Tuesday, August 31, 2021

நேர்காணல் தாமரைச் செல்வி

 நேர்காணல்:

தாமரைச் செல்வி

நேர்கண்டவர் : இயல்வாணன்

படங்கள் : மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிய ரதிதேவி என்ற இயற்பெயர் கொண்ட தாமரைச்செல்வி 04-08-1953இல் விவசாயக் கிராமமான பரந்தனில் உள்ள குமாரபுரத்தில் பிறந்தவர். நீண்ட காலம் அங்கேயே வாழ்ந்தவர். இறுதி யுத்தத்தின் நிறைவில் கொழும்பில் வாழ்ந்த அவர் தற்போது பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். 1973இல் வீரகேசரியில் பிரசுரமான சிறுகதையுடன் எழுத்துலகில் பிரவேசித்த தாமரைச்செல்வி சுமைகள்(1977), விண்ணில் அல்ல விடிவெள்ளி(1992), தாகம்(1993), வீதியெல்லாம் தோரணங்கள்(2003), பச்சை வயல் கனவு(2004), உயிர்வாசம்(2019) ஆகிய நாவல்களையும், வேள்வித்தீ(1994) குறுநாவலையும், ஒரு மழைக்கால இரவு(1998), அழுவதற்கு நேரமில்லை (2002), வன்னியாச்சி(2005) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். யுத்தம் அவரது எழுத்துப் பிரதிகளை அழித்தது போக இவற்றை அவர் வெளியிட்டுள்ளார். இவருடைய சிறுகதைகள் (உதிரிப் பூக்கள் மகேந்திரன் இயக்கிய இடைவெளி, இமயவர்மன் தயாரித்தளித்த பசி)  குறும் படங்களாக்கப்பட்டுள்ளன. இலங்கை அரச பாடசாலை பாடநூலில் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது. உயிர்வாசம் நாவல் வெளியீட்டுக்காக வந்திருந்தவரை பரந்தனில் கலைமுகத்துக்காக நேர்கண்டோம்.

கே : கிளிநொச்சி மண்ணைப் பிரதிபலிக்கும் அதிக படைப்புக்களை எழுதியவர் நீங்கள். மருத நிலப் பண்பாடும் வாழ்வியலுமே உங்கள் அதிக படைப்புக்களில் விரவிக் கிடக்கிறது. எழுத வேண்டும், எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

ப: சின்ன வயதில் இருந்தே எனக்கு வாசிக்கின்ற பழக்கம் இருந்தது. ஐந்தாம் வகுப்பில் எனது தமிழ் ஆசிரியராக இருந்த வை.நடராசா அவர்கள் சகுந்தலை சரிதை, வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகன் போன்ற புத்தகங்கள் தந்து வாசிக்க வைத்திருக்கிறார். தமிழின் அழகு அந்த வயதிலேயே என்னுள் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் படித்த போது  அங்குள்ள நூலகத்தில் இரவல் பெற்று, அகலன், கல்கி, ஜெகசிற்பியன் போன்றோரின் நூல்களை விரும்பிப் படிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து இராமநாதன் கல்லூரியில் தையல் பழகிய நேரம் அதிகளவு புத்தகங்களை வாசிக்க முடிந்தது. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு, பத்தினிக் கோட்டம் என்று நிறையப் படித்தேன். அதன் பின்னரான நாட்களில்தான் ஈழத்து எழுத்துக்கள் அறிமுகமானது.

படிப்பை நிறுத்தி வீட்டில் இருந்த நாட்களில் கிளிநொச்சி பிரதேச சபை நூலகத்தில் இருந்து கே.டானியல், இளங்கீரன், செங்கை ஆழியான் போன்றோரின் நூல்களைத் தேடிப் படிக்க முடிந்தது. அதனால்தான் எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதென நினைக்கிறேன். இது வாசிப்பின் அருட்டுணர்வால் விளைந்தது. என்னைச் சுற்றியிருந்த உலகம் உழைக்கும் மக்களினால் ஆனது. அவர்களது பிரச்சினைகள் மனதைப் பாதித்த போது அவற்றைச் சொல்ல நினைத்தேன். அவற்றை எழுத்தில் வடித்தேன்.

