Friday, July 21, 2023

ஜீவன் வாழும் வனம்

 இந்த இடத்தில்தான் நாம் படித்தோம்அப்போது கட்டடம் இருந்ததுஇப்போது இல்லை


இந்த இடத்தில்தான் நாம் விளையாடினோம்
அப்போது மைதானமிருந்தது
இப்போது இல்லை

இந்த இடத்தில்தான் ஊஞ்சலாடினோம்
அப்போது ஆலமரமிருந்தது
இப்போது இல்லை

இந்த இடத்தில்தான் ஆசிரியர்கள் இருந்தனர்
இப்போது யாருமில்லை

இந்த வெளியெங்கும் நண்பர்ளுடன் அலைந்தோம்
நண்பர்கள் யாருமில்லை இப்போது

இந்த இடத்தில்தான் எங்கள் ஜீவன் உறைந்திருந்தது
இப்போதும் அது உள்ளது

இந்த வனாந்தரத்தில்
காற்றுந்த
மரங்களில் மோதி
சுற்றித் திரிகிறது
நினைவுகளைச் சுமந்தபடி.

Sunday, July 9, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 14

 முன்றில் 14

இயல்வாணன்

ஒரு அனுபவிக்கத்தக்க உணர்நிலைக்கூடாக வாசகரைக் கதைக்குள் இழுத்துச் செல்லும் மொழியும், நுட்பமான காட்சிச் சித்திரிப்பும், பல்வேறு பழக்கமற்ற உலகங்களை, பண்பாடுகளை இயல்பாக எம்முள் புகுத்தும் லாவகமும் நிறைந்த ஒரு சாகச எழுத்தாளராக நாம் அ.முத்துலிங்கத்தை அடையாளங் காணலாம்.

 எளிமையான மொழிநடையில், இயல்பாகக் கதை சொல்லும் பாங்கு வாசகரை அவரது கதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது.

கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 19-01-1937இல் பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் நிறைவு செய்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பட்டயக் கணக்காளர் மற்றும் முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் படிப்பினையும் நிறைவு செய்தார். 

தென்னிலங்கை காலியில் நிறுவனமொன்றில் நிதிமுகாமைத்துவப் பணியில் இணைந்து கொண்டார்.

1972இல் ஆபிரிக்காவுக்குப் பணி நிமித்தம் சென்றார். அங்கு அரச நிறுவனங்களில் பணியாற்றிய அவர் பின்னர் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் சேவைத்திட்ட அலுவலகத்திலும் பல பதவிகளில் பணியாற்றினார். ஆபிரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எனப் பல நாடுகளிலும் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அந்த இடங்களில் பெற்ற நிறைந்த அனுபவங்களே பின்னாளில் அவரது கதைகளில் தாக்கம் செலுத்தின.

பாடசாலைக் காலத்திலும், பல்கலைக்கழக காலத்திலும் எழுத ஆரம்பித்தாலும், 1958இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்த கடைசிக் கைங்கரியம் சிறுகதையுடனேயே இவரது இலக்கிய பிரவேசம் நிகழ்ந்ததெனலாம். கல்கி வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது அனுலா சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றது. தினகரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில்(1961) இவரது பக்குவம் சிறுகதை முதற்பரிசைப் பெற்றது. அக்காலகட்டத்தில் எழுதிய 10 சிறுகதைகள் அக்கா என்ற நூலாக (1964) பேராசிரியர் கைலாசபதியின் அணிந்துரையுடன் வெளிவந்தது.


அதன் பின்னர் அ.முத்துலிங்கம் அஞ்ஞாதவாசத்திலிருந்தார். அவரது தொழில் எழுதுவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை என்பதை ஒரு நேர்காணலில் அவர் பதிவு செய்துள்ளார். வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு பண்பாடுகளை, வேறுபட்ட மனிதர்களைச் சந்தித்த இவர் அவற்றை மனதுக்குள் புடம் போட்டு 30 வருடங்களின் பின்னர் 1995இல் மீண்டும் ஒரு இலக்கியப் படைப்பாளியாக புத்துயிர்த்தார்.


1995இல் வெளிவந்த திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகில் மீண்டும் அறிமுகமான இவர் இந்த இரு தசாப்த காலத்தில் ‘நவீன தமிழின் கொடை’ என இவரது எழுத்துக்களைப் பார்க்குமளவுக்கு விஸ்வரூபமெடுத்துள்ளார்.


