Wednesday, September 22, 2021

நேர்காணல் சிற்பி

 நேர்காணல்

சிற்பி சிவசரவணபவன்





நேர்காணல், ஒளிப்படங்கள் : இயல்வாணன்






கே : ஒவ்வொரு மனிதனதும் ஆளுமை உருவாக்கத்தில் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. உங்களது ஆளுமையை வளர்ப்பதில் குடும்பத்தின் பங்களிப்பு எவ்வாறானது?

ப : எமது பிரதேசத்தில் அனேகமானோர் விவசாயிகளே. என்னுடன் படித்த அவர்களின் பிள்ளைகள் பாடசாலை முடிந்ததும் தோட்ட வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் என்னுடைய குடும்பச் சூழலில் எனக்கு வேலைகள் எதுவும் இல்லை. இந்தக் காலம் போல ரியூசன் இல்லை. பாடசாலையில் கற்பது மட்டுமே. அதுவே எமக்குப் போதுமானதாகவும் இருந்தது

எனது தந்தையார் சிவசுப்பிரமணிய ஐயர் ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியர். பால பண்டித பரீட்சையிலும் சித்தியடைந்தவர். அவரது புத்தக அலுமாரியில் பல நூல்கள் இருந்தன. அவற்றைக் கிளறி எடுத்து வாசிப்பதுதான் எனது ஒரே பொழுதுபோக்காக இருந்தது. எனது மாமனார் வைத்தீஸ்வரக் குருக்களால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளையும் படித்திருக்கிறேன்.

கே: அப்போது என்னென்ன நூல்களைப் படித்தீர்கள்?

ப: எனக்கு நினைவு தெரிந்து படித்தது இராமாயணமே. விரும்பிப் படித்தது என்றும் கூறலாம். கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையை ஆரம்பித்த கந்தையா உபாத்தியாயர் எமது வீட்டிற்கு வந்து தந்தையாருடன் உரையாடுவார். அப்போது அவர் ஒவ்வொரு விடயத்துக்கும் இராமாயணத்தில் இருந்து உதாரணங் களைச் சொல்லித்தான் கதைப்பார். இராமாயணத்தில் விருப்பம் ஏற்பட அதுவும் ஒரு காரணந்தான். மயிலிராவணன் கதையும் விரும்பிப் படிப்பேன்.  மகா பாரதம் பெரிய புத்தகம் ஒன்றிருந்தது. அது எனக்கு அவ்வளவு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அதிலுள்ள கிளைக் கதைகள் ஒரு தொடர்பற்ற தன்மையை ஏற்படுத்தி, வாசிக்கும் ஆர்வத்தைக் குறைத்திருக்கலாம். எனது தந்தையார் ஈழகேசரி, கலைமகள் ஆகியவற்றை வாங்குவார். இந்துசாதனமும் தபாலில் வரும். இடைக்கிடை கல்கி, ஆனந்த விகடனும் வாங்குவோம். இவையும் எனது வாசிப்புக்குத் தீனி போட்டன.

கே : உங்களைப் புடம் போட்டதில் பாடசாலையின் அல்லது ஆசிரியர்களின் பங்களிப்பு ஏதுமுண்டா? 

ப : எனது உருவாக்கத்துக்குப் பாடசாலை உதவியதைப் போல ஆசிரியர்கள் சிலரும் உதவியுள்ளனர். தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் நான் படிக்கும் போது ஆசிரியர் பொன்னம்பலம்(ஆதவன்) அவர்கள் பாரதியார் கவிதைகள் நூலுடன் வகுப்புக்கு வருவார். இடைக்கிடை அதிலுள்ள பாடல்களைச் சுவையோடு பாடிக் காண்பிப்பார். அத்துடன் பாடசாலையில் மாணவர் மன்றக் கூட்டம் வாராவாரம் நடைபெறும். அதில் பத்திரிகை வாசித்தல் என்பதும் ஒரு நிகழ்ச்சி. நாங்கள் எழுதி வழங்கும் ஆக்கங்களை ‘மாணவர் போதினி’ என்ற பெயரில் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியிடுவார்கள். அவற்றை மன்றத்தில் வாசிப்பார்கள். எனது படைப்பு வாசிக்கப்படும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

பின்னர் ஸ்கந்தவரோதயவுக்குச் சென்ற போது அங்கு வித்துவான் ஆறுமுகம் எமக்குக் கற்பித்தார். அவர் நன்றாகக் கற்பிப்பார். இனிமையாகப் பாடுவார். வாரத்தில் ஒரு நாள் பாடநூலில் இல்லாத பாடலொன்றைக் கரும்பலகையில் எழுதி, அதைப் பற்றிச் சுவையாக விளக்கிக் கூறுவார். பாடல்களை எழுதுவதற்கும் எம்மை வழிப்படுத்தினார். பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதவும் ஊக்குவிப்பார்.

