Tuesday, August 31, 2021

நூல் மதிப்பீடு


சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய சித்திரா ரீச்சர் சிறுகதைத் தொகுதி



சமரபாகு சீனா உதயகுமார் அண்மைக்காலத்தில் அதிகமாக அறியப்படும் ஒரு படைப்பாளியாவார்.  அவரது கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் ஈழத்தின் பத்திரிகைகள் சஞ்சிகைளில் பிரசுரமாகிய வகையில் பரவலான வாசகப் பரப்பில் அவர் அறியப்பட்ட ஒருவராவார். அவரது சிறுகதைகளின் இரண்டாந் தொகுதி சித்திரா ரீச்சர் என்ற பெயரில் மீரா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. மூத்த ஓவியர் தவத்தின் அட்டை மற்றும் கதைகளுக்கான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள இந்நூலுக்கு காத்திரமான முன்னுரையினை இன்னொரு படைப்பாளியான டொக்ரர் ச.முருகானந்தன் வழங்கியுள்ளார்.

163 பக்கங்களில் பதினொரு சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சமரபாகு சீனா உதயகுமார் கையாளுகிற மொழி எளிமையானது. புழக்கத்திலுள்ள பிரதேச மண்வாசனைச் சொற்களையும், உவமைகளையும், பழமொழிகளையும் ஆங்காங்கு அள்ளி இறைத்தனவாக அவரது கதைமொழி அமைந்துள்ளது. அவரது சிறுகதைகளின் பொதுப் பண்பு அவை புறநிலை விமர்சனங்களாக அமைவதெனலாம். கதாசிரியர் சொல்லுமிடமாயினும், பாத்திரங்கள் பேசுமிடமாயினும் சமூகம் மீதான, சமூகத்தின் குறிப்பிட்ட மனிதர்கள் மீதான புறநிலை விமர்சனமாகவே அவை எல்லாக் கதைகளிலும் வெளிப்பாடடைந்திருக்கின்றன.அவரது கதைகளில் சமூகம் மீதான விமர்சனம் தூக்கலாகத் தெரிந்தாலும் சமூகப் போக்கையும், சமூக மாந்தரின் இயல்புகளையும் சம்பவ விபரிப்பாகக் கதைகளில் தருகிறார். 

இந்த நூலில் இறுதிக் கதையாக அமையும் சொத்து சிறுகதை தொகுதியின் நல்ல கதையாக எனக்குத் தெரிகிறது. பனைமரங்களைத் தறித்து வீடு கட்டும் தேவை எழுவதும், அதனால் தந்தை, மகன் ஆகிய பாத்திரங்கள் மனவேதனையடைவதும், அதற்குப் பதிலீடாக புதிதாக வாங்கிய காணிக்குள்ளே நூறு பனங்கொட்டைகளை நாட்டும் தீர்மானம் எடுப்பதும் கதையின் உள்ளடக்கம். கதாசிரியரது சூழலபிமானம் வெளிப்படும் இக்கதையில் பனை எவ்வாறு அவர்களது வாழ்க்கையில் பங்கு வகித்தது என்பதை மீள நினைந்து சொல்வது முக்கியமானது. குறிப்பாக, பனையோலை வெட்டி, ஓலை மிதித்து, கரம் போட்டு, உறவினர்கள் சேர்ந்து வீடு வேயும் செயற்பாடு விபரிக்கப்படுவது சிறப்பானதாகும்.

