திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுதிய
உணர்வின் நிழல்கள்
சிறுகதைத் தொகுதி - ஒரு மதிப்பீடு
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எழுதி வரும் திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சிறுகதைகள் 'உணர்வின் நிழல்கள்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. மல்லிகைப் பந்தல் வெளியீடு. ரமணியின் நவீன ஓவியத்தைத் தாங்கிய தரமான - கவர்ச்சியான அட்டையுடன் அமைந்துள்ள இந்நூலும், அதில் வெளியான சிறுகதைகளில் ஒன்றின் பெயரைக் கொண்டு அமையும் மரபை நீக்கியதாக வெளிவந்துள்ளது.
பொதுவாக இந்நூலில் அடங்கியுள்ள கதைகள் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளையும், உணர்வோட்டங்களையும் பிரதிபலிக்கின்றன. கணவன், பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் உத்தியோகம் பார்க்கும் ஒரு பெண் தான் சார்ந்தும், தனது குடும்பம் சார்ந்தும், தன் தொழில் சார்ந்தும் உணர்ந்து கொண்டவற்றையும், அனுபவித்துக்கொண்டவற்றையும், ஒரு ஓவியமாக்கியமையே இக்கதைகளெனலாம். குடும்ப உறவுகள் தொடா்பில் நூலாசிரியருக்கிருந்த ஆழ்ந்த பார்வை இக்கதைகள் ஊடாக ஆங்காங்கே தலை நீட்டியிருப்பதனை நாம் அவதானிக்கலாம்.
இக்கதைகளுள் 'பிணைப்பு' சிறப்பான வெளிப்பாடு. பதவியுயர்வுப் பரீட்சையொன்றில் தோற்றுவதற்காக விடுப்பில் நின்று படிக்க முயலும் ராஜியின் கதை இது. காலையில் சமையல் முடித்து விட்டு, கணவனையும் மகனையும் அனுப்பி விட்டுப் படிக்க முயற்சிக்கிறாள். அதற்குள் மகள் தாயோடு வந்து அவளது படிப்பைக் குழப்புகிறாள். பின் மகன், அதன்பின் கணவனும் வேளைக்கே வந்து விடுகிறான். இவற்றுக்கிடையில் படிக்க முடியாமல் அவள் படும் அவலம்.கட்டையில் கட்டப்பட்டிருக்கும் பசுமாட்டோடு ஒப்பிட்டுப் பின்னப்பட்டிருக்கிறது இக்கதை. குடும்பம் என்ற பிணைப்புக்குள் பிணைக்கப்பட்டு ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே நின்று கொண்டு, மேலெழ முடியாத யாழ்ப்பாணத்து வேலை பார்க்கும் பெண்ணின் வகை மாதிரிதான் இக்கதையின் நாயகி, அதைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
இவரைப் போலவே, இவ்வாறான ஒப்பீட்டுக் கதைகளை அண்மைக் காலங்களில் கோகிலா மகேந்திரனும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயும், தந்தையும் தொழில் புரிபவராயிருக்க, அவர்களின் பிள்ளைகள் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலையை பிள்ளையின் நிலையிலிருந்தும், தாயின் நிலையிலிருந்துமாகப் பின்னப்பட்ட 'ஆசைகள் ஏக்கங்களாக' என்ற கதையும் குறிப்பிடத்தக்க கதையாகும்.
'கரை தாண்டாத அலைகள்' கதை கிழந்தையொன்றுடன் கணவனால் துரத்தப்பட்டுப் பிறந்த வீட்டில் தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் அங்கலாய்ப்பும், ஏக்கமும், திருமண வயதில் குமர்களுடன் அல்லாடும் தாய் பற்றிய எண்ணமுமாக விரிகிறது.
வெற்றிலைக் கொடிகளை மரத்துடன் தாய் கட்டுவதைப் பார்த்து கதாநாயகி சரசு இப்படி எண்ணுகிறாள்.
"அம்மா பாவம்: கொழுந்தை மட்டுமா கட்டிமுடிக்க முடியாமலிருக்கிறாள்? தன்ரை குமர்களையும் தகுந்த கொழுகொம்புடன் இணைக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறாள்..."
வேற்றுச் சாதியைச் சேர்ந்த அரியம் சரசுவின் கண்ணில் படுகிறான்; அவளைச் சபலப்படுத்துகிறான். அதை ஆசிரியர் சரசுவின் பார்வையினூடாக வெளிப்படுத்துகிறார்.
"அம்மா கட்டி முடிக்காத கொழுந்துகளை அவன் கட்டிக் கொண்டிருக்கிறான். கொழுந்துகளைக் கட்டுகிறான்: குமர்களை!"
அது அவனால் முடியாது. விசித்திரமான நூல்வேலி, சாதியென்ற பெயரில் அவர்களிடையே போடப்பட்டிருப்பதால்... இவ்வாறு நன்றாக வளர்க்கப்பட்ட சிறுகதை இறுதியில் கட்டுரை போன்று தடம் புரள்வது பரிதாபத்திற்குரியது.
பேய்த் தேர் என்ற கதை வங்கியில் காசு வைத்து மீட்க முடியாது தவிக்கும் ஆயிரக்கணக்காளரின் வகை மாதிரியாகக் குறிப்பிடக் கூடியது.
சமகால அரசியல் பிரச்சினைகளில் 'தீண்டாமை' விரதமிருக்காத பெண் எழுத்தாளரில் இவரும் ஒருவர். சமகால அரசியல் பிரச்சினையை, அரச படைகள் விளைவித்த கொடுமைகளை இவர் பிரதிபலிக்கத் தவறவில்லை. அப்பாவித் தமிழர்களைக் காரணமின்றிக் சிங்களப் படைகள் கொன்றொழித்த சம்பவங்களின் சில துளிகள் 'இரண்டு பௌர்ணமிகள்' கதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அமைதிக்கென்று வந்து இந்தியப் படைகள் புரிந்த கொடூரங்களை 'நேசக்கரங்கள்' வெளிப்படுத்துகிறது. ஆனால் இக் கதையும் நாட்குறிப்புக் கட்டுரைப் பாங்கில் அமைந்திருப்பது குறையே. அடக்கு முறைக்கு எதிராகப் புதிய தலைமுறை கிளர்ந்தெழுவது 'அடுப்பு நெருப்பு' கதையில் காட்டப்படுகிறது.
இவ்வாறு தான் கண்டுணர்ந்த சமூகக் களங்களிலிருந்து நல்ல கதைகளை, சமூகப் பிரக்ஞை மிக்க யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தால் தர முடிந்திருக்கிறது. அவரது அண்மைக்கதைகளும், விடுபட்டுப் போன ஏனைய கதைகளும் தொகுக்கப்படும்போது அவரின் படைப்பாளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். அதற்கு இந்நூல் முதலடி.


No comments:
Post a Comment