கே : ரதிதேவி என்பது உங்களது இயற்பெயர். தாமரைச் செல்வி என்ற புனைபெயரைச் சுமக்கக் காரணம் என்ன? பெயர்த் தெரிவுக்கு விசேடமான காரணங்கள் ஏதுமுண்டா?

ப : விசேட காரணங்கள் என்று எதுவுமில்லை. சோமு எழுதிய நந்தவனம் நாவல் படித்தேன். அதில் வந்த நாயகியின் பெயர் தாமரைச் செல்வி. அப்பெயர் என்னைக் கவர்ந்திருந்தது. நான் எழுத ஆரம்பித்த 1973இல் சொந்தப் பெரை விடுத்து, தாமரைச்செல்வி என்ற புனைபெயரை வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். வைத்து விட்டேன். அவ்வளவுதான்!

கே : உங்களுடைய ஆதர்சமாக உங்கள் தந்தையார் இருந்துள்ளார். காடு வெட்டி, கழனி சமைத்த தந்தையாரின் உழைப்பையும், வியர்வையையும், பாடுகளையும் பேசியது உங்களது பச்சை வயல் கனவு நாவல். தந்தையார், அவரின் பின் கணவர், பிள்ளைகள் என்ற குடும்ப வட்டம் உங்களது படைப்பாக்கத்துக்கு எவ்வாறு துணை நின்றது?

ப : எங்கள் தந்தை ஒரு விவசாயி. கடின உழைப்பாளி. அன்பும் இரக்கமும் உடையவர். அடுத்தவரை நேசிப்பதும், உதவி செய்வதும் அவரது இயல்பு. இலக்கியப் பரிச்சயமோ, புரிதலோ அவருக்கு இருந்ததில்லை. எங்கள் குடும்பத்திலோ, எங்களுக்குத் தெரிந்தவர்களிலுமோ யாரும் எழுத்தாளர்களாக இருந்ததுமில்லை. ஆனாலும் நான் எழுதத் தொடங்கிய போது எனது தந்தையார் அதை ஆதரித்தார். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது கதைகள் வரும் போது தானும் வாசிப்பார். அவருக்கு விமர்சிக்கத் தெரியா விட்டாலும் நல்லாயிருக்கு என்று சொல்லி ஊக்குவிப்பார்.

அதன் பின் எனது சகோதரர்கள். அவர்களும் நிறைய வாசிப்பார்கள். அவர்கள் இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார்கள். எனது கதைகளைப் படித்து, கருத்துக்கள் சொல்வார்கள். அதுவும் என்னை ஊக்குவித்தது. 1974இல் எனக்குத் திருமணம் நடந்தது. எனக்குக் கணவராக வாய்த்தவரும் ஒரு இலக்கிய நேசிப்புள்ளவராக இருந்தது எனக்குப் பெரிய வரமானது. அவரும் ஒரு எழுத்தாளராக இருந்திருக்கிறார். வீரகேசரியில் வரணியூர் சி.கந்தசாமி என்ற பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார். வாசிப்பையும், எழுத்தையும் பற்றியே அதிகம் பேசுவார். இப்படியொரு நிலைமை உள்ள நிலையில் நான் எழுதாதிருந்தால்தான் ஏதாவது அதிசயம் நேர்ந்திருக்கும். நாங்கள் வாசிப்பை நேசித்ததால் பிள்ளைகளும் வாசிப்பில் ஆர்வம் கொண்டிரு;தார்கள். எல்லோரது ஆதரவும், ஊக்குவிப்புமே இன்றளவில் எழுதவும், வாசிக்கவும், இலக்கிய உலகில் தொடர்ந்து பயணிக்கவும் எனக்கு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