அப்படி ஒருமுறை பாடலொன்றுக்குப் பொழிப்புரை எழுதப் பணித்தார். எல்லோரும் எழுதிச் சென்று கொடுத்தோம். அவற்றைப் பார்வையிட்ட அவர் என்னுடைய உரையை எடுத்து எல்லோருக்கும் வாசித்துக் காட்டினார். ‘நீ சதாசிவ ஐயருடைய உறவினரா?’ என என்னிடம் கேட்டார். ‘ஆம்’ என்றேன். ‘அவரைப் போலவே இலக்கண சுத்தமாக எழுதியிருக்கிறாய்’ எனப் பாராட்டினார். இவ்வாறான ஊக்கமூட்டும் செயல்களால் எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் உண்டாயிற்று. எனது பெயரும் அச்சில் வர வேண்டும் என ஆசைப்பட்டேன்.

கே : அந்தஆசை எப்போது பூர்த்தியானது? 

ப : படிக்கும் காலத்தில் ஈழகேசரியின் பாலர் பகுதியில் அங்கத்தவராகச் சேர்ந்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதினேன். ஈழகேசரி ஆசிரியர் ஒவ்வொரு படைப்பையும் பற்றிய கருத்துக் கூறி உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டுவார். ஈழகேசரியின் பாலர் மலரிலும், பின்னர் ஈழகேசரியின் கல்வி மலரிலும் எழுதியவர்களில் சிலர் ஒன்று சேர்ந்துதான் பிற்காலத்தில் மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கியதையும், மறுமலர்ச்சி இதழை வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். அச்சில் வந்த எனது கன்னிப் படைப்புக்கள் ஈழகேசரியில்தான் வெளியாகின.

கே : நீங்கள் ஒரு புனைகதைப் படைப்பாளி. ஆரம்பத்தில் உங்களைக் கவர்ந்த, புனைகதைகளை எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த எழுத்துக்கள் எவை? 

ப : ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தவை அகிலனின் படைப்புக்களே. அவரது சினேகிதி, பெண், பாவை விளக்கு ஆகியன அதிகம் கவர்ந்தவை. கல்கி, மு.வரதராசன் ஆகியோரது படைப்புக்களையும் விரும்பிப் படிப்பேன். பின்னர் நா.பார்த்தசாரதியில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அவரது ஆத்மாவின் ராகங்களைப் பலமுறை படித்துள்ளேன். ஆனால் இவரைத்தான் வாசிப்பேன் என்றில்லாமல் கிடைக்கும் எல்லோரது நூல்களையும் படித்திருக்கிறேன்.

கே : உங்களது முதலாவது புனைகதைப் படைப்பு எது? அது தொடர்பான அனுபவம் ஏதுமுண்டா?

ப : எனது முதற் சிறுகதை ‘மலர்ந்த காதல்’. அது 1951இல் சுதந்திரனில் வெளிவந்தது. அதற்கு முன்னரும் சுதந்திரனில் ‘பழம் பண்பைப் பற்றிப் பகர்வதில் பயனில்லை’என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். பழைமையைப் பற்றிப் புழுகிக் கொண்டிருக்கும் நாம் இப்போதய வாழ்வில் அவற்றைக் கடைப்பிடிக்கின்றோமா? எனக் கேள்வியெழுப்பும் வகையில் அக்கட்டுரை அமைந்திருந்தது.

எனது இரண்டாவது சிறுகதை ‘மாணிக்கம்’ என்ற தலைப்பிலானது. நான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினேன். அப்போது சின்னத்தம்பி என்பவர் அங்கு முதலியாராகப் பணியாற்றினார். அவர் நல்ல பேச்சாளர். இலங்கை வானொலியில் பேசுபவர்  என்று எனது சிங்கள நண்பர் கூறினார். அகிலனின் கதைகளை வாசித்த அருட்டுணர்வில் நான் ‘மாணிக்கம்’ கதையை எழுதி இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தேன்.  ஒன்றரை மாதங்களின் பின்னர் கதை தெரிவு செய்யப்பட்டு விட்டதென்றும், அலுவலகத்துக்கு வந்து நானே வாசிக்க வேண்டும் என்றும் வானொலிக்குப் பொறுப்பாயிருந்த அருள் தியாகராசா அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தார்.

அப்போது செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.15 மணி முதல் 1.30 மணி வரை சிறுகதை வாசிக்கப்படும். எனக்கோ முன்னனுபவம் இல்லை. இப்போதையைப் போல ஒலிப்பதிவு வசதியும் இல்லை. நேரடியாக வாசிக்க வேண்டும். ஒருவாறு வாசித்து முடித்தேன். அதற்கு 30 ரூபா சன்மானம் கிடைத்தது. 1952இல் நடைபெற்ற இச்சம்பவம் எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாகும். பின்னர் இச்சிறுகதை ஏழையின் முடிவு என்ற தலைப்பில் வீரகேசரியில் வெளிவந்தது.

