Sunday, December 10, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 23

 முன்றில் 23

இயல்வாணன்

‘கேட்க ஒரு நாதி

கிளர்ந்தெழும்ப ஒரு கூட்டம்

மீட்க ஒரு இயக்கம்

மூச்சுவிட ஒரு கவிஞன்

கட்டாயம் தேவை இது

காலத்தின் குரலாகும்’ என்று பாடிய கவிஞர் புதுவை இரத்தினதுரை ஒரு காலத்தின் கவிஞராகவே தனது அடையாளத்தைப் பதித்தவராவார். சிற்பாசாரியாரான வரதலிங்கத்தின் இரண்டாவது மகனாக 1948ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆந் திகதி புத்தூரில் பிறந்த இரத்தினதுரை தனது ஊரின் பெயரையும் இணைத்துக் கொண்டு புதுவை இரத்தினதுரையாக கவி வடிக்க ஆரம்பித்தார்.

இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் நிறைவு செய்தார். அதன் பின்னர் இவரது சிறிய தந்தையாரான ஸ்ரீகந்தசாமியுடன் இணைந்து அவரது ஸ்ரீவாணன் சிற்பாலயத்தில் தேர்த் தொழில் செய்வதற்கான நுட்பங்களையும், மரச்செதுக்கு சிற்பக்கலை நுட்பங்களையும் கற்றுத் தேறியதுடன் ஒரு சிற்பாசாரியராகவும் உருவானார். நயினாதீவு நாகபூசணியம்மன் மஞ்சம், முன்னேஸ்வரம் ஆலய தேர், சட்டநாதர் சிவன் கோவில் தேர் உள்ளிட்ட பல ஆலயங்களின் தேர் உருவாக்கத்தில் இவரது கைவண்ணம் உள்ளது. நல்லூர் கம்பன் கோட்டத்தின் கதவு உள்ளிட்ட சிற்பச் செதுக்கல் கொண்ட கலைநயமான கதவுகள் பலவும் இவரால் உருவாக்கப்பட்டுள்ளன.

இவரது குருநாதரான கந்தசாமி மார்க்ஸிய சிந்தனை கொண்ட ஒரு பொதுவுடமைவாதியாக விளங்கினார். அவரது கருத்துநிலை புதுவை இரத்தினதுரையைப் பற்றிக் கொண்டது. கொம்யூனிசக் கட்சி ரய சார்பு, சீன சார்பு என நிலையெடுத்திருந்த காலத்தில் இவர் சீன சார்பு நிலைப்பாட்டில் இருந்த பொதுவுடமைவாதிகளுடன் இணைந்து தொண்டனாகச் செயற்பட்டார். பெர்துவுடமை மேடைகளில் இவர் உரையாற்றியதுடன் வீச்சுடன் கவிதைகளும் வடித்தார். சிங்கள இடதுசாரிகளுடனும் நெருங்கிப் பழகினார்.

1970களின் இறுதியில் தமிழர்களுக்கு எதிரான விரும்பத்தகாத சம்பவங்களின் பாதிப்பு, அரசாங்கத்தில் இணைந்திருந்த இடதுசாரிகளின் மௌனம் என்பன புதுவை இரத்தினதுரையைப் பாதித்தன. 

இருமொழி ஒரு நாடென்று/ இதுவரைஇருந்த நீதி/ தெருவினில் கிடக்குதம்மா/ தேசியம் என்ற பிள்ளை/ கருவிலே சிதைந்த காட்சி/ கண்களிற் தெரியுதம்மா/ பெருத்ததோர் வகுப்புவாதப் /புயலடித் தோய்ந்த தம்மா”என்று இந்த நிலைமையினைப் பாடினார். கொம்யூனிச ஈடுபாட்டையும் குறைத்துக் கொண்டார்.