கே : 1973 முதல் எழுதி வருகிறீர்கள்.1977இல் வீரகேசரி பிரசுரமாக வந்த சுமைகள் நாவல்தான் உங்களை இலக்கிய உலகில் அடையாளப்படுத்தியது எனக் கருதுகிறேன். கூழாங்கல் போன்று பயனற்று இருந்த இளைஞன் ஒருவன் குடும்பத்தைத் தாங்கும் சுமைதாங்கியாக மாறியதைச் சொல்லும் நாவல் அது. அந்த நாவலை எழுத நேர்ந்ததேன்? அதற்குக் கிடைத்த வரவேற்பு எத்தகையது?

ப: அந்த நாட்களில் வீரகேசரி பிரசுரங்களுக்கு வாசகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. நாங்கள் ஆவலோடு இவற்றை வாங்கி வாசித்து வந்தோம். தமது 50ஆவது பிரசுரமாக வெளியிடுவதற்காக ஒரு நாவல் போட்டியினை அறிவித்திருந்தார்கள். அதற்காக எழுதப்பட்டதே சுமைகள் நாவல். அந்த நாவல் போட்டியில் செங்கை ஆழியானின் காட்டாறு முதல் பரிசு பெற்று, 50ஆவது பிரசுரமாக வெளிவந்தது. எனது நாவலுக்கும் வீரகேசரி பிரசுரத்தில் இன்னொரு சந்தர்ப்பத்தைத் தந்தார்கள். வீரகேசரி பிரசுர நிர்வாகி எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் என்னை அழைத்துக் கலந்துரையாடினார். மீண்டும் திருத்தி எழுதித் தருமாறு கேட்டார். அவர் கூறிய ஆலோசனைகளை மனதில் வைத்து திரும்பவும் எழுதி அனுப்பினேன். அதை ஏற்று வீரகேசரியின் 55வது பிரசுரமாக சுமைகளை வெளியிட்டார்கள்.

நாம் அன்றாடம் பார்க்கும் நிறைகுறைகளுடனான பதின்ம வயது இளைஞன் ஒருவனை வைத்து எழுதப்பட்ட நாவல் அது. பல பேருடைய உணர்வுகளோடு செந்திலின் பாத்திரம் ஒன்றிப் போனதால் நல்ல வரவேற்பும், ஆரோக்கியமான விமர்சனமும் கிடைத்தது. வன்னிப் பிரதேச எழுத்து என்று வரும் போது ஆய்வாளர்களினால் இன்றளவிலும் குறிப்பிடப்படும் நாவல்களில் ஒன்றாக சுமைகளும் இடம்பெறுவதில் எனக்கு மகிழ்ச்சியே.

கே : வன்னி மண்ணின் வாழ்வியலையும், அதைத் தடம் புரட்டிய இடப்பெயர்வையும் உங்கள் கதைகள் அதிகம் பேசியுள்ளன. பொதுமைப்பட்ட வாழ்வனுபவங்களாக அக்கதைகள் கட்டவிழ்ந்துள்ளன. பல எழுத்தாளர்கள் இருந்தும் எல்லோரும் இதனைப் பதிவு செய்யவில்லை. இவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? இடம்பெயர் வாழ்வனுபவங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கருதுகிறீர்களா?

