Sunday, May 7, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 3

 முன்றில் 3

இயல்வாணன்

 

சாந்தன் என எழுத்துலகில் அறியப்படும் ஐயாத்துரை சாந்தன் தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைகதைகளை எழுதி வருபவர்களில் முக்கியமானவர். 1947ஆம் ஆண்டு சுதுமலையில் பிறந்த அவர்  குடிசார் பொறியியலில் பட்டம் பெற்றவர். அத்துடன் சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணி பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றவர். குடிசார் பொறியியற்துறையிலும் ஆங்கில பாடத்திலும் விரிவுரையாளராக பணியாற்றியிருக்கிறார். ருஷ் மொழி பயின்றதுடன் லுமும்பா பல்கலைக்கழகத்தின் புஷ்கின் நிலையத்தில் ஈராண்டு ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார்.

.பொ.. உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருந்த வேளை அவரது முதலாவது சிறுகதையான பார்வை கலைச்செல்வி இதழில் 1966இல் வெளிவந்தது. தொடர்ந்து வீரகேசரி, தினகரன், சுதந்திரன், விவேகி, கதம்பம், மல்லிகை, இளம்பிறை, சமர்,களம், வெளிச்சம்,மூன்றாவது மனிதன், கலைமுகம், ஞானம், முரசொலி, ஈழமுரசு, ஈழநாதம், உதயன் சஞ்சீவி எனப் பல்வேறு பத்திரிகைகள் சஞ்சிகைகளில் இவரது எழுத்துகள் வெளிவந்தன. கணையாழி, தாமரை, சாவி, புதியபார்வை, அகநாழிகை, யுகமாயினி, பாலம் முதலான தமிழக இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

1970இல் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு பார்வை வெளிவந்தது. கடுகு குறுங்கதைத் தொகுதி(1975), ஒரே ஒரு ஊரிலே சிறுகதைகள்(1975), ஒட்டுமா நாவல்(1978), முளைகள் சிறுகதைகள்(1982), கிருஷ்ணன் தூது சிறுகதைகள்(1982), ஆரைகள் நெடுங்கதை(1985), இன்னொரு வெண்ணிரவு சிறுகதைகள்(1988), காலங்கள் சிறுகதைகள்(1994), யாழ் இனிது சிறுகதைகள்(1998), ஒருபிடி மண் சிறுகதைகள்(1999), எழுதப்பட்ட அத்தியாயங்கள் குறுநாவல் மற்றும் சிறுகதைகள்(2001), விளிம்பில் உலாவுதல் குறுநாவல்கள்(2007), சிட்டுக்குருவி சிறுகதைகள்(2014), சித்தன் சரிதம் நாவல்(2001)  ஆகிய இவரது புனைவுகள் நூல்களாக வெளிவந்துள்ளன.

சாந்தன் சோவியத் யூனியனுக்குப் பயணம் மேற்கொண்டு  ஒளி சிறந்த நாட்டிலே என்ற தலைப்பிலும்;(1985), கென்யாவுக்குப் பயணம் செய்து காட்டு வெளியிடை என்ற தலைப்பிலும்(2007), இந்தியாவில்  இலக்கியப் பயணத்தை மேற்கொண்டு எழுத்தின் மொழி என்ற தலைப்பிலும்(2020)  பயணக் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். சஞ்சீவியில் 28 வாரங்கள் எழுதிய இலக்கியக் கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்(2005) என்ற தலைப்பிலும், எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுதி கேண்மை(2018) என்ற தலைப்பிலும் வெளிவந்துள்ளன.

40 பிறமொழிக் கவிஞர்களின் கவிதைகளை சாந்தன் மொழிபெயர்த்துள்ளார். இது கனவெல்லாம் எதுவாகும்(2017) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. அவ்வாறே பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட 18 கதைகளை ஆங்கிலம் வழியே சாந்தன் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார். இது என் முதல் வாத்து(2016) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஜுல்ஸ் வேர்ணின் சிறுவர் நாவலை சாந்தன் மொழிபெயர்த்துள்ளார். இது பூமியின் மையத்திற்கு ஒரு பயணம்(2006) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

சாந்தன் ஆங்கிலத்தில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களும் எழுதியுள்ளார். அவரால் எழுதப்பட்ட The Sparks (1990), In Their own words (2000), The Northern Front (2005) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், The Whirlwind (2011), Rails Run Parallel (2015), Every Journey Ends (2018) ஆகிய நாவல்களும், Survival and Simple Things (2002) கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. அத்துடன் சாந்தனின் எழுத்துகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பல தொகுப்பு நூல்களிலும் அவரது தமிழ், ஆங்கிலப் படைப்புகள் வெளிவந்துள்ளன.

