Monday, August 30, 2021

தாயகம் சஞ்சிகை ஆசிரியர் க.தணிகாசலம் அவர்களுடனான நேர்காணல்

 தாயகம் சஞ்சிகை ஆசிரியர் க.தணிகாசலம் அவர்களுடனான நேர்காணல்

இயல்வாணன் - தணிகாசலம் 

                             

எழுத்தாளராக, கவிஞராக, சமூகப் போராளியாக அரை நூற்றாண்டுக்கு மேலாகச் செயற்பட்டு வரும் க.தணிகாசலம் அச்சுவேலி, பத்தமேனியில் 28-09-1946இல் பிறந்தவர். கந்தர்மடத்தில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் பயின்றவர். அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகப் பணியாற்றிய இவர் திருமணத்தின் பின் ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கில் வாழ்ந்து வருகிறார்.

சமூகப் போராளியாக ஆரம்பித்த பயணத்தில் இலக்கியத்தைக் கருவியாக்கியதாகக் குறிப்பிடும் தணிகாசலம் சிந்தாமணியில் எழுதிய சிறுகதையுடன் இலக்கிய உலகிற் காலடி எடுத்து வைத்தார். இவருடைய 'பிரம்படி', 'கதை முடியுமா?' ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், 'வெளிப்பு' கவிதைத் தொகுதியும் நூலுருப் பெற்றுள்ளன. கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ள இவர் பாரதி - லூசுன் தொடர்பான ஒப்பீட்டு ஆய்வினையும் செய்துள்ளார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளரான தணிகாசலம், பேரவை வெளியீடாக 1974இல் ஆரம்பிக்கப்பட்ட தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் செயற்பட்டதுடன், தற்போது தாயகத்தின் பிரதம ஆசிரியராகத் தொழிற்படுகிறார்.

கே : ஒரு விவசாயக் குடும்பத்தில், அதன் உப தொழிலான சுருட்டுக் கைத்தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள். தந்தையார் கொழும்பில் சுருட்டுத் தொழிலில் ஈடுபட்ட வேளை 1958 கலவரத்தால் பாதிக்கப்பட்டதால்,  குடும்ப பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீங்கள் தமிழ்த் தேசிய இயக்கங்கள் சார்ந்தே – அந்தச் சிந்தனையோட்டத்துடனேயே உருவாகியிருக்க வேண்டியவர். ஒரு இடதுசாரிப் பின்னணி எவ்வாறு ஏற்பட்டது? அக்காலத்தில் ஒரு சரடாக மேலெழும்பிய தமிழ்த் தேசிய சிந்தனையிலிருந்து எவ்வாறு மாறுபட்டீர்கள்?

ப : 1958 இனக் கலவரத்தின் பாதிப்பால் தீவிர தமிழ்த் தேசிய உணர்வு நிலைக்குத் தள்ளப்பட்ட  பெரும் எண்ணிக்கையானவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். தமிழர் சமூகத்தின் மைய நீரோட்ட சிந்தனையாக அன்றிலிருந்து இன்று வரை தொடரும் தமிழ்த் தேசிய உணர்வும், தமிழகத்தில் தி.மு.க.வினர் அன்று முன்வைத்த திராவிட நாட்டுக் கோரிக்கையும், இலங்கையின் புவிசார் அரசியற் சூழல் பற்றிய அன்றைய எனது புரிதலின்மையும் பிரிவினை இலக்கை நோக்கி என்னை உந்தித் தள்ளியது. எனது உணர்வுகள் எவ்வாறு தோன்றி மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளதென்பதை ஆரம்ப காலத்தில் அவ்வப்போது எழுதிய கவிதை வரிகளில் தருவது சமூக வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துவதாக அமையும் என்று எண்ணுகிறேன்.

அந்நியக் கொடி பறந்த

அகிலத்து நாட்டிலெல்லாம்

தம்மின மொழிகளாளத் 

தனிக்கொடி பறக்கும் போது

எந்தமிழ் அன்னை ஆள

ஓர் கொடி நாடு வேண்டும்

என்றொரு கவிஞன் பாடக்

கேட்பது எந்த நாளோ?

   இது 1961ல் நான் எழுதிய கவிதை ஒன்றின் சிலவரிகள். கலவரத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக கப்பலில் வந்தவர்கள் திரும்பிச் செல்லக் கூடாது, 1958 கலவரத்தைப் போன்ற பாதிப்பு இனிமேலும் ஏற்படாதிருக்க வேண்டும் என்ற உணர்வு நிலையில் அன்று அடைந்த இலக்காக இக்கவிதையின் பேசுபொருள் அமைகிறது.

   இலங்கை தமிழரசுக் கட்சியால் 1960ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தில் இதே உணர்வுடன் கலந்துகொண்டிருந்தாலும், அகிம்சைப் போராட்டத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. அப்போரட்டம் தோல்வி அடைந்த பின்னர்; என்னைப் போன்றவர்கள கொண்டிருந்த கொள்கைகள் வலுவானது என எண்ணியிருந்தேன். அந்த உணர்வில் 1962ல் வெளிவந்த கவிதை வரிகள் இவை.

பாரத சுதந்திரப் 

போர்முனை நோக்கி

படையணி திரண்டிட

பாட்டுக்கள் பாடி

வீர சுதந்திரம் 

வேண்டிய பாரதி

பாரினில் மீண்டும் வருவானா?

தமிழ் படையணி

திரட்டித் தருவானா?