ப: எந்தவொரு படைப்பாளியும் விரும்புவது போலவே நானும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தை அடையாளம் காட்டவே விரும்பினேன். என்னைச் சுற்றி நடப்பவைகளையும், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களையுந்தான் என்னால் எழுத முடியும். போரும் இடப்பெயர்வுமாக அலைந்து திரிந்த மக்கள் கூட்டத்தின் நடுவேதான் நானும் வாழ்ந்தேன். ஒரு சமூகத்தின் அலைக்கழிப்பில், அந்த அலைக்கழிப்பில் தானும் ஒருவராக எழுத்தாளர் ஆகும் போது அந்த எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

வன்னியின் வாசல்கள் அடைக்கப்பட்டிருந்த காலத்தின் வாழ்வியலை இத்தகைய எழுத்துக்கள்தான் சுமந்து கொண்டு சென்று சேர்ப்பித்தது. எத்தனையோ படைப்புக்கள் அக்காலத்தில் வெளிவந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனாலும் அந்த இடப்பெயர்வு அவலங்கள் முழுமையாக எழுதப்படவில்லை என்றே தோன்றுகிறது.

கே : இடப்பெயர்வு உங்கள் வசமிருந்த படைப்புக்கள் பலவற்றையும் உங்களிடமிருந்து பறித்து விட்டன என ஒரு நேர்காணலில் கூறியுள்ளீர்கள். அது பற்றிக் கூற முடியுமா?

ப : எமது ஊரான பரந்தன் ஆனையிறவுக்கு அருகில் உள்ளது. ஆனையிறவில இருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவம் நகர்ந்து வரும் போது முதல் இலக்காக எமது கிராமமே இருந்தது. இராணுவம் முன்னேறச் சண்டை ஆரம்பிக்கும் போது ஊரை விட்டுத் தூர ஓடுவதும், சண்டை ஓய்ந்த பின் மீண்டும் திரும்பி வருவதும் நீண்ட காலத்துக்குத் தொடர்கதையாக இருந்தது. முன்னேறி வரும் இராணுவம் வீடு வாசலை எரித்து விட்டுத் திரும்பிப் போயிருக்கும். 

எழுதத் தொடங்கிய நாளிலிருந்து எனது கதைகள் பிரசுரமாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளைக் கவனத்தோடு சேகரித்து வைத்திருந்தேன். கதையின் பெயர், பிரசுரமான பத்திரிகை, சஞ்சிகையின் பெயர், திகதி என்ற தனியான பதிவும் என்னிடமிருந்தது. 1986இல் முதல் தடவையாக எங்கள் வீடு எரிக்கப்பட்ட போது அதுவரை சேகரித்தவை அழிந்து போயின. மறுபடி சேர்த்தவை 1991இல் வீடு எரிக்கப்பட்ட போது கருகிப் போயின. மீண்டும் சேர்த்தவை இறுதி யுத்தத்தின் போது இல்லாமல் போயின. எனக்குக் கிடைத்த விருதுகள், சான்றிதழ்கள் அத்தனையும் அழிந்தன. இந்த இழப்புகள் படைப்பாளி என்ற வகையில் எனக்கு அதிக துன்பந் தருவன. எனினும் எமது பிரதேசத்தில் ஏற்பட்ட எத்தனையோ உயிர் இழப்புகளின் மத்தியில் இந்தத் துன்பம் சாதாரணமானது என்றே தோன்றுகிறது.

கே : தொண்ணூறுகளின் முற்கூற்றில் கடுமையான பொருளாதாரத் தடை நிலவிய காலத்தில் உங்களுடைய மூன்று நாவல்களான தாகம், விண்ணில் அல்ல விடிவெள்ளி, வேள்வித்தீ என்பன மீரா வெளியீடாக வெளிவந்தன. இந்த நூல்கள் பற்றிக் கூறுங்கள். கூடவே மீரா வெளியீட்டின் பங்களிப்புக் குறித்தும் கூறுங்கள்.