வம்சவிருத்தி(1996),

 வடக்கு வீதி(1998), மகாராஜாவின் ரயில்வண்டி(2001), அ.முத்துலிங்கம் கதைகள் - அதுவரையான முழுத் தொகுப்பு-(2003), அமெரிக்கக்காரி(2009), குதிரைவீரன்(2013), கொழுத்தாடு பிடிப்பேன் -தேர்ந்த சிறகதைகள்- க.மோகனரங்கன் தொகுத்தது(2015), 

பிள்ளை கடத்தல்காரன் (2015), 

ஆட்டுப்பால் புட்டு(2016) அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத்தொகுப்பு -இரண்டு பாகங்கள்(2016) என்பன இவரது ஏனைய சிறுகதைத் தொகுப்புகளாகும். இவரது சிறுகதைகள் ஒலிப்புத்தகமாகவும்(2008) கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


உண்மை கலந்த நாட்குறிப்புகள்(2008), கடவுள் தொடங்கிய இடம்(2012) ஆகியன வெளிவந்த இவரது நாவல்களாகும். இவரது சிறுகதைகள் பத்மா நாராயணனால் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன.  Inauspicious Times (2008) After Yesterday(2018), Passwrd and Other Stories(2022) ஆகிய மூன்று தொகுப்புகளும் இவரது எழுத்துகளை ஆங்கில வாசகர்களுக்கு எடுத்துச் சென்றுள்ளன.


இவரது கட்டுரைகளும் ஒரு கதை போல சுவாரஸ்யத்தை ஏற்படுத்துபவை. அங்கதச் சுவையோடு கட்டவிழ்பவை. அங்கே இப்ப என்ன நேரம்(2004), பூமியின் பாதிவயது(2007), கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது(2006), அமெரிக்க உளவாளி(2010), ஒன்றுக்கும் உதவாதவன்(2011), தோற்றவர் வரலாறு(2016) ஆகிய இவரது கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளன. அ.முத்துலிங்கம் கட்டுரைகள்(2018) என்ற பெருந்தொகுப்பும் இரு பாகங்களாக வெளிவந்துள்ளன. 


வியத்தலும் இலமே(2006), தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை(2013) என்பன இவரது நேர்காணல்களின் தொகுப்பாகும். பிறமொழிப் படைப்பாளிகள் பலரை இவர் நேர்காணல் செய்திருப்பதும், இவரைப் பலர் நேர்காணல் செய்திருப்பதும் முக்கியமானதாகும்.


இவரது திகடசக்கரம் சிறுகதைத் தொகுதிக்கு லில்லி தேவசிகாமணி பரிசு(1995) கிடைத்தது. வம்சவிருத்தி சிறுகதைத் தொகுதிக்கு தமிழ்நாடு அரசின் முதற்பரிசு, இந்தியன் ஸ்டேட் வங்கியின் முதற்பரிசு(1996) என்பன கிடைத்தன. வடக்கு வீதி சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய விருதும்(1999), குதிரைக்காரன் சிறுகதைத் தொகுப்புக்கு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதும்(2012), அமெரிக்க உளவாளி கட்டுரைத் தொகுப்புக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும்(2012),  அமெரிக்காகாரி சிறுகதைத் தொகுப்புக்கு  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் புலம்பெயர் தமிழர்களுக்கான தமிழ்ப் பேராய விபுலானந்தர் படைப்பிலக்கிய விருதும்(2013)  வழங்கப்பட்டுள்ளன.


கனடா தமிழர் தகவல் தமிழிலக்கிய சாதனை விருது(2006), கனடா மார்க்கம் நகரசபை இலக்கிய விருது(2014), கி.ராஜநாராயணன் இலக்கிய விருது(2022) என்பனவும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 


சொல்வனம் இணைய இதழ்(பெப்ரவரி 2017), ஞானம் சஞ்சிகை(ஏப்ரல் 2018), காலம் சஞ்சிகை(மார்ச் 2005) என்பன சிறப்பிதழ்களை வெளியிட்டு இவரைக் கௌரவப்படுத்தியுள்ளன.


