Monday, May 8, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 7

முன்றில் – 7

இயல்வாணன்

மிக எளிமையான, மென்மையான, அதிர்ந்து பேசாத ஒரு ஆளுமை யோகேஸ்வரி சிவப்பிரகாசம். சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ள இவர் பெண்ணிலைசார்ந்தும், ஆன்மீகம் சார்ந்தும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

அந்தக் காலத்தில் வெளிநாட்டு உத்தியோகம் என்பது மலேசியாவை மையமாகக் கொண்டதுதான். பலர் மலேசியாவின் அரச துறைகளிலும், தனியார் துறைகளிலும் பணியாற்றியுள்ளனர். மலாயன் பென்சனியர்கள் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் முக்கிய பாத்திரங்களாக விளங்கினர். அந்த வகையில் தொழில் நிமித்தம் மலேசியாவில் வசித்த சின்னத்துரை தம்பதியினரின் மகளாக யோகேஸ்வரி  13-11-1948இல் மலேசியாவில் (அப்போதய மலாயா) பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை   தங்களது தாயாரின் புர்வீக கிராமான இளவாலையில் வசித்த நிலையில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்திலும், மீண்டும் மலேசியா சென்று மலாயா இம்றோட் தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றார். பின்னர் மூளாயில் தனது தந்தையாரின் ஊரில் வசித்த போது பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு சமஸ்கிருதத்தில் சிறப்புப் பட்டம் பெற்று  வெளியேறினார். 1972இல் சாவகச்சேரி மக்கள் வங்கியில் உதவி முகாமையாளராகப் பணியை ஆரம்பித்து கன்னாதிட்டி கிளையில் முகாமையாளராகப் பதவியுயர்வு பெற்று  யாழ். பல்கலைக்கழகக் கிளையில் முகாமையாளராக இருந்து 2003இல் ஓய்வு பெற்றார்.

25-04-1965ஆம் ஆண்டு ஈழநாட்டில் துளசிராணி என்ற புனைபெயரில் எழுதிய “கடைசியாக ஒருமுறை“ என்ற சிறுகதையுடன் இவர் இலக்கிய உலகில் பிரவேசித்தார். முன்னதாக இலங்கை வானொலியின் இளைஞர் மன்றம், சுதந்திரன் பத்திரிகையின் வளர்மதி சிறுவர் பகுதி ஆகியவற்றிலும் இவர் எழுதியுள்ளார். ஈஸ்வரி, வாடாமலர், யோசி முதலான புனைபெயர்களிலும் இவர் எழுதியுள்ளார்.

தினகரன், வீரகேசரி, முரசொலி, ஈழமுரசு, ஈழநாதம், உதயன், ஈழநாடு, நமது ஈழநாடு, தினக்குரல், இளங்கதிர்,  மல்லிகை, ஞானம், ஜீவநதி, ஞானச்சுடர், அருள்ஒளி முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது எழுத்துகள் வெளிவந்துள்ளன.

இவரது 14 சிறுகதைகள் உணர்வின் நிழல்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு 1997இல் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்தது. ஈன்ற பொழுதில்(1999), கணநேர நினைவலைகள்(2001), மனம் விந்தையானதுதான்(2006), இன்னும் பேச வேண்டும்(2012), தாலி(2021) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் சிறுகதைகள் தனிமனித வாழ்க்கைச் சிக்கல்களையும், சமூக நடப்பினையும், மனித நடத்தைகளின் பல்வேறு கோலங்களையும்,  யுத்தகால மற்றும் யுத்தத்துக்குப் பின்னான கால வாழ்முறைகளையும், புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களையும் பேசுவன. எளிமையான மொழிக்கையாட்சி, இயல்பாக பாத்திரங்களைச் சிருஷ்டித்து நடமாட விடுதல், நேர்த்தியான சம்பவ விபரிப்பு என்பன அவரது சிறுகதைகளின் தனித்துவமெனலாம்.

எண்ணிலாக்குணமுடையோர்- நடைச்சித்திரம்(2010), அரைநிமிட நேரம் – சமயக் கட்டுரைகள்(2005), முன்னோர் சொன்ன கதைகள் – இளையோருக்கான படிப்பினைக் கதைகள் (2011), உனக்கொன்றுரைப்பேன்- பெண்ணிலைசார் கடித இலக்கியம்(2009), ஒளிவளர்தீபங்கள் – வலிகிழக்கின் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள்(2016) முதலான நூல்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

வடகோவை சபாபதி நாவலரின் நான்மணிகள்(2016), இருபாலை சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் ஆகிய நூல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

யாழ்.இலக்கிய வட்டம் முதலான அமைப்புகளில் இணைந்து செயற்பட்ட இவர் இலக்கிய சேவைக்காக பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட கலைக்குரிசில் விருது, சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கப்பட்ட ஞானச்சுடர் விருது, யாழ்முத்து விருது, சார்க் மகளிர் அமைப்பு விருது, உதயன் வெள்ளிவிழா விருது, கனகசெந்தி கதா விருது, சிரித்திரன் சுந்தர் விருது, இலக்கியத் தென்றல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது, செம்புலக்குரிசில் விருது எனப் பல விருதுகளும், பரிசுகளும் இவரது இலக்கிய சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.

தற்போது மகன் மற்றும் இரு மகள்களின் குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வரும் அவர் தொடர்ந்த வாசிப்போடும்,  எழுதும் ஆர்வத்தோடும் பயணிக்கிறார். அவரது வெளிவராச் சிறுகதைகளும், கட்டுரைகளும் தொகுக்கப்படும் போது அவரது பார்வை வீச்சின் ஆழத்தை மேலும் அறிய முடியும்.

07-05-2023 உதயன் சஞ்சீவி

 

இயல்வாணன் பத்தி - முன்றில் 6

 முன்றில் 6

இயல்வாணன்

குப்பிளான் ஐ சண்முகன் என்று எழுத்துலகில் அறியப்பட்ட ஐயாத்துரை சண்முகலிங்கம் கடந்த 24ஆந் திகதி தனது 77வது வயதில் இயற்கை எய்தினார். சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக, சமயப் பேச்சாளராக, விமர்சகராக எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த மனிதராகத் திகழ்ந்தவர் சண்முகன்.

