Wednesday, September 22, 2021

கவிதை மூழ்கி எழல்





 கவிதை


மூழ்கி எழல்
*************
1


மீண்டும் ஒரு முறை முகப்புத்தகத்துள் நுழைந்து
 முதல் விருப்பக் குறியை இட்டேன்.

சில காதல் குறிகளையும்
சில கவலைக் குறிகளையும்
சில ஆச்சரியக் குறிகளையும்
ஹாஸ்யக் குறிகளையும் கூட இட நேர்ந்தது.

முதலாவது வாழ்த்தைப் பதிந்தது கண்ணனுக்கு.
அவன் சொந்தமாக சைக்கிள் ஒன்றை வாங்கி இருந்தான். 

சில பிறந்தநாள் 
சில திருமண நாள் 
பதவியேற்ற வருட நிறைவுகள்
நான்கு கவிதைகள்
பதினெட்டு கருத்தூட்டங்கள்
சில சுய படங்கள் 
எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்! 

தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கும் தம்பட்டங்கள்
உப்புச் சப்பற்ற கருத்தூட்டங்கள்
எல்லாவற்றுக்கும்
 'ஆள்' கருதிய விருப்பக் குறிகள்! 

வந்து விழும் மரணச் சேதிகளுக்கு ஒரு துயர் பகிர்வு. 

தனக்கு விருப்பக் குறி கூட இடுவதில்லை எனக் 
குறைப்பட்ட கவிஞருக்கு
இடையிடையே சபாஷ்! 

தன்னைப் பற்றிய விமர்சனத்துக்கு
விருப்பக் குறி இட்டதால் 
விமர்சகர் 'பிரான்' 
 நட்பு நீக்கம் செய்ததால்
வரும் விமர்சனங்களுக்கு
ஒரு மௌனம். 

தன்னுடைய கருத்தூட்டத்துக்கு
கொமன்ற் எழுதுமாறு 
தொலைபேசியில் 
சொல்லியவருக்கு
ஒரு 'ஆஹா' கொமன்ற். 

இதற்கு அப்பால் இடையிடையே
நானும் இருக்கிறேன் என்பதற்கான பிரலாபங்கள். 
படங்கள். 

கூலிங் கிளாஸுடன் சகிக்க முடியாத ஒரு சுயபடம் வெளியிட்டவருக்கு 
அழகோ அழகு என எழுதி விட்டு
முகநூலை மூடுகிறேன். 

இலக்கியவெளி ஜனவரி -ஜுன் 2022

 2

நேற்றெங்கள் தெருவில்
ஒலிபெருக்கி பூட்டிய ஓட்டோ
மரணச் செய்தியை 
விதைத்துச் சென்றது.

வழக்கமான ஒன்றுதான்! 
சின்னத்துரை பொன்னம்பலம்
மரணித்து விட்டாராம்!
யாரென்று தெரியவில்லை.
உறவுகளும் தெரிந்ததாயில்லை.
கொரோனாவா? வேறேதுமோ ?
கடந்து கரைந்து போனது செய்தி.

இரவு முகப்புத்தகத்தைத்
திறந்த போது 'பூச்சி' யின் 
படம் முன்னே வந்தது. 
பூச்சி இறந்து விட்டான். 
நேற்றுக் கூட கோவிலடியில் 
என்னுடன் உரையாடினானே! 
அஞ்சலிகள் நண்பனே. 

கீழே அவனது பெயர் இப்படியிருந்தது
'சின்னத்துரை பொன்னம்பலம்' 

 3

யாரந்த முச்சங்கப் புரவலரோ?
இம்மென்று ஒரு வார்த்தை
இன்தமிழால் எழுதிடிலோ
கவியென்று சான்றளிக்கும்
கடைச் சங்கப் பேராளர்.

நாலு வரி சேர்த்து
 படத்துக்கொரு கவிதை. 
சொல்லுக்கு ஒரு கவிதை. 
எழுத்துக்கு ஒரு கவிதை. 
ஒன்றும் சொற்களுக்கும்
ஒரு கவிதை.
தமிழில் எழுதினால் சான்றளிக்கும் சங்கங்கள்.

என்னே பெரும் பேறு! 

முகநூலில் மின்னும்
படம் போட்ட சான்றிதழ்கள்.
கவிச் சிற்பி, கவி வேளம், கவிப்புயல், கவிச் சிங்கம், 
கவி காளமேகமென
எண்ணற்ற பட்டங்கள்
ஈந்திடும் நற்சங்கங்கள்.

பாரிக்குப் பின் வந்த 
புரவலரைக் காணுதற்கும், 
பாரதிக்குப் பின் வந்த 
வேழமதைக் காணுதற்கும் 
முகநூல் முத்தளிக்கும். 
மூழ்கியெழாதிருக்கலாமா? 

4

என் நண்பனிடம் ஒரு வல்லமையிருந்தது
சித்தர்களைப் போல.

அலுவலகத்தில்தான் இருப்பான்.

முள்ளிவாய்க்கால் முற்றத்திலும்
காணாமல் போனவருக்கான ஆர்ப்பாட்டத்திலும்
ஆசிரியர் போராட்டத்திலும்
உணர்வொன்ற அவன் இருப்பான்.

கோவில் திருவிழாக்கள்
சாலை விபத்துக்களில் எல்லாம் நேரடிச் சாட்சியாவான்.

உணர்வு ததும்பும் சொற்கள் 
அவன் பிரசன்னத்தை உணர்த்தும்.  

முகநூலில்
ஆச்சரியங்களோடு விதந்து பேசுவர் பலரும்.

கூடவே ஒரு பெருந்தன்மையும்
அவனிடம் இருந்தது.
எந்த இடத்திலும் தன் படத்தை வெளியிட்டு
தம்பட்டம் அடிக்கானாம்! 

இயல்வாணன்

நேர்காணல் சிற்பி

 நேர்காணல்

சிற்பி சிவசரவணபவன்





நேர்காணல், ஒளிப்படங்கள் : இயல்வாணன்






கே : ஒவ்வொரு மனிதனதும் ஆளுமை உருவாக்கத்தில் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. உங்களது ஆளுமையை வளர்ப்பதில் குடும்பத்தின் பங்களிப்பு எவ்வாறானது?

ப : எமது பிரதேசத்தில் அனேகமானோர் விவசாயிகளே. என்னுடன் படித்த அவர்களின் பிள்ளைகள் பாடசாலை முடிந்ததும் தோட்ட வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் என்னுடைய குடும்பச் சூழலில் எனக்கு வேலைகள் எதுவும் இல்லை. இந்தக் காலம் போல ரியூசன் இல்லை. பாடசாலையில் கற்பது மட்டுமே. அதுவே எமக்குப் போதுமானதாகவும் இருந்தது

எனது தந்தையார் சிவசுப்பிரமணிய ஐயர் ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியர். பால பண்டித பரீட்சையிலும் சித்தியடைந்தவர். அவரது புத்தக அலுமாரியில் பல நூல்கள் இருந்தன. அவற்றைக் கிளறி எடுத்து வாசிப்பதுதான் எனது ஒரே பொழுதுபோக்காக இருந்தது. எனது மாமனார் வைத்தீஸ்வரக் குருக்களால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளையும் படித்திருக்கிறேன்.

கே: அப்போது என்னென்ன நூல்களைப் படித்தீர்கள்?

ப: எனக்கு நினைவு தெரிந்து படித்தது இராமாயணமே. விரும்பிப் படித்தது என்றும் கூறலாம். கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையை ஆரம்பித்த கந்தையா உபாத்தியாயர் எமது வீட்டிற்கு வந்து தந்தையாருடன் உரையாடுவார். அப்போது அவர் ஒவ்வொரு விடயத்துக்கும் இராமாயணத்தில் இருந்து உதாரணங் களைச் சொல்லித்தான் கதைப்பார். இராமாயணத்தில் விருப்பம் ஏற்பட அதுவும் ஒரு காரணந்தான். மயிலிராவணன் கதையும் விரும்பிப் படிப்பேன்.  மகா பாரதம் பெரிய புத்தகம் ஒன்றிருந்தது. அது எனக்கு அவ்வளவு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அதிலுள்ள கிளைக் கதைகள் ஒரு தொடர்பற்ற தன்மையை ஏற்படுத்தி, வாசிக்கும் ஆர்வத்தைக் குறைத்திருக்கலாம். எனது தந்தையார் ஈழகேசரி, கலைமகள் ஆகியவற்றை வாங்குவார். இந்துசாதனமும் தபாலில் வரும். இடைக்கிடை கல்கி, ஆனந்த விகடனும் வாங்குவோம். இவையும் எனது வாசிப்புக்குத் தீனி போட்டன.

கே : உங்களைப் புடம் போட்டதில் பாடசாலையின் அல்லது ஆசிரியர்களின் பங்களிப்பு ஏதுமுண்டா? 

ப : எனது உருவாக்கத்துக்குப் பாடசாலை உதவியதைப் போல ஆசிரியர்கள் சிலரும் உதவியுள்ளனர். தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் நான் படிக்கும் போது ஆசிரியர் பொன்னம்பலம்(ஆதவன்) அவர்கள் பாரதியார் கவிதைகள் நூலுடன் வகுப்புக்கு வருவார். இடைக்கிடை அதிலுள்ள பாடல்களைச் சுவையோடு பாடிக் காண்பிப்பார். அத்துடன் பாடசாலையில் மாணவர் மன்றக் கூட்டம் வாராவாரம் நடைபெறும். அதில் பத்திரிகை வாசித்தல் என்பதும் ஒரு நிகழ்ச்சி. நாங்கள் எழுதி வழங்கும் ஆக்கங்களை ‘மாணவர் போதினி’ என்ற பெயரில் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியிடுவார்கள். அவற்றை மன்றத்தில் வாசிப்பார்கள். எனது படைப்பு வாசிக்கப்படும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

பின்னர் ஸ்கந்தவரோதயவுக்குச் சென்ற போது அங்கு வித்துவான் ஆறுமுகம் எமக்குக் கற்பித்தார். அவர் நன்றாகக் கற்பிப்பார். இனிமையாகப் பாடுவார். வாரத்தில் ஒரு நாள் பாடநூலில் இல்லாத பாடலொன்றைக் கரும்பலகையில் எழுதி, அதைப் பற்றிச் சுவையாக விளக்கிக் கூறுவார். பாடல்களை எழுதுவதற்கும் எம்மை வழிப்படுத்தினார். பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதவும் ஊக்குவிப்பார்.

அப்படி ஒருமுறை பாடலொன்றுக்குப் பொழிப்புரை எழுதப் பணித்தார். எல்லோரும் எழுதிச் சென்று கொடுத்தோம். அவற்றைப் பார்வையிட்ட அவர் என்னுடைய உரையை எடுத்து எல்லோருக்கும் வாசித்துக் காட்டினார். ‘நீ சதாசிவ ஐயருடைய உறவினரா?’ என என்னிடம் கேட்டார். ‘ஆம்’ என்றேன். ‘அவரைப் போலவே இலக்கண சுத்தமாக எழுதியிருக்கிறாய்’ எனப் பாராட்டினார். இவ்வாறான ஊக்கமூட்டும் செயல்களால் எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் உண்டாயிற்று. எனது பெயரும் அச்சில் வர வேண்டும் என ஆசைப்பட்டேன்.

கே : அந்தஆசை எப்போது பூர்த்தியானது? 

ப : படிக்கும் காலத்தில் ஈழகேசரியின் பாலர் பகுதியில் அங்கத்தவராகச் சேர்ந்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதினேன். ஈழகேசரி ஆசிரியர் ஒவ்வொரு படைப்பையும் பற்றிய கருத்துக் கூறி உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டுவார். ஈழகேசரியின் பாலர் மலரிலும், பின்னர் ஈழகேசரியின் கல்வி மலரிலும் எழுதியவர்களில் சிலர் ஒன்று சேர்ந்துதான் பிற்காலத்தில் மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கியதையும், மறுமலர்ச்சி இதழை வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். அச்சில் வந்த எனது கன்னிப் படைப்புக்கள் ஈழகேசரியில்தான் வெளியாகின.

கே : நீங்கள் ஒரு புனைகதைப் படைப்பாளி. ஆரம்பத்தில் உங்களைக் கவர்ந்த, புனைகதைகளை எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த எழுத்துக்கள் எவை? 

ப : ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தவை அகிலனின் படைப்புக்களே. அவரது சினேகிதி, பெண், பாவை விளக்கு ஆகியன அதிகம் கவர்ந்தவை. கல்கி, மு.வரதராசன் ஆகியோரது படைப்புக்களையும் விரும்பிப் படிப்பேன். பின்னர் நா.பார்த்தசாரதியில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அவரது ஆத்மாவின் ராகங்களைப் பலமுறை படித்துள்ளேன். ஆனால் இவரைத்தான் வாசிப்பேன் என்றில்லாமல் கிடைக்கும் எல்லோரது நூல்களையும் படித்திருக்கிறேன்.

கே : உங்களது முதலாவது புனைகதைப் படைப்பு எது? அது தொடர்பான அனுபவம் ஏதுமுண்டா?

ப : எனது முதற் சிறுகதை ‘மலர்ந்த காதல்’. அது 1951இல் சுதந்திரனில் வெளிவந்தது. அதற்கு முன்னரும் சுதந்திரனில் ‘பழம் பண்பைப் பற்றிப் பகர்வதில் பயனில்லை’என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். பழைமையைப் பற்றிப் புழுகிக் கொண்டிருக்கும் நாம் இப்போதய வாழ்வில் அவற்றைக் கடைப்பிடிக்கின்றோமா? எனக் கேள்வியெழுப்பும் வகையில் அக்கட்டுரை அமைந்திருந்தது.

எனது இரண்டாவது சிறுகதை ‘மாணிக்கம்’ என்ற தலைப்பிலானது. நான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினேன். அப்போது சின்னத்தம்பி என்பவர் அங்கு முதலியாராகப் பணியாற்றினார். அவர் நல்ல பேச்சாளர். இலங்கை வானொலியில் பேசுபவர்  என்று எனது சிங்கள நண்பர் கூறினார். அகிலனின் கதைகளை வாசித்த அருட்டுணர்வில் நான் ‘மாணிக்கம்’ கதையை எழுதி இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தேன்.  ஒன்றரை மாதங்களின் பின்னர் கதை தெரிவு செய்யப்பட்டு விட்டதென்றும், அலுவலகத்துக்கு வந்து நானே வாசிக்க வேண்டும் என்றும் வானொலிக்குப் பொறுப்பாயிருந்த அருள் தியாகராசா அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தார்.

அப்போது செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.15 மணி முதல் 1.30 மணி வரை சிறுகதை வாசிக்கப்படும். எனக்கோ முன்னனுபவம் இல்லை. இப்போதையைப் போல ஒலிப்பதிவு வசதியும் இல்லை. நேரடியாக வாசிக்க வேண்டும். ஒருவாறு வாசித்து முடித்தேன். அதற்கு 30 ரூபா சன்மானம் கிடைத்தது. 1952இல் நடைபெற்ற இச்சம்பவம் எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாகும். பின்னர் இச்சிறுகதை ஏழையின் முடிவு என்ற தலைப்பில் வீரகேசரியில் வெளிவந்தது.

