Friday, September 3, 2021

நூல் விமர்சனம்

 உடுவில் அரவிந்தனது பாழ்வெளி சிறுகதைத் தொகுதி

 

90களிலிருந்து புனைகதையுலகில் செயற்படும் உடுவில் அரவிந்தனின் ‘பாழ்வெளி’ சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது தொகுப்பாகும். ஏற்கனவே உணர்வுகள் என்ற சிறுகதைத் தொகுப்பு 1999இல் வெளிவந்து கவனம் பெற்றிருந்தது.

அரவிந்தன் ஒரு சித்த மருத்துவர். மென்மையான பண்பு கொண்டவர். அவரது இந்த இயல்பு அவரது கதைகளில் பிரதிபலிப்பதைக் காணலாம். சமூக அவலங்கள் அவரது கதைகளின் உட்கிடக்கையாக அமைந்த போதிலும் கலகக் குரலாக அல்லாமல் ஆதங்கமாக, வேதனையாக, உட்சுடரும் கோபமாகவே அவை வெளிப்பாடடைகின்றன.

‘தேனீக்கள் இன்னமும் ஓயவில்லை.அங்குமிங்கும் பறந்தபடியிருக்கின்றன. அவற்றுட் பல நித்திய கல்யாணி மரத்தின் இலைகளிலும், அருகிலுள்ள தென்னோலைகளிலும், வேலிப் பூவரசின் பசிய இலைகளிலும் அமர்ந்திருந்து தங்களுடைய அமைதியைக் குலைத்தவர்களை ஆத்திரத்துடன் தேடுகின்றன.’

‘எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் தொலைந்து போன புராதனமான கிராமங்களின் புழுதித் தெருக்களில் பெருநகர வணிகர்கள் விதவிதமான பொம்மைகளைக் கூவி விற்கிறார்கள். வெளியுலகுக்குத் தெரியாத பல்லாயிரம் கதைகளைத் தம்முள்ளே வைத்திருக்கும் பெருங் காடுகள் மௌனமாக அழுகின்றன.’

‘துயரப் பெருவெளியில் எல்லோராலும் கைவிடப்பட்டுச் சிதைந்து போன ஒருவனைப் போலவே அவன் எனக்குத் தென்படுகிறான்.’

‘அந்தப் பெருவெளியும், பாசி படர்ந்த குளமும் அவரது கண்களிலிருந்து கசியத் தொடங்குகிறது’

கதைகளின் முடிவில் வெளிப்படுத்தப்படும் இந்த வார்த்தைகள் வாசக நெஞ்சில் மோதி எதிரொலிக்கின்றன. கதைகளின் பின்னாலுள்ள நினைவுகளுக்கு வாசகனை இழுத்துச் செல்கின்றன.

இந்தத் தொகுதியில் 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 13 கதைகள் கதைசொல்லியின் பார்வையாக – நான் என்ற பாத்திரத்தின் பார்வையாக கட்டமைக்கப்பட்டுள்ளன. கதைசொல்லி வெளிப்படுத்தும் உணர்வுகளை பாத்திரங்கள் ஊடாக உயிரோட்டமாக வெளிப்படுத்தி, வாசக ஈர்ப்பினை ஏற்படுத்த இத்தகைய உத்தி அவருக்குக் கை கொடுத்திருக்கிறது.

அவருடைய கதைகளின் பாத்திரங்கள் வாசக மனதில் நிலைபெறும் வகையில் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்து புதிர் போல மரணித்த சபேசன்(அடையாளம்), பற்றைக்குள் சிதைந்து சடலமாய் மீட்கப்பட்ட தாரணி(இரை), மனவளர்ச்சி குன்றிய நிலையில் கர்ப்பமாக்கப்பட்டு, கருச்சிதைப்புக்கு ஆளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமதி(ஈச்சம்பழம்), எய்ட்ஸ் நோய் தொற்றிய கணவர் மூலம் பாதிக்கப்பட்ட வைதேகி(உயிர்ப்பு), சுட்டிப் பெண் நிலா(நிலா), புகையிரதத்தில் கச்சான் விற்றுப் பிழைக்கும் ஊனமுற்ற முன்னாள் போராளியான செழியன்(பயணம்) என பாத்திரங்கள் மனக் கண்ணில் உலவுகின்றன.

ஒரு படைப்பைப் படித்து முடிந்ததும் அது ஏற்படுத்துகின்ற உணர்வுத் தொற்றலே படைப்பின் பெறுமதியை உணர்த்துவதாகும். அரவிந்தனுடைய கதைகளும் உணர்வுத் தொற்றலை ஏற்படுத்துவனவாக உள்ளமை அவரது கதைகளின் வெற்றியாகும். 

கூர்ந்த அவதானத்துடன் வெளிப்படும் பகைப்புல வர்ணனையும், சூழலை விபரிக்கும் பாங்கும் அலாதியானது. சூழலின் அம்சங்களை இன்னொன்றோடு உவமித்தும், தற்குறிப்பேற்றியும் கூறுவது அவரது கதைகளில் வரும் சிறப்பம்சமாகும்.

அரவிந்தன் இந்தத் தொகுதியை நிலாவுக்குச் சமர்ப்பித்துள்ளார். நிலா என்பது தொகுதியில் உள்ள ஒரு கதை. அக்கதையின் பாத்திரம் சுட்டிப் பெண் நிலா. கதையிலுள்ள கதா பாத்திரத்துக்கே நூலைச் சமர்ப்பித்தமை தமிழ்ச் சூழலில் முதல் முயற்சியாக இருக்கக் கூடும்.

அரவிந்தனது கதைகள் மனித அவலங்களை-பாடுகளை- பேசுகின்றன. அவரது மனிதாயக் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்புகளாகவே அவரது கதைகள் விளங்குகின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே பாழ் வெளி தொகுதியும் அமைந்துள்ளது.

எதிரொலி 18-03-2018

No comments:

Post a Comment