Saturday, September 4, 2021

இலக்கியக் கட்டுரை: ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் புதிய பிரவேசங்கள் - அறிமுகக் குறிப்புகள்

ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் புதிய பிரவேசங்கள்

- அறிமுகக் குறிப்புகள்

இயல்வாணன்  


ஈழத்துப் புனைகதை இலக்கியமானது பல்வேறு கால கட்டங்களிலும் பல்வேறு பகைப்புலங்களையும், பாடுபொருள்களையும் கொண்டு சமூக ஓட்டத்தைத் துலாம்பரப்படுத்தி வெளிவந்திருக்கின்றது. அரச கதைகளையும், காதல் கதைகளையும், ஆண்டான் அடிமை கதைகளையும் பேசி வந்த ஆரம்ப காலப் புனைகதையுலகு நடைமுறை வாழ்வின் பிரச்சினைகளைப் பேசத் தலைப்பட்டமை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் 60களில் இருந்து 80கள் வரை சாதியப் பிரச்சினைகளும், இன முறுகல் சார்ந்த பிரச்சினைகளும் பேசப்பட்டு வந்தன. 80களில் முனைப்புப் பெற்ற ஆயுதப் போராட்டம் புதிய அனுபவங்களைத் தமிழ் இலக்கியத்துக்குத் தந்தது. இளைஞர்களின் தலைமறைவு வாழ்க்கை அனுபவங்கள், பிள்ளைகளைக் காணாது தேடியும், நெஞ்சில் துயர் சுமந்தும் நின்ற தாய்மாரின் கண்ணீர்க் கதைகள், போராளிகளான பிள்ளைகளை விசாரித்து வரும் படையினரின் கெடுபிடிகள், சித்திரவதைகள், துப்பாக்கிச் சண்டைகளையும், கண்ணிவெடித் தாக்குதல்களையும் அடுத்து நடைபெறும் சுற்றிவளைப்புக்கள், படுகொலைகள் எனப் பல்வேறு விடயங்களையும் ஈழத்துப் புனைகதையுலகு இக்கால கட்டத்தில் பதிவு செய்தது.

1983 இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் துயரத்தை அருளரின் லங்காராணி பதிவு செய்தது. அதேவேளை தொலைதூரத்தில் உள்ள கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதல் அனுபவத்தை விடியலுக்கு முந்திய மரணங்கள் (பசீர் காக்காவால் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது) பதிவு செய்தது.  இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்திய இராணுவம் இங்கு நிலை கொண்டிருந்த காலப் பகுதி அனுபவங்களை சாந்தனின் எழுதப்படாத அத்தியாயங்கள் பதிவு செய்தது. மேலும் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டு, பின்னர் நூலாக்கப்பட்ட வில்லுக்குளத்துப் பறவை, அம்மாளைக் கும்பிடுறானுகள் ஆகிய நூல்களும் இந்திய இராணுவ அட்டூழியங்களைப் பேசின.

1990இன் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு ஏக அரசியல், இராணுவ சக்தியாகப் பரிணமித்ததுடன் ஒரு மாற்று அரசாங்க கட்டமைப்பாக எழுச்சி பெற்றது. இக்கால கட்டத்தில் பல்வேறு புதிய அனுபவங்களை ஈழத்துப் புனைகதையுலகு பெற்றுக் கொண்டது. ர~;ய, சீன இலக்கியங்களில் படித்த போர்க் கள அனுபவங்கள் நிதர்சன அனுபவங்களாக தமிழ் வாசக உலகுக்குக் கிடைத்தன. போரும், போரின் வெற்றிக் களிப்பும், இழப்பின் துயரும், மக்களின் வாழ்நிலை அவலமும், பொருளாதாரத் தடையின் துன்ப விளைவுகளும், அதற்கான மாற்று எதிர்வினைகளும் புனைகதைகளின் பாடுபொருளாயின.

செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், சாந்தன், ஞானரதன், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், வளவை வளவன், தாமரைச்செல்வி, மலரன்னை, ஆதிலட்சுமி சிவகுமார், பொன்.கணேசமூர்த்தி, இளையவன், இயல்வாணன், நா.யோகேந்திரநாதன், ந.கிருஸ்ணசிங்கம், நடராசா இராமநாதன், பு.சத்தியமூர்த்தி, வசந்தன், கருணாகரன், முல்லை யேசுதாசன், முல்லை கோணேஸ், க.சட்டநாதன், கே.ஆர்.டேவிட், த.கலாமணி என நீளும் பெருமளவான படைப்பாளிகள் போர் சார்ந்த மக்களது வாழ்க்கை அனுபவங்களையும், போராளிகளுடனான ஊடாட்டங்களையும், மனப் பதிவுகளையும் தமது படைப்புக்களில் பதிவு செய்தனர்.

அதேவேளை போராளிகள் பலரும் புனைகதையுலகுக்குள் நுழைந்து, தமது போரியல் அனுபவங்களை உண்மை உணர்வோடு பதிவு செய்தனர். அவை சிறுகதைகளாக, புனைவு சாரா எழுத்துக்களாகப் பரிணமித்தன. கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி, கப்டன் மலரவன், தூயவன், சுஜந்தன்,  தமிழ்க்கவி,  மலைமகள், சுதாமதி, உதயலட்சுமி, கோளாவிலூர் கிங்ஸ்லி எனப் பெருமளவானோர் தமது அனுபவங்களைப் பதிவு செய்தமையால் தமிழ்ப் புனைகதையுலகு புதிய எல்லைகளுக்குள் பிரவேசித்தது. இவை பற்றி பல வகைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஞானம் சஞ்சிகை பக்கங்களில் வெளியிட்ட போர்க்காலச் சிறப்பிதழ் முக்கியமானதாகும்.

1995 ஒக்ரோபர் யாழ்ப்பாண இடப்பெயர்வு, தொடர்ந்த வன்னியின் பல்வேறு பிரதேசத்திலுமான இடப்பெயர்வும் யுத்தமுமான வாழ்க்கை, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அச்சமூட்டும் நெருக்கடியான வாழ்க்கை ஆகியனவும் சிறுகதைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாட்சாயணி, சிவாணி, ஆ.ரவீந்திரன், முகமாலை சேகர், தையிட்டி இராசதுரை, உடுவில் அரவிந்தன், சி.கதிர்காமநாதன், ந.சத்தியபாலன், இ.கோகுலராகவன், இராகவன், த.பிரபாகரன், சாராங்கா, இ.இராஜேஸ்கண்ணன், பா.மகாலிங்கசிவம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எனப் பலருடைய கதைகளில் இத்தகைய வாழ்வனுபவங்கள் பேசப்பட்டுள்ளன.

மூன்று தசாப்தங்களாகச் சுழன்றடித்த போர் 2009இல் முள்ளிவாய்க்காலில் ஊழித்தாண்டவமாடி ஓய்ந்ததன் பின்னர் வெவ்வேறு வகையான இலக்கியப் பிரவேசங்களைக் கண்டடையக் கூடிய வாய்ப்பு தமிழ் வாசகப் பரப்புக்கு கிடைத்திருக்கிறது. 2009இன் பின்னர் மாற்று அரசாங்கமாக வியாபித்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்ட சூழலில் திறந்துள்ள ஒரு ஜனநாயக வெளி இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மறு புறத்தில் அரசாங்கம் அல்லது படைத்தரப்பின் பிரசன்னமும் ஆதிக்கமும் உள்ள சூழலில் அந்தப் பக்கமான வெளி இன்னமும் இருளில்தான் உள்ளது. அதனால் மறுபக்கமான ஒரு ஜனநாயகப் படைப்பு வெளியை முழுமையாகத் தரிசிக்க முடியாதுள்ளது. 