கே: சிற்பி என்ற புனைபெயரை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணமேதுமுண்டா? வேறு எப்பெயர்களில் எழுதியுள்ளீர்கள்? 

ப : கல்லிலே கலைவண்ணம் காண்பவன் சிற்பி. அதுபோல சொல்லில் கலைவண்ணம் காணும் விருப்பினால் சிற்பி என்ற பெயரைச் சூட்டிக் கொண்டேன். தமிழகத்தில் உள்ள பிரபலமானவர்கள் எல்லோரும் மூன்றெழுத்துக்காரர்கள்தான் என்று ஏதோவொரு பத்திரிகையில் எழுதியிருந்ததைப் படித்த ஞாபகம். கல்கி, காந்தி, ராஜாஜி, அண்ணா என மூன்றெழுத்துக்காரர்கள்தான் அப்போது பிரபலமாயிருந்தார்கள். நானும் சிற்பி, சேயோன், கீதன் என்ற மூன்றெழுத்துப் புனைபெயர்களில் எழுதியுள்ளேன். யாழ்வாசி என்ற புனைபெயரில் தீபத்தில் கடிதங்கள் எழுதினேன். தாண்டவக்கோன் என்ற பெயரில் கலைச்செல்வியில் கேள்வி பதில் பகுதியில் எழுதினேன்.வசதியும் தேவையும் கருதி வேறு புனைபெயர்களையும் பயன்படுத்தியுள்ளேன். 

சிற்பி என்ற பெயரை இந்தியாவில் நான் படிக்கும் போதுதான் முதலில் பயன்படுத்தினேன். சென்னை கிறீஸ்தவக் கல்லூரியில் கலைமாணிப் படிப்பை மேற்கொண்டிருந்த போது அங்கு சேனையூர் தமிழ் மன்றத்தால் இளந்தமிழன் என்ற கையெழுத்துச் சஞ்சிகை வெளியிடப்பட்டது. அழ.சிதம்பரம் என்பவர் அதன் ஆசிரியர். அவர் எனக்கு அடுத்த அறையில் தங்கியிருந்தார். அதனால் சஞ்சிகை தயாரிப்புக்கு நானும் உதவியதோடு ஆக்கங்களும் எழுதினேன். 

அடுத்த வருடம் என்னை அதன் ஆசிரியராகத் தெரிவு செய்தார்கள். அத்துடன் அதனை அச்சில் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டது. நான் அதன் முதலாவது இதழுக்கு ஆசிரியர் தலையங்கத்துடன் ‘கன்னித் தமிழ்க் கவிஞன் கம்பன்’ என்ற இலக்கியக் கட்டுரையும் எழுதினேன். இடத்தை நிரப்பும் பொருட்டு எனக்கு என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை எழுதினேன். மு.வ. எழுதிய தம்பிக்கு, தங்கைக்கு போல இது எனக்கு நானே அறிவுரை கூறுவது போல் எழுதப்பட்டது. இக்கட்டுரைக்கே சிற்பி என்ற பெயரை முதன்முதலில் பயன்படுத்தினேன்.

கே : உங்களுடைய முக்கிய பணியாக அக்கால ஈழத்துச் சிறுகதைகளைத் தொகுத்தமையைக் கூறலாம். அவ்வாறானதொரு தொகுப்பை வெளியிட்டமைக்குப் பின்னணிக் காரணங்களேதுமுண்டா?

ப : நான் இந்தியாவில் படித்து விட்டுத் திரும்பிய பின் மீ.ப.சோமு அவர்களால் தொகுக்கப்பட்ட சிறுகதை மஞ்சரி இந்திய சாஹித்திய அக்கடமியால் வெளியிடப்பட்டது. அதில் ஒரு ஈழத்துச் சிறுகதையும் இடம்பெறவில்லை. ஏற்கனவே அல்லயன்ஸ் கம்பனியால் வெளியிடப்பட்ட கதைக்கோவை தொகுதிகளில் வெளிவந்த ஈழத்துப் படைப்புகளைக் கூட மீ.ப.சோமு அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்தியாவிலிருந்து வந்த நான் இலங்கைப் படைப்பாளிகளது ஒரு தொகுதியை வெளியிட விரும்பினேன். அ.செ.முருகானந்தன், பொன்னம்பலம் ஆசிரியர் ஆகியோரும் ஆதரவு தந்தார்கள். எனது நண்பன் அழ.சிதம்பரம் மூலமாக பாரி நிலையம் செல்லப்பா அவர்களைத் தொடர்பு கொண்டேன். ‘ஈழத்துச் சிறுகதைகள்’ நூலைப்  பாரிநிலையம் வெளியிட்டது. கதைகளைத் தொகுக்கும் போது ஒரு பெண் படைப்பாளி, ஒரு கிழக்கு மாகாணப் படைப்பாளி, ஒரு இளம் படைப்பாளி இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்.

அவ்வகையில் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், க.தி.சம்பந்தன், வ.அ.இராசரத்தினம், வரதர், தாழையடி க.சபாரத்தினம், சகிதேவி தியாகராசா, சு.இராஜநாயகன், செ.கணேசலிங்கம், இராஜ அரியரத்தினம், கே.டானியல் ஆகிய பன்னிருவரின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றன. இவ்வாறு ஐந்து தொகுதிகளை வெளியிட எண்ணியிருந்தோம். ஆயினும் இந்திய இலங்கை தபாற் தொடர்பின் சீர்குலைவும், கலைச்செல்வியில் கவனம் திரும்பியமையும் இத்தொகுப்பைத் தொடர முடியாமற் செய்து விட்டது. பலரும் இதைப் பாராட்டியிருந்தார்கள். சில்லையூர் செல்வராசன் தினகரனில் எள்ளல் விமர்சனமொன்றை எழுதியிருந்தார். பின்னர் நான் அதை மறுத்துப் பதில் எழுதியிருந்தேன். 

நூல் வெளிவந்த பின்னர் ஆனந்த விகடனுக்குச் சென்று மணியனைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்த எழுத்தாளர்களை ஆனந்த விகடனுக்கு எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களுக்குத் தனித் தனியாகவும் கடிதங்களும் எழுதினார்.

கே : ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘கலைச்செல்வி’ முக்கிய பாத்திரம் வகிக்கிறது. கலைச்செல்வியை எப்படி ஆரம்பித்தீர்கள்?

ப: உண்மையில் கலைச்செல்வியின் தோற்றத்துக்கு 1958இல் இடம்பெற்ற இனக் கலவரந்தான் காரணமாகும். களுத்துறையில் தமிழ்க் கழகம் என்ற அமைப்பினால் ஈழதேவி என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. தமிழ்ச்செல்வன், உதயணன் ஆகியோர் அதன் ஆசிரியர்களாக இருந்தனர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு உதயணன் யாழ்ப்பாணத்துக்கு வர நேர்ந்தது. 

அதற்கு முன்பாக ஈழத்துச் சிறுகதைகள் நூலை வெளியிட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் ஒரு சஞ்சிகையை வெளியிட விரும்பினேன். முக்கிய எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பலரும் இது ஒரு வி~ப் பரீட்சை எனக் கூறிக் கண்டித்தனர். எனவே நானும் இம்முயற்சியைக் கைவிட்டு விட்டேன். 

இந்த நிலையில் ஒருநாள் உதயணன் தமிழ்ச்செல்வனையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார். கடிதப் பரிச்சயம் மட்டும் எம்மிடமிருந்தது. சந்தித்த அனுபவமில்லை. அவர்கள் தாம் நடத்திய ஈழதேவி சஞ்சிகையைப் பொறுப்பேற்கும்படி என்னைக் கேட்டனர். தாம் அதற்குச் சகல ஒத்துழைப்பையும் வழங்குவதாகக் கூறினர். அந்த உற்சாகத்தில் கலைச்செல்வி பிறந்தது. எனினும் சில மாதங்களின் பின் அவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் குறையத் தொடங்கின. நானே நடத்த வேண்டியேற்பட்டது. 

கே : இலக்கிய வரலாறு கால ஒழுங்கில் அமைவதே பொருத்தமானது. ஆயினும் சில சஞ்சிகைகள் - அவை விளைவித்த தாக்கம் காரணமாக – வரலாற்றுக் காலகட்டமாகப் பதியப்படும் அளவுக்கு முக்கியத்துவமுடையன. கலைச்செல்வியையும் அவ்வாறு கூறலாம். கலைச்செல்வியின் பயணத்தில் முக்கியமான பதிவுகiளாக எவற்றைக் கருதுகிறீர்கள்? 

ப : இவற்றைப் பதிவுகளாகக் கொள்ளலாமா என்பது எனக்குத் தெரியாது. கலைச்செல்வி பல்வேறு சிறப்பு மலர்களை வெளியிட்டது. வளரும் எழுத்தாளர்களுக்கென்nறு ஒரு மலரை வெளியிட்டோம். இளம் எழுத்தாளர் என்ற சொல் பொருத்தமற்றது. 40 வயதில் முதலில் எழுதுபவரை எப்படி இளம் எழுத்தாளர் என்பது? எனவே, வளரும் எழுத்தாளர் மலர் என்று பெயரிட்டோம். துருவன், யாழ்நங்கை, செ.கதிர்காமநாதன் எனப் பல படைப்பாளிகளின் படைப்புக்களை இதில் வெளியிட்டோம்.

பெண் எழுத்தாளர்களுக்கென்று மகளிர் மலரையும் வெளியிட்டோம். புதுமைப்பிரியை, உமா, யாழ்நங்கை எனப் பல படைப்பாளிகளின் ஆக்கங்கள் இதில் இடம்பெற்றன.


அது தவிர சிறப்புப் பகுதிகள் சிலவற்றையும் கலைச்செல்வியில் வெளியிட்டோம். ‘எழுத்துலகில் நான்’ என்பது அதிலொன்று. பழம்பெரும் எழுத்தாளர்கள் தங்களது எழுத்துலக அனுபவங்களைக் கூறுவதாக இத்தொடர் அமைந்திருந்தது. இலங்கையர்கோன், சோ.சிவபாதசுந்தரம், க.தி.சம்பந்தன், வ.அ.இராசரத்தினம், சி.வைத்தியலிங்கம், கனக செந்திநாதன், இளங்கீரன் ஆகியோர் இதில் எழுதினர்.

‘என்னை உருவாக்கியவர்கள்’ என்ற தலைப்பில் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் எழுதினர். சொக்கன், டொமினிக் ஜீவா, புதுமைலோலன், கே.டானியல், அன்புமணி, மு.தளையசிங்கம், தேவன்-யாழ்ப்பாணம்,  உதயணன் முதலியோர் தம்மை உருவாக்கியவர்கள் பற்றி இத்தொடரில் எடுத்தியம்பினர்.

அதேபோல முருகையன், திமிலைத்துமிலன், நீலாவணன், தில்லைச்சிவன்,  அம்பி முதலானோர் ‘என்னைக் கவர்ந்த என் கவிதை’ என்ற தலைப்பில் தமது சிறந்த கவிதை பற்றி எழுதினர். 

ஒவ்வொரு கவிஞரும் தமது இலட்சியம் என்ன என்பதைக் கவிதையில் வடித்து எழுதிய தொடர் ‘என் இலட்சியம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. மஹாகவி, முருகையன், நீலாவணன், பரமஹம்சதாசன், தான்தோன்றிக் கவிராயர்(சில்லையூர் செல்வராசன்)  ஆகியோர் இத்தொடரில் எழுதினர்.

‘ஏன் மறைத்தேன் என்பெயரை?’ என்ற தலைப்பில் செங்கை ஆழியான், செம்பியன்செல்வன், யாழ்நங்கை, உதயணன், அன்புமணி ஆகியோர் தாம் புனைபெயர் சூடக் காரணமென்ன என்பதை விபரித்து எழுதினர். இவையெல்லாம் வித்தியாசமான சுவையான அம்சங்களாக கலைச்செல்வியில் வெளிவந்தன.

கே : வித்தியாசமானவை மட்டுமல்ல, கலைச்செல்வியில் வெளிவந்த இந்த விடயங்கள் முக்கியமான இலக்கிய வரலாற்று ஆவணங்களுங் கூட. இவ்வாறெல்லாம் நல்ல அம்சங்களுடன் கலைச்செல்வியை வெளியிட்டுள்ளீர்கள். கலைச்செல்வி எத்தனை இதழ்கள் வெளிவந்தன?

ப : 1958 ஆடி மாதத்தில் இருந்து 1966 ஆவணி மாதம் வரை 71 இதழ்கள் வெளிவந்தன. என்னிடம் 69 இதழ்களின் பிரதிகள் மட்டுமே இப்போது உள்ளன.

கே : கலைச்செல்வி நின்று போகக் காரணமென்ன?

ப : பொருளாதாரப் பலமின்மைதான் ஒரே காரணம். விளம்பரங்களைத் தேடித் தருவதாக நண்பர்கள் பலரும் வாக்குறுதி அளித்திருந்தனர். அதுவும் சாத்தியப்படவில்லை. எனது சம்பளப் பணம் முழுமையாகவே கலைச்செல்விக்குப் பயன்படுத்தப்பட்டது. இது எவ்வளவு காலத்துக்குச் சாத்தியம்? எனவே, கலைச்செல்வி இயற்கையாகவே மரணத்தைத் தழுவியது. கலைச்செல்வியின் அனுபவத்தில் நான் கூறக் கூடியது இலக்கிய ஆர்வம் மிக்க பணவசதியுடையோர் பத்திரிகையை நடத்த வேண்டும். அதில் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.

கே : கலைச்செல்வியின் பயன் என்று எதைக் கருதுகிறீர்கள்?

ப : அறிஞர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே கலைச்செல்வியின் பயனாகும். நான் 60 வரையான இலவசப் பிரதிகளை அனுப்புவது வழக்கம். ராஜாஜிக்கும் ஒரு பிரதி அனுப்புவேன். அவர் ஒருமுறை கல்கி ஆசிரியர் சோமுவிடம் கலைச்செல்வியில் வெளிவந்த சு.வே யின் உருவகக் கதையைப் பாராட்டிக் கூறியதை சோமு என்னிடம் தெரிவித்தார். அதேபோல மு.வரதராசனும் கலைச் செல்வி பற்றியும், என்னைப் பற்றியும் நல்லபிப்பிராயம் வெளியிட்டார். இன்று வரை கலைச்செல்வி பேசப்படுவதே, அறிஞர்கள் உள்ளத்தில் குடியிருப்பதே கலைச்செல்வியின் பயன் என்பேன்.

கே : கலைச்செல்வியை மீண்டும் வெளியிட ஆர்வம் ஏற்படவில்லையா?

ப : இல்லை. கலைச்செல்வியை வெளியிட்ட நீண்ட அனுபவம் என்னை அவ்வாறு செய்யத் தூண்டவில்லை. இடையில் ஒருமுறை சொக்கன், தேவன் - யாழ்ப்பாணம் ஆகியோர் கலைச்செல்வியை வெளியிடுவது தொடர்பாக என்னையும் அழைத்து யாழ்.இந்துக் கல்லூரியில் ஒரு கூட்டம் நடத்தினர். அதில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எனினும், அதன் வருகை சாத்தியப்படவில்லை. 

