நேர்காணல் : பண்டிதர் க.சச்சிதானந்தன்
நேர்கண்டவர் : இயல்வாணன்
கேள்வி : நீங்கள் மும்மொழிப் புலமை மிக்கவர்.கவிஞர், எழுத்தாளர், வானியல் வல்லுநர், ஓவியர், கல்வி உளவியலாளர். இவ்வாறு பல்துறை மேதைமை மிக்க உங்களது பிறப்பு, குடும்பம் மற்றும் வாழ்க்கைப் பின்புலத்தை அறிய விரும்புகிறோம்.
பதில் : நான் 1921ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 19ஆந் திகதி மாவிட்டபுரத்தில் பிறந்தேன். என்னுடைய தாயார் தெய்வானைப்பிள்ளை. தந்தையார் கணபதிப்பிள்ளை. என்னுடன் கூடப் பிறந்த ஒரே சகோதரி ஈஸ்வரியம்மா. இதுதான் எங்களது குடும்பம்.
எனது தந்தையார் பஞ்சாங்க கணிதராகஇ வானியல் சோதிட வல்லுநராக விளங்கினார். எழு பரம்பரையாக அவரது மூத்த தலைமுறையினர் பஞ்சாங்க கணிதர்களாக இருந்து வந்துள்ளனர். அப்படியே நானும் கணித்து வருகிறேன்.
ஆரம்பக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியில் பெற்றேன். பருத்தித்துறையில் தந்தையார் இருந்த போது ஹாட்லிக் கல்லூரியில் பயின்றேன். பின்பு மாவிட்டபுரத்தில் இருந்த போது திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் (இப்போதய பல்கலைக்கழகம்) பயின்றேன். புகையிரதம் மூலமாகவே அப்போது பாடசாலைக்கு வந்து போவேன். இந்த மூன்று கல்லூரிகளுமே எனது கல்வியில் பிரதானமான பங்கு வகித்தவை.
கேள்வி : அதன்பின் பண்டிதர் படிப்பை இந்தியாவில் மேற்கொண்டீர்களா?
பதில் : பரமேஸ்ராக் கல்லூரியில் படிக்கும் போது வித்துவான் கார்த்திகேசபிள்ளைஇ நவநீத கிருஸ்ண பாரதியார்இ சு.நடேசபிள்ளை ஆகியோரிடம் கற்று அங்கிருந்து கொண்டே 1941ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றினேன். அப்போது இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து தோற்றியவர்களுள் நானே முதலாவதாகச் சித்தியடைந்தேன். இதுபற்றி இந்துசாதனம் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏக காலத்தில் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் படித்தேன். லண்டன் பீ.ஏ. பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தேன்.
கேள்வி : சமஸ்கிருதம் படித்ததாகக் கூறுகிறீர்கள். அதை யாரிடம் படித்தீர்கள்?
பதில் : நான் அந்தணர்களிடமே சமஸ்கிருதம் படித்தேன். சிவப்பிரகாச தேசிகரிடம் முதலில் சமஸ்கிருதம் படித்தேன். பின்னர் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடம் பயின்றேன். மாவிட்டபுரம் பாலசுந்தரக் குருக்கள்இ இராம ஐயர் ஆகியோரிடமும் பயின்று சமஸ்கிருதத்தில் புலமை பெற்றேன்.
நான் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடம் படித்த போது நடந்த சம்பவம் என் மனதில் நீங்காதுள்ளது. சாஸ்திரிகள் எல்லோருக்கும் வேதம் படிப்பித்துக் கொண்டிருந்தார். அப்போது என்னைப் பார்த்து “நீ சூத்திரன். நீ வேதம் படிக்கக் கூடாது. நீ அங்காலை திண்ணையிலை போய் இரு” என்று கட்டளையிட்டார். நானும் அவ்வாறே வெளித் திண்ணையில் அமர்ந்துஇ அவர் பிராமண மாணவர்களுக்குச் சொல்லித் தருவதை செவி வழியாகக் கேட்டு அறிவு பெற்றேன்.
கேள்வி : அப்படியானால் ஒரு ஏகலைவனாக இருந்துள்ளீர்கள்.இல்லையா?
பதில் : ஓம்...அப்படித்தான். வேதத்தை எப்படி ஓதுவதென்பது எனக்குத் தெரியும்.(சில வேத ஸ்லோகங்களைப் பாடிக் காட்டுகிறார்) அப்போது சமஸ்கிருத காவியங்கள் பலவற்றையும் படித்தேன். சமஸ்கிருதத்தில் கவிதைகளையும் எழுதுவேன். சமஸ்கிருத அறிவு எனது கவிதை ஈடுபாட்டிற்குத் தூண்டுகோலாக இருந்தது.
கேள்வி : உங்களது படைப்பாக்கத்துறையில் கவிதை என்பது பிரதானமானது. கவிதையின்பால் உங்கள் நாட்டம் எவ்வாறு ஏற்பட்டது?
பதில் : எனக்கு கவிதையின்பால் ஆர்வத்தை உண்டாக்கியது ஆங்கில இலக்கியங்கள்தான். நான் ஹாட்லிக் கல்லூரியில் படிக்கும் போது கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சைக்கு ஆங்கில இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்தேன். ஆங்கில இலக்கியத்திலே ஷேக்ஸ்பியருடைய நாடகம்இ சார்ள்ஸ் டிக்கின்ஸின் வுயடந ழக வுறழ ஊவைநைள நாவல்இ 300 லுநயசள ழக நுபெடiளா Pழநவசல என்ற என்ற கவிதைத் தொகுதிஇ எடிசனுடைய கட்டுரைகள் என்பவற்றைப் படிக்க வேண்டியிருந்தது.
ஆங்கில இலக்கியத்திலே இருக்கின்ற எழுத்தாளர்கள் மீது எனக்கு விருப்பம் அதிகம்.நான் படிக்கிற காலத்தில் இவர்களின் எழுத்துகளை விரும்பிப் படிப்பேன். இப்பவும்கூட ஷேக்ஸ்பியருடைய ஜுலியர் ஸீஸரையும் மக்பெத்தையும் படித்துக் கொண்டுதானுள்ளேன். மில்ரனின் ஒரு நாடகத்தை எழுபது தடவைகளுக்கு மேல் படித்து விட்டேன். கீற்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞன்தான் எனது அபிமானப் புலவன். ஷெல்லியும் அப்படித்தான். ஆங்கில இலக்கியங்கள் வழியாகவே – அந்த மூச்சோடுதான்- தமிழில் கவிதைகள் எழுதும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது.
