முன்றில் - 21
இயல்வாணன்
தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீன், பாலமனோகரனின் நிலக்கிளி, செங்கை ஆழியானின் வாடைக்காற்று ஆகிய மூன்று நாவல்களையும் விமர்சகர்கள் ஒப்பிட்டுப் பேசுவர். பகைப்புலம், கதைமாந்தர் வேறாயினும் வாசிக்கும் வாசகனுக்கு இம்மூன்று நாவல்களும் ஒத்த அனுபவத்தைத் தருவதாக அமைந்திருந்தன. நிலக்கிளி நாவலை எழுதியதால் நிலக்கிளி என்ற அடைமொழியோடு அண்ணாமலை பாலமனோகரன் அடையாளப்படுத்தப்படுமளவுக்கு அந்த நாவல் பேசப்பட்டது. பாலமனோகரன் ஒரு நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக,ஓவியராக பல தளங்களில் பங்காற்றியுள்ளார்.
இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 07-07-1942இல் பிறந்தார். இவரது தந்தையார் சிங்கப்பூர் பென்சனியர். அத்துடன் கிராம விதானையாராகவும், உள்ளுராட்சிமன்றத் தலைவராகவும் இருந்தவர். தாயார் தண்ணீரூற்று சைவப் பாடசாலையின் முதல் பெண் ஆசிரியராக இருந்தவர்.
பாலமனோகரன் தனது ஆரம்பக் கல்வியை தரம் 2 வரை தண்ணீரூற்று சைவப் பாடசாலையிலும், தரம் 3முதல் 5 வரை ஆங்கில மொழி மூலம் உடுவில் மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கியும் பெற்றார். இடைநிலைக் கல்வியை ஆங்கில மொழி மூலம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பெற்றார். எனினும் 15 வயதில் அங்கிருந்து இடம்மாறி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து சிரே~;ட தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றினார்.
1962இல் ஆசிரிய நியமனம் கிடைத்து ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பணியினை மேற்கொண்டார். தொடர்ந்து பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில பாடத்தில் சிறப்புப் பயிற்சி பெற்று, பயிற்றப்பட்ட ஆசிரியராக 1967இல் மூதூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நியமனம் பெற்றார். தொடர்ந்து முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் கற்பித்தார். 1984இல் டென்மார்க்கிற்கு புலம்பெயர்ந்து சென்று அங்கேயே வசித்து வருகிறார். டென்மார்க்கிலும் இவர் கட்டிடத் தெரிநுட்பவியலாளர் படிப்பை 3 வருடங்கள் மேற்கொண்டு நிறைவு செய்திருந்தார்.
தண்ணீரூற்றில் இவரது வீட்டில் ஆனந்தவிகடன், கல்கி ஆகிய தமிழக சஞ்சிகைகளை வாங்குவார்கள். மாணவப் பருவத்தில் வீட்டிற்கு வரும் வேளை அவற்றைப் படிப்பார். அத்துடன் 10 வயதில் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்தைப் படித்து அதனால் நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது வீட்டில் பல ஆசிரியர்கள் வாடகைக்கு குடியிருந்தனர். முல்லைமணி சுப்பிரமணியம், அப்பச்சி மகாலிங்கம், நா.சுப்பிரமணிய ஐயர் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது வீட்டில் இலக்கிய விவாதங்களை நடத்துவதை இவர் பார்த்து வளர்ந்துள்ளார்.
மூதூரில் இவர் கற்பித்துக் கொண்டிருந்த காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த ஆசிரிய நண்பனொருவர் சிறுகதையொன்று எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்காக எழுதிய சிறுகதையை மஹ்ரூப் என்ற மாணவனிடம் கொடுத்து அழகான கையெழுத்தில் எழுத வைத்தார். அதைப் படித்த மாணவன் வ.அ.இராசரத்தினம் என்ற எழுத்தாளர் பற்றிக் கூறி அவரிடம் இந்தச் சிறுகதையைக் காண்பிக்கும் விருப்பத்தை வெளியிட்டார். வ.அ.இராசரத்தினம் இவர்களை வரவேற்று கதை தொடர்பில் சில திருத்தங்களையும் முன்வைத்தார். அவர் மூலமாக சிந்தாமணி பத்திரிகையில் இவரது முதலாவது சிறுகதையான ‘மலர்கள் நடப்பதில்லை’ இளவகன் என்ற புனைபெயரில் வெளிவந்தது. இளவழகன் என்ற புனைபெயரிலேயே ஆரம்பத்தில் சிறுகதைகள் வெளிவந்தன. தொடர்ந்து சிந்தாமணியின் ஆசிரியர் இராஜ அரியரத்தினத்துடனான தொடர்பினால் பல சிறுகதைகளை அப்பத்திரிகையில் எழுதினார். அத்துடன் வீரகேசரி, தினகரன், Weekend ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்ததுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பப்ட்டது.
