Tuesday, August 31, 2021

நூல் விமர்சனம் : குஞ்சரம் ஊர்ந்தோர் - சீமான் பத்திநாதன் பர்ணாந்து

 நூல் விமர்சனம் 

குஞ்சரம் ஊர்ந்தோர் - சீமான் பத்திநாதன் பர்ணாந்து

முல்லை யேசுதாசன் -இயல்வாணன் -சீமான் பர்னாந்து பத்திநாதன் 


கடல் கண்டடைய முடியாத ஒரு அதிசயம். அது தனது பொக்கிசங்களை அள்ளி அள்ளித் தரும். சிலவேளை ஏமாற்றும். சிலவேளை சீற்றங் கொண்டு எல்லாவற்றையும் துவம்சம் செய்யும். அதன்பின் எதுவுமே நடவாதது போல அமைதியாக அலைகளை எறிந்து கொண்டிருக்கும். இந்தக் கடலே பரதவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பெருஞ் சக்தி. இந்தக் கடலை வெற்றி கொள்வதற்காக தினமும் நடத்தும் போராட்டத்திலேயே இவர்களது வாழ்க்கை கட்டவிழ்கிறது. இந்தப் போராட்டம் கடலுடன் மட்டுமல்ல, அயல் மனிதர்களுடனுந்தான்.

மன்னார் மாவட்டத்திலுள்ள பரதவ மக்கள் முத்துக் குளித்தலைக் கைவிட்ட பின்னர் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்காக எதிர்கொண்ட பிரச்சினைகள், புதிய மாற்றங்கள், அதனால் விளைந்த நன்மை தீமைகளை சீமான் பத்திநாதன் பர்ணாந்துவின் குஞ்சரம் ஊர்ந்தோர் நாவல் பேசுகிறது.

மன்னார் மாவட்ட மீனவ மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புக்களை எஸ்.ஏ.உதயனைத் தொடர்ந்து சீமான் பத்திநாதன் பர்ணாந்து மூலமே தரிசிக்க முடிந்தது. இவரது எழுத்துக்கள் அனுபவச் சரடாக நாவல் முழுவதும் கட்டவிழ்கிறது. சம்பவங்களுடாக மனிதர்களை இயங்க வைத்து கதை நகர்த்தப்படுவதால் பாத்திரங்களின் மனநிலைகளுடன் வாசகர்கள் பயணிக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பது நாவலின் சிறப்பு எனலாம். இந்த நாவலின் பிரதான பாத்திரமான ஆனாப்பிள்ளையில் இருந்து கொஸ்தான், வீரசிங்கம், தனுஸ் தண்டேல், மோட்சம் பர்ணாந்து முதலாளி, தேவராசு, சிங்கராசு, இளுவறியம்மான், சின்னப்பு முறாயசு, மூவிராசாக்கள் வாசாப்பு எழுதும் அப்பு, பெனடிற் முதலாளி, அமீது பாய் எனக் கதை முழுவதும் பாத்திரங்கள் இயங்கி, உரையாடி, செயல்களைச் செய்வதனூடாக கதை நகர்த்தப்படுகிறது. 

முத்துக்குளித்தலில் ஈடுபட்ட மக்கள் அது அற்றுப் போன பின்னர் நகர்ந்து வங்காலையில் வசிக்கின்றனர். சிறிய வள்ளங்களில் தொழிலுக்குச் சென்று அந்த மக்கள் படும் கஷ்டங்களை நாவல் ஆரம்பத்தில் பேசுகிறது. சோளகக் காற்று எழுந்து தொழில் பாதிக்கப்படும் மூன்று மாத காலங்களில் வீடுகளில் வறுமை தாண்டவமாடும். கெளுத்து மீன் முட்டையைச் சுட்டும், கடற்கரைத் தரையில் விளையும் உமரிக் கீரையையும், வரி மட்டியையும் பொறுக்கிச் சென்று கறியாக்கியும் சாப்பிட வேண்டிய நிலை ஆனாப்பிள்ளைக்கு. பிள்ளைகளுக்கோ கஞ்சியும் மறுநாள் மீந்த சோறும்.பட்டினியுடன் கழியும் வாழ்க்கை. 