இலங்கை அரசின் உயர்விருதான சாகித்திய ரத்னா, இந்திய அரசின் சாகித்திய அக்கடமியால் பிறநாட்டுப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் பிரேம்சந்த் தகைசார் விருது, ராஜஸ்தானில் வழங்கப்பட்ட சாகித்தியஸ்ரீ விருது, பெயர்வே வாழ்நாள் சாதனையாளர் விருது, கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது, வடக்கு மாகாண அரசின் உயர்விருதான முதலமைச்சர் விருது உட்பட பல விருதுகள் அவரது இலக்கியப் பங்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக தமது நூல்களுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்றுக் கொண்ட ஒரே எழுத்தாளர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.

சாந்தனின் படைப்புகள் தனித்துத் தெரிவன. அவரது படைப்புகளில் சொற்சிக்கனத்தையும், ஆழ்ந்த பொருண்மையையும் கண்டு கொள்ளலாம். படைப்புகளின் பேசுபொருளும், பேசும் முறையும் தனித்துவமானவை. அவரது எழுத்தாளுமையை பறை சாற்றும் வகையில் சாந்தன் படைப்புலகம் என்ற பெருந்தொகுப்பு வெளிவந்துள்ளது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலில் சாந்தனின் ஆளுமையைத் தரிசிக்கலாம்.

யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் ஈஸ்வரநாதபிள்ளை குமரன், கலாசார உத்தியோகத்தர் திருமதி தக்சாயினி செல்வகுமார் ஆகியோரால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் மிகக் காத்திரமான முறையில் தொகுக்கப்பட்டுள்ளமை முக்கியமானதாகும்இந்நூலில் .குமரனின் பதிப்புரை, தி.ஞானசேகரன், கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் ஆகியோரின் கட்டுரைகள் சாந்தனின் எழுத்துகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் தெளிவாக முன்வைக்கின்றன.

சாந்தன் எழுதிய 90 சிறுகதைகள், 37 குறுங்கதைகள், 17 குறுநாவல்கள், ஒட்டுமா நாவல், 3பயணக் கட்டுரைகளின் பகுதிகள், நேர்காணல்கள், நூன்முகங்கள், 6 கட்டுரைகள், 6புனைவுகள், விமர்சனங்கள், பார்வைகள், புகைப்பட மற்றும் தகவல் ஆதாரங்கள் என்பன இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. சாந்தனின் முழுப் படைப்புகளும் உள்ளடங்காவிடினும் அவர் தமிழில் எழுதியவற்றுள் பெருமளவானவை இப்பெருந் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பானதாகும்.

சாந்தன் பற்றி அறிய வேண்டிய, ஆய்வு செய்ய வேண்டிய ஒருவருக்கு மிகச் சிறந்த வழிகாட்டலைத் தரக்கூடிய வகையில் 939 பக்கங்களில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அண்மைய ஆண்டுகளில் இத்தகைய பல தொகுப்புகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. தேடற்கரிய பல பழமையான நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளது. பல மூத்த படைப்பாளிகளது படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாழும் ஆளுமையான சாந்தனது படைப்புகளைத் தொகுத்து, அவரது எழுத்து ஊழியத்தைக் கௌரவித்துள்ளது எனலாம்.

நூற்குறிப்பு :சாந்தன் படைப்புலகம்/ தொகுப்பும் பதிப்பும்: ஈஸ்வரநாதபிள்ளை குமரன், திருமதி தக்சாயினி செல்வகுமார்/ வெளியீடு: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு.

உதயன் சஞ்சீவி 09-04-2023

No comments:

Post a Comment