பின்னர் செங்கை ஆழியான் கலைச்செல்வியை வெளியிடுமாறு என்னைக் கேட்டார். பல காரணங்களால் நான் மறுத்து விட்டேன். ஆயினும் மறுமலர்ச்சியை வெளியிடுவது பற்றி வரதருடன் ஆலோசித்து, நானும் செங்கை ஆழியானும் இணையாசிரியர்களாக இருந்து வெளியிட்டோம். இரு இதழ்களுடன் அதுவும் நின்று போனது. வரதர் அவர்கள் மூன்றாவது இதழுக்கான விடயதானத்தை எங்கோ தொலைத்து விட்டமையாலும், அவரது ஆர்வம் குறைந்தமையாலும் மறுமலர்ச்சியைத் தொடர முடியவில்லை.

கே : சிறுகதைகளுடன் நாவலும் எழுதியுள்ளீர்கள். ‘உனக்காக கண்ணே’ என்ற நாவல் நூலாக வெளிவந்துள்ளது. அந்த நாவல் பிறந்ததற்கான பின்னணியேதுமுண்டா?

ப : நாவல் எழுதுவதைப் பிரதான பணியாக நான் கொண்டிருக்கவில்லை. சிறுகதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஒருமுறை நான் எனது நண்பரொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அவ்வேளை அவ்வழியே ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். நண்பர் அவளது நடத்தை பற்றித் தரக்குறைவாக -மிகக் கேவலமாக- கூறினார். நீண்ட காலத்துக்குப் பின்னர் அப்பெண்ணின் வாழ்க்கையை மாற்றி, அப்பெண்ணை இந்நிலைக்கு ஆக்கியது குறித்த நண்பர்தான் என்பதை அறிந்து கொண்டேன். தனது தவறை மறைத்து அப்பெண்ணைப் பற்றிப் பிழையாகக் கூறியது என் மனத்தை அழுத்தியது. அதை வைத்துத்தான் இந்நாவலை எழுதினேன்.

கே : வேறு நாவல்கள் எழுதியுள்ளீர்களா? 

ப : கலைச்செல்வியில் இரு நாவல்கள் எழுதியுள்ளேன். உதயணன் ஒருமுறை வந்து சந்தித்த போது சில எழுத்தாளர்களை இணைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு அத்தியாயம் எழுதக் கூடியதாக ஒரு நாவலை எழுதுவதெனத் தீர்மானித்தோம். வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் நாவலின் பகைப்புலங்களாக இருக்க வேண்டுமெனவும், இலங்கை முழுவதும் நாவலின் களம் நகர வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் முதல் அத்தியாயத்தை நான் எழுதினேன். ஏற்கனவே சொன்னபடி உதயணன் எழுதவில்லை. கலைச்செல்வியில் நாவலொன்றை வெளியிடும் எண்ணம் ஏற்பட்ட போது நானே ஏனைய ஐந்து அத்தியாயங்களையும் எழுதி ‘பாசத்தின் குரல்’என்ற பெயரில் வெளியிட்டேன்.

சிந்தனைக் கண்ணீர் என்றொரு நாவலையும் கலைச்செல்வியில் எழுதினேன். நாவலின் கதாபாத்திரம் ஒரு கண்ணீர்த்துளி விழுந்ததும் பழைய சம்பவம் ஒன்று பற்றிச் சிந்திப்பான். பின்னர் ஒரு கண்ணீர்த்துளி விழும். இன்னொன்றைச் சிந்திப்பான். இப்படியே இந்நாவல் கட்டமைக்கப்பட்டது. இது ஒரு காதல் கதைதான்.

உனக்காகக் கண்ணே நாவலும் கலைச்செல்வியில்தான் வெளிவந்தது. இப்போது ஒரு நாவலை எழுத முயன்று ஐந்து அத்தியாயங்கள் எழுதிய நிலையில் முடிக்கப்படாதுள்ளது. இதன் கரு எமது இனப் பிரச்சினையின் அடிப்படையிலானது.

கே : பல எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் நாவல்கள் பல ஈழத்தில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் நீங்கள் ஏதாவது எழுதியுள்ளீர்களா?

ப : அல்லி என்றொரு சஞ்சிகையில் நான் ‘அண்ணா’என்றொரு சிறுகதையை எழுதினேன். அக்கதையைத் தொடரக் கூடியதாக உதயணன் இன்னொரு கதையை எழுதினார். நான் அதைத் தொடர்ந்து ஒரு கதையை எழுதினேன். உதயணன் அதைத் தொடர்ந்தார். ஆயினும் அல்லி நின்று விட்டது. உதயணனுடனான தொடர்பு இப்படித்தான் ஏற்பட்டது.

கலைச்செல்வியின் முதல் இதழில் ‘ஏன் படைத்தாய்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினேன். அடுத்த இதழில் உதயணன் அதைத் தொடர்ந்தார். குமாரசாமி சோமசுந்தரம், பெண் எழுத்தாளரான காவலூர் அம்பி ஆகியோர் அடுத்த பகுதிகளைத் தொடர்ந்தனர். வரதர் இறுதியாக எழுதினார். இந்த இரு தொடர்களும் முன்னதாகவே திட்டமிட்டு எழுதப்பட்டவையல்ல. என்னுடைய கதை இன்னொருவரையும் எழுதத் தூண்டியது என்பதை நினைக்க உற்சாகமாயிருக்கின்றது.

கே : நீங்கள் பல சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள். மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளீர்கள். உங்களது சிறுகதைகளின் அடிப்படைகள் என்று எவற்றைக் கூறுவீர்கள்?

ப : கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணந்தான் எல்லா இலக்கியத்துக்கும் பொதுவானது. ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலல்’ என்பதுதான் இலக்கியம் தொடர்பான தமிழரது நிலைப்பாடு. பிசிறல்களற்ற, ஆற்றொழுக்கான தெளிவும், எளிமையும், இனிமையும் மிக்க மொழியால் உயர்ந்த கருத்துக்களைக் கூறுவது இலக்கியம் என்று கருதுகிறேன். இந்தக் கருத்துநிலையிலேயே நான் எழுதுகிறேன். எனது கதைகளிலே நல்ல கருத்துக்கள் சிந்தனைகள் வர வேண்டுமென விரும்பி எழுதுகிறேன். ‘தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுறவே மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே களிவளர் உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல் கண்ணீர்த் துளி வர உள்ளுருக்குதல்’என்ற பாரதியாரின் கூற்றுக்கு அமைவாக எழுத வேண்டுமென நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை வாசித்து அதில் உள்வாங்கிய உயர்ந்த கருத்துக்களை, நல்ல பாத்திரங்களைப் பார்த்த எனக்கு நடைமுறையில் அவற்றைக் காண முடியாத வேளைகளில் அந்த வேறுபாட்டின் விளைவுகளையே கதைகளாகப் படைத்துள்ளேன். நம்பிக்கை, நாணயம், நேர்மை, உண்மை, தியாகம் முதலிய உயர்ந்த பண்புகள் இந்தக் காலத்துக்குப் பொருத்தமில்லையெனக் கருதி அவற்றைக் கைவிட்டு விட்டோமா? என்ற அச்சம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதுவும் கதைகள் பிறக்கக் காரணமாகும். 

கே : இலக்கியம் உயர்ந்த கருத்துக்களைக் கூறுவதாக அமைய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். நமது நீதிநூல்களின் போதனைகளை இலக்கியமாகக் கொள்ளும் ஆபத்து நேர்ந்து விடுமல்லவா? 

ப : மனிதருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக இலக்கியம் இருக்க வேண்டும். நமது அகச்சூழலை-உள்ளத்தை- மாற்றி அமைப்பதாக அது அமைய வேண்டும். ‘அரிச்சந்திரன்’நாடகம் நம்ப முடியாத கற்பனையாக எமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த நாடகமே மோகனதாஸை மகாத்மா காந்தியாக்கியது. பல நல்ல விடயங்களில் அவரை ஈடுபட வைத்தது.

ஆனால் இலக்கியம் நீதி போதனையாகவோ, பிரச்சாரமாகவோ அமையக் கூடாது. அது கலாபூர்வமானதாக, வாசிக்கும் போது இன்பம் பயப்பதாக இருக்க வேண்டும். அறஞ் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த நல்ல கருத்துக்கள் மறைமுகமாக அதற்குள் உட்பொதிந்திருக்க வேண்டும்.

கே : நீங்கள் நீண்ட காலம் ஆசிரியராக, அதிபராக இருந்துள்ளீர்கள். உங்களது பால்ய காலத்தில் நீங்கள் பெற்ற நேரனுவங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டீர்களா? 

ப : நல்ல நூல்களை வாசிக்கச் செய்வதில் அவர்களை வழிப்படுத்தியிருக்கிறேன். எனது பள்ளிப் பருவத்தில் மாணவர் மன்றங்கள் எனக்கு அதிகம் உதவின. நான் அதிபராகப் பணியாற்றிய இடங்களில் மாணவர் மன்றங்களைக் கிரமமாகக் கூட்டுவதில் அக்கறை காட்டினேன். அத்துடன் சஞ்சிகைகளையும் வெளியிட்டேன். உசன் இராமநாதன் வித்தியாலயத்தில் ‘இளந்தளிர்’ என்ற பெயரிலும், செங்குந்தா இந்துக் கல்லூரியில் ‘சுடரொளி’ என்ற பெயரிலும் சஞ்சிகைகளை வெளியிட்டேன். வைத்தீஸ்வராக் கல்லூரியில் ‘யாழோசை’ என்ற பெயரில் சஞ்சிகையைத் தயாரித்தோம். யுத்த நெருக்கடிகளால் அதை வெளியிட முடியவில்லை.

கே : நீங்கள் கல்வியியல் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ‘விளக்கு’ கல்வியியல் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். பாடநூல் எழுத்தாளர் குழுவில் பணியாற்றியவர். கல்வி சார்ந்த புலமையும், அனுபவமும் ஒருங்கே பெற்றவர். அவ்வகையில் இலங்கையின் கல்வி முறைமை தொடர்பில் உங்களது அவதானமென்ன? 

ப : இலங்கையின் கல்வியை அவதானித்தால் கல்வி அமைச்சரும், கல்விச் செயலாளர் முதலிய உயர் அதிகாரிகளும் மாற, மாற கல்விக் கொள்கையும் மாறி வருவதைக் காணலாம். கல்வி அமைச்சரோ, அதிகாரிகளோ வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ளவற்றைப் பயின்று விட்டு இங்கு வந்து அவற்றைச் செயற்படுத்த முனைகின்றனர். கள நிலைமைக்குப் பொருந்தாத வகையில் அவை காணப்படுவதால் மிக விரைவிலேயே மாற்றமுற்று வேறொன்று வருகின்றது. எம்மிடம் நிலையான கல்விக் கொள்கை இல்லாதது பிரதான குறைபாடாகும்.

மற்றது கல்வியின் ஒரே நோக்கம் தொழில் பெறுவதுதான் என்ற எண்ணம் இப்போது முனைப்புப் பெற்றுள்ளது. அது தவிர்க்க முடியாத ஒன்றாயினும் கல்வி மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். நாம் வாழ்க்கைத்தரத்தை – பொருளாதாரத்தை- மேம்படுத்துவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறோம்.

கே : இன்றைய பாடசாலைகளின் கல்வியளிப்புத் தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்?  உங்கள் கல்விப் பெறுகையிலிருந்து, உங்கள் காலக் கல்வியளிப்பிலிருந்து இன்றைய கல்விச் சூழல் மாற்றமுற்றுள்ளதல்லவா? 

ப : எமது காலத்தில் கல்வியில் காணப்பட்ட சுயாதீனத்தன்மை இன்று இல்லை. நாங்கள் பாடசாலையையே நம்பி இருந்தோம். இன்று அப்படியில்லை. பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குக் கற்பிக்க நேரமில்லை. சுற்றுநிருபங்களுக்கேற்ப அறிக்கைகளைத் தயார் செய்வதிலேயே அவர்களின் கவனமுள்ளது. கல்வி அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதே அதிபர்களின் பணியாகவுள்ளது. அதற்கேற்ப ஆசிரியர்களும் இயங்க வேண்டியுள்ளது. பல்வேறு போட்டிகளும் நிகழ்ச்சித் திட்டங்களும் பாடசாலைகளின் முன்னால் உள்ளன. அதற்குத் தயார்படுத்த வேண்டும். கட்டாயம் பங்குபற்ற வேண்டும். வெற்றியும் பெற வேண்டும். இவற்றிலெல்லாம் ஈடுபடும் ஆசிரியர்களும், மாணவர்களும் எவ்வாறு கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்?

பிள்ளைகளின் கவனமும் ரியூசனிலேயே உள்ளது. அது ஒரு கவர்ச்சியான விடயம். ஆயினும் ரியூசனில் கற்பிப்பவருக்கு எந்த வரையறையும் கிடையாது. பரீட்சைக்குத் தயார்படுத்தும் வகையில் விரைவாகப் பாடத்தைக் கொண்டு செல்கிறார். பாடசாலைகளில் அப்படிச் செய்ய முடிவதில்லை.

பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பெடுத்தமை சில விடயங்களில் பிழை போலவே படுகிறது. முன்னரென்றால் ஆசிரியர் பாடசாலைச் சூழலைச் சேர்ந்தவராக இருப்பார். பாடசாலையில் பற்றும் இருக்கும். பெற்றாரை, பிள்ளையை, அவர்களது குடும்பச் கூழலை நன்கு அறிந்திருப்பார். அவருக்குப் பொருளீட்டும் நோக்கமில்லாததால் மேலதிகமாகவும் கற்பிப்பார். இன்று அந்நிலை மிகக் குறைவு.

  




Sunday, September 12, 2021

கவிதை - காணாமல் போனது



நேற்றிருந்து என் ஊரைக் காணவில்லை.
ஒரு அசரீரியின் பின் 
அது காணாமல் போயிருந்தது. 

முன்னரெல்லாம்
மந்தைகள் காணாமல் போயின.
பின் மனிதர்கள்.
இப்போது ஊர். 

தத்தமது ஊர்களும்
காணாமல் போனதாய் 
நண்பர்கள் சொல்கிறார்கள். 

ஒட்டுமொத்தமாய் 
நாடே காணாமல் போய் விடுமென்று 
இராக் குருவி புலம்பிச் செல்கிறது. 

எல்லா இடங்களிலும் அசரீரி ஒலிக்கிறது. 
குடுகுடுப்பைக்காரர்களோடு 
இராக் குருவிகளும் 
அசரீரியை வழிமொழிந்து பாடுகின்றன. 

யாருளர்? என்ன நடக்கிறது? 
யாருக்கும் தெரியவில்லை. 

ஒடுங்கிய வீட்டு மூலையில் இருந்து 
தொலைந்து போன ஊரின் நினைவுகளை 
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள்
முதிய மனுஷி. 

- இயல்வாணன் 
24-03-2020

தீம்புனல் 11-09-2021.

