Sunday, July 2, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 11

 

முன்றில் 11

இயல்வாணன்



நடிகராக, நாடக இயக்குநராக, நாடகப் பயிற்சியினை வழங்கும் வளவாளராக, எழுத்தாளராக, அரங்க ஆய்வாளராக, விமர்சகராக, கூத்துக் கலைஞராக அரங்கும் கூத்துமாக வாழ்வைக் கொண்டாடிய கலைஞர் ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு. அவர் கடந்த ஜுன் 9ஆந் திகதி அகவை 80இல் அமுதவிழாக் கண்டுள்ளார். ஈழத்தின் அரங்கத்துறை ஆளுமைகளில் முக்கியமானவரான இவர் கிராமங்களில் வழக்கொழிந்து கொண்டிருந்த கூத்துகளை மீளுருவாக்கம் செய்வதிலும் ஆவணப்படுத்துவதிலும் முதன்மையான பங்களிப்பை வழங்கிய ஒருவராவார்.

மட்டக்களப்பு அமிர்தகழியிலுள்ள சீலாமுனை கிராமத்தில் 09-0-1943இல் பிறந்த மௌனகுரு தனது ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும்(1965), தமிழ் முதுமாணிப் பட்டத்தையும்(1973) பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.கைலாசபதியின் வழிகாட்டலில் கலாநிதிப் பட்டத்தைப்(1982) பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டத்தையும்(1975) பெற்றுக் கொண்டார்.

1966இல் ஆசிரியப் பணியில் இணைந்து கொண்ட இவர் 5 ஆண்டுகள் கொழும்பு பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் அரச பாடநூல் எழுதும் பணியில் ஈடுபட்டார். மீண்டும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு, 1981வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1979இல் இருந்து மூன்றாண்டுகள் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1984இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியை ஆரம்பித்த அவர், விரிவுரையாளராக, முதுநிலை விரிவுரையாளராக அங்கு பணியாற்றினார்.

1991இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்ற இவர் நுண்கலைத்துறைத் தலைவராகவும், கலைப்பீடாதிபதியாகவும் பணியாற்றினார்.

தனது இந்த பணிகளின் போது பல நூற்றுக் கணக்கான அரங்கவியல் கலைஞர்களையும், கூத்துக் கலைஞர்களையும் உருவாக்கியுள்ள இவர் அரங்கு சார்ந்தும், கூத்து சார்ந்தும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனது வாழ்நாளைச் செலவிட்டுள்ளார். அத்துடன் கிராமப்புறத்துக்குள் முடங்கியிருந்த கூத்தினை பேராசிரியர் வித்தியானந்தனின் அடியொற்றி புலமைத்துவ மட்டத்துக்கு எடுத்துச் சென்ற பெருமையும் இவரைச் சாரும்.

இவரது கிராமம் வடமோடிக்கூத்தில் பிரபலம் பெற்ற ஒரு கிராமமாகும். அங்குள்ள செல்லையா அண்ணாவியரிடத்தில் கூத்துப் பயின்ற மௌனகுரு அவரது அண்ணாவியத்தில் ‘பாசுபதாஸ்திரம் கூத்தில் நடித்தார். அந்த நடிப்பைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்து வைத்திருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் பல்கலைக்கழகம் சென்ற மௌனகுருவை சிக்கெனப் பிடித்துக் கொண்டார். அவர் மரபுவழித் தமிழ் நாடக மறுமலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்து நாடகங்களை மேடையேற்றிய காலமது. மௌனகுருவை பிரதான பாத்திரமாகக் கொண்டு இராவணேசன், நொண்டி நாடகம், கர்ணன் போர், வாலிவதை முதலான நாடகங்களை மேடையேற்றினார்.

ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கருத்துநிலைப்பட்டு இயங்கிய இவர் பின்னர் மார்க்ஸிய சிந்தனைகளால் கவரப்பட்டார். அதன் விளைவாக   1969ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி அரங்கில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டுக்காக அவர் தயாரித்து அளிக்கை செய்த சங்காரம் நாடகம் அக்காலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதெனலாம்.

