Friday, September 3, 2021

நூல் விமர்சனம்

 அலறியின் துளி அல்லது துகள் கவிதைத் தொகுதி



அலறி என்ற புனைபெயரில் கவிதைகளை எழுதுபவர் கிழக்கிலங்கையின் மருதமுனையைச் சேர்ந்த அப்துல் லத்தீப் முஹம்மத் றிபாஸ். தொழில்முறையில் சட்டத்தரணியான இவர் ஏலவே நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். பூமிக்கடியில் வானம்(2005), பறவை போல சிறகடிக்கும் கடல்(2006), எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும்(2008), மழையை மொழிதல்(2009) ஆகிய தொகுதிகள் ஏலவே தொடராக வெளிவந்துள்ளன. நீண்ட 11 வருட இடைவெளியின் பின் அவரது துளி அல்லது துகள் என்ற இந்தக் கவிதைத் தொகுதி 2020இன் இறுதிப் பகுதியில் வெளிவந்துள்ளது. இன்னொரு கலை இலக்கியச் செயற்பாட்டாளரான சிராஜ் மஸ் ஹூரின்  Pages  புத்தக இல்லத்தின் முதல் வெளியீடாக, சிறந்த வடிவமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

இயல்வாணன் - அலறி றிபாஸ் 


பொதுவாக அலறியின் கவிதைகளில் இயற்கையும், பறவைகளும், பூக்களும் நேரடியாகவோ, குறியீடாகவோ வந்து போகும். அது இந்தத் தொகுதியிலும் உள்ளடங்கி உள்ளது. இந்த நூலுக்குப் பின்னுரை வழங்கிய ரியாஸ் குரானா அலறியின் ஏனைய தொகுதிகளில் இருந்து இந்தத் தொகுதி மாறுபட்டதும், சொற் தேர்வில், கட்டமைப்பில் மேம்பட்டதுமாகக் கருதுகிறார். அவரது கவிதைகள் தொடர்பான விமர்சன பூர்வமான குறிப்பாக அது உள்ளது.

இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளில் அகவுணர்வு சார்ந்த கவிதைகளும் உள்ளன. அரசியல், சமூகம் சார்ந்த கவிதைகளும் உள்ளன. தொகுதியின் முதற் கவிதை குளிர்ப் பறவை. ஒரு பறவையென படுக்கையறைக்குள் நுழையும் குளிர் வெட்கம் கூடி உ~;ணமாக வெளியேறுவது கவிதையின் சாரம். ‘வெயிலின் ஈரமும், மழையின் சூடும் மயிர்க் கால்களில்’ தெறிக்க ‘அலைகள் அடங்கும் இரவில்’குளிர் உஷ்ணமாக வெளியேறுவதாக காட்சிப்படுத்தப்படுகின்றமை கவிதையின் காத்திரத்தைப் பறை சாற்றுகிறது.

நெடுநல்வாடை என்பது இன்னொரு கவிதை. பிரிவின் தாபத்தைப் பேசுகிறது. 

சூரியன் சிதறிக் கிடக்கும்

இவ்வேளையில்

உலர்வதற்கான 

தீயில் நனையும் பொழுதெல்லாம்

உன் தீண்டலின் பிரக்ஞை.

விரைந்து 

காற்றை நெரிக்கலாம்.

கடலைக் குடிக்கலாம்.

காலத்தை எப்படி நகர்த்துவது?

யன்னலை வருடும் 

மாதுளம் பூக்களின் மணமும் நிறமும்

உன் மணத்தையும் நிறத்தையும்

கிளர்ந்தபடி விரிகின்றன.

இந்த வரிகளில் இழையோடும் பிரிவின் தாபத்தை வாசக மனத்தில் தொற்றி விடச் செய்கின்றன நேர்த்தியான வார்த்தைகள். மாதுளம் பூக்களின் மணமும் நிறமும் விரகதாபத்தின் குறியீடாக வாசகரிலும் தொற்றுகின்றன.

பச்சைப் பாசி என்றொரு சிறு கவிதை வாழ்வு பற்றிப் பேசுகிறது. வாழ்வு குறித்த அனுபங்கள், பார்வைகள் ஒவ்வொருவருக்கும் வேறானது. இந்தக் கவிதை வாழ்க்கையை ஒரு மைதானமாகவும், கவிஞரை அதில் அடிபடும் பந்தாகவும் நோக்குகிறது. படைப்பு நிகழ்ந்த பிறகு அது வாசகராகவும் மாறலாம்.

வாழ்வெனும் பெரு மைதானம்

பாதம் நீ

பந்து நான்.

நீதி என்றொரு கவிதை இந்தத் தொகுதியில் உள்ளது. தொழில்முறையில் அலறி ஒரு சட்டத்தரணி. சட்டம் பெரும்பாலும் பொய்களும், தந்திரங்களும், விவாதத் திறன்களும் நிறைந்தது. தனது வாடிக்கையாளரை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் தொழிலே சட்டத்தரணி தொழில். நீதி என்பது வாத வல்லமையின் சார்பாகவே கட்டவிழும். ஆனால் உண்மையான நீதி என்று ஒன்று உள்ளது. அது நீதிமன்றங்களுக்கு அப்பாலானது. இயற்கையினால் விளைவது. சட்டத்தரணியாக உள்ள போதும் ஒரு படைப்பாளியாக அவருக்குள் இருக்கும் தார்மீகக் கோபம் ஒரு கவிதையாகக் கட்டவிழ்கிறது. இயற்கை நீதி ஒன்றிருப்பதை மறந்து விடாதே என இடித்துரைக்கிறது.

