Wednesday, August 21, 2024

நேர்காணல் : வரதர்






 நேர்காணல் : வரதர்

நேர்கண்டவர், படங்கள் : இயல்வாணன்

கேள்வி : வரதர் ஐயா அவர்களே! வணக்கம். நீங்கள் நகரத்தில் இருந்து சற்று தள்ளியிருக்கும் பொன்னாலை என்ற கிராமத்தில் பிறந்தவர் .உங்களுக்கு இலக்கியத்தின் மீதான நாட்டம் ஏற்படவும் பதிப்புத் துறைக்குள் கால் பதிக்கவும் ஏதுவான சூழல் எவ்வாறு ஏற்பட்டது?

பதில் : சின்ன வயதில் இருந்தே கதை படிப்பதில் எனக்கு விருப்பம். அந்தக் காலத்தில் பெரிய எழுத்து இராமாயணம், அல்லி அரசாணிமாலை போன்றவற்றை விரும்பிப் படித்துள்ளேன். அதேபோல பாடப் புத்தகங்களில் உள்ள கதைகளையும் விரும்பிப் படிப்பேன். அதன் பின்பாக குப்பி விளக்கின் முன்பாக குப்புறப் படுத்தபடி இரவில் நீண்ட நேரம் பத்திரிகைகள், புத்தகங்களெல்லாம் படிப்பேன். வாசிப்பின் மீதான ஆர்வமே என்னை இவ்வாறு மாற்றியிருக்கிறது என நினைக்கிறேன்.

கேள்வி : குடும்பத்தில் அல்லது பாடசாலையில் யாராவது தூண்டுகோலாக இருந்தார்களா?

பதில் : அவ்வாறு யாருமில்லை. ஆனால் என்னோடு சேர்ந்து படித்தவர்களில் அமுது என்று அழைக்கப்பட்ட சண்முகம் என்பவரும் ஒருவர். அவர் எனது பக்கத்து வீட்டுக்காரர். ஏனையவர்களுக்கு பாடசாலை விட்டதும் தோட்டத்தில் வேலையிருக்கும். எனது அப்பா சிறியதொரு கடை வைத்திருந்தார். அமுதுவின் அப்பா பரியாரியாராக ஊரில் பேர் பெற்றவராக இருந்தார். எனக்கும் அமுதுவுக்கும் வேலைகள் இல்லை. நாங்கள் சுதந்திரமாகத் திரிவோம். அமுதுவுக்கும் என்னைப் போல் வாசிப்பில் ஆர்வமுண்டு.

அவர் வீட்டில் இந்தியாவிலிருந்து ‘ஆனந்த விகடனை’ எடுப்பார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றரை மைல் நடந்து போய் சுழிபுரத்திலுள்ள தபாற் கந்தோரில் ஆனந்த விகடனை எடுத்து வருவோம். வழியிலேயே நிழலில் நின்று அதில் வெளிவரும் கல்கியின் கதையைப் படித்து விடுவோம். அவ்வளவு ஆவல் எமக்கு. பின்னர் நான் எஸ்.எஸ்.ஸி படிக்கும் போது எனக்குச் சில வயதுகள் மூத்தவரான மதியாபரணம் என்ற ஆசிரிய நண்பரும் எனது வாசிப்புக்குத் துணை நின்ற சகபாடியாக இருந்தார். மற்றப்படி எனக்குத் தூண்டுதல் தந்தவர்கள் என யாருமில்லை.

வாசிப்பின் காரணமாக ஈழகேசரி இளைஞர் சங்கத்தில் எழுதத் தொடங்கினேன். அப்போது நாவற்குழியூர் நடராசன், பஞ்சாட்சர சர்மா, அ.செ.முருகானந்தன் போன்றவர்களும் என்னுடன் எழுதிக் கொண்டிருந்தனர். நான் அவர்களுடன் கடிதத் தொடர்பைப் பேணினேன். அதுதான் ‘மறுமலர்ச்சி’ இதழ் வெளிவரவும் காரணமாயிற்று.

கேள்வி : ஈழத்தில் இலக்கிய வரலாற்றுக் காலகட்டத்தில் ஒன்றாகக் குறிப்பிடுமளவுக்கு மறுமலர்ச்சி முக்கியத்துவமுடையது. மறுமலர்ச்சி பற்றிக் கூறுங்கள்.

பதில் : எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சங்கத்தை அமைத்தால் என்ன என்று யோசித்தேன். அதை கடிதம் மூலமாக ஈழகேசரியில் அறிமுகமான சக நண்பர்களுக்கு அறிவித்தேன். அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தனர். 1943ஆம் ஆண்டு கன்னாதிட்டியிலுள்ள ரேவதி குப்புசாமி என்ற சிற்பக் கலைஞரின் வீட்டில் நாங்கள் ஒன்றுகூடினோம். அமைக்கவுள்ள சங்கத்துக்கு புதுமைப்பித்தர்கள் சங்கம் என்று பெயர் வைக்கவே எனக்கு விருப்பம். ஏனென்றால் நான் புதுமைப் பித்தனின் படைப்புகள் மீது அதிக விருப்பம் கொண்டிருந்தேன். ஆனால் ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி சங்கம்’ என்ற பெயரையே பெரும்பாலானவர்கள் விரும்பினர். 

அச்சங்கம் உருவாக்கப்பட்ட பின்பு ஓர் இதழை வெளியிடலாம் என எண்ணினோம். நான்இ எனது நண்பர் க.கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், க.இ.சரவணமுத்து, ச.பஞ்சாட்சர சர்மா ஆகிய ஐவரும் ஐம்பது ரூபா மூலதனமிட்டு அ.செ.முருகானந்தனை கௌரவ உறுப்பினராக இணைத்து மறுமலர்ச்சி இதழை வெளியிட்டோம். இரண்டாண்டுகள் 24 இதழ்கள் வெளிவந்தன. அக்காலத்தில் எழுதியவர்கள் எல்லோருமே மறுமலர்ச்சியில் எழுதினர்.

கேள்வி : மறுமலர்ச்சி ஏன் நின்று போனது? 

பதில் : நஷ்டமடைந்துதான்.

கேள்வி : அதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?

பதில் : நம்மிடம் தொழில் அனுபவம் போதாது. எழுதத் தெரியும். அச்சிடத் தெரியும். சரியான விநியோகம், விளம்பரம் என்பவற்றில் எமக்கு அறிவும் அனுபவமும் இல்லை. அதுதான் முக்கியமான பிரச்சினையென நினைக்கிறேன்.