கே: சிற்பி என்ற புனைபெயரை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணமேதுமுண்டா? வேறு எப்பெயர்களில் எழுதியுள்ளீர்கள்? 

ப : கல்லிலே கலைவண்ணம் காண்பவன் சிற்பி. அதுபோல சொல்லில் கலைவண்ணம் காணும் விருப்பினால் சிற்பி என்ற பெயரைச் சூட்டிக் கொண்டேன். தமிழகத்தில் உள்ள பிரபலமானவர்கள் எல்லோரும் மூன்றெழுத்துக்காரர்கள்தான் என்று ஏதோவொரு பத்திரிகையில் எழுதியிருந்ததைப் படித்த ஞாபகம். கல்கி, காந்தி, ராஜாஜி, அண்ணா என மூன்றெழுத்துக்காரர்கள்தான் அப்போது பிரபலமாயிருந்தார்கள். நானும் சிற்பி, சேயோன், கீதன் என்ற மூன்றெழுத்துப் புனைபெயர்களில் எழுதியுள்ளேன். யாழ்வாசி என்ற புனைபெயரில் தீபத்தில் கடிதங்கள் எழுதினேன். தாண்டவக்கோன் என்ற பெயரில் கலைச்செல்வியில் கேள்வி பதில் பகுதியில் எழுதினேன்.வசதியும் தேவையும் கருதி வேறு புனைபெயர்களையும் பயன்படுத்தியுள்ளேன். 

சிற்பி என்ற பெயரை இந்தியாவில் நான் படிக்கும் போதுதான் முதலில் பயன்படுத்தினேன். சென்னை கிறீஸ்தவக் கல்லூரியில் கலைமாணிப் படிப்பை மேற்கொண்டிருந்த போது அங்கு சேனையூர் தமிழ் மன்றத்தால் இளந்தமிழன் என்ற கையெழுத்துச் சஞ்சிகை வெளியிடப்பட்டது. அழ.சிதம்பரம் என்பவர் அதன் ஆசிரியர். அவர் எனக்கு அடுத்த அறையில் தங்கியிருந்தார். அதனால் சஞ்சிகை தயாரிப்புக்கு நானும் உதவியதோடு ஆக்கங்களும் எழுதினேன். 

அடுத்த வருடம் என்னை அதன் ஆசிரியராகத் தெரிவு செய்தார்கள். அத்துடன் அதனை அச்சில் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டது. நான் அதன் முதலாவது இதழுக்கு ஆசிரியர் தலையங்கத்துடன் ‘கன்னித் தமிழ்க் கவிஞன் கம்பன்’ என்ற இலக்கியக் கட்டுரையும் எழுதினேன். இடத்தை நிரப்பும் பொருட்டு எனக்கு என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை எழுதினேன். மு.வ. எழுதிய தம்பிக்கு, தங்கைக்கு போல இது எனக்கு நானே அறிவுரை கூறுவது போல் எழுதப்பட்டது. இக்கட்டுரைக்கே சிற்பி என்ற பெயரை முதன்முதலில் பயன்படுத்தினேன்.

கே : உங்களுடைய முக்கிய பணியாக அக்கால ஈழத்துச் சிறுகதைகளைத் தொகுத்தமையைக் கூறலாம். அவ்வாறானதொரு தொகுப்பை வெளியிட்டமைக்குப் பின்னணிக் காரணங்களேதுமுண்டா?

ப : நான் இந்தியாவில் படித்து விட்டுத் திரும்பிய பின் மீ.ப.சோமு அவர்களால் தொகுக்கப்பட்ட சிறுகதை மஞ்சரி இந்திய சாஹித்திய அக்கடமியால் வெளியிடப்பட்டது. அதில் ஒரு ஈழத்துச் சிறுகதையும் இடம்பெறவில்லை. ஏற்கனவே அல்லயன்ஸ் கம்பனியால் வெளியிடப்பட்ட கதைக்கோவை தொகுதிகளில் வெளிவந்த ஈழத்துப் படைப்புகளைக் கூட மீ.ப.சோமு அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்தியாவிலிருந்து வந்த நான் இலங்கைப் படைப்பாளிகளது ஒரு தொகுதியை வெளியிட விரும்பினேன். அ.செ.முருகானந்தன், பொன்னம்பலம் ஆசிரியர் ஆகியோரும் ஆதரவு தந்தார்கள். எனது நண்பன் அழ.சிதம்பரம் மூலமாக பாரி நிலையம் செல்லப்பா அவர்களைத் தொடர்பு கொண்டேன். ‘ஈழத்துச் சிறுகதைகள்’ நூலைப்  பாரிநிலையம் வெளியிட்டது. கதைகளைத் தொகுக்கும் போது ஒரு பெண் படைப்பாளி, ஒரு கிழக்கு மாகாணப் படைப்பாளி, ஒரு இளம் படைப்பாளி இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்.