Saturday, September 4, 2021

not finished

 கிளிநொச்சி மாவட்டத் தமிழ் நாவல்கள்

புனைவிலக்கிய வகைகளுள் நாவல் தாக்கவன்மை மிக்கதாகும். புதுமை என்ற கருத்தை வெளிப்படுத்தும் Novel என்ற ஆங்கிலப் பதமே நாவல் எனக் கூறப்படுகிறது. தமிழில் நவீனம் என்றும், புதினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. ‘வசன வடிவிலே குறிப்பிடத்தக்க அளவு நீளமுடையதாகவும், புனைந்துரைக்கப்படுவதாகவும், பாத்திரங்களின் பண்புகளையும் செயல்களையும் வாழ்க்கையில் உள்ளபடியே இயல்பான கதைப்பொருளில் அமைத்து அவற்றின் உணர்ச்சி மோதல்களைச் சித்திரிப்பதாகவும் அமைவது நாவல்’ என்று வரைவிலக்கணப்படுத்தப் படுகின்றது.

ஈழத்தில் 1856இல் ஆங்கில மூலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்த காவலப்பன் கதை முதல் நாவலிலக்கிய முயற்சியாக நோக்கப்படுகின்றது. இருப்பினும் 1885இல் அறிஞர் சித்திலெப்பையினால் எழுதப்பட்ட அசன்பேயுடைய கதையே முதல் ஈழத்து நாவலாகக் கருதப்படுகின்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களிலும், அக்கால கட்டங்களின் போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல நாவல்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் நாவல் பொதுப் போக்காக மேலைத்தேயத் தழுவல்களாகவும், நன்னெறியைப் போதிக்கும் கருத்துக்களுக்கு முக்கியமளிக்கும் கருத்துக் கருவூலங்களாகவும் இருந்தன.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஈழத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் வெளிவரத் தொடங்கின. சி.வை.சின்னப்பப்பிள்ளை எழுதி 1905இல் வெளிவந்த வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் என்ற நாவலே ஈழத்தைக் களமாகக் கொண்ட முதல் நாவலாகக் கருதப்படுகின்றது.

அதன் பரிணாம வளர்ச்சி பிரதேச நாவல்கள் உருவாகும் நிலைமையை ஏற்படுத்தின. பிரதேச ரீதியாகவும், குழுநிலைப்பட்டும் தத்தமக்கான தனித்துவமான பண்பாட்டம்சங்களுடன் வாழ்ந்து வருகின்ற மக்களின் வாழ்க்கையினை அதன் சமூக மெய்மை குன்றாத வண்ணம் சித்திரிக்கும் நாவல்களைப் பிரதேச நாவல்கள் எனலாம். மண்மணம் கமழ்வனவாக விளங்குவன பிரதேச நாவல்களாகும்.

 ‘ஒரு கதை எந்த இடத்தில் நடப்பதாகக் காட்டப்படுகின்றதோ அந்த இடத்தைத் தவிர வேறொரு இடத்தில் அது நடந்திருக்க முடியாது என்றும், அக்குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்திருப்பரன்றி வேறொருவர் அதனை எழுதியிருக்க முடியாது என்றும் கருதத்தக்க வகையில் கதையின் பின்ணியும், இழைவமைதியும் அமையுமானால் அக்கதை வட்டார அல்லது பிரதேச நாவல்’ எனக் கருதலாம்.

அவ்வகையில் ஈழத்தில் வெளிவந்த நாவல்களை வடபுல நாவல்கள், கிழக்கிலங்கை நாவல்கள், மலையக நாவல்கள் என ஆரம்பத்தில் பாகுபடுத்தி நோக்கினர்.எனினும் பிரதேச தனித்துவங்கள் கருதி இப்பாகுபாடு மேலும் விரிவடைந்தது.அவ்வகையில் வடபுலத்து நாவல்கள் யாழ்ப்பாணம், வன்னி என மேலும் பகுத்தாராயப்பட்டது. அதன் விரிவாக கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிபலிக்கின்ற நாவல்கள் தொடர்பான கவனத்தைக் குவிக்கும் தேவை உள்ளது.

கவிதை,சிறுகதை ஆகியவற்றுடன் ஒப்பிடுமிடத்து கிளிநொச்சியைப் பிரதிபலிக்கும் நாவல்களின் எண்ணிக்கை குறைவானதாகும். நாவல்களின் பொது இயல்பாக வன்னிப் பிரதேச களம் அமையும் நாவல்கள் கிளிநொச்சியையும் பிரதிபலிப்பதாக உள்ள போதிலும் அவற்றைக் கிளிநொச்சி மாவட்ட நாவல்கள் என வரையறுப்பதோ அல்லது நிறுவுவதோ பொருத்தமானதல்ல.கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சுட்டிப்பாகக் காட்டும் பகைப்புலத்தைக் கொண்ட நாவல்களையே கிளிநொச்சிப் பிரதேச நாவல்கள் என வரையறுக்க முடியும்.

அவ்வகையில் கிளிநொச்சியை சிறிய அளவில் பிரதிபலித்த வகையில் வெளிவந்த முதல் நாவல் மணிவாணன் எழுதிய ‘யுகசந்தி’ ஆகும். 1969இல் தினகரனில் தொடராக எழுதப்பட்டு 1972இல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த இந்நாவலின் கதைக்களம் தர்மபுரம் பிரதேசமாகும். ஆயினும் பிரதேச பகைப்புலம் வெளிப்படுத்தப்படாமலும், மண்வாசனையின்றியும் குடும்பப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக அந்நாவல் அமைந்திருந்தது.

இந்த அடிப்படையில் பிரதேச பகைப்புலத்தை வெளிப்படுத்திய, கிளிநொச்சி மண்வாசனையை வெளிக்கொணர்ந்த முதல் நாவலாக தாமரைச்செல்வி எழுதி 1977இல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த ‘சுமைகள்’ நாவலைக் குறிப்பிடலாம். கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பிரதேசத்தை மையப்படுத்தியதாக இந்நாவல் அமைந்துள்ளது. அம்மா, அண்ணன் கதிரேசன் மற்றும் மூன்று பெண் சகோதரிகளுடன் பிறந்தவன் செந்தில் என்ற இளைஞன். தந்தையை இழந்த, சிறியதொரு வயலை மட்டும் கொண்ட ஏழை விவசாயக் குடும்பம் அது. கூழாங்கல் போன்று பயனற்ற இளைஞனாகச் செந்தில் சுற்றித் திரிகிறான். பொறுப்பற்றவன் என உதாசீனம் செய்யப்படுகிறான். இறுதியில் அவனே சுமைதாங்கியாக மாறி குடும்ப பாரத்தைப் பொறுப்பேற்கும் கதையாக சுமைகள் நாவல் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்நாவலில் கிளிநொச்சி மண்ணில் நிகழும் கதைக்களம் உள்ள போதும் மண்ணுக்குரிய சமூக பண்பாட்டு அம்சங்கள் சித்திரிக்கப்படவில்லை என கலாநிதி ம.ரகுநாதன் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

தாமரைச் செல்வியின் மற்றொரு நாவல் ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’ 1992இல் மீரா வெளியீடாக வெளிவந்தது. போர்க்காலப் பின்னணி கொண்ட இந்நாவலில் முருகேசு என்ற ஏழை விவசாயியின் குடும்பத்தைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. அரச அதிகாரியான செந்தில்நாதன் தனது பதவிச் செல்வாக்கினால் கிளிநொச்சியில் குடியேற்றத் திட்டத்தின் கீழ் காடாக இருந்த ஒரு காணியைக் கையகப்படுத்துகிறார். அக்காணியில் ஏழை விவசாயியான முருகேசுவைக் குடியமர்த்துகிறார். முருகேசு குடும்பம் காடு திருத்தி காணியை வளமான நிலம் ஆக்குகின்றது. அவ்வப்போது காணியை வந்து பார்வையிடும் செந்தில்நாதன் காய்கறி, பழங்கள், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் அந்தக் காணியைத் தனது மகனுடைய பெயரிற்கு உரிமைமாற்றம் செய்து விடுகிறார். போராளியாக இணைந்த மகனோ தந்தையின் சுயநல எண்ணத்தைப் புறந்தள்ளி அக்காணியை முருகேசு குடும்பத்துக்கே எழுதி விடுகிறான். ஏழை விவசாய மக்களின் உழைப்புச் சுரண்டல், அரச அதிகாரிகளது துஸ்பிரயோகம், போராளிகளது தியாகவுணர்வு ஆகியவற்றை இந்நாவல் சித்திரிக்கின்றது.குறிப்பாக இந்திய இராணுவ பிரசன்னம் சார்ந்த விடயங்களையும் இது பதிவு செய்துள்ளது.

தாமரைச் செல்வியின் இன்னொரு நாவல் ‘தாகம்’ ஆகும். இது 1993இல் மீரா வெளியீடாக வெளிவந்தது.கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் கணேசபுரத்தைப் பிரதான பகைப்புலமாக இந்நாவல் கொண்டிருப்பினும் மாவட்டம் முழுமையும் உள்ளடங்கும் வகையில் காட்சிகள் விரிந்து செல்கின்றன.இக்கதையில் கிளாலிப் படுகொலை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டாம் ஈழப் போர் என வர்ணிக்கப்படும் 1990களின் ஆரம்ப கால களநிலைமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பரந்தனில் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருக்கும் சதானந்தனே நாவலின் பிரதான பாத்திரமாகும்.யுத்தத்தால் அவனது தொழில் நிலையம் அழிவடைகின்றது.அதனால் அவன் கையறுநிலைக்குச் சென்று விடுகிறான். மறுபுறம் அவனது மாமி மகளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். அதை அவளது சகோதரனிடம் வெளிப்படுத்துகிறான். அவன் தனது சகோதரியைத் திருமணம் செய்து தருவதாக உறுதிகூறி விட்டுச் செல்கிறான்.சென்றவன் கிளாலிக் கடலில் படுகொலை செய்யப்படுகிறான்.இதனால் அவனது வாழ்வு திசை மாறுகின்றது.அவனது தாகம் தணியாதிருக்கிறது என்பதே நாவலின் செய்தியாகும்.

தாமரைச்செல்வியின் மற்றொரு குறுநாவல் ‘வேள்வித்தீ’ ஆகும். இது 1994இல் மீரா வெளியீடாக வெளிவந்தது.இந்நாவலில் கதைக்களம் துல்லியமாகக் காட்டப்படவில்லை. சிவானந்தன் என்ற இளைஞனும், மனோ என்ற இளம் பெண்ணும் ஒருவரையொருவர் நேசித்தனர். நாட்டின் சூழல் சிவானந்தனை ஜீவா எனும்  போராளியாக்கியது. பின்னர் அவன் வீரமரணமடைகின்றான். அவனது மரணத்தைத் தொடர்ந்து அவனது தம்பியும் போராட்டத்தில் இணைகிறான். சிவானந்தனது நினைவுடனே வேறு திருமணம் செய்யாது வாழும் மனோவுக்கு திருமணம் செய்யுமாறு வீட்டில் பல்வேறு நெருக்குதல்கள். இந்நிலையில் உத்தியோகம் பார்க்கும் மனோ ஜீவா குடும்பத்தின் பொறுப்புக்களைச் சுமப்பதற்காகச் செல்கிறாள். போகும் போது “…இனி அந்தக் குடும்பத்தைத் தாங்கப் போறன். இந்த முடிவாலை என்ரை தங்கச்சியவைக்கும் ஒரு வழி பிறக்கும். யாராவது இனிக் கேட்டால் புருசன் வீட்டிலை பிள்ளை இருக்கெண்டு சொல்லலாம். மண்ணுக்கு உயிரைத் தாறது மட்டும் தியாகமில்லை. அப்படி உயிரைத் தந்ததுகளின்ரை குடும்பத்தைக் கவனிக்கிறதும் கூட இந்த மண்ணுக்காக நாங்கள் செய்யிற தியாகந்தான்…” என்று சொல்லி விட்டுச் செல்வதுடன் கதை முடிகின்றது.

தாமரைச் செல்வியின் மற்றொரு முக்கியமான படைப்பு பச்சை வயல் கனவு.2004இல் சுப்ரம் பிரசுராலய வெளியீடாக இது வெளிவந்தது.காடாக் கிடந்த கிளிநொச்சியைப் பசுஞ் சோலையாகக் காணும் பசிய கனவுடன் வந்து குடியேறி, அந்தக் கனவை நனவாக்க முனைந்தவர்களை யுத்தம் ஊர் பெயர்த்து, அடித்து விரட்டி, நிர்க்கதியாக்கிய வாழ்வனுபவத்தை இந்நாவல் வெளிப்படுத்துகின்றது.ஸ்கந்தபுரத்தில் இடம்பெயர்ந்து வாழ்வதிலிருந்து நனவோடை உத்தியைப் பயன்படுத்தி நாவல் நகர்த்;தப்படுகிறது.

முதன் முதல் இப்பிரதேசத்தில் குடியமர வந்தவர்கள் அடைந்த துன்பங்கள், அந்தத் துன்பங்களை எதிர் கொண்டு அவர்கள் முன்னேறிய விதம், இராணுவ நெருக்கடிகள், ஆனையிறவில் ஏ-9 பாதை மூடப்பட்டதில் இருந்து அது திறக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் எல்லாம் இந்நாவலில் விபரிக்கப்பட்டுள்ளன.சிவப்பிரகாசம் என்ற முதியவரின் பார்வையில் ஆரம்பமாகும் கதை பல்வேறு கதா மாந்தரிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் கிளிநொச்சி மண்ணைத் தனது நாவல்கள், சிறுகதைகள் மூலம் குவிமையப்படுத்திக் காட்டிய முதன்மைப் படைப்பாளியாக தாமரைச் செல்வியைக் குறிப்பிடலாம்.

வன்னியைப் பொதுவாகக் கொண்டு காட்டாறு, ஓ அந்த அழகிய பழைய உலகம், யானை முதலிய நாவல்களைச் செங்கை ஆழியான் படைத்துள்ள போதும் அவரது நாவல்கள் வவுனியா மாவட்டத்தையே அதிகளவில் பிரதிபலித்தன. ஆயினும் கிளிநொச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் எழுதிய நாவல் ‘மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து’ ஆகும். இது 1989இல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. இரணைமடுக் குள உருவாக்கமும் அதனைத் தொடர்ந்து குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டமையும் இந்நாவலில்  குறிப்பிடப்படுகிறது. இக்குடியேற்றங்களில் யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேச மக்கள்  குடியேறி, காட்டு விலங்குகளையும், தொற்றுநோய்களையும் எதிர்கொண்டு பிரதேசத்தை வளப்படுத்திய வரலாற்றை இந்நாவல் பேசுகின்றது.