பெருமழை

நீள்நதி 

பருகி விடுவதில்லை 

துளியின் பிரவாகத்தை.

சூறைக்காற்று

கரும்பாறை

சிதைத்து விடுவதில்லை

செடியின் வியாபகத்தை.

நெடும் வானம் 

சுடும் வெயில் 

மடித்து விடுவதில்லை

பறவையின் பாதையை.

பொய்ச் சாட்சியம்

நூறு வாக்குமூலம்

குத்தி விடுவதில்லை

நீதியின் கண்களை.

இதை ஒரு அரசியல் கவிதையாகவும் கொள்ளலாம். மேலும் பல அரசியல் கவிதைகளையும் இந்நூலில் காணலாம்.

ஒரு சொறங்கை பேரீச்சம் பழம் என்றொரு கவிதை இப்படிப் பேசுகிறது.

சொர்க்கத்தின் எழிற்சோலை 

நெற்குருவியின் கண்களில் விரிகிறது.

நோன்பிருக்கிறாய்.

பசித்திருக்கிறாய்.

…….

உன்னிடம் எதுவுமில்லாதிருக்கிறது

ஸகர்

ஒற்றைப்படை இரவு

இப்தார்

தியாகித்திருக்கும் முப்பது பொழுதுக்குமாக.

இப்போது என்னால்

உனக்காகத் 

தர முடிந்திருப்பது

ஒரு சொறங்கை பேரீச்சம்பழம்

ஒரு கோப்பை கஞ்சி.

நோன்புக் காலத்தை முறையாக அனுஷ்டிக்க முடியாமல், ஈகை செய்ய முடியாமல் அந்தரிக்கும் வாழ்வைப் பேசுவதால் இது ஒரு அரசியல் கவிதையாகவே படிமலர்கின்றது.

சமகால அரசியலைப் பேசும் இன்னொரு கவிதை சீனத்துப் பெண். ஆக்கிரமிப்பு ஒரு பெண்ணின் வசீகரத்தோடு உள்நுழைகிறது. அவள் பாடலில் தாழம்பூ வாசம்.பாம்பின் படம். அது அபாயத்தின் குறியீடு. அந்தப் பாடல் கொரோனாவின் பிறப்பிடமான வூஹான் சந்தையிலும், சீனாவின் வணிக நகரான ஷங்காயின் தெருக்களிலும், மாணவர்களின் போராட்டம் நசுக்கப்பட்ட தியனென்மென் சதுக்கத்திலும், திபெத்திய பீடபூமியிலும், மடாலயங்களிலும் துயராகப் படிகிறது. பின்னர் அது கடலைக் கடந்து ஒரு தீவுள் நுழைகிறது.

தீவின் 

கரை கடலை நோக்கிப் பாய்கிறது.

கடல் கரையை நோக்கிப் படிகிறது.

துறைமுகத்தில் 

நங்கூரமிடுகின்றன போர்க் கப்பல்கள்.

அசைகின்றன நாவாய்கள்.

நோய் நொதிக்கும் காலமும்

எல்லைச் சுவர்களைத் துளைத்து

பெருக்கெடுக்கும் அவள் பாடலுக்கு

சிவப்பு

மஞ்சள் 

வல்லாதிக்கம்

உட்பட ஏழு நிறங்கள்.

கவிதை எளிமையான மொழியில் அமைந்தாலும், அது சொல்ல விளையும் கருத்து வலிமையானது. ஆக்கிரமிப்பை ஒரு பெண்ணாக உருவகித்தமை தொடர்பில் றியாஸ் குரானா எதிர்வினையாற்றியுள்ளமையும் கவனிக்கத்தக்கது. ஏழுநிறங்களில் ஒன்றாக வல்லாதிக்கம் என்ற நிறம் கவிதையில் புகுத்தப்பட்டமை கவனிக்கத்தக்கது. வெள்ளைக்காரி, ஈஸ்டர், வாக்குத்தேடி, கொரோனா முதலான கவிதைகளும் அரசியலையே பேசுகின்றன.

இயற்கை நேசிப்பையும், அகவுணர்வுச் சிக்கல்களையும் வாசகரிடம் தொற்ற வைக்கக்கூடிய கவிதைகளையும், சமூக, அரசியல் தளங்கள் மீதான விமர்சனத்தை முன்வைக்கக் கூடிய கவிதைகளையும் உள்ளடக்கியாக இத்தொகுதி அமைந்துள்ளது. ஏனைய தொகுதிகளில் இருப்பதை விட சொற் தேர்வும், சொற்சிக்கனமும் பேணி வெளிவந்துள்ள இத்தொகுதி அலறியின் கவிதை சொல்லில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது எனில் மிகையல்ல.

இயல்வாணன்

தீம்புனல் 15-05-2021




No comments:

Post a Comment