அவ்வகையில் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், க.தி.சம்பந்தன், வ.அ.இராசரத்தினம், வரதர், தாழையடி க.சபாரத்தினம், சகிதேவி தியாகராசா, சு.இராஜநாயகன், செ.கணேசலிங்கம், இராஜ அரியரத்தினம், கே.டானியல் ஆகிய பன்னிருவரின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றன. இவ்வாறு ஐந்து தொகுதிகளை வெளியிட எண்ணியிருந்தோம். ஆயினும் இந்திய இலங்கை தபாற் தொடர்பின் சீர்குலைவும், கலைச்செல்வியில் கவனம் திரும்பியமையும் இத்தொகுப்பைத் தொடர முடியாமற் செய்து விட்டது. பலரும் இதைப் பாராட்டியிருந்தார்கள். சில்லையூர் செல்வராசன் தினகரனில் எள்ளல் விமர்சனமொன்றை எழுதியிருந்தார். பின்னர் நான் அதை மறுத்துப் பதில் எழுதியிருந்தேன். 

நூல் வெளிவந்த பின்னர் ஆனந்த விகடனுக்குச் சென்று மணியனைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்த எழுத்தாளர்களை ஆனந்த விகடனுக்கு எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களுக்குத் தனித் தனியாகவும் கடிதங்களும் எழுதினார்.

கே : ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘கலைச்செல்வி’ முக்கிய பாத்திரம் வகிக்கிறது. கலைச்செல்வியை எப்படி ஆரம்பித்தீர்கள்?

ப: உண்மையில் கலைச்செல்வியின் தோற்றத்துக்கு 1958இல் இடம்பெற்ற இனக் கலவரந்தான் காரணமாகும். களுத்துறையில் தமிழ்க் கழகம் என்ற அமைப்பினால் ஈழதேவி என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. தமிழ்ச்செல்வன், உதயணன் ஆகியோர் அதன் ஆசிரியர்களாக இருந்தனர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு உதயணன் யாழ்ப்பாணத்துக்கு வர நேர்ந்தது. 

அதற்கு முன்பாக ஈழத்துச் சிறுகதைகள் நூலை வெளியிட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் ஒரு சஞ்சிகையை வெளியிட விரும்பினேன். முக்கிய எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பலரும் இது ஒரு வி~ப் பரீட்சை எனக் கூறிக் கண்டித்தனர். எனவே நானும் இம்முயற்சியைக் கைவிட்டு விட்டேன். 

இந்த நிலையில் ஒருநாள் உதயணன் தமிழ்ச்செல்வனையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார். கடிதப் பரிச்சயம் மட்டும் எம்மிடமிருந்தது. சந்தித்த அனுபவமில்லை. அவர்கள் தாம் நடத்திய ஈழதேவி சஞ்சிகையைப் பொறுப்பேற்கும்படி என்னைக் கேட்டனர். தாம் அதற்குச் சகல ஒத்துழைப்பையும் வழங்குவதாகக் கூறினர். அந்த உற்சாகத்தில் கலைச்செல்வி பிறந்தது. எனினும் சில மாதங்களின் பின் அவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் குறையத் தொடங்கின. நானே நடத்த வேண்டியேற்பட்டது. 

கே : இலக்கிய வரலாறு கால ஒழுங்கில் அமைவதே பொருத்தமானது. ஆயினும் சில சஞ்சிகைகள் - அவை விளைவித்த தாக்கம் காரணமாக – வரலாற்றுக் காலகட்டமாகப் பதியப்படும் அளவுக்கு முக்கியத்துவமுடையன. கலைச்செல்வியையும் அவ்வாறு கூறலாம். கலைச்செல்வியின் பயணத்தில் முக்கியமான பதிவுகiளாக எவற்றைக் கருதுகிறீர்கள்? 

ப : இவற்றைப் பதிவுகளாகக் கொள்ளலாமா என்பது எனக்குத் தெரியாது. கலைச்செல்வி பல்வேறு சிறப்பு மலர்களை வெளியிட்டது. வளரும் எழுத்தாளர்களுக்கென்nறு ஒரு மலரை வெளியிட்டோம். இளம் எழுத்தாளர் என்ற சொல் பொருத்தமற்றது. 40 வயதில் முதலில் எழுதுபவரை எப்படி இளம் எழுத்தாளர் என்பது? எனவே, வளரும் எழுத்தாளர் மலர் என்று பெயரிட்டோம். துருவன், யாழ்நங்கை, செ.கதிர்காமநாதன் எனப் பல படைப்பாளிகளின் படைப்புக்களை இதில் வெளியிட்டோம்.

பெண் எழுத்தாளர்களுக்கென்று மகளிர் மலரையும் வெளியிட்டோம். புதுமைப்பிரியை, உமா, யாழ்நங்கை எனப் பல படைப்பாளிகளின் ஆக்கங்கள் இதில் இடம்பெற்றன.