இவரது முதன்மைப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கனடா இலக்கியத் தோட்டம்(2001) அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வாழ்நாள்  சாதனையாளர்களுக்கும் (இயல் விருது) விருதளித்து வருகிறது. அத்துடன் உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடமிருந்து 6 மில்லியன் டொலர் நிதி திரட்டி அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை(2018) அமைப்பதில் பெரும் பங்காற்றினார். அந்த அனுபவங்களை காலைத் தொடுவேன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாகவும் ஆக்கியுள்ளார்.


வாசிப்பின்பம் தரக்கூடிய படைப்புகளால் தமிழுக்கு அணிசேர்த்துள்ள அ.முத்துலிங்கம் ஆயிரம் பிறை கண்டு 86வயதிலும் தளராத தமிழ்ப்பணி ஆற்றி வருகிறார். கதைசொல்லலில் கி.ராஜநாராயணனுக்கும், குறைத்துச் சொல்லலில் அசோகமித்திரனுக்கும் தொடர்ச்சியாக இவர் உள்ளதாக ஜெயமோகன் இவரை மதிப்பிடுகிறார்.  உலகத் தமிழர்கள் பெருமைப்படக்கூடிய ஆளுமையாக அவர் இருப்பது ஈழத்தவரான எமக்கு பெரும்பேறே.

 

உதயன் சஞ்சீவி 9-7-2023

Sunday, July 2, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 13

 முன்றில் 13

இயல்வாணன்

ஒரு ஊடகவியலாளராக, எழுத்தாளராக, விமர்சகராக, பல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தியவராக, பல ஆளுமைகளை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துபவராக நதி போல ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதருக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால்   வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்தான் லெட்சுமணன் முருகபூபதி!
1951 ஜுலை 13இல் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி 1954ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீர்கொழும்பு விவேகானந்தக் கல்லூரியில் (இன்றைய நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) முதலாவது மாணவராக இணைந்து கொண்ட பெருமைக்குரியவராவார். பின்னர் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலும், நீர்கொழும்பு அல்ஹிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

1972ஆம் ஆண்டு வீரகேசரியின் பிரதேச நிருபராகப் பணிபுரியத் தொடங்கிய இவர் ஒப்புநோக்குநராகவும், உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இடதுசாரிய சிந்தனை கொண்ட இவர் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் நடைபெற்ற மாணவர் - இளைஞர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு, அதில் பங்குபற்றினார். அங்கு சென்று வந்த பயண அனுபவங்களை வீரகேசரியில் 15 வாரங்கள் தொடராக எழுதினார். இந்தத் தொடர் இலக்கிய, பத்திரிகை உலகில் அவரைப் பிரபலப்படுத்தியது.அது சமதர்ம பூங்காவில்(1990) என நூலாக வெளிவந்துள்ளது.
இடதுசாரிய அமைப்புகளுடனும், தமிழ் இயக்கங்களுடனும் பத்திரிகையாளராக இவருக்குத் தொடர்பு இருந்தது. அத்துடன் வீரகேசரி பத்திரிகையில் இவர் வெளியிட்ட ஒரு செய்தி காரணமாக விசாரணை மற்றும் நெருக்குவாரங்களை எதிர்கொண்டார். இந்த நெருக்கடிகள் காரணமாக 1987 ஜனவரியில் வீரகேசரியில் இருந்து பதவி விலகிய இவர் அடுத்த மாதமே அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இவற்றை சொல்ல மறந்த கதைகள் நூலில் பதிவு செய்துள்ளார்.

சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ள முருகபூபதி கட்டுரைகள், பத்திகள், உருவகக் கதைகள், பயண இலக்கியம், நேர்காணல் எனப் பலதுறைகளிலும் எழுதியுள்ளார். அத்துடன் பல தொகுப்புகளையும் இவர் செய்துள்ளார். 1972ஆம் ஆண்டில் மல்லிகையில் எழுதிய ‘கனவுகள் ஆயிரம்’ சிறுகதை மூலம் இவர் இலக்கிய உலகில் பிரவேசித்தார். கடற்கரையை அண்மித்து வாழ்ந்த முருகபூபதி அந்த மக்களின் பாடுகளைத் தனது முதலாவது கதையிலும், ஏனைய பல கதைகளிலும் வெளிக்கொண்டு வந்துள்ளார். மல்லிகை, பூரணி, கதம்பம், மாணிக்கம், தேசாபிமானி, புதுயுகம், வீரகேசரி ஆகியவற்றில் ஆரம்ப காலத்தில் இவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் விமர்சனங்களும் வெளிவந்துள்ளன. ரஸஞானி, ரிஷ்யசிருங்கர் முதலான புனைபெயர்களில் இவற்றை எழுதியுள்ளார்.
 இவரது சிறுகதைகளின் முதலாவது தொகுதி சுமையின் பங்காளிகள் 1975இல் வெளியானதுடன் தேசிய சாகித்திய மண்டல விருதினையும் பெற்றுக் கொண்டது. இந்நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சமாந்தரங்கள்(1989), வெளிச்சம்(1998), எங்கள் தேசம்(2000), கங்கைமகள்(2005), நினைவுக் கோலங்கள்(2006), மதக செவனலி (சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் - 2012), கதைத்தொகுப்பின் கதை (2021) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
பறவைகள் (2001) -தேசிய காகித்திய விருது பெற்றது- என்ற நாவலையும், பாட்டி சொன்ன கதைகள் (1997) என்ற உருவக இலக்கிய நூலையும் இவர் படைத்தளித்துளளார். கடிதங்கள் (2001) என்ற கடித இலக்கிய நூலும், இவரால் மேற்கொள்ளப்பட்ட பதினொரு நேர்காணல்களின் தொகுப்பான சந்திப்பு(1998) நூலும் இவரது பரந்துபட்ட தொடர்பையும், ஆளுமையையும் வெளிப்படுத்துத்துகின்றன.
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்(1995), இலக்கியமடல்(2000), மல்லிகை ஜீவா நினைவுகள்(2001), அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகமான எம்மவர்(2003), கவிஞர் அம்பி வாழ்வும் பணியும்(2004), ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள்(2005), உள்ளும் புறமும்(2011),  சொல்ல மறந்த கதைகள்(2014), சொல்ல வேண்டிய கதைகள்(2017), சொல்லத் தவறிய கதைகள்(2019), இலங்கையில் பாரதி(2019), நடந்தாய் வாழி களனிகங்கை(2021), யாதுமாகி(2022), வாழும் வரலாறு மல்லிகை ஜீவா(2022), பாரதி தரிசனம்(2022) ஆகிய கட்டுரை நூல்கள் இவரது வாழ்நிலை அனுபவங்களையும், ஆழ்ந்தகன்ற பார்வை வீச்சையும், சமூகம் நோக்கிய கவனிப்பினையும் புலப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளன.

நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினர், அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர் என பல்வேறு அமைப்புகளுடனும் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரும், தி.ஞானசேகரனும் பிரதம அமைப்பாளர்களாக இருந்து  சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் 2011இல் திறம்பட நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் 1988இல் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்ட இவர் தாய், தந்தையரை இழந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உதவி வழங்கி, அவர்களை நன்னிலைப்படுத்தும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தைத் தொடர்ந்து இவரது கவனம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிள்ளைகளைத் தத்தெடுத்து பல மில்லியன் ரூபா  உதவியளிப்பதில் திரும்பியுள்ளது. வருடாந்தம் இவராலும், நண்பர்களாலும் பெருமளவு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.  இவரால் முதலில் தத்தெடுத்து உதவியளிக்கப்பட்ட மாணவி ஒரு பாடசாலையில் அதிபராக இருப்பதை நேர்காணல் ஒன்றில் பதிவுசெய்துள்ளார்.

இவரது சேவையையும், வாழ்வையும் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் கிருஸ்ணமூர்த்தி, கலைஞர் மூர்த்தி ஆகியோர் இணைந்து ரஸஞானி என்ற ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஜீவநதி சஞ்சிகையும் சிறப்பிதழ் வெளியிட்டுக் கௌரவித்துள்ளது. ஞானம், மல்லிகை, மண் முதலான சஞ்சிகைகளும் அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளன.அவுஸ்திரேலிய தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருது(2002), அவுஸ்திரேலிய பல்தேசிய கலாசார ஆணையகத்தின் விருது(2012), அக்கினிக்குஞ்சு இதழ் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது(2018), இயல் விருது(2022) உட்பட பல விருதுகளும், கௌரவங்களும் இவரது எழுத்தூழியத்துக்காகக் கிடைத்துள்ளன.