கேள்வி : மறுமலர்ச்சியின் பின்னர் - மறுமலர்ச்சியை தொடர்ந்து வெளியிடாமல் - ஆனந்தனை வெளியிட்டுள்ளீர்கள்.ஏன்?

பதில் : மறுமலர்ச்சியை பார்வதி அச்சகத்தில் அச்சிட்டோம். அது நின்று போனது. அதன்பின் ஆனந்தா அச்சகத்தில் நானும் ஒரு பங்காளராகச் சேர்ந்து கொண்டேன். அப்போது ஆனந்தனை வெளியிட்டேன். நான் ஒவ்வொரு முறையும் புதிய புதிய சஞ்சிகைகளையே வெளியிட்டு வந்துள்ளேன். டொமினிக் ஜீவா மல்லிகையைத் தொடர்ந்து வெளியிடுகிறார். அது ஒரு சாதனைதான். அதைப் பெரிதாக எண்ணுகிறேன். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை.

கேள்வி : ஆனந்தன் எவ்வளவு காலம் வெளிவந்தது?

பதில் : 1952லிருந்து இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்தது. கவிஞர் யாழ்ப்பாணனும், அவரைத் தொடர்ந்து புதுமைலோலனும் என்னுடன் இணையாசிரியராகக் கடமையாற்றினர்.

அதன்பின் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்டு தேன்மொழி என்ற கவிதைக்கான சஞ்சிகையை வெளியிட்டேன். இதில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரில் இருந்து சில்லையூர் செல்வராசன் வரை நிறையப் பேர் எழுதியுள்ளனர். ஈழத்தில் தமிழ்க் கவிதைக்கென்று வெளிவந்த முதலாவது இதழென இதனைக் குறிப்பிடுகிறார்கள். தேன்மொழியால் நான் பெரிதும் நட்டமடையவில்லை. 16 பக்கங்களிலேயே வெளிவந்தது. தேன்மொழி நின்றதற்கு கவிஞர்களின் ஆர்வம் குறைந்ததே காரணமாகும்.

கேள்வி : அதன் பின்?

பதில் : அதன்பின் வெள்ளி என்றொரு பல்சுவை விடயங்களை உள்ளடக்கிய சஞ்சிகையை வெளியிட்டேன். இது இந்தியாவின் ‘கல்கண்டை’ மனதில் கொண்டு வெளியிடப்பட்டது. 20 இதழ்களளவில் வெளிவந்தது. 

அதற்குப் பிறகு புதினம் வார இதழை வெளியிட்டேன். அது நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டது. அதற்கென்று அந்தக் காலத்தில் பத்தாயிரம் ரூபாவை பேரேட்டில் ஒதுக்கியிருந்தேன். தாழையடி சபாரத்தினம் அதன் ஆசிரியராக இருந்தார். கிழமை தவறாது சனிக்கிழமையன்று இதழ் வெளிவரும். விநியோகம் எல்லாமே சிறப்பாக நடந்தது. இரண்டு வருடங்கள் வெளிவந்தது. விளம்பரம் கிடைக்காததால் அதுவும் நின்று போனது.

பின்னர் 1992இல் மாணவர்களின் பொதுஅறிவை வளர்க்கும் முகமாக அறிவுக் களஞ்சியத்தை வெளியிட்டேன். 37 இதழ்கள் வெளிவந்தன. இதற்கு நல்ல வரவேற்பிருந்தது. இதனால் நான் நட்டமடையவில்லை. ஆனால் 1995 இடப்பெயர்வு ஏற்பட்டதோடு நின்று போனது. இப்போதுகூட பொருத்தமானவர்கள் கிடைத்தால் அறிவுக்களஞ்சியத்தை வெளியிடலாம் என்றொரு ஆசையுண்டு. இளம் பிள்ளைகளின் மனதைப் பண்படுத்தக்கூடிய விடயங்களைக் கொடுக்கவே எனக்கு விருப்பம். அது எனக்கு ஆத்ம திருப்தியைத் தரும் எனக் கருதுகிறேன். இதனால் நட்டமடைந்தாலும் பரவாயில்லை.

கேள்வி : உங்களது சிறுகதைகளில் ‘கற்பு’ சிலாகித்துப் பேசப்படுகிறது. உங்களது சிறப்பான படைப்பு என நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? 

பதில் : எனது கதைகள் நல்லதென நான் கருதிய பின்பே வெளியீட்டுக்குக் கொடுக்கப்பட்டவை. கற்பு சிறுகதையின் கருத்து வித்தியாசமானதாக இருந்தமை பேசப்பட ஒரு காரணம். ஆனால் அதைவிட சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் நல்ல படைப்பாக கற்பை சொல்லி விட்டனர். எங்களது பழக்கம் ஒருவர் சொன்னதையே வாய்ப்பாடாகச் சொல்வதாகும். ஆனால் கற்புதான் உச்சமென நான் கருதவில்லை. எனது எல்லாப் படைப்புகளும் நல்லதென்றே நான் நினைக்கிறேன். நான் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதாபிமான உணர்ச்சியோடே படைப்புகளை எழுதியிருக்கிறேன்.

கேள்வி : சிறுகதைப் பட்டறிவுக் குறிப்புகளை நீங்கள் நூலாக வெளியிட்டுள்ளீர்கள். தேன்மொழியை வெளியிட்டுள்ளீர்கள். சிறுகதை, கவிதை என்பன எவ்வாறானதாக இருக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?

பதில் : என்னைப் பொறுத்தவரை எந்த இலக்கியப் படைப்புக்கும் வரையறை செய்யக் கூடாது என நினைக்கிறேன். எழுதுபவன் சுதந்திரமாக தனது மனதில் உள்ளதை எழுதட்டும். விமர்சகர்கள் அது நல்லதோ கெட்டதோ எனத் தீர்மானிக்கட்டும். கவிதையைப் பொறுத்தவரை ஓசை என்பது முக்கியந்தான். அதைவிட அது வெளிப்படுத்தும் கருத்தும் முக்கியமானது.

நானும் ஒரு காலத்தில் ஓசைநயமில்லாதவை கவிதை இல்லையென்றே எண்ணினேன். ஆனால் இப்போது மரபுக் கவிதைகளல்லாத புதுக்கவிதைகளில் ஆழமான கருத்துடைய நல்ல கவிதைகளை என்னால் இனங்காண முடிகிறது. கருத்தில்லாத ஓசைநயம் வெறுமையான அலங்காரமாகி விடும்.