குப்பிளான் என்ற விவசாயக் கிராமத்தில் 1946ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாந் திகதி பிறந்த இவர் குப்பிளான் விக்னேஸ்வர மகா வித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் மெதடிஸ்த மிசன் ஆங்கில பாடசாலை, தெல்லிப்பழை யுனியன் கல்லூரி ஆகியவற்றில் படித்து, கொழும்பில் ஒரு வருடமும் பேராதனையில் இரு வருடமுமாகக் கற்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாக வெளியேறினார். 1968இல் பரீட்சைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணியை ஆரம்பித்த இவர்  கல்வித் திணைக்களத்திலும் பணியாற்றினார்.  1984 முதல் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகச் சேவையாற்றி ஓய்வு பெற்றார்

1965ல் யுனியன் கல்லூரியில் உயர்தரத்தில் படிக்கும் காலத்தில் அங்கு வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகையில் இவரெழுதிய தமிழில் திறனாய்வு என்ற கட்டுரையே இவரது கன்னி முயற்சியாகும். 1966இல் இவரெழுதிய “பசி“ சிறுகதை ராதா சஞ்சிகையில் பிரசுரமாகி இவரை எழுத்துலகுக்கு இனங்காட்டியது. அலை, மல்லிகை, சிரித்திரன், ஈழநாடு, வீரகேசரி, சுதந்திரன், இளம்பிறை, அஞ்சலி, மங்கை, கற்பகம், எழில், நெய்தல், கலங்கரை, திசை, வாணி, ஏகலைவன் முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது படைப்புகள் வெளிவந்தன.

குப்பிழான் ஐ.சண்முகன் என்ற பிரதான புனைபெயரில் சிறுகதைகள் எழுதிய இவர் கற்பகன், பண்பாடகன், கற்பகன், கற்கரை கற்பவன் முதலான புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

இவரது 11 சிறுகதைகள் கொண்ட கோடுகளும் கோலங்களும் தொகுப்பு 1976இல் வெளிவந்ததுடன் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுக் கொண்டது. 21 கதைகள் கொண்ட சாதாரணங்களும் அசாதாரணங்களும்(1983), 12 கதைகள் கொண்ட உதிரிகளும்(2006), ஒரு பாதையின் கதை(2014), 10 கதைகள் அடங்கிய ஒரு தோட்டத்தின் கதை(2018) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

இவர் எழுதிய கவிதைகளின் தொகுதி பிரபஞ்ச சுருதி (2015) என்ற பெயரில் வெளியானது. பத்தி எழுத்துகளின் தொகுதி அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புகள்(2003) என்ற தலைப்பில் வெளியானது. நூல் அறிமுகங்கள், நூல் விமர்சனங்கள், திரைப்பட அறிமுகங்கள் மற்றும்  விமர்சனங்கள் இத்தொகுதியினுள் இடம்பெற்றுள்ளன.

குப்பிழான் ஐ.சண்முகனுடைய சிறுகதைகள் மென்னுணர்வுத் தளத்தில் கட்டவிழ்பவை. நேர்த்தியான பாத்திர வார்ப்பு, பாத்திரங்கள் இயல்பாக இயங்குவதனூடாக கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு, தங்குதடையற்ற எளிமையான மொழிநடை, பல்வேறு உத்திகளைக் கையாண்டு கதைகளை நகர்த்துதல் என்பன இவரது தனித்த அடையாளமெனலாம்.

அகவுணர்வுச் சிக்கல்களை, அக முரண்களை விபரிப்பனவாக இவரது கதைகள் உள்ளன. சாமானிய மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை, மனநிலைகளை, நடத்தைக் கோலங்களை, உணர்ச்சி வெளிப்பாட்டினை ஒரு ஒளிப்பதிவாளனின் லாவகத்தோடு குப்பிழான் ஐ.சண்முகன் பதிவு செய்துள்ளார். புறநிலை நின்று பார்க்கும் வகையிலும் கதைகளை எழுதியுள்ளார். கதைகளுக்கூடாக  மனிதாயப் பண்புகளை பாத்திரங்கள், அவற்றின் உரையாடல் மூலமாக இவரது கதைகளில் நாம் தரிசிக்கலாம். அவரிடம் உள்ள ஆன்மீக உணர்வையும் பல கதைகளிலும், கவிதைகளிலும் தொற்ற வைத்துள்ளார்.

அலை சஞ்சிகையின் முதல் 12 இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார். ஜீவநதி சஞ்சிகையின் ஆரம்ப இதழ்களில் ஆலோசகராக இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. புதிய தரிசனம் சஞ்சிகையின் ஆலோசகராகவும் இவர் செயற்பட்டுள்ளார். யாழ் இலக்கிய நண்பர்கள் கழகம், கொழும்பு கலை இலக்கிய நண்பர்கள் கழகம், இலங்கை வானொலி இளைஞர் மன்றம் ஆகிய அமைப்புகளிலும் இவர் இணைந்து செயற்பட்டுள்ளார்.

எழுத்துலகுக்கு அப்பால் ஒரு சமயப் பேச்சாளராகவும் இவர் விளங்கினார். சமயக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இசையார்வம் மிக்கவராகவும் இளையவர்களைத் தட்டிக் கொடுத்து வழிப்படுத்தும் நல்லாசிரியராகவும் விளங்கியுள்ளார்.

இவரது எழுத்துலக சேவைகளுக்காக பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். சாகித்திய விருது, வடமாகாண ஆளுநர் விருது, கலாபுஷணம் விருது, பேராதனை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட சங்கச் சான்றோன் விருது, அவை இலக்கிய விருது, கரவெட்டி பிரதேச செயலக விருது, சந்நிதியான் ஆச்சிரமம் வழங்கிய ஞானச் சுடர் விருது, சொந்த ஊரான குப்பிழானில் பெற்ற இலக்கிய ஞானச் சுடர், சமூகதிலகம் விருதுகள் எனப் பல அவரது எழுத்தூழியம் மற்றும் சமய சமூகப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளன. அவரது பவளவிழாவையொட்டி ஜீவநதி சஞ்சிகை சிறப்பு மலர் வெளியிட்டு அவரைக் கௌரவித்துள்ளது.