72 வயதிலும் உற்சாகத்தோடு தொடர்ந்து எழுதியும், செயற்பட்டும் வரும் இவர் ஒரு ஊடகவியலாளர் என்ற நேர்த்தியுடன் சக படைப்பாளிகள், சமூக முக்கியத்துவம் வாய்ந்தவர்களை அறிமுகப்படுத்தி, கௌரவிக்கும் வகையில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

02-06-2023 உதயன் சஞ்சீவி










இயல்வாணன் பத்தி - முன்றில் 12


முன்றில்  12
இயல்வாணன்

ஓவியர், நாடகர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, உளஆற்றுப்படுத்துநர், இசையாளர், கல்வியியலாளர் எனப் பலதளங்களில் செயற்பட்டவர் மூத்த கல்வி நிர்வாகசேவை அதிகாரியாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள முத்து இராதாகிருஸ்ணன். இவர் தெல்லிப்பழை வறுத்தலைவிளானை பூர்வீகமாகக் கொண்டவர். 23-06-1963இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தந்தையார்  முத்துக்குமாரு தொழில்முறையில் சட்டத்தரணி. தாயார் தனேஸ்வரி சுதுமலைச் சகோதரிகளுள் ஒருவராய் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தியவர்

தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் வித்தியாலயம், திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரி, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம், யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றார்(1986). 1993இல் பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டத்தையும், 2005இல் முதுகல்விமாணிப் பட்டத்தையும் பெற்றார்.
1982
ஆம் ஆண்டு சித்திர பாட ஆசிரியராக நியமனம் பெற்று ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கடமையாற்றிய இவர் புவியியல் பட்டதாரி ஆசிரியராக அனலைதீவு சதாசிவ வித்தியாலயம், வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றினார்.

 1999இல் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து பிரதிக் கல்விப் பணிப்பாளராக, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக, வவுனியா தெற்கு மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர் தரம் 1 சிரேஸ்ட அதிகாரியாக  விளங்குகிறார்.
கல்வித்துறையில் வடக்கு கிழக்கு மாகாண ஆரம்பக்கல்வி, அழகியற் கல்வி, விசேட கல்வி, உளவளத்துணை, கண்ணிவெடி அனர்த்த விழிப்புணர்வு முதலான செயற்திட்டங்களின் இணைப்பாளராகவும், பொறுப்புவாய்ந்த அதிகாரியாகவும் கடமையாற்றி, பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.  தொலைக்கல்விப் போதனாசிரியராகவும், தேசிய கல்வியியற் கல்லூரி வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