கேள்வி : புத்தக வெளியீட்டுத்துறையில் பல சாதனைகளைப் படைத்தவர் நீங்கள். தமிழில் ‘டிரெக்டரி’ ‘ஆண்டுமலர்’ போன்ற மாறுபட்ட பதிப்புகளைச் செய்துள்ளீர்கள். இவ்வாறான வித்தியாசமான எண்ணம் தோன்றக் காரணமென்ன?

பதில் : 1950ஆம் ஆண்டு 80 பக்கங்களில் ‘வரதர் புதுவருஷ மலர்’ என்ற பெயரில் ஒரு மலரை வெளியிட்டேன். இந்த மலர் கலைமகள் ஆண்டு மலர் போன்று வித்தியாசமானதாகவும் கனதியாகவும் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் மலர்களின் தரத்துக்கு நிகராக இங்கேயும் ஒன்றை வெளியிடலாம் என்ற எண்ணத்தாலேயே இம்மலரை வெளியிட்டேன். சோமசுந்தரப் புலவர், எஸ்.டி.சிவநாயகம் உட்பட அக்காலத்தில் எழுதிய முன்னணிப் படைப்பாளிகள் எல்லோருமே இம்மலரில் எதியுள்ளனர். ‘மறுமலர்ச்சி’ நின்ற பின்னர் எனது மனதில் கனன்று கொண்டிருந்த இலக்கிய தாகத்தை இம்மலர் மூலம் தணித்துக் கொண்டேன். மறுமலர்ச்சியினால் கிடைத்த இலக்கியத் தொடர்பும் பதிப்பு அனுபவமும் இம்மலரின் காத்திரத்துக்கு உதவியுள்ளன. 

அதேபோலத்தான் ‘டிரெக்டரியும்’. எதையாவது பார்த்து அது எனக்குப் பிடித்து விட்டால் அதை எப்படியாவது செய்து முடிக்கவே எனக்கு ஆவலாயிருக்கும். அந்தக் காலத்தில் ‘பெர்குசன் டிரெக்டரி’ என்ற ஒன்று வெளிவந்தது. இதனை பிரபலமான லேக்ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது. இதைப் போல தமிழில் ஒன்றை வெளியிட நான் விரும்பினேன். 

அவ்வாறு வெளியிட்ட டிரெக்டரிக்கு ‘வரதர் பலகுறிப்பு’ எனப் பெயரிட்டேன். இதன் தொகுப்பாளராக பிரபல எழுத்தாளர் நா.சோமகாந்தன்(ஈழத்துச் சோமு) இருந்தார். இது ஆண்டுக்கு ஒன்றாக நான்கு ஆண்டுகள் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த முதலாவது டிரெக்டரி இதுதான் என்று கூறுகிறார்கள்.

கேள்வி : மலிவுப் பதிப்புக் கூட வெளியிட்டுள்ளீர்கள் இல்லையா?

பதில் : ஆம்! அந்தக் காலத்தில் பாரதி பாடல்கள் முதலாக நிறைய மலிவுப் பதிப்புகள் தமிழகத்தில் இருந்து வெளிவந்தன. அவ்வாறானதொரு பதிப்பை நாமும் வெளியிட்டாலென்ன என்று எண்ணினேன். திருக்குறள் எல்லோருக்கும் பயன்படுமெனக் கருதி அதனை மலிவுப் பதிப்பாக வெளியிடத் தீர்மானித்தேன். அதற்கு நானே பொழிப்புரை எழுதினேன். 288 பக்கங்களில் அமைந்த இந்நூலில் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டேன். அதன் விலை 65 சதந்தான். இந்நூலுக்கு மாணவர்களிடத்தில் நல்ல வரவேற்பிருந்தது. ஏதோ அப்போது செய்யக் கூடியதாக இருந்தது. வித்தியாசமான பலவற்றைச் செய்தேன். எனினும் விற்பனை ரீதியான இலாபம் அடையக் கூடியதாக இருக்கவில்லை.

கேள்வி : பதிப்புத்துறையில்இ விற்பனையில் சாதனை படைத்த ‘24 மணிநேரத்தையும்’ நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். அது பற்றிக் கூறுங்கள்? 

பதில் : 1981இல் இலங்கை அரச படையினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய அட்டூழியத்தை வெளிப்படுத்தும் நூல் 24 மணிநேரம். இதை நீலவண்ணன் எழுதியிருந்தார். முழு இலங்கையில் கூட இப்படியொரு நூல் சாதனை படைத்திருக்கும் என நான் நினைக்கவில்லை. விற்பனையில் அது ஒரு சாதனைதான்! சம்பவம் நடந்த சிலநாள்களின் பின்னர் யாழ்ப்பாணம் எரியுண்டு போன அவலக் கதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நீலவண்ணன் (செங்கை ஆழியான்) அதுபற்றித் தான் எழுதித் தருவதாகக் கூறினார். அவர் தட்டச்சில் பொறித்து ஒவ்வொரு நாளும் விடயங்களைத் தருவார். படங்களையும் சேகரித்துத் தருவார். நாங்களும் உடனேயே அச்சுக் கோர்ப்போம்.

இந்தப் புத்தகத்தை வித்தியாசமான வடிவமைப்பில் சிறப்பானதாகச் செய்ய வேண்டுமென அதிக கரிசனை எடுத்தோம். புத்தகமும் நன்றாக – நேர்த்தியாக - வந்தது. நடந்து முடிந்த பிரச்சினைகளோடு சிறிது காலமாக எந்தவொரு பொது நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. நாம் முதல்முறையாக இந்நூலுக்கான வெளியீட்டு விழாவை பெரிதாக நடத்த யோசித்தோம். இதற்கென வீரசிங்கம் மண்டபத்தைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்தோம். யாரைப் பேச்சாளர்களாகப் பிடிப்பது என்று யோசித்தோம். அப்போது கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் பொதுவுடமைத் தலைவர் வி.பொன்னம்பலமும் என்னுடன் நெருங்கிப் பழகியவர்கள். நான் எந்தக் கட்சியிலும் இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களில் ஒருவனாக இருந்துள்ளேன்.அவ்வளவுதான்!