 கலை இலக்கிய சேவையாற்றி, மனிதப் பண்புகளுடன் வாழ்ந்த குப்பிழான் ஐ.சண்முகன் அவரது படைப்புகள் மூலமாகவும், நண்பர்களின் உள்ளத்திலும் என்றும் வாழ்வார்.

உதயன் சஞ்சீவி  30-04-2023

 

இயல்வாணன் பத்தி - முன்றில் 5

முன்றில் 5

இயல்வாணன்

மலையக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் படைப்புகளை அங்கு பணியாற்றிய பலர் பதிவு செய்துள்ளனர். அவ்வகையில் மருத்துவத்துறையில் பணியாற்றிய நந்தி(சிவஞானசுந்தரம்), தி.ஞானசேகரன், புலோலியுர் க.சதாசிவம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் ஒரு நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, பத்தி எழுத்தாளராக, சஞ்சிகை ஆசிரியராக, வெளியீட்டாளராக, இலக்கிய நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராக என ஈழத்து இலக்கியத்துக்கு தளராத பணியாற்றி வருபவர் தி.ஞானசேகரன்.

15-04-1941இல் புன்னாலைக்கட்டுவனில் வைதீக நெறிமுறையில் ஊறிய அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஞானசேகர ஐயருக்கு 82 வயது நிறைவடைந்துள்ளது. வைதீக நியமங்களுக்கு உட்பட்டு பொற்சிறையில் வாடும் புனிதராக வாழாமல் தனது கல்வியாலும், படைப்பாற்றலினாலும் உயர்ந்து இன்று பெரும் ஆளுமையாக எம்முன் நிற்கிறார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கற்கை பயின்று மலையகத்தில் நீண்ட காலம் வைத்தியராகக் கடமை புரிந்துள்ள இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகிறார்.

1964ஆம் ஆண்டு மாசி மாதம் வெளிவந்த கலைச்செல்வி சஞ்சிகையில் எழுதிய “பிழைப்பு“ என்ற சிறுகதையுடன் இவர் படைப்புலகுக்குள் பிரவேசித்தார். தொடர்ந்து கலசம், கதம்பம், ஈழநாடு, வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினக்குரல், சுவடு, ஞானம் முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாயின. தமிழ்நாட்டில் கலைமகளில் இவரது உயிர்த்துணை என்ற சிறுகதை பிரசுரமாகியது.

இத்தகைய 12 சிறுகதைகளை காலதரிசனம் என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியாக 1973இல்  வெளியிட்டார். இவரது இன்னொரு சிறுகதைத் தொகுதி அல்சேஷனும் ஒரு புனைக்குட்டியும் 1998இல் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்தது. 11 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைப் பட்டப் படிப்புக்கு ஒரு பாடநூலாக 10ஆண்டுகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2005இல் ஞானசேகரன் சிறுகதைகள் என்ற நூலும் வெளிவந்துள்ளது.

இவர் எழுதிய முதல் நாவல் புதிய சுவடுகள் வீரகேசரி நிறுவனம் நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதுடன் வீரகேசரி பிரசுரமாகவும் 1977இல் வெளிவந்தது. யாழ்ப்பாண வாழ்வியலை வெளிக்காட்டும் வகையில் சாதியப் பிரச்சினைகளையும் வெளிப்படுத்துவதாக இந்நாவல் அமைந்திருந்தது.

இவரை அதிகம் திரும்பிப் பார்க்க வைத்த நாவல் குருதிமலை. மலையக மக்களின் அவல வாழ்வியலை, நில அபகரிப்புக்கு எதிரான அம்மக்களின் எழுச்சியைப் பேசிய இந்நாவலும் வீரகேசரி பிரசுரமாகவே 1979இல் வெளிவந்தது. “குருதிமலை ஞானசேகரன்“ என அழைக்குமளவுக்கு இந்நாவல் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலைமாணி பட்டப்படிப்புக்கு இந்நூல் ஒரு துணைப் பாடநூலாக பயன்படுத்தப்பட்டமை இந்நாவலின் முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.

மலையக மக்களின் வாழ்வியலைப் பேசும் லயத்துச் சிறைகள் (1994)நாவலையும், கவ்வாத்து(1996) குறுநாவலையும் இவர் எழுதியுள்ளார். ஒரு வைத்தியராக மலையக மக்களோடு பணியாற்றிய வகையில் அவர்களது வாழ்நிலைத் துன்பங்களை நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் இவர் படைத்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினையை மையமாக வைத்து இவர் எழுதிய நாவல் எரிமலை. இது 2018இல் ஞானம் பதிப்பக வெளியீடாக வெளிவந்ததுடன் ஆங்கில சிங்கள மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.  வி.தில்லைநாதனின் மொழிபெயர்ப்பில் Valcano என்ற பெயரில் 2019இல் இந்நாவல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. எரிமலை நாவல் 1984ஆம் ஆண்டு எழுதப்பட்டதாக ஞானசேகரன் குறிப்பிடுகிறார். அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியதன் காரண காரியத் தொடர்புகளை இந்நாவல் பேசுகின்றது.

2000ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றார். தொடர்ச்சித் தன்மையுடன் வெளிவரும் இச்சஞ்சிகை மூலம் பல படைப்பாளிகளை எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஏலவே எழுதிக் கொண்ருக்கும் படைப்பாளிகள் பலரது ஆக்கங்களும் ஞானத்தில் இடம்பெற்றுள்ளன. பல சிறப்பிதழ்களையும் வெளியிட்டுள்ளார். போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ் என்பன இவற்றுள் முக்கியமானதாகும்.

