Monday, August 30, 2021

திருவூஞ்சல்

 சிறுப்பிட்டி தெற்கு தாமர்வளவு

அருள்மிகு ஞானவைரவப் பெருமான் மீது பாடப்பெற்ற

திருவூஞ்சல்

காப்பு

தென்சிறுவைத் தாமர் வளவுவாழ் வைரவர்க்கு

நன்சொற் திருவூஞ்சல் நான் பாட – பண்செய்

பவளக் கரிமுகத்து ஐங்கரனே யெனக்கு

நுவலத் தமிழ்தந்து கா

நூல்

மாணிக்கங் கோர்த்தபொற் தூண்க ளாலும்

மரகதமே பதித்தமைத்த வளையி னாலும்

ஆணிமுத்தால் இழைத்தவுறு வடத்தி னாலும்

அரியதந்தம் பின்னியவன் பலகை யாலும்

பேணியமைத்த வூஞ்சற்பீ டத்தி லமர்ந்து

பேரருளால் சிறுப்பிட்டி தெற்கி லோர்ந்து

தாணித்த வைரவரே! ஆடீர் ஊஞ்சல்

சிவஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


தேன்நிறை பூந்தார் செறிந்து கூரையாக

தெங்கிளநீர் சிறுவுடுவாய் ஆங்கே மின்ன

பூங்கதலிக் குலை வரிசை கால்களாக

புரியுதோ ரணங்கள் எல்லைச் சுவர்களாக

வான்மதியோ வைரமணிச் சுடரே யாக

வனைந்தபெரு மண்டபத்தே யமர்ந் தருளி

நானிலத்தை ஆள்பவரே! ஆடீர் ஊஞ்சல்

ஞானமருள் வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


பக்தியுடன் பக்தர்மலர் பாதம் சூட்ட

பண்ணுமொழி பாவில்மறை வேதம் சாற்ற

சுத்தமனத் துள்ளோர்கள் துதித்தே போற்ற

சோதியென வேதியர்நற் தீபம் ஏற்ற

சக்திபல வளித்துத்தாமர் வளவி னின்று

சகலவுயிர்ப் பழவினைகள் போக்கி யாண்டு

முத்தியின்பம் தருபவரே! ஆடீர் ஊஞ்சல்

முழுநிறைவே! வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


காற்றிலசை கின்றகொடி வாழ்த்துச் சொல்ல

கவரிவீசு காரிகையர் ஏவல் செய்ய

ஏற்றுமடி யார்கள்குடை ஏந்தி நிற்க

ஏந்திழையார் ஆலவட்டந் தாங்கி நிற்க

போற்றுயர்கா ராளர்வாழ் சிறுவை தெற்கில்

போதரிய தான்தோன்றி யாயு தித்தாய்

நாற்றிசையும் ஆள்பவரே! ஆடீர் ஊஞ்சல்

நமையாளும் ஆண்டவரே! ஆடீர் ஊஞ்சல்


ஐங்கரனும் கண்ணகியும் அருக மர்ந்து

ஆசிதந்து உந்தனுக்கு வாழ்த்துச் சொல்ல

பங்கமிலாக் கணங்கள் புடைசூழ வந்து

பாராள்சிவ பூதராயர் ஆசி நல்க

பொங்கல்பழம் பலகாரம் பல படைத்து

போற்றுமடி யார்களுனைச் சேவித் திருக்க

சங்கரனின் மைந்தனே! ஆடீர் ஊஞ்சல்

சிவஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


பண்கொண்டு நாதசுரந் தவில் முழங்கும்

பாவலர்தே வாரயிசை அயல் துலங்கும்

வெண்சங்க வொலியெழுந்து வானை முட்டும்

விளங்குசே மக்கலமும் சேர்ந் தொலிக்கும்

மண்கொண்டு ஏராண்ட மாந்தர் வாழ்வில்

மகிழ்ச்சிநலம் செல்வமெலாம் ஈந்த ருளும்

கண்கண்ட தெய்வமே! ஆடீர் ஊஞ்சல்

கலைஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


இருளாண்ட அந்தகனை அழித்துத் தேவர்

ஈடேறச் சிவன்தந்த வடுக னென்றும்

அருளாண்டு மாந்தரிடர் களைந் துய்க்கும்

கரிமுத்தன் சஞ்சிகனே வாதுக னென்றும்

மருணீக்கும் நிர்வாணி சட்டை நாதர்

மாகபாலி நாமங்கள் சொல்லிச் சொல்லி

உருகுமடி யார்போற்ற ஆடீர் ஊஞ்சல்

உன்மத்த வைரவரே! ஆடீர் ஊஞ்சல்

 

தண்ணொளியைத் தலையணிந்து சூல மேந்தி

தரித்தமுப் புரிநூலாய் அரவஞ் சூட்டி

எண்டிசையைக் காலத்தை நவகோள்களினை

ஏழுலகை ராசிகளைக் கட்டி யாளும்

வண்ணமதாய் பாசாங் குசமுந் தாங்கி

வலம்வந்து சுயம்புவாய் சிறுவை தெற்கு

மண்ணமர்ந்த வைரவரே! ஆடீர் ஊஞ்சல்

மறைஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


வெய்யோனும் வெண்மதியும் ஒளியைச் சிந்த

வெண்முகிலும் பன்னீரைச் சொரிந்து தூற்ற

மையோமர கதமென்ன மயில்க ளாட

மைவிழியார் மணிக்கரத்தால் மலர்கள் சாற்ற

மெய்யோர்தம் உளம்போல வண்டு ஆர்ப்ப

மேதியா நிரைசூழ்ந்து அமுத மூற்ற

அய்யாவெமை ஆண்டருள்வீர்! ஆடீர் ஊஞ்சல்

ஆபத்து தாரணரே! ஆடீர் ஊஞ்சல்


அன்பர்தமைக் காப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

அடியவர்க்கு அருள்பவரே! ஆடீர் ஊஞ்சல்

இன்பநிலை தருபவரே! ஆடீர் ஊஞ்சல்

இன்னல்களைக் களைபவரே! ஆடீர் ஊஞ்சல்

நன்மைகளைச் செய்பவரே! ஆடீர் ஊஞ்சல்

நம்மலங்கள் அறுப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

தென்சிறுவை வாழ்பவரே! ஆடீர் ஊஞ்சல்

சிவஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


வாழி

கார்மழையும் மண்ணுஞ் சிறந்து வாழி!

காராளர் மறையவர்கள் வணிகர் வாழி!

ஏருழுத பயிர்விளைந்து பொலிந்து வாழி!

ஏராளர் செல்வம்பசு நிறைந்து வாழி!

நேர்மகளிர் சந்ததிகள் செழித்து வாழி!

நேயமுடன் ஊரொன்றித் தழைத்து வாழி!

பேர்புகழத் தென்சிறுவை மக்கள் வாழி!

பேரருளால் உலகாளும் இறையே! வாழி!









No comments:

Post a Comment