கேள்வி : தமிழ் மொழியுணர்வுக் கவிதையான ‘சாவிற் தமிழ் படித்துச் சாக் வேண்டும்’ என்ற அருமையான கவிதையுட்பட பல சுவையான கவிதைகளை எழுதி ‘ஆனந்தத் தேன்’ தொகுதியில் தந்துள்ளீர்கள். அந்தக் காலத்தில் இத்தகைய உணர்வுக் கவிதைகளைப் படைக்க உங்களைத் தூண்டியவை எவை?
பதில் : தமிழில் இருக்கும் சுவைதான் அக்கவிதையைப் படைக்க என்னைத் தூண்டியது. கம்பராமாயணம்இ திருக்குறள் போன்றவற்றைப் படித்து இன்புற்றுஇ தமிழின் சுவையை அறிந்து கொண்டதாலேயே இதனை எழுதினேன்.
கேள்வி : ஏனைய கவிதைகள் பற்றிக் கூறுங்கள்?
பதில் : அந்தக் காலத்தில் இங்கிருந்து எழுதுகிறவற்றை இந்தியப் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. அப்போது நான் எழுதிய பாட்டொன்றுதான் ‘சக்தி’ என்ற பத்திரிகையில் வெளிவந்தது. ஏ.கே.செட்டியார் என்பவரால் வெளியிடப்பட்ட பெரிய பத்திரிகை அது. அதை நான் நல்லதோர் அங்கீகாரமாகக் கொண்டேன்.
பிறகு 1938ஆம் ஆண்டில் கல்கி பருத்தித்துறைக்கு வந்தபோது நான்தான் அவருக்கு வரவேற்பு பாமாலை பாடிக் கொடுத்தேன். அவருடன் பிரபல ஓவியர் மாலியும் வந்திருந்தார்.
அப்போது எனக்கு 17 வயது. கல்கிக்கு அந்தப் பாட்டின் மீது நல்ல விருப்பம். அவர் அதனை பிறேம் போட்டு தனது வீட்டில் தொங்க விட்டிருந்தார். தனது சரித்திரப் புத்தகத்திலும் அதனை வெளியிட்டுள்ளார்.
நான் அண்மையில் இந்தியாவுக்குப் போனபோது என்னை வந்து பார்த்த கல்கியின் மகன் அது இப்போதும் வீட்டில் மாட்டப்பட்டிருப்பதாகக் கூறினார். என்னைச் சிறுகதைகள் எழுதுமாறு தூண்டியவர் கல்கிதான்.
கேள்வி : ஈழத்து முன்னோடிச் சிறுகதையாளர்களுள் ஒருவராக ‘ஆனந்தன்’ என்ற புனைபெயரில் நீங்கள் பல சிறுகதைகளைப் படைத்துள்ளீர்கள். உங்கள் சிறுகதைகளின் பின்னணி என்ன?
பதில் : தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பார்த்தே ‘ஹரிஜனங்களின் கண்ணீர்’ என்ற சிறுகதையை எழுதினேன். அதேபோல ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது அதைக் கொடுக்காமல் விட்டார்கள். அதனால் எழுந்ததே ‘தண்ணீர் தாகம்’ என்ற கதை. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியிலேயே எழுதப்பட்டது.
கேள்வி : சொற்ப காலத்துக்குள் சொற்ப கதைகளையே படைத்துள்ளீர்கள். பின்னர் கதைகளை எழுதவில்லை. இதற்கு என்ன காரணம்?
பதில் : தி.சதாசிவ ஐயர் என்று ஒருவர் இருந்தார். அவர் பெரிய சமஸ்கிருத வித்துவான். அவர் எனது ‘சாவிற் தமிழ் படித்துச் சாக வேண்டும்’ பாடலைச் சிறப்பானதெனப் பாராட்டி ‘கலாநிதி’ என்ற பத்திரிகையில் வெளியிட்டார்.
அவர் இலக்கியங்களை மூன்று வகையாகப் பிரித்துச் சொன்னார். வாசிக்கும் நூல்கள்இ படிக்கும் நூல்கள்இ கற்கும் நூல்கள் என்பதே அந்தப் பிரிப்பு. ‘வாசிக்கும் நூல்கள் என்பது படித்து விட்டு உடனே எறிந்து விடும் தன்மையானது. படிக்கும் நூல்களும் அவ்வாறனதுதான்.நீர் இதுகளை எழுத வேண்டாம். உம்முடைய படைப்பாற்றலுக்கு என்றும் நிலைத்து நிற்கக்கூடிய படைப்புகளைச் செய்வதே நல்லது. சிறுகதைகள் மற்றவர்களை எழுத விடும். நீர் உயர்ந்த இலக்கியங்களைப் படைப்பதில் ஈடுபடும்’ என்று சொன்னார் சதாசிவஐயர்.
அவ்வாறே நானும் கவிதைத் துறையில் காவியம் ஆக்குவதில் ஈடுபட்டேன். க.தி.சம்பந்தனும் அவ்வாறுதான். சிறுகதைகளை எழுதியவர் பின்னர் அதை விட்டு விலகி சகுந்தல காவியம் இயற்றினார்.
கேள்வி : நீங்கள் ஒரு மரபுக் கவிஞர். மரபுக் கவிதைஇ புதுக் கவிதை எனப் பேதப்படுத்துவது தொடர்பாக உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில் : புதுக் கவிதை என்றுபெயர் வைத்ததே தங்களுக்கு ஒரு புகழ் தேடுவதற்காகவே. ஆங்கிலத்தில் டி.எச்.லோறன்ஸ் முதலானவர்கள் இவ்வாறான கவிதைகளை எழுதியுள்ளனர்.அது கட்டற்றஇ வடிவற்ற(குழசஅடநளள Pழநவசல) என்பதுதான்.இந்தியாவுக்குப் போனபோது சண் ரி.வி.பேட்டியின் போதும் இக்கேள்வியைக் கேட்டனர். ஆங்கிலத்தில் டி.எச்.லோறன்ஸின் வுhந ளுயெமந என்ற கவிதை முக்கியமான வடிவமற்ற கவிதை. ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் வித்தியாசமுண்டு. ஆங்கிலம் ஒரு யஉவழைநென டுயபெரயபந. (சில சொற்களை உச்சரித்துக் காட்டுகிறார்.) ஆங்கிலத்தில் வசனமாக எழுதினாலும் சொல்லும் போது ஒரு ரிதம் இருக்கும். தமிழில் அப்பிடியில்லை.