அது தவிர சிறப்புப் பகுதிகள் சிலவற்றையும் கலைச்செல்வியில் வெளியிட்டோம். ‘எழுத்துலகில் நான்’ என்பது அதிலொன்று. பழம்பெரும் எழுத்தாளர்கள் தங்களது எழுத்துலக அனுபவங்களைக் கூறுவதாக இத்தொடர் அமைந்திருந்தது. இலங்கையர்கோன், சோ.சிவபாதசுந்தரம், க.தி.சம்பந்தன், வ.அ.இராசரத்தினம், சி.வைத்தியலிங்கம், கனக செந்திநாதன், இளங்கீரன் ஆகியோர் இதில் எழுதினர்.

‘என்னை உருவாக்கியவர்கள்’ என்ற தலைப்பில் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் எழுதினர். சொக்கன், டொமினிக் ஜீவா, புதுமைலோலன், கே.டானியல், அன்புமணி, மு.தளையசிங்கம், தேவன்-யாழ்ப்பாணம்,  உதயணன் முதலியோர் தம்மை உருவாக்கியவர்கள் பற்றி இத்தொடரில் எடுத்தியம்பினர்.

அதேபோல முருகையன், திமிலைத்துமிலன், நீலாவணன், தில்லைச்சிவன்,  அம்பி முதலானோர் ‘என்னைக் கவர்ந்த என் கவிதை’ என்ற தலைப்பில் தமது சிறந்த கவிதை பற்றி எழுதினர். 

ஒவ்வொரு கவிஞரும் தமது இலட்சியம் என்ன என்பதைக் கவிதையில் வடித்து எழுதிய தொடர் ‘என் இலட்சியம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. மஹாகவி, முருகையன், நீலாவணன், பரமஹம்சதாசன், தான்தோன்றிக் கவிராயர்(சில்லையூர் செல்வராசன்)  ஆகியோர் இத்தொடரில் எழுதினர்.

‘ஏன் மறைத்தேன் என்பெயரை?’ என்ற தலைப்பில் செங்கை ஆழியான், செம்பியன்செல்வன், யாழ்நங்கை, உதயணன், அன்புமணி ஆகியோர் தாம் புனைபெயர் சூடக் காரணமென்ன என்பதை விபரித்து எழுதினர். இவையெல்லாம் வித்தியாசமான சுவையான அம்சங்களாக கலைச்செல்வியில் வெளிவந்தன.

கே : வித்தியாசமானவை மட்டுமல்ல, கலைச்செல்வியில் வெளிவந்த இந்த விடயங்கள் முக்கியமான இலக்கிய வரலாற்று ஆவணங்களுங் கூட. இவ்வாறெல்லாம் நல்ல அம்சங்களுடன் கலைச்செல்வியை வெளியிட்டுள்ளீர்கள். கலைச்செல்வி எத்தனை இதழ்கள் வெளிவந்தன?

ப : 1958 ஆடி மாதத்தில் இருந்து 1966 ஆவணி மாதம் வரை 71 இதழ்கள் வெளிவந்தன. என்னிடம் 69 இதழ்களின் பிரதிகள் மட்டுமே இப்போது உள்ளன.

கே : கலைச்செல்வி நின்று போகக் காரணமென்ன?

ப : பொருளாதாரப் பலமின்மைதான் ஒரே காரணம். விளம்பரங்களைத் தேடித் தருவதாக நண்பர்கள் பலரும் வாக்குறுதி அளித்திருந்தனர். அதுவும் சாத்தியப்படவில்லை. எனது சம்பளப் பணம் முழுமையாகவே கலைச்செல்விக்குப் பயன்படுத்தப்பட்டது. இது எவ்வளவு காலத்துக்குச் சாத்தியம்? எனவே, கலைச்செல்வி இயற்கையாகவே மரணத்தைத் தழுவியது. கலைச்செல்வியின் அனுபவத்தில் நான் கூறக் கூடியது இலக்கிய ஆர்வம் மிக்க பணவசதியுடையோர் பத்திரிகையை நடத்த வேண்டும். அதில் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.

கே : கலைச்செல்வியின் பயன் என்று எதைக் கருதுகிறீர்கள்?

ப : அறிஞர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே கலைச்செல்வியின் பயனாகும். நான் 60 வரையான இலவசப் பிரதிகளை அனுப்புவது வழக்கம். ராஜாஜிக்கும் ஒரு பிரதி அனுப்புவேன். அவர் ஒருமுறை கல்கி ஆசிரியர் சோமுவிடம் கலைச்செல்வியில் வெளிவந்த சு.வே யின் உருவகக் கதையைப் பாராட்டிக் கூறியதை சோமு என்னிடம் தெரிவித்தார். அதேபோல மு.வரதராசனும் கலைச் செல்வி பற்றியும், என்னைப் பற்றியும் நல்லபிப்பிராயம் வெளியிட்டார். இன்று வரை கலைச்செல்வி பேசப்படுவதே, அறிஞர்கள் உள்ளத்தில் குடியிருப்பதே கலைச்செல்வியின் பயன் என்பேன்.