இருவரிடமும் நானே நேரில் போனேன். எனது விருப்பத்தைச் சொன்னதும் அவர்கள் சந்தோசமடைந்து சம்மதித்தனர். ஏனென்றால் அவர்களுக்குப் பேசுவதற்கு – அரசுப் படைகளின் செயலைக் கண்டித்துப் பேசுவதற்கு – மேடை வாய்ப்புக் கிடைக்காதிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அதைப் பற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. 

வீரகேசரியில் பெரிய விளம்பரங்கள் போட்டோம். சினிமா போஸ்டர்கள் போல் சுவரொட்டிகள் ஒட்டினோம். அப்படி ஒரு புத்தகத்துக்கு விளம்பரம் யாரும் இங்கு செய்யவில்லை. பெரிய ஏற்பாடுகளோடு பெரிதாகச் செய்ய வேண்டுமென்று நினைத்து நான் அதைச் செய்தேன்.

அப்போது எழுதுவதென்பதே பிரச்சினையான நிலை. வி.பொன்னம்பலம் அச்சுக்கூடத்திலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்து வேறெங்காவது வைக்குமாறு ஆலோசனை கூறினார். புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டாலும் என்ற பயம். நூல் தொடர்பாக ஏதும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பயமும் வி.பொன்னம்பலம் உட்பட பலரிடமும் இருந்தது.

“சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதபடிதான் நீலவண்ணன் எழுதியுள்ளார். அப்படியேதும் ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுப் பிரச்சினைகளை எதிர்கொள்வேன்” என்று அவர்களிடம் சொன்னேன்.

வெளியீட்டு விழாவுக்கு இரு தலைவர்களும் வந்திருந்தனர். வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வெளியிலெல்லாம் சனக்கூட்டமாயிருந்தது. முதல்பிரதி வாங்கியவர் ராஜா தியேட்டர் அதிபர் தியாகராசா. அவரிடம் நூலின் பெறுமதியை மட்டும் கொடுத்தால் போதும் எனக் கூறியிருந்தேன். புத்தகங்களை விற்பதற்காக வெளியில் வைத்திருந்தோம். பதினைந்து இருபது புத்தகங்கள் விற்றிருக்குமோ தெரியாது. எமக்கு ஏமாற்றந்தான். ஏதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

அடுத்தநாள் காலையில் கடையைத் திறக்கிறோம். கியூவில் நிற்பது போல் பெருமளவு கூட்டம். சாதாரணமாக ஆயிரம் பிரதிகளே அச்சடிப்போம். இந்நூலில் இரண்டாயிரத்து ஐநூறு பிரதிகள் அச்சிட்டோம். ஒரு கிழமையில் பெருமளவு விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தது. 

உடனே இரண்டாம் பதிப்பை அச்சிட்டோம். அதுவும் விரைவாக விற்றுத் தீர்ந்தது. மூன்றாம் பதிப்பையும் வெளியிட முயன்றோம். பின்னர் விடுபட்டுப் போயிற்று.

கேள்வி : இப்போது உங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள், கௌரவங்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்? 

பதில் : அந்த நேரத்தில் எனது மனவுணர்வுக்கேற்ப எழுதினேன். நூல்களை வெளியிட்டேன். அப்போது பாராட்டுகள் கிடைத்தனதான்! ஆனால் இப்போது அவை பெறுமதியானதாக உணரப்படுவதை, மதிக்கப்படுவதை, பாராட்டப்படுவதை எண்ணும் போது நானும் ஏதோ செய்தேன் என்று பெருமையாக இருக்கிறது. அப்போது நான் அடைந்த நஷ்டங்கள், பட்ட கஷ்டங்கள் எல்லாம் பரவாயில்லைப் போலிருக்கிறது.

கேள்வி : உங்களுக்குக் கிடைத்த கௌரவங்கள் எவை?

வரதர் வரைந்த ஓவியம்

பதில் : இப்போது எனது வாழ்நாள் இலக்கிய சேவைக்காக ‘சாஹித்ய ரத்னா’ என்ற இலங்கை அரசின் உயர்ந்த விருதினையும் பணமுடிப்பினையும் தந்துள்ளார்கள். அதேபோல வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருதும் கிடைத்துள்ளது. அகில இலங்கை கம்பன் கழகம் மூதறிஞர் விருது வழங்கியுள்ளது. மறைந்த சொக்கன், வித்துவான் பொன்.முத்துக்குமரன், உயர்நீதிமன்ற நீதியரசர் எச்.டபிள்யூ. தம்பையா ஆகியோர் ஆரம்பத்தில் ஒரு கம்பன் கழகத்தை வைத்திருந்தனர். அக்கழகம் எனக்கு தமிழ் புரவலர் என்ற பட்டத்தை வழங்கியிருந்தது. ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த பெறுமதி வாய்ந்த பட்டம் இதுவெனலாம். வேறும் பல கிடைத்தன. ஞாபகத்துக்கு வரவில்லை.

கேள்வி : அண்மைக்கால படைப்புகள், படைப்பாளிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன?


பதில் : அது பற்றிய எனது அவதானம் போதாதென்றே நினைக்கிறேன். பலவற்றை நான் பார்க்கவில்லை. பார்ப்பவை கூட அந்தநேரத்து ஆசையைப் பூர்த்தி செய்வனவாகவே உள்ளன. இன்று படிப்பது நாளை மறந்து போய் விடுகிறது. பொதுவாகப் பார்த்தால் எங்கள் காலத்தை விட நன்றாக எழுதுகிறார்கள் இளம்பிள்ளைகள். ஆனால் இலக்கியத்தில் இளம் பிள்ளைகளது ஆர்வம், ஈடுபாடு எங்கள் காலத்தைப் போல் இப்போது இல்லை என்பதே எனது கணிப்பாகும்.

கேள்வி : சமகால யுகபுருஷர், ஆளுமையென யாரைக் கருதுகிறீர்கள்?

பதில் : நான் புதுமைப்பித்தனை வியந்திருக்கிறேன். கல்கியின் படைப்புகளைப் பெரிதாக எண்ணியிருக்கிறேன். இப்போது சொல்ல வேண்டுமானால் தலைவர் பிரபாகரனைத்தான் நான் வியப்போடு- ஆச்சரியத்தோடு- அதேவேளை விருப்பத்தோடு பார்க்கிறேன். அவர் அதிகம் படித்தவரோ, செல்வந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவரோ அல்லர். ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இவ்வளவு சாதனைகளைப் படைத்துள்ளார். அவரது ஒழுக்கமான வாழ்வை அறிந்த போது பெருமையாக இருக்கிறது. அவர் ஒரு யுகபுருஷர் என்பதில் சந்தேகமில்லை. அவரது வரலாறு இளம் பிள்ளைகளுக்குப் பயன்படும் விதத்தில் வழங்கப்பட வேண்டும் என்பது எனது அவா. அதை யாராவது செய்தால் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

கேள்வி : 80 வயதை நிறைவு செய்துள்ளீர்கள். இவ்வளவு காலம் தேகாரோக்கியத்துடன் வாழ்வதற்கு காரணமேதுமுண்டா? 

