Friday, January 21, 2022

பொ.சண்முகநாதன் படைப்புலகம்

நகைச்சுவைப் படைப்புகளால் மக்களைச் சிரிக்வும் சிந்திக்கவும் வைத்தவர் பொ.சண்முகநாதன்
இயல்வாணன்
நகைச்சுவை இலக்கியம் படைத்த முன்னோடிப் படைப்பாளியாக இலக்கிய உலகில் அடையாளப்படுத்தப்பட்ட பொ.சண்முகநாதன் அவர்கள் சிறுகதை, குறுநாவல், நகைச்சுவை நாடகம், பத்தி எழுத்து, ஊடகத்துறை ஆகியவற்றிலும் சிறந்து விளங்கியவராவார்.


பொன்னையா - பவானி தம்பதிகளின் மகனாக சங்குவேலி கிராமத்தில் பிறந்த பொ.சண்முகநாதன் ஆரம்பக் கல்வியை சங்குவேலி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். க.பொ.த சாதாரண தரம் வரை கற்ற இவர் ஆங்கிலத்தில் நல்ல அறிவுடையவராக விளங்கினார். தட்டச்சும் பயின்றிருந்தார். அதனால் மொழிபெயர்ப்பு மற்றும் கடிதங்கள், சத்தியக்கடதாசி முதலியவற்றைத் தயாரிப்பதை பகுதிநேரத் தொழிலாக மேற்கொண்டார். பின்னர் கணனியைக் கையாண்டு இந்தப் பணியைச் செய்தார். திருமணத்தின் பின்னர் கந்தரோடையில் வசித்து வந்தார்.

கலை, இலக்கியத்துறையில் அவர் ஈடுபாடு கொள்ளக் காரணமானவர் அவரது வீட்டிற்கு அருகில் வசித்த சிற்பி சிவசரவணபவன் ஆவார். அவர் கலைச்செல்வி சஞ்சிகையை ஆரம்பித்து நடத்திய போது சண்முகநாதன் அவருக்கு உதவிகரமாகச் செயற்பட்டார். அதில் எழுதவும் ஆரம்பித்தார். கலைச்செல்வி பண்ணைக்கூடாக அடையாளங் காணப்பட்ட இவர் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிய போதிலும், இவரிடம் இருந்த நகைச்சுவை உணர்ச்சி இவரை ஒரு நகைச்சுவை எழுத்தாளராக நிலைநிறுத்தியது.
தினகரன் பத்திரிகையின் மானிப்பாய் செய்தியாளராகக் கடமையாற்றியதுடன் உதயன் பத்திரிகைக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

இவர் எழுதிய முதலாவது நூல் கொழும்புப் பெண். நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுதியான இந்நூல் கலைச்செல்வி வெளியீடாக 1965 செப்ரெம்பரில் வெளிவந்தது. மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர் ரீ.பாக்கியநாதன் அவர்களின் மதிப்புரையுடன் இந்நூல் வெளிவந்தது. ‘ஈழத்தின் முதலாவது நகைச்சுவைக் கட்டுரைத் தொகுப்பு உங்கள் வசம் இருக்கிறது.அத்தோடு நகைச்சுவை இலக்கியத்தின் எதிர்காலமும் உங்கள் வசமே உள்ளது’ என்று மதிப்புரையில் ரீ.பாக்கியநாதன் குறிப்பிடுகிறார். மு.வரதராசன், நாடோடி முதலானவர்களின் பாராட்டையும் இந்நூல் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்நூலில் உள்ள 16 நகைச்சுவைக் கட்டுரைகள் ஈழநாடு, தினகரன், ராதா, செய்தி, வீரகேசரி, கலைச்செல்வி ஆகிய இதழ்கள், பத்திரிகைகளில் முதலில் வெளிவந்தவையாகும். விலகல் நடத்தையுடைய சமூக மாந்தர்களையும், சமூக நடப்புக்களையும் அங்கதச் சுவையில் விமர்சிக்கும் வகையிலான இந்தக் கட்டுரைகள் வாசகர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
இவரது சிறுகதைகளி;ன் தொகுதி வெள்ளரி வண்டி என்ற பெயரில் 1968 ஜனவரியில் வெளிவந்தது. தமயந்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூலில் 12 சிறுகதைகள் இடம்பெற்றன. சிற்பி சிவசரவணபவன் அவர்களது மதிப்புரையுடன் இந்நூல் வெளிவந்நது.

“சிக்கலற்ற சம்பவக் கோவையும், தெளிவான கருத்தும், சரளமான மொழிநடையுங் கொண்ட இக்கதைகளுட் பெரும்பாலானவை தம் ‘தூண்டுகோல்’ பணியையும், ‘கடிவாளப்’ பணியையும், ;மத்து’ பணியையும் திருப்திகரமாகச் செய்வதால் வாசகர்களின் பாராட்டுக்களைப் பெறும் என்பதில் ஐயமில்லை” என இந்நூலின் மதிப்புரையில் சிற்பி அவர்கள் கூறுவது இவரது கதைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம். பல்வேறு சம்பவ விபரிப்புக்கள் கொண்ட காதல் கதை, வெள்ளரி வண்டி, றிச்சேட் கிழவன், வேட்டைப்புலி, கண்ணீர், யதார்த்த எழுத்தாளர், சுண்டங்காயும் சுமைகூலியும், யாருக்காக?, கிரகணம், வலி, கற்புக் கனல், எழுத்தாளன் மனைவி ஆகிய சிறுகதைகள் இந்நூலில் வெளிவந்தன. ஈழநாடு, கலைச்செல்வி, கலைவாணி, விவேகி, சுதந்திரன், வீரகேசரி,புதினம் ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவை ஏலவே வெளிவந்த கதைகளாகும்.