ஞானம் சஞ்சிகைக்காக மூத்த இலக்கிய ஆளுமைகளை இவர் நேர்கண்டுள்ளார். இவற்றில் இரு நேர்காணல்கள் கா.சிவத்தம்பி இலக்கியமும் வாழ்க்கையும்(2005), சாகித்தியரத்னா செங்கை ஆழியான்(2013) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர்கள் தொடர்பில் இவர் எழுதிய கட்டுரைகள் சரித்திரம் பேசும் சாகித்திய ரத்னா விருதாளர்கள்(2018) என்ற நூலாக வெளிவந்துள்ளது.

ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கங்கள் புரிதலும் பகிர்தலும்(1999) என்ற தலைப்பிலும், பத்தி எழுத்துகள் யாவரும் கேளிர்(2022) என்ற தலைப்பிலும் வெளிவந்துள்ளன. ஜீவநதி சஞ்சிகையில் இவர் தொடராக எழுதி வந்த சுயசரிதை எனது இலக்கியத்தடம்(2013) முதலாம் பாகமாக வெளிவந்துள்ளது.

அத்துடன் பல்வேறு இடங்களுக்கும் மேற்கொண்ட பயணங்களை மையமாக வைத்து பயண இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். அவை அலுஸ்திரேலிய பயணக் கதை(1999), வட இந்திய பயண அனுபவங்கள்(2013), இலண்டன் பயண அனுபவங்கள்(2015), ஐரோப்பிய பயண அனுபவங்கள்(2016), கனடா பயண அனுபவங்கள்(2018) என நூல்களாக வெளிவந்துள்ளன.  தனது ஊரான புன்னாலைக்கட்டுவனின் சிறப்புகளைக் கூறும் புன்னைநகர் மான்மியம்(2021) என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார்.

ஞானம் பதிப்பகம் மூலம் பல படைப்பாளிகளின் நூல்களையும், தொகுப்பு நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் மாநாடு முதலான பல இலக்கிய நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார். இவரது பவள விழாவையொட்டி  ஞானரதம் என்ற சிறப்பு மலர் செ.சுதர்சனால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

இவ்வாறு தமிழிலக்கியத்துக்கு தளராத பணியாற்றிய தி.ஞானசேகரன் ஆயிரம் பிறைகண்டு தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

உதயன் சஞ்சீவி 23-04-2023





 

இயல்வாணன் பத்தி - முன்றில் 4

 



முன்றில் 4

இயல்வாணன்

மனிதர்கள் அகவை நிறைவைக் காண்பது பெரிய விடயமல்ல. ஆனால் ஒரு நிறுவனம் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்வதென்பது பெரிய விடயமே. மார்க்ஸிய சிந்தனை வழிப்பட்ட ஒரு இடதுசாரிய அமைப்பின் இலக்கியக் குழுவாக உருவாக்கப்பட்டதே தேசிய கலை இலக்கியப் பேரவை. 1974இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு பரவலாக புத்தக அரங்க விழாக்கள் நடைபெற்று வருகின்றது.

புதிய ஜனநாயகம் - புதிய வாழ்வு - புதிய பண்பாடு என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றி வருகின்றது. யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மலையகம் ஆகிய இடங்களில் தனது செயற்பாட்டினை மேற்கொண்டு வரும் இவ்வமைப்பு அந்த இடங்களில் பல்வேறு ஆய்வரங்குகளையும், கருத்தமர்வுகளையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவை வாசிப்பை ஊக்குவிப்பதில் பெரிதும் சிரத்தையெடுத்து வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. 2000 ஆண்டுகளில் கிராமங்களுக்கு வந்து மக்கள் மத்தியில் நூற்கண்காட்சிகளை நடத்தி, விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது. சனசமூக நிலையங்கள், ஆலய மண்டபங்களை மையப்படுத்தி இந்தச் செயற்திட்டம் அப்போது முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளில் மறைந்த கவிஞர் முருகையன் கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துரையாற்றிமை முக்கியமானதாகும்.

அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும் தேசிய கலை இலக்கியப் பேரவை  வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வு, அறிவியல் எனப் பலதரப்பட்ட நூல்கள் தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தை ம.சண்முகலிங்கம், சி.சிவசேகரம், இ.முருகையன், மாவை வரோதயன், க.தணிகாசலம், இணுவையுர் சிதம்பர திருச்செந்திநாதன், சட்டநாதன், சுபைர் இளங்கீரன், மாதவி உமாசுதசர்மா, சோ.தேவராஜா, நந்தினி சேவியர், இரா.சடகோபன், முல்லை அமுதன், அழ.பகீரதன், சி.மௌனகுரு, சோ.கிருஸ்ணராஜா, கே.எஸ்.சிவகுமாரன், தாமரைச்செல்வி, நீர்கொழும்புர் முத்துலிங்கம், சுபத்திரன், ந.ரவீந்திரன், தில்லைச்சிவன், செ.குணரத்தினம், சோ.பத்மநாதன், சுல்பிகா, மஹாகவி, இதயராசன், பவித்திரன், ரஞ்சகுமார், சுதாராஜ், சி.பற்குணம், இளவாலை விஜயேந்திரன், சபா ஜெயராசா, க.சிதம்பரநாதன் எனப் பலரது படைப்புகள் தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டு, மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் சவுத் ஏசியன் புக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பல நூல்கள் வெளியிடப்பட்டமையால் இந்தியாவிலும் ஈழத்துப் படைப்புகளை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.

தேசிய கலை இலக்கியப் பேரவை ஆரம்பிக்கப்பட்ட 1974ஆம் ஆண்டிலேயே தாயகம் என்ற சஞ்சிகையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 7 இதழ்களுடன் நின்று போன இவ்விதழ் 1983ஆம் ஆண்டிலிருந்து ஓரளவு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுள்ளது. “தாயகம் சஞ்சிகை கலை கலைக்காக என்பதையும், வணிக நோக்குக்கு நிகரான மிக மலினப்படுத்தப்பட்ட இலக்கியப் போக்கையும் நிராகரித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி சமரசமற்ற பாதையில் வழிநடந்து வந்துள்ளது. அத்துடன் அனைத்து முற்போக்கு, ஜனநாயக மக்கள் சார்பு கலை இலக்கியங்களை என்றும் வரவேற்று வருவதுடன் படைப்பாளிகளுக்கிடையேயான புரிந்துணர்வையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி வந்துள்ளது“ என தாயகம் சஞ்சிகையின் 100வது இதழில் குறிப்பிடப்பட்டுள்ளமை அதன் நோக்குநிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.

 தாயகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் பல படைப்பாளிகள் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். காத்திரமான பல படைப்புகள் இச்சஞ்சிகையில் வெளிவந்தன. சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு விடயங்கள் சார்ந்து சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலான ஆக்கங்கள் பலவும் இந்த இதழ்களில் வெளிவந்தன.

 அத்துடன் புதுவசந்தம் இதழ்கள் வருடாந்த சிறப்பு மலர்களாக வெளிவந்துள்ளன. பல்வேறு ஆக்கங்களையும் உள்ளடக்கிய கனதியான மலராக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இதழ் 1973இல் ஆரம்பிக்கப்பட்டாலும் அது தொடர்ச்சியற்று, பின் 2000களில் ஆண்டு மலர்களாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை இலக்கியப் பேரவையினால் சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆரம்பிக்கப்பட்டு, சமகாலத்தில் பேசுபொருளாகவுள்ள விடயங்கள் பற்றி விடய அறிவுள்ளவர்களை அழைத்து கருத்துரைகள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முழுமதி தினத்தை மையமாக வைத்து மாதாந்தம் இந்தக் கருத்தமர்வு நடைபெறுவது வழமை. ஆரம்பத்தில் பலாலி ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற இந்தக் கருத்தமர்வுகள் பின்னர் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை அலுவலகத்தில் நடைபெறுகின்றது. 2011, 2012ஆம் ஆண்டுகளில் சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் கலந்துரையாடல் குறிப்புகள் பிரசுரங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை இலக்கியப் பேரவை 50 வருடங்களை நிறைவு செய்வதையொட்டி பல்வேறு பிரதேசங்களிலும் நூறு மலர்கள் மலரட்டும் என்ற தலைப்பிலான புத்தக அரங்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், அரங்கு சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் மூன்று தினங்கள், இரண்டு தினங்கள் கொண்டதாக இந்த நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தேசிய கலை இலக்கியப் பேரவை கொக்குவிலில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா மல்லாகம் மகா வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி,  இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த வாரம் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் நடைபெறுகிறது.

பேரவையின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாதாந்த ஆய்வரங்குகளும் நடைபெற்று வருகின்றன. ஈழத்து அரங்கு, நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் முதலான பல்வேறு கலை இலக்கிய விடயங்கள் சார்ந்து இந்த ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஈழத்தின் கலை இலக்கிய சமூக மேம்பாட்டுக்கான காத்திரமான திசைவழியில் தேசிய கலை இலக்கியப் பேரவை பயணித்து, சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதன் வரலாற்றுப் பாத்திரம் பெரியது. அது 50வது ஆண்டை நிறைவு செய்வது கூட சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டங்களுடனேயே நினைவுகூரப்படுவது முக்கியமானதாகும்.

உதயன் சஞ்சீவி 16-04-2023

Sunday, May 7, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 3

 முன்றில் 3

இயல்வாணன்

 

சாந்தன் என எழுத்துலகில் அறியப்படும் ஐயாத்துரை சாந்தன் தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைகதைகளை எழுதி வருபவர்களில் முக்கியமானவர். 1947ஆம் ஆண்டு சுதுமலையில் பிறந்த அவர்  குடிசார் பொறியியலில் பட்டம் பெற்றவர். அத்துடன் சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணி பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றவர். குடிசார் பொறியியற்துறையிலும் ஆங்கில பாடத்திலும் விரிவுரையாளராக பணியாற்றியிருக்கிறார். ருஷ் மொழி பயின்றதுடன் லுமும்பா பல்கலைக்கழகத்தின் புஷ்கின் நிலையத்தில் ஈராண்டு ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார்.

.பொ.. உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருந்த வேளை அவரது முதலாவது சிறுகதையான பார்வை கலைச்செல்வி இதழில் 1966இல் வெளிவந்தது. தொடர்ந்து வீரகேசரி, தினகரன், சுதந்திரன், விவேகி, கதம்பம், மல்லிகை, இளம்பிறை, சமர்,களம், வெளிச்சம்,மூன்றாவது மனிதன், கலைமுகம், ஞானம், முரசொலி, ஈழமுரசு, ஈழநாதம், உதயன் சஞ்சீவி எனப் பல்வேறு பத்திரிகைகள் சஞ்சிகைகளில் இவரது எழுத்துகள் வெளிவந்தன. கணையாழி, தாமரை, சாவி, புதியபார்வை, அகநாழிகை, யுகமாயினி, பாலம் முதலான தமிழக இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

1970இல் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு பார்வை வெளிவந்தது. கடுகு குறுங்கதைத் தொகுதி(1975), ஒரே ஒரு ஊரிலே சிறுகதைகள்(1975), ஒட்டுமா நாவல்(1978), முளைகள் சிறுகதைகள்(1982), கிருஷ்ணன் தூது சிறுகதைகள்(1982), ஆரைகள் நெடுங்கதை(1985), இன்னொரு வெண்ணிரவு சிறுகதைகள்(1988), காலங்கள் சிறுகதைகள்(1994), யாழ் இனிது சிறுகதைகள்(1998), ஒருபிடி மண் சிறுகதைகள்(1999), எழுதப்பட்ட அத்தியாயங்கள் குறுநாவல் மற்றும் சிறுகதைகள்(2001), விளிம்பில் உலாவுதல் குறுநாவல்கள்(2007), சிட்டுக்குருவி சிறுகதைகள்(2014), சித்தன் சரிதம் நாவல்(2001)  ஆகிய இவரது புனைவுகள் நூல்களாக வெளிவந்துள்ளன.