பதில் : எனது இளமைக்காலம் முதல் எனது வாழ்க்கை ஓர் ஒழுங்குக்குட்பட்டது. நான் எனது உடம்பை நல்ல மாதிரி பராமரித்து வந்துள்ளேன். அதுபோல மனத்தையும் பேணி வந்துள்ளேன். எந்த நெருக்கடியையும் பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. யாருடனும் பகைமை பாராட்டுவதுமில்லை. அதைவிட எனது பரம்பரை மரபணு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் என்னுடன் வாழ்ந்தவர்கள் என்னைப் போல சைவ போசனத்துடன் இருந்தவர்களோ,


மாமிச உணவு உண்டவர்களோ இன்றில்லை.









உதயன் 27-02-2005, 06-03-2005










Tuesday, August 13, 2024

சத்தியசோதனை : 40 வருடங்களின் பின் மேடையேற்றம்

சத்தியசோதனை : 40 வருடங்களின் பின் மேடையேற்றம்

இயல்வாணன்




பேராசிரியர் சி.ஜெய்சங்கரின் நெறியாள்கையில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களின் சத்தியசோதனை நாடகம் கடந்த வாரத்தில் 25ஆம், 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் 6 தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டது. கொக்குவில் தேசிய கலை இலக்கிய பேரவையிலும், திருமறைக்கலா மன்றத்திலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரி(இரு தடவை), சுண்டிக்குளி மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் இந்நாடக ஆற்றுகை நடைபெற்றது.

1984ஆம் ஆண்டளவில் குழந்தை ம.சண்முகலிங்கத்தால் எழுதப்பட்ட இந்நாடகம் அப்போது கலாநிதி க.சிதம்பரநாதனது நெறியாள்கையில் பல அரங்குகள் கண்டிருந்தது. 40 வருடங்கள் கழித்து இந்நாடகம் மீண்டும் மேடையேற்றப்பட்டுள்ளமை முக்கியமானதாகும். இந்த நாடகம் நடைமுறைக் கல்வி தொடர்பான விமர்சனங்களை முன்வைத்து கேள்வி எழுப்புவதுடன் பொருத்தமான கல்விமுறையின் இன்றியமையாமை தொடர்பில் சிந்தனைத் தூண்டலை ஏற்படுத்துவதாக ஆக்கப்பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கல்வி தொடர்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டனவோ அவையெல்லாம் இன்றும் பேசப்படுகின்ற, மேலும் மோசமாகச் சீரழிந்திருக்கிற நிலையை இந்த நாடகத்தைப் பார்ப்பவர்கள் உணரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒருவரே கல்வியில் உயர்நிலையை அடைய முடியும். போட்டி போட்டுப் படிக்கின்ற நிலையை, அந்தப் போட்டியில் சிலர் வெல்ல ஏனையவர்கள் வெளிவீசப்படுகின்ற நிலையை, படித்த படிப்புக்கும் கிடைக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாத நிலையை இந்நாடகம் பேசுகிறது. பாடசாலைப் படிப்புக்கு மேலாக ரியூசன் என்று பிள்ளைகளை வருத்துகின்ற, அவர்களில் அதிக சுமையை ஏற்றுகின்ற கல்விமுறையை, எமது மக்களின் மனப்பாங்கையெல்லாம் இந்நாடகம் கேள்விக்கு உட்படுத்துகின்றது. இவையெல்லாம் அச்சொட்டாக இன்றும் பொருந்துகிறது. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் தீர்க்கதரிசனமான சிந்தனையை இந்நாடகம் இன்றளவும் கடத்தி வந்துள்ளது என இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நாடகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவிகளே முழுமையாக நடித்திருந்தனர். சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாக முன்வைத்திருந்தார்கள். அத்துடன் வழக்கமான இசைக்கருவிகளின் பயன்பாடு இல்லாமல் தடி, சப்பளாக்கட்டை, கிறிச்சான் முதலான எளிமையான கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆற்றுகையை அவர்கள் செய்திருந்தமை சிறப்பானது. தேசிய கலை இலக்கியப் பேரவையில் நாற்சார் முற்றத்திலேயே ஆற்றுகை இடம்பெற்றது. சூழலுக்கேற்ப செயற்படக்கூடிய வகையில் தாமே பாடி ஆடி நடித்தமையும் சிறப்பானது.

இலங்கை அரசாங்கம் கல்வியில் புதிய சீர்திருத்தம் ஒன்றினை நடைமுறைப்படுத்த முனையும் இச்சந்தர்ப்பத்தில் இந்நாடகமும் கல்வியில் மாற்றந் தேவை என வலியுறுத்துவது முக்கிமானது. பேராசிரியர் சி.ஜெய்சங்கர் சமூக மாற்றந் தொடர்பிலும், சூழலியல் தொடர்பிலும், பாரம்பரிய கலைகளின் மீளுருவாக்கம் தொடர்பிலும் தொடர்ந்து குரல் கொடுத்தும் செயலாற்றியும் வரும் ஒருவர். அவரது நெறியாள்கையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவியர் 40 வருடங்கள் கடந்த ஒரு நாடகத்தை மீண்டும் மேடையேற்றியிருப்பதும், ஒரு சிந்தனைக் கிளறலைச் செய்திருப்பதும் முக்கியமானது.

உதயன் புதன்பொய்கை 01-05-2024

 

மு.தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம்

 மு.தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம்

-இயல்வாணன்

தமிழில் சூழலியல் குறித்த கவனமும், அது தொடர்பான ஆக்கங்களும் குறைவு. ஆயினும் காலத்துக்குக் காலம் பலரும் சூழல் கேடுறுத்தப்படுவது குறித்து எழுதி வந்திருக்கிறார்கள். ஊற்று, ஆதாரம், நங்கூரம் என்று எமது சுற்றுச் சூழலை முக்கியப்படுத்தி பல சஞ்சிகைகளும் வெளிவந்திருக்கின்றன. மில்க்வைற் கனகராஜா ஒரு காலத்தில் தனி மனிதனாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும், மரங்களை நடும் செயற்பாட்டையும் மேற்கொண்டார். நெல்லியடி மா.கனகராஜா வல்லைவெளியில் மரநடுகையைச் செய்தார். பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்  பரந்தளவில் இப்பணியைச் செய்தது. 