  இக்கவிதைகளை எழுதியதோடு நின்றுவிடாமல் பின்தங்கிய கிராமச் சூழலில் இதற்கான உணர்வாளர்களைத் திரட்டும் நோக்குடன் இளைஞர் முன்னேற்றக் கழகம், பாரதி கலா மன்றம் போன்ற அமைப்புக்களை கிராமத்துப் இளைஞர்கள், பெரியவர்களுடன் இணைந்து உருவாக்கினோம். அவைகளுக்கூடாக பொதுப் பணிகளை முன்னெடுக்கும் போதுதான் எமது சமூகத்தின் யதார்த்த நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

  இன, மத பேதங்களால் நாடு மட்டும் பிரிந்து கிடக்கவில்லை. சாதி, மத, பால், வர்க்க பேதங்களால் கிராமங்களும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதை நடைமுறை வேலைகளுக்கு ஊடாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆறுமுகநாவலர், சேனாதிராச முதலியாரிடம் வந்து பாடங் கற்ற இருபாலைக் கிராமத்தில் நான் இளைஞனாக இருந்தபொழுது, பாடசாலையில் மணவர்களில் ஒருசாரார் கிணற்று நீரை அள்ளிப் பருக முடியாது. உயர் சமூக மணவர்கள் அள்ளி ஊற்ற கைமண்டையில் அள்ளிப் பருக வேண்டிய நிலை. அங்குள்ள குளங்களில் அனைவரும் இறங்கிக் குளிக்கமுடியாது. சாவீடு, சடங்கு வீடுகளில் குடிமைத் தொழில்களைக் கட்டுப்பாடுடன் ஒழுங்காகச் செய்யவேண்டும். நிலத்தின் மீதான அவர்களின் ஆதிக்கம் மக்களின் வாழ்வை பாதித்திருந்தது.

 இவைபோன்று இன்னும் பல நடைமுறைகளுடன் பாரதி கலாமன்ற சனசமூக நிலையத்திலும் அனைவரும் வாங்கில் அமர்ந்து படிக்கமுடியாது என்ற நிலை வந்தபோது அதுவரை நான் கற்ற கல்வியும், படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஏற்றுக்கொண்ட அரசியல் கொள்கைகள் யாவும் - யதார்த்தத்தை – உண்மைகளைப் பேசவில்லை,  சமூகத்தில் அதிகாரம் பெற்றவர்களின் நலன்களையே பேசியதை உணர்ந்தேன். தமிழ்த் தேசிய அரசியலின் போர்வையின் கீழ் அப்பட்டமான ஒடுக்குமுறைகள் மக்கள் மீது கோலோச்சின. இவ்வாறு ஒடுக்குதல்களுக்கு உள்ளாகும் மக்களின் குரல்கள் ஏன் மேலெழவில்லை என்ற தேடல்கள் எழுந்தன. பின்னர்தான்  அந்தோனியோ கிராம்ஸி குறிப்பிடுவது போல் மக்களின் சிந்தனைக்கு தமது அதிகார வர்க்க கருத்தியல்களால் விலங்கிட்டு, ஒடுக்கி வைத்திருக்கும் 'பண்பாட்டு மேலாண்மை'யின் கொடூரங்கள் இவை என அறிய முடிந்தது. 

'மங்கும் நம் வாழ்க்கை

தை பிறந்தால் பொங்குமென்று

பொங்கினோம் பல பொங்கல்.

புதுமை இல்லை வாழ்க்கையிலே

பொங்கடா புரட்சி பொங்க.

புத்துலகைப் படைப்போம்.'

தமிழர்தம் பண்பாட்டின் உச்சமெனப் போற்றும் தைப்பொங்கல் பண்டிகை பற்றிய எளிமையான சொற்களில் அமைந்த ஒரு மாற்று உணர்வுத் தெறிப்பு இது. வழி வழி வந்த பண்பாட்டுச் சிந்தனையிலே ஏற்பட வேண்டிய மாற்றத்தை நோக்கிய குரலாக இக்கவிதை என்னுள் எழுந்தது.

  அன்று யாழ்.பொதுசன நூலகம் அமைவதற்கு முன்னர்,  யாழப்பாணத்தில் அமைந்திருந்த அமெரிக்க நூலகத்தில் படித்த ஸ்டாலினுக்கு எதிரான புத்தகங்கள் மாக்சியத் தத்துவவம் நடைமுறை மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. 'சுயநிர்ணய உரிமை' பற்றி அவரது



புத்தகத்திலேயே முதலில் படித்தேன். மாணவனாக கார்த்திகேசன் மாஸ்ரரிடம் அவரது வீட்டுக்குச் சென்று பாடங் கற்ற போது, அவரது புலமையும், எளிமையும், மற்;ற மனிதர்கள் மீதான அக்கறையும் என்னைக் கவர்ந்திருந்தன. அப்பொழுது அவர் இணைந்திருந்த கம்யூனிஸ்ற் கட்சி, அரசுடன் இணைந்திருந்தமையால் அந்த அரசியல் எனக்குச் சரியாகப் பட்டிருக்கவில்லை. 

பின்னர் அவர் உட்பட தோழர் வீ.கந்தசாமி, தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் போன்ற அர்ப்பணிப்புள்ள பல தோழர்கள் சண்முகதாசன் தலைமையில்; பாராளுமன்ற வழிமுறையை நிராகரித்து புரட்சிகர அரசியல் வழிமுறையை முன்வைத்த போது இடதுசாரி அரசியலில் இணைந்து கொண்டேன். அதுவும் நடைமுறையில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்தமை நம்பிக்கையை அளித்தது.  இன உணர்வில் மட்டும் ஊறி இருந்த எனது சிந்தனை இன ஒடுக்கலுக்கு எதிராக மட்டுமன்றி மக்கள் எதிர்நோக்கும் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒரு முழுமையான விடுதலை நோக்கி நாம் செயற்பட வேண்டும் என்ற உணர்வுக்கு என்னை உந்தித் தள்ளியது.

புத்தக வாசிப்புக்கூடாக கிராமம், பிரதேசம், நாடு, உலகம் என்ற விரிந்த பரப்பில் வாழும் மக்கள் அனைவரும் எமது உறவினர்களாயினர். இத்தகைய ஒரு அறிவின் - அன்பின் தேடலே உழைக்கும் வர்க்கத்தின் உணர்வாகவும், உலகின் உயர்ந்த அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களின் உணர்வாகவும் கனவாகவும் இருந்தது. அனைத்து மதங்களின் உயர்ந்த விழுமியங்களின் வெளிப்பாடாகவும் இவையே அமைந்திருந்தன.

