Sunday, May 7, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 2

 

முன்றில் 2

இயல்வாணன்

கருணாகரன் நாடறிந்த கவிஞர்,  சிறுகதை எழுத்தாளர், ஊடகவியலாளர், பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர், சஞ்சிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர் என்பதற்கப்பால் அவர் ஒரு இலக்கிய இயக்கமாகவே திகழ்ந்தவர். திகழ்பவர். கருணாகரன் இருக்குமிடம் ஒரு இலக்கிய மையமாகவே இருக்கும். கலைஞர்கள், இலக்கியகர்த்தாக்கள் பலரும் அவரைத் தேடி வருவார்கள். கலை, இலக்கியம் தொடர்பான விவாதங்களை அங்கு தினமும் எதிர்பார்க்கலாம். அடையா நெடுங் கதவாக இருக்கும் அவரது இல்லத்தை நாடி வந்து அவருடன் உரையாடி,  விருந்தோம்பிச் செல்வது இலக்கியகர்த்தாக்களின் வாடிக்கையாயிருந்தது. அதனால் எந்த நாளிலும் ஒரு தமிழ்ச்சங்கம் அங்கு இயங்கும். பின்னாளில் முரண்பட்டுக் கொண்டவர்கள் உட்பட பலரை எழுத்துலகுக்குள் இழுத்து விட்டவர், வழிகாட்டியவர் அவர் என்பது மிகைக் கூற்றல்ல.

இயக்கச்சி என்னும் கிராமத்தில் பிறந்ததால் இயக்கச்சி கருணாகரன்“ என்று ஆரம்பத்தில் அறிமுகமான அவர் நீண்ட காலமாக வெளிச்சம் கலை இலக்கிய சமூக இதழின் ஆசிரியராக இருந்தமையால் வெளிச்சம் கருணாகரன் என்ற அடைமொழிக்குள்ளாலும் அறியப்பட்டவர். வெளிச்சத்துக்கூடாக பல எழுத்தாளர்களின் படைப்புகளைச் செம்மைப்படுத்தி, அவர்களை வாசிக்கத் தூண்டி, தேர்ந்த படைப்பாளிகளாக உருவாக்கியவர். புதுவை இரத்தினதுரையுடன் இணைந்து பல கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியவர். பல படைப்பாளிகளை நேர்கண்டு வெளியிட்டவர். அதுபோல தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் அவர் இருந்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் 1983ஆம் ஆண்டு ஈழப் புரட்சி அமைப்பில்(ஈரோஸ்) போராளியாக இணைந்து செயற்பட்ட அவர் அந்த அமைப்பின் பொதுமை பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். பல வெளியீடுகள் வெளிவருவதற்கும் உதவியவர்.

1963 செப்ரெம்பர் 5ஆந் திகதி பிறந்த அவருக்கு இவ்வாண்டு அறுபது அகவை நிறைகின்றது. 1981இல் தினகரனில் வெளிவந்த கவிதையுடன் எழுத்துலகில் பிரவேசித்த அவர் ஆரம்பத்தில்  மல்லிகையிலும், தாயகத்திலும் கவிதைகள் பலவற்றை எழுதினார்.  வெளிச்சத்தில் பிரஹலாத ஹேமந்த் என்ற பெயரில் சிறுகதைகள் பலவற்றை எழுதினார். அத்துடன் ஈழநாதம் பத்திரிகையில் வெளிவாசல் பாலன் என்ற பெயரில் சமூகவியல் சார்ந்த பத்தியினை எழுதினார். வீரகேசரி பத்திரிகையில் கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன் என்ற பெயரில் அரசியல் கட்டுரைகள் பலவற்றை எழுதினார். பின்னர் அவரது அரசியல் கட்டுரைகள் சொந்தப் பெயரில் வெளிவந்தன. கிராமங்கள் பற்றிய ஒரு பத்தியினை சிக்மலிங்கம் றெஜினோல்ட் என்ற பெயரில் புதுவிதியில் எழுதினார். போரினால் அழிந்து போன கிராமங்களை எழுத்தினால் மீள உயிர்ப்பிக்கின்ற கட்டுரைகளாக இவை உள்ளன. அத்துடன் ஆரதி என்ற பெயரில் சினிமா சார்ந்த கட்டுரைகளை ஈழநாதம் பத்திரிகையில் எழுதினார். விமலேஸ்வரி, சுலோசனா தேவராசா, காஞ்சனா வரதரூபன், மக்ஸ்வெல் மனோகரன், ஞானமுத்து, விதுல் சிவராஜா போன்ற புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார்.