கேள்வி : கவிதைக்கு ஓசை முக்கியம் என்று கருதுகிறீர்களா?
பதில் : நான் இப்போது ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதியுள்ளேன். குரனெயஅநவெயடள ழக வுயஅடை Pசழளழனல (தமிழ் யாப்பிலக்கண அடிப்படைகள்) என்பது அந்நூலின் பெயர். அதில் தமிழ்க் கவிதையின் அடிப்படை என்ன என்பது பற்றிக் குறிப்பிட்டு உள்ளேன். தமிழில் செப்பலோசைஇ அகவலோசை என்ற இருவகை ஓசைகள் உள்ளன. அகவலோசையில் இருந்து வஞ்சி பிறந்தது. செப்பலோசையில் இருந்து கலி பிறந்தது. இது பற்றி இந்நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
இந்த ஓசைகள் இல்லாத பாட்டுகள் கவிதையாக இருக்க முடியாது. கட்டற்ற கவிதைகளைப் பலரும் எழுதுவதற்குக் காரணம் அவர்களுக்குச் சொற் களஞ்சியம் போதாமையே.
அண்மையில் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் ஒரு ஆங்கிலக் கட்டுரை பார்த்தேன். அதில் சிங்களக் கவிதை இறந்து விட்டதாக எழுதியிருந்தார் கட்டுரையாளர். அதேநிலைதான் இங்கும் உள்ளது.
வடிவற்ற கவிதையை எழுதும் வல்லமை கூட உயர்ந்த கவிஞர்களால்தான் முடியும். எண்ணமும் சொற்களும் இல்லாதவர்களால் நல்ல கவிதையைப் படைக்க முடியாது. எழுதப்படும் கவிதைகள் காலங்காலமாக அழியாவரம் பெற்றவையாக நின்று நிலைக்கும் போதே அவை சிறந்த கவிதைகளாக இருக்கும்.
கவிதை மட்டுமல்ல சங்கீதமும் அப்படித்தான். எம்.எஸ்.சுப்புலட்சுமிஇ அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்இ முசிறி சுப்பிரமணிய ஐயர் போன்றோரின் பாடல்கள் இப்போதும் சுவை தருகின்றன. இப்போதைய பாடல்கள் ரிஷிபிண்டம் இராத் தங்காது என்பது போல சில நாள்களிலேயே மறந்து விடுகின்றன.
கேள்வி : முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தருடன் நெருக்கமான தொடர்பைப் பேணியவர் நீங்கள். எவ்வாறு அவருடனான தொடர்பு ஏற்பட்டது?
பதில் : விபுலானந்தர் யாழ்நூல் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது யாழ்ப்பாணத்திற்கு வந்தார். வந்து அம்பிகைபாகன்இ நவரத்தினம் ஆகிய நண்பர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களிடம் தமிழும்இ விஞ்ஞானமும் தெரிந்த ஒரு பண்டிதர் வேண்டும் என்று கேட்டார். அவர்கள் என்னையும் வேறு சிலரையும் அனுப்பி வைத்தனர். யாழ்ப்பாணத்தில் ‘கலா நிலையம்’ என்ற இடத்தில் நேர்முகப் பரீட்சை நடத்தினார் விபுலானந்தர். அவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் விடையளித்தேன்.
அதன்பின் தான் கடிதம் அனுப்புவதாகவும்இ கொழும்பில் தன்னுடன் வந்து பணியாற்றுமாறும் சொல்லி என்னைத் தெரிவு செய்தார். அந்தக் கடிதம் இப்போதும் என்னிடமுள்ளது. அப்போது அவர் கொழும்பில் பேராசிரியராக இருந்தார். சு.வித்தியானந்தன்இ க.சதாசிவம் போன்றோர் அவரிடம் படித்துக் கொண்டிருந்தனர்.
என்னை அழைத்து கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தந்தார். அங்கிருந்து அவரது ஆராய்ச்சிக்குத் தேவையானவற்றை எழுதினேன். அவருடன் இந்தியாவுக்கும் போனேன்.
திருக்கொள்ளம் புதூர் என்ற இடத்தில் பெருந் தனவந்தர் ஒருவரின் மாளிகையில் தங்கியிருந்துஇ பல கோயில்களுக்கும் சென்று ஆராய்ச்சி செய்தேன். குழல்இயாழ் என்பவற்றின் அளவுஇ அவற்றின் ஒலிஇ வகை போன்றவற்றைப் பற்றி அறிந்து குறிப்புகள் எழுதினேன். மகரயாழ் பற்றிய விடயங்களை அறிந்து படமாக வரைந்தேன். விபுலானந்தரின் யாழ்நூலில் உள்ள மகரயாழ் நான் வரைந்ததே.
ஆராய்ச்சியின் நிமித்தம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் போனேன். அங்கு மூன்று தொகுதியான தூண்கள் உள்ளன. வெறும் கல் தூண்கள்தான். ஆனால் அவற்றில் முதல் தொகுதியை விரலால் சுண்டும் போது ‘ஸரிகமபதநி’ என்கிற ஏழு சுரங்களும் கீழ் ஸ்தாயியில் ஒலிக்கும். அடுத்த தொகுதி மத்திய ஸ்தாயியிலும்இ மற்றத் தொகுதி உயர் ஸ்தாயியிலும் ஒலிக்கும். அந்த மாதிரி அதனை அமைத்துள்ளார்கள்.
கேள்வி : விபுலானந்தருடன் பழகிய வகையில் அவரைப் பற்றிஇ அவரது குணாம்சங்கள் பற்றிக் கூறுங்கள்?