இத்தகைய உணர்வுடன் கிராமங்கள் தோறும் எமது கட்சி தனது செயற்பாடுகளை விரிவாக்கிக் கொண்டிருந்த போதுதான் பல்வேறு இயக்கங்கள் தத்தமது வழியல் நின்று ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தன. இதுபற்றிய தனது விமர்சனங்களை எமது கட்சி முன்பே தெளிவாக முன்வைத்திருந்தது. எத்தகைய போராட்டமும் முழுமையை நோக்கியதாக அமையவேண்டும்  என்ற உணர்வுடன் எழுதப்பட்ட கவிதையின் அடிகள் சில.   

மண்ணின் உரிமை மறுத்தோரை

எதிர்த்துமது

இன்னுயிரை ஈந்தோரே!

உங்கள் கல்லறையில் 

எழுத விரும்புகிறேன்.

'மானுடத்தின் விடுதலைக்கு

 நீர் மரித்தீர்' 

1993இல் தாயகத்தில் வெளியான 'உழைப்பாளியின் அஞ்சலி' என்ற கவிதை வரிகளுக்கூடாக தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை உணர்வு சமூக விடுதலையின் அடிப்படையில் இத்தேசத்தின் விடுதலையாகவும் விரிவடைய வேண்டும் என்ற அவாவையே வெளிப்படுத்துகிறது. இவையே என்னிடம் ஏற்பட்டு வந்த உணர்வு மாற்றங்களின் பரிணாமமாகும்.


கே : உங்களுடைய சமூக, அரசியற் பிரவேசமே முதலில் இடம்பெற்றது. அதன் ஒரு அங்கமாகவே உங்களது கலை, இலக்கியச் செயற்பாடுகள் ஆரம்பமாயின எனக் கருதலாமா?

ப : எனது கலை இலக்கியப் பிரவேசம் தமிழ்த் தேசிய உணர்வுடனேயே வெளிப்பட்டது. அதன் காலப் பரப்பு மக்கள் கலை இலக்கியச் செயற்பாட்டுக் காலத்துடன் ஒப்பிடுகையில் குறைவானதாகவே இருந்தமையால் தமிழ்த் தேசிய உணர்வு சார்ந்த படைப்புக்கள் மிகக் குறைவாகவே இருந்தன. தேசிய கலை இலக்கியப் பேரவை, அதன் வெளியீடான தாயகம் கலை,இலக்கிய, சமூக விஞ்ஞான இதழ் என்பன அமைப்புச் சார்ந்த செயற்பாடுகளாக - கூட்டுச் செயற்பாடுகளாக - அமைந்தமையால் மக்கள் கலை இலக்கியப் பரப்பில் ஒப்பீட்டளவில் அதிகம் ஈடுபட முடிந்தது.


கே : பொதுவாக சிறுகதைகளாலும், கவிதைகளாலுமே அதிகம் அறியப்பட்டவர் நீங்கள். சாராம்சத்தில் உங்கள் கதைகள் சாமானிய மக்களின் பாடுகளைப் பேசுவனவாகவே பெரும்பாலும் உள்ளன. கவிதைகள் எதிர்க் குரல் எழுப்புவனவாக உள்ளன. படைப்புக்களுக்கு ஏதாவது தெரிவுகளை – நோக்கங்களைக் கொண்டிருக்கிறீர்களா?

ப : உள்ளத்திற் படுவதை எல்லாம் எழுதுவது என்பதற்குப் பதிலாக, ஓர் இலக்கை நோக்கிய எழுத்துக்களாக அமைவதால் அதற்கான ஊடகத் தெரிவும் முக்கியமாகிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எனப் பல்வேறு வடிவங்களிலும் மக்களிடம் இலகுவாகச் சென்றடைவது எது என்பதில் இருந்தே எனது தேர்வு அமைந்தது. ஆரம்பத்தில் நாடகங்களையே எனது தேர்வாகக் கொண்டிருந்தேன். ஏனெனில் அன்றுங் கூட வாசிப்பு என்பது மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு சிறு பிரிவினருக்கு உரியதாகவே அமைந்தது. நாடகங்கள் உழைப்பாளிகள் உட்பட அனைவருக்கும் உரியதாகவே இன்றும் இருக்கிறது. ஆரம்பத்தில் நாடகங்கள் மூலம் கலை உணர்வைத் தொற்ற வைக்கவும், கருத்துப் பரிமாறலைச் செய்யவும் முயன்றோம். அது கூட்டுக் கலைச் செயற்பாடு, கூட்டு நுகர்வு என்ற வகையில் பயனுள்ளதாகவே இருந்தது. ஆனால் இன்றுள்ளது போல எளிமைப் படுத்தப்பட்ட, பெரும் பணச் செலவற்ற அரங்க வடிவங்கள் அன்று இல்லை. எனவே, அந்த அரங்க முறையைத் தொடர முடியவில்லை. 

 அதன் பின்னர் சிறுகதை, கவிதை வடிவங்களைத் தேர்ந்து கொண்டேன். அவையும் எளிமையாக மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கவிதை உணர்வோடு கலந்து வருவதால் எதிர்ப்புக் குரலாக அமையும் வாய்ப்புக்கள் அதிகம். சிறுகதைகளும் பாத்திர உணர்வுகளுக்கூடாக ஆரவாரமின்றி அதனையே வெளிப்படுத்துகின்றன.

கே : நீங்கள் நீண்ட காலமாகவே தாயகம் சஞ்சிகையின் ஆசிரியராக இருக்கிறீர்கள். இதனை தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிடுகிறது. ஒரு அரசியல் இயக்கத்தின் இலக்கியப் பிரதியாக இதனைக் கொள்ளலாமா?

