Monday, May 8, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 5

முன்றில் 5

இயல்வாணன்

மலையக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் படைப்புகளை அங்கு பணியாற்றிய பலர் பதிவு செய்துள்ளனர். அவ்வகையில் மருத்துவத்துறையில் பணியாற்றிய நந்தி(சிவஞானசுந்தரம்), தி.ஞானசேகரன், புலோலியுர் க.சதாசிவம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் ஒரு நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, பத்தி எழுத்தாளராக, சஞ்சிகை ஆசிரியராக, வெளியீட்டாளராக, இலக்கிய நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராக என ஈழத்து இலக்கியத்துக்கு தளராத பணியாற்றி வருபவர் தி.ஞானசேகரன்.

15-04-1941இல் புன்னாலைக்கட்டுவனில் வைதீக நெறிமுறையில் ஊறிய அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஞானசேகர ஐயருக்கு 82 வயது நிறைவடைந்துள்ளது. வைதீக நியமங்களுக்கு உட்பட்டு பொற்சிறையில் வாடும் புனிதராக வாழாமல் தனது கல்வியாலும், படைப்பாற்றலினாலும் உயர்ந்து இன்று பெரும் ஆளுமையாக எம்முன் நிற்கிறார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கற்கை பயின்று மலையகத்தில் நீண்ட காலம் வைத்தியராகக் கடமை புரிந்துள்ள இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகிறார்.

1964ஆம் ஆண்டு மாசி மாதம் வெளிவந்த கலைச்செல்வி சஞ்சிகையில் எழுதிய “பிழைப்பு“ என்ற சிறுகதையுடன் இவர் படைப்புலகுக்குள் பிரவேசித்தார். தொடர்ந்து கலசம், கதம்பம், ஈழநாடு, வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினக்குரல், சுவடு, ஞானம் முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாயின. தமிழ்நாட்டில் கலைமகளில் இவரது உயிர்த்துணை என்ற சிறுகதை பிரசுரமாகியது.

இத்தகைய 12 சிறுகதைகளை காலதரிசனம் என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியாக 1973இல்  வெளியிட்டார். இவரது இன்னொரு சிறுகதைத் தொகுதி அல்சேஷனும் ஒரு புனைக்குட்டியும் 1998இல் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்தது. 11 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைப் பட்டப் படிப்புக்கு ஒரு பாடநூலாக 10ஆண்டுகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2005இல் ஞானசேகரன் சிறுகதைகள் என்ற நூலும் வெளிவந்துள்ளது.

இவர் எழுதிய முதல் நாவல் புதிய சுவடுகள் வீரகேசரி நிறுவனம் நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதுடன் வீரகேசரி பிரசுரமாகவும் 1977இல் வெளிவந்தது. யாழ்ப்பாண வாழ்வியலை வெளிக்காட்டும் வகையில் சாதியப் பிரச்சினைகளையும் வெளிப்படுத்துவதாக இந்நாவல் அமைந்திருந்தது.

இவரை அதிகம் திரும்பிப் பார்க்க வைத்த நாவல் குருதிமலை. மலையக மக்களின் அவல வாழ்வியலை, நில அபகரிப்புக்கு எதிரான அம்மக்களின் எழுச்சியைப் பேசிய இந்நாவலும் வீரகேசரி பிரசுரமாகவே 1979இல் வெளிவந்தது. “குருதிமலை ஞானசேகரன்“ என அழைக்குமளவுக்கு இந்நாவல் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலைமாணி பட்டப்படிப்புக்கு இந்நூல் ஒரு துணைப் பாடநூலாக பயன்படுத்தப்பட்டமை இந்நாவலின் முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.

மலையக மக்களின் வாழ்வியலைப் பேசும் லயத்துச் சிறைகள் (1994)நாவலையும், கவ்வாத்து(1996) குறுநாவலையும் இவர் எழுதியுள்ளார். ஒரு வைத்தியராக மலையக மக்களோடு பணியாற்றிய வகையில் அவர்களது வாழ்நிலைத் துன்பங்களை நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் இவர் படைத்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினையை மையமாக வைத்து இவர் எழுதிய நாவல் எரிமலை. இது 2018இல் ஞானம் பதிப்பக வெளியீடாக வெளிவந்ததுடன் ஆங்கில சிங்கள மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.  வி.தில்லைநாதனின் மொழிபெயர்ப்பில் Valcano என்ற பெயரில் 2019இல் இந்நாவல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. எரிமலை நாவல் 1984ஆம் ஆண்டு எழுதப்பட்டதாக ஞானசேகரன் குறிப்பிடுகிறார். அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியதன் காரண காரியத் தொடர்புகளை இந்நாவல் பேசுகின்றது.

2000ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றார். தொடர்ச்சித் தன்மையுடன் வெளிவரும் இச்சஞ்சிகை மூலம் பல படைப்பாளிகளை எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஏலவே எழுதிக் கொண்ருக்கும் படைப்பாளிகள் பலரது ஆக்கங்களும் ஞானத்தில் இடம்பெற்றுள்ளன. பல சிறப்பிதழ்களையும் வெளியிட்டுள்ளார். போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ் என்பன இவற்றுள் முக்கியமானதாகும்.

ஞானம் சஞ்சிகைக்காக மூத்த இலக்கிய ஆளுமைகளை இவர் நேர்கண்டுள்ளார். இவற்றில் இரு நேர்காணல்கள் கா.சிவத்தம்பி இலக்கியமும் வாழ்க்கையும்(2005), சாகித்தியரத்னா செங்கை ஆழியான்(2013) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர்கள் தொடர்பில் இவர் எழுதிய கட்டுரைகள் சரித்திரம் பேசும் சாகித்திய ரத்னா விருதாளர்கள்(2018) என்ற நூலாக வெளிவந்துள்ளது.

ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கங்கள் புரிதலும் பகிர்தலும்(1999) என்ற தலைப்பிலும், பத்தி எழுத்துகள் யாவரும் கேளிர்(2022) என்ற தலைப்பிலும் வெளிவந்துள்ளன. ஜீவநதி சஞ்சிகையில் இவர் தொடராக எழுதி வந்த சுயசரிதை எனது இலக்கியத்தடம்(2013) முதலாம் பாகமாக வெளிவந்துள்ளது.

அத்துடன் பல்வேறு இடங்களுக்கும் மேற்கொண்ட பயணங்களை மையமாக வைத்து பயண இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். அவை அலுஸ்திரேலிய பயணக் கதை(1999), வட இந்திய பயண அனுபவங்கள்(2013), இலண்டன் பயண அனுபவங்கள்(2015), ஐரோப்பிய பயண அனுபவங்கள்(2016), கனடா பயண அனுபவங்கள்(2018) என நூல்களாக வெளிவந்துள்ளன.  தனது ஊரான புன்னாலைக்கட்டுவனின் சிறப்புகளைக் கூறும் புன்னைநகர் மான்மியம்(2021) என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார்.

ஞானம் பதிப்பகம் மூலம் பல படைப்பாளிகளின் நூல்களையும், தொகுப்பு நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் மாநாடு முதலான பல இலக்கிய நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார். இவரது பவள விழாவையொட்டி  ஞானரதம் என்ற சிறப்பு மலர் செ.சுதர்சனால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

இவ்வாறு தமிழிலக்கியத்துக்கு தளராத பணியாற்றிய தி.ஞானசேகரன் ஆயிரம் பிறைகண்டு தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

உதயன் சஞ்சீவி 23-04-2023





 

No comments:

Post a Comment