Sunday, July 2, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 12


முன்றில்  12
இயல்வாணன்

ஓவியர், நாடகர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, உளஆற்றுப்படுத்துநர், இசையாளர், கல்வியியலாளர் எனப் பலதளங்களில் செயற்பட்டவர் மூத்த கல்வி நிர்வாகசேவை அதிகாரியாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள முத்து இராதாகிருஸ்ணன். இவர் தெல்லிப்பழை வறுத்தலைவிளானை பூர்வீகமாகக் கொண்டவர். 23-06-1963இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தந்தையார்  முத்துக்குமாரு தொழில்முறையில் சட்டத்தரணி. தாயார் தனேஸ்வரி சுதுமலைச் சகோதரிகளுள் ஒருவராய் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தியவர்

தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் வித்தியாலயம், திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரி, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம், யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றார்(1986). 1993இல் பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டத்தையும், 2005இல் முதுகல்விமாணிப் பட்டத்தையும் பெற்றார்.
1982
ஆம் ஆண்டு சித்திர பாட ஆசிரியராக நியமனம் பெற்று ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கடமையாற்றிய இவர் புவியியல் பட்டதாரி ஆசிரியராக அனலைதீவு சதாசிவ வித்தியாலயம், வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றினார்.

 1999இல் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து பிரதிக் கல்விப் பணிப்பாளராக, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக, வவுனியா தெற்கு மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர் தரம் 1 சிரேஸ்ட அதிகாரியாக  விளங்குகிறார்.
கல்வித்துறையில் வடக்கு கிழக்கு மாகாண ஆரம்பக்கல்வி, அழகியற் கல்வி, விசேட கல்வி, உளவளத்துணை, கண்ணிவெடி அனர்த்த விழிப்புணர்வு முதலான செயற்திட்டங்களின் இணைப்பாளராகவும், பொறுப்புவாய்ந்த அதிகாரியாகவும் கடமையாற்றி, பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.  தொலைக்கல்விப் போதனாசிரியராகவும், தேசிய கல்வியியற் கல்லூரி வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


