்பிடியே காலம் கழிஞ்சு போக திடீரெண்டு பரீட்சை அறிவிப்பு வரும். திடீரெண்டு நிக்கும். பிறகு கொஞ்சக் காலம் செல்லத் திரும்பவும் பரீட்சை அறிவிப்பு வரும். பரீட்சைக்கு ஆயத்தம் நடக்கும். அந்த நேரம் ஊரடங்குச் சட்டமும் அமுலுக்கு வரும். ஊரடங்குச் சட்டம் அமுலிலை இருக்கேக்கையே பரீட்சையும் நடக்கும். இதுக்குள்ளை கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பாய்ப் போனது போலை எங்கடை மூளைக்குள்ளை கிரகிச்சு வைச்சவையெல்லாம் மறந்து போயிடும். பரீட்சையிலை எதிர்பார்த்த றிசல்டும் கிடைக்காது.
வரும் வரும் எண்டு றிசல்டை எதிர்பார்த்தும் நாங்கள் களைச்சுப் போனம். இனி அது வந்தாலும் என்னென்ன சோதினையளுடன் வருமோ தெரியேல்லை. அது வரைக்கும் இனிமேல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வருசப் பிறப்பாநாத்து தங்கச்சிக்கு ஒரு உடுப்பு எடுத்துக் குடுக்கக் கூட வக்கில்லாத நிலையிலை நான் றிசல்டைப் பார்த்து, அது வந்தாப் பிறகு ஒவ்வொரு மனக் கோலங்களைக் கட்டிக் கொண்டிருக்கேலாது.
இவ்வளவு காலந்தான் பேசாமல் இருந்திட்டன். இனியாவது உருப்படியாய் ஏதாவது செய்ய வேணும். இந்தப் படிப்பு இண்டைக்கிருக்கிற நிலையிலை எனக்கு என்னத்தைத் தந்திட்டுது? அப்பா இல்லாமல் அம்மா எங்களை வளர்த்து ஆளாக்கின பிறகும் நான் இப்பிடியே மரக்கட்டையாய் இருந்து என்ன செய்யுறது?
இண்டைக்கிருக்கிற நிலமையிலை படிப்பும், படிப்புக்கேற்ற தொழிலும் எண்டிருந்தால் அடுத்த வருசப் பிறப்புக்குள்ளை காணாமல் போயிடுவம்.
அடுத்த வருசப் பிறப்பிலையாவது நான் கட்டாயம் தங்கச்சிக்கு ஒரு உடுப்பு எடுத்துக் குடுப்பன். உடுப்பு எடுத்துக் குடுக்கிறதோடை மட்டும் எங்கடை பிரச்சினை தீர்ந்து போகுமா?

வெளிச்சம்
புரட்டாதி 1993.