முத்தையா என்ற இளைஞன் வெள்ளைக்காரத் துரையுடன் இரணைமடுக் குள நிர்மாணத்துக்காக வந்த இடத்தில் ஏழைப் பெண்ணான சிவபாக்கியத்தைச் சந்தித்துக் காதல் கொள்கிறான்.அவள் கர்ப்பமடைகிறான்.ஆனால் அவனோ யாழ்ப்;பாணத்தில் தாயின் விருப்பத்துக்கு இணங்கத் திருமணம் செய்கிறான்.சிவபாக்கியம் ஏமாற்றப்பட்ட நிலையில் குழந்தையைப் பெற்று விட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.முத்தையா வயதான காலத்தில் இதனை அறிந்து கொள்வதுடன் சிவபாக்கியம் மூலம் பிறந்த தனது பிள்ளையின் முன்பாகவே உயிரை விடுகிறார் என்பதாக கதை முடிகின்றது. ஒரு புவியியலாளரான செங்கை ஆழியானுடைய கதைகளில் பகைப்புல வர்ணனை சிறப்பாக அமைவது இந்நாவலிலும் வெளிப்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செங்கை ஆழியான் (க.குணராஜா) பிரதேச காணி அதிகாரியாக  இப்பிரதேசத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள முழங்காவிலில் பூஞ்சோலை என்ற கற்பனைக் குடியேற்றக் கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டு து.வைத்திலிங்கம் எழுதிய குறுநாவல் ‘ஒரு திட்டம் மூடப்படுகிறது’ ஆகும். இது இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. பூநகரி உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றிய து.வைத்திலிங்கம்  யாழ்ப்பாணத்தைச் சே;ர்ந்தவராவார். படித்த மகளிர் குடியேற்றத் திட்டம் ஒன்று அரசியல்வாதிகளதும், அரச அதிகாரிகளதும் சுயநலப் போக்கினால் பாழாகிப் போன வரலாற்றை இந்நாவல் பேசுகின்றது. குறிப்பாக அமைச்சரின் ஆதரவாளனான அரசகேசரி என்ற அபிவிருத்தி அலுவலரும் அவருடன் இணைந்த குழுவினரும் மக்களை ஏமாற்றுவதையும், அதனால் மக்கள் குமுறுவதையும் நாவலில் சுட்டிக் காட்டப்படுகிறது.

பூஞ்சோலைக் கிராமத்தில் படித்த பெண்களுக்காக ஒரு குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப் படுகிறது.






இலக்கியக் கட்டுரை: ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் புதிய பிரவேசங்கள் - அறிமுகக் குறிப்புகள்

ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் புதிய பிரவேசங்கள்

- அறிமுகக் குறிப்புகள்

இயல்வாணன்  


ஈழத்துப் புனைகதை இலக்கியமானது பல்வேறு கால கட்டங்களிலும் பல்வேறு பகைப்புலங்களையும், பாடுபொருள்களையும் கொண்டு சமூக ஓட்டத்தைத் துலாம்பரப்படுத்தி வெளிவந்திருக்கின்றது. அரச கதைகளையும், காதல் கதைகளையும், ஆண்டான் அடிமை கதைகளையும் பேசி வந்த ஆரம்ப காலப் புனைகதையுலகு நடைமுறை வாழ்வின் பிரச்சினைகளைப் பேசத் தலைப்பட்டமை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் 60களில் இருந்து 80கள் வரை சாதியப் பிரச்சினைகளும், இன முறுகல் சார்ந்த பிரச்சினைகளும் பேசப்பட்டு வந்தன. 80களில் முனைப்புப் பெற்ற ஆயுதப் போராட்டம் புதிய அனுபவங்களைத் தமிழ் இலக்கியத்துக்குத் தந்தது. இளைஞர்களின் தலைமறைவு வாழ்க்கை அனுபவங்கள், பிள்ளைகளைக் காணாது தேடியும், நெஞ்சில் துயர் சுமந்தும் நின்ற தாய்மாரின் கண்ணீர்க் கதைகள், போராளிகளான பிள்ளைகளை விசாரித்து வரும் படையினரின் கெடுபிடிகள், சித்திரவதைகள், துப்பாக்கிச் சண்டைகளையும், கண்ணிவெடித் தாக்குதல்களையும் அடுத்து நடைபெறும் சுற்றிவளைப்புக்கள், படுகொலைகள் எனப் பல்வேறு விடயங்களையும் ஈழத்துப் புனைகதையுலகு இக்கால கட்டத்தில் பதிவு செய்தது.

1983 இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் துயரத்தை அருளரின் லங்காராணி பதிவு செய்தது. அதேவேளை தொலைதூரத்தில் உள்ள கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதல் அனுபவத்தை விடியலுக்கு முந்திய மரணங்கள் (பசீர் காக்காவால் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது) பதிவு செய்தது.  இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்திய இராணுவம் இங்கு நிலை கொண்டிருந்த காலப் பகுதி அனுபவங்களை சாந்தனின் எழுதப்படாத அத்தியாயங்கள் பதிவு செய்தது. மேலும் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டு, பின்னர் நூலாக்கப்பட்ட வில்லுக்குளத்துப் பறவை, அம்மாளைக் கும்பிடுறானுகள் ஆகிய நூல்களும் இந்திய இராணுவ அட்டூழியங்களைப் பேசின.

1990இன் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு ஏக அரசியல், இராணுவ சக்தியாகப் பரிணமித்ததுடன் ஒரு மாற்று அரசாங்க கட்டமைப்பாக எழுச்சி பெற்றது. இக்கால கட்டத்தில் பல்வேறு புதிய அனுபவங்களை ஈழத்துப் புனைகதையுலகு பெற்றுக் கொண்டது. ர~;ய, சீன இலக்கியங்களில் படித்த போர்க் கள அனுபவங்கள் நிதர்சன அனுபவங்களாக தமிழ் வாசக உலகுக்குக் கிடைத்தன. போரும், போரின் வெற்றிக் களிப்பும், இழப்பின் துயரும், மக்களின் வாழ்நிலை அவலமும், பொருளாதாரத் தடையின் துன்ப விளைவுகளும், அதற்கான மாற்று எதிர்வினைகளும் புனைகதைகளின் பாடுபொருளாயின.

செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், சாந்தன், ஞானரதன், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், வளவை வளவன், தாமரைச்செல்வி, மலரன்னை, ஆதிலட்சுமி சிவகுமார், பொன்.கணேசமூர்த்தி, இளையவன், இயல்வாணன், நா.யோகேந்திரநாதன், ந.கிருஸ்ணசிங்கம், நடராசா இராமநாதன், பு.சத்தியமூர்த்தி, வசந்தன், கருணாகரன், முல்லை யேசுதாசன், முல்லை கோணேஸ், க.சட்டநாதன், கே.ஆர்.டேவிட், த.கலாமணி என நீளும் பெருமளவான படைப்பாளிகள் போர் சார்ந்த மக்களது வாழ்க்கை அனுபவங்களையும், போராளிகளுடனான ஊடாட்டங்களையும், மனப் பதிவுகளையும் தமது படைப்புக்களில் பதிவு செய்தனர்.

அதேவேளை போராளிகள் பலரும் புனைகதையுலகுக்குள் நுழைந்து, தமது போரியல் அனுபவங்களை உண்மை உணர்வோடு பதிவு செய்தனர். அவை சிறுகதைகளாக, புனைவு சாரா எழுத்துக்களாகப் பரிணமித்தன. கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி, கப்டன் மலரவன், தூயவன், சுஜந்தன்,  தமிழ்க்கவி,  மலைமகள், சுதாமதி, உதயலட்சுமி, கோளாவிலூர் கிங்ஸ்லி எனப் பெருமளவானோர் தமது அனுபவங்களைப் பதிவு செய்தமையால் தமிழ்ப் புனைகதையுலகு புதிய எல்லைகளுக்குள் பிரவேசித்தது. இவை பற்றி பல வகைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஞானம் சஞ்சிகை பக்கங்களில் வெளியிட்ட போர்க்காலச் சிறப்பிதழ் முக்கியமானதாகும்.

1995 ஒக்ரோபர் யாழ்ப்பாண இடப்பெயர்வு, தொடர்ந்த வன்னியின் பல்வேறு பிரதேசத்திலுமான இடப்பெயர்வும் யுத்தமுமான வாழ்க்கை, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அச்சமூட்டும் நெருக்கடியான வாழ்க்கை ஆகியனவும் சிறுகதைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாட்சாயணி, சிவாணி, ஆ.ரவீந்திரன், முகமாலை சேகர், தையிட்டி இராசதுரை, உடுவில் அரவிந்தன், சி.கதிர்காமநாதன், ந.சத்தியபாலன், இ.கோகுலராகவன், இராகவன், த.பிரபாகரன், சாராங்கா, இ.இராஜேஸ்கண்ணன், பா.மகாலிங்கசிவம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எனப் பலருடைய கதைகளில் இத்தகைய வாழ்வனுபவங்கள் பேசப்பட்டுள்ளன.

மூன்று தசாப்தங்களாகச் சுழன்றடித்த போர் 2009இல் முள்ளிவாய்க்காலில் ஊழித்தாண்டவமாடி ஓய்ந்ததன் பின்னர் வெவ்வேறு வகையான இலக்கியப் பிரவேசங்களைக் கண்டடையக் கூடிய வாய்ப்பு தமிழ் வாசகப் பரப்புக்கு கிடைத்திருக்கிறது. 2009இன் பின்னர் மாற்று அரசாங்கமாக வியாபித்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்ட சூழலில் திறந்துள்ள ஒரு ஜனநாயக வெளி இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மறு புறத்தில் அரசாங்கம் அல்லது படைத்தரப்பின் பிரசன்னமும் ஆதிக்கமும் உள்ள சூழலில் அந்தப் பக்கமான வெளி இன்னமும் இருளில்தான் உள்ளது. அதனால் மறுபக்கமான ஒரு ஜனநாயகப் படைப்பு வெளியை முழுமையாகத் தரிசிக்க முடியாதுள்ளது. 

2009இன் பின்னரான காலகட்டத்தை பின் போர்க்காலம் என வரையறுக்கலாம். பின் போர்க்காலம் சார்ந்த படைப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வெளிவரவில்லை என்றே கூறலாம். ஒரு காலத்தில் வீரர்களாக வலம் வந்து ஏற்றிப் போற்றப்பட்ட முன்னாள் போராளிகளின் இன்றைய அவல வாழ்வு, ஆகுதியான வீரர்களை வைத்து அரசியல்வாதிகளும், பிழைப்புவாதிகளும் ஆடும் சதுரங்க விளையாட்டு, போரினால் நிர்க்கதியான விதவைகள், அனாதைக் குழந்தைகள், அங்கவீனர்களது வாழ்க்கை அவலம், பின் போர்க்கால உள நெருக்கீடுகள் எனப் பேச வேண்டிய நிறைய விடயங்களை ஈழத்துப் புனைகதையுலகு பேசவில்லை. ஆயினும் அதற்கான கால அவகாசம் இன்னமும் உள்ளதென்றே கொள்ளலாம்.

இடப்பெயர்வு அவலங்கள், இறுதி யுத்த கால நெருக்கடிகள், புனர்வாழ்வு அவலங்கள் பேசப்பட்ட படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. அந்த வகையில் தமிழ்க்கவியின் ஊழிக்காலம், குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, நா.யோகேந்திரநாதனின் நீந்திக் கடந்த நெருப்பாறு, ஷோபாசக்தியின் பொக்ஸ், கண்டி வீரன், தமயந்தியின் ஏழு கடல் கன்னிகள், சயந்தனின் ஆறாவடு, ஆதிரை, ஜே.கேயின் கந்தசாமியும் கலக்சியும், யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள், தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு, மெலிஞ்சி முத்தனின் அத்தாங்கு, கருணாகரனின் வேட்டைத் தோப்பு, அகிலனின் மரணத்தின் வாசனை  முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்து பல்வேறு பதிவுகளை முன்வைக்கும் புனைவு சாரா எழுத்துக்கள் பற்றியும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அன்ரன் பாலசிங்கத்தின் போரும் சமாதானமும், அடேல் பாலசிங்கத்தின் (அடேல் ஆன்) சுதந்திர வேட்கை, விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினராயிருந்த கணபதி ஐயரின் விடுதலைப் போராட்டத்தில் எனது பதிவுகள், சாத்திரியின் ஆயுத எழுத்து, அன்று சிந்திய இரத்தம், தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில், வெற்றிச்செல்வியின் ஆறிப் போன காயங்களின் வலி என்பன விடுதலைப் புலிகள் சார்ந்த பல்வேறு அனுபவங்களைப் பேசுகின்றது.

அவ்வாறே சி.புஸ்பராசாவின் விடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம், புஸ்பராணியின் அகாலம், அம்பிமகன் மற்றும் சபாரத்தினத்தின் தேநீர்க் கோப்பைக்குள் இரத்தம், எல்லாளனின் ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புகள், சதாசிவம் ஜீவகரனால் தொகுக்கப்பட்ட என்.எல்.ரி.எவ் உறுப்பினர் விவேகானந்தன் பற்றிய நினைவுக் குறிப்புகளான தாங்கொணாத் துயரம், பா.பாலசூரியன் மற்றும் குழுவினரால் தொகுக்கப்பட்ட தோழர் விசுவானந்த தேவன் முதலான நூல்கள் விடுதலைப் புலிகளல்லாத ஏனைய இயக்கங்களின் போராட்டச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட வன்கொடுமைகள் பற்றிப் பேசுகின்றன.

ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் புலம் பெயர் வாழ்க்கைச் சித்திரப்புக்களும் புதிய வாழ்வனுபவங்களைத் தந்துள்ளன. எனினும் அவை பிறிதாக அணுகப்பட வேண்டும். ஈழத்துப் புனைகதை சார்ந்த அறிமுகக் குறிப்புகளாகவே இவை உள்ளன. முழுமைப்படுத்தப்பட்டதாக படைப்புகள் சார்ந்து விரிவாக ஆராயப்பட வேண்டியது இன்றியமையாதாகும்.

(உதயன் தைப்பொங்கல் சிறப்பு மலர் 2017இல் வெளிவந்தது)






Friday, September 3, 2021

கல்வியியற் கட்டுரை : தலைமைத்துவம்

 தலைமைத்துவம் என்ற எண்ணக்கரு விருத்தியில் உளவியல் கோட்பாடுகளின் செல்வாக்கு

சு .ஸ்ரீ குமரன் B.A.,Dip.in.Ed.,Spl.Trd,M.Ed

அறிமுகம்

தலைமைத்துவம் என்ற எண்ணக்கரு இன்று பரந்த அளவிலும், சிக்கல் வாய்ந்ததாகவும் வெளிப்படுகின்றது. தலைமை வகித்தல், வழிநடத்தல், நெறிப்படுத்தல், வழிகாட்டியாக விளங்குதல் எனப் பல செயற்பாடுகளின் குறிப்பான பொருளுரைக்கும் சொல்லாக அது விளங்குகின்றது.

தலைமைத்துவம் என்ற எண்ணக்கரு பரந்த கருத்துடையதெனினும் உலகளாவிய ரீதியில் முகாமைச் செயற்பாட்டில் முக்கியத்துவம் மிக்க பாத்திரத்தை வகிக்கின்றது. இன்றைய உலகு வேகமான வளர்ச்சியையும், புதுப்புதுக் கண்டுபிடிப்புக்களின் வழியாக விரைவான மாற்றத்தையும் கண்டு நிற்கிறது. இந்த உலகச் சூழலில் எதிர்ப்படும் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுவதென்பது முக்கியமானது.