சாந்தன் சோவியத் யூனியனுக்குப் பயணம் மேற்கொண்டு  ஒளி சிறந்த நாட்டிலே என்ற தலைப்பிலும்;(1985), கென்யாவுக்குப் பயணம் செய்து காட்டு வெளியிடை என்ற தலைப்பிலும்(2007), இந்தியாவில்  இலக்கியப் பயணத்தை மேற்கொண்டு எழுத்தின் மொழி என்ற தலைப்பிலும்(2020)  பயணக் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். சஞ்சீவியில் 28 வாரங்கள் எழுதிய இலக்கியக் கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்(2005) என்ற தலைப்பிலும், எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுதி கேண்மை(2018) என்ற தலைப்பிலும் வெளிவந்துள்ளன.

40 பிறமொழிக் கவிஞர்களின் கவிதைகளை சாந்தன் மொழிபெயர்த்துள்ளார். இது கனவெல்லாம் எதுவாகும்(2017) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. அவ்வாறே பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட 18 கதைகளை ஆங்கிலம் வழியே சாந்தன் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார். இது என் முதல் வாத்து(2016) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஜுல்ஸ் வேர்ணின் சிறுவர் நாவலை சாந்தன் மொழிபெயர்த்துள்ளார். இது பூமியின் மையத்திற்கு ஒரு பயணம்(2006) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

சாந்தன் ஆங்கிலத்தில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களும் எழுதியுள்ளார். அவரால் எழுதப்பட்ட The Sparks (1990), In Their own words (2000), The Northern Front (2005) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், The Whirlwind (2011), Rails Run Parallel (2015), Every Journey Ends (2018) ஆகிய நாவல்களும், Survival and Simple Things (2002) கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. அத்துடன் சாந்தனின் எழுத்துகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பல தொகுப்பு நூல்களிலும் அவரது தமிழ், ஆங்கிலப் படைப்புகள் வெளிவந்துள்ளன.

இலங்கை அரசின் உயர்விருதான சாகித்திய ரத்னா, இந்திய அரசின் சாகித்திய அக்கடமியால் பிறநாட்டுப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் பிரேம்சந்த் தகைசார் விருது, ராஜஸ்தானில் வழங்கப்பட்ட சாகித்தியஸ்ரீ விருது, பெயர்வே வாழ்நாள் சாதனையாளர் விருது, கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது, வடக்கு மாகாண அரசின் உயர்விருதான முதலமைச்சர் விருது உட்பட பல விருதுகள் அவரது இலக்கியப் பங்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக தமது நூல்களுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்றுக் கொண்ட ஒரே எழுத்தாளர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.

சாந்தனின் படைப்புகள் தனித்துத் தெரிவன. அவரது படைப்புகளில் சொற்சிக்கனத்தையும், ஆழ்ந்த பொருண்மையையும் கண்டு கொள்ளலாம். படைப்புகளின் பேசுபொருளும், பேசும் முறையும் தனித்துவமானவை. அவரது எழுத்தாளுமையை பறை சாற்றும் வகையில் சாந்தன் படைப்புலகம் என்ற பெருந்தொகுப்பு வெளிவந்துள்ளது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலில் சாந்தனின் ஆளுமையைத் தரிசிக்கலாம்.

யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் ஈஸ்வரநாதபிள்ளை குமரன், கலாசார உத்தியோகத்தர் திருமதி தக்சாயினி செல்வகுமார் ஆகியோரால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் மிகக் காத்திரமான முறையில் தொகுக்கப்பட்டுள்ளமை முக்கியமானதாகும்இந்நூலில் .குமரனின் பதிப்புரை, தி.ஞானசேகரன், கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் ஆகியோரின் கட்டுரைகள் சாந்தனின் எழுத்துகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் தெளிவாக முன்வைக்கின்றன.

சாந்தன் எழுதிய 90 சிறுகதைகள், 37 குறுங்கதைகள், 17 குறுநாவல்கள், ஒட்டுமா நாவல், 3பயணக் கட்டுரைகளின் பகுதிகள், நேர்காணல்கள், நூன்முகங்கள், 6 கட்டுரைகள், 6புனைவுகள், விமர்சனங்கள், பார்வைகள், புகைப்பட மற்றும் தகவல் ஆதாரங்கள் என்பன இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. சாந்தனின் முழுப் படைப்புகளும் உள்ளடங்காவிடினும் அவர் தமிழில் எழுதியவற்றுள் பெருமளவானவை இப்பெருந் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பானதாகும்.

சாந்தன் பற்றி அறிய வேண்டிய, ஆய்வு செய்ய வேண்டிய ஒருவருக்கு மிகச் சிறந்த வழிகாட்டலைத் தரக்கூடிய வகையில் 939 பக்கங்களில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அண்மைய ஆண்டுகளில் இத்தகைய பல தொகுப்புகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. தேடற்கரிய பல பழமையான நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளது. பல மூத்த படைப்பாளிகளது படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாழும் ஆளுமையான சாந்தனது படைப்புகளைத் தொகுத்து, அவரது எழுத்து ஊழியத்தைக் கௌரவித்துள்ளது எனலாம்.

நூற்குறிப்பு :சாந்தன் படைப்புலகம்/ தொகுப்பும் பதிப்பும்: ஈஸ்வரநாதபிள்ளை குமரன், திருமதி தக்சாயினி செல்வகுமார்/ வெளியீடு: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு.

