Tuesday, August 31, 2021

 எஸ்.பெருமாள் எழுதிய யாருக்குச் சொந்தம் இந்தக் குழந்தை யாருக்குச் சொந்தம்? கவிதைத் தொகுதி

 

எஸ்.பெருமாள் மூத்த பத்திரிகையாளர். ஆறு தசாப்தங்களாக வீரகேசரி, ஈழநாடு, வலம்புரி, உதயன் பத்திரிகைகளில் பணியாற்றி, பல கட்டுரைகளையும், பத்திகளையும் எழுதியவர். அதற்கப்பால் இலக்கியத்தின் மீதும் அவருக்கு ஈடுபாடுள்ளது. அத்தகைய ஈடுபாட்டின் காரணமாக கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதி உள்ளார்.அந்த வகையில் அவரது கவிதைகள் நடந்தபடி தேடுவோம் என்ற தொகுப்பாக வெளிவந்தது. இப்போது 'யாருக்குச் சொந்தம் இந்தக் குழந்தை யாருக்குச் சொந்தம்' என்ற தலைப்பில் கவிதைகள் தொகுப்பாக்கப்பட்டுள்ளன.


இந்த நூலுக்கு மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் அணிந்துரை வழங்கியுள்ளார். இன்றைய பத்திரிகைகளிலும், முகநூலிலும்  கவிதைகள் ஏற்படுத்தும் ஆயாசத்தைச் சுட்டிக் காட்டிய அவர் 'எதையாவது எழுத வேண்டும் என்ற பரபரப்பு, அவசரமின்றி தாம் கண்ட, கேட்ட, உணர்ந்தவற்றுக்குக் கலை வடிவம் கொடுத்துள்ளார். ஆற அமர இருந்து எழுதியுள்ளார்' என்று நூலாசிரியரைப் பாராட்டுகிறார்.

கவிஞர் எஸ்.பெருமாள் இந்த நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளை தேசவியல், பொது இயல், சிறுவர் இயல், தமிழ் இயல், இறை இயல் என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்துள்ளார். அனைத்துமே ஓசைநயம் மிக்க கவிதைகள். இந்த நூலின் தலைப்பான 'யாருக்குச் சொந்தம் இந்தக் குழந்தை'  இரு கவிதைகளாக பக்கம் 11 மற்றும் 42இல்  உள்ளன.இருபக்கக் கவிதைகளும் சுட்டும் குழந்தைகள் வேறானவை. 

வீதியின் ஓரத்தில் ஒரு மரத்தடியில்

அவன் நின்றான் அநாதரவாக

கன்னங் கரிய மேனி அணிந்திருந்த

காற்சட்டையும் வெறும் பீத்தல் 

என்று ஒருவன் அறிமுகப்படுத்தப்படுகிறான். அவன் போர் தின்று துப்பிய குழந்தை.அநாதையாகத் தெருவில் அலையும் குழந்தை.

கன்னங் கருத்த மேனி

கனி போல காணுமிதழ்கள்

வெண்புறா நிகர்த்த பாதம்

வேதாந்தி போன்ற பார்வை

என்று மற்றவன் அறிமுகப்படுத்தப்படுகிறான். இவன் கண்ணன் என்ற பெயருடைய தெய்வக் குழந்தை. இந்த இரு வேறு குழந்தைகளை இந்நூலில் அறிமுகப்படுத்துவதால் நூற் தலைப்பு பொருண்மை கொண்டதாகிறது.

வெங்கொடுமைக்கு எதிரான குரலாக அவரது கவிதை மேற்கிளம்புவது தொகுதியில் விரவிக் கிடக்கிறது. அதற்கான பிழிசாறாக ஒரு கவிதை இவ்வாறு சொல்கிறது.

கொலைக் களத்தில் எத்தனை

குஞ்சு மாய நேர்ந்ததோ?

அய்யோ என்ன கொடுமைகள்

அடுக்கடுக்காய் நேர்ந்ததோ?

பொய்கள் சொல்லி உலகினை

போக்கு காட்ட முடியுமோ?

நீதி செத்துப் போகுமோ?

நீசர் தப்பிப் போவரோ?

ஆதியான தெய்வம் என்றும்

அமைதியாகத் தூங்குமோ?

சமூகத்தின் தீமைகள் சார்ந்து தனது உரத்த குரலை ஆங்காங்கு பதிவு செய்யும் கவிஞர், இயற்கை மீதான நேசிப்பினையும், பெண்கள் மற்றும் சமுதாயம் தொடர்பான தனது அபிப்பிராயங்களையும் கவிதைகளூடு பதிவு செய்கிறார்.

இறைவனை நோக்கிப் பாடும் கவிதைகளிலும் சமூக அவலத்தை கடவுளிடம் எடுத்துரைத்து நீதி கேட்கவும் அவர் தவறவில்லை.

அரசியல் முதற் கொண்டு

ஆன்மீகம் வரை எவரும்

நேர்மையாய் செயல்படுதல்

இல்லையென்ற நிலையிங்கு

நிலை பெற்று விட்டதுவே

என் செய்வேன் யான்.

எங்குற்றனை?

அங்குற்று இவைகளை யான்

எடுத்தியம்ப ஏங்குகிறேன்.

என்று ஒரு கவிதையில் சமூக நடப்பைப் பேசுகிறார். இவ்வாறே தான் கண்டுணர்ந்த விடயங்களை முழுமையான மரபுக் கவிதையாக இல்லாவிடினும், ஓசைநயம் மிக்கதாக வாசகர் உணர்ந்து அனுபவிக்கும் வண்ணம் தந்துள்ளார். அவரது ஆளுமையும், அனுபவ முதிர்ச்சியும் கவிதைகளில் துலக்கமாகத் தெரிகின்றன.

இயல்வாணன்


No comments:

Post a Comment