குடும்பம் என்னும் நிறுவனத்திலிருந்து அரசாங்கம் வரை பல்வேறு அமைப்புக்கள் பரந்து காணப்படுகின்றன. சவால்களை எதிர்கொண்டு குறித்த இலக்கை நோக்கி முன்னேறுவதென்ற சவாலை இத்தகைய எல்லா அமைப்புக்களும் எதிர்கொள்கின்றன. அத்தகைய எதிர்கொள்ளலை வலிமையோடு மேற்கொண்டு வழிநடத்திச் செல்வது என்பதில் தலைமைத்துவம் பங்களிக்கின்றது.

ஒரு கப்பலை ஓரிடத்திலிருந்து மறுகரையிற் கொண்டு சேர்ப்பது போல, பொறுப்புணர்வுடன் கூடிய உயர்ந்த பணியினை ஆற்ற வேண்டியவராக தலைமை தாங்குபவர் விளங்க வேண்டியது அவசியமாகும். பல்வேறு காரணிகளின் தாக்கங்களுக்கு முகம் கொடுத்து நிறுவனத்தின் எதிர்கால வெற்றிக்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் நிகழ் காலம் பற்றிய தொடர்ச்சியான மதிப்பீட்டினை மேற்கொள்ள வேண்டிய பணி தலைமை தாங்குபவருக்கு உரியது என்று வலியுறுத்தப்படுகிறது.

வரைவிலக்கணம்

அவ்வகையில் தலைமைத்துவம் என்றால் என்னவெனில் ஒரு இலக்கினை அடைவதற்காக மனிதவளத்தை நெறிப்படுத்தும் ஒரு கருமமே என வரைவிலக்கணப்படுத்தலாம். அதாவது ஒருவர் ஒரு கருமத்தை எவ்வாறு ஆற்ற விரும்புகிறாரோ அவ்வாறே நிறுவனத்தில் இருக்கும் ஏனையோரையும் தொழிற்பட வைக்கும் ஓர் முகாமைக் கருமமே தலைமைத்துவம் ஆகும் எனக் குறிப்பிடப்படுகிறது. நிறுவனத்திலுள்ள அங்கத்தவர்களை வழிநடத்தி, அவர்களிடமிருந்து தன்னிச்சையான ஒத்துழைப்பைப் பெற்று, அதனூடாக நிறுவனத்தின் நோக்கத்தை அடைய முற்படும் செயற்பாடு என்றும் தலைமைத்துவம் பற்றிக் கூறப்படுகிறது. தலைமைத்துவம் பற்றிய கருத்தினை  முதன் முதலில் வெளியிட்டவர் மரியம் ஈஷா  Marium Eshaw என்ற உளவியலாளராவார். அதே போல சிக்மண்ட் பிராய்ட், மக்டூகல், மாஸ்லோ போன்றோரது உளவியல் கருத்துக்களும் தலைமைத்துவம் என்ற எண்ணகருவை வளர்த்துச் செல்வதற்கு உதவியுள்ளன.

ஒரு தலைமைத்துமானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் தொடர்பு படுவதாகக் காணப்படும். தலைமைத்துவத்திற்குள் தலைவர், பின்பற்றுவோர், குறிப்பான சூழ்நிலை ஆகிய மூன்று சக்திவாய்ந்த நிலைமைகள் உள்ளடங்கியுள்ளன. (Donhellriegal,John.W., 1982) 

தலைமைத்துவம் என்பது வெற்றிடத்தில் இருந்து உருவாவதில்லை. அது குழுநிலை ஒழுங்கமைப்புக்கூடாக மட்டுமே உருவாக்கம் கொள்கின்றது. வினைத்திறனுள்ள தலைமைத்துவமென்பது பின்பற்றுவோரின் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துவதே எனக் கூறப்படுகின்றது.

தலைமைத்துவ செயலொழுங்கின் அடிப்படைக் காரணிகளை மேலுள்ள வரைபடம் சுட்டுகின்றது. இவ்வகையில் தலைவரானவர் சில வலுக்களையும், வளங்களையும் கொண்டிருக்கிறார். அவற்றைத் துணையாகக் கொண்டு சூழ்நிலைக்கேற்பவும் பணியாளர்களின் தன்மைக்கேற்பவும் தனது தலைமைத்துவ நடத்தைக் கோலத்தினை மாற்றியமைத்து நிறுவனக் குறிக்கோள்களை அடையத்தக்க விதத்தில் தனது விசையைப் பயன்படுத்துகின்றார். 

தலைமைத்துவம் பற்றிய உளவியல், சமூகவியல் கருத்துக்கள்

எனவே முகாமைத்துவச் செயற்பாட்டின் ஒரு பிரதான அம்சமாக விளங்கும் தலைமைத்துவம் என்ற எண்ணக்கருவின் விருத்தியில் உளவியலின் செல்வாக்கினை நாம் இனங் காணலாம். தலைமைத்துவம் என்பது ஒருவர் கொண்டிருக்கும் வலுவினால் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. தலைமை வகிப்பவர் கூடிய வலுவுடையவராக இருந்து தன்னுடைய உதவியாளர்கள் மீதோ, பின்பற்றுவோர் மீதோ, ஊழியர்கள் மீதோ செல்வாக்கைச் செலுத்துகிறார். இதன் மூலமாக அவர்களில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றார். இதில் தனிநபர் செல்வாக்கு என்ற முதன்மைக்குள் உளவியல் சார்ந்த அம்சங்களே வெளிப்படுகின்றன. 


உளவியலாளரான மக்டூகல் ஆதிக்கம் - பணிவு என்ற இயல்பூக்கங்களைச் சார்ந்து தலைமைத்துவம் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். மக்டூகல் முன்வைக்கும் 14 வகையான இயல்பூக்கங்களில் ஆக்கவூக்கம், தன்னெடுப்பூக்கம், பணிவூக்கம் முதலியன தலைமைத்துவத்தை வளர்த்துச் செல்வதில்  அதிக பங்களிப்பனவாகக் கருதலாம். குறிக்கோள்களுக்கு அமைய இயல்பூக்கங்களை வழிப்படுத்;தும் போது தலைமைத்துவப் பண்புகளை ஒருவர் அடையக் கூடியதாக இருக்கும். 

அதே போன்று ஆளுமை தொடர்பான சிக்மன்ட் பிராய்டின் கருத்துக்களும் தலைமைத்துவ எண்ணக்கரு விருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சியில் உடலியல் காரணிகளும், சூழலியல் காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. நரம்புத் தொகுதி, குருதியோட்டம் முதலிய உடலமைப்பும், உளத்திறன் மற்றும் மனவெழுச்சியைப் பாதிக்கின்றன. அதேவேளை வீட்டுச் சூழ்நிலை, சமூக பொருளாதார நிலை, குடும்ப உறுதி முதலிய காரணிகளும் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 

ஒருவனிடம் பிறப்பிலிருந்து பல்வேறு கட்டங்களூடாக வளர்த்துச் செல்லப்படும் ஆளுமைப் பண்புக் கூறுகள் தலைமைத்துவப் பண்புகளை ஒருவனிடத்தில் வளர்க்கின்றன எனலாம். ஒரு தந்தையின் நிலையில் வைத்து தலைவனைப் பிறர் பின்பற்றுகின்றனர் என சிக்மன்ட் பிராய்ட் வலியுறுத்துகிறார். தந்தை முறை அணுகுமுறையில் தலைவர் நிறுவனத்தின் தந்தையாகவும். நிறுவனப் பணியாளர்கள் குழந்தைகளாகவும் இருக்க. அன்பும் கண்டிப்பும் மிக்கவராக இருந்து குடும்ப அமைப்புப்போல அவர் வழிநடத்திச் செல்வார். சிறிய நிறுவனங்களுக்கு இத்தகைய தலைமை பொருத்தமானதாகும்.

ஆனால் ஆளுமைக் கோட்பாட்டை மறுத்துரைக்கும் ஹெலன் ஜெனிங்ஸ் என்பவர் குறிப்பிட்டதொரு ஆளுமைப் பண்பையோ இணைந்த பல ஆளுமைப் பண்புகளையோ ஒருவன் பெற்றிருப்பதால் தலைமையை அடைவதில்லை. ஒரு நிலைமையில் எல்லா உறுப்பினர் களிடமிருந்தும் பெறப்படும் சமூகத் தொடர்புகளிலிருந்தே தலைமைஎழுகின்றது எனக் குறிப்பிடுகின்றார்.

தலைமைத்துவம் தொடர்பாக சமூகவியல் நோக்கிலும் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன. அவை பெரும்பாலும் தலைமை தாங்குபவர் தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றன. 

ஒரு தலைவனிடம் சிறப்பான ஆளுமைப் பண்புகள் இணைந்து சமநிலையில் காணப்படுவதாகவும், இச்சமநிலை அவனைத் தலைமை தாங்குவதற்குத் தகுதியுள்ளவனாக்குகிறது என்றும் சமநிலைக் கோட்பாடு (Balance Theory of Leader ship) குறிப்பிடுகின்றது. 

பின்பற்றுவோரிடத்தில் காணப்படாத சில பண்புகளை ஒருவன் அதிகளவில் பெற்றிருப்பது தலைமைப் பதவியை அவன் அடைவதற்குக் காரணமாகின்றது என தனித்தன்மைக் கோட்பாடு  (Uniqueness theory of Leadership) வலியுறுத்துகின்றது.

ஒருவனிடம் காணப்படும் உளச்சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டிக் குவித்துச் செயற்படும் ஆற்றல் மிகுதியாகக் காணப்படுவதால் அவன் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்கிறான் என்று உள ஆற்றல் குவியப்படுத்தல்  (Theory of Focalization of psychi energy)   என்ற கோட்பாடு விளக்க முற்படுகின்றது.

ஒரு குழு பல சவால்களை எதிர்கொள்கிறது. புதிது புதிதாகத் தோன்றும் அத்தகைய சவால்களை எதிர்கொண்டு எளிதில் தீர்க்க வல்லவனே தலைமையைப் பொறுப்பேற்கிறான் என்று  Insight Theory கூறுகின்றது.

இவ்வாறு பல்வேறு கோட்பாடுகள் தலைமைத்துவம் தொடர்பிலும் தலைமை தாங்குபவர் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட போதும் முகாமைத்துவ அடிப்படையில் வலு முக்கியப்படுத்தப் படுகின்றது. தனிப்பட்டவர்களது அல்லது குழுக்களது நடத்தையிலோ எண்ணங்களிலோ மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலே வலுவாகும். ஜோன் பிறெஞ் (John French) மற்றும் பேட்ரம் றவன் (Bertram ravan) ஆகியோர் ஐந்து வகையான வலுக்களை முன்வைக்கின்றனர்.  

1. வெகுமதியளிக்கும் வலு (Reward Power) 

2. கட்டாயப்படுத்தும் வலு (Coercive Power) 

3. நிபுணத்துவ வலு (Expert Power) 

4. மதிப்பளிக்கும் வலு (Referent Power) 

5. சட்டப்படியான வலு (Legitimete Power) 

வெகுமதியளிக்கும் வலு என்பது ஒருவரால் இடப்படும் கட்டளைகளைச் செயற்படுத்துபவர்களுக்கு வெகுமதியினை அளிக்கும் திறனைக் குறிக்கின்றது. இது தலைவரின் கீழ் பணியாற்றுவோருக்குத் திருப்தியை ஏற்படுத்தி, அதன்மூலம் பணியில் வினைத்திறனுடனும் விருப்புடனும் செயலாற்று வதற்கு  ஊக்கப்படுத்தும் செயற்பாடாக அமையும்.

கட்டாயப்படுத்தும் வலு என்பது வெகுமதியளிக்கும் வலுவுக்கு நேரெதிரானது. இதனைத் தண்டனையளிக்கும் வலு என்றும் கூறலாம். தலைவரானவர் தனக்குக் கீழ்ப் பணிபுரிவோரை அவர்கள் விடும் தவறுகளின் பொருட்டுத் தண்டிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இதன் மூலமாகத் தலைமை வகிப்பவர் தனது பணியாளர்களிடமிருந்து ஒழுங்குக் கிரமமான வேலையைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. 

சட்டப்படியான வலு என்பது பிறர்மீது செல்வாக்குச் செலுத்தும் பொருட்டு வரையறைக்கு உட்பட்ட அதிகாரத்தினை ஒருவர் கொண்டிருப்பதைக் குறிக்கும். தலைவரானவர் சட்ட ரீதியாகத் தனக்குக் கிடைத்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தித் தனக்குக் கீழ் பணியாற்றுவோரில் செல்வாக்குச் செலுத்துவதும், அவர்களது செயற்பாடுகளை இலக்கு நோக்கி நகர்த்துவதும் இவ்வாறானதே.

ஒருவர் கொண்டுள்ள துறைசார்ந்த அறிவையும், திறனையும் நிபுணத்துவ ஆற்றலாக இனங்காண முடியும். அத்தகைய ஆற்றலைப் பெற்ற ஒருவர் அதன் காரணமாகத் தான் கொண்டிருக்கும் நிபுணத்துவ வலுவைப் பயன்படுத்தி மற்றவர்களைச் செல்வாக்குக்கு உட்படுத்த முடியும். அந்த வலுவுக்கு மதிப்பளித்து பணியாளர்களும் தொழிற்படுவர். மதிப்பளிக்கும் வலு என்பது ஒருவர் மீது மற்றொருவரோ ஒரு குழுவினரோ கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாக, ஒருவர் மற்றவர்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதைக் குறிக்கும். 

தலைவரானவர் தான் வழி நடத்துபவர்களைக் காட்டிலும் கூடுதலான வலுவினைக் கொண்டிருப்பதுடன், அத்தகைய வலுவின் மூலம் தனது இலக்கை நிறைவேற்றும் வகையில் வழி நடத்துபவர்களில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துபவராகிறார்.

போட்டிச் சூழல் ஒன்றில் சுழலும் காற்றுக்கு மத்தியில் நடந்து வெற்றியின் விளிம்பை அடைபவரே சிறந்த தலைவராகிறார் என மைக்கல் போட்டர் (Michael Porter) என்பவர் குறிப்பிடுகின்றார். போட்டிகளும் சவால்களும் நிறைந்த சூழலில் உயர்ந்த விளைவுகளை நோக்கிய செயற்பாட்டில் புதுமைத் தன்மையை வளர்த்தெடுப்பது தலைமைத்துவத்தின் சவால் நிறைந்த பணியாகும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 

தலைமைத்துவப் பண்புகள் 

அவ்வகையில் தலைமைத்துவம் வகிப்பவர் தனது கருமத்தை ஆற்றுவதற்குச் சிறப்பான பண்புகளைக் கொண்டிருப்பது அவசியமானதென வலியுறுத்தப்படுகின்றது. உள்ளார்ந்த ரீதியில் ஒரு தலைவனிடம் பின்வரும் பண்புகள் காணப்பட வேண்டும்.

