Monday, May 8, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 4

 



முன்றில் 4

இயல்வாணன்

மனிதர்கள் அகவை நிறைவைக் காண்பது பெரிய விடயமல்ல. ஆனால் ஒரு நிறுவனம் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்வதென்பது பெரிய விடயமே. மார்க்ஸிய சிந்தனை வழிப்பட்ட ஒரு இடதுசாரிய அமைப்பின் இலக்கியக் குழுவாக உருவாக்கப்பட்டதே தேசிய கலை இலக்கியப் பேரவை. 1974இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு பரவலாக புத்தக அரங்க விழாக்கள் நடைபெற்று வருகின்றது.

புதிய ஜனநாயகம் - புதிய வாழ்வு - புதிய பண்பாடு என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றி வருகின்றது. யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மலையகம் ஆகிய இடங்களில் தனது செயற்பாட்டினை மேற்கொண்டு வரும் இவ்வமைப்பு அந்த இடங்களில் பல்வேறு ஆய்வரங்குகளையும், கருத்தமர்வுகளையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவை வாசிப்பை ஊக்குவிப்பதில் பெரிதும் சிரத்தையெடுத்து வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. 2000 ஆண்டுகளில் கிராமங்களுக்கு வந்து மக்கள் மத்தியில் நூற்கண்காட்சிகளை நடத்தி, விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது. சனசமூக நிலையங்கள், ஆலய மண்டபங்களை மையப்படுத்தி இந்தச் செயற்திட்டம் அப்போது முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளில் மறைந்த கவிஞர் முருகையன் கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துரையாற்றிமை முக்கியமானதாகும்.

அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும் தேசிய கலை இலக்கியப் பேரவை  வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வு, அறிவியல் எனப் பலதரப்பட்ட நூல்கள் தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தை ம.சண்முகலிங்கம், சி.சிவசேகரம், இ.முருகையன், மாவை வரோதயன், க.தணிகாசலம், இணுவையுர் சிதம்பர திருச்செந்திநாதன், சட்டநாதன், சுபைர் இளங்கீரன், மாதவி உமாசுதசர்மா, சோ.தேவராஜா, நந்தினி சேவியர், இரா.சடகோபன், முல்லை அமுதன், அழ.பகீரதன், சி.மௌனகுரு, சோ.கிருஸ்ணராஜா, கே.எஸ்.சிவகுமாரன், தாமரைச்செல்வி, நீர்கொழும்புர் முத்துலிங்கம், சுபத்திரன், ந.ரவீந்திரன், தில்லைச்சிவன், செ.குணரத்தினம், சோ.பத்மநாதன், சுல்பிகா, மஹாகவி, இதயராசன், பவித்திரன், ரஞ்சகுமார், சுதாராஜ், சி.பற்குணம், இளவாலை விஜயேந்திரன், சபா ஜெயராசா, க.சிதம்பரநாதன் எனப் பலரது படைப்புகள் தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டு, மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் சவுத் ஏசியன் புக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பல நூல்கள் வெளியிடப்பட்டமையால் இந்தியாவிலும் ஈழத்துப் படைப்புகளை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.

தேசிய கலை இலக்கியப் பேரவை ஆரம்பிக்கப்பட்ட 1974ஆம் ஆண்டிலேயே தாயகம் என்ற சஞ்சிகையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 7 இதழ்களுடன் நின்று போன இவ்விதழ் 1983ஆம் ஆண்டிலிருந்து ஓரளவு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுள்ளது. “தாயகம் சஞ்சிகை கலை கலைக்காக என்பதையும், வணிக நோக்குக்கு நிகரான மிக மலினப்படுத்தப்பட்ட இலக்கியப் போக்கையும் நிராகரித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி சமரசமற்ற பாதையில் வழிநடந்து வந்துள்ளது. அத்துடன் அனைத்து முற்போக்கு, ஜனநாயக மக்கள் சார்பு கலை இலக்கியங்களை என்றும் வரவேற்று வருவதுடன் படைப்பாளிகளுக்கிடையேயான புரிந்துணர்வையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி வந்துள்ளது“ என தாயகம் சஞ்சிகையின் 100வது இதழில் குறிப்பிடப்பட்டுள்ளமை அதன் நோக்குநிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.

 தாயகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் பல படைப்பாளிகள் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். காத்திரமான பல படைப்புகள் இச்சஞ்சிகையில் வெளிவந்தன. சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு விடயங்கள் சார்ந்து சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலான ஆக்கங்கள் பலவும் இந்த இதழ்களில் வெளிவந்தன.

 அத்துடன் புதுவசந்தம் இதழ்கள் வருடாந்த சிறப்பு மலர்களாக வெளிவந்துள்ளன. பல்வேறு ஆக்கங்களையும் உள்ளடக்கிய கனதியான மலராக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இதழ் 1973இல் ஆரம்பிக்கப்பட்டாலும் அது தொடர்ச்சியற்று, பின் 2000களில் ஆண்டு மலர்களாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை இலக்கியப் பேரவையினால் சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆரம்பிக்கப்பட்டு, சமகாலத்தில் பேசுபொருளாகவுள்ள விடயங்கள் பற்றி விடய அறிவுள்ளவர்களை அழைத்து கருத்துரைகள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முழுமதி தினத்தை மையமாக வைத்து மாதாந்தம் இந்தக் கருத்தமர்வு நடைபெறுவது வழமை. ஆரம்பத்தில் பலாலி ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற இந்தக் கருத்தமர்வுகள் பின்னர் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை அலுவலகத்தில் நடைபெறுகின்றது. 2011, 2012ஆம் ஆண்டுகளில் சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் கலந்துரையாடல் குறிப்புகள் பிரசுரங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய கலை இலக்கியப் பேரவை 50 வருடங்களை நிறைவு செய்வதையொட்டி பல்வேறு பிரதேசங்களிலும் நூறு மலர்கள் மலரட்டும் என்ற தலைப்பிலான புத்தக அரங்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், அரங்கு சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் மூன்று தினங்கள், இரண்டு தினங்கள் கொண்டதாக இந்த நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தேசிய கலை இலக்கியப் பேரவை கொக்குவிலில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா மல்லாகம் மகா வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி,  இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த வாரம் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் நடைபெறுகிறது.

பேரவையின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாதாந்த ஆய்வரங்குகளும் நடைபெற்று வருகின்றன. ஈழத்து அரங்கு, நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் முதலான பல்வேறு கலை இலக்கிய விடயங்கள் சார்ந்து இந்த ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஈழத்தின் கலை இலக்கிய சமூக மேம்பாட்டுக்கான காத்திரமான திசைவழியில் தேசிய கலை இலக்கியப் பேரவை பயணித்து, சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதன் வரலாற்றுப் பாத்திரம் பெரியது. அது 50வது ஆண்டை நிறைவு செய்வது கூட சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டங்களுடனேயே நினைவுகூரப்படுவது முக்கியமானதாகும்.

உதயன் சஞ்சீவி 16-04-2023

No comments:

Post a Comment