இந்த நிலையில் சுழன்றாடிய காற்றுக்கு ஒத்துப் பட்டு சிறிய வள்ளங்கள் உடைந்து போகின்றன. அதனைத் திருத்துவது கடினம் என உள்ளுர் ஓடாவி(தச்சுத் தொழிலாளி) சொல்லி விடுகிறார். எனவே, ஒரு ஓடாவியை கொழும்புப் பக்கத்தில் இருந்து கூட்டி வருவதற்காக பாய்மரத் தோணியில் புறப்படுகிறார்கள். அவர்கள் சென்ற இடம் மோட்சம் பர்ணாந்து முதலாளியின் கருவாட்டுக் கடை. அவரோ வள்ளங்களை விட்டு விட்டு வத்தைகளில் தொழிலை ஆரம்பிக்கக் கேட்கிறார். ஆனால் வந்தவர்களோ வத்தைகள் உடைந்து விடும், அதிக முதலீடு தேவை என மறுத்து ஓடாவியைத் தேடிக் கொண்டு புறப்படுகிறார்கள். 

ஆனாப்பிள்ளை கொழும்பைச் சுற்றிப் பார்க்கச் செல்வதாகக் கூறி மற்றவர்களை அனுப்பி விட்டு, மோட்சம் பர்ணாந்துவின் உதவியுடன் காசு ஏதும் கொடுக்காமலேயே வத்தையொன்றை வாங்குகிறார். கருவாட்டை வழங்குவதன் மூலம் கடனைப் பகுதி பகுதியாகத் திருப்பிச் செலுத்துவது என்பது ஏற்பாடு. கருவாட்டை வேறு எவருக்கும் விற்கக் கூடாது என்பது ஒப்பந்தம்.  அதனை ஓட்டப் பழக்குவதற்காக தனுஸ் தண்டேலை அனுப்பி வைக்கிறார். அப்படி அனுப்பி வைப்பதன் மூலம் பிடிக்கப்படும் மீனைக் கருவாடாக்கி மோட்சம் பர்ணாந்துவின் கடைக்குக் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவது ஒரு நோக்கம். இந்தியாவுடன் தங்கக் கடத்தலை தனுஸ் மூலமாக மேற்கொள்வது மறு நோக்கம்.

இப்படி கதை முழுவதும் மனிதர்களுக்கிடையிலான ஊடாட்டங்கள், வெஞ்சினம், வெம்பகை, வஞ்சனை, பழிதீர்த்தல், பொறாமை, பகட்டுப் போட்டி, ஒருவரை ஒருவர் புறங்கூறல் என்று கிராமாந்தர வாழ்வின் அத்தனை நன்மை, தீமைகளையும் நாவல் பேசுகிறது.

 'கதைமாந்தர்களே பிரதியை முழுவதுமாக வசப்படுத்திக் கொண்டு தம் கதைகளைத் தாமே எழுதிச் செல்கிறார்கள். பல இடங்களில் சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்கள் பிரதிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படுவதை பிரதியை நெருக்கமாக வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள்' என்று அணிந்துரையில் எழுத்தாளர் வி.கௌரிபாலன் கூறுவது உண்மையே.

இந்த நாவலில் இன்னாரு விடயமும் உள்ளது. அது திருச்சபைக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான பிரச்சினை. யாழ்ப்பாணத் திருச்சபையின் கட்டுப்பாட்டைப் புறந் தள்ளி இன்னொரு மறை மாவட்டமாக மன்னார் மேலெழுந்ததன் பின்னணி தொடர்பிலும் வங்காலைப் பங்குக் கோவிலை முன்வைத்து நடக்கும் சம்பவங்கள் ஊடாக நூலாசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார்.

இந்த நாவல் பேசும் களமும் காலமும் காட்சி விபரிப்பினூடாக நன்கு முன்வைக்கப்படுகிறது. அதற்கு அப்பால் நாவலை வழிநடத்துவது கதாமாந்தர்களுடைய உரையாடல்கள். வங்காலை பரதவ சமூகத்தின் பேச்சு மொழி, கொழும்பு வணிகர்களின் பேச்சு மொழி இயல்பாக விரவிக் கிடக்கிறது. பிரதேச மரபுத் தொடர்கள், பழமொழிகள் எல்லாம் வருகின்றன.