இளமைக்காலத்தில் சில வருடங்கள் சொந்த ஊரான தண்ணீரூற்றில் தங்கியிருந்த காலத்தில் தண்ணிமுறிப்பு காட்டிற்கு வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் சென்றிருக்கிறார். அதேவேளை தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீனை வாசித்த அருட்டுணர்வும் சேர்ந்து கொள்ள ஒரு நாவலை உருவாக்கினார். தண்ணீரூற்றில் வாழ்ந்த ஒருவரையே கோணாமலை என்ற பாத்திரமாக்கி உருவானதே நிலக்கிளி நாவலாகும். இது 1973இல் வீரகேசரி பிரசுரமாக இந்நாவல் வெளிவந்தது. இந்த நாவலின் பெயரை மாற்ற வீரகேசரி பிரசுரத்தினர் விரும்பிய போதும் நூலாசிரியர் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்நாவலுக்கு அந்த வருடத்துக்கான சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இதன் இரண்டாம் பதிப்பு மல்லிகைப்பந்தல் வெளியீடாக 2002இல் வெளிவந்தது.
மித்திரனில் வண்ணக் கனவுகள் என்ற நாவலைத் தொடராக எழுதியுள்ளார். தொடர்ந்து வீரகேசரி பிரசுரமாக குமாரபுரம் (1974), கனவுகள் கலைந்தபோது (1977) ஆகிய நாவல்கள் வெளிவந்தன. இவரது பதிப்பகமான பனம்பூ வெளியீடாக தாய்வழித் தாகங்கள் (1987) நாவல் வெளிவந்தது. அப்பால் தமிழ் இணையதளத்தில் தொடராக இவரெழுதிய வட்டம்பூ நாவல் நந்தாவதி என்ற பெயரில் நூலாக தமி;நாட்டில் வெளிவந்தது. நந்தாவதியை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Bleeding Hearts (2009) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
இவரெழுதிய 11 சிறுகதைகள் தீபதோரணம் (1977) தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவர் ஆங்கிலத்தில் எழுதிய 15 சிறுகதைகள் நாவல் மரம் என்ற சிறுகதைத் தொகுதியாக டெனி~; மொழியில் வெளியிடப்பட்டது.
முருகர் குணசிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுநூல்கள் இரண்டை இவர் தமிழில் ‘இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு’, ‘இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு’ என்ற தலைப்புகளில் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அத்துடன் டெனி~; தமிழ் அகராதியையும் இவர் தயாரித்து பிரபல நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.
ஓவியராகவும் இவர் விளங்குகிறார். இவரது ஓவியங்களை டென்மர்க்கில் பலரும் வாங்கி தமது வீடுகளில் தொங்கவிட்டுள்ளனர். அப்பால் தமிழ் இணையதளம் ஓவிய கூடம் என்ற பகுதியை உருவாக்கி, அதில் இவரது ஓவியங்களை வெளியிட்டு இவரைக் கௌரவித்திருந்தது.
பாலமனோகரனின் கதைகள் முல்லை மண்ணின் இயல்பான வாழ்வையும், இயற்கையின் அழகையும் பேசுவன. வன்னிப் பிரதேசத்தின் எளிமையும் இனிமையும் இவரது கதைகளின் சாரமாகும். மறுபுறத்தில் துன்பங்களை எதிர்கொண்டு துணிந்து வாழும் மக்களின் பண்பையும் வெளிப்படுத்துவன.
81 வயதிலும் டென்மார்க்கில் தளராத பணியாற்றி வரும் பாலமனோகரன் எமக்கு நல்ல இலக்கிய முதுசங்களைத் தந்துள்ளார். மேலும் புதிய அனுபவ வெளியை புதிய படைப்புகள் மூலம் தர வேண்டும் என்று வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment