Sunday, January 8, 2023

வட மாகாணத்தில் சிறுவர் இலக்கிய முயற்சிகள் : ஒரு சுருக்க அறிமுகம்

 


சிறுவர் இலக்கியம் என்னும் போது சிறுவர் பாடல்கள், கதைப் பாடல்கள், கதைகள், நாவல்கள், கட்டுரைகள், பத்திகள் எனப் பலவகைப்பட்டதாகும். சிறுவர்களின் உளநிலைக்கேற்ப அவர்கள் மகிழ்வாகப் படித்து இன்புறத்தக்கதாகவும், சிறுவர்களின் உளவிருத்தி, மனவெழுச்சி, ஆளுமை விருத்தி சார்ந்ததாகவும்  சிறுவர் இலக்கியங்கள் எழுந்துள்ளன. வெறும் நீதி போதனைகள் சிறுவர் இலக்கியமாகாது. மாறாக சம்பவங்கள், உரையாடல்கள், காட்சி விபரிப்புகள் ஊடாக நீதிக் கருத்துக்களையும், அறிவியல் கருத்துக்களையும் சிறுவர்கள் மனதில் பதிக்கும் வண்ணம் அழகியல் தன்மை கொண்டதாக சிறுவர் இலக்கியங்கள் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் சிறுவர் பாடல்களே அதிகம் வெளிவந்துள்ளன. தமிழில் வெளிவந்த முதலாவது சிறுவர் இலக்கியமானது பாலியக் கும்மி என்ற பெயரிலான சிறுவர் பாடல் நூலாகும். இது யாழ்ப்பாணம் தம்பிமுத்துப்பிள்ளை என்பவரால் எழுதப்பட்டு, 1886இல் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் வெளியாகி 32 ஆண்டுகளின் பின்னர் அரசாங்க முதலியாராகப் பணியாற்றிய ச.வைத்தியநாதர் என்பவரால் எழுதப்பட்டு 1918இல் வெளியாகிய தமிழ்ப் பால போதினி என்ற நூல் விளங்குகிறது. 

தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியம் 1970இலேயே தோற்றம் பெற்றது. அதற்கு முன்னரே இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து சிறுவர் பாடல் நூல்கள் வெளிவந்து, இத்துறையில் முன்னோடியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் வித்தியாதிகாரியாகக் கடமையாற்றிய கே.எஸ்..அருணந்தி என்பவரின் முயற்சியில் பிள்ளைப் பாடல்கள் என்ற தொகுப்பு 1930 அளவில் வெளிவந்துள்ளது. சிறுவர்களின் வயது, அறிவு, அனுபவம், விருப்பு, சூழல் என்பவற்றுக்கேற்ப சிறுவர் பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வட மாகாண தமிழாசிரியர் சங்கத்தை அணுகி, அவர்கள் மூலம் போட்டியொன்றினை வைத்தார். குழந்தைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் என இரு பிரிவாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஈழத்தின் தலைசிறந்த அறிஞர்களான சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, நவநீதகிருஸ்ண பாரதியார், குருகவி வே.மகாலிங்கசிவம் முதலானோர் நடுவர்களாக இருந்து இப்பாடல்களைத் தெரிவு செய்தனர். அதில் தெரிவான பாடல்களையும், அதற்கு முன்னராக வெளிவந்த பாடல்களையும்   கொண்டதாக பிள்ளைப் பாடல்கள் நூல் வட மாகாண தமிழாசிரியர் சங்க வெளியீடாக வெளிவந்தது. போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சோமசுந்தரப் புலவர், மா.பீதாம்பரன், சி.அகிலேச சர்மா,எஸ்.தங்கசாமி முதலானோரின் பாடல்கள் உட்பட 74 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றிருந்தன. 

“சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை எண்ணற்ற குழந்தைக் கவிஞர்களை ஈன்றெடுத்தது. அந்தக் கவிஞர்களின் குழந்தைப் பாடல்களை அப்போதே ஒன்று திரட்டி கே.எஸ்.அருணந்தி பிள்ளைப்பாடல் என்னும் பெயரில் வெளியிட்டார். குழந்தை இலக்கியம் கொடி கட்டிப் பறக்கும் நம்நாட்டில் 1970இல்தான் அப்படிப்பட்ட குழந்தை இலக்கியத் தொகுதி வெளிவந்துள்ளது” என தமிழகத்தின் முக்கிய குழந்தை இலக்கியகர்த்தாவான முனைவர் பூவண்ணன் குறிப்பிட்டுள்ளமை முக்கியமானதாகும்.