உதயன் சஞ்சீவி 09-04-2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 2

 

முன்றில் 2

இயல்வாணன்

கருணாகரன் நாடறிந்த கவிஞர்,  சிறுகதை எழுத்தாளர், ஊடகவியலாளர், பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர், சஞ்சிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர் என்பதற்கப்பால் அவர் ஒரு இலக்கிய இயக்கமாகவே திகழ்ந்தவர். திகழ்பவர். கருணாகரன் இருக்குமிடம் ஒரு இலக்கிய மையமாகவே இருக்கும். கலைஞர்கள், இலக்கியகர்த்தாக்கள் பலரும் அவரைத் தேடி வருவார்கள். கலை, இலக்கியம் தொடர்பான விவாதங்களை அங்கு தினமும் எதிர்பார்க்கலாம். அடையா நெடுங் கதவாக இருக்கும் அவரது இல்லத்தை நாடி வந்து அவருடன் உரையாடி,  விருந்தோம்பிச் செல்வது இலக்கியகர்த்தாக்களின் வாடிக்கையாயிருந்தது. அதனால் எந்த நாளிலும் ஒரு தமிழ்ச்சங்கம் அங்கு இயங்கும். பின்னாளில் முரண்பட்டுக் கொண்டவர்கள் உட்பட பலரை எழுத்துலகுக்குள் இழுத்து விட்டவர், வழிகாட்டியவர் அவர் என்பது மிகைக் கூற்றல்ல.

இயக்கச்சி என்னும் கிராமத்தில் பிறந்ததால் இயக்கச்சி கருணாகரன்“ என்று ஆரம்பத்தில் அறிமுகமான அவர் நீண்ட காலமாக வெளிச்சம் கலை இலக்கிய சமூக இதழின் ஆசிரியராக இருந்தமையால் வெளிச்சம் கருணாகரன் என்ற அடைமொழிக்குள்ளாலும் அறியப்பட்டவர். வெளிச்சத்துக்கூடாக பல எழுத்தாளர்களின் படைப்புகளைச் செம்மைப்படுத்தி, அவர்களை வாசிக்கத் தூண்டி, தேர்ந்த படைப்பாளிகளாக உருவாக்கியவர். புதுவை இரத்தினதுரையுடன் இணைந்து பல கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியவர். பல படைப்பாளிகளை நேர்கண்டு வெளியிட்டவர். அதுபோல தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் அவர் இருந்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் 1983ஆம் ஆண்டு ஈழப் புரட்சி அமைப்பில்(ஈரோஸ்) போராளியாக இணைந்து செயற்பட்ட அவர் அந்த அமைப்பின் பொதுமை பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். பல வெளியீடுகள் வெளிவருவதற்கும் உதவியவர்.

1963 செப்ரெம்பர் 5ஆந் திகதி பிறந்த அவருக்கு இவ்வாண்டு அறுபது அகவை நிறைகின்றது. 1981இல் தினகரனில் வெளிவந்த கவிதையுடன் எழுத்துலகில் பிரவேசித்த அவர் ஆரம்பத்தில்  மல்லிகையிலும், தாயகத்திலும் கவிதைகள் பலவற்றை எழுதினார்.  வெளிச்சத்தில் பிரஹலாத ஹேமந்த் என்ற பெயரில் சிறுகதைகள் பலவற்றை எழுதினார். அத்துடன் ஈழநாதம் பத்திரிகையில் வெளிவாசல் பாலன் என்ற பெயரில் சமூகவியல் சார்ந்த பத்தியினை எழுதினார். வீரகேசரி பத்திரிகையில் கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன் என்ற பெயரில் அரசியல் கட்டுரைகள் பலவற்றை எழுதினார். பின்னர் அவரது அரசியல் கட்டுரைகள் சொந்தப் பெயரில் வெளிவந்தன. கிராமங்கள் பற்றிய ஒரு பத்தியினை சிக்மலிங்கம் றெஜினோல்ட் என்ற பெயரில் புதுவிதியில் எழுதினார். போரினால் அழிந்து போன கிராமங்களை எழுத்தினால் மீள உயிர்ப்பிக்கின்ற கட்டுரைகளாக இவை உள்ளன. அத்துடன் ஆரதி என்ற பெயரில் சினிமா சார்ந்த கட்டுரைகளை ஈழநாதம் பத்திரிகையில் எழுதினார். விமலேஸ்வரி, சுலோசனா தேவராசா, காஞ்சனா வரதரூபன், மக்ஸ்வெல் மனோகரன், ஞானமுத்து, விதுல் சிவராஜா போன்ற புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார்.

பல இலக்கியக் கட்டுரைகளையும், நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார். அத்துடன் நூற்றுக்கு மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களையும், நூல் அறிமுக நிகழ்வுகளையும், திரைப்படக் காட்சிகளையும் நடத்தியுள்ளார். கிளிநொச்சி வாசகர் வட்டம், மக்கள் சிந்தனைக் களம் ஆகிய அமைப்புகளையும் உருவாக்கியுள்ளார்.

கருணாகரனின் கவிதைகள் பல நூல்களாக வெளிவந்துள்ளதுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், கன்னடம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது யாருடைய வீடு கவிதை தரம் 11 பாடநூலிலும் இடம்பெற்றிருந்தது. ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்(1999), ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்(2003), பலியாடு(2009), எதுவுமல்ல எதுவும்(2010), ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்(2012), நெருப்பின் உதிரம்(2014), இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் (2015), படுவான்கரைக் குறிப்புகள் நெடுங்கவிதை(2015), உலகின் முதல் ரகசியம்(2019), நினைவின் இறுதிநாள்(2019), கடவுள் என்பது துரோகியாய் இருத்தல்(2021), மௌனத்தின் மீது வேறொருவன்(2021), இரவின் தூரம்(2021) ஆகிய 13 கவிதைத் தொகுதிகள் ஏலவே வெளிவந்துள்ளன.

 இவரது 14 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு  வேட்டைத் தோப்பு(2014) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. கிராமங்கள் பற்றிய பத்திகளின் தொகுப்பு இப்படியும் ஒரு காலம்(2014) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. வன்னிக் கிராமங்களின் இயல்பான வாழ்வைப் பேசும் இந்நூல் சிங்களத்தில் மதக வன்னிய(வன்னி நினைவுகள்) என்ற தலைப்பில் அனு சிவலிங்கத்தால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்து இரண்டு பதிப்புகளையும் கண்டுள்ளது. அன்பின் திசைகள் (2018) என்ற பத்திகளின் தொகுப்பு நூலும், கவிதைகள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய எதிர் நூலும் (2022) வெளிவந்துள்ளன.