ப : மக்கள் விடுதலையை இலக்காகக் கொண்ட ஒரு அரசியற் கட்சி, அந்த இலக்கை நோக்கிய செயற்பாட்டில் பல்வேறு வெகுஜன அமைப்புக்களை உருவாக்குகிறது. கட்சிக்குரிய யாப்பின் படி கட்சி உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள். வெகுஜன இயக்கங்களின் யாப்பின் படி வெகுஜன இயக்கங்கள் செயற்படுகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவையும் அவற்றில் ஒன்று. அதற்குரிய யாப்பை அதன் உறுப்பினர்களே உருவாக்கி, செயற்படுகிறார்கள். தாயகம் சஞ்சிகை அதன் வெளியீடாக வருகிறது. அதன் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் பட்டியலில் இருந்து இதனைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், கலை இலக்கியப் பேரவை ஒரு அரசியல் சார்ந்த இலக்கிய அமைப்பு என்பது இதன் உறுப்பினர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. இதன் அரசியல் என்பது இலங்கையில் தொடரும் எழுபது ஆண்டுகால இன மைய அரசியல் அல்ல. விடுதலைக்கான சமூக விஞ்ஞான அடிப்படையில் அமைந்த, ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, இன, மத, சாதி, பால், வர்க்க ஒடுக்குதல் இல்லாத ஒரு தாயகத்தை உருவாக்கும் இலக்குடன் செயற்பட்டு வரும் ஒரு அமைப்பு. இத்தகைய அரசியற் சார்பு இருப்பதால் பரப்புரைகளையோ, கோசங்களையோ இலக்கியமாகக் கொள்வதும், அழகியற் பெறுமானம் இல்லாதவற்றை இலக்கியமாக அங்கீகரிப்பதும் கலை இலக்கியப் பேரவையின் கொள்கை அல்ல. அத்துடன் மேற்குறிப்பிட்ட வெளிப்படையான கூற்றுக்கள் முற்றிலும் அரசியல் சாராத இலக்கியங்கள் உண்டு என்பதை அங்கீகரிப்பதாகவும் அமைந்து விடாது.

ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் என மக்கள் சமூகம் மட்டுமல்ல, நாடுகளே பிரிந்திருக்கும் சமூக, பொருளாதார, அரசியற் சூழலில் நடுநிலை இலக்கியம், பொழுதுபோக்கு இலக்கியம் என்பதெல்லாம் மக்களின் உணர்வுகளை மழுங்கடித்து, திசை திருப்பி, ஒதுங்கி நிற்க வழி வகுத்து ஒடுக்குதல்களைத் தொடர்பவர்களுக்கு உதவுவதாகவே அமைகின்றன. அதுவும் சுரண்டற் பொருளாதார அமைப்பும், போட்டிச் சந்தையும், நுகர்வுப் பண்பாடும் இன்று உலக மயமாகி உள்ளன. இது உலக மக்களின் வாழ்க்கை முறையிலும், சிந்தனை முறையிலும் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. எமது அடுத்த சந்ததிகள் வாழ்வதற்கான நாம் வாழும் புவியின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ள மிக நெருக்கடியான காலச் சூழலில் நாம் வாழ்கிறோம்.

இத்தகைய பாதிப்புக்களுக்கு எதிரான குரல்கள் மேலெழாதபடி வல்லமை வாய்ந்த ஏகாதிபத்திய அரசுகள் நவீன இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடி தமது நலன்களுக்குச் சார்பான செய்திகளை, அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அத்துடன் பலமிக்க கோப்ரேட் நிறுவனங்களுக்கூடாகவும், நுகர்வுச் செலுத்திகளான விளம்பரங்களுக்கூடாகவும் மட்டுமல்ல, காட்சி ஊடகங்களில் வரும் 'அரசியல் நீக்கம்' செய்யப்பட்ட பொழுதுபோக்குக் கலை வடிவங்கள் வரை பெரும் பணச் செலவுடன் திட்டமிட்டு உலகெங்கும் பரப்பி வருகின்றன.

நஞ்சாக இருந்தாலும் எதை உண்பது? எதை உடுப்பது? எத்தகைய சூழலில், எவற்றைச் சிந்தித்து எப்படி வாழ்வது? என்பதை அத்தகைய நிறுவனங்களே தீர்மானிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளன. ருஷ்ய இலக்கியமான ஜோர்ஜ் ஓவலின் 'விலங்குப் பண்ணை' எத்தகைய சூழலில், எத்தகைய பார்வையில் எழுதப்பட்டதோ, அதையும் விட மேலாக உலகையே விலங்குப் பண்ணையாக்கி, நுகர்வை மட்டும் இலக்காகக் கொள்ளும் விலங்குகளாக மனிதர்களை ஆக்கும் ஒரு சூழலில், விடுதலை அரசியலை 'தாயகம்' மக்கள் இலக்கியத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கிறது. அது ஏற்புடையதென்றே நாம் கருதுகிறோம்.

கே : தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிய பணிகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

ப : தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிய பணிகள் பற்றி அதன் செயற்பாடுகளில் இணைந்து பங்களித்த, பங்குபற்றிய மக்களே நினைவுகூர வேண்டும். 45 ஆண்டுகளாக யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் என இயங்கி வந்து இன்று வவுனியாவிலும்  கால் பதித்து நிற்கிறது. 'தாயகம்' சஞ்சிகையுடன் ஆண்டு மலராக 'புது வசந்தம்' இதழ்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல படைப்பாளிகளின் 117 நூல்களை வெளியிட்டுள்ளது. போர்க் காலத்திலும் அதன் பணி தொடர்ந்தது. அதிலும் இந்தியப் படைகள் இந்த மண்ணில் இருந்த போதே அவர்களை விமர்சிக்கும் கவிதை, சிறுகதை நூல்கள் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டு தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டன. போர்க் காலங்களில் மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள், இலக்கிய அமைப்புக்களுடன் இணைந்து, அவைகள் முன்னெடுத்த நடவடிக்கைகளிலும் கலந்து கொண்டுள்ளது. பயிலரங்குகள், புத்தக வெளியீடுகள், இசைநாடா வெளியீடு, கருத்தரங்கத் தொடர்கள் எனப் பல நிகழ்வுகளைச் செய்துள்ளது. தமிழ் எழுத்தாளர் ஒன்றிய உருவாக்கத்திலும், அதன் செயற்பாடுகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளது. 