நாட்டை விட்டு வெளியேறி இரு ஆண்டுகள் (1979-80) சிங்கப்பூரில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் நாடு திரும்பிஇ மீண்டும் பஹ்ரைன் நாட்டிற்குச் சென்று தளபாடத் தொழிலகத்தில் (1983-85) பணியாற்றினார். 1985இல் நாடு திரும்பிய இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 2009இல் முள்ளிவாய்க்காலில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போகும் வரை அந்த அமைப்பின் கலை கலாசாரப் பிரிவின்(பின்னர் கலை பண்பாட்டுக் கழகம்) பொறுப்பாளராகச் செயற்பட்டார்.

தனது 14வது வயதில் கவிதை எழுத ஆரம்பித்த புதுவை இரத்தினதுரை மார்க்சிய சிந்தனையை வரித்துக் கொண்டு ஒரு -இடதுசாரியாக- மக்கள் இலக்கியவாதியாக தன்னை அடையாளங் காட்டினார். வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் அடக்கப்பட்ட மக்களுக்காக இவரது பேனா குரல் கொடுத்தது.  மானுட விடுதலைக்கான பாடல்களாக இவரது கவிதைகள் உருக்கொண்டன. குமரன், தாயகம், மல்லிகை, வெளிச்சம், சுட்டும் விழி முதலான சஞ்சிகைகளிலும், தேசாபிமானி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, ஈழநாடு, ஈழநாதம், உலகத்தமிழர், விடுதலைப்புலிகள் முதலான பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. கவிஞராகவே, அதிலும் மரபுக் கவிஞராகவே அடையாளப்படுத்தப்பட்டாலும் கட்டுரைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார்.

இவரது முதலாவது கவிதைத் தொகுதியான வானம் சிவக்கிறது சுதாயினி வெளியீடாக 1970ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் வெளியீட்டு விழா புத்தூரில் நடைபெற்றது. ஒரு தோழனின் காதல் கடிதங்கள்(1976 தாரகைகள் இலக்கியக்குழு வெளியீடு), இரத்த புபங்கள்(1980 கண்டி கலைஞர் பதிப்பகம்), நினைவழியா நாட்கள்(1993 தமிழ்த்தாய் வெளியீடு) , வியாசனின் உலைக்களம்(2003 தமிழ்த்தாய் வெளியீடு), பூவரம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்(2005 நங்கூரம் வெளியீடு) ஆகிய கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன.

தனது தந்தையார் வரதலிங்கம், தாயார் பாக்கியம் ஆகியோரது பெயர்களை இணைத்துக் கொண்டு வரதபாக்கியான் என்ற புனைபெயரிலும் கவிதைகள் எழுதினார். அதுபோல தனது மனைவி ஸ்ரீரஞ்சினியின் பெயரை இணைத்து ரஞ்சினிரத்தினம் என்ற புனைபெயரிலும் இவர் கவிதைகளை எழுதியுள்ளார். தனது மகளான மாலிகா என்ற பெயரிலும், கமலக் கன்னி, இளவரதன், வியாசன் என்ற பெயர்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

புதுவை இரத்தினதுரையின் சிறப்பே கவிதை வாசிப்புத்தான். கவியரங்க மேடைகள் பல கண்ட இவரது கவிதைகளைக் கேட்பதற்கென்றே ரசிகர் கூட்டமொன்றிருந்தது. சொற்சுவையோடு கவிதை சொல்லும் பாங்கே அலாதியானது. அதுபோலத்தான் இவரது மேடைப்பேச்சும். கொம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும்இ விடுதலைப் போராட்ட கால மேடைகளிலும் அனல் பறக்கும் பேச்சாளனாக இவர் தனித்துத் துலங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான கவிஞராக விளங்கிய இவர் பல நூறு தாயக விடுதலைப் பாடல்களை எழுதியுள்ளதுடன் அவ்வியக்கம் சார்ந்த பிரச்சாரக் கவிதைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். பெரியளவில் இரண்டு முத்தமிழ் விழாக்களை மானிப்பாயிலும், சாவகச்சேரியிலும் பெருமெடுப்பில் நடத்திய இவர் காத்திரமான முத்தமிழ் விழா மலர்களையும் (1991இ 1992) வெளியிட்டார். கருணாகரனை ஆசிரியராகவும், புதுவை இரத்தினதுரையை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளியிடப்பட்ட வெளிச்சம் சஞ்சிகை அக்காலகட்டத்தின் காத்திரமான இலக்கிய ஏடாக(1991-2005) வெளிவந்தது.

இலங்கையின் சிங்கள தமிழ்  முஸ்லீம் படைப்பாளிகளை ஒன்றிணைத்து நான்கு நாள்கள் மானுடத்தின் தமிழ்க்கூடல் (2002 ஒக்ரோபர் 20இ21இ22இ23) என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியதில் இவரது தலைமைத்துவம் முக்கியமானது. தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஓவியர் ட்ரொஸ்கி மருது, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர். 

அதுபோல ஹிரு குழுவினரின் ஏற்பாட்டில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற சிங்கள தமிழ்க் கலைக்கூடலிலும் (2003 ஒக்ரோபர் 29,30) இவரது பங்களிப்பு முக்கியமானது. இங்குள்ள கலை இலக்கியகர்த்தாக்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று வசதியளித்தல்களைச் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் ‘சிஹல உறுமய’ என்ற பேரினவாத அமைப்பொன்று வன்முறைத் தாக்குதலை நடத்தி குழப்பங்களை ஏற்படுத்திய போதும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றமையும் பதிவு செய்யத்தக்கது.

பிற்காலத்தில் ஆலயங்கள் மீதான பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். நல்லை முருகன் பாடல்கள், துயர் வெல்லுந் துணை முதலான இறுவட்டுகள் பிரபலமானவை. திருநெல்வேலி பத்திரகாளி அம்மன், லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் கோவில் முதலானவற்றுக்கும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

இவரது கவிதைகளைப் போலவே இவரும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பான மனிதராகவே அடையாளப்படுத்தப்பட்டார். இவரது கவிதைகளும் பேச்சும் உணர்ச்சி கொப்பளிப்பனவாக வெளிவந்ததே இதற்குக் காரணம். ஆனால் இயல்பில் ஒரு குழந்தைத்தனமும்  அன்பும் கொண்ட பழக இனிய மனிதராகவே இவர் வாழ்ந்திருக்கிறார். பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது போல ‘புதுவையின் கருத்துநிலைத் துணிபும் கவித்துவ ஆளுமையும் அவரை இன்றைய சராசரி மனிதனின் குரலாகவும், முக்கியமாக அவனுக்கான கவிதைக் குரலாகவும் வைத்திருப்பதைக் காணலாம்’ என்பது முக்கியமானது. அது காலக் கவிஞராக அவரை நிலைநிறுத்தியது.





இயல்வாணன் பத்தி - முன்றில் 22

 

முன்றில் 22

இயல்வாணன்

ஒரு கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, ஆய்வாளராக, இதழியலாளராக, காலமாற்றத்துக்கேற்ப நவீன தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவராக பேராசிரியர் எம்.. நுஃமானை நாம் அடையாளங் காணலாம். தமிழிலக்கியத்துக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியதோடல்லாமல் வீச்சுமிக்க மாணவர்களை உருவாக்கியவராகவும் அவர் மிளிர்கிறார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைக்குடியில் அரபுமொழி ஆசிரியராகவும் மதப் பணியாளருமாகவும் விளங்கிய மக்புல் ஆலிமின் மகனாகப் பிறந்தவர் எம்..நுஃமான். இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் நிறைவு செய்தார்.

ஆசிரியராகப் பணியை ஆரம்பித்த இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். 1973இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் மொழியியல் துறையில் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1982இல் முதுகலைமாணி பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேறகொண்டு பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும், மொழியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1991இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்று, பேராசிரியராகப் பணியுயர்ந்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மலேயா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். சர்வதேச இனவியல் ஆய்வுமையத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் பணியாற்றியுள்ளார்.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை வடிவமைத்தல், அரசாங்க பாடநூல், ஆசிரிய வழிகாட்டி உருவாக்கல், மதிப்பீடு ஆகியவற்றிலும் இவர் தனது வாண்மைத்துவப் பங்களிப்பை வழங்கியதுடன்  பல ஆய்வு மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

தனது 16வது வயதில் எழுத்துலகில் பிரவேசித்த இவர் கவிஞர் நீலாவணன் மூலமாக இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இவரது முதல் கவிதை வீரகேசரியில் வெளிவந்தது. இவரது கவிதைகள் தாத்தாமாரும் பேரர்களும் - நெடுங்கவிதை (1977), அழியா நிழல்கள்(1982), மழை நாட்கள் வரும்(1983) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. .யேசுராசாவுடன் இணைந்து பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்(1984) நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

பலஸ்தீனக் கவிதைகள்(1981 மற்றும் 2000),  மொகமூத் தர்விஸ் கவிதைகள்(2008), காற்றில் மிதக்கும் சொற்கள்(மலாய் மொழிக் கவிதைகள்), இரவின் குரல்(இந்தோனேசிய மொழிக் கவிதைகள்), நம் அயலவர் -  சிங்களச் சிறுகதைகள் (காமன் விக்கிரமசிங்கவுடன் இணைந்து -2006) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது அடிப்படைத் தமிழ் இலக்கணம்(1999) நூல் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவும் துணைநூலாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. மரபுவழி இலக்கணக் கருத்துகளோடு நவீன மொழியியற் கருத்துகளையும் இணைத்து தற்கால தமிழ்மொழி இலக்கணத்தை எடுத்து விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (பேராசிரியர் சி.மௌனகுரு, சித்திரலேகா மௌனகுருவுடன் இணைந்து எழுதியது - 1979), பாரதியின் மொழிச் சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு(1984), 19ஆம் நூற்றாண்டின் நவீன உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும்,  திறனாய்வுக் கட்டுரைகள்(1985), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்(1987), ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்(2002), மொழியும் இலக்கியமும்(2006), சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்(2017), A Constructive Grammar of Tamil and Sinhala Noun Phrase (2003)>  Srilankan Muslims Ethnic Identity within Cultural Diversity (2007)> Understanding Muslim Identity (2004) முதலான நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

மஹாகவி உருத்திரமூர்த்தியுடன் இணைந்து 1969-70 காலப்பகுதியில் கவிஞன் என்ற பெயரில் காலாண்டிதழினை வெளிக்கொணர்ந்தார். 4 இதழ்களே வெளிவந்தன. வாசகர் சங்கம் என்ற பதிப்பகத்தின் மூலம் தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மஹாகவியின் ஆறு காவியங்கள்(2008) உள்ளிட்ட மஹாகவியின் படைப்புகளையும் இவர் தொகுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வேளை கவிதாநிகழ்வு என்ற  நிகழ்ச்சியை இவர் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

2011இல் தமிழ்நாட்டில் இவரது தமிழ்பணியைக் கௌரவித்து விளக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய நுஃமான் ஆரம்பத்தில் மார்க்ஸிய சிந்தனை அடிப்படையிலான இலக்கிய நோக்கினைக் கொண்டிருந்தாராயினும் பின்னர் கல்வித் துறைக்குரிய புறவயமான ஆய்வுமுறையினையே பயன்படுத்தினார். இவரது மொழியியல் ஆய்வுகள், கல்வித்துறை ஆய்வுகள் முக்கியமானவை. 79வயது நிறைவைக் கண்டுள்ள இவர் தொடர்ந்தும் தனது புலமைத்துவ ஆற்றலை தமிழுலகுக்குத் தர வேண்டும் என விரும்புகிறோம்.