சுற்றுச்சூழல் அக்கறையுடன் தொடர்ந்து பயணிப்பவர் பொ.ஐங்கரநேசன். அவருடைய சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகள் முக்கியமானவை. அவை ஏழாவது ஊழி என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இத்தகைய பணியில் ஈடுபட்டிருப்பவர் மு.தமிழ்ச்செல்வன்.

மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மாவட்டத்தின் காடுகள் சூழ்ந்ததும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஊற்றுப்புலம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இயற்கையின் சீதளத்தை அளைந்து வளர்ந்தவர். பசிய மரங்களும், பறவைகளும், விலங்குகளும் கொண்ட இயற்கையில் ஊறித் திளைத்த அவரது வாழ்க்கை யுத்தத்தின் பின்னர் - அந்த அழகிய வாழ்க்கை- மெல்ல மெல்லச் சிதைவுறுதலைக் கண்டு அலைவுற்றவர்.

ஒரு ஊடகவியலாளனாக, ஒளிப்படக் கலைஞராக, பத்தி எழுத்தாளனாக, சமூக நோக்குடையவராக பலநிலைகளில் அவர் படிமலர்ச்சி கண்டாலும் இயற்கையுடன் இயைந்த வாழ்வின் சிதைவு அவரைப் பாதித்தே வந்துள்ளது. அதனால்தான் சமூகவியல், அரசியல் சார்ந்து அவர் எழுதியுள்ள போதும் சூழலியல் குறித்த அவரது எழுத்துகள் அழுத்தமானவையாக அமைந்துள்ளன.  அவற்றை யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஈழநாதத்தில் எழுதியதில் இருந்து அவ்வப்போது கட்டுரைகளாக எழுதி வந்துள்ளார். ஒளிபடங்களாகவும் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளார்.

இவற்றை நஞ்சாகும் நிலம் என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய இக்கட்டுரைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் சூழலியல் அச்சுறுத்தல்கள், பாதிப்புகள், இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்பவற்றை விளக்குவனவாக எழுதப்பட்டுள்ளன. சூழலியல் பாதிப்புகள்  எங்கோ ஓரிடத்தில் நடந்தாலும் அது ஒட்டுமொத்த பூமியையும் பாதிக்கும் என்பதை தமிழ்ச்செல்வன்  இந்தக் கட்டுரைகள் ஊடாக அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.

இந்த நூலுக்கு மூத்த எழுத்தாளர் கருணாகரன் அறிமுகத்தை எழுதியுள்ளார். வாழ்த்துரையை வண.பிதா யோசுவா அடிகளார் வழங்கியுள்ளார். எழுத்தாளர் நிலாந்தன் முன்னுரை எழுதியுள்ளார். இவற்றில் தமிழ்ச்செல்வனின் பன்முகப் பரிமாணங்களை அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

முதலாவது கட்டுரை வன்னியின் வனாந்தரங்களைப் பாதுகாக்கத் தவறின் வாழ்விழந்து போவோம் என்பதை சொல்கிறது. தொடர்ந்து நடைபெறும் காடழிப்பு, காட்டின் ஆதாரமான கிரவல் மண்ணகழ்வு என்பவற்றால் மாரிமழை குறைவடைவது, வரட்சி, வன்னியின் கிணறுகள் வற்றுதல், அதனால் எழும் மனிதாயப் பிரச்சினைகளை இக்கட்டுரை பேசுகின்றது. இந்தக் கபளீகரங்களைப் பார்த்துக் கொண்டிருப்போரை, அதிகாரிகளை இக்கட்டுரை கண்டிக்கிறது. சூழலியல் பிரச்சினைகளுக்கான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது. 

‘சாதாரணமாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியில் நிலத்தடி நீர்மட்டம் 20 முதல் 40 அடி வரை காணப்பட்டது. இன்றோ 100 முதல் 150 அடிகளுக்குக் கீழ் போய் விட்டது’ என்று அவர் சொல்வதில் இருந்து இதன் விபரீதத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். கிளிநொச்சி காடுகள் சூழ்ந்த  பிரதேசமாக இருப்பினும் காடழிப்பினால் கடும் வெப்பம் நிலவும் சூழல் இருப்பதற்குக் காரணம் தோலிருக்க சுளை விழுங்கிய கதைதான். வன்னியின் வீதியோரங்களை அண்டி மரங்கள் நெருக்கமாக காடாக உள்ளன. உள்ளே சென்றால் மரங்கள் தறிக்கப்பட்டு, கிரவல்கள் அகழப்பட்டு வெட்டவெளியாக காட்சி தருகின்றது என்பதை அவர் சொல்லும் போது வெம்மையை உணர வைக்கிறது.

மறுபுறத்தில் குளங்கள் காணாமல் போகின்ற அபாயத்தை இவரது கட்டுரைகள் பேசுகின்றன. காணாமல் போன குஞ்சுக்குளம் என்ற கட்டுரையில் வன்னேரியை அடுத்து மக்கள் வாழ்ந்த குஞ்சுக்குளம் பிரதேசம் உவர்நீராக மாறியமையால் அந்தப் பிரதேசத்தை விட்டு மக்கள் மெல்ல மெல்ல வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்த கதையைப் பேசுகிறது. மண்டைக்கல்லாறில் அணை கட்டப்படாததால் கடல்நீர் புகுந்து நன்னீர்க் குளத்தை உவர் நீராக்கி விட்டது. ஆயிரம் ஏக்கர் பயிர் செய்யப்பட்ட நிலத்தில் இன்று வெறும் 25 ஏக்கரில் பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. இதுவும் இல்லாமல் போகலாம் என்பது எவ்வளவு துயரமானது!