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து கொழும்புக்கு வந்திருந்த தமிழக எழுத்தாளரும், முக்கியமான இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்த சுபமங்களாவின் ஆசிரியரும், முற்போக்குச் சிந்தனையாளருமான கோமல் சுவாமிநாதனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து, நிலமைகளைப் பார்வையிட வைத்ததில் பேரவை பங்களித்தது. எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், மக்களைச் சந்திக்க வைக்கவும், சுபமங்களாவில் அவர் இலங்கை அனுபவங்களைத் தொடராக எழுதவும் அது வாய்ப்பாக அமைந்தது. அத்துடன் தேசிய கலை இலக்கியப் பேரவையும் தமிழக சுபமங்களா சஞ்சிகையும் இணைந்து உலகளாவிய ஈழத்து எழுத்தாளர்களுக்குக் களந் தரும் ஈழக் குறுநாவல் போட்டியை நடத்தியது. இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்து எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் எழுதினர். அவர்களில் இருந்து 10 குறுநாவல்கள் பரிசுக்குரியவையாகத் தெரிவு செய்யப்பட்டன. இவ்வாறு பல்வேறு செயற்பாடுகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

கே : இலக்கியத்தைக் கோட்பாடுகளுக்குள் வரையறுப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ப : இலக்கியத்தை இலக்கியமாகப் பார்ப்பதை விட்டு கோட்பாட்டுக்குள் வைத்துப் பார்க்கிறார்கள் என்பது மக்கள் இலக்கியம் படைப்போருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக எழுகிறது. கோட்பாடு, தத்துவம் என்ற சொற்களை வைத்து அவர்கள் வாசகர்களை மிரட்டுகிறார்களே அன்றி அவைகள் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம்.

 ஒவ்வொரு மனிதரும், பிறப்புக்கும், வாழ்வுக்கும், இறப்புக்குமான காரணத்தைத் தாம் வாழும் சமூகத்தின் மத, பண்பாட்டுக் கருத்தியல்களுக்கூடாகவே புரிந்து கொள்கின்றனர். வாழ்வின் துன்பங்கள் எல்லை மீறி வரும் போது 'கடவுள்தான் காப்பாத்த வேணும்' 'தலைவிதியை மாத்த ஏலாது' 'கடவுள் விதிச்ச விதி' 'அவனவனுக்கு அளந்ததுதான் கிடைக்கும்' என்ற வார்த்தைகள் மக்களிடம் இருந்து இயல்பாகவே வெளிவரும் வார்த்தைகளாக உள்ளன. இவை மக்களின் மனங்களில் இயல்பாகப் பதிந்த மதத் தத்துவங்கள், கோட்பாடுகளின் எளிமையான வடிவங்களாகவே வெளிப்படுகின்றன. அத்துடன் உழைப்பும், சுரண்டலும், ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும் நிறைந்த சமூகத்தைப் பல நூற்றாண்டு காலம் தொடர்வதற்கான கருத்தியல் தளத்தை அவ்வார்த்தைகளின் பின்னால் உள்ள கோட்பாட்டுப் புரிதல்களும், உணர்வு நிலையும் அவர்களுக்கு ஏற்படுத்துகின்றன.

இது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தமது நலன்களைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கு மிகவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய கோட்பாடுகளின், தத்துவங்களின் பலத்தில்தான் எமது நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேல் பேரினவாதம் எழுந்து நிற்கிறது. இதே பலத்தின் மீதுதான் ஏகாதிபத்தியங்கள் யாவும் தமது கோட்பாடுகளையும் இணைத்து நிமிர்ந்து நிற்கின்றன.

ஆனால் இத்தகைய தத்துவங்கள், கோட்பாடுகளின் அடிப்படையாக எழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள் கோட்பாடு சாராத இலக்கியங்களாக விமர்சகர்கள் பலரால் பார்க்கப்படுகின்றன. அவர்கள் இதன்மூலம் யாருக்குச் சேவை செய்கின்றனர் என்பது வெளிப்படையானது.

இது கடவுளால் விதிக்கப்பட்ட மாற்ற முடியாத விதியல்ல. இது பொருளாதாரப் போட்டியால் மனிதர்களால் மனிதர்கள் மீது விதிக்கப்பட்ட மாற்றியமைக்கக்கூடிய விதி என்பதுதான் மார்க்சிசம். இது காலம் காலமாகப் பல்வேறு ஒடுக்குதல்களுக்கு உள்ளாகிவரும்  மக்களின் விடுதலைக்கான சமூக விஞ்ஞான அறிவியற் தத்துவம். எனவேதான், இக்கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கியத்தை மட்டுமல்ல அரசியல், சமூக, பொருளாதார, கலை, பண்பாடுகள் யாவற்றையும் அறிவியல் பூர்வமாகப் பார்ப்பதையும், விமர்சிப்பதையும் இவர்கள் விரும்புவதில்லை.    குறிப்பாக அதிகார வர்க்கங்களுக்குச் சார்பான கோட்பாடுகளின் அடிப்படையாக எழும் இலக்கியங்களை கண்டுகொள்ளாது  ஏற்கும் இவர்கள் மக்களின் விடுதலைக்குச் சார்பான இலக்கியங்களில் மட்டும் கோட்பாடுகளின் அடிப்படையை ஏற்பதில்லை.

கே : 'கலை கலைக்காக' 'கலை மக்களுக்காக' என்ற கருத்துப் பள்ளிகள் இலக்கியத்தில் ஒரு காலத்தில் இருந்தன. இதில் நீங்கள் எதனை வலியுறுத்துவீர்கள்?