பதில் : அவர் ரொம்ப படித்தவர். தமிழிலும்இ ஆங்கிலத்திலும்இ சமஸ்கிருதத்திலும் அவர் எல்லோரையும் விட சவல்லுநர். மாலைவேளையில் தெகிவளை வீதியால் அவர் நடை பயிலும் போது என்னையும் அழைத்துச் செல்வார். தனது ‘கங்கையில் விடுத்த ஓலை’ கவிதையை முதன்முதல் அவர் எனக்கு அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது சொன்னார். அவருடைய நண்பன் அண்ணாமலை பல்கலைக்கழகத்து இலக்கண வித்துவானான கந்தசாமியார் இறந்த துயரில் அதனைப் பாடினார்.
சிலகாலம் சுவாமி விபுலானந்தர் ஹிமாலயா நிறுவனத்தில் வெலை செய்தார். அப்போது ‘பொன்மல் இமயம்’ போன்ற கவிதைகளை எழுதியும்இ படங்களை வரைந்தும் உள்ளார். ‘பிரபுத்த பாரத’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் அவரிருந்தார். அவர் நன்றாகக் கவிதை எழுதுவார்.ஷேக்ஸ்பியரின் ஜுலியர் சீஸரை மொழிபெயர்த்து அவர் எழுதிய ;அஞ்சினர்க்குச் சத மரணம்’ என்ற கவிதை அருமையானது. அவரது ‘மதங’க சூளாமணி’ நாடக நூல் மதுரைப் பண்டித பரீட்சைக்குப் பாடநூலாக இருந்தது. அவர் ஒரு பெரிய மனிதன்.
பிற்காலத்தில் ஒருமுறை அவருக்கு நெருப்புக் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது நான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இப்போது இராமகிருஸஷ்ண மிஷன் கட்டடம் இருக்கும் இடத்தின் மறுபகுதியை அப்போது இராணுவத்தினர் பொறுப்பேற்றிருந்தனர். மறுபக்கத்தில் நானிருந்தேன். இராமகிலுஷ்ண மிஷன் முழுவதற்கும் பாதுகாவலனாக நான்தானிருந்தேன்.
ஒருநாள் ஹம்டன் வீதியில் ஓரிடத்தில் சாப்பிட்டு விட்டு வந்தேன். வரும்போது தலை சுற்றத் தொடங்கியது. முழுகாதது பித்தமாக இருக்கும் என நினைத்து விட்டுக் கடைக்குப் போய் சீயாக்காய்இ வெந்தயம்இ அரப்பெல்லாம் வாங்கிக் கொண்டு வந்தேன். வரும்போதும் ஒரு தடவை தலை சுற்றியது. கொண்டு போன பொருட்களை வைத்து விட்டு சிறிதுநேரம் சாய்ந்து படுத்தேன். அப்போதும் கட்டிலை ஆட்டுவது போலிருந்தது. மறுநாள் விடிய எண்ணெய் தெயத்து முழுகிக் கொண்டிருக்கும் போது டெய்லி நியூஸ் பத்திரிகை வந்தது. அதன் தலைப்புச் செய்தியாக சிறியதொரு நில நடுக்கம் கொழும்பில் ஏற்பட்டதாக வந்திருந்தது. இது நடந்தது 1943 என்று நினைக்கிறேன்.
கேள்வி : யாழ்ப்பாணக் காவியம் என்ற அருமையான நூலை 4 பருவங்கள்இ 38 படலங்கள்இ இரண்டாயிரத்துக்கும் அதிகமான செய்யுள்கள் கொண்டதாக ஆக்கியுள்ளீர்கள். நூற்பிறப்புப் பற்றிப் பாயிரம் பாடியுமுள்ளீர்கள்.இந்நூல் எழுந்த பின்னணியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பதில் : அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சியில் நான் நாயாக உழைத்தேன். 1958இல் தமிழர்களுக்கெதிராக கொழும்பில் இனக்கலவரம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பலரும் எமது பிரதேசத்துக்கு வந்தனர். அந்த நேரத்தில் எமது தமிழர் வாழும் பிரதேசத்தில் சிங்களக் குடீயேற்றங்களைத் தடுத்து நிறுத்திஇ அந்த இடங்களிலே தமிழர்களைக் குடியமர்த்திஇ விவசாயச் செய்கையை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழரசுக் கட்சியினர் தீர்மானித்தனர்.
அப்போது வவுனியாக் கச்சேரியில் அரச அதிபராக இராசதுரை என்பவர் இருந்தார். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் சிலர் அவருடன் பேச்சு நடத்தினோம். அவர் எங்கள் எல்லோருக்கும் பத்து ஏக்கர் காணியினை வழங்கினார். இது பற்றிய நாடாளுமன்றப் பதிவேட்டில்(ஹன்சார்ட்) எனது பெயரும் பதியப்பட்டுள்ளது.
பதவியா என்ற பிரதேசத்தில் நாங்கள் காடுகளை வெட்டி விவசாயச் செய்கையை மேற்கொண்டோம். தொழிலாளர்கள் சிலரும் நானும் அங்கு தங்கி நின்றே விவசாயத்தை மேற்கொண்டோம். அங்கு அரைப்பனை உயரத்தில் ஒரு பாலைமரம் நின்றது. அதிலே மூன்று அடுக்குகள் கொண்டதாக களிமண்ணாலும்இ மரந் தடிகளாலும் கொட்டிலை அமைத்திருந்தோம். மேல் அடுக்கில்தான் என்னைத் தங்கச் சொன்னார்கள். இரவு வேளைகளில் மிருகங்களில் இருந்து தப்புவதற்காகத் தீ மூட்டுவோம்.
ஒருநாள் நாங்கள் படுத்திருந்தோம். திடீரென ஒரே இரைச்சலாயிருந்தது. ஆர்ப்பரித்து எழும் கடலின் இரைச்சல் போல அது இருந்தது. காடு பரிச்சயமான அந்தத் தொழிலாளர்களிடம் கேட்டேன் அது என்ன சத்தமென்று. அவர்களுக்கும் புரியவில்லை.