பல இலக்கியக் கட்டுரைகளையும், நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார். அத்துடன் நூற்றுக்கு மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களையும், நூல் அறிமுக நிகழ்வுகளையும், திரைப்படக் காட்சிகளையும் நடத்தியுள்ளார். கிளிநொச்சி வாசகர் வட்டம், மக்கள் சிந்தனைக் களம் ஆகிய அமைப்புகளையும் உருவாக்கியுள்ளார்.

கருணாகரனின் கவிதைகள் பல நூல்களாக வெளிவந்துள்ளதுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், கன்னடம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது யாருடைய வீடு கவிதை தரம் 11 பாடநூலிலும் இடம்பெற்றிருந்தது. ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்(1999), ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்(2003), பலியாடு(2009), எதுவுமல்ல எதுவும்(2010), ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்(2012), நெருப்பின் உதிரம்(2014), இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் (2015), படுவான்கரைக் குறிப்புகள் நெடுங்கவிதை(2015), உலகின் முதல் ரகசியம்(2019), நினைவின் இறுதிநாள்(2019), கடவுள் என்பது துரோகியாய் இருத்தல்(2021), மௌனத்தின் மீது வேறொருவன்(2021), இரவின் தூரம்(2021) ஆகிய 13 கவிதைத் தொகுதிகள் ஏலவே வெளிவந்துள்ளன.

 இவரது 14 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு  வேட்டைத் தோப்பு(2014) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. கிராமங்கள் பற்றிய பத்திகளின் தொகுப்பு இப்படியும் ஒரு காலம்(2014) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. வன்னிக் கிராமங்களின் இயல்பான வாழ்வைப் பேசும் இந்நூல் சிங்களத்தில் மதக வன்னிய(வன்னி நினைவுகள்) என்ற தலைப்பில் அனு சிவலிங்கத்தால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்து இரண்டு பதிப்புகளையும் கண்டுள்ளது. அன்பின் திசைகள் (2018) என்ற பத்திகளின் தொகுப்பு நூலும், கவிதைகள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய எதிர் நூலும் (2022) வெளிவந்துள்ளன.

இவரால் சாமானிய மனிதர்கள் முதல் கலைஞர்கள் வரை மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு புகைப்படக்காரன் பொய் சொல்வதில்லை (2016) என்ற நூலாக வெளிவந்துள்ளது. தொகை நூல் உட்பட பல நூல்கள் இவ்வாண்டு வெளிவரவுள்ளன. மகிழ் வெளியீட்டகத்தினூடாக பல நூல்களை நேர்த்தியாக வெளியிட்டவர்.

எஸ்போஸ் தொடர்பான அவரது கட்டுரை நூல் அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றனர்(2016) என்ற சிறுநூலாக வெளிவந்தது. பின்னர் சித்தாந்தன், .தயாளனுடன் இணைந்து எஸ்போஸ் படைப்புகள் (2016) நூலைத் தொகுத்தார். வெளிச்சம் கவிதைகள், வெளிச்சம் சிறுகதைகள், வானம் எம்வசம், செம்மணி, ஆனையிறவு, குவார்ணிக்கா முதலான தொகுப்புகளும் அவரது பங்களிப்பிலானது.

கருணாகனின் கவிதைகள் எளிமையான மொழியில் ஆழ்ந்த பொருளுணர்த்தும் தன்மை கொண்டன. மிக லாவகமாக உணர்வுத் தொற்றலைச் செய்வன. ஒரு பயணியாக வழியில் கண்டடைந்த நினைவுகளை மீளுருவாக்கம் செய்கிறார்.