கே : கலைச்செல்வியை மீண்டும் வெளியிட ஆர்வம் ஏற்படவில்லையா?

ப : இல்லை. கலைச்செல்வியை வெளியிட்ட நீண்ட அனுபவம் என்னை அவ்வாறு செய்யத் தூண்டவில்லை. இடையில் ஒருமுறை சொக்கன், தேவன் - யாழ்ப்பாணம் ஆகியோர் கலைச்செல்வியை வெளியிடுவது தொடர்பாக என்னையும் அழைத்து யாழ்.இந்துக் கல்லூரியில் ஒரு கூட்டம் நடத்தினர். அதில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எனினும், அதன் வருகை சாத்தியப்படவில்லை. 

பின்னர் செங்கை ஆழியான் கலைச்செல்வியை வெளியிடுமாறு என்னைக் கேட்டார். பல காரணங்களால் நான் மறுத்து விட்டேன். ஆயினும் மறுமலர்ச்சியை வெளியிடுவது பற்றி வரதருடன் ஆலோசித்து, நானும் செங்கை ஆழியானும் இணையாசிரியர்களாக இருந்து வெளியிட்டோம். இரு இதழ்களுடன் அதுவும் நின்று போனது. வரதர் அவர்கள் மூன்றாவது இதழுக்கான விடயதானத்தை எங்கோ தொலைத்து விட்டமையாலும், அவரது ஆர்வம் குறைந்தமையாலும் மறுமலர்ச்சியைத் தொடர முடியவில்லை.

கே : சிறுகதைகளுடன் நாவலும் எழுதியுள்ளீர்கள். ‘உனக்காக கண்ணே’ என்ற நாவல் நூலாக வெளிவந்துள்ளது. அந்த நாவல் பிறந்ததற்கான பின்னணியேதுமுண்டா?

ப : நாவல் எழுதுவதைப் பிரதான பணியாக நான் கொண்டிருக்கவில்லை. சிறுகதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஒருமுறை நான் எனது நண்பரொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அவ்வேளை அவ்வழியே ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். நண்பர் அவளது நடத்தை பற்றித் தரக்குறைவாக -மிகக் கேவலமாக- கூறினார். நீண்ட காலத்துக்குப் பின்னர் அப்பெண்ணின் வாழ்க்கையை மாற்றி, அப்பெண்ணை இந்நிலைக்கு ஆக்கியது குறித்த நண்பர்தான் என்பதை அறிந்து கொண்டேன். தனது தவறை மறைத்து அப்பெண்ணைப் பற்றிப் பிழையாகக் கூறியது என் மனத்தை அழுத்தியது. அதை வைத்துத்தான் இந்நாவலை எழுதினேன்.

கே : வேறு நாவல்கள் எழுதியுள்ளீர்களா? 

ப : கலைச்செல்வியில் இரு நாவல்கள் எழுதியுள்ளேன். உதயணன் ஒருமுறை வந்து சந்தித்த போது சில எழுத்தாளர்களை இணைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு அத்தியாயம் எழுதக் கூடியதாக ஒரு நாவலை எழுதுவதெனத் தீர்மானித்தோம். வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் நாவலின் பகைப்புலங்களாக இருக்க வேண்டுமெனவும், இலங்கை முழுவதும் நாவலின் களம் நகர வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் முதல் அத்தியாயத்தை நான் எழுதினேன். ஏற்கனவே சொன்னபடி உதயணன் எழுதவில்லை. கலைச்செல்வியில் நாவலொன்றை வெளியிடும் எண்ணம் ஏற்பட்ட போது நானே ஏனைய ஐந்து அத்தியாயங்களையும் எழுதி ‘பாசத்தின் குரல்’என்ற பெயரில் வெளியிட்டேன்.

சிந்தனைக் கண்ணீர் என்றொரு நாவலையும் கலைச்செல்வியில் எழுதினேன். நாவலின் கதாபாத்திரம் ஒரு கண்ணீர்த்துளி விழுந்ததும் பழைய சம்பவம் ஒன்று பற்றிச் சிந்திப்பான். பின்னர் ஒரு கண்ணீர்த்துளி விழும். இன்னொன்றைச் சிந்திப்பான். இப்படியே இந்நாவல் கட்டமைக்கப்பட்டது. இது ஒரு காதல் கதைதான்.

உனக்காகக் கண்ணே நாவலும் கலைச்செல்வியில்தான் வெளிவந்தது. இப்போது ஒரு நாவலை எழுத முயன்று ஐந்து அத்தியாயங்கள் எழுதிய நிலையில் முடிக்கப்படாதுள்ளது. இதன் கரு எமது இனப் பிரச்சினையின் அடிப்படையிலானது.

கே : பல எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் நாவல்கள் பல ஈழத்தில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் நீங்கள் ஏதாவது எழுதியுள்ளீர்களா?

