Monday, May 8, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 6

 முன்றில் 6

இயல்வாணன்

குப்பிளான் ஐ சண்முகன் என்று எழுத்துலகில் அறியப்பட்ட ஐயாத்துரை சண்முகலிங்கம் கடந்த 24ஆந் திகதி தனது 77வது வயதில் இயற்கை எய்தினார். சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக, சமயப் பேச்சாளராக, விமர்சகராக எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த மனிதராகத் திகழ்ந்தவர் சண்முகன்.

குப்பிளான் என்ற விவசாயக் கிராமத்தில் 1946ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாந் திகதி பிறந்த இவர் குப்பிளான் விக்னேஸ்வர மகா வித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் மெதடிஸ்த மிசன் ஆங்கில பாடசாலை, தெல்லிப்பழை யுனியன் கல்லூரி ஆகியவற்றில் படித்து, கொழும்பில் ஒரு வருடமும் பேராதனையில் இரு வருடமுமாகக் கற்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாக வெளியேறினார். 1968இல் பரீட்சைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணியை ஆரம்பித்த இவர்  கல்வித் திணைக்களத்திலும் பணியாற்றினார்.  1984 முதல் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகச் சேவையாற்றி ஓய்வு பெற்றார்

1965ல் யுனியன் கல்லூரியில் உயர்தரத்தில் படிக்கும் காலத்தில் அங்கு வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகையில் இவரெழுதிய தமிழில் திறனாய்வு என்ற கட்டுரையே இவரது கன்னி முயற்சியாகும். 1966இல் இவரெழுதிய “பசி“ சிறுகதை ராதா சஞ்சிகையில் பிரசுரமாகி இவரை எழுத்துலகுக்கு இனங்காட்டியது. அலை, மல்லிகை, சிரித்திரன், ஈழநாடு, வீரகேசரி, சுதந்திரன், இளம்பிறை, அஞ்சலி, மங்கை, கற்பகம், எழில், நெய்தல், கலங்கரை, திசை, வாணி, ஏகலைவன் முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது படைப்புகள் வெளிவந்தன.

குப்பிழான் ஐ.சண்முகன் என்ற பிரதான புனைபெயரில் சிறுகதைகள் எழுதிய இவர் கற்பகன், பண்பாடகன், கற்பகன், கற்கரை கற்பவன் முதலான புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

இவரது 11 சிறுகதைகள் கொண்ட கோடுகளும் கோலங்களும் தொகுப்பு 1976இல் வெளிவந்ததுடன் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுக் கொண்டது. 21 கதைகள் கொண்ட சாதாரணங்களும் அசாதாரணங்களும்(1983), 12 கதைகள் கொண்ட உதிரிகளும்(2006), ஒரு பாதையின் கதை(2014), 10 கதைகள் அடங்கிய ஒரு தோட்டத்தின் கதை(2018) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

இவர் எழுதிய கவிதைகளின் தொகுதி பிரபஞ்ச சுருதி (2015) என்ற பெயரில் வெளியானது. பத்தி எழுத்துகளின் தொகுதி அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புகள்(2003) என்ற தலைப்பில் வெளியானது. நூல் அறிமுகங்கள், நூல் விமர்சனங்கள், திரைப்பட அறிமுகங்கள் மற்றும்  விமர்சனங்கள் இத்தொகுதியினுள் இடம்பெற்றுள்ளன.

குப்பிழான் ஐ.சண்முகனுடைய சிறுகதைகள் மென்னுணர்வுத் தளத்தில் கட்டவிழ்பவை. நேர்த்தியான பாத்திர வார்ப்பு, பாத்திரங்கள் இயல்பாக இயங்குவதனூடாக கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு, தங்குதடையற்ற எளிமையான மொழிநடை, பல்வேறு உத்திகளைக் கையாண்டு கதைகளை நகர்த்துதல் என்பன இவரது தனித்த அடையாளமெனலாம்.

அகவுணர்வுச் சிக்கல்களை, அக முரண்களை விபரிப்பனவாக இவரது கதைகள் உள்ளன. சாமானிய மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை, மனநிலைகளை, நடத்தைக் கோலங்களை, உணர்ச்சி வெளிப்பாட்டினை ஒரு ஒளிப்பதிவாளனின் லாவகத்தோடு குப்பிழான் ஐ.சண்முகன் பதிவு செய்துள்ளார். புறநிலை நின்று பார்க்கும் வகையிலும் கதைகளை எழுதியுள்ளார். கதைகளுக்கூடாக  மனிதாயப் பண்புகளை பாத்திரங்கள், அவற்றின் உரையாடல் மூலமாக இவரது கதைகளில் நாம் தரிசிக்கலாம். அவரிடம் உள்ள ஆன்மீக உணர்வையும் பல கதைகளிலும், கவிதைகளிலும் தொற்ற வைத்துள்ளார்.

அலை சஞ்சிகையின் முதல் 12 இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார். ஜீவநதி சஞ்சிகையின் ஆரம்ப இதழ்களில் ஆலோசகராக இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. புதிய தரிசனம் சஞ்சிகையின் ஆலோசகராகவும் இவர் செயற்பட்டுள்ளார். யாழ் இலக்கிய நண்பர்கள் கழகம், கொழும்பு கலை இலக்கிய நண்பர்கள் கழகம், இலங்கை வானொலி இளைஞர் மன்றம் ஆகிய அமைப்புகளிலும் இவர் இணைந்து செயற்பட்டுள்ளார்.

எழுத்துலகுக்கு அப்பால் ஒரு சமயப் பேச்சாளராகவும் இவர் விளங்கினார். சமயக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இசையார்வம் மிக்கவராகவும் இளையவர்களைத் தட்டிக் கொடுத்து வழிப்படுத்தும் நல்லாசிரியராகவும் விளங்கியுள்ளார்.

இவரது எழுத்துலக சேவைகளுக்காக பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். சாகித்திய விருது, வடமாகாண ஆளுநர் விருது, கலாபுஷணம் விருது, பேராதனை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட சங்கச் சான்றோன் விருது, அவை இலக்கிய விருது, கரவெட்டி பிரதேச செயலக விருது, சந்நிதியான் ஆச்சிரமம் வழங்கிய ஞானச் சுடர் விருது, சொந்த ஊரான குப்பிழானில் பெற்ற இலக்கிய ஞானச் சுடர், சமூகதிலகம் விருதுகள் எனப் பல அவரது எழுத்தூழியம் மற்றும் சமய சமூகப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளன. அவரது பவளவிழாவையொட்டி ஜீவநதி சஞ்சிகை சிறப்பு மலர் வெளியிட்டு அவரைக் கௌரவித்துள்ளது.

 கலை இலக்கிய சேவையாற்றி, மனிதப் பண்புகளுடன் வாழ்ந்த குப்பிழான் ஐ.சண்முகன் அவரது படைப்புகள் மூலமாகவும், நண்பர்களின் உள்ளத்திலும் என்றும் வாழ்வார்.

உதயன் சஞ்சீவி  30-04-2023

 

No comments:

Post a Comment