காலை எழுந்ததும் என்ன சத்தமென்று அறிய ஆவற்பட்டேன். தொழிலாளர்களும் நானும் துவக்குகளையும் எடுத்துக் கொண்டு பற்றைகளை விலக்கி விலக்கி நடந்து நடந்து போனோம். நடந்து நடந்து ஆறு ஏழு கட்டைக்கு(மைல்) அப்பால் போய் மிதந்தோம். அப்போது எதிரில் பெரியதொரு அணைக்கட்டு எதிர்ப்பட்டது. ‘பரராசசேகரன் அணைக்கட்டு’ என அணையின் கீழே கருங்கல்லில் எழுதப்பட்டிருந்தது. பத்தடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட கருங்கற்களை குழியும் பொழியுமாகப் பொருத்தித்தான் அந்த அணைக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் கற்களிலொன்று விழுந்து விட்டது. அதிலிருந்து குளத்து நீர் நீர்வீழ்ச்சி போலப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பேரோசையே எமக்குப் பெரும் இரைச்சலாக கேட்டிருக்கிறது.
அதைத்தான்
நீரோசை முரசாகத் தமிழோசை நெஞ்சிலெழும்
ஓரோசை மனவோசை யாகியெனை உந்துதலால்
பாரோசை கேட்கவெனப் பாவாகி யாழ்ப்பாணப்
பேரோசை காவியமாய்ப் பிறந்ததுவே செந்தமிழாய்
என்று யாழ்ப்பாணக் காவியத்தின் பிறப்புப் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
பின்னர் பரராசசேகரன் பற்றிஇ யாழ்ப்பாணஅரசு பற்றியெல்லாம் நான் தேடி ஆராய்ந்தேன். கொழும்பு அருங்காட்சியக நூலகத்துக்குப் போய் பல்வேறு சான்றாதாரங்களையும் கண்டறிந்தேன். பல சரித்திர நூல்களைப் பார்வையிட்டேன். அதன்பின்னர்தான் யாழ்ப்பாணக் காவியத்தை எழுதினேன். கி.பி.1450 முதல் 1467 வரையான பதினேழு ஆண்டுகால யாழ்ப்பாண அரசின் சரித்திரம் இக்காவியத்தில் உள்ளது.
கேள்வி இலங்கைக் காவியமான ‘பருவப் பாலியர் படும்பாடு’ என்ற பெரியதொரு காவியநூலை ஆக்கியுள்ளீர்கள். அது பற்றிக் கூறுங்கள்.
பதில் : பருவப் பாலியர் படும்பாடு என்ற நூல் எனது ஆயளவநச Pநைஉந. நான் அதில் 1950 முதல் 1992 வரையான 42 வருட இலங்கையின் சரித்திரத்தைப் பாடியுள்ளேன். இதில் மெனிக்கா என்றொரு பாத்திரம் வருகிறது. நான் படைத்தவற்றுள் என் மனதைக் கவர்ந்த பாத்திரம் அதுதான்.(அழுகிறார்) அது ஒரு சிறந்த படைப்பு. இந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற எல்லாச் சம்பவங்களையும்இ எல்லா விடயங்களையும் கவனத்தில் எடுத்து நான்காயிரத்து நானூறு (4400) பாடல்களில் (செய்யுள்) அதனைப் பாடியுள்ளேன்.
இந்த நூலைப் படித்தவர்களிடமிருந்து ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு பவுண் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.
கேள்வி :உங்களது சிறந்த படைப்பு எனக் கருதும் நூலுக்கு நீங்கள் வெளியீட்டு விழா வைக்கவில்லை. ஏன்?
பதில் : புத்தகங்கள் விற்கப்படுவதற்காகச் சிலரை அழைத்துச் செய்வதே இந்தப் வெளியீட்டு விழாக்கள். மேலைநாடுகளில் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்தப்படுவதில்லை. எனது புத்தகங்கள் நல்லதென்றால் உலகம் அதனை வாங்கும். அதனால்தான் நான் வெளியீட்டு விழாவை நடத்தவில்லை.
கேள்வி :இன்றைய வழக்குகளையும் உள்வாங்கி தமிழுக்கான பிரயோக இலக்கண நூலாக ‘மஞ்சுகாசினியம் இயங்கு தமிழியல்’ என்ற நூலை எழுதியுள்ளீர்கள். அதை எழுத நேர்ந்ததேன்?
பதில் : தமிழ் இலக்கணத்தைப் புதிய வகையில் எளிமையான முறையில் தொல்காப்பியம்இ நன்னூல் போன்றவற்றின் அடிப்படையில் எழுத வேண்டுமென்று தமிழ்நாட்டில் எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு அமைக்கப்பட முன்னரே அவ்வாறானதொரு முயற்சியை நான் ஆரம்பித்து விட்டேன். எனினும் ஐந்தாறு ஆண்டுகள் கடந்த பின்னும் அப்படியொரு நூலை அவர்கள் ஆக்கவில்லை; இன்றுவரை.
நான் தொல்காப்பியத்தைச் சுருக்கமாகஇ இக்காலப் பிள்ளைகளுக்கு விளங்கக்கூடிய வகையில் இந்நூலில் தந்துள்ளேன். பல்கலைக்கழக மாணவர்கள் இந்நூலை விரும்பிப் படிக்கிறார்கள். என்னிடம் நேரடியாக வந்து அவர்கள் அதிகம் பிரதிகளை வாங்கியிருக்கிறார’கள’.
கேள்வி : தமிழில் தொல்காப்பியர் அடிப்படையில் இலக்கண நூலாக்கம் செய்த நீங்கள் ஆங்கிலத்தில் குரனெயஅநவெயடள ழக வுயஅடை Pசழளழனல என்ற நூலை ஆக்கியுள்ளீர்கள். இதற்கான தேவைப்பாடென்ன?
பதில் :இந்தியாவில் ந.கோ.கந்தசாமிஇ எம்.சுப்பிரமணியம் ஆகியோர் திராவிட மொழிகள் தொடர்பான ஆய்வினைச் செய்துள்ளனர். அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களில் சில அடிப்படைக் குறைபாடுகள் உள்ளன. ளுலடடயடிடந என்பதை அவர்கள் அசை என்று கருதுகின்றனர்.ஆனால் ஆங்கிலத்தில் ளுலடடயடிடந என்பதும் தமிழில் அசை என்பதும் வேறானவை. அப்படையான இந்தப் பிழையால் அவர்களது ஆராய்ச்சிகளே தடம் மாறி விட்டன. தொல்காப்பியத்தின் செய்யுளியலை அடிப்படையாக வைத்து நான் இந்த நூலை எழுதியுள்ளேன். அதுபற்றி இந்தப் பேட்டியில் விளக்கம் தருவது பொருத்தமல்ல.