பொ.சண்முகநாதனின் அடுத்த நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுதி பெண்ணே நீ பெரியவள்தான். தமயந்தி பதிப்பக வெளியீடாக ஆனி, 1971இல் வெளிவந்த இந்நூலில் 12 நகைச்சுவைக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்களின் குணவியல்புகளை இயல்பாக, நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் சமூகத்தின் விலகல் நடத்தைக் கோலங்களை விபரிப்பனவாக எழுதப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்ற குடும்பாளுமன்றம்  நாடகப் பாணியில் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘சண்முகநாதனின் எழுத்துநடை வாசிப்போருக்குக் களைப்பை உண்டாக்காது, படிப்போரைச் சோர்வடையச் செய்யாது ஆற்றொழுக்காக அமைந்துள்ளது. நகைச்சுவை வளர வேண்டிய கலை. சண்முகநாதன் போன்றோரால்தான் அது வளரவும் முடியும்’ என்று இந்நூலுக்கு வழங்கிய மதிப்புரையில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் குறிப்பிட்டமை முக்கியமானது.
‘இடுக்கண் வருங்கால் நகுவதற்கான நல்ல படைப்புகள் பொ.சண்முகநாதனுடையவை என்று இந்நூலின் பதிப்புரையில் புத்தொளி ந.சிவபாதம் சிலாகித்துக் கூறியுள்ளார்.
இவரது நாடக நூலான இதோ ஒரு நாடகம் 1973 நவம்பரில் தமயந்தி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. பொ.சண்முகநாதனது இலக்கிய நண்பரான இரா.பாலச்சந்திரன் ‘நீர் ஏன் நகைச்சுவை நாடகம் எழுதக்கூடாது?’ என்று தூண்டியதன் விளைவாக இந்நாடகம் எழுதப்பட்டது. இரண்டு களங்கள் கொண்ட இந்நாடகத்தில் மாலினி என்ற ஒரேயொரு பெண் பாத்திரமே உள்ளடங்கும் வகையில் 9 பாத்திரங்கள் நடிக்கக்கூடிய வகையல் எழுதப்பட்டுள்ளது. இந்நாடகம் ஆறு காட்சிகள் கொண்டதாக ஆக்கப்பட்டது. ஒரு நாடகத்தை உருவாக்குவதை நகைச்சுவை உணர்வோடு இந்த நாடகம் வெளிப்படுத்துகிறது.

உதயன் பத்திரிகையின் சஞ்சீவி வாரமலரில்  இவர் சேறும் தண்ணீரும் என்ற குறுநாவலை எழுதியுள்ளார். எனினும் அது நூலுருப் பெறவில்லை.
உதயன் பத்திரிகை ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க சண் அங்கிள் என்ற பெயரில் உதயன் பத்திரிகையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒரு பத்தியினை எழுதினார். நினைக்க சிரிக்க சிந்திக்க என்ற தலைப்பில் அமைந்த இந்தப் பத்தி எழுத்துக்கு 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்தி எழுத்தாளருக்கான B.A.Siriwardana coloumnist of the year என்ற இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் உயரிய விருது கிடைத்தது.
இந்தக் கட்டுரைகள் ‘நினைக்க சிரிக்க சிந்திக்க’ என்ற பெயரில் இந்தியாவின் மணிமேகலை பிரசுரத்தால் 2005ஆம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது. நகைச்சுவை ததும்பும் 60 கட்டுரைகள் இந்நுலில் இடம்பெற்றுள்ளன.

‘பல வருடங்களுக்கு முன்னர் படித்த, பார்த்த, கேள்விப்பட்ட விடயங்கள், விவகாரங்களை அச்சொட்டாக மீள நினைவுக்குக் கொண்டு வரவல்ல அபார ஞாபகசக்தி இன்றியமையாதது. இவற்றுடன் சமகால ஆட்டோட்டங்களை அவதானித்துக் கருத்துச் சொல்லும் தகுதியும் தேவை.இவை எல்லாவற்றுக்கும் உள்ளும் புறமுமாக நகைச்சுவை கலந்து முலாமிட்டு வாசகனைச் சிரிக்க வைக்கும் வல்லமை சண் அங்கிளுக்கு கைவந்த கலை. சமூகத்திலும், அதன் நடவடிக்கைகளிலும் உள்ள குறைபாடுகளை நாசூக்காக நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் திறமையை அவரது பல பத்திகளில் காணலாம் . 
எப்போதோ நிகழ்ந்ததை நேற்றைய சம்பவம் போலவும், நேற்றைய நிகழ்வை பழையது போலவும் புடம் போடுகின்ற எழுத்தாற்றல் பொண்முகநாதனுக்கு கைவரப்பெற்றது. சண் அங்கிளின் எழுத்து தங்குதடையின்றி, தளம்பல் குழம்பல் இன்றி, ஆற்றுநீர் போல ஓடுவது. அதில் ஆழமும் தெளிவும் செறிந்திருக்கும்’ என்று இந்நூலுக்கான வாழ்த்துரையில் உதயன் சஞ்சீவி பத்திரிகைகளின் ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் சண் அங்கிளைச் சிலாகித்துக் கூறியுள்ளார்.