இன்று சுருங்கி வருகின்ற, ஒருநாள் காணாமல் போகப் போகின்ற கிளிநொச்சிக் குளத்தைப் பற்றிய கட்டுரையும் முக்கியமானது. கனகாம்பிகைக் குளத்தின் உபரி நீர் ரை ஆறாக வந்தும், இரணைமடுக் குளத்தின் இடதுகரை வாய்க்கால்  மூலமும் நீரைப் பெறும் இக்குளம் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் நீரேந்து பிரதேசங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு, சூழல் கேடுறுத்தப்படுவது ஒரு புறம். சட்டவிரோதமாக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு மண் நிரவப்பட்டு குடிமனைகள் உருவாக்கப்படுகின்றமை மறுபுறம். அரசியல் மற்றும் அதிகாரத் தரப்புகள் இதற்கு மறைமுகமாக ஒத்துழைக்கின்றன. வடிவேல் பாணியில் குளத்தைக் காணவில்லை என்று சொல்லும் நிலை வரும் என்பதை தமிழ்ச்செல்வன் இக்கட்டுரையில் கோடிகாட்டுகிறார்.

வடக்கின் பெரிய குளமான இரணைமடுக் குளத்தின் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்க வேண்டும் என்ற கட்டுரை இரணைமடுக் குளத்தின் வரலாற்றைச் சொல்வதுடன் தற்போது 7ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் பயன்பெறுவதை வெளிப்படுத்துகிறது. யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்குவதன் பொருட்டு இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டு, அணை உயர்த்தப்பட்டது. தற்போது பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்கப்படுவது குறித்துச் சிந்திப்பதால் அந்த நீரை மேற்குப்புற கிராமங்களின் விவசாயத் தேவைக்குப் பயன்படுத்தப்படலாம் என காவேரி கலாமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயத்தை அவர் முன்வைக்கிறார். அத்துடன் விவசாயிகள் யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை வழங்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பான தனது விமர்சனத்தையும் அறிவுபூர்வமாக முன்வைக்கிறார்.

இவ்வாறே குழாய்க்கிணறுகள் : நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் என்ற கட்டுரையில் ஆழமாக அமைக்கப்படும் குழாய்க் கிணறுகள் நிலத்தை உவரடையச் செய்யும் ஆபத்தை வெளிப்படுத்துகிறார். அவ்வாறே மூன்றாம் உலகப் போர்  தண்ணீருக்கான யுத்தமாக அமையும் என்பதை உலகளாவிய அனுபவங்களோடு ஒரு கட்டுரையில் முன்வைக்கிறார். இன்னொரு கட்டுரையில் இரசாயன உரம், மருந்துப் பாவனை காரணமாக நிலம் நஞ்சாவதை புள்ளிவிபர ஆதாரங்களோடு முன்வைக்கிறார். கண்டல் தாவரங்களின் அழிவு சூழல் சமநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பு, மர நடுகையின் அவசியம், பாலியாற்றுப் புனரமைப்பின் உள்ளடக்கம், கௌதாரிமுனை மணல் அகழ்வால் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட பல விடயங்களை இவரது கட்டுரைகள் பேசுகின்றன.

சுற்றுச்சூழல் குறித்த கூருணர்வு உடையவர்களால்தான் இத்தகைய கட்டுரைகளை எழுத முடீயும். எழுதுவது மட்டுமல்ல மணல் மாபியாக்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களுக்கு உதவும் அதிகாரத்தரப்புகளையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தும் வருகிறார். கருணாகரன் சொல்வது போல சூழலியல் பற்றிப் பேசுவது அதிகாரத் தரப்புக்களின் பகையைத் தேடுவது என்ற அச்சத்தில் பலருமிருக்க தமிழ்ச்செல்வன் ஆபத்துகளை எதிர்கொண்டு சுற்றுச்சூழலுக்காகக் குரல்கொடுப்பது பெரிய பணி.

03-03-2024 வீரகேசரி


Thursday, August 8, 2024

வடமயிலை சங்குவத்தை மாணிக்கப் பிள்ளையார் திருவூஞ்சல்

 வடமயிலை சங்குவத்தை மாணிக்கப் பிள்ளையார்

திருவூஞ்சல்

எச்சரீக்கை-பராக்கு-லாலி-மங்களம்

                                       பாடலாக்கம் : சு.ஸ்ரீகுமரன் (இயல்வாணன்)

காப்பு

திரைபூத்த கட லொலிக்கும் வடமயிலை

சிறந்திடுநற் சங்கு வத்தை ஊருறைந்த

கரிமுகத் தோன் மாணிக்கப் பிள்ளையின்மேல்

காரனைய ஊஞ்சலிசை யினிது பாட

நிரைசேர்ந்து மீனினங்கள் இசை பொழியும்

நித்திலத்தில் ஊர்செழித்து மேன்மை பெறும்

கரையமர்ந்து அருளுகின்ற கண பதியின்

கவினுறுநற் பதமலர்கள் காப்ப தாமே.