இக்காலப் பகுதியில் நவாலியூர் சோமசுந்தரப் புலவர், மா.பீதாம்பரன், சி.அகிலேஸ்வர சர்மா, சி.பஞ்சாட்சர சர்மா முதலானோர் சிறுவர் பாடல்களை எழுதினர். சோமசுந்தரப் புலவர் புகழ் பெற்ற பல பாடல்களை எழுதியதுடன் கதைப்பாடல்கள் எழுதி, அதில் முன்னோடியாக விளங்கினார். அத்துடன் சிறுவர் நாடக ஆக்கத்திலும் அவரே முன்னோடியாக விளங்குகிறார். அவர் எழுதிய சிறுவர் சல்லாபம் என்ற நாடகமே முதல் சிறுவர் நாடக எழுத்துருவாகும்.

இக்காலப் பகுதியில் வெளிவந்த ஈழகசரி பத்திரிகையும் சிறுவர் இலக்கிய வெளிப்பாட்டுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. 

1940களில் மேலும் பலர் சிறுவர் பாடல்கள் எழுதினர். பண்டிதர் க.சச்சிதானந்தன், வித்துவான் க.வேந்தனார், இரசிகமணி கனக.செந்திநாதன், கவிஞர் யாழ்ப்பாணன், அல்வாயூர் கவிஞர் மு.செல்லையா, பண்டிதர் க.வீரகத்தி, மஹாகவி து.உருத்திரமூர்த்தி முதலானோர் இக்காலத்தில் சிறுவர் பாடல் இலக்கியங்களைப் படைத்தனர். பண்டிதர் க.சச்சிதானந்தனின் மஞ்சு மலர்க் கொத்து, வேந்தனாரின் குழந்தை மொழி பாகம் 1,2,3, க.சோமசுந்தரப்புலவரின் சிறுவர் செந்தமிழ், அல்வாயூர் மு.செல்லையாவின் வளர்பிறை, பண்டிதர் க.வீரகத்தியின் தங்கக் கடையல், மஹாகவியின் பிஞ்சுப் பாடல்கள், மதுரகவி இ.நாகராஜனின் சிறுவர் பாட்டு, யாழ்ப்பாணனின் பாலர் கீதம் என்பன நூல்களாக வெளிவந்துள்ளன.

1950களிலிருந்து இன்று வரை நூற்றுக்கும் அதிகமான சிறுவர் பாடல் நூல்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த படைப்பாளிகளால் ஆக்கப்பட்டு, வெளிவந்துள்ளன. கவிஞர் முருகையன், கல்வயல் வே.குமாரசாமி, சு.துரைசிங்கம், த.துரைசிங்கம், ச.வே.பஞ்சாட்சரம், புலவர் ம.பார்வதிநாதசிவம், மயிலங்கூடலூர் பி.நடராசன், தில்லைச்சிவன், வ.இராசையா, பண்டிதர் சி.அப்புத்துரை, பண்டிதர் செ.கதிரேசர்பிள்ளை, சேந்தன், பா.சத்தியசீலன், அமுது, இ.சிவானந்தன், வளவை வளவன், சிதம்பரபத்தினி, மு.பொன்னம்பலம், கோப்பாய் சிவம், சபா.ஜெயராஜா,  வி.என்.எஸ்.உதயச்சந்திரன்,  இயல்வாணன், நெடுந்தீவு மகேஷ்,  வேலணையூர் சுரேஸ் முதலான பலர் சிறுவர் பாடல்களைப் படைத்ததுடன் சிறுவர் பாடல் நூல்களையும் வெளியிட்டுள்ளனர்.