மேற்கூறியவர்கள் எழுதிய பெரிய ஆங்கில நூல்களை வைத்தே கர்நாடகம்இ தெலுங்கு முதலான ஏனைய மொழிகளிலும் பிழையான வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகின்றன. எனவேதான் எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் இந்தநூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளேன்.
இந்நூலுக்கு ர்iனெர பத்திரிகை விமர்சனம் எழுதியிருந்தது. அதைப் படித்த ந.கோ.கந்தசாமி அண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது என்னை வந்து சந்தித்தார். எனது நூலின் பிரதிகளையும் வாங்கிச் சென்றார்.
கேள்வி : நீங்கள் ஆங்கிலத்தில் சிறுகதைகளையும் அரசியல் நூலொன்றையும் ஆக்கியுள்ளீர்கள் அல்லவா?
பதில் : ஆம்! நான் பதினைந்து சிறுகதைகள் வரை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். அத்தோடு தமிழரசுக் கட்சியின் வரலாற்றை செல்வநாயகத்தை மையமாகக் கொண்டு எழுதிய நூலே நீங்கள் குறிப்பிட்ட அரசியல் நூல் . குழழவிசiவெள ழக ழரச குயவாநசள என்பது அந்நூலின் பெயர்.
கேள்வி : ‘மஞ்சு மலர்க்கொத்து’ என்ற சிறுவர் பாடல் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளீர்கள். இதனை எழுதுகின்ற விருப்பு அல்லது சந்தர்ப்பம் எவ்வாறு ஏற்பட்டது?
பதில் : 1965ஆம் ஆண்டு கலாநிதி என்.எம்.பெரேரா உயர்கல்விக்கான குழுவொன்றை அமைத்தார். அந்தக் குழுவில் என்னையும் பிரதிநிதியாக நியமித்தார். அக்குழுவினராகிய எங்களுக்கு எல்லா வசதிகளையும் அளித்து 25 சதத்துக்கு விற்கக்கூடியதாக பாலருக்கு ஒரு புத்தகம் எழுதும்படி அவர் பணித்தார். நானும் சிங்கள் எழுத்தாளர்களோடு இணைந்து இப்பணியில் ஈடுபட்டிருந்தேன்.
நான் சற்று விரைவாகவே வேலைகளைச் செய்தேன். அப்போது சிங்கள நண்பர்கள் தங்களைப் போல ஆறுதலாக எழுதுமாறும்இ நாள்களை இழுத்துத்தான் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். நான் அதைப் பொருட்படுத்தாமலே விரைவாக எழுதிக் கொடுத்து விட்டேன். ‘தமிழ் மலர்’ என்ற பாடநூல் முதன்முதலில் என்னாலேயே எழுதப்பட்டது. மூன்றாவது தமிழ் மலர் எழுதும் போது என்னுடன் சிற்பி சிவசரவணபவனும் இணைந்து பணியாற்றினார்.
இந்த மலரை எழுதும் போது சின்னப் பிள்ளைகளுக்கு எழுத்தும் பாட்டுமாகப் படிப்பிக்க வேண்டுமென்பதற்காக நான் சில பாடல்களை எழுதினேன். அப்போது யார் எழுதியது என்று நூலில் போடக்கூடாது என்று பணித்திருந்தார்கள். அதனால் இப்பாடல்களை யார் எழுதியது எனத் தெரியாதிருந்தது. எனக்குப் பின்னர் பாடநூல் எழுத்தாளர்களாக இருந்த பலரும் தமது பெயர்களைப் புத்தகங்களில் போடத் தொடங்கினர். தமிழ் மலருக்கென நான் எழுதிய பாடல்களுடன் வேறு சில பாடல்களையும் இணைத்தே ‘மஞ்சு மலர்க் கொத்தை’ உருவாக்கினேன்.
இந்த நூலில் இரண்டு விதமான சிறப்புகள் உள்ளன. இந்தப் பாடல்களை எப்படிப் பாட வேண்டும் என்ற ஒலிக் குறிப்புகள் உள்ளமை என்பது முதலாவது சிறப்பு. இது வேறு நூல்களில் இல்லை. இந்தப் பாடல்களை உடுவில் மகளிர் கல்லூரி உட்ப பல பாலர் பள்ளிகளுக்குக் கொடுத்து இசையுடன் பாடச் செய்தேன். பியானோவைப் பயன்படுத்தி இப்பாடல்களை இசையுடன் பாடிப் பரீட்சித்துஇ அந்த ஒலிக் குறிப்புக்களையே இந்நூலில் இணைத்துள்ளேன்.
மற்றது இந்நூலுக்கான படங்கள். இந்தப் பாடல்களைப் படித்து விட்டு குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிவது பொருத்தமானதெனக் கருதினேன். இந்தப் பாடல்களைப் பள்ளிகளில் கொடுத்து அப்பாடல்கள் பற்றிய படங்களை வரையுமாறு ஆரம்ப வகுப்பு மாணவர்களைக் கேட்டேன். அவர்களும் ஆர்வத்தோடு நிறைய வரைந்து தந்தனர். அவற்றில் இரண்டு பாடல்களுக்கு வரையப்பட்ட மாணவர்கள் சிலரது படங்களை இணைத்திருக்கிறேன். ஒவ்வொரு மாணவனும் வித்தியாசமாகப் பார்க்கும் நிலையை இப்படங்களில் காணலாம்.
நூலின் முகப்பு அட்டையை வரைந்தவர்4 வயதுப் பிள்ளை. எனது பாடல்களைப்படித்து இரசித்து தமது மனநிலைக்கேற்ப சிறுவர்கள் வரைந்ததைப் போட்டிருக்கிறேன்.
கேள்வி : இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில் : எடுத்த மலர்களும் தொடுத்த மாலையும் என்றொரு நூலை அச்சிட்டுக் கொண்டிருக்கிறேன். இதிலே எடுத்த மலர்கள் என்பது நான் முன்பு எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்தது. தொடுத்த மாலை என்பது 1995ஆம் ஆண்டு இடம்பெயர்வையும்இ அதன் பின்னரான வாழ்க்கைச் சம்பவங்களையும் எடுத்து விளக்கும் வகையிலான பாடல்களைக் கொண்டது. இடம்பெயர்வின் பின்னரான நமது பாடுகளை இது சொல்கிறது.