நூல்

1

திடவேத நான்மறைகள் கால்க ளாக

திகழுசிவ ஆகமமே வளைய தாக

நடமிடு நாற்கரணமதே கயிற தாக

நலமிகு மெஞ்ஞானமதே பலகையாக

புடமிடு பொற்பதும பீட மேறி

புவிமிசை மாந்தருய்ய அருளும் பிள்ளை

வடமயிலை வாழ்பவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

2

மருங்கதலிக் குலையாளி நிரைகள் நாட்ட

மாவிலையுந் தோரணமும் கரைகள் பூட்ட

பெருந்தெங்கு ஓலையதே கூரை மூட்ட

பேரழகுப் பூக்கள் வெளிவண்ணம் சூட்ட

அருந்துவார பாலகர்போல் இளநீர் காட்ட

அமைத்தமண் டபத்தே அமர்ந்து ஆடும்

தருவமர்ந்த கணபதியே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

3

வெண்சங்க மொலித்தோங்க விரி கடலின்

விளங்குதிரை ஆர்ப்பரித்துப் பூக்கள் தூவும்

பண்கொண்டு மீனினங்கள் பாவே யோதும்

பாலமுதம் ஆவினங்கள் சொரிந்து போற்றும்

விண்ணின்று வெள்ளிகளும் நிலவும் சேர்ந்து

விளக்கனைய தண்ணொளியை நன்றே பாய்ச்சும்

கண்கண்ட தெய்வமே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

4

அலைகடலின் அருகேநற் கோவில் கொள்ள

ஆசாரி லாடசங்கிலித் தவண்டை என்னும்

விலைமதியா விற்பன்னர் சிற்பம் செய்யும்

விஸ்வகர்மா வின்கனவில் தோன்றி அருளி

கலைமலிந்த வடமயிலை வந்தமர்ந் தார்

காலமெலாம் சந்ததிகள் பூசை செய்ய

தலமமர்ந்த ஐங்கரனே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

5

மஞ்சளையும் பொன்பொதிந்த மகுட மாட

மாசெவியில் இழைந்தமணிக் குழைக ளாட

நெஞ்சணிந்த வைரமணித் தாரு மாட

நேரிழையார் சித்திபுத்தி சேர்ந்தே யாட

கஞ்சமலர்ப் பொற்கரத்து அணிக ளாட

காலாடப் பேழைவயிற் றுடம்பு மாட

தஞ்சமடைந் தவர்க்கருள்வாய்! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

6

சங்கரனும் சாம்பவியும் வடந்தொட் டாட்ட

சார்ந்தமர்ந்த சண்முகனும் வடந்தொட் டாட்ட

பொங்கரவில் வாழ்மாலும் வடந்தொட் டாட்ட

போதரிய கண்ணகையும் பேச்சி யம்மன்

தங்குமுனி யப்பருமே வடந்தொட் டாட்ட

தலமமர்ந்த வைரவரும் வடந்தொட் டாட்ட

துங்ககரி முகத்தவனே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

7

வேதியர்கள் நான்மறையும் விதந்தே யோத

வெய்யடியார் பண்ணுடனே பனுவல் பாட

ஊதியவெண் சங்குமணி சேமக் கலமும்

உரத்தொலியை எழுப்பிடவே சுற்று முற்றும்

சோதியென வொளிர்கின்ற தூப தீபம்

சொர்க்கமெனத் தோற்று மெழிற் சோடனையும்

தோதிருக்க அமர்ந்தவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

8

முக்கனியுங் கற்கண்டும் பொங்க லொடு 

மோதகமும் தெங்கிளநீர் பால் தயிரும்

தக்கபல காரமொடு எள் பயறு

தந்தினிய படையலுடன் பக்தர் பரவி

வித்தகனாய் வீற்றிருந்து அருள் பொழியும்

விநாயகனே! உன்னடியைச் சரண் புகுந்தார்.

சக்திமிகக் கொண்டவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

9

ஏந்திழையார் இருமருங்கும் கவரி வீச

ஏற்றடியார் கொடிகுடையும் ஆலவட்டம்

தாங்கியுனை மனமொழியால் துதித்துப் பாட

தேவர்களும் வானிருந்து வாழ்த்திப் பேச

பூந்துணரைப் பெய்துபொழில் வாசம் நாற

பொன்மயிலும் தோகைவிரித் தாட்டம் போட

சங்குவத்தை அமர்ந்தவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

10

வாழ்வளித்துக் காப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

வரமனைத்தும் அருள்பவரே! ஆடீர் ஊஞ்சல்

ஏழுலகும் உதரங் கொண்டீர்! ஆடீர் ஊஞ்சல்

எண்குணமு முடையவரே! ஆடீர் ஊஞ்சல்

ஊழ்வினையை ஒழிப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

உள்மலத்தை அழிப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

தொல்மயிலை வாழ்பவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்


வாழி

கார்பொழிந்து புவனமெல்லாம் செழித்து வாழி!

காராளர் விஸ்வகர்ம குலமும் வாழி!

பார்சிறந்து வடமயிலை ஊரும் வாழி!

பரவியெங்கும் வாழுமன்புப் பக்தர் வாழி!

தேர்செய்யும் சிற்பவன்மை சிறந்து வாழி!

தேவமொழி யந்தணரும் குடியும் வாழி!

பேர்கொண்டு சங்குவத்தைக் கோவில் வாழி!

பெருமைமிகு பிள்ளையாரின் புகழும் வாழி!


எச்சரீக்கை

உமைபாலனே! சிவமைந்தனே! தேவா! எச்சரீக்கை

உளமுருகுவோர் வளம்பெருக்கிடு நாதா! எச்சரீக்கை

தமைவணங்குவோர் தடையகற்றிடு செல்வா! எச்சரீக்கை

தரணீதரா! திரியம்பகா! குருவே!  எச்சரீக்கை


சங்குவத்தையில் வந்துதித்தநற் சீலா! எச்சரீக்கை

சந்ததம்அருள் தந்திடும்எழில் பாலா! எச்சரீக்கை

மங்கைமாதேவி தந்தமாகரி முகனே! எச்சரீக்கை

மன்றிலாடிய தொந்திமாமயூ ரேசா! எச்சரீக்கை


பராக்கு

கந்தனுடன் பிறந்தகரி முகனே! பராக்கு

கணபதியே! உமைமகனே! கஜனே! பராக்கு

மும்மைமல மறுக்குமேக தந்தா! பராக்கு

மூசிகத்தி லமர்ந்தருளும் விக்னா! பராக்கு


தந்தைதாய் உலகென்ற தரணீ! பராக்கு

தவஞானப் பழம்பெற்ற தரனே! பராக்கு

பந்தவினை நீக்குவக்ர துண்டா! பராக்கு

பரவுமடி யார்க்குதவும் பரனே! பராக்கு


லாலி

வடமயிலை வாழ்பவர்க்கு லாலி சுப லாலி

வடைமோதகப் பிரியருக்கு லாலி சுப லாலி

தடையகற்றும் கணபதிக்கு லாலி சுப லாலி

தகையனைத்தும் தருபவர்க்கு லாலி சுப லாலி

நடமிடுமுக் கண்ணனுக்கு லாலி சுப லாலி

நல்லருள்விக் னேஸ்வரர்க்கு லாலி சுப லாலி

திடமருப் பொடித்தவர்க்கு லாலி சுப லாலி

திகழ்பாரதம் எழுதினர்க்கு லாலி சுப லாலி


மங்களம்

பல்லவி

மாணிக்கப் பிள்ளையார்க்கு ஜெயமங்களம் - என்றும்

ஆனைமுகக் கடவுளுக்கு சுபமங்களம்

சரணம்

சீருயர்ந்த வடமயிலை

 திகழ்சங்கு வத்தைக்கும்

பெருமான் நட ராஜருக்கும்

 பெம்மையுமை அம்பிகைக்கும்

தாருடைய வேலனுக்கும்

 தங்குமுனி யப்பருக்கும்

பீடறுக்கும் வைரவர்க்கும்

 பிரானடியார் யாவருக்கும் (மாணிக்க)


மங்களம் ஜெய மங்களம்

மங்களம் சுப மங்களம்