Saturday, October 8, 2011

இயல்வாணன் சிறுவர் பாடல்கள்

கணனி
சின்னஞ் சிறிய பெட்டிக்குள்ளே
பென்னம் பெரிய மூளை!
சின்னஞ் சிறிய பெட்டியதற்கு
கணனி என்று பெயராம்!

விசைப் பலகை சுட்டியும்
விரிதிரையும் மையமும்
இணைந்து ஒன்றாய் கணனியாம்
இணையில்லாத கருவியாம்!

பாட்டும் கதையும் கூறிடும்
படமும் வரைந்து காட்டிடும்
கேட்ட கணக்கும் தீர்த்திடும்
சேர்ந்து விளை யாடிடும்

சுட்டி கையில் பற்றியே
விசைப்பலகை தட்டுவோம்!
மட்டில்லாத மகிழ்வுடன்
கணனியோடு கூடுவோம்!
இயல்வாணன்



துவிச்சக்கர வண்டி

காலால் மிதிக்க ஓடும் வண்டி
காற்றை வலித்துப் போகும் வண்டி
ஆளாள் ஏற்றிச் செல்லும் வண்டி
அழகாய்ப் பயணம் செல்லும் வண்டி

பாரம் பலவும் சுமந் திடலாம்
பாதை எதிலும் சென் றிடலாம்
தூரம் குறுக்கி உள் வழியே
துணிவாயப் பயணம் செய் திடலாம்

எரிபொருளே தேவை யில்லை
எவரும் வாங்கும் எளிய விலை
நன்மை யதே நாளுஞ் செய்யும்
நச்சுப் புகை இதற்கு இல்லை.

இயல்வாணன்


காற்று

ஆடும் ஓடும் சுழன்றிடும்
அகப் பட்டதைத் தூக்கிடும்
பாடும் கூடும் தேடிடும்
பாரில் எங்கும் சென்றிடும்

இலையை மரத்தை அசைத்திடும்
இன்பந் தனை ஊட்டிடும்
வளியின் அசையும் வடிவமாம்
வண்ண முகிலை ஓட்டுமாம்

வாடை கச்சான் சோழகம்
வகை வகையாய்க் காற்றுக்கள்
தேடிக் காற்று வாங்குவோம்!
தெம்மாங்குதான் பாடுவோம்!

இயல்வாணன்










நிலவும் இரவும்

வானில் நிலவு எறிக்குது
வாகாய்க் கண்ணைப் பறிக்குது
வாடைக் காற்று வீசுது
வாசங் கொண்டு வீசுது

தென்னை மரமும் ஆடுது
சேர்ந்து ஓலை ஆடுது
வண்ண மரக் கிளைகளும்
நிலவில் ஒளிர்ந்து ஆடுது

தவளை த்தி நடக்குது
தாவி வெளவால் பறக்குது
அலறி ஆந்தை முறுக்குது
அரவம் கூடக் கொறிக்குது.

வீட்டு முன்றில் நின்றுமே
விரும்பி இதனைப் பார்ப்போம்
ஏட்டில் சொல்லிடா அழகது!
இன்பம் நிறைந்த பொழுதது!

இயல்வாணன்



ஆற்றங்கரைக் காட்சி

வாருங்கள் வாருங்கள் தோழியரே!
வண்ணக் குடந்தனைத் தூக்கிக் கொண்டு.
கூடுங்கள் பாடுங்கள் ஆடுங்கடி!
கும்மி கொட்டிக் கொண்டு சென்றிடுவோம்.

தோற்றும் கீழைவான் சூரியனார்
சுடரும் அழகதைப் பாருங்கடி!
ஆற்றில் சலசலத் தோடும் நீரில்
அணிவகுத்துச் செல்லும் மீன்கள் பாரீர்!

தூண்டில் கட்டியொரு மீனவனும்
தூய வெள்ளை நிறக் கொக்குகளும்
வேண்டும் வரங் கேட்டு நீரின்மீது
விரதமிருப்பதைப் பாருங்கடி!

மூழ்கியெழுந்து நீராடிடுவோம்!
முழுதும் உடைகளைத் துவைத்திடுவோம்!
மொண்டு குடந்தனை நிரப்பிடுவோம்!
மோதும் அலையெனத் திரும்பிடுவோம்!

இயல்வாணன்





சின்னப் பாப்பா

தத்தித் தத்தி நடந்து வரும் சின்னப் பாப்பா உந்தன்
புத்திக்குள்ளே ஒளிந்திருப்பது என்ன பாப்பா
முத்து முத்துப் பல் வரிசைச் சின்னப் பாப்பா
உந்தன்
முறுவலிலே மறைந்திருப்பது என்ன பாப்பா

கண்சிமிட்டி விழியுருட்டிக் காட்சி தருவாய்!
கையிரண்டும் தாளமிட ஆட்ட மிடுவாய்!
கண்டபடி வாய் பிதற்றிப் பாட்டுந் தருவாய்! எந்தன்
கனிமொழியே! யாவரதும் உள்ளம் நிறைவாய்!

கட்டிப் பிடித்தொரு போது முத்தமிடுவாய்!
கடிதெனவே மறுபோது கதறியழுவாய்!
வெட்டி வரும் மின்னலைப் போல் மாறிமறையும் உந்தன்
வெடிச்சிரிப்பும் அழுகையதும் சொல்வது என்ன?

இயல்வாணன்



எந்தமிழ்

வேங்கட மலை முதல் வெண்ணுரைக் குமரியில்
தீங்கெழில் செய்தமிழ் எந்தழிழே!
பூங்குழலார் மொழி போலிள மென்மையும்
பொலிந்திடு நன்மொழி எந்தமிழே!
ஆங்கொரு பாரதி ஆர்த்திடு கவிதையில்
அருவியாய்ப் பொழிந்ததும் எந்தமிழே!
தேங்கவி கம்பனும் வள்ளுவன் ஒளவையும்
திகட்டிடக் கவிதந்த தென் தமிழே!

















அப்பா
அப்பா நல்ல அப்பா
அருமை யான அப்பா
எப்போதெனினும் எமக்கு
ஏற்ற யாவும் தருவார்

தப்பாய் எதுவும் செய்தால்
தண்டித் தெம்மை வளர்ப்பார்
முப்போ துணவு தரவே
முயன்று உழைத்து வருவார்

தந்தை சொல்லை மதிப்போம்
தரணியில் முந்தி வாழ்வோம்
எந்தை எமக்கு உயிராம்
எம்மில் அவரும் உயிராம்

இயல்வாணன்