ப : கலை கலைக்காக என்பது அதே வடிவத்தில் இல்லாவிட்டாலும் வௌ;வேறு வடிவங்களில் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் தேவையையும், பயன்பாட்டையும் நோக்கியே எதையும் செய்கிறான். மனிதனால் படைக்கப்படும் அனைத்தும் முழுமையாக அனைவருக்கும் பயன்படாவிட்டாலும், அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரின் நுகர்வுக்காகவாவது பயன்படுகிறது. இப்பயன்பாட்டின் - நுகர்வின் - வளர்ச்சி வேகத்தால் குடிக்கும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும் மட்டுமல்ல, இயற்கை அழகு நிறைந்த இடங்கள் கூட உல்லாசப் பயணிகளின் நுகர்வு மையங்களாகி இயற்கையின் அழகுத் தோற்றங்களே பணத்துக்காக என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இவை மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்கள் மத்தியில் வாழும் ஒரு கலைஞன் கலை கலைக்காக என ஒதுங்கி வாழ முடியுமா? அதீத தனிமனித நிலைப்பாட்டில் நின்று ஆன்ம திருப்திக்காகத்தான் கலை என்று சொன்னாலும் அதுவும் பயன் நோக்கியதாகவே அமைகிறது. அழகியல், கலை என்று மக்களிடம் இருந்து வெகுதூரம் செல்பவர்கள் மக்களின் விடுதலைக்காக அழகியல் தரம் மிக்க படைப்புக்களைப் படைத்தளிப்பதில்லை.

எனவே, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் இருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ளவும், இழந்து போன காற்றையும், நீரையும், இயற்கையையும் தமக்கு உறவாக்கிக் கொள்ளவும் விழிப்பையும், நம்பிக்கையையும், உறுதியையும் அளிப்பதற்கு மக்கள் கலை இலக்கியம் வளமாக்கப்பட வேண்டும்.

கே : கலை மக்களுக்காக என்ற நிலைப்பாடே உங்களுடையது என்பதை அழுத்திக் கூறியிருக்கிறீர்கள். அதை வலியுறுத்த நீங்கள் முன்வைக்கும் நியாயப்பாடு என்ன?

ப : மனித வரலாற்றில் பெரும் எண்ணிக்கையான உழைக்கும் மக்கள் அதிகார வர்க்கங்களுக்குச் சார்பான பொருளுற்பத்தி முறைமை, ஏற்றத்தாழ்வு, வறுமை என்பவற்றால் கல்வியறிவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வியும், கலைப் பயிற்சியும் கூட அதிகார வர்க்கத்தினருக்கு உரியதாகவே இருந்து வந்தது. ஏகலைவனின் வரலாற்றுப் பாத்திரமும், 'வேத மந்திரங்கள் சூத்திரர்களின் காதுகளுக்கு எட்டக்கூடாது' என்ற மனுதர்ம சாத்திரத்தின் விதியும், 'வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே' என்ற தொல்காப்பியர் வரிகளும் இதனையே வெளிப்படுத்தி நிற்கின்றன.

மதங்களின் ஆதிக்கங்களையும், முடிமன்னர் ஆட்சியையும் எதிர்த்தெழுந்த மத்திய கால அறிவியல் மறுமலர்ச்சியும், 'மக்களால், மக்களுக்கான', ஜனநாயக ஆட்சியை முன்வைத்த பிரெஞ்சுப் புரட்சியும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களும் கூட அடித்தள மக்களிடம் சென்று சேரவில்லை. பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த முதலாளி வர்க்கத்தினருக்கு உரியவையாகவே அவை இருந்தன.

உழைக்கும் மக்களின் அடிமைத்தனமும், வறுமையும், கொடுமையும் நிறைந்த வாழ்க்கையை பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்ந்தறிந்து கார்ள் மார்க்ஸ் என்ற அறிஞர் தந்த மனித குல விடுதலைக்கான அறிவியல் தத்துவமாக மார்க்சிசம் அமைந்தது. 1917இல் லெனின் தலைமையில் ருஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சிதான் பாரதி போற்றிய யுகப் புரட்சியாக அடித்தள மக்களின் விலங்குகளை உடைத்தெறிந்தது. மக்களுக்கான கலை, இலக்கியமும் அதற்குத் துணை புரிந்தது. அப்பேரெழுச்சிதான் உலகெங்கும் உழைக்கும் மக்களுக்கும், பெண் விடுதலைக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைக்கும் உரம் சேர்த்தது. மக்கள் கலை, இலக்கியத்தின் மாண்பைப் பறை சாற்றியது. சீன எழுத்தாளர் லூசுன் தனது 'வியர்வை இலக்கியம்' என்ற கட்டுரையில் 'இதுவரை உயர் வர்க்க சீமாட்டிகளின் வியர்வை இலக்கியமாகியது. ருஷ்யப் புரட்சியுடன் உழைப்பாளிகளின் வியர்வை இலக்கியமாகிறது' என்றார்.

இன்று எமது மண்ணில் தொடரும் ஒடுக்குதல்களிலிருந்து மக்கள் விடுதலை பெறவும், விழிப்புணர்வையும், மனவுறுதியையும் பெறவும் மக்கள் இலக்கியம் தேவையானது.

கே : மக்கள் இலக்கியம், மக்களுக்கான இலக்கியம் என்பதற்கப்பால் இவற்றின் கலைப் பெறுமானம், அழகியல் அம்சங்கள் முக்கியமல்லவா? மக்கள் இலக்கியம் என்பதற்குள்ளால் கருத்துக்கள் மட்டும் சென்றடைவது போதுமானதா?