அதுபோல நட்சத்திரப் பொருத்தம் என்ற சிறுகதையும் குறிப்பிடத்தக்கதாகும். மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் கணவனது தந்தை இறந்து விடுவார் என்ற கிராமத்து சோதிட நம்பிக்கையைக் கேள்வியெழுப்பும் கதை இது. மூல நட்சத்திரம் என்பதால் பல தடவை திருமணம் தடைப்பட்ட மலர் பின்னர் வரனாக வந்த கணவரால் விரும்பித் திருமணம் செய்து பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு காலையில் நினைக்கிற பழைய நினைவுகளே கதையோட்டமாகும். மலரை விரும்பிப் பெண் கேட்டு வந்து மூல நட்சத்திரம் என்பதால் மறுத்து விட்டுச் செல்லும் நீலன் மாஸ்ரர் உச்சமான நட்சத்திரப் பொருத்தத்தில் திருமணம் செய்து பிள்ளைகளுமின்றி அற்ப வயதில் இறந்து போனமை நினைவாய் விரிகிறது.

'ஆலமரம்' என்றொரு கதை. அது சொல்லும் செய்தி வித்தியாசமானது.அதன் சாராம்சத்தை அந்தக் கதையின் பின்வரும் பந்தியில் இருந்து அறியலாம்.

' ஆலமர நிழல் வீச்சுக்குள்ளை எந்த மரமும் உருப்படியாக வளர்வதில்லையாம். வளர்வது என்று சொல்வதை விட எந்த மரமும் வளர்ந்து வர ஆலமரம் விடுவதில்லை என்றுதான் சொல்லாம்' என்று அதிபர் காதுக்குள்ளே குசுகுசுத்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

நூலின் தலைப்பான 'சித்திரா ரீச்சர்' என்பது ஏலவே பலராலும் எழுதப்பட்ட தவறான புரிந்துணர்வு சார்ந்த ஒரு கதை. களம் வேறானது. பாடசாலையில் ஒன்றாகக் கற்பிக்கும் சித்திரா ரீச்சர் புதிதாக நியமனம் பெற்றுக் கற்பிக்கும் குமரனில் அன்பு பாராட்டுவதும், அன்பளிப்புக்கள் வழங்குவதும், வீட்டிற்கு அழைப்பதும் அவனை தவறாக எண்ணத் தூண்டுகிறது. ஒருநாள் அவளது வீட்டிற்குச் சென்ற குமரன் அங்கு தன் சாயலையொத்த படத்தைக் கண்ணுறுகிறான். அது அவளது அண்ணாவின் படம்.அவளது அண்ணா போரில் வீரமரணம் அடைந்திருக்கிறான். அவனைக் குமரனில் கண்டே சித்திரா ரீச்சர் இதெல்லாம் செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்த போது தனக்குள் மனம் வெதும்புவது கதையாகும்.

சீதனத்துக்காக ஆசைப்பட்டுக் கஸ்டப்படும் கருணன்(வெகுமானங்கள்),நண்பனாலும், காதலியாலும் ஏமாற்றப்பட்ட குமரன்(ஒரு நண்பன் ஒரு காதலி),மிதிவெடியால் வாழ்வு பறிபோன மாலா(மழை),வஞ்சகம் மிக்க சாத்திரியார் வாமதேவன்,விதானையார்,ஏழையானாலும் முயன்று முன்னுக்கு வந்த சுமித்திரா,(துளிர்மானம்) எனப் பாத்திரங்கள் சமூகத்தின் பல்வேறு காட்டுருக்களாய் கதைகளில் மிளிர்கின்றன.

சாதாரண வாழ்வின் நடப்புக்களைப் பதிவு செய்யும் சீனா உதயகுமார் மொழிப்பிரயோகம் சார்ந்து சில முன்னேற்றங்களை எட்ட வேண்டும். குறிப்பாக ஒருமை வசனம் பன்மையில் முடிவது, இறந்த மற்றும் நிகழ்காலங்கள் மாறி மாறி வருவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் கதை சொல்லும் முறையிலும், உத்தியிலும் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

சமூக அவலங்களை, சமூக நடப்புகளை விமர்சனபூர்வமாக அணுகும் அவரது கதைகள் புறநிலை விமர்சனங்களுடாக வளர்த்துச் செல்லப்படுவனவாக, சமூக தரிசனங்களாய்; மிளிர்கின்றன எனலாம்.

இயல்வாணன்



 

No comments:

Post a Comment