1. மற்றையோர் நிலைக்குள்ளாதல் (Empathy)

2. சுய விழிப்புணர்வு (Self Awareness)

3. நோக்க உணர்வுடையதாயிருத்தல் (Objectivity) 

இது தவிர விசேட பண்புகள் பலவற்றையும் தலைமை வகிப்பவர் கொண்டிருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

1. மனித நடத்தையைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல்

2. பேச்சு வன்மையைக் கொண்டிருத்தல்

3. சிறந்ததும் நியாயமானதுமான தொடர்பாடல் திறனைக் கொண்டிருத்தல்

4. விரைவான தீர்மானம் எடுக்கும் ஆற்றலுடையவராயிருத்தல்

5. பொறுப்பேற்கவும், வகை கூறவும் கூடியவராயிருத்தல்

6. விமர்சனங்களை எதிர்கொள்ளவும், அதற்கேற்பத் தந்திரோபாயங்களை வகுத்தும் செயற்படுபவராக இருத்தல்

7. நடுநிலைத் தன்மையும், நேர்மைத் தன்மையும் கொண்டிருத்தல்

8. நிறுவனத்தின் இலக்கினை அடையும் பொருட்டு கடினமாக உழைப்பவராக இருத்தல்

9. ஒவ்வொரு ஊழியரையும் நன்கறிந்து அவர்களுக்குப் பொருத்தமான முறையில் வேலைப்பகிர்வை மேற்கொள்ளுதல்

10. இலக்குகளைத் திட்டமிட்டு நெறிப்படுத்துபவராக இருத்தல்

அல்பேட் (Albert) என்ற அறிஞர் சிறந்த ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய பண்புகளாக ஆதிக்க மனப்போக்கு, துணிந்து துரிதமாகச் செயலாற்றும் திறன், சொல்வன்மை, எடுத்த செயலை முடிக்கும் திறன், பிறருடன் சேர்ந்து செயலாற்றும் திறன், பிறரைச் செயற்படுத்தும் திறன், அடக்கம், அளவற்ற சக்தி ஆகியவற்றை இனங் காண்கிறார்.

தலைமைத்துவம் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறந்த தலைமைத்துவத்துக்கு ஏதுவான காரணிகளைக் கண்டறிவதிலேயே அனேக ஆய்வுகள் முனைப்புக் காட்டின. அத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் சில மேலே சுட்டப்பட்டள்ளன.

தலைமைத்துவம் தொடர்பான அணுகுமுறைகள் 

எனினும், தலைமைத்துவம் தொடர்பான முக்கியமான அணுகுமுறைகளை மூன்று பிரதான கோட்பாடுகளில் இனங்காண முடியும். அவை:

1. பண்புக் கோட்பாடு (Trait Theory)

2. நடத்தைக் கோட்பாடு (Behavioural Theory)

3. நெகிழத்தக்க கோட்பாடு (Contingency Theory) 

பண்புக் கோட்பாடு 

இவற்றில் தலைமைத்துவம் தொடர்பான பழமை வாய்ந்த கோட்பாடாக பண்புக் கோட்பாடு  அமைகின்றது. சிறந்த தலைவனிடம் காணப்படக்கூடிய பண்புகளை அடையாளம் காண்பதில் இக்கோட்பாடு கவனஞ் செலுத்தியது. இக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள் தமது ஆய்வுப் பெறுபேறுகளாகச் சிறந்த தலைவர்களிடம் காணப்படும் பண்புகளை இனங்காட்ட முற்பட்டனர்.

பலநூற்றாண்டுகளாக தத்துவவியலாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையே விவாதப் பொருளாக அமைந்த விடயம் மகா மனிதன் கோட்பாடாகும் (Great Man Theory). மகா அலெக்சாண்டர், இராணி எலிசபெத், வின்ஸ்டன் சேர்ச்சில் எனத் தனிப்பட்டவர்களை உலகின் உயர்ந்த மனிதர்களாக மாறுவதற்கு உந்தித்தள்ளிய காரணிகள் எவை என்பதைக் கண்டறிவதில் அவர்கள் ஆர்வம் காட்டினர். சிலரது முக்கியத்துவத்துக்கு அவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் அமர்ந்து கொண்டமை காரணமாகுமா எனவும் மகாமனிதக் கோட்பாட்டாளர்கள் ஆராய்ந்தனர். பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் சூழ்ந்த மகாமனிதன் கொள்கையைக் கவனத்தில் கொண்டே தலைமைத்துவத்துக்கான பண்புக் கொள்கை உருவாகியது எனலாம்.

தலைமைத்துவம் தொடர்பான ஆரம்பக் கற்கையானது தலைவர்களின் தனிப்பட்ட சிறப்பியல்புகளை இனங்காண்பதாக நெறிப்படுத்தப்பட்டிருந்தது. பண்புக் கோட்பாடானது உடல், சமூக, ஆளுமை மற்றும் தனிப்பட்ட குணாதிசயங்கள் என்பன தலைவர்களிடம் இயற்கையாகவே அமைந்து காணப்படுவதாக நம்பியது. அவ்வகையில் தலைவர்களிடம் காணப்படும் பொதுவான பண்புகளாகப் பின்வருவனவற்றை இனங்கண்டது.

1. உடல்சார் பண்புகள் (Physical Traits) 

இதற்குள் தலைவர்களிடம் காணப்படும் பண்புகளாக ஆறு அடிக்கு மேற்பட்ட உயரம், 175 இறாத்தலுக்கு மேற்பட்ட நிறை. உடற் கவர்ச்சி, தசைப்பிடிப்பான உடற்கட்டு, தாங்கும் சக்தி . உயிர்புமிக்க பலம் என்பன அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவராக வருபவரிடம் இத்தகைய உடல் சார்ந்த தகுதிகள் காணப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்;பட்டது. 

2. சமூகம் சார் பண்புகள் (Social Traits)

இதில் மற்றவர் நிலையில் நின்று நோக்குதல், மனவெழுச்சியில் முதிர்ச்சி நிலை, கௌரவ அந்தஸ்தை அடைந்திருத்தல், புத்தி நுட்பம், பொறுமை போன்ற பண்புகள் உள்ளடக்கப்படும்.

3. ஆளுமைப் பண்புகள் (Personality Traits)

ஆளுமைப் பண்புகளாக தன்நம்பிக்கை, ஆதிக்க மனப்பான்மை, அதிகாரம் செய்யும் திறன், சுயமதிப்பு, உறுதி குலையாமை போன்றன சுட்டப்படுகின்றன.

4. தனிப்பட்ட பண்புகள் (Personal Traits) 

இதில் பேச்சுத் திறன், நடுநிலை, புலமைத்துவ ஆற்றல், சாதிக்கும் விருப்பு, கடின உழைப்புத்திறன், பொறுப்பேற்கும் தன்மை முதலியன உள்ளடங்குகின்றன.

பண்புசார் அணுகுமுறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படத் தக்கவையெனினும் தலைமைத்துவச் செயன்முறையை பயனுள்ள வகையில் விளங்கிக் கொள்வதற்கு அதிகம் உதவவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உண்மையில் தலைவர் களையோ தலைவரல்லாதவர்களையோ வேறுபடுத்திப் பார்ப்பதற்கு ஆய்வாளர்களுக்கு தலைமைத்துவப் பண்புகளெனச் சுட்டிக் காட்டப்பட்ட அம்சங்கள் சரியான முறையில் உதவவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. (Stogdil,R., 1948)

எனினும், இவ்வணுகுமுறையானது மேலும் தொடர்ந்து பல ஆய்வுகளுக்குக் களமமமைத்துத் தந்தது. பண்புக் கூறுகள் மட்டும் சிறந்த தலைமைத்துவத்துக்குக் காரணமில்லை என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டது. ஏனெனில் குறித்த பண்புகளை உடைய பலரும் கூட சிறந்த தலைவர்களாக விளங்கவில்லை என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனவே, பண்புக் கூறுகள் தவிர்ந்த வேறு எக் காரணிகள் சிறந்த தலைமைத்துவத்துக்குப் பங்களிக்கின்றன என்பது தொடர்பாகப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இக்கோட்பாடு அடிப்படையாக அமைந்தது எனலாம்.

நடத்தைக் கோட்பாடு 

பண்புக் கோட்பாட்டில் பண்புகளை இனங்காண்பதிலும். இனங்காணப்பட்ட பண்புகளின் பொருத்தத் தன்மையை வெளிப்படுத்துவதிலும் காணப்பட்ட திருப்தியீனம் நடத்தைக் கோட்பாட்டுக்கு வழிவகுத்தது எனலாம். அடிப்படையில் இதுவும் ஓர் பாரம்பரிய அணுகு முறையாகவே கொள்ளப்படுகின்றது. திறமைமிக்க தலைவர்களின் நடத்தையை இனங்காண்பதாக நடத்தைக் கோட்பாடு காணப்படுகின்றது. 

இதற்கெனப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சிறந்த தலைவர்கள் பலரும் தமது நடத்தை மூலம் தனது பணியாளர்கள் அல்லது பின்பற்றுவோரில் செல்வாக்குச் செலுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சிறந்த தலைமைத்துவத்துக்கு அவர்களின் நடத்தையே காரணம் என்பதை வெளிப்படுத்தியது.

1930களில் தலைவர்களின் நடத்தைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் 1940களின் இறுதியில் இரு பிரதானமான ஆய்வுகள் தெளிவானவையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை,

1. ஓகியோ மாநில பல்கலைக்கழக ஆய்வு

2. மிச்சிக்கன் பல்கலைக்கழக ஆய்வு

ஓகியோ மாநில பல்கலைக்கழக (Ohio State University) ஆய்வானது சிறுவர்களின் தலைமைத்துவம் பற்றி ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மூன்று வகையான தலைமைத்துவப் பாங்குகள் அடையாளம் காணப்பட்டன. 

1. ஒத்துழைப்புத் தலைமைத்துவம்  Supportive Leadership 

2. பங்குபற்றும் தலைமைத்துவம் Participative Leadership

3. கருவிசார் தலைமைத்துவம்   Instrumental Leadership 

ஒத்துழைப்புத் தலைமைத்துவமானது பணியாளர்களின் தேவைகள், அவர்களது  பாதுகாப்பு, கௌரவம், நல்வாழ்வு முதலிய நலன் பேணும் அம்சங்களைக் கவனத்தில் கொள்கிறது. ஒத்துழைக்கும் தலைவர் பணியாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான வேலைக் கவிநிலையையும் நட்பார்ந்த நிலைமையையும் ஏற்படுத்துகிறார். இத்தகைய தலைவர்களின் நடத்தைகளை ஓகியோ ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர். அவை:

1. பணியாளர்கள் நன்கு பணியாற்றும் போது பாராட்டுக்களை வெளிப்படுத்துவர்

2. பணியாளர்களை அதிக வேலை செய்யுமாறு வற்புறுத்த மாட்டார்கள்

3. பணியாளர்களின் சொந்தப் பிரச்சினைகளுக்கு உதவுவார்கள். 

4. இலகுவாக அணுகப்படக்கூடியவர்களாகவும், நட்புடன் பழகுபவர்களாகவும் காணப்படுவர்.

5. பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றுமிடத்து வெகுமதிகளை வழங்கி ஊக்குவிப்பர்.

இத்தகைய தலைமைத்துவத்தில் பணியாளர்களின் ஈடுபாடும், வரவொழுங்கும் காணப்பட்டது. ஆனால் உயர் தொழில் அடைவும், எதிர்பார்த்த இலக்கை அடையும் வினையாற்றுகையும் குறைவாகக் காணப்பட்டது. தலைவருக்கும் பணியாளருக்குமிடையே நெருங்கிய ஒத்துழைப்புக் காணப்பட்டதால் பணியாளர்களின் ஊக்கல் அதிகரித்ததுடன் உற்பத்தித் திறன்மிக்க ஒரு வேலைக் குழுவையும் உருவாக்க முடிந்தமை சிறந்த நேர்விளைவெனச் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் இத்தகைய தலைவர்கள் பலமான திருப்தியான வினையாற்றலைக் கொண்டிருக்கவில்லை என்பதும் பின்னடைவாகக் கூறப்பட்டது.

பங்குபற்றும் தலைமைத்துவம் என்பது தலைவருக்கும் பணியாளருக்கும் இடையே தகவல்கள், அதிகாரம், செல்வாக்கு என்பவற்றைப் பரிமாற்றம் செய்வதை விவரிக்கின்றது. இங்கு தலைவர் பணியாளர்களைச் சமமாக மதிப்பதுடன் தீர்மானம் எடுக்கும் போது அவர்களது செல்வாக்கையும் பயன்படுத்துபவராக உள்ளார். பங்குபற்றும் தலைவர்களின் நடத்தைகளாகக் கீழ்வருவன இனங் காணப்பட்டுள்ளன.

1. அவர்கள் தமது பணியாளர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்கள்

2. மாற்றங்களை அங்கீகரிப்பார்கள்

3. குற்றங் காணும் பண்பு இழிவானதாகக் காணப்படுவார்கள்

4. தொடர்புடைய தரப்புக்களின் அபிப்பிராயங்கள், கருத்துக்கள், உணர்வுகளைக் கவனத்தில் கொள்வார்கள்

5. வேலை தொடர்பில் தாமதமான மதிப்பீட்டினை எடுப்பார்கள்

இத்தகைய தலைவர்கள் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் பணியாளர்களின் ஈடுபாட்டை உருவாக்க முயற்சி செய்வார்கள். பணியாளர்களின் சுதந்திரமான சிந்தனை, ஆக்கத்திறன், ஆலோசனை கூறுதல் என்பவற்றை ஊக்குவிப்பார்கள். ஆனால் பணியாளர்களிடம் தேர்ச்சி மிக்க சிறப்பான அறிவோ, விசேட புலமைத்துவமோ காணப்படமாட்டாது. எனவே சிறப்பான தீர்மானம் எடுப்பதில் அவர்களது பங்களிப்பு பிரச்சினைக்கு உரியது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

கருவிசார் தலைமைத்துவம் என்பது நிறுவன இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல், ஒன்றிணைத்தல் ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்வதைக் குறிக்கும். ஓகியோ ஆய்வாளர்கள் இத்தகைய தலைவர்களின் நடத்தைகளாகக் கீழ்வருவனவற்றை இனங்கண்டுள்ளனர். 

1.     குறித்த இலக்குகளுக்கு அமைவாகப் பணியாளர்களை நியமிப்பார்

2. தொழில் வினையாற்றுகையில் ஒரு தரத்தை உருவாக்குவார்

3. வேலைக்கான அறிவுறுத்தல்களைப் பணியாளருக்கு வழங்குவார்

4. செய்யவேண்டிய வேலைக்கான கடமைப்பட்டியலை ஏற்படுத்தியிருப்பார்

5. பணி ஒழுங்கை வரவேற்பவராகக் காணப்படுவார்

கருவிசார் தலைமைத்துவம் என்பது முன்னர் கூறப்பட்ட இரு தலைமைத்துவப் பாங்கினதும் கலவை என்று கூறப்படுகிறது.