சிறுவர் கதைகளையும் பலர் எழுதியுள்ளனர். வட இலங்கை தமிழ்நூற் பதிப்புக் கழகத்தால் பல சிறுவர் கதை நூல்கள் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இக்காலத்தில்  குமாரசாமிப் புலவர், பிரான்ஸிஸ் கிங்ஸ்பெரி(அழகுசுந்தர தேசிகர்), பண்டிதர் வ.நடராசா, பண்டிதர் சு.வேலுப்பிள்ளை முதலானோர் சிறுவர் கதைகளைப் படைத்துள்ளனர். த.துரைசிங்கம், சு.துரைசிங்கம், சபா.ஜெயராஜா, செங்கை ஆழியான், பூ.க.இராசரத்தினம், ச.அருளானந்தம், கோகிலா மகேந்திரன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், பொ.கனகசபாபதி முதலானோர் சிறுவர் கதைகளைப் படைத்துள்ளனர். இவற்றில் அறிவியல் கதைகளும் அடங்கும்.

சிறுவர் நாவல்கள் பலவும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து எழுதப்பட்டுள்ளன. க.நவசோதியின் ஓடிப்போனவன் இப்பிரதேசத்தில் முதலில் வெளிவந்த நாவலாக உள்ளது. அனு.வை.நாகரான் (காட்டில் ஒரு வாரம், அவன் பெரியவன்), கே.எஸ்.ஆனந்தன் (இராவணன் கோட்டை), சி.சிவதாசன்(வேப்பமரத்துப் பேய்), செங்கை ஆழியான்(ஆறுகால்மடம்), ச.அருளானந்தம்(காட்டில் கலவரம்), வில்வம் பசுபதி(லப்பாம் டப்பாம்), இயல்வாணன்(பாக்கியம் பாட்டியின் விண்வெளிப் பயணம்), என்.சண்முகலிங்கன்(சான்றோன் எனக் கேட்ட தாய்) சோ.ராமேஸ்வரன்(திசை மாறிய பாதைகள்) முதலான சிறுவர் நாவல் நூல்கள் வெளிவந்துள்ளன.

சிறுவர் நாடகங்களையும் பலர் எழுதியுள்ளனர். அவை நூல்களாக வெளிவந்துள்ளதுடன் பரவலாக ஆற்றுகை செய்யப்பட்டுமுள்ளன. நவாலியூர் சோமசுந்தரப் புலவரால் எழுதப்பட்ட சிறுவர் சல்லாபம் நாடகமே தமிழில் வெளிவந்த முதல் நாடக ஆக்கமாகும். குழந்தை ம.சண்முகலிங்கம், பேராசிரியர் சி.மௌனகுரு, தே.தேவானந், யோ.யோன்சன் ராஜ்குமார், கலாநிதி சி.ஜெயசங்கர், சி.கா.கமலநாதன், முத்து.இராதாகிருஸ்ணன் முதலான பலர் இத்துறையில் தொடர்ந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அத்துடன் சிறுவர் நாடக நூல்களையும் வெளியிட்டுள்ளனர்.

சிறுவர் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் பலவும் வெளிவந்துள்ளன. பண்டிதர் சு.வேலுப்பிள்ளை, வித்துவான் க.சொக்கலிங்கம், ச.அருளானந்தம், த.துரைசிங்கம் முதலானோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இயல்வாணன் எழுதிய செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் உதயன் பத்திரிகையில் சிறுவர் பத்தியாக வெளிவந்து பின்னர் நூலாக்கப்பட்டது.

இவ்வாறு சிறுவர் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வட மாகாணத்தைச் சேர்ந்த பலரும் எழுதியுள்ளனர். எனினும் சிறுவர் பாடல்கள் வெளிவந்த அளவுக்கு சிறுவர் கதைகள், சிறுவர் நாவல்கள் வெளிவரவில்லை. அத்துடன் சிறுவர்களின் உளநிலைக்கேற்ப அவர்களின் உளவிருத்திக்கு வாய்ப்பளிக்கக்கூடிய நூலாக்க முயற்சிகளும் இங்கு குறைவாகும். குறிப்பாக, குழந்தை இலக்கியம் சார்ந்து இத்தகைய குறைபாடு அதிகமாகும். குழந்தைகளையோ, சிறுவர்களையோ ஈர்க்கக்கூடிய வகையில் சித்திரங்களையும், வடிவமைப்பையும் கொண்டு நூல்கள் வருவது மிக அரிதாகும். அதற்கு இங்குள்ள சந்தை வாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். சேமமடு புத்தகசாலை, குமரன் பதிப்பகத்தின் இலக்கியன் வெளியீட்டகம் முதலியன இத்தகைய சிறுவர் நூல் வெளியீட்டில் கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