ஓவியத்தில் ஆர்வங் கொண்ட இவர் சன்மார்க்க வித்தியாலயத்தில் தரம் 10 மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் சித்திரக்கதைப் புத்தகம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பயின்றவேளை புவியியலாளன் சஞ்சிகையில் கட்டுரை எழுதியிருக்கிறார். 80களின் நடுப்பகுதியில் மாணவர் போராட்ட அமைப்புகளின் சஞ்சிகைகளில் எழுதியிருக்கிறார். களத்தில், ஊற்று, நெம்பு, தாயகம், வெளிச்சம், சுபமங்களா, சரிநிகர், கணையாழி, தாமரை, புதிய ஊற்று, புதுவசந்தம் முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
வெளிச்சம் சஞ்சிகையில் கோபாலி என்ற பெயரில் இவரது ஓவியங்கள் வெளிவந்தன. அவ்வாறே தாயகம், சுபமங்களா சஞ்சிகைகளிலும் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன. இவரது நூல்கள் உட்பட பல நூல்களுக்கு அட்டைப்படங்களையும் இவர் வரைந்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட கவின்தமிழ், முழுநிலா முத்து, கல்விக்கதிர் செய்தியேடு என்பனவற்றின் ஆசிரியராக இருந்து இவற்றை வெளியிடுவதில் பங்காற்றியிருக்கிறார்.
இவரெழுதிய 9 சிறுகதைகள் உதிரவேர்கள்(2000) தொகுதியாகவும், 13 சிறுகதைகள் உள்மனச் சித்திரம்(2013) தொகுதியாகவும் வெளிவந்துள்ளன. ‘இராதாகிருஸ்ணனின் கதைகளில் சூழலின் விபரமான பதிவு, கட்புலமயப்பாடு நன்கு தெரிகிறது. அல்லல்களை, அவலங்களை நுண்திறனுடன் இனங்கண்டு கொள்ளும் ஒரு சமூக நோக்கும் உள்ளது. போர்ச்சூழல், வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களையும் நுணுக்கமாக அவதானிக்கும் சக்தியும் உள்ளதுஎன்று பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது போன்று மனித வாழ்வில் நாம் காணும் சிறு சம்பவங்களையும் ஒரு ஓவியத் துளிர்ப்போடும், பாத்திர அசைவோடும் கதையாக்கம் செய்வதில் இராதாகிருஸ்ணனுக்குத் தனிச்சிறப்புண்டு எனலாம். இவரது அந்தப் பெட்டைக் குட்டிகள் என்ற சிறுகதை அரச பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தரம் 7 தமிழ்மொழியும் இலக்கியமும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இவரது கவனம் நாடகத்துறையிலும் இருந்தது. நண்பர்களுடன் இணைந்து மண் சுமந்த மேனியரில் பணியாற்றியதிலிருந்து வவுனியாவில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியது வரை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு உள்ளது. இவரெழுதிய நாடகங்கள் 1998இல் மானிடச் சிக்கல் என்ற நூலாக வெளிவந்ததுடன் அரச சாகித்திய விருதினையும் பெற்றுக் கொண்டது. 2006இல் துயரப்பாறை நாடக நூல் வெளிவந்ததுடன் அந்த நூலுக்கும் அரச சாகித்திய விருது கிடைத்தது. பூலோக மோட்சம்(2022) நாடக எழுத்துருக்களளையும் கவிதாநிகழ்வையும் உள்ளடக்கிய தொகுதியாகும்.
சிறுவர் இலக்கியத்துக்கும் இவர் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். சிறுவர் நாடக எழுத்துருக்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். அவ்வகையில் சிறுவர் அரங்கு(சிறுவர் நாடகங்கள் - 2004), உள்ளாளி பெருக்கும் சிறுவர் அரங்கு(2004), பசுமைத்தாயகம்(சிறுவர் நாடகங்கள் 2009), பூதம் காத்த புதையல்(2011), காட்டில் மாநாடு (2011), நரிமேளம்(2011), கடலின் துயரம்(2011), சிறுவர் கதைகள்(2017), கூவும் குயிலின் ஏக்கம்(2020) ஆகிய இவரது சிறுவர் இலக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன.
கற்றலும் கற்றல் சூழலும்(2014), பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு(2008) முதலான கல்வியியல் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளதுடன் இவர் எழுதிய கவிதைகள் நிலம் தொடாத மின்னல்(2019) தொகுதியாக வெளிவந்துள்ளது.
தேசிய சாகித்திய விருதுகள் 3, வடக்கு கிழக்கு மாகாண விருதுகள் 4, வடக்கு மாகாண விருதுகள் 3, கிழக்கு மாகாண விருதுகள் 3 என்பன இவரது நூல்களுக்குக் கிடைத்துள்ளன. கிழக்கு மாகாண வித்தகர் விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.


தொழில்சார் நெருக்கடிளுடன் ஒரு கல்வித்துறை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய போதும் அவ்வப்போது சமூக அக்கறையோடு படைப்புகளை வழங்கியதில் இராதாகிருஸ்ணன் முக்கியமானவர். கல்வித்துறையிலும், இலக்கியத்திலும் அவரது பங்களிப்பு முக்கியமானது. சிறந்த தொடர்பாடல் திறன், கூர்ந்த சூழல் மற்றும் சமூக அவதானிப்பு, மனிதாய அணுகுமுறை, படைப்பாக்கத் திறன் என்பன ஏனையவரிலிருந்து அவரை வேறுபடுத்தும் தனியடையாளமாகும். தனது மணிவிழாவைக் கண்டுள்ள இராதாகிருஸ்ணன் இனி உத்வேகத்துடன் ஈழத்து இலக்கியத்துக்கு வளஞ்சேர்ப்பார் என நம்புகிறோம்.

25-06-2023 உதயன் சஞ்சீவி

 

No comments:

Post a Comment