சிறுவர் அரங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபட்ட இவர்  வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள், தப்பி வந்த தாடி ஆடு, ஒரு முயலின் கதை, பரபாஸ் முதலான நாடகங்களைத் தயாரித்து மாணவர்களை நடிக்க வைத்து மேடையேற்றினார். அத்துடன் சக்தி பிறக்குது, சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள் முதலான பெண்ணிய நாடகங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

அரங்கு சார்ந்தும், தமிழிலக்கியம் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் பல நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அரங்கு ஓர் அறிமுகம் (பேராசிரியர் கா.சிவத்தம்பி,க.திலகநாதன் ஆகியோருடன் இணைந்து – 1999), அரங்கியல்(2003), 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழிலக்கியம் (எம்.ஏ.நுஃமான், திருமதி சித்திரலேகா மௌனகுருவுடன் இணைந்து – 1979), ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(1999), கலை இலக்கியக் கட்டுரைகள்(1997), சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்(1993), மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்(1998), தமிழர் வரலாறும் பண்பாடும்(2005), தமிழ்க் கூத்துக்கலை(2010), சங்ககால இலக்கியமும் சமூகமும் ஒர் மீள்பார்வை(2003), சடங்கிலிருந்து நாடகம் வரை(1988), நாடகம் - அரங்கியல் பழையதும் புதியதும்(2005), பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்(2005), பழையதும் புதியதும்(1992), பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்(1997) கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்(1994) முதலான பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

 அவர் எழுதிய நாடக ஆக்கங்கள் இராவணேசன்(1998), சக்தி பிறக்குது(1997), நாடகம் நான்கு(இ.முருகையனின் கடூழியம், நா.சுந்தரலிங்கத்தின் அபசுரம், இ.சிவானந்தனின் காலம் சிவக்கிறது, மௌனகுருவின் சங்காரம் ஆகியவை – 1980), மௌனகுருவின் மூன்று நாடகங்கள்(மழை, நம்மைப் பிடித்த பிசாசுகள், சரிபாதி ஆகிய நாடகங்கள் - 1987), சங்காரம், தப்பி வந்த தாடி ஆடு, வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள், புத்துயிர்ப்பு முதலான பலவும் நூல்களாக வெளிவந்துள்ளன.

மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு அதிகாரப் போட்டியால் உருவாகும் யுத்தத்துக்கு எதிரான குரலாக  சார்வாகன் (2000) என்ற குறுநாவலையும் இவர் எழுதியுள்ளார். மக்கள் இலக்கியக் கவிஞர் சுபத்திரனது கவிதைகளையும்(2002) இவர் தொகுத்துள்ளார். பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் சிறுகதைகள், கவிதைகளை எழுதிள்ளார். அத்துடன் இலங்கை வானொலியிலும் சங்கநாதம், கிராம சஞ்சிகை நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியுள்ளார். சிறுவர் பாடல்களையும் எழுதியுள்ளார். பொன்மணி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவரது கலைச்சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட நாடககீர்த்தி(2013), கொடகே தேசிய சாகித்திய வாழ்நாள் சாதனை விருது(2014), தேசநேத்துரு விருது(2015), இலங்கை அரசின் பாரம்பரிய மற்றும் நவீன கலைச்சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது(2019), சாதனைத் தமிழன் விருது(2020) போன்றன இவருக்கான மணிமகுடங்களாக அமைந்துள்ளன. 2017இல் மகுடம் சஞ்சிகை இரட்டைச் சிறப்பிதழை வெளியிட்டு மௌனகுருவைக் கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றும் வாலையில் ஆடிய துடிப்போடு மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தை நிறுவி, தனது அறிவையும் அனுபவங்களையும் இளைய சந்ததிக்கு கடத்தும் பணியில் தொடர்ந்தும் செயலாற்றி வருகிறார்.

 11-06-2023 உதயன் சஞ்சீவி

No comments:

Post a Comment