வளரி கார்த்திகை 2022

இலக்கியத் தேனீ கவிஞர் துரையர்

 
















ஒரு இலக்கியத் தேனீயாக தேடலும், செயல்முனைப்புங் கொண்டு செயற்பட்ட கவிஞர் துரையர் தனது 83வது வயதில் இவ்வுலகை நீத்தார். 08-04-1939இல் கந்தரோடையில் சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் துரைசிங்கம் என்பதாகும். கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை, ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப, இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இவர் ஆசிரியராகப் பணியில் இணைந்து கொண்டார். பின்னர் பதவியுயர்வு பெற்று அதிபராகப் பல பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வுபெற்றார். தனது அறிவாலும், ஆற்றலாலும் தாம் கடமையாற்றிய பாடசாலைகளில் முத்திரை பதித்த செயல்வீரராக இவரை பாடசாலைச் சமூகங்கள் அடையாளங் காண்கின்றன. பல பாடசாலைகளைத் தரமுயர்த்திய அதிபராக இவரது சேவை போற்றப்படுகிறது. பல மாணவர்களை நன்னிலைப்படுத்திய பெருந்தகையாகவும் இவர் விளங்கினார்.

படிக்கும் காலத்தில், தனது பதினாறாவது வயதில் வீரகேசரியில் எழுதிய கவிதையுடன் இவரது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது. கவிதைகள், சிறுவர் பாடல்கள் எழுதுவது, பாடசாலை நாடகப் போட்டிகளுக்கு நாடகங்கள் எழுதுவது என்று இவரது ஆரம்பகாலச் செயற்பாடுகள் அமைந்தன. இவரது கவிதைகள் வீரகேசரி, விவேகி,ஈழநாடு, வலம்புரி முதலான பத்திரிகைகளிலும், இலங்கை வானொலியிலும்  வெளியாகின.

இவரது முதலாவது கவிதைத் தொகுதி தெருவிளக்கு 1972இல் கந்தரோடைசனசமூக நிலைய வெளியீடாக வெளிவந்தது. சந்தவோசை மிக்க 41 கவிதைகளும், 7 சிறுவர் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றிருந்தன.பேராசிரியர் சி.தில்லைநாதனின் அணிந்துரையுடன் இந்நூல் வெளிவந்தது. 

எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வங் கொண்ட இவர் அடுத்து கவிக்குரல்கள் என்ற ஒலிநாடாவை வெளியிட்டார். இவரது கவிதைகளை வேறு கவிஞர்களின் குரலில் வெளிப்படுத்துவதாக இவ்வொலிநாடா விளங்கியது.

அதனைத் தொடர்நது 50 நாடுகளை அறியுங்கள், 46 நாடுகளை அறியுங்கள் என இரு புவியியல் நூல்களை எழுதி வெளியிட்டார். நாடுகள் தொடர்பான குறிப்புகள்,படங்களுடன் இந்நூல் வெளிவந்தது.

ஆலயங்களுக்கு பக்திப் பனுவல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். ஆலயங்கள் மீது பாடப்பட்ட கீர்தனைகளை பண்சுமந்த பாடல் என்ற பெயரில் சிறுநூலாக வெளியிட்டதுடன், அவற்றை நூல்வெளியீட்டு நிகழ்வில் இசைக் கலைஞர்களைக் கொண்டு பாடவைத்தார். அதுபோல அம்மன் கவசம் என்ற நூலை வெளியிட்டதுடன்  இசைத்துறை விரிவுரையாளரான கலாநிதி தர்சனனின் குரலில் ஒலிநாடாவாகவும் வெளியிட்டார். மயூரபதி பத்திரகாளியம்மன் மும்மணிக்கோவையையும் எழுதினார்.