ப : 1988 முதல் மீரா வெளியீடு என்னும் பதிப்பகத்தின் மூலம் திரு.டேவிற் லிகோரி அவர்கள் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். செங்கை ஆழியானின் மழைக்காலம், மண்ணின் தாகம், முற்றத்து ஒற்றைப்பனை, அக்கினி, செம்பியன் செல்வனின் கானகத்தின் கானம், து.வைத்திலிங்கத்தின் பூம்பனி மலர்கள், கே.எஸ்.ஆனந்தனின் ராதையின் நெஞ்சம், பூஜைக்காக வாழும் பூவை, இராவணன் கோட்டை, இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் முடிவல்ல ஆரம்பம், இருள் இரவில் அல்ல, முள்முடி மன்னர்கள், மீண்டும் புதிதாய்ப் பிறப்போம், இந்திரா பிரியதர்சினியின் நிலவே நீ மயங்காதே, வளவை வளவனின் சங்கரன், இயல்வாணனின் சுவடுகள், ஓ.கே.குணநாதனின் விடியலைத் தேடி, கே.ஆர்.டேவிட்டின் பாலைவனப் பயணிகள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை, முருகுவின் ஊருக்கல்ல, வாமதேவனின் ஒரு இல்லத்தில் சில உள்ளங்கள் எனப் பல நூல்கள் மீரா வெளியீடாக வெளிவந்தன.

திரு.லிகோரி நாவல் ஒன்றை எழுதித் தரும்படி கேட்ட போது விண்ணில் அல்ல விடிவெள்ளி நாவலை எழுதிக் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து தாகம் நாவலும், வேள்வித்தீ குறுநாவலும் மீரா வெளியீடுகளாக வெளிவந்தன. நூறு பக்கங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதற்கமைய எழுதப்பட்ட சிறுநாவல்கள் இவை.

அன்றைய காலத்தில் போராளிகளின் கட்டு;பாட்டில் இருந்த வடக்குப் பிரதேசத்தில் அரசாங்கத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் நல்ல காகிதங்கள் கிடைக்கவில்லை. பைல் மட்டை, பிறவுண் தாள், நீலக் கோடு போட்ட கொப்பி தாள்களில் அச்சிடப்பட்டே பல நூல்களும், பத்திரிகைகளும் வெளிவந்தன. இன்றைக்கும் அன்றைய நெருக்கடிகளின் போதான இலக்கிய வெளிப்பாட்டின் சாட்சியாக அந்த நூல்கள் உள்ளன. 1988 தொடக்கம் மீரா வெளியீடாக சுமார் இருபத்தைந்து நூல்கள் வரை வெளிவந்துள்ளன. இது அன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரை பெரும் சாதனை. சாதாரண மனிதனாக இருந்து இத்தனை பங்களிப்புச் செய்தவருக்கு ஈழத்து இலக்கிய உலகம் உரிய கௌரவத்தைக் கொடுக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

கே : மண்வாசனை கமழும் பாரம்பரிய வாழ்வியலை உங்கள் கதைகள் பேசுகின்றன. பெண்கள், அவர்களது உணர்வுகளையெல்லாம் பேசியுள்ளீர்கள். பெண்ணியம் சார்ந்த உங்களது பார்வை எத்தகையது? அதனை எவ்வாறு பதிவு செய்துள்ளீர்கள்?

ப : குடும்பத்தில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளையும் சுமப்பவளாகவே ஒரு பெண் இருக்கிறாள். சமூக அமைப்பு அப்படித்தான் கட்டமைத்து வைத்திருக்கிறது. என்னைச் சுற்றியிருந்த அதிகளவான பெண்கள் உழைப்பாளிகளாகவும், பாமரர்களாகவுமே இருந்தனர். அவர்கள் சாமானிய வாழ்வில் அதிகம் நெருக்கடிகளைச் சுமந்தார்கள். போர் ஏற்பட்ட போது, அந்தப் போரின் அத்தனை நெருக்கடிகளும் அவர்களுக்கே சுமையானது. அவர்களது வாழ்க்கை மிகுந்த துயர் தருவதாக இருந்தது. மறுபுறம், துயரத்தைக் கடப்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர். அவர்களைப் பற்றியே நான் அதிகம் எழுதியிருக்கிறேன்.