ப : மக்கள் கலை இலக்கியம் என்பது கருத்துக்களை மட்டும் மக்களிடம் கொண்டு செல்பவை. அவற்றில் அழகியல் பெறுமானம் இல்லை என்ற அர்த்தத்தில் உங்களது கேள்வி எழுகிறது. ஈழத்து இலக்கியத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் தவறான கருத்துக்களில் இதுவும் ஒன்று. மக்கள் இலக்கியத்துக்குரிய அழகியல் பெறுமானமும், சமூகப் பெறுமானமும் உள்ள படைப்புக்கள் பலவற்றை நாம் இங்கு அடையளம் காணமுடியும். 

     இலக்கியம் என்பது கலைப்பெறுமானமும், அழகியல் பெறுமானமும், உள்ளடக்கப் பெறுமானமும் உள்ளவையாக  இருத்தல் வேண்டும் என்பதில்  எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியது. ஆனால் இவை யாவும் வரலாற்று வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, அது உருவாகும் கால, வெளிகளுக்கேற்ப மாறுதல்களையும், வளர்ச்சியையும் கொண்டிருக்கும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

   ஒரு காலத்தில் முடி மன்னர்கள், நிலப் பிரபுக்களின் அழகியல் இரசனைக்காக கலை இலக்கியங்கள் படைக்கப்பட்டன. மத்திய கால மறுமலர்ச்சிக் காலத்துடன் முதலாளித்துவ வர்க்கத்தினரின் இரசனைக்கும், அதிகாரத் தேவைகளுக்குமானதாக அவை அமைந்தன. ருஸ்யப் புரட்சியுடன் தொழிலளர், விவசாயிகள் உட்பட சாதாரண உழைப்பாளி மக்களுக்கான அழகியல் இரசனைக்கு  உரியவையாக மாற்றமடைந்தன. இம் மாறுதல்களுக்கு ஏற்ப அழகியல் இரசனையிலும், உள்ளடக்கங்களிலும் வேறுபாடுகள் உண்டு என்பதை மனதிற் கொள்ளவேண்டும்.         

  மக்கள் இலக்கியம் என்பது சமூகத்தில் பல்வேறு வகைகளிலும் ஒடுக்கப்படும் மக்களுக்கானது. எனவே மக்களின் இரசனைக்கும், மகிழ்வுக்குமானது மட்டுமல்ல, மக்களின் விடுதலைக்கு பங்களிப்பதுமாகும். அதனால் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் சமூக விழிப்புணர்வு பெறுவதவற்கு உதவும் கலை இலக்கியச் சாதனமாக அது உள்ளது. அழகியல் தரத்தை மட்டும் உயர்திச் செல்வதால் இலக்கியம் மக்களிடம் இருந்து பிரிந்து மத்தியதர வர்க்கக உணர்வுடைய சிலரது இரசனைக்கானதாகவே அமையும். வெகுஜன மார்க்கத்தை முன்னெடுத்த மாஓவின் அனுபவ வெளிப்பாடான 'மக்களின் அழகியல் இரசனைத் தளத்தில் இருந்து படிப்படியாக அழகியல் தரத்தை உயர்த்திச் செல்வது'   என்பதையே மக்கள் இலக்கியம் தனது வழிமுறையாகக் கொண்டுள்ளது.

கே : ஈழத்தின் சமகால இலக்கியம் குறித்த உங்களின் மதிப்பீடென்ன?

ப : ஈழத்தின் சமகால இலக்கியங்களில் போர்க்கால இலக்கியங்கள் முதன்மை பெறுகின்றன. அவை போர்க்களத்தின் பதிவுகளாகவும், போர்க்கால நிகழ்வுகளின் நினைவுப் பதிவுகளாகவும் அமைகின்றன. இதுவரை வெளிவந்த நூல்களை முற்றாகக் கற்காமல் மதிப்பீட்டைச் செய்ய முடியாது. தேசிய கலை இலக்கியப் பேரவை இத்தகைய மதிப்பீட்டைச் செய்வதன் அவசியத்தை உணர்ந்துள்ளது. போர்க்காலத்தில் உருவான படைப்பாளிகள் முதல் புதிய இளம் தலைமுறையினரும் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகியும் அதன் தாக்கங்களில் இருந்து மக்கள் முற்றாக விடுபடவில்லை. போருக்குக் காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிட்டவில்லை. மக்களது வாழ்வியல் பிரச்சனைகளும் கூர்மை அடைந்து வருகின்றன. எனவே பல்வேறு கோணங்களில் நின்று செயற்படும் எழுத்தாளர்களிடையே ஆரோக்கிமான விமர்சனங்களும், உரையாடல்களும் நிகழ வேண்டும்.


கே : இலக்கியத்தில் ஒரு கூறாக தலித் இலக்கியம் இன்று முதன்மைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பல சாதியப் போராட்டங்கள் நடந்த போதும் தலித் இலக்கியம் இங்கேயே தளிர் விட்டது என்றும், கே.டானியல் இதன் பிதாமகன் என்றும் தமிழகத்தில் அ.மார்க்ஸ் முதலானோர் குறிப்பிடுகின்றனர். முன்னர் இழிசனர் இலக்கியம் என்று கூறப்பட்டதை தலித் இலக்கியம் என்று கூறலாமா? இங்கு தலித் இலக்கியம் முதன்மை பெற்றது எவ்வாறு?


ப : இழிசனர் இலக்கியம் என்று ஈழத்தில் அறுபதுகளில் குறிப்பிடப்பட்ட சொற்பதத்தை தமிழகத்தில் பின்னர் பிரபலமடைந்த தலித் இலக்கியம் என்பதுடன் ஒப்பிட முடியாது. இழிசனர் என்பது யாழ்ப்பாணக் கலாசாரத்தில் மக்களில் ஒரு சாராரை ஒதுக்கி வைத்து இடப்பட்ட வழக்குச் சொல். ஈழத்தில் அறுபதுகளிலே முனைப்படைந்த சாதாரண பேச்சுவழக்கு, வட்டார வழக்குகளைச் சிறுகதை, நாவல்களில் எழுதும் மண்வாசனை எழுத்துக்களைப் புறக்கணித்த மரபுவாதப் பண்டிதர்கள் 'இழிசனர் வழக்கு' என இதனை ஏளனமாகக் குறிப்பிட்டனர். 

