Tuesday, August 31, 2021

நூல் அறிமுகம்

 

வேதநாயகம் தபேந்திரன் எழுதிய யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 1




கடந்த கால வாழ்வின் கணங்களை மீள மீள நினைவு கொண்டு கழிவிரக்கம் கொள்வது மனித இயல்பு. கடந்த காலத்து இயற்கையான, அமைதியான, ஆனந்தமான வாழ்வும், அந்த வாழ்வில் பயன்படுத்திய பொருள்களும் இன்றுள்ள பலருக்கும் அதிசயமான விடயங்களாகும். அந்த வாழ்வை நீள நினைக்க வைக்கும் கட்டுரைகள் பலவற்றைக் கொண்ட தொகுப்பே யாழ்ப்பாண நினைவுகள் நூலாகும். இதன் ஆசிரியர் வேதநாயகம் தபேந்திரன் தேடிச் சேகரித்து அடுத்தவருக்கு இனிய தகவல்களாக வழங்குதலால் தேனீ போன்றவர். பல பொதுஅறிவு நூல்களையும், போட்டிப் பரீட்சைக்கான கையேடுகளையும் ஆக்கியுள்ள அவர் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்ற பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகளிலும் வளவாளராகக் கலந்து கொண்ட பட்டறிவுடையவர்.

அவ்வகையில் பன்முக ஆளுமை கொண்ட தபேந்திரன் யாழ்ப்பாணத்து வாழ்வியல் அம்சங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற வெறியுடன் தொடர்ந்து தேடிச் சேகரித்து கருமமே கண்ணாயிருந்து வாராவாரம் ஞாயிறு தினக்குரலில் ஆவணப்படுத்திய விடயங்களின் முதற்பாகமே இந்நூலாகும்.

194 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 30 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளை இரண்டு அடிப்படைகளில் நோக்க முடியும். முதலாவது யாழ்ப்பாண வாழ்வியலின் கடந்த காலத்து தரிசனங்களும், அவற்றின் மாற்றங்களும். மற்றது போர்க்கால வாழ்வியல்.

யாழ்ப்பாண வாழ்வியலின் பொதுத் தரிசனங்களாகப் பார்க்குமிடத்து 70களும் அதற்கு முற்பட்ட காலமும் எமது வாழ்வு எப்படி இருந்தது? அது பின்னர் எவ்வாறு மாற்றமுற்றது என்பதை எடுத்துக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. துலா மிதித்தல் காலம், சவாரிப் போட்டிக் காலங்கள், கிராமிய வறுமை தணித்த அற்ஹோம் முறை, யாழ்ப்பாணத்தில் சம்போ இல்லாத காலம், வெற்றிலையும் எம்மவரும், அருகி வரும் சிறுவர் விளையாட்டுக்கள் முதலிய பல கட்டுரைகள் பழைய வாழ்வைச் சொல்லும் கட்டுரைகளாகும்.

வானொலியும் யாழ்ப்பாணத்தவரும் என்ற கட்டுரை வானொலி பல்வேறு காலங்களில் யாழ்ப்பாண வாழ்வியலில் வகித்த பங்கை விளக்கும் கட்டுரையாகும். இவரது கட்டுரைகள் தனியே பிரதேசத் தகவல்களை மட்டும் தருவதாக அல்லாமல் வெளிப் பிரதேசத் தகவல்களையும் பொருத்தப்பாடு கருதி இணைப்பதாக இருப்பது சிறப்பானதாகும். அவ்வகையில் சமூக எழுச்சியில் பணவரவு வைபவம் என்ற கட்டுரையில் பங்களாதேஸ் நாட்டைச் சேர்ந்தநோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் கிராம மக்களின் வறுமை தணிக்கும் வகையில் கிராமிய வங்கியை அமைத்த முறையை விளக்கி ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தின் போர்க்கால வாழ்வியல் என்பது பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டு அவற்றுக்கு மாற்றுத் தீர்வைக் கண்டு வெற்றி கொண்ட வாழ்க்கை முறையாகும். தேவையே கண்டுபிடிப்புக்களின் தாய் என்பார்கள்.அவ்வகையில் பொருளாதாரத் தடைக்கு மத்தியில், போர் நெருக்குவாரங்கள் மத்தியில் யாழ்ப்பாண மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கும் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

போர்க்கால அச்சுத் தொழில், கிளாலிப் படகும் தென்பகுதிப் பயணங்களும், கப்பல்களும் பயணங்களும், போர்க்காலம் கற்றுத் தந்த சொற்கள், கொம்படி ஊரியான் பாதையும் பயணங்களும், விமானங்களும் எமது பயணங்களும் முதலிய கட்டுரைகள் பல விடயங்களையும் சொல்கின்றன. அனுபவித்தவர்களுக்கு மீள நினைந்து கழிவிரக்கம் கொள்ள வைக்கும் இக்கட்டுரைகள் அனுபவித்திராதவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவனவாகவும் உள்ளன.

சமூகத்தைச் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்த இக்கட்டுரைகள் இழந்து போன வாழ்வின் சிறப்பையும் சொல்ல முற்படுகின்றன. கூட்டுறவுச் சமூகமாக எழுச்சி பெற்ற யாழ்ப்பாண சமூகம் இன்று தனியார் வியாபாரங்களுக்கு முதன்மை தரும் சமூகமாக மாறி விட்ட நிலைமையும், அதற்குக் காரணமான கூட்டுறவாளர்களின் பொறுப்பற்ற தன்மையும் கூட இக்கட்டுரைகளின் அடிச்சரடாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.

நூலுக்கு அழகு சேர்க்கும் வகையிலும், நூற் தலைப்புக்குப் பொருத்தமான வகையிலும் அட்டைப்படம் அமைந்துள்ளமை சிறப்பானதாகும்.

அவ்வகையில் தபேந்திரனது ஏனைய கட்டுரைகளும் நூலுருப் பெறும் போது யாழ்ப்பாண வாழ்வியலில் மேலும் பல தரிசனங்களைக் காண முடியும். அதற்கு இந்நூல் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. 

எஸ்.ஸ்ரீகுமரன் (கலைமுகம் )

 


No comments:

Post a Comment