Tuesday, June 14, 2022

 நடமாடும் தகவல் களஞ்சியம் மயிலங்கூடலூர் பி.நடராசன்

இயல்வாணன்

ஒரு படைப்பாளியாக, பதிப்பாசிரியராக, தொகுப்பாசிரியராக, வழிகாட்டியாக இருந்து மந்தமாருதமாகச் சுழன்ற மயிலங்கூடலூர் பி.நடராசன் என்ற ஆளுமையை நாம் இனிக் காண முடியாது. தமது 84வது வயதில் கடந்த 12-05-2022 அன்று யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