2009இன் பின்னரான காலகட்டத்தை பின் போர்க்காலம் என வரையறுக்கலாம். பின் போர்க்காலம் சார்ந்த படைப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வெளிவரவில்லை என்றே கூறலாம். ஒரு காலத்தில் வீரர்களாக வலம் வந்து ஏற்றிப் போற்றப்பட்ட முன்னாள் போராளிகளின் இன்றைய அவல வாழ்வு, ஆகுதியான வீரர்களை வைத்து அரசியல்வாதிகளும், பிழைப்புவாதிகளும் ஆடும் சதுரங்க விளையாட்டு, போரினால் நிர்க்கதியான விதவைகள், அனாதைக் குழந்தைகள், அங்கவீனர்களது வாழ்க்கை அவலம், பின் போர்க்கால உள நெருக்கீடுகள் எனப் பேச வேண்டிய நிறைய விடயங்களை ஈழத்துப் புனைகதையுலகு பேசவில்லை. ஆயினும் அதற்கான கால அவகாசம் இன்னமும் உள்ளதென்றே கொள்ளலாம்.

இடப்பெயர்வு அவலங்கள், இறுதி யுத்த கால நெருக்கடிகள், புனர்வாழ்வு அவலங்கள் பேசப்பட்ட படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. அந்த வகையில் தமிழ்க்கவியின் ஊழிக்காலம், குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, நா.யோகேந்திரநாதனின் நீந்திக் கடந்த நெருப்பாறு, ஷோபாசக்தியின் பொக்ஸ், கண்டி வீரன், தமயந்தியின் ஏழு கடல் கன்னிகள், சயந்தனின் ஆறாவடு, ஆதிரை, ஜே.கேயின் கந்தசாமியும் கலக்சியும், யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள், தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு, மெலிஞ்சி முத்தனின் அத்தாங்கு, கருணாகரனின் வேட்டைத் தோப்பு, அகிலனின் மரணத்தின் வாசனை  முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்து பல்வேறு பதிவுகளை முன்வைக்கும் புனைவு சாரா எழுத்துக்கள் பற்றியும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அன்ரன் பாலசிங்கத்தின் போரும் சமாதானமும், அடேல் பாலசிங்கத்தின் (அடேல் ஆன்) சுதந்திர வேட்கை, விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினராயிருந்த கணபதி ஐயரின் விடுதலைப் போராட்டத்தில் எனது பதிவுகள், சாத்திரியின் ஆயுத எழுத்து, அன்று சிந்திய இரத்தம், தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில், வெற்றிச்செல்வியின் ஆறிப் போன காயங்களின் வலி என்பன விடுதலைப் புலிகள் சார்ந்த பல்வேறு அனுபவங்களைப் பேசுகின்றது.

அவ்வாறே சி.புஸ்பராசாவின் விடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம், புஸ்பராணியின் அகாலம், அம்பிமகன் மற்றும் சபாரத்தினத்தின் தேநீர்க் கோப்பைக்குள் இரத்தம், எல்லாளனின் ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புகள், சதாசிவம் ஜீவகரனால் தொகுக்கப்பட்ட என்.எல்.ரி.எவ் உறுப்பினர் விவேகானந்தன் பற்றிய நினைவுக் குறிப்புகளான தாங்கொணாத் துயரம், பா.பாலசூரியன் மற்றும் குழுவினரால் தொகுக்கப்பட்ட தோழர் விசுவானந்த தேவன் முதலான நூல்கள் விடுதலைப் புலிகளல்லாத ஏனைய இயக்கங்களின் போராட்டச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட வன்கொடுமைகள் பற்றிப் பேசுகின்றன.

ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் புலம் பெயர் வாழ்க்கைச் சித்திரப்புக்களும் புதிய வாழ்வனுபவங்களைத் தந்துள்ளன. எனினும் அவை பிறிதாக அணுகப்பட வேண்டும். ஈழத்துப் புனைகதை சார்ந்த அறிமுகக் குறிப்புகளாகவே இவை உள்ளன. முழுமைப்படுத்தப்பட்டதாக படைப்புகள் சார்ந்து விரிவாக ஆராயப்பட வேண்டியது இன்றியமையாதாகும்.

(உதயன் தைப்பொங்கல் சிறப்பு மலர் 2017இல் வெளிவந்தது)






No comments:

Post a Comment