இவரால் சாமானிய மனிதர்கள் முதல் கலைஞர்கள் வரை மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு புகைப்படக்காரன் பொய் சொல்வதில்லை (2016) என்ற நூலாக வெளிவந்துள்ளது. தொகை நூல் உட்பட பல நூல்கள் இவ்வாண்டு வெளிவரவுள்ளன. மகிழ் வெளியீட்டகத்தினூடாக பல நூல்களை நேர்த்தியாக வெளியிட்டவர்.

எஸ்போஸ் தொடர்பான அவரது கட்டுரை நூல் அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றனர்(2016) என்ற சிறுநூலாக வெளிவந்தது. பின்னர் சித்தாந்தன், .தயாளனுடன் இணைந்து எஸ்போஸ் படைப்புகள் (2016) நூலைத் தொகுத்தார். வெளிச்சம் கவிதைகள், வெளிச்சம் சிறுகதைகள், வானம் எம்வசம், செம்மணி, ஆனையிறவு, குவார்ணிக்கா முதலான தொகுப்புகளும் அவரது பங்களிப்பிலானது.

கருணாகனின் கவிதைகள் எளிமையான மொழியில் ஆழ்ந்த பொருளுணர்த்தும் தன்மை கொண்டன. மிக லாவகமாக உணர்வுத் தொற்றலைச் செய்வன. ஒரு பயணியாக வழியில் கண்டடைந்த நினைவுகளை மீளுருவாக்கம் செய்கிறார்.

அவரது இரவின் தூரம் தொகுதி விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும், பின்னர் வீட்டிலும் ஓய்வாக இருந்த வேளையில் அந்த வலியை ஏனையவர்களுக்கும் தொற்ற வைக்கக்கூடிய வகையில் எழுதப்பட்ட கவிதைகளாகும். தூக்கமற்ற இரவுகளின் பாடல்,வைத்தியசாலைக் குறிப்புகள் என்ற இரு பகுதிகளான கவிதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. அவ்வாறே கடவுள் என்பது துரோகியாயிருத்தல் நூலானது மத்தியூ என்ற பாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுதியாகும். இதனை தமிழின் முதல் முயற்சியாக அடையாளங் காணும் பேராசிரியர் .ராமசாமி கடந்த காலத்தை  நிகழ்காலத்துக்குள் இழுத்து வரும் வேலையைச் செய்பவராக இருப்பதே கருணாகரனின் தனித்த அடையாளம் என்று சொல்வது முக்கியமானது.

கருணாகரனின் அருளப்பட்ட மீன் கவிதைத் தொகுதி அண்மையில்  வெளிவந்துள்ளது. இதிலுள்ள எந்தக் கவிதைகளுக்கும் தலைப்பு இல்லை. இதற்கு முன்னைய தொகுதிகள் சிலவற்றிலும் தலைப்பற்ற கவிதைகள் பலவுள்ளன.

எனக்கு அருளப்பட்ட மீன்/இந்தக் கடலில் நீந்திக் கொண்ருக்கிறது/ இந்தக் கடலுக்கென்று அருளப்பட்டவன்/ கரையில் நிற்கிறேன்/ பட்டப்பகலில்.தோன்றா நட்சத்திரம் / உற்று நோக்கிக் கொண்ருக்கிறது/ மீனை/ என்னை/ கரையை/ மீன் அறியுமா என்னை/தன்னை/ இந்தக் கடலை/ கரையை/ அதன் அருளை? / அருளப்பட்ட மீன் தானென்பதை? என்று ஒரு கவிதை சொல்கிறது.

சீருடையைக் கழற்றி வைத்த பிறகு/ தானொரு பொலிஸ்காரன் /  என்பதை மறந்து விட்டார் குணசேகர/  நீங்கள் ஒரு பொலிஸ்காரர்தான் / என்று அவரை நம்ப வைப்பதற்குப் பெரும்பாடாயிற்று/  பிறகொருநாள் சீருடையிலும் /  தானொரு பொலிஸ்காரன் / என்பதை மறந்து விட்டார் குணசேகர/ அன்றுதான் அவர் மிகச் சரியான / பொலிஸ்காரராக இருந்தார் /  அன்றிலிருந்து நீங்கள் பொலிஸ்காரரில்லை/  என்றது பொலிஸ் தரப்பு/ தான் எப்போது பொலிஸ்காரராக இருந்தேன் என்பதை/  அடியோடு மறந்து விட்டார் குணசேகர/ மனிதருக்குச் சிறகு முளைப்பது இப்படித்தான் என்று இன்னொரு கவிதை பேசுகிறது. இலங்கையில் நடந்த அரகலய எழுச்சியின் போது நடைபெற்ற ஒரு சம்பவம் இப்படிக் கவிதையாகியிருக்கிறது.

யாருக்காகவோ பெய்கிறது மழை/  நானும் நீயுந்தான் நனைகிறோம் /  நம்முடைய சைக்கிளும் நனைகிறது / அதோ இரண்டு மைனாக்கள் /  அவையும் நனைகின்றன/  அவைக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்? .. சிந்தப்பட்ட குருதியை/  புதைமேட்டை/  அழியா நினைவுகளை/  கழுவிச் செல்கிறது வெள்ளம்/ யாருக்காகவோ பெய்யும் மழை/  யாருக்கோ மட்டும் பெய்வதில்லை என்று இன்னொரு கவிதை. இவ்வாறு சொற்கள் இழைந்து வரும் பல கவிதைகள் இந்நூலில் உள்ளன. ஆயினும் கருணாகரனின் கவிதைகளின் சொற்செறிவை மீறிய கவிதைகளாக இரவின் தூரம், அருளப்பட்ட மீன் தொகுதிகளை என்னால் பார்க்க முடிகிறது.

நூற் குறிப்பு : அருளப்பட்ட மீன்- கவிதைகள் /  பரிசல் வெளியீடு/  96 பக்கங்கள் /  இந்திய ரூபா 120.00

உதயன் சஞ்சீவி 02-04-2023