நூல் : ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்
ஆசிரியர் : கருணாகரன்
வெளியீடு : மகிழ்
'ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்' தொகுதியின் பின் இரண்டாவதாக வெளிவரும் கருணாகரன் கவிதைகளின் தொகுதி 'ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்.'
சூழல் தொடர்பான ஆழ்ந்த பார்வையும், ஆன்ம தேடலும், சுய விழிப்பும் மிக்கவை கருணாகரனின் கவிதைகள். மனதோடு நெருங்கிய சொற்களால் வசீகரிக்கும் வார்த்தைக் கோர்வைகளால் ஆன்மாவைச் சுண்டியிழுக்கும் தன்மை கொண்டவை அவை. இத்தொகுதியிலும் அத்தகைய 29 கவிதைகள் நிறைந்திருக்கின்றன.
போரும், அழிவுகளும், இடப்பெயர்வும், இடர்களும் நிறைந்த எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைச் சிதறடித்த காலச்சூழலில் விளைந்த மனவுணர்வுகளே பல கவிதைகளின் தொனிப்பொருள். 'இருள் விரிவு' என்ற கவிதை இப்படிப் பேசுகிறது:
"பூக்கள் உதிர்ந்து
காற்றில் சருகுகள் பறக்கின்றன
குழந்தைகள்
ஊஞ்சலை இழந்தார்கள்
வானம் நட்சத்திரங்களை இழந்தது
தென்னைகளை வருட முடியாத காற்று
சுடுகாட்டின் சாம்பலை
அள்ளி வீசுகிறது
அகதிக் காலங்களைத் தள்ள முடியாமல்
மாய்ந்து கொண்டிருக்கிறேன் நான்."
அதேபோல 'நீலம் உரித்த வெண்மை' கவிதையில்
'ஒரு குழந்தையின் கதறல்
எல்லா இசைக் கருவிகளையும் சிதறடித்த பின்
இசையின் நினைவலைகளில்
ஊடுருவிச் செல்கிறது எரிக்கல்லாக'
என்கிறார் கவிஞர். போரின் நீள் துயர அனுபவங்களை இவ்வாறு கலாபூர்வமாக அநேக கவிதைகள் பேசுகின்றன.
இந்தத் துயரங்களிலிருந்து மீள அவாவும் குரலாயும் இவரது கவிதைகள் ஒலிக்கின்றன.
'போரின் துயரொலியும் கடும் வலியும் வாழ்வின் இடிபாடுகளும் பிரமைகளில் நிறைந்திருக்கின்றன. இந்தப் பிரமைகள் அகலவேண்டும். மெய்யாய் அகலுவதாய் அது இருக்க வேண்டும். மெய்யாகவே சமாதானத்தை விரும்பும் குரல் நமது.'
'அது அலைக்கழிக்கப்படாத சமாதானம், ஏமாற்றப்படாத சமாதானம், சூதற்ற சமாதானம் நமக்கு வேண்டுமென்று கேட்கிறது.' என முன்னுரையில் அவர் குறிப்பிடுவது கவிதைகளிலும் உள்நின்று ஒலிக்கிறது.
'மாமிசக் கனவும்
நெருப்பின் ஞாபகமும்
இல்லாத காலம் மலரும் நாளை
உணருகின்றேன்"
என்று 'ஒரு பயணியின் குறிப்புரை' கவிதையில் அவர் குறிப்பிடுவது அவரது துயரங்களிலிருந்து மீள அவாவும் குரலே எனலாம். யாருடைய வீடு, ஆடுகளற்ற உலகம், சிறகுவெளி, அழகு, திரை, மரணத்தின் ருசி, பிரதிபலிப்பான்கள் பற்றி மேலும் சில உண்மை முகம் ஆகிய கவிதைகள் தொகுதியின் ஏனைய கவிதைகளின் தொனியிலிருந்து மாறுபட்டவை; தத்துவார்த்தப் பின்னணி கொண்டவை.
எனது வருகை, விழியோடிருத்தல் ஆகியன இத் தொகுதியின் நீண்ட கவிதைகள், வித்தியாசமான பரிமாணத்தில் அரசியல் பிரச்சினையைப் பேசுவன. எனினும் இக்கவிதைகள் கட்டிறுக்கத்தையும், உரத்த தொனிப்பையும் இழந்து உதிரிக் கோவைகளாய் தென்படுகின்றன.
நிகழ்காலத்தின் சம்பவங்களை கலா பூர்வமாகப் பதிவு செய்வனவாக இத் தொகுதியின் பெரும்பாலான கவிதைகள் அமைகின்றன. தேசிய விடுதலைப் போரின் நியாயப்பாட்டைச் சுட்டும் அதேவேளை, போரின் கொடிய கரங்கள் மக்களின் கிராமங்களை வாழ்வைப் பிடுங்கியெறிந்த அவலத்தையும் எடுத்துக் காட்டுகிறார். 'தீயயாயும் நிழலாயும்' முதலான கவிதைகள் விடுதலைத் தீயில் ஆகுதியயான வீரர்களைப் பேசுகின்றன.
மகிழ் வெளியீடாக 90 பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்நூல் அதன் உள்ளடக்கம் போலவே உருவத்திலும் அழகும், வித்தியாசமும், சிறப்பும் உடையதாய் விளங்குகிறது.
No comments:
Post a Comment