கேள்வி : நீங்கள் ஒரு கல்வி உளவியல் விரிவுரையாளராகஇ பலாலி ஆசிரிய கலாசாலையின் உப அதிபராக இருந்துள்ளீர்கள். உளவியலில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளீர்கள். நீண்ட காலம் கல்விப் புலத்தில் இயங்கியவர். அந்த வகையில் நமது கல்விமுறை தொடர்பில் உங்களது அவதானிப்பு என்ன?
பதில் :நமது கல்விமுறை பற்றிச் சொல்வதென்றால் அது ஆயிரம் பீத்தல்கள்(ஓட்டைகள்) உள்ள சேலை என்றுதான் சொல்லலாம். அதிலே எங்கே ஓட்டையை அடைப்பதென்பதுதான் பிரச்சினை. ஏனெனில் கல்வியின் எல்லா அம்சங்களிலும் குறைகள் உள்ளன. இதில் எது பிழைஇ எதைச் சீர்செய்யலாம் எனக் கண்டறிவது கடினம். கிராமத்தில் சொல்லுவார்கள் ‘ஆச்சி சமைச்ச மயிருக்கை ரண்டு கீரையும் கிடக்குது’ என்று. பிழைகள் குறைகள் நிறைய இருக்கின்றன. நல்ல விசயங்களும் இரண்டொன்று உள்ளன.
கல்வி முறை பற்றிப் பேசுவதென்றால் அதற்கு தனியாக ஒரு செவ்வியே தரலாம். இப்போதெல்லாம் புலமைப் பரிசில் பரீட்சைஇ இந்தப் பரீட்சைஇ அந்தப் பரீட்சையிலை என்ன குறைவு? அதை எப்படி நிவர்த்திக்கலாம்? என்று உங்களது பத்திரிகைகளில் செய்திகள்இ பேட்டிகள் வெளிவருகின்றன.
யுசஅ ஊhயசை நுனரஉயவழைn என்று சொல்வார்கள். சார்மனைக் கதிரையில் இருந்து கொண்டு கல்வியைத் திட்டமிடுவதே இங்கு நடக்கிறது. அப்படிக் கல்வியைத் திட்டமிட முடியாது. வகுப்பறைக்குள் நுழைந்துஇ பிரயோக ரீதியாக கற்பித்தலை மேற்கொண்டுஇ பிள்ளைகளின் நிலையை அறிந்து இந்தக் கல்வி உருவாக்கப்படவில்லை. கல்விக் கொள்கையை வகுப்போர்இ கல்வி அதிகாரிகள் எனப்படுவோர் ஒருநாளாவது வகுப்பறைக் கற்பித்தலைச் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. வகுப்பறையில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் சார்மனைக் கதிரையில் அமர்ந்திருப்பவர்களே இப்போது கல்வியைப் பற்றி நிறையக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சமைப்பதென்று யாரும் சொல்லித் தரலாம். ஆனால் சமைத்தல்லோ காட்ட வேணும்.
கிரிக்கெற் விளையாட்டிலும் யுசஅ ஊhயசை ஊசiஉமநவநசள இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் கிரிக்கெற் மட்டையைத் தொடாதவர்கள். ஆனால் கிரிக்கெற்றைப் பற்றிக் கதைத்து ஆலாபனை செய்வார்கள். அவர்களைப் போலத்தான் இந்தக் கல்வி அதிகாரிகளும் பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள். சுவாரஸ்யமாய்இ பொழுதுபோக்காய் கதைக்கின்றார்கள்.
அண்மையில் கோப்பாயில் மூன்றுநாள் கல்விக் கருத்தரங்கொன்று நடைபெற்றது. எல்லோரும் கூடி முஸ்பாத்தியாக கதைத்தார்கள். மாணவர்களின் பிரச்சினைகள்இ கல்வியில் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள் பற்றியெல்லாம் ஆக்கபூர்வமாக கதைக்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கே அப்படிக் கதைக்கப்படவில்லை. சும்மா அது இப்படி இது அப்படி எனக் கூறிக் கொண்டே நேரம் கழிக்கப்பட்டது.
கேள்வி : நீங்கள் ஓர் ஓவியரும் கூட. ஓவியம் வரையும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?
பதில் : நான் ஙாட்லிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாலத்தின் மீது அமர்ந்து கொண்டு ஒரு காலை உயர்த்தியபடி ஒருவன் மீண் பிடித்துக் கொண்டிருக்கும் படத்தை வரைந்திருந்தேன்.எங்கள் பாடசாலையில் ஓவிய ஆசிரியராக எஸ்.ஆர்.கனகசபை இருந்தார். அவர் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஏநசல புழழன எனக் குறிப்பு இட்டுஇ என்னை அழைத்தார். ‘நீர் ஒரு சிறந்த ஓவியர்’ எனப் பாராட்டினார். ஓவிய நுணுக்கங்களைக் கற்பித்தார். ஓவியம் வரையும் போது ஒரே கோடாக இழுக்க வேண்டும். பிறகு திருத்தங்களைச் செய்யலாம் என்றும் அவர் கூறினார். அவரது திருத்தங்களை உள்வாங்கிப் பல ஓவியங்களை வரைந்துள்ளேன்.
ஓய்வு நேரங்களிலும்இ மனம் பாரமாக இருக்கின்ற வேளைகளிலும் நான் ஓவியத்தையே வரைவேன். நான் 1985ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து ஒவ்வோர் இடங்களாகத் திரிந்து அல்லற்பட்டிருக்கிறேன். இவ்வாறு ஏற்பட்டதனால் நான் மன அழுத்தங்களோடுதான் வாழ வேண்டியுள்ளது. ஆனால் அதற்காக யோசித்து துன்பப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காகவே நான் ஓவியங்களை வரைகிறேன். எனது ஓவியத்தின் அடிப்படை இதுதான்.
நான் வெளிப்பாட்டுச் சித்திரங்களையெல்லாம் வரைந்திருக்கிறேன். கடற்கரையில் போய் அமர்ந்திருந்து கடற்கரைக் காட்சிகளை வரைந்திருக்கிறேன். இவையெல்லாம் எனது மன ஆறுதலுக்காகவே. இவற்றை நான் பத்திரிகைகளுக்கோஇ வேறு எங்கேனுமோ கொடுப்பதில்லை.
கேள்வி : அடுத்து உங்கள் அரசியல் பக்கம். தமிழ்த் தேசிய அரசியலின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒலுவராக நீங்களும் இருந்துள்ளீர்கள். உங்களது ஆரம்பகால அரசியற் செயற்பாடுகளைக் கூறுங்கள்.
பதில் : எனது அரசியல் ஈடுபாட்டைச் சொல்வதென்றால் அது நீண்ட கதையாகி விடும். 1937ஆம் ஆண்டு முதல் இற்றை வரையான தமிழர்களின் அரசியல் வரலாற்றுக்கு நானொரு சான்றுத் தூணாக இருக்கிறேன் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
1947ஆம் ஆண்டு அரசியல் யாப்பை உருவாக்கிய சோல்பரி குழுவினர் யாழ்ப்பாணம் வந்தபோது நான் ஹாட்லிக் கல்லூரியில் மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தேன். நான் ஆங்கிலம் பேசக்கூடியவனாக இருந்ததால் எமது கல்லூரி ஆசிரியரான வோல்ரன் என்பவர் என்னை அழைத்துச் சென்று சோல்பரி குழுவினரைச் சந்திக்க வைத்தார். சுநளவ ர்ழரளந இல் நான் சோல்பரிஇ பிரடெரிக்இ பரோஸ் ஆகிய மூவரையும் சந்தித்துக் கதைத்தேன். இது பற்றி இந்து மகளிர் கல்லூரிச் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த கர்த்தாக்களுள் நானும் ஒருவன். செல்வநாயகந்தான் தமிழரசுக் கட்சியென்ற பெயரை வைத்தவர். கொழும்பு காலிமுகத்திடலில் நாகநாதனின் மருந்தகத்தில் இருந்து நாங்கள் காரில் வந்து கொண்டிருந்த போதுதான் தந்தை செல்வநாயகம் இப்பெயரைத் தெரிவு செய்தார்.
தந்தை செல்வா அறங்காவற் குழுவினர் அண்மையில் பல்கலைக்கழகத்தில் எனக்கு விருது தந்தபோது கூறினார்கள் ‘தந்தை செல்வா சச்சி இல்லாமல் வெளிக்கிட மாட்டார்’ என்று. தந்தை செல்வாவுக்கு ஒரு வகையில் ஆலோசகராகவும் இருந்துள்ளேன். முதல் முதல் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தைச் செய்ய வேண்டுமென்று தூண்டிஇ அதைச் செய்வித்தவர்கள் நானும் பொட்டர் நடராசாவுந்தான்.
அதேபோல காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை வரை யாத்திரையை ஆரம்பித்ததும் நானே. கச்சேரி முன்பாக நடந்த சத்தியாக்கிரகத்தில் ஆள்களைச் சேர்த்து வந்துஇ அதிலே அமர்ந்து அடிவாங்கியவர்களில் நானும் ஒருவன். நாகநாதனுக்கு பொலிசார் அடித்த ‘பற்றன’ தடி முறிந்ததுஇ ஜீப்பை மறித்து நாகநாதன் கழுத்தைக் கொடுத்தது... இதுகளையெல்லாம் நேரிலை கண்டு அனுபவிச்சவன். அதுகளை விடுங்கோ. அமிர்தலிங்கம் எவ்வளவோ காலத்துக்குப் பின்னர்தான் கட்சியில் சேர்ந்தவர். பழைய தமிழரசுக் கட்சிக் காரர்களில் கந்தையாஇ அருணாசலம்இ அரசரத்தினம் போன்ற சிலர்தான் இன்றுள்ளனர்.
கேள்வி : இறுதியாகஇ நீங்கள் ஒரு வானியல் வல்லுநர்.வானியல்இ சோதிடம் இரண்டுக்கும் இடையிலான ஒருமைப்பாடென்ன?
பதில் : வானசாஸ்திரம் ஒரு விஞ்ஞானக் கணிப்பு. சோதிடம் அதை வைத்துக் கொண்டு பலவிதமான பலன் சொல்வது. சோதிடத்தை ஒரு விஞ்ஞானமென்று சொல்ல முடியாது. ஓர் அறிவும் இல்லாதவன் எழுந்தமானத்தில் பதில் சொல்லும் நிலை சோதிடத்தில் உள்ளது. வானியல் முற்றிலும் விஞ்ஞானக் கணிப்பே.
சோதிடம் பற்றிச் சொல்லும் போது தந்தைசெல்வநாயகம் சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.
கிரேக்க தேசத்தில் தம்மில் அரசனாக வருவது யார் என்று அறிவதற்காக இரண்டு சகோதர்கள் ஒரு சோதிடரிடம் போனார்களாம். அந்தச் சோதிடன் ‘உங்களில் யார் தாயை முத்தமிடுகிறார்களோ அவர்தான் அரசன்’ என்று சொன்னாராம். உடனே இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தாயை முத்தமிட ஓடினார்கள். போகும் வழியில் ஒருவன் தடக்கி நிலத்தில் வீழ்ந்து விட்டான். மற்றவன் ஓடிச் சென்று முதலில் தாயை முத்தமிட்டான். அவன்தான் அரசனென்று எல்லோரும் நம்பினார்கள். ஆனால் தடக்கி விழுந்தவன்தான் அரசனாக வந்தான். உடனே மற்றவன் சோதிடனிடம் சென்று கேட்டபோது சோதிடன் சொன்னானாம் ‘இந்தப் பூமித் தாயை அவன் முதலில் முத்தமிட்டான். அதனால்தான் அரசனானான்’ என்று.
நான் இப்போது வேத வானியல் ஒன்றொரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். மேலைத்தேச வானியலைப் போலவே எமக்கென்றொரு கீழைத்தேச வானியல் இருக்கிறது. அது பற்றிய விளக்கங்களை இந்நூலில் குறிப்பிட்டுக் காட்டவுள்ளேன்.