கல்வியறிவு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்பது உண்மையே. ஆனாலும் அதிகம் கல்வியறிவு பெற்றிராத பெண்கள் சுயமாக உழைத்து, தம் காலில் நின்று சமூகத்தை எதிர்கொள்வதையும் தற்போது பார்க்கிறோம். போரின் விளைவாக உருவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எவ்வாறு எதிர்நீச்சலடித்து வாழ்கிறார்கள் என்பதை வன்னியின் ஒவ்வொரு கிராமத்திலும் இன்று காணலாம்.

பெண்கள் ஆணைச் சார்ந்து நிற்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். பெண்ணுக்கு அறிவுரை சொல்லி வளர்க்கும் சமூகம் ஆணுக்கு அறிவுரையேதும் சொல்வதில்லை. வல்லமையற்ற பெண்களின் உணர்வுகளை எழுத முற்படும் போது பல கதைகளை ஆண்களின் பார்வையிலேயே எழுதியிருக்கிறேன். சக மனுஷி என்ற வகையில் பெண்களை மதிக்கவும், நேசிக்கவும் ஆணால் முடியுமெனில் பெண்களுக்கான பல பிரச்சினைகள் மறைந்து போய் விடும்.

கே : நீண்ட காலமாக எழுதி வருகிறீர்கள். இலக்கியத்தில், குறிப்பாக புனைகதைகளில் பல பரிசோதனை முயற்சிகள் நடந்துள்ளன. பல கருத்துப் பள்ளிகளும் (ஐனநழடழபல), வாதங்களும் சார்ந்து பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எழுதும் நிலை காணப்படுகிறது. ஆனால் உங்களது கதைகள் யதார்த்த வாதப் பண்போடுதான் உள்ளன. புதிய இலக்கியப் போக்குகள் குறித்த உங்களின் மதிப்பீடென்ன?

ப : புதிய இலக்கியப் போக்குகள் ஆரோக்கியமானதாகவும், சமூக அக்கறை கொண்டனவாகவும் அமைந்தால் அவை வரவேற்கக் கூடியதே. என்னுடைய கதைகள் அன்று தொட்டு அதே யதார்த்தவாதப் பண்போடுதான் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். என்னால் இந்த விதமாகத்தான் எழுத முடிகிறது. அதுவே எனக்குப் பிடித்தமானதும்.

கே : 'ஈழத்து இலக்கியம் போரின் அவலங்களை மட்டுமே பேசி, பின்திரும்பும் இயல்போடு காணப்படுகிறது. முன்னோக்குப் பார்வை அதற்கு இல்லை' என்பதான விமர்சனங்கள் உள்ளன. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

ப : ஈழத்து இலக்கியம் போரின் அவலங்களை மட்டுமே இன்னமும் பேசிக் கொண்டிருப்பது சலிப்பைத் தருகிறது. அதிலிருந்து விடுபட்டு வேறு விடயங்களை எழுத முன்வர வேண்டும் என்ற குரல்கள் இப்போது பரவலாய் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. 30 ஆண்டு காலப் போர் வாழ்வையும், இழப்புக்களின் வலியையும் இலகுவில் கடந்து போய் விட முடியாது. போர் முடிந்தாலும் போர் விட்டுச் சென்ற நிழலின் அந்தகாரம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. போர் தின்ற வாழ்வு இன்னமும் சரிப்படுத்தப்படவில்லை. அன்றைய பதைபதைப்பு, துடித்த துடிப்பு, பட்ட அந்தரிப்பு... இவையெல்லாம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது என்று சொல்லி விட முடியாது. இன்னமும் எழுதுவதற்கு நிறையவே இருக்கின்றன. தழும்பாகிப் போனாலும் பட்ட துயரங்களை எழுதும் கடமை எழுத்தாளர்களுக்கு உண்டு.

அதற்காக அதை மட்டும் எழுத வேண்டும் என்று சொல்ல வரவில்லை. சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் காலங் காலமாக இருந்து கொண்டுதான் வருகிறது. புதிதாகவும் பல பிரச்சினைகள் தோன்றிக் கொண்டுதான் உள்ளன. எழுத்தாளர்கள் மனதைப் பாதிக்கும் எந்த விடயத்தையும் எழுதலாம்.

கே : உங்களது பிந்திய நாவலான உயிர்வாசம் உள்நாட்டுப் போரின் பாதிப்பு மற்றும் அச்சமான சூழலில் உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகுபவர்களின் பயங்கர அனுபவங்களைப் பேசுகிறது. இது உண்மை அனுபவமா? இதை எழுதுவதற்குத் தூண்டிய காரணிகள் எவை? 

ப : அவுஸ்திரேலியா நோக்கிய படகுப் பயணம் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஆரம்பமாகியது. ஆபத்தான கடற் பயணத்தை உயிரைப் பணயம் வைத்துத்தான் மேற்கொண்டார்கள். அவுஸ்திரேலியா என்ற நாடு பற்றித் தெரியாது. அதன் தூரம் எவ்வளவு என்றும் தெரியாது. ஆனாலும் ஏதோவொரு துணிச்சல் அவர்களைப் படகேற வைத்தது. நான் அவுஸ்திரேலியாவில் இருந்த போது அவர்களில் பலரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களின் அனுபவத்தைக் கேட்ட போது மெய்சிலிர்த்தது. இந்தத் துயர்மிகு பயணத்தை எழுத்தில் பதிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. படகு ஏறி கடல் தாண்டி அவுஸ்திரேலியா போய் இறங்கினார்கள் என்ற செய்திக்குப் பின்னால் ஏராளம் ஏக்கங்கள், துன்ப துயரங்கள் மறைந்து கிடந்தமையை இந்த உலகம் அறியவில்லை. அவைகளை எழுத நினைத்தேன். இரண்டரை வருடங்கள் இந்த நாவலுக்குச் செலவழித்தேன். இந்தக் காலத்தில் அந்த அனுபவங்களில் நானும் தோய்ந்து பயணித்தேன். நாவல் முழுவதும் அவர்களின் அனுபவங்கள் பரவிச் சிதறிக் கிடக்கின்றன.

கே : சமகால இலக்கியப் போக்குத் தொடர்பில் உங்களது அவதானிப்பு என்ன?

ப : புதிது புதிதாய் சமூகம் தோற்றம் பெற்றுக் கொண்டு வரும் போது புதிய சிந்தனைகள், புதிய கருத்துக்கள், புதிய வடிவங்கள் தோன்றுவது இயல்பானதே. தற்போதய எழுத்துக்களில், குறிப்பாக புதிதாக எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் புதிய சிந்தனைகளையும், கதை சொல்லும் முறையிலும், உத்தியிலும், வடிவத்திலும் மாற்றங்களையும், நவீன போக்குகளையும் காண முடிகின்றது. சில கதைகளைப் படிக்கின்ற போது தமிழ் வார்த்தைகளை எவ்வளவு வசீகரமாகக் கையாளுகிறார்கள் என்ற வியப்பு ஏற்படுகிறது. சில எழுத்தாளர்கள் ஈழத்து இலக்கியத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டு போவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எழுதுகிறார்கள்.

கே : புதிய படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப : எழுத ஆர்வமுள்ளவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். எமக்கு அப்பாற்பட்ட உலகத்தையும், மனிதர்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ள வாசிப்பு உதவுகிறது. எழுதிய படைப்புகளுக்கு வருகின்ற நியாயமான விமர்சனங்களைக் கவனத்தில் கொள்ளலாம். அவை எழுத்துக்களைச் செம்மைப்படுத்தி, தன்னைத் தானே திருத்திக் கொள்ள உதவும். வாசிப்பும் யோசிப்பும் மனதைப் பக்குவப்படுத்தும். எழுத ஊக்கத்தைத் தரும்.