சுன்னாகத்தில் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள் என்ற சிறுநூலை வெளியிட்ட இவர் வரத பண்டிதரில் இருந்து இளையண்ணா வரையான  சுன்னாகத்தின் எழுத்திலக்கிய ஆளுமைகள் 32 பேரையும், அவர்களது படைப்பாக்கங்களையும் அறிமுகம் செய்துள்ளார். அதுபோலவே தமது திருமணப் பொன்விழா வெளியீடாக இயல்வாணனின் தொகுப்பில் ‘கந்தரோடை தந்த தமிழறிஞர் ந.சி.கந்தையாபிள்ளையின் தமிழ்த்தொண்டு’ என்ற நூலை வெளியிட்டு, இலவசமாக வழங்கினார். 66 நூல்களை வெளியிட்ட பேரறிஞரான ந.சி.கந்தையாபிள்ளையை தமிழ் எழுத்துலகம் கண்டு கொள்ளவில்லை என்ற கவலை இவருக்கிருந்தது. அதனாலேயே இந்த நூல் மூலம் அவரை சமூகத்துக்கு அடையாளங் காட்ட இவர் விழைந்தார் என்பது முக்கியமானது.

அரும்பண்பாட்டுக் கோலங்கள் என்ற நடைச்சித்திரத்தையும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும், மரபுரிமையையும் நினைவுபடுத்தி, மறைந்து போன, மறைந்து கொண்டிருக்கும் பண்பாட்டுக் கோலங்களை நீள நினைக்க வைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. சுன்னாகம் கலை இலக்கியச் சங்க வெளியீடாக வெளிவந்த இந்நூலில் அரிய புகைப்படங்களையும் இவர் இணைத்துள்ளார்.

பிற்காலத்தில் சிறுவர் இலக்கியத்தின் மீது இவரது கவனம் திரும்பியது. சிறுவர் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை எழுதியதுடன் சிறுவர் பாடல்கள், கதைகளையும் எழுதி நூல்களாக வெளியிட்டார். ஆடும் மயில், வயல் செய்வோம், உண்டு மகிழ்வோம், நட்பே உயர்வு, பாலன் வருகிறான் முதலான சிறுவர் இலக்கிய நூல்களை இவர் வெளியிட்டார். பாலர் கணிதம், எண்ணும் எழுத்தும் முதலான சிறுவர் பயிற்சி நூல்களையும் எழுதினார்.

ஓய்வின் பின்னர் வலம்புரி பத்திரிகையில் இணைந்து உதவி ஆசிரியராக, செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் வலம்புரியில் சிறுகதைகள், கவிதைகள் வெளிவரக் காரணமாக இருந்தார். தானும் கவிதைகளுடன் சிறுகதைகள் சிலவற்றையும் எழுதினார். கவிதைப் போட்டிகளை நடத்தி, பரிசு வழங்கி இளங் கவிஞர்களை ஊக்குவித்தார்.

1950களின் இறுதியில் இளம் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதிலும், செயற்படுத்துவதிலும் முன்னின்று செயற்பட்டார். 1960ஆம் ஆண்டு இளம் எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் துரையரைச் சந்தித்து உரையாடிய பசுமை நினைவை அந்தனிஜீவா நினைவுகூர்ந்துள்ளார். கந்தரோடை கலா நிலையம், சுன்னாகம் கலை இலக்கியச் சங்கம் ஆகியவற்றினை உருவாக்குவதிலும் இவர் முன்னின்று செயற்பட்டுள்ளார். பல்வேறு பொது அமைப்புகளிலும் தன்னை ஈடுபடுத்தி, பிரதேச மக்களுக்குச் சேவையாற்றியுள்ளார்.

இலங்கை கலாசார திணைக்களத்தின் கலாபூ~ணம் விருது, வலிகாமம் தெற்கு கலாசாரப் பேரவையின் ஞான ஏந்தல் விருது, சுன்னாகம் பொது நூலகத்தால் வழங்கப்பட்ட தமிழ்ச்சுடர் விருது, வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆளுநர் விருது, இரா.உதயணன் விருது, இசைப்பாவலர் விருது எனப் பல விருதுகளும் பாராட்டுக்களும் இவரது இலக்கியப் பணிக்காக வழங்கப்பட்டிருக்கின்றன.

தனது எழுத்தாலும், முன்னோக்கான செயற்பாடுகளாலும் தமிழ் எழுத்துலகில் ஒளிவீசிய கவிஞர் துரையர் அவர்கள் 14-12-2022அன்று இவ்வுலகை நீத்தார். அவர் உலகை நீத்தாலும், அவரது எழுத்துக்களில் அவர் என்றும் வாழ்வார். அவரால் உருவாக்கப்பட்ட நன்மாணாக்கர் நெஞ்சங்களிலும் அவர் வாழ்வார்.

இயல்வாணன்