இதனையும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஏனைய இந்திய மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்கும் தலித் என்ற சொல்லடியாக எழுந்த தலித் இலக்கியத்தையும் ஒன்றாகச் சேர்க்க முடியாது. 'இழிசனர் வழக்கு' என்ற சொற்றொடரை    அன்று பிரயோகித்தவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தை  நடந்தினர். அது முட்டை எறிந்து குழப்பப்பட்டது. இதனை தொண்ணூறுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி தவறென்று ஒப்புக் கொண்டதும், எழுத்தாளர் சொக்கன் வானொலி உரையொன்றில் சரி என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் - தமிழ்நாட்டில் - தலித் இலக்கியம் பிரபலமடையும் முன்பே, ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்தன. அத்துடன் 1966ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமையில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. வடபகுதியில் தேநீர்க் கடைகளில் மூக்குப் பேணிகளுக்குப் பதிலாக கறள் பிடித்த தகரப் பேணிகளிலும், போத்தல்களிலும் தேநீர் கொடுக்கப்பட்டது. நந்தனார் போன்று கோவில்களுக்கு வெளியே நின்று வழிபடும் முறையே இருந்தது. இது போன்று பல்வேறு ஒடுக்குதல்கள் சாதியின் பெயரால் இருந்தது. இன்றைய இளஞ் சந்ததியினருக்கு  இவை கற்பனையாகவும் படலாம். ஆனால்  வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் சென்ற ஆண்டு வடக்கையிற்றில் கை பிடித்தால் தீட்டு என்று ஜே.சி.பி. எந்திரத்தால் தேரை இழுத்ததையும், திருவுருவைத் தோளில் சுமந்தால் சாமிக்குத் தீட்டு என்று கூறி இவ்வாண்டு திருவிழாவையே நிறுத்தியதையும் நினைவு படுத்தலாம்.

இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் மார்க்சிசக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே வழிநடத்தப்பட்டது. டானியல் தனது நாவல்களின் முன்னுரைகளில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தலித் மக்களின் போராட்டம் போல அடையாளங்களை மட்டும் வலியுறுத்தி இப்போராட்டம் இங்கு நடைபெறவில்லை. அரசால் பாதுகாக்கப்படும் இச்சமூக பொருளாதார அமைப்பின் கீழ் நிலவும் தீண்டாமை உட்பட இனத்துவ, சமூக, பால், வர்க்க ஒடுக்குமுறைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள் யாவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டமாக  அது அமைந்தது. பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான மக்களே இப்போராட்டத்தில் முன்னின்றனர்.

1920களில் செயற்பட்ட இளைஞர் காங்கிரஸ் முதல் அப்போராட்டத்தை வர்க்க உறுதியுடன் முன்னெடுத்த இடதுசாரிகள் வரை நீண்ட காலச் செயற்பாடுகளில் உருவான விரிந்த வெகுஜனத் தளம் அப்போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது.

இத்தகைய ஒரு கோட்பாட்டுத் தளத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போராட்ட கால இலக்கியப் பதிவாக பல கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்கள் வெளிவந்தன. அவைகளும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மக்கள் எழுத்தாளர்கள் யாவரும் விமர்சனம், சுயவிமர்சனம், மாற்றம் என்ற ஆக்கபூர்வமான நடைமுறையில் நம்பிக்கை உடையவர்கள். அவர்களது படைப்புக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. இதன் நோக்கம் மக்களின் விடுதலைக்குப் பலமான ஆயுதங்களாக அவை ஆக்கப்பட வேண்டும் என்பதே.

 தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் டானியல் ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி ஒரு முன்னணிப் போராளியாகவும் இருந்தார். அவரது படைப்புக்கள் அப்போராட்டத்தின் பதிவுகளாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாற்று ரீதியாக எதிர்கொண்ட இடர்களையும், அதற்கு எதிரான செயற்பாடுகளையும் இலக்கிய நயத்துடன் பதிவு செய்பவையாக அமைந்துள்ளன. அந்த வகையில் அவரது எழுத்துக்கள் பெறுமதி மிக்கவை. பயனுள்ளவை.

போராட்டத்தை மையப்படுத்தி அவர் எழுதிய நாவல்கள் போராட்டத்தின் யதார்த்தத்தையும், அதன் போக்கையும், இலக்கையும் மீறிய சில நிகழ்வுப் பதிவுகளுக்கு இடமளித்துள்ளன. பொதுவான ஒரு நாவலின் போக்குக்கு அவை பொருந்தி வந்தாலும் மக்கள் விடுதலை நோக்கிய வெகுஜன மார்க்கத்தை அவை பிரதிபலிப்பதாக அமையவில்லை. இவற்றை வைத்து தலித் இலக்கியமாக டானியலின் படைப்புக்களை நாம் கருதவில்லை. டானியலே ஏற்றுக் கொண்ட மக்கள் கலை இலக்கியத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியின் தேவை கருதியே நாவல் பற்றிய இத்தகைய விமர்சனங்கள் எம்மிடம் உள்ளன.

பின்நவீனத்துவக் கருத்துக்களைக் கொண்டுள்ள தலித்திய இலக்கியப் போக்குக்குப் பொருந்தாத இலக்கியப் போக்குகளும் அணுகுமுறைகளும் டானியலின் படைப்புக்களில் உண்டு. எவ்வாறாயினும் தமிழகச் சூழலில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் தலித் மக்களின் விடுதலைக்கு டானியலின் படைப்புக்கள் பயன்படுவது ஈழத்து இலக்கியத்துக்கு சிறப்பளிப்பதாகும். 


நேர்காணலும் படங்களும் : இயல்வாணன்
நன்றி :கலைமுகம் சஞ்சிகை


No comments:

Post a Comment