மிச்சிக்கன் பல்கலைக்கழக ஆய்வு மூலம் ஊழியர் மையம் மற்றும் உற்பத்தி மையமான இருவேறு தலைமைத்துவ நடத்தைகள் இனங்காணப்பட்டுள்ளன. ஊழியரை மையப்படுத்திய தலைவர்கள் உயர்ந்த உற்பத்தியினையும், உயர்வான வேலைத் திருப்தியையும் பெறுவாரெனவும், இவர்களே சிறந்த தலைமைத்துவம் வகிப்பவர்கள் என்றும் இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

றொபேட் தன்னன் வோம் (Robert Tannenbaum) மற்றும் வாரன் ஸ்மித் (Warren Schmidt) ஆகியோர் ஒரு முகாமையாளர் தலைமைத்துவ நடத்தையைத் தெரிவு செய்யும் முன்பாக மூன்று விசைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறார். அவை:

1. முகாமையாளரிடம் காணப்படும் விசைகள்

2. பணியாளர்களிடம் காணப்படும் விசைகள்

3. சூழலில் காணப்படும் விசைகள்

இவைகளுக்கிடையில் காணப்படும் விசைகளைக் கீழுள்ள வரைபடம் விளக்குகிறது. 


இங்கு முகாமையாளரின் அதிகார அளவு குறைவடையும் போது பணியாளரின் தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் அதிகரித்துச் செல்வதும், மறுதலையாக முகாமையாளரின் அதிகார அளவு அதிகரிக்கும் போது இத்தகைய சுதந்திரம் குறைவடைவதும் வெளிப்படுத்தப்படுகின்றது.


நெகிழத்தக்க கோட்பாடு

பல்வேறு வகையான தலைமைத்துவப் பாங்குகள் அடையாளம் காணப்பட்ட போதும் இவையனைத்தும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்த்த பெறுபேறுகளைத் தருவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமுறுவனவாகவும் இரண்டு சூழ்நிலைகளுக்கிடையில் வேறுபாடுடையன வாகவும் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த நிலைமை தொடர்பான காரணிகளைக் கருத்தில் கொண்டு தலைமைத்துவமானது வழி நடத்தப்பட வேண்டுமென்பதை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது.

முதலாவது பயனுறுதி வாய்ந்த நெகிழத்தக்க மாதிரி பீட்லராலும் அவரது அணியினராலும் (Fiedler and his Associates) முன்வைக்கப்பட்டது. இது பண்பு மற்றும் நடத்தைக் கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டதாகக் காணப்பட்டது. ஒரு குழுவின் வினையாற்றுகையென்பது தலைவரின் ஊக்கப்படுத்தல் தொகுதி மற்றும் குறித்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் தலைவரின் ஆற்றல் என்பவற்றில் தங்கியுள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பயனுறுதி வாய்ந்த தலைமைத்துவ மாதிரியென்பது சூழ்நிலையுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதில் தங்கியுள்ளதெனலாம்.

ஒரு தலைமைப் பாங்கானது இருவகையான ஊக்கப்படுத்தல் கொண்டதென பீட்லர் கருதுகிறார். அவை,

1. தொடர்பு ஊக்கப்படுத்தப்பட்ட தலைவர் (Relationship Motivated Leader)

2. இலக்கு ஊக்கப்படுத்தப்பட்ட தலைவர் (Task Motivated Leader) 

தனது பணியாளர்களுடன் மனவெழுச்சி சார்ந்த தொடர்புகளுக்கு முக்கியத்துவம் தருபவராக தொடர்பூக்கத் தலைவர் காணப்படுவார். அதே வேளை இலக்கு ஊக்கத் தலைவரோ வேலைச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் தருபவராக இருப்பார்.

சிறந்த தலைமைத்துவத்தில் மூன்று மாறிகள் செல்வாக்குச் செலுத்துவதாகவும் பீட்லர் கருதினார்.

1. தலைவர் - பணியாளர் உறவுகள் - Leader - Member Relations

2. இலக்குக் கட்டமைப்பு - Task Structure 

3. தலைவரின் அதிகார நிலை - Leader's Position Power 

ஆனால் ஆய்வுகள் பீட்லரின் மாதிரியை நீரூபிப்பதிலும் வேறுபடுத்துவதிலும் வெற்றி பெறவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தலைவரின் தலைமைத்துவ இயல்பு உயர்ந்த விளைதிறனுடையதாகக் காணப்படுவதும், மற்றைய சந்தர்ப்பங்களில் அவ்வாறு இல்லாதிருப்பதும் எப்படி என்பதற்கு பீட்லரின் மாதிரி போதிய விளக்கத்தைத் தரவில்லை எனலாம். எனினும் நெகிழத்தக்க கோட்பாட்டின் முதல் எத்தனமாக பீட்லரின் மாதிரியைக் கொள்ள முடியும்.

இவரைத் தொடர்ந்து கௌஸ் (House) என்பார் இலக்கு வழி மாதிரியொன்றை (Path Goal Model) முன்வைத்தார். ஊக்கல் கொள்கைளை அடிப்படையாக வைத்து அவர் இதனை முன்வைத்தார். அவர் தலைமைத்துவத்துக்கான ஒரே சிறந்த வழியைச் சுட்டிக் காட்டாது குறிப்பிட்ட சூழ்நிலைக்கும், பணியாளர்களின் தேவைக்கும் ஏற்ப தலைமைத்துவ இயல்புகளைப் பயன்படுத்துவதை வலியுறுத்தினார். வித்தியாசமான நிபந்தனைகளின் கீழ் செயற்படும் வேறுபட்ட தலைமைத்துவ இயல்புகளைச் சுட்டிக்காட்டுவதாக கௌஸின் இலக்கு வழி மாதிரி அமைகின்றது. 



முகாமையும் தலைமையும் 

பேராசிரியர் ஏபிரகாம் ஸலஸ்நிக்கியின் (Abraham Zeleznki) கருத்துப்படி முகாமையாளரும் தலைவரும் வேறுபாடானவர்கள். ஊக்கப்படுத்தல், சிந்தனை, செயற்பாடு ஆகிய விடயங்களில் அவர்களிடம் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் தலைமைத்துவம் என்பது முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது. அதேவேளை முகாமையாளர் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பது அவசியமானதாகும். எனவே முகாமையும் தலைமையும் ஒன்றுடனொன்று தொடர்பானவையாகவும், அதேவேளை தெளிவான வேறுபாடுகளை வெளிக் காட்டுவனவாகவும் உள்ளதெனலாம்.

தலைமைத்துவ முறைகள்

பல்வேறு தலைமைத்துவ முறைகள் இனங்காணப்பட்டுள்ளன. சிலர் பிறப்பிலிருந்தே தலைவர்களாக உருவானவர்கள் என்று (Born Leaders) கூறப்படுகிறது. வேறு சிலரோ பரம்பரைத் தொடர்ச்சியாக தலைமைத்துவத்தை அடைந்துள்ளனர். மன்னர்களின் உருவாக்கம் இவ்வாறானதாகும். வேறுசிலரோ தெரிவின் அடிப்படையில் மக்களால் சனநாயக ரீதியில் தெரிந்து எடுக்கப்படுகின்றனர். வேறு சிலரோ தாம் முன்னெடுக்கும் கொள்கைகளால் தலைவர்களாக வருகின்றனர். சிலர் தமது ஆளுமையாலும் செயற்திறனாலும் தலைவர்களாகின்றனர் (Charismatic Leader). அறிவுத் தலைவர்கள் (Technical Leader) என்போர் தமது தொழில்நுட்ப அறிவாலும் திறனாலும் தலைமை வகிப்பவர்களாவர். தனது ஆளுமை, கவர்ச்சி காரணமாகச் சிலர் அபிமானத் தலைவர்கள் (Popularity Leader) ஆகின்றனர். 

அதேவேளை அதிகாரத் தலைவர்கள் (Autocratic Leaders) தமது ஆதிக்க மனப்போக்கினால் தலைமை தாங்குபவர்களாவர். அதற்கு எதிராகக் குடியாட்சித் தலைவர்கள் (Democratic Leaders) விளங்குகின்றனர். Kurt Lewin மற்றும் Anderson ஆகியோர் குடியாட்சித் தலைமைத்துவமே சிறந்தது எனக் கூறியுள்ளனர். 

நிறுவனங்களைப் பொறுத்தவரை முறைசார் தலைவர்கள் (Formal Leader), முறைசாராத் தலைவர்கள் என இரு பகுதியாகக் காணப்படுவர். நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுபவர் முறைசார் தலைவராவார். ஆனால் முறைசாராத் தலைவரோ உத்தியோகபூர்வ மாக நியமிக்கப்படாமல் தலைமைத்துவச் செயற்பாடுகளை மேற்கொள்பவராவார். இவர் குழுக்களால் முன்னிலைப்படுத்தப்படுபவராவார். இவரது செயற்பாடுகள் அங்கீகரிக்கப் படாதனவாகக் காணப்படும்.

தலைமைத்துவ இயல்புகளை வெளிப்படுத்தும் முகமாக மூவகைத் தலைமைத்துவத்தை Lewin என்பார் இனங்காண்கிறார். அவை:

1. அதிகாரமயத் தலைமைத்துவம்

2. ஜனநாயகத் தலைமைத்துவம்

3. கட்டுப்பாடற்ற தலைமைத்துவம்

அதேவேளை Huneryager மற்றும் Heckman என்பவர்கள் தலைமைத்துவத்தை 4 பிரிவுக்குள் அடக்குகின்றனர்.

1. சர்வாதிகாரத் தலைமைத்துவம்

2. எதேச்சாதிகாரத் தலைமைத்துவம்

3. ஜனநாயகத் தலைமைத்துவம்

4. கட்டுப்பாடற்ற தலைமைத்துவம்


Rensis Likert என்பவர் நான்கு வகைத் தலைமைத்துவ இயல்புகளை இனங் காண்கிறார்.

1. சுரண்டல் தலைமைத்துவம்

2. இரங்கல்  தலைமைத்துவம்

3. கலந்துரையாடல்  தலைமைத்துவம்

4. பங்குபற்றும்  தலைமைத்துவம்

சுரண்டல் தலைமைத்துவ இயல்புடையவர் பணியாளர்களில் எவ்வித அக்கறையும் கொள்ளாது நிறுவன இலக்கில் அக்கறை கொண்டிருப்பார். இரங்கல் தலைமைத்துவ இயல்புடையவர் அதிகாரத்தினால் ஊழியருக்கு உத்தரவிடும் இயல்புடையவராக காணப்படுவார். கலந்துரையாடல் தலைமைத்துவ இயல்புடையவர் பணியாளர்களின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்வார். பங்குபற்றும் தலைமைத்துவமானது ஊழியர்களின் ஈடுபாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமையும்.

1960ல் தலைமை வகித்தல் தொடர்பாக டக்ளஸ் மைக்கிறகர் (Dauglas Mcgregor) முன்வைத்த Xமற்றும் Y கோட்பாடுகள் முக்கியமானவை. X கோட்பாட்டில் தலைவன் கடும் போக்குடனிருப்பது வலியுறுத்தப்படுகிறது. ஊழியர்கள் போதுமான ஒத்துழைப்பை வழங்காத போது இக்கொள்கை அதிகாரம் பிரயோகிக்கப்படுவதை வலியுறுத்துகிறது. மறுபுறத்தில் Y கொள்கையானது ஊழியர்களின் நலன்களைக் கருத்தில் கொள்வதாக, தலைவன் மென்மைப் போக்குடனிருப்பது  வலியுறுத்தப்படுகிறது. 

இங்கிலாந்தின் கைத்தொழில் நிறுவனத்தில் 1965ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஆஸ்ரைட் கற்கை (Ashridge Studies) எனப்படுகிறது. இது தலைமைத்துவ இயல்புகளை நான்காகப் பார்க்கிறது.

1. அறிவிக்கும் இயல்பு (Tells Style) 

2. திணிக்கும் இயல்பு (Sells Style) 

3. கலந்தாலோசிக்கும்; இயல்பு (Consultative Style) 

4. இணையும் இயல்பு (Joins Style) 

எந்தவொரு ஆலோசனையையும் பணியாளரிடமிருந்து பெறாமல் தானே தீர்மானமெடுத்து நடைமுறைப்படுத்துவது அறிவிக்கும் இயல்பாகும். தானே அதிகாரத்தை வைத்துச் செயற்படுத்துவது திணிக்கும் இயல்பாகும்.  பணியாளரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்படுத்துவது கலந்துரையாடும் இயல்பாகும். பணியாளருக்குப் பூரண சுதந்திரம் அளித்து அவர்களைச் செயற்பட வைக்கும் இயல்பு இணையும் இயல்பாகும்.  

முடிவுரை

தலைமைத்துவம் என்ற எண்ணக்கரு என்பது மனிதர்களின் உளஞ் சார்ந்தே அதிகம் விவரிக்கின்றது. தனிமனிதனின் மேலெழுகைக்குக் காரணமான தலைமைத்துவப் பண்புகள் இயல்பூக்கம், ஆளுமை, நடத்தை போன்ற உளவியல் காரணிகளின் செல்வாக்கின் வழியாக எய்தப்படுபவை. எனவேதான் தலைமைத்துவம் என்ற எண்ணக்கருவின் விருத்தியில் உளவியலானது தாக்கம் மிகுந்த செல்வாக்கைச் செலுத்துகிறது.

இன்று வரையான தலைமைத்துவ ஆய்வுகள் யாவும் தலைமைத்துவத்துக்கு இன்றியமையாத உளவியல் பரிமாணங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. எனவே உளவியல் கோட்பாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவே தலைமைத்துவ எண்ணக்கரு காணப்படுவதோடு அதன் விரிவான ஆய்வுக்கும் அடித்தளமாக அமைந்ததெனலாம்.

உசாத்துணைகள்

1. Hellriegal , Don ,Slocum ,John .W ,(1982) Management (3rd Ed.) addision -Wesley Publishing company, Canada, pp 512 - 633

2. ஜெயராமன், தேவராஜன் ந. (2000) முகாமைத்துவத்துக்கு ஓர் அறிமுகம், பவளரத்னா பதிப்பகம். கண்டி. பப. 149 - 159

3. தேவராஜா, க. (2004) முகாமைத்துவம், உயர்கல்விச் சேவை நிலையம், யாழ்ப்பாணம், பப. 87 - 97

4. சந்தானம், எஸ். (1994) கல்வியும் சமூகமும், சாந்தா பப்ளி~ர்ஸ், சென்னை,  பப. 103 - 110

5. முத்துலிங்கம், ச. (2002) கல்வியும் உளவியலும், லங்கா புத்தகசாலை, கொழும்பு,      பப. 61 - 66

6. நடராசா, க. (.......) பாடசாலை முகாமைத்துவம், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை, பப. 46 - 48

7. சண்முகம், நி. (1997) தலைமைத்துவம் எதிர்கொள்ளும் சவால்களும் தந்திரோபாயச் சிந்தனையின் முக்கியத்துவமும், முகாமை நோக்கு (2), பப. 70 - 78

8. மகீதரன், ஆ., சிறிஸ்கந்தகுமார், எஸ். (1997) முகாமையில் தலைமைத்துவத்தின் பங்கு, மேலது, பப. 18 - 23


 பண்மகள், 185 வது ஆண்டு சிறப்பிதழ் (2008), பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை