Friday, September 3, 2021

நூல் விமர்சனம்

 கொரோனா வீட்டுக் கதைகள் 

உலகம் முழுமையும் முடங்கிய கொரோனா நெருக்கடிக் காலம் பலவித அனுபவங்களையும் தந்திருக்கிறது. வலிகள், வேதனைகள், இழப்புக்கள், மனப்பிறழ்வுகள் என்று தனி மனிதர்களும், குடும்பங்களும் இந்த நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வரும் வாழ்க்கை எளிதானதல்ல. மிகுந்த சவால் நிறைந்தது. இந்தக் காலம் பல படைப்பாளிகளை உசுப்பி விட்டிருக்கிறது. விளைவாக கவிதைகள், கதைகள் பலவும் நமக்குக் கிடைத்து வருகின்றன. 

மனோ சின்னத்துரை ஒரு இலக்கியச் செயற்பாட்டாளராகவே அதிகம் அறியப்பட்டவர். ஓசை இலக்கிய இதழ், அம்மா சிறுகதை இதழ் மூலம் பல படைப்பாளிகளைக் களம் காண வைத்தவர். ஏற்கனவே, கதைகளை எழுதியுள்ள போதிலும், உள்ளிருப்புக் காலத்தில் பிரசவித்த பல கதைகளுடன் ‘கொரோனா வீட்டுக் கதைகள்’ என்ற இந்தத் தொகுப்பு நூலைத் தந்து தன்னை ஒரு படைப்பாளியாக நிலைநிறுத்துகிறார் எனலாம்.

24 கதைகள் கொண்ட தொகுதியில் பெரும்பாலான கதைகள் கொரோனா உள்ளிருப்புக் காலத்தையொட்டிய பதிவுகளாக உள்ளன. தெய்வம், பதுமை, கொரோனா வீடு, ஒன்றுமேயில்லை சின்னக் காயந்தான், ஒரு கிலோ மிளகாய்த்தூள், உயிர்வதை நாட்குறிப்பு என்று வெவ்வேறு களங்கள், வேறுபட்ட உணர்வுத் தளங்களில் விரியும் சிறுகதைகள் கொரோனா உள்ளிருப்பின் பல்வேறு அனுபவங்களை எம்முள் தொற்ற வைக்கின்றன.

 

தெய்வம் சிறுகதை கொரோனா பாதித்த சதீஸை அவரது நண்பர்கள், வீட்டு உரிமையாளர் எல்லோருமே கைவிட்டு விலகி நிற்கையில் ஒரு வாடகைக்கார் சாரதி தெய்வம் போல் உதவியதை விபரிக்கிறது. தொற்றுக்குள்ளான நிலையில் சதீஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறான். அந்த வேளை இடியப்பமும் சொதியும் சாப்பிட ஆவல்படுகிறான். தனக்கு அதனைத் தயாரித்து, நடுவழியில் வைத்து விடுமாறும், தான் வந்து எடுப்பதாகவும் வீட்டு உரிமையாளரிடம் கேட்கிறான். அவரோ பிள்ளைகளும் இருக்கின்றனர். தானும் வருத்தக்காரன் எனக் கூறி மறுக்கிறார். இந்த இடத்தில் ‘நான் விளங்கிக் கொள்ளுறன் அங்கிள்’ என்று சதீஸ் சொல்வது மனதை நெருடுவதாக உள்ளது.

‘பதுமை’ என்ற கதை உள்ளிருப்புக் காலத்தில் வெளியே ஜொக்கிங் செய்யப் போன மகளைக் காணாது பரிதவிக்கும் குடும்பத்தாரதும், மகளதும் எண்ணவோட்டத்தைச் சொல்கிறது. கொரோனா உள்ளிருப்பின் விளைவான உளநெருக்கடிகளையும், மனப்பிறழ்வு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தையும் கணவன் மனைவி உறவு சார்ந்து பேசுகிறது ‘ஒன்றுமேயில்லை சின்னக் காயந்தான்’ சிறுகதை.

கொரோனாவால் உலகமே முடங்கிப் போயிருக்கும் சூழலில் வேலை கிடைப்பது கடினமாயிருக்கிறது. இந்த நிலையில் வேலைக்குப் போனால்தான் வாழ்க்கையை நடத்தலாம் என்ற நிலையில், கொரொனா அறிகுறிகளைத் தெரிந்தும் வேலைக்குச் செல்லத் தயாராகும் ஒரு இளந்தாயின் கதைதான் ‘கொரோனா வீடு’. தமக்குத் தொற்று ஏற்பட்டால் நோயாளியான பெற்றோர் பாதிக்கப்படுவர் என்ற நிலையில், தனது ஒரே பிள்ளையைக் கூடத் தூக்காது பெற்றோரின் கவனிப்பில் விட்டு விட்டு வீட்டுக்குள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் அவளது மனக்குமைச்சலை இக்கதை வெளிப்படுத்துகிறது. 

கொரோனா நெருக்கடிகள் காரணமாக உணவுப் பொருட்களை ஓடர் செய்து வீட்டிற்குப் பெற்றுக் கொள்ளும் சம்பவமொன்றைச் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துவதாக ஒரு கிலோ மிளகாய்த்தூள் கதை உள்ளது. கொரோனா அச்சத்தை விதைத்த ஆரம்பச் சூழலையும், அதிலிருந்து விடுபட்டு கொரோனாவுடன் வாழப் பழகும் சூழலையும் ஒப்பிட்டுக் காட்டும் ஒரு பதிவாக உயிர்வதை நாட்குறிப்பு கதை அமைகிறது.

தனியே கொரோனா நெருக்கடிகளை மட்டுமல்ல பிரான்சின் வாழ்க்கை அனுபவங்கள், பால்ய கால நினைவுக் கிளர்த்தல்களை வெளிப்படுத்தும் கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. மேற்குக் நு{ல் விமர்சனம்

கலாசாரத்தில் முதிய பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான ஊடாட்டத்தை பிரான்சிய நிலையில் இருந்தும், புலம்பெயர்ந்த தமிழரது நிலையில் இருந்தும் முறையே எலோதிக் கிழவி, அம்மாவின் வானொலிப் பெட்டி ஆகிய கதைகள் சொல்கின்றன.

புலம் பெயர்ந்த சூழலில் பொருளாதார நெருக்கடியின் விளைவான உளநெருக்கடியை ஆண் பெண் ஆகிய இரு நிலையில் நின்று பேசுகிறது நல்லதங்காள் கதை. பொருளாதார நெருக்கடியின் இன்னொரு பருக்கை இலங்கை வேந்தன் என்ற கடித வடிவிலான கதை. அதே சூழலின் தலைமுறை இடைவெளியை அப்பாவும் பி எம் டபிள்யூவும் கதை பேசுகிறது. புலம்பெயர் சூழலில் உழைத்துக் களைத்த மனிதர்களின் மனநெருக்கடிகளைப் பேசுகிறது வாழ்வை வெல்வதே வாழ்க்கை சிறுகதை.

2050ஆம் ஆண்டு வன்னி எயர்லைன்ஸ் விமானத்தில் வந்து இரணைமடு விமான நிலையத்தில் இறங்கிய சிவமாறன் ஐயாவின் வழியாக அப்போதய சூழலை நம்முன் காட்டும் கதையாக விதைநிலைம் சிறுகதை எழுதப்பட்டுள்ளது.

பார்வதி, மயில், தழும்பு என்பன சொந்த மண்ணின் கழிவிரக்கமாக விரியும் கதைகள்.

இவ்வாறே ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சமூக மனிதர்களை, அவர்களது பாடுகளை, பொருளாதாரத்துக்காக ஆலாய்ப் பறந்து படும் அவஸ்தைகளை புறநிலை விமர்சனமாக அல்லாமல் பாத்திரங்களை இயங்கச் செய்வதனூடாகவும், பாத்திரங்கள் பேசுவதனூடாகவும் எம்முள் தொற்ற வைக்கின்றன இக்கதைகள். இந்தக் கதைகள் வாசகர்களுக்குப் புதிய அனுபவங்களையும், உணர்வுத் தொற்றலையும் ஏற்படுத்தும் எனலாம்.

இயல்வாணன்

கலைமுகம் 71 


No comments:

Post a Comment