ப : அல்லி என்றொரு சஞ்சிகையில் நான் ‘அண்ணா’என்றொரு சிறுகதையை எழுதினேன். அக்கதையைத் தொடரக் கூடியதாக உதயணன் இன்னொரு கதையை எழுதினார். நான் அதைத் தொடர்ந்து ஒரு கதையை எழுதினேன். உதயணன் அதைத் தொடர்ந்தார். ஆயினும் அல்லி நின்று விட்டது. உதயணனுடனான தொடர்பு இப்படித்தான் ஏற்பட்டது.

கலைச்செல்வியின் முதல் இதழில் ‘ஏன் படைத்தாய்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினேன். அடுத்த இதழில் உதயணன் அதைத் தொடர்ந்தார். குமாரசாமி சோமசுந்தரம், பெண் எழுத்தாளரான காவலூர் அம்பி ஆகியோர் அடுத்த பகுதிகளைத் தொடர்ந்தனர். வரதர் இறுதியாக எழுதினார். இந்த இரு தொடர்களும் முன்னதாகவே திட்டமிட்டு எழுதப்பட்டவையல்ல. என்னுடைய கதை இன்னொருவரையும் எழுதத் தூண்டியது என்பதை நினைக்க உற்சாகமாயிருக்கின்றது.

கே : நீங்கள் பல சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள். மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளீர்கள். உங்களது சிறுகதைகளின் அடிப்படைகள் என்று எவற்றைக் கூறுவீர்கள்?

ப : கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணந்தான் எல்லா இலக்கியத்துக்கும் பொதுவானது. ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலல்’ என்பதுதான் இலக்கியம் தொடர்பான தமிழரது நிலைப்பாடு. பிசிறல்களற்ற, ஆற்றொழுக்கான தெளிவும், எளிமையும், இனிமையும் மிக்க மொழியால் உயர்ந்த கருத்துக்களைக் கூறுவது இலக்கியம் என்று கருதுகிறேன். இந்தக் கருத்துநிலையிலேயே நான் எழுதுகிறேன். எனது கதைகளிலே நல்ல கருத்துக்கள் சிந்தனைகள் வர வேண்டுமென விரும்பி எழுதுகிறேன். ‘தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுறவே மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே களிவளர் உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல் கண்ணீர்த் துளி வர உள்ளுருக்குதல்’என்ற பாரதியாரின் கூற்றுக்கு அமைவாக எழுத வேண்டுமென நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை வாசித்து அதில் உள்வாங்கிய உயர்ந்த கருத்துக்களை, நல்ல பாத்திரங்களைப் பார்த்த எனக்கு நடைமுறையில் அவற்றைக் காண முடியாத வேளைகளில் அந்த வேறுபாட்டின் விளைவுகளையே கதைகளாகப் படைத்துள்ளேன். நம்பிக்கை, நாணயம், நேர்மை, உண்மை, தியாகம் முதலிய உயர்ந்த பண்புகள் இந்தக் காலத்துக்குப் பொருத்தமில்லையெனக் கருதி அவற்றைக் கைவிட்டு விட்டோமா? என்ற அச்சம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதுவும் கதைகள் பிறக்கக் காரணமாகும். 

கே : இலக்கியம் உயர்ந்த கருத்துக்களைக் கூறுவதாக அமைய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். நமது நீதிநூல்களின் போதனைகளை இலக்கியமாகக் கொள்ளும் ஆபத்து நேர்ந்து விடுமல்லவா? 

ப : மனிதருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக இலக்கியம் இருக்க வேண்டும். நமது அகச்சூழலை-உள்ளத்தை- மாற்றி அமைப்பதாக அது அமைய வேண்டும். ‘அரிச்சந்திரன்’நாடகம் நம்ப முடியாத கற்பனையாக எமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த நாடகமே மோகனதாஸை மகாத்மா காந்தியாக்கியது. பல நல்ல விடயங்களில் அவரை ஈடுபட வைத்தது.

ஆனால் இலக்கியம் நீதி போதனையாகவோ, பிரச்சாரமாகவோ அமையக் கூடாது. அது கலாபூர்வமானதாக, வாசிக்கும் போது இன்பம் பயப்பதாக இருக்க வேண்டும். அறஞ் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த நல்ல கருத்துக்கள் மறைமுகமாக அதற்குள் உட்பொதிந்திருக்க வேண்டும்.

கே : நீங்கள் நீண்ட காலம் ஆசிரியராக, அதிபராக இருந்துள்ளீர்கள். உங்களது பால்ய காலத்தில் நீங்கள் பெற்ற நேரனுவங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டீர்களா? 