ஓவியத்தில் ஆர்வங் கொண்ட இவர் சன்மார்க்க வித்தியாலயத்தில் தரம் 10 மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் சித்திரக்கதைப் புத்தகம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பயின்றவேளை புவியியலாளன் சஞ்சிகையில் கட்டுரை எழுதியிருக்கிறார். 80களின் நடுப்பகுதியில் மாணவர் போராட்ட அமைப்புகளின் சஞ்சிகைகளில் எழுதியிருக்கிறார். களத்தில், ஊற்று, நெம்பு, தாயகம், வெளிச்சம், சுபமங்களா, சரிநிகர், கணையாழி, தாமரை, புதிய ஊற்று, புதுவசந்தம் முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
வெளிச்சம் சஞ்சிகையில் கோபாலி என்ற பெயரில் இவரது ஓவியங்கள் வெளிவந்தன. அவ்வாறே தாயகம், சுபமங்களா சஞ்சிகைகளிலும் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன. இவரது நூல்கள் உட்பட பல நூல்களுக்கு அட்டைப்படங்களையும் இவர் வரைந்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட கவின்தமிழ், முழுநிலா முத்து, கல்விக்கதிர் செய்தியேடு என்பனவற்றின் ஆசிரியராக இருந்து இவற்றை வெளியிடுவதில் பங்காற்றியிருக்கிறார்.
இவரெழுதிய 9 சிறுகதைகள் உதிரவேர்கள்(2000) தொகுதியாகவும், 13 சிறுகதைகள் உள்மனச் சித்திரம்(2013) தொகுதியாகவும் வெளிவந்துள்ளன. ‘இராதாகிருஸ்ணனின் கதைகளில் சூழலின் விபரமான பதிவு, கட்புலமயப்பாடு நன்கு தெரிகிறது. அல்லல்களை, அவலங்களை நுண்திறனுடன் இனங்கண்டு கொள்ளும் ஒரு சமூக நோக்கும் உள்ளது. போர்ச்சூழல், வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களையும் நுணுக்கமாக அவதானிக்கும் சக்தியும் உள்ளதுஎன்று பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது போன்று மனித வாழ்வில் நாம் காணும் சிறு சம்பவங்களையும் ஒரு ஓவியத் துளிர்ப்போடும், பாத்திர அசைவோடும் கதையாக்கம் செய்வதில் இராதாகிருஸ்ணனுக்குத் தனிச்சிறப்புண்டு எனலாம். இவரது அந்தப் பெட்டைக் குட்டிகள் என்ற சிறுகதை அரச பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தரம் 7 தமிழ்மொழியும் இலக்கியமும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இவரது கவனம் நாடகத்துறையிலும் இருந்தது. நண்பர்களுடன் இணைந்து மண் சுமந்த மேனியரில் பணியாற்றியதிலிருந்து வவுனியாவில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியது வரை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு உள்ளது. இவரெழுதிய நாடகங்கள் 1998இல் மானிடச் சிக்கல் என்ற நூலாக வெளிவந்ததுடன் அரச சாகித்திய விருதினையும் பெற்றுக் கொண்டது. 2006இல் துயரப்பாறை நாடக நூல் வெளிவந்ததுடன் அந்த நூலுக்கும் அரச சாகித்திய விருது கிடைத்தது. பூலோக மோட்சம்(2022) நாடக எழுத்துருக்களளையும் கவிதாநிகழ்வையும் உள்ளடக்கிய தொகுதியாகும்.
சிறுவர் இலக்கியத்துக்கும் இவர் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். சிறுவர் நாடக எழுத்துருக்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். அவ்வகையில் சிறுவர் அரங்கு(சிறுவர் நாடகங்கள் - 2004), உள்ளாளி பெருக்கும் சிறுவர் அரங்கு(2004), பசுமைத்தாயகம்(சிறுவர் நாடகங்கள் 2009), பூதம் காத்த புதையல்(2011), காட்டில் மாநாடு (2011), நரிமேளம்(2011), கடலின் துயரம்(2011), சிறுவர் கதைகள்(2017), கூவும் குயிலின் ஏக்கம்(2020) ஆகிய இவரது சிறுவர் இலக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன.
கற்றலும் கற்றல் சூழலும்(2014), பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு(2008) முதலான கல்வியியல் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளதுடன் இவர் எழுதிய கவிதைகள் நிலம் தொடாத மின்னல்(2019) தொகுதியாக வெளிவந்துள்ளது.
தேசிய சாகித்திய விருதுகள் 3, வடக்கு கிழக்கு மாகாண விருதுகள் 4, வடக்கு மாகாண விருதுகள் 3, கிழக்கு மாகாண விருதுகள் 3 என்பன இவரது நூல்களுக்குக் கிடைத்துள்ளன. கிழக்கு மாகாண வித்தகர் விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.


தொழில்சார் நெருக்கடிளுடன் ஒரு கல்வித்துறை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய போதும் அவ்வப்போது சமூக அக்கறையோடு படைப்புகளை வழங்கியதில் இராதாகிருஸ்ணன் முக்கியமானவர். கல்வித்துறையிலும், இலக்கியத்திலும் அவரது பங்களிப்பு முக்கியமானது. சிறந்த தொடர்பாடல் திறன், கூர்ந்த சூழல் மற்றும் சமூக அவதானிப்பு, மனிதாய அணுகுமுறை, படைப்பாக்கத் திறன் என்பன ஏனையவரிலிருந்து அவரை வேறுபடுத்தும் தனியடையாளமாகும். தனது மணிவிழாவைக் கண்டுள்ள இராதாகிருஸ்ணன் இனி உத்வேகத்துடன் ஈழத்து இலக்கியத்துக்கு வளஞ்சேர்ப்பார் என நம்புகிறோம்.

25-06-2023 உதயன் சஞ்சீவி