Sunday, July 2, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 13

 முன்றில் 13

இயல்வாணன்

ஒரு ஊடகவியலாளராக, எழுத்தாளராக, விமர்சகராக, பல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தியவராக, பல ஆளுமைகளை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துபவராக நதி போல ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதருக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால்   வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்தான் லெட்சுமணன் முருகபூபதி!
1951 ஜுலை 13இல் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி 1954ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீர்கொழும்பு விவேகானந்தக் கல்லூரியில் (இன்றைய நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) முதலாவது மாணவராக இணைந்து கொண்ட பெருமைக்குரியவராவார். பின்னர் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலும், நீர்கொழும்பு அல்ஹிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

1972ஆம் ஆண்டு வீரகேசரியின் பிரதேச நிருபராகப் பணிபுரியத் தொடங்கிய இவர் ஒப்புநோக்குநராகவும், உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இடதுசாரிய சிந்தனை கொண்ட இவர் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் நடைபெற்ற மாணவர் - இளைஞர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு, அதில் பங்குபற்றினார். அங்கு சென்று வந்த பயண அனுபவங்களை வீரகேசரியில் 15 வாரங்கள் தொடராக எழுதினார். இந்தத் தொடர் இலக்கிய, பத்திரிகை உலகில் அவரைப் பிரபலப்படுத்தியது.அது சமதர்ம பூங்காவில்(1990) என நூலாக வெளிவந்துள்ளது.
இடதுசாரிய அமைப்புகளுடனும், தமிழ் இயக்கங்களுடனும் பத்திரிகையாளராக இவருக்குத் தொடர்பு இருந்தது. அத்துடன் வீரகேசரி பத்திரிகையில் இவர் வெளியிட்ட ஒரு செய்தி காரணமாக விசாரணை மற்றும் நெருக்குவாரங்களை எதிர்கொண்டார். இந்த நெருக்கடிகள் காரணமாக 1987 ஜனவரியில் வீரகேசரியில் இருந்து பதவி விலகிய இவர் அடுத்த மாதமே அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இவற்றை சொல்ல மறந்த கதைகள் நூலில் பதிவு செய்துள்ளார்.

சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ள முருகபூபதி கட்டுரைகள், பத்திகள், உருவகக் கதைகள், பயண இலக்கியம், நேர்காணல் எனப் பலதுறைகளிலும் எழுதியுள்ளார். அத்துடன் பல தொகுப்புகளையும் இவர் செய்துள்ளார். 1972ஆம் ஆண்டில் மல்லிகையில் எழுதிய ‘கனவுகள் ஆயிரம்’ சிறுகதை மூலம் இவர் இலக்கிய உலகில் பிரவேசித்தார். கடற்கரையை அண்மித்து வாழ்ந்த முருகபூபதி அந்த மக்களின் பாடுகளைத் தனது முதலாவது கதையிலும், ஏனைய பல கதைகளிலும் வெளிக்கொண்டு வந்துள்ளார். மல்லிகை, பூரணி, கதம்பம், மாணிக்கம், தேசாபிமானி, புதுயுகம், வீரகேசரி ஆகியவற்றில் ஆரம்ப காலத்தில் இவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் விமர்சனங்களும் வெளிவந்துள்ளன. ரஸஞானி, ரிஷ்யசிருங்கர் முதலான புனைபெயர்களில் இவற்றை எழுதியுள்ளார்.
 இவரது சிறுகதைகளின் முதலாவது தொகுதி சுமையின் பங்காளிகள் 1975இல் வெளியானதுடன் தேசிய சாகித்திய மண்டல விருதினையும் பெற்றுக் கொண்டது. இந்நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சமாந்தரங்கள்(1989), வெளிச்சம்(1998), எங்கள் தேசம்(2000), கங்கைமகள்(2005), நினைவுக் கோலங்கள்(2006), மதக செவனலி (சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் - 2012), கதைத்தொகுப்பின் கதை (2021) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
பறவைகள் (2001) -தேசிய காகித்திய விருது பெற்றது- என்ற நாவலையும், பாட்டி சொன்ன கதைகள் (1997) என்ற உருவக இலக்கிய நூலையும் இவர் படைத்தளித்துளளார். கடிதங்கள் (2001) என்ற கடித இலக்கிய நூலும், இவரால் மேற்கொள்ளப்பட்ட பதினொரு நேர்காணல்களின் தொகுப்பான சந்திப்பு(1998) நூலும் இவரது பரந்துபட்ட தொடர்பையும், ஆளுமையையும் வெளிப்படுத்துத்துகின்றன.
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்(1995), இலக்கியமடல்(2000), மல்லிகை ஜீவா நினைவுகள்(2001), அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகமான எம்மவர்(2003), கவிஞர் அம்பி வாழ்வும் பணியும்(2004), ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள்(2005), உள்ளும் புறமும்(2011),  சொல்ல மறந்த கதைகள்(2014), சொல்ல வேண்டிய கதைகள்(2017), சொல்லத் தவறிய கதைகள்(2019), இலங்கையில் பாரதி(2019), நடந்தாய் வாழி களனிகங்கை(2021), யாதுமாகி(2022), வாழும் வரலாறு மல்லிகை ஜீவா(2022), பாரதி தரிசனம்(2022) ஆகிய கட்டுரை நூல்கள் இவரது வாழ்நிலை அனுபவங்களையும், ஆழ்ந்தகன்ற பார்வை வீச்சையும், சமூகம் நோக்கிய கவனிப்பினையும் புலப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளன.

நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினர், அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர் என பல்வேறு அமைப்புகளுடனும் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரும், தி.ஞானசேகரனும் பிரதம அமைப்பாளர்களாக இருந்து  சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் 2011இல் திறம்பட நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் 1988இல் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்ட இவர் தாய், தந்தையரை இழந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உதவி வழங்கி, அவர்களை நன்னிலைப்படுத்தும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தைத் தொடர்ந்து இவரது கவனம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிள்ளைகளைத் தத்தெடுத்து பல மில்லியன் ரூபா  உதவியளிப்பதில் திரும்பியுள்ளது. வருடாந்தம் இவராலும், நண்பர்களாலும் பெருமளவு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.  இவரால் முதலில் தத்தெடுத்து உதவியளிக்கப்பட்ட மாணவி ஒரு பாடசாலையில் அதிபராக இருப்பதை நேர்காணல் ஒன்றில் பதிவுசெய்துள்ளார்.

இவரது சேவையையும், வாழ்வையும் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் கிருஸ்ணமூர்த்தி, கலைஞர் மூர்த்தி ஆகியோர் இணைந்து ரஸஞானி என்ற ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஜீவநதி சஞ்சிகையும் சிறப்பிதழ் வெளியிட்டுக் கௌரவித்துள்ளது. ஞானம், மல்லிகை, மண் முதலான சஞ்சிகைகளும் அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளன.அவுஸ்திரேலிய தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருது(2002), அவுஸ்திரேலிய பல்தேசிய கலாசார ஆணையகத்தின் விருது(2012), அக்கினிக்குஞ்சு இதழ் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது(2018), இயல் விருது(2022) உட்பட பல விருதுகளும், கௌரவங்களும் இவரது எழுத்தூழியத்துக்காகக் கிடைத்துள்ளன.

72 வயதிலும் உற்சாகத்தோடு தொடர்ந்து எழுதியும், செயற்பட்டும் வரும் இவர் ஒரு ஊடகவியலாளர் என்ற நேர்த்தியுடன் சக படைப்பாளிகள், சமூக முக்கியத்துவம் வாய்ந்தவர்களை அறிமுகப்படுத்தி, கௌரவிக்கும் வகையில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

02-06-2023 உதயன் சஞ்சீவி










No comments:

Post a Comment