கே : நீங்கள் ஒரு ஓவியராகவும் இருந்துள்ளீர்கள். எனினும் ஓவியத்துறையில் ஈடுபாடு காட்டவில்லை. இதற்கு என்ன காரணம்?

ப : சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஓவியர் மணியம் வரைந்த கோட்டுச் சித்திரங்கள் பிரமிப்பைத் தந்தன. அதைப் பார்த்து வரையத் தொடங்கினேன். தொடர்ந்து மணியம் செல்வன், மாருதி, ஜெயராஜின் ஓவியங்களையும் பார்த்து வரைந்து பழகினேன். முறையாக ஓவியம் கற்கவில்லை. 

ஆனால் 80ஆம் ஆண்டில் வீரகேசரி வாரமலரில் ஓவியராகப் பணி புரிந்த ஸ்ரீகாந் அவர்களிடம் சிறிது காலம் ஓவியம் கற்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர் தபால் மூலம் ஓவியம் கற்பித்துக் கொண்டிருந்தார். அதில் நானும் சேர்ந்து முதலில் தபால் மூலமாகத்தான் கற்கத் தொடங்கினேன். ஒரு மாதத்திலேயே எனது ஓவியங்களைப் பாராட்டி நேரில் வந்தும் கற்றுக் கொள்ளலாம் என அழைத்திருந்தார். அதனால் கொழும்பில் சில வாரங்கள் மட்டுமே அவரிடம் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டேன். கோட்டுச் சித்திரம் வரைவதன் அடிப்படை விசயங்களை அவர்தான் சொல்லித் தந்தார்.

'சித்ரா' என்ற சித்திரச் சஞ்சிகையிலும் அவர் அப்போது பணி புரிந்து கொண்டிருந்தார். எனது சித்திரக் கதைகளை சித்ரா சஞ்சிகையில் பிரசுரிக்கச் செய்தார். குங்குமம் இதழ் அக்கரைச் சிறப்பிதழை வெளியிட்ட போது எனது தோழி தமிழ்ப்பிரியா இலங்கைச் சிறப்பிதழைத் தொகுத்திருந்தார். அவர் முத்து குணரத்தினத்தின் கதைக்கு என்னை ஓவியம் வரையச் செய்து அதனைக் குங்குமத்துக்கு அனுப்பி வைத்தார். இலங்கைச் சிறப்பிதழில் அந்தக் கதையோடு எனது ஓவியத்தைப் பிரசுரித்து இருந்தார்கள். எனது புகைப்படத்தையும் போட்டு, ஓவியம் தாமரைச்செல்வி என்று பிரசுரித்திருந்தார்கள். அந்த இதழில் நான் எழுதி வரைந்த நான்கு பக்கச் சித்திரக் கதையொன்றும் பிரசுரமாகியிருந்தது.

சுடர் சஞ்சிகை எனது சிறுகதையுடன் நான் வரைந்து அனுப்பும் ஓவியங்களையும் ஏற்றுப் பிரசுரம் செய்திருந்தது. தவிர ஈழநாடு, தினகரன், வீரகேசரி, ஜீவநதி ஆகியவற்றில் எனது கதைகளும் ஓவியங்களும் பிரசுரமாகியுள்ளன. எனது அழுவதற்கு நேரமில்லை சிறுகதைத் தொகுப்புக்கு அட்டைப்படம் வரைந்ததுடன் உட்புறம் ஒவ்வொரு சிறுகதைக்கும் ஓவியம் வரைந்திருக்கிறேன்.

ஓவியத்துறையில் மேலும் என்னை வளர்த்துக் கொண்டிருக்கலாம். ஒரு தேக்கநிலை வந்து விட்டது. இப்போது ஓவியம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. வரைவது என்பது மனதுக்குச் சந்தோசம் தருவது. எனவே இனியும் வரைவேன்.

கலை முகம்  இதழ் 69


No comments:

Post a Comment