அந்தக் காலத்தில் நிலவிய சாதி சார்ந்த பிரச்சினைகளையும் நாவல் பேசுகிறது. பங்குக் கோவில் பிரச்சினையும் சாதி சார்ந்தே எழுகிறது. கருவாட்டு வியாபாரத்தில் நாடார் சாதியினர் ஈடுபட முனைவதால் தமது தொழில் பாதிக்கப்படுவது தொடர்பில் மோட்சம் பர்ணாந்து முதலாளி பின்வருமாறு சொல்கிறார்.

'அதுல பாரு வீரசிங்கம். இந்த நாடாப் பயலுவ எல்லாம் நம்ம யாவாரத்துல கைபோட ஆரம்பிச்சுட்டான். அங்கின தூத்துக்குடியிலும் ஒரே களேபரம். ஆள் பேர் தெரியாம கதிரை போட்டு ஆதரிச்சா அவன் நம்ம வீட்டுக்குள்ள இல்ல கல்லைத் தூக்கிப் போட்டுட்டான்'

வீரசிங்கம் விட்டுக் குடுக்காம பதிலளித்தார்.

'நம்ம பக்கமெல்லா அப்பிடியில்ல.சீவலோடு மட்டும் நிக்கிறாக. மரங்களெல்லாம் நம்ம ஊட்டுது'

'கண்ணுக்க வச்சிருங்க. கால வாரி விட்டிடுவானுக.கயவாளிப் பயலுக'

சூசையப்பர் திருநாளில் திருவுருவத்தைக் கடலில் கொண்டு சென்று மறுபடி கொண்டு வரும் நிகழ்வு ஏகப்பட்ட இழுபறிகள், போட்டிகளின் பின்னணியில் நடக்கிறது. சுருவத்தைக் கொண்டு சென்று கரைக்கு வந்து படகில் இருந்து இறங்கும் போது குருவானவர் சுருவத்துடன் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறார். அப்போது ஒருவர் சொல்கிறார்.

'அவரு(சூசையப்பர்) சாதியில தச்சன் கண்டியா... நம்ம பரவப் பயல்களிட ஆட்டத்துக்கெல்லாம் ஆட மாட்டன் எண்டு சொல்லாமல் சொல்லிப்புட்டாரு'

பணத்தாசை எவ்வாறு மனிதர்களைக் கூறு போட்டு, மனித வாழ்வைச் சிதைத்து அழிக்கிறது என்பதையும் நாவல் சொல்கிறது. வறுமையில் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்த ஆனாப்பிள்ளை பெரிய சம்மட்டியாராகி, பகட்டு வாழ்க்கை வாழ்ந்து, வீம்பாகத் திரிந்து, கடைசியில் மனநோயாளியாக சீண்டுவாரில்லாமல் ஒடுங்கிக் கிடக்கும் நிலை சோகந் தரும் வகையில் நாவலில் கட்டமைந்துள்ளது.

இந்த நாவல் ஒரு திரைக் கதை போல விரிந்து செல்கிறது. படச் சட்டகம் போல காட்சிகள் வந்து போகின்றன. ஒரு திரைப்படமாக எடுப்பதற்குப் பொருத்தமான நாவல். நாவலில் நூலாசிரியர் பேசும் இடங்களில் மொழிசார்ந்து காணப்படும் தவறுகள், எழுத்துப் பிழைகள் என்பன நாவலை வாசிக்கும் போது இடர் தந்தாலும் மொழிநடையும், பாத்திரங்களை இயங்க வைத்து நகர்த்திச் செல்லும் பாங்கும் நாவலின் பலமாக இருந்து வாசகர்களை அழைத்துச் செல்கிறது. அவரிடமிருந்து மேலும் படைப்புகளை இலக்கியவுலகு எதிர்பார்க்கிறது.

இயல்வாணன்

கலைமுகம்



No comments:

Post a Comment