ப : நல்ல நூல்களை வாசிக்கச் செய்வதில் அவர்களை வழிப்படுத்தியிருக்கிறேன். எனது பள்ளிப் பருவத்தில் மாணவர் மன்றங்கள் எனக்கு அதிகம் உதவின. நான் அதிபராகப் பணியாற்றிய இடங்களில் மாணவர் மன்றங்களைக் கிரமமாகக் கூட்டுவதில் அக்கறை காட்டினேன். அத்துடன் சஞ்சிகைகளையும் வெளியிட்டேன். உசன் இராமநாதன் வித்தியாலயத்தில் ‘இளந்தளிர்’ என்ற பெயரிலும், செங்குந்தா இந்துக் கல்லூரியில் ‘சுடரொளி’ என்ற பெயரிலும் சஞ்சிகைகளை வெளியிட்டேன். வைத்தீஸ்வராக் கல்லூரியில் ‘யாழோசை’ என்ற பெயரில் சஞ்சிகையைத் தயாரித்தோம். யுத்த நெருக்கடிகளால் அதை வெளியிட முடியவில்லை.

கே : நீங்கள் கல்வியியல் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ‘விளக்கு’ கல்வியியல் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். பாடநூல் எழுத்தாளர் குழுவில் பணியாற்றியவர். கல்வி சார்ந்த புலமையும், அனுபவமும் ஒருங்கே பெற்றவர். அவ்வகையில் இலங்கையின் கல்வி முறைமை தொடர்பில் உங்களது அவதானமென்ன? 

ப : இலங்கையின் கல்வியை அவதானித்தால் கல்வி அமைச்சரும், கல்விச் செயலாளர் முதலிய உயர் அதிகாரிகளும் மாற, மாற கல்விக் கொள்கையும் மாறி வருவதைக் காணலாம். கல்வி அமைச்சரோ, அதிகாரிகளோ வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ளவற்றைப் பயின்று விட்டு இங்கு வந்து அவற்றைச் செயற்படுத்த முனைகின்றனர். கள நிலைமைக்குப் பொருந்தாத வகையில் அவை காணப்படுவதால் மிக விரைவிலேயே மாற்றமுற்று வேறொன்று வருகின்றது. எம்மிடம் நிலையான கல்விக் கொள்கை இல்லாதது பிரதான குறைபாடாகும்.

மற்றது கல்வியின் ஒரே நோக்கம் தொழில் பெறுவதுதான் என்ற எண்ணம் இப்போது முனைப்புப் பெற்றுள்ளது. அது தவிர்க்க முடியாத ஒன்றாயினும் கல்வி மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். நாம் வாழ்க்கைத்தரத்தை – பொருளாதாரத்தை- மேம்படுத்துவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறோம்.

கே : இன்றைய பாடசாலைகளின் கல்வியளிப்புத் தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்?  உங்கள் கல்விப் பெறுகையிலிருந்து, உங்கள் காலக் கல்வியளிப்பிலிருந்து இன்றைய கல்விச் சூழல் மாற்றமுற்றுள்ளதல்லவா? 

ப : எமது காலத்தில் கல்வியில் காணப்பட்ட சுயாதீனத்தன்மை இன்று இல்லை. நாங்கள் பாடசாலையையே நம்பி இருந்தோம். இன்று அப்படியில்லை. பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குக் கற்பிக்க நேரமில்லை. சுற்றுநிருபங்களுக்கேற்ப அறிக்கைகளைத் தயார் செய்வதிலேயே அவர்களின் கவனமுள்ளது. கல்வி அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதே அதிபர்களின் பணியாகவுள்ளது. அதற்கேற்ப ஆசிரியர்களும் இயங்க வேண்டியுள்ளது. பல்வேறு போட்டிகளும் நிகழ்ச்சித் திட்டங்களும் பாடசாலைகளின் முன்னால் உள்ளன. அதற்குத் தயார்படுத்த வேண்டும். கட்டாயம் பங்குபற்ற வேண்டும். வெற்றியும் பெற வேண்டும். இவற்றிலெல்லாம் ஈடுபடும் ஆசிரியர்களும், மாணவர்களும் எவ்வாறு கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்?

பிள்ளைகளின் கவனமும் ரியூசனிலேயே உள்ளது. அது ஒரு கவர்ச்சியான விடயம். ஆயினும் ரியூசனில் கற்பிப்பவருக்கு எந்த வரையறையும் கிடையாது. பரீட்சைக்குத் தயார்படுத்தும் வகையில் விரைவாகப் பாடத்தைக் கொண்டு செல்கிறார். பாடசாலைகளில் அப்படிச் செய்ய முடிவதில்லை.

பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பெடுத்தமை சில விடயங்களில் பிழை போலவே படுகிறது. முன்னரென்றால் ஆசிரியர் பாடசாலைச் சூழலைச் சேர்ந்தவராக இருப்பார். பாடசாலையில் பற்றும் இருக்கும். பெற்றாரை, பிள்ளையை, அவர்களது குடும்பச் கூழலை நன்கு அறிந்திருப்பார். அவருக்குப் பொருளீட்டும் நோக்கமில்லாததால் மேலதிகமாகவும் கற்பிப்பார். இன்று அந்நிலை மிகக் குறைவு.

  




No comments:

Post a Comment