அவரது இரவின் தூரம் தொகுதி விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும், பின்னர் வீட்டிலும் ஓய்வாக இருந்த வேளையில் அந்த வலியை ஏனையவர்களுக்கும் தொற்ற வைக்கக்கூடிய வகையில் எழுதப்பட்ட கவிதைகளாகும். தூக்கமற்ற இரவுகளின் பாடல்,வைத்தியசாலைக் குறிப்புகள் என்ற இரு பகுதிகளான கவிதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. அவ்வாறே கடவுள் என்பது துரோகியாயிருத்தல் நூலானது மத்தியூ என்ற பாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுதியாகும். இதனை தமிழின் முதல் முயற்சியாக அடையாளங் காணும் பேராசிரியர் .ராமசாமி கடந்த காலத்தை  நிகழ்காலத்துக்குள் இழுத்து வரும் வேலையைச் செய்பவராக இருப்பதே கருணாகரனின் தனித்த அடையாளம் என்று சொல்வது முக்கியமானது.

கருணாகரனின் அருளப்பட்ட மீன் கவிதைத் தொகுதி அண்மையில்  வெளிவந்துள்ளது. இதிலுள்ள எந்தக் கவிதைகளுக்கும் தலைப்பு இல்லை. இதற்கு முன்னைய தொகுதிகள் சிலவற்றிலும் தலைப்பற்ற கவிதைகள் பலவுள்ளன.

எனக்கு அருளப்பட்ட மீன்/இந்தக் கடலில் நீந்திக் கொண்ருக்கிறது/ இந்தக் கடலுக்கென்று அருளப்பட்டவன்/ கரையில் நிற்கிறேன்/ பட்டப்பகலில்.தோன்றா நட்சத்திரம் / உற்று நோக்கிக் கொண்ருக்கிறது/ மீனை/ என்னை/ கரையை/ மீன் அறியுமா என்னை/தன்னை/ இந்தக் கடலை/ கரையை/ அதன் அருளை? / அருளப்பட்ட மீன் தானென்பதை? என்று ஒரு கவிதை சொல்கிறது.

சீருடையைக் கழற்றி வைத்த பிறகு/ தானொரு பொலிஸ்காரன் /  என்பதை மறந்து விட்டார் குணசேகர/  நீங்கள் ஒரு பொலிஸ்காரர்தான் / என்று அவரை நம்ப வைப்பதற்குப் பெரும்பாடாயிற்று/  பிறகொருநாள் சீருடையிலும் /  தானொரு பொலிஸ்காரன் / என்பதை மறந்து விட்டார் குணசேகர/ அன்றுதான் அவர் மிகச் சரியான / பொலிஸ்காரராக இருந்தார் /  அன்றிலிருந்து நீங்கள் பொலிஸ்காரரில்லை/  என்றது பொலிஸ் தரப்பு/ தான் எப்போது பொலிஸ்காரராக இருந்தேன் என்பதை/  அடியோடு மறந்து விட்டார் குணசேகர/ மனிதருக்குச் சிறகு முளைப்பது இப்படித்தான் என்று இன்னொரு கவிதை பேசுகிறது. இலங்கையில் நடந்த அரகலய எழுச்சியின் போது நடைபெற்ற ஒரு சம்பவம் இப்படிக் கவிதையாகியிருக்கிறது.

யாருக்காகவோ பெய்கிறது மழை/  நானும் நீயுந்தான் நனைகிறோம் /  நம்முடைய சைக்கிளும் நனைகிறது / அதோ இரண்டு மைனாக்கள் /  அவையும் நனைகின்றன/  அவைக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்? .. சிந்தப்பட்ட குருதியை/  புதைமேட்டை/  அழியா நினைவுகளை/  கழுவிச் செல்கிறது வெள்ளம்/ யாருக்காகவோ பெய்யும் மழை/  யாருக்கோ மட்டும் பெய்வதில்லை என்று இன்னொரு கவிதை. இவ்வாறு சொற்கள் இழைந்து வரும் பல கவிதைகள் இந்நூலில் உள்ளன. ஆயினும் கருணாகரனின் கவிதைகளின் சொற்செறிவை மீறிய கவிதைகளாக இரவின் தூரம், அருளப்பட்ட மீன் தொகுதிகளை என்னால் பார்க்க முடிகிறது.

நூற் குறிப்பு : அருளப்பட்ட மீன்- கவிதைகள் /  பரிசல் வெளியீடு/  96 பக்கங்கள் /  இந்திய ரூபா 120.00

உதயன் சஞ்சீவி 02-04-2023

 

No comments:

Post a Comment