Sunday, May 7, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 1

 

முன்றில் 1


இயல்வாணன்

முன்றில் 1

இயல்வாணன்

சோ.. என்றழைக்கப்படும் சோ.பத்மநாதன் ஆயிரம் பிறை கண்ட மூத்த கவிஞர். சந்தவெழில் கொஞ்சி விளையாடும் மரபுக் கவிதைகள் பல படைத்த கவிஞர். எழுதக் கடினமான திருப்புகழும், காவடிச் சிந்தும் இவருக்கு வாலாயமானவை. பல கீர்த்தனைகளையும், பாடல்களையும் யாத்திருக்கிறார். பலாலி ஆசிரியர் கலாசாலையின் ஆங்கிலத்துறை விரிவுரையாளராகவும், அதிபராகவும் இருந்து ஓய்வுபெற்ற இவர் யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகிறார். ஈழத்துத் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கும், ஆங்கிலம் வழியே உலகக் கவிதைகளை தமிழுக்கும் மொழியாக்கம் செய்து வருபவர். மரபுக் கவிதைகளின் தொகுதியான வடக்கிருத்தல் (1998), பேச்சோசைப் பண்பு கொண்ட வசன கவிதைகளான நினைவுச் சுவடுகள் (2005), சுவட்டெச்சம் (2010) ஆகிய கவிதை நூல்களை எழுதியவர். ஆபிரிக்கக் கவிதைகள் (2000), தென்னிலங்கைக் கவிதைகள் (2003), தென்னாசியக் கவிதைகள் (2017), பர்மிய பிக்கு சொன்ன கதைகள் (2011) முதலிய மொழிபெயர்ப்பு நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.



குழந்தை .சண்முகலிங்கத்தின் 3 நாடகங்களை (Sanmugalingam: Three Plays)  இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். Tamil Short Stories from Sri Lanka (2013), Sri Lankan Tamil Poetry (2014) என்ற இரு நூல்கள் வழியாக ஈழத்துத் தமிழ்க் கவிதைகளையும், சிறுகதைகளையும் ஆங்கிலத்துக்குக் கொண்டு வந்துள்ளார். பிரெஞ்சு மொழியில் இருந்தும் இரு நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.  அத்துடன் பல இலக்கிய ஆய்வுமாநாடுகளிலும் பங்குபற்றி ஆய்வேடுகளையும் சமர்ப்பித்துள்ளார். அவை நோக்கு(ஆய்வுக் கட்டுரைகள்), A Sopa Miscellany(Papers) என்ற இரு நூல்களாக வெளிவந்துள்ளன.

கவியரங்குகள் பல கண்ட இவர் தனித்துத் தெரியும் காந்தக் குரலில் கவிதை படிப்பதைக் கேட்பது இனிய அனுபவமாகும். ஆற்றொழுகத் தமிழ் கைவரும் சிறந்த பேச்சாளர்;. நறுக்குத் தெறித்தாற் போல் விமர்சன உரையாற்றும் விமர்சகர் என்ற வகையிலும் குறிப்பிடத்தக்கவர்

இவரது மூன்று நூல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று குழந்தை .சண்முகலிங்கத்தின் நாடகம் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு Heaven With Hell என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. சோ..வின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான Down Memory Lane என்பது அடுத்த தொகுப்பு. முதுமை குறித்து தெலுங்கு மூலத்தில் இருந்து ஆங்கிலம் வழியே தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வ்ருத்தோப நித் மற்றையது.

தெலுங்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த என்.கோபியால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட முதுமை குறித்த கவிதைகளே வ்ருத்தோப நித். இதனை  எம்.ஸ்ரீதர், அல்லடி உமா ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தனர். ஆங்கிலம் வழியே சோ.. தமிழுக்கு இதனைக் கொண்டு வந்துள்ளார்.

முதுமை என்பது அனுபவங்களின் பொக்கிசம். ஆயிரம் பிறை கண்ட 84 வயதுடைய அவர் மிகவும் அனுபவித்து ரசித்து இந்தக் கவிதைகளை மீள்படைப்பாக்கம் செய்துள்ளார்.

வாசித்து விட்டு வீசும் /நேற்றைய செய்தித்தாள் அல்ல/முதியவன் /அவன் மூப்பே இல்லாத இதிகாசம். /வாழ்க்கையெனும் நீண்ட பயணத்தில் /நறுமணத்தை ஒருநாளும் இழக்காத/வாசனைத் திரவியம். /அதன் வலிமை குறையலாம் /ஆனால் காலத்தின் முன் மண்டியிடாத/முதுமொழி போன்றது அது என்று முதுமையின் முக்கியத்துவத்தைப் பேசுகிறது ஒரு கவிதை.

வெளியே யாருமில்லை/முதுமை உள்ளேயிருந்து /சந்தடியின்றி வருகிறது/திருடனைப் போல. /அதனுடன் வாதிடாது/அன்பாய் வரவேற்பீராக முதுமையின் வருகையை இதைவிட ஒரு சித்திரமாக எப்படி வரைய முயும்?

அந்தப் பறவை /முந்தநாள் இறந்த மனிதனின் /ஆத்மா போல் தோன்றுகிறது. /அவன் நடை முந்தநாள் நின்றது. /அவன் இன்று மேலே பறக்கின்றான் /மரணம் அப்படி வர வேணும் /அது ஒரு நண்பனைப் போல வர வேணும். /ஒருவரைக் காலை உலாவுக்கு அழைத்துச் செல்வதைப் போல

முதுமை என்றாலே மரணத்தின் வாசல் திறந்தே இருக்கும். அந்த மரணம் அழுந்தாமல், துன்பப்படாமல் வர வேண்டும் என நினைப்பது முதியவர்களின் பெருங் கனவுதானே!

பிள்ளைப் பருவம் மென்மையான வைகறைஃஇளமை ஏழுவண்ண வானவில் ஃமுதுமை அனுபவங்களின் பேரொளிப் பிரவாகம் என்று பேசுகிறது இன்னொரு கவிதை.

தனிமை என்பது ஒருவனுடைய உடல்

அவனோடு நடத்தும் விசித்திர உரையாடல்

தனிமை என்பது மனம் திரும்பத் திரும்ப

கடந்த காலத்துள் நழுவுதல்

பிள்ளைகள் சாய்சறுக்கில் போவது போல்

தனிமை என்பது எல்லா வண்ணங்களும் வெளிறி

ஒன்றுமற்ற வெறுமையினால் மூடப்படல் என்று மூப்பின் தனிமையை இன்னொரு கவிதை பேசுகிறது.

இவ்வாறு இந்தத் தொகுதியில் உள்ள 40 கவிதைகளும் முதுமையின் பெருமையினையும், முதியவர்களின் துயரங்களையும், அவர்களின் ஏக்கங்களையும், தனிமையின் கொடுமையையும், மரணத்தை எதிர்கொள்ளும் மனநிலையையும் பேசுகின்ற  வெவ்வேறு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்களின் சாரத்தை அனுபவித்துப் பிழிந்து தந்திருக்கிறார் சோ..

நூற்குறிப்பு : வ்ருத்தோப நிஷத் - முதுமை குறித்த கவிதைகள் / சோ.பத்மநாதன் / ஜீவநதி வெளியீடு / 80 பக்கங்கள் / விலை 400ரூபா


உதயன் சஞ்சீவி 26-03-2023

No comments:

Post a Comment