‘ஆழமான செய்திகளை இலகுநடையில் வாசகருடன் பேசுவது போன்று, நகைச்சுவையையும் கலந்து ஆசிரியர் பொ.சண்முகநாதன் எழுதக்கூடியவர் என்பது இத்தொகுப்பு மூலம் நிரூபணமாகிறது’ என்று விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

உதயனில் எழுதிய பத்திகளின் அடுத்த தொகுப்பான ‘சிரிப்போம் சிந்திப்போம்’ 2006இல் மணிமேகலை பிரசுர வெளியீடாக வெளிவந்தது. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் 49 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிற்பி சிவசரவணபவன் அவர்களது அணிந்துரை, ம.வ.கானமயில்நாதன் அவர்களது வாழ்த்துரையுடன் இந்நூல் வெளிவந்தது. 
‘பல்வேறு காரணங்களால் வெவ்வேறு காலகட்டங்களில் இம்மண்ணில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் யாதுஞ் சுவடு படாமல் யாழ்ப்பாணத்தை அடிக்கடி தரிசிப்பதற்கு இந்நூல் பயன்படும்’ என சிற்பி அவர்கள் இந்நூலை விதந்துரைத்துள்ளார். 

‘நகைச்சுவைகளை இலாவகமாகவும், பூடகமாகவும் தந்த சண் அங்கிளின் பத்திகள் எங்கள் மண்ணினதும், மக்களதும் வாழ்வாதாரங்களையும், பண்பாதாரங்களையும் உள்நின்று சொல்லும் பெற்றியுடையவை. அத்தோடு அவை பற்றித் தெரியாத இளம் சந்ததியினருக்கு அறிமுகம் செய்யும் ஆவணங்களாகவும் திகழ்கின்றன’ என்று ம.வ.கானமயில்நாதன் அவர்கள் இந்நூலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறார்.

நகைச்சுவைக் கட்டுரைகளின் இன்னொரு தொகுதி ‘நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள்’ என்ற தலைப்பில் 2007இல் மணிமேகலை பிரசுரமாக வெளியிடப்பட்டது. உதயன் பத்திரிகை ஆசிரியர் ம.வ.காணமயில்நாதன் அவர்களதும், புலம்பெயர் வாசகர்களதும் வாழத்துக்கள், செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களது அறிமுகவுரை என்பவற்றுடன் இந்நூல் வெளிவந்தது.

‘கற்பனைக்கு அப்பால் நிதர்சனமான விடயங்களை நகைச்சுவையோடு எடுத்துரைக்கும் ஆற்றல் இவரது தனிச் சிறப்பு எனலாம். பழமையும் புதுமையும் கலந்த பாணியில் கருத்தோடு கூடிய நகைச்சுவைச் செய்திகளை அழகு தமிழில் தருவதில் இவர் வல்லவர். இவரால் படைக்கப்பட்ட நூல்கள் தமிழுக்கு அழகு செய்துள்ளன’ என்று ஆறு.திருமுருகன் அவர்கள் அறிமுகவுரையில் சண் அங்கிளைப் பாராட்டியுள்ளார். இந்நூலிலே நகைச்சுவை இலக்கியத்தைப் படைத்த முன்னோடி எழுத்தாளர்கள் பற்றிய 7 கட்டுரைகளும், 15 நகைச்சுவைக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பொ.சண்முகநாதன் அவர்களது கலைத்துறைச் சேவையினைப் பாராட்டி வலிகாமம் தெற்கு கலாசார பேரவை ஞானஏந்தல் விருது வழங்கிக் கௌரவித்தது. அத்துடன் இலங்கை அரசின் கலாசாரத் திணைக்களத்தின் கலாபூ~ணம் விருது 2008இல் வழங்கப்பட்டது.

ஒரு நகைச்சுவை எழுத்தாளராக அறியப்பட்டாலும் சமூகப் பார்வையுடன் கூடிய எழுத்துக்களைத் தந்த ஒருவராகவே அவர் வரலாற்றில் நிலைத்திருப்பார். அவரது எழுத்துக்கள் வாசக மனங்களில் நிறைந்திருக்கும் வரையும் அவர் வாழ்வார்.





சாந்தனின் சித்தன் சரிதம் நூல் அறிமுகம் இயல்வாணன் உரை

எழுத்தாளர் இயல்வாணன் |எழுத்தாணி பகுதி - 04 | Ezulathani | Capitaltv Sril...