Friday, March 29, 2024

நேர்காணல் : வீணைமைந்தன்


விமர்சனம் அலெக்ஸ் பரந்தாமனின் பறையொலி

 விமர்சனம்

அலெக்ஸ் பரந்தாமனின் பறையொலி

அலெக்ஸ் பரந்தாமன் ஒரு சிறுகதை எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர் எனப் பல வகையிலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி. இவரது சிறுகதைகள் ஒரு பிடி அரிசி, தோற்றுப் போனவனின் வாக்குமூலம், அழுகைகள் நிரந்தரமில்லை முதலிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இது இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும்.

ஈழத்தில் வெளிவந்த சிறுகதைகளில் சாமானிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பேசும் சிறுகதைகளைப் பலரும் எழுதியுள்ளனர். ஆனால் அலெக்ஸ் பரந்தாமனின் கதைகள் சாமானிய மனிதர்களின் பாடுகளைப் பேசுவதையே பொதுப் போக்காகக் கொண்டவை. அவரது கதைகளில் வரும் கதாமாந்தர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற அடித்தட்டு மக்களாகவே உள்ளனர்.பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுகின்ற அன்றாடங் காய்ச்சிகள், தினக்கூலிகள், சலவைத் தொழிலாளர்கள், பறையடிப்பவர்கள் என்று விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், நெருக்கடிகளையும், துன்பங்களையுமே அவரது பெரும்பாலான கதைகள் பேசுகின்றன.

‘எழுத்தாளன் என்ற நிலைக்கப்பால் கதைகளை எழுதுபவன் எனும் மனவோட்டத்திலேயே என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை நான் அணுகுகிறேன். இந்த மனிதர்களிடத்திலிருந்தே எனது கதைக்கான கருக்கள் பிறக்கின்றன’ என்று நூலாசிரியர் குறிப்பிடுவது அவரது கதைகளின் உள்ளடக்கத்தை துலாம்பரப்படுத்துகின்றது.

இந்தத் தொகுதியில் உள்ள எட்டுக் கதைகளும் அவ்வாறானதே. சிறுகதை மஞ்சரியில் ஏலவே இவை பிரசுரமாகியுள்ளன. பாத்திரங்களை அவற்றின் இயல்புக்கூடாக விபரித்து, கதை சொல்லும் பாங்கே இவரது எழுத்து நடையாகும். அது பாத்திரங்களின் நல்ல கெட்ட பண்புகளை வாசகரிடத்தில் தொற்ற வைப்பதனூடாக கதையை நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளது.

இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து பரமன் காடழித்து உருவாக்கிய ஒரு காணியை தாயாரின் இறப்பின் பின்னர் சகோதரி பங்கு கேட்டு பிரதேச செயலகத்துக்கு மனுச் செய்த கதை அம்மான்ரை காணி. தாயாரின் காணியில் தனக்கும் பங்கிருக்கு. பங்கைத் தர வேண்டும் எனக் கேட்டு நிற்கும் சகோதரி தேவியின் சுயநலத்தை இக்கதையில் நூலூசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார்.

அவ்வாறே மலையகத் தொழிலாளர்களை வன்னி மண்ணில் வேலைக்கமர்த்தி தொழில் சுரண்டலைச் செய்து வாழும் பெரிய மனிதர்களை அம்பலப்படுத்தும் கதையாக கறிவேப்பிலைகள் கதையை அவர் எழுதியுள்ளார். கந்தவனத்தின் தோட்டத்தில் மாடாக உழைத்த மாடசாமி இறுதி யுத்தத்தில் இரு கால்களையும் கையொன்றையும் இழந்து சக்கர நாற்காலியில் பிச்சை எடுக்கிறான். அந்த நேரத்தில் சந்தையில் மாடசாமியைக் காணும் அவர் “உன்னைலெ;லாம் எனக்குத் தெரியாதே… ஆர் நீ?” என்று கேட்டு விட்டு நகர்வது காட்டப்படுகிறது. இவ்வாறு தொழில் சுரண்டல்களால் வாழ்க்கையை இழந்த பலரில் ஒருவனாகவே மாடசாமி நம்முன் தோன்றுகிறான்.

தன்னுடைய அகங்காரத்தாலும், பிடிவாதத்தாலும் தேவி என்ற பெண் தனது வாழ்வையும், தனது குடும்பத்தின் வாழ்வையும் கெடுத்து இறுதிக் காலத்தில் யாருமற்று தனது செயலுக்காக வருந்துவதை காலம் தின்ற வாழ்வு கதை பேசுகிறது. தான் மட்டுமல்ல தனது சகோதரியையும் திருமணம் செய்ய விடாது முதிர்கன்னிகளாக வாழ்வைத் தொலைத்த பல குடும்பங்களின் கதையின் ஒரு பருக்கையே இந்தக் கதையாகும்.

யுத்தத்தின் பின்னர் இனநல்லிணக்கம் பேசுவோரும், அடிப்படைவாதம் பேசுவோரும் கன்னை பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் காலமிது. ஒரு பஸ் சந்திப்பு திருமணத்தில் வந்து முடிகிறது. ஆண் காலிழந்த முன்னாள் போராளி. பெண் இராணுவத்தில் இருந்து போராளிகளால் கொல்லப்பட்ட சிப்பாயின் மனைவி. இருவருக்குமான சந்திப்புகள், புரிதல்கள் திருமணம் வரை செல்வதை சிங்களத்தி என்ற கதை பேசுகிறது. இதற்குள்ளால் அரசியல்வாதிகளின் கபடத்தனம், போராளிகளை சமூகம் கைக்கொண்ட விதம், உழைப்பைச் சுரண்ட எண்ணும் உறவுகள் எனப் பல விடயங்களை நூலாசிரியர் பேசுகிறார். பிரசன்ன விதானகேயின் பிறகு திரைப்படம் இன்னொரு கோணத்தில் பேசும் விடயத்தை அலெக்ஸ் பரந்தாமன் இக்கதையினூடாக வேறு கோணத்தில் பேசுகிறார்.

குடும்பத்துக்காக உழைத்து மாயும் மனிதர்கள் பற்றியும்(பாரந்தாங்கிகள்), முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதைச் சொல்வதாயும்(குழம்புச்சோறு), சாதி சார்ந்த சிக்கல்களைப் பேசுவதாயும் (காலசூட்சுமம், பறையொலி) இத்தொகுதியில்  கதைகள் உள்ளன. . ஆதிக்க சாதியினருக்கு அடங்கிய ஒரு தலைமுறை வாழ்வு நீங்கி புதிய தலைமுறை வீறுடன் எழுவதை இத்தொகுதியின் தலைப்பான பறையொலி சிறுகதை பேசுகிறது.

இந்த எட்டுக் கதைகளும் சமூகத்தின் போலித் தனங்களைப் பேசுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பையும், முயற்சியையும் பேசுகின்றன. ஏழை மக்களின் வாழ்வுப் பாடுகளைப் பேசுகின்றன. குடும்பங்களின் பொருளாதார  உறவுச் சிக்கல்களைப் பேசுகின்றன. இக்கதைகளின் அடிநாதமாக சாதாரண மக்களும், அவர்களின் வாழ்வியலுமே அமைந்துள்ளன. அவ்வகையில் அலெக்ஸ் பரந்தாமன் தனது எழுத்துகள் மூலம் அடித்தட்டு மக்களின் வலிகளையும் வாழ்வையும் நம் கண்முன் கொண்டு வருகிறார். அது வாசகருக்கு புது அனுபவங்களைத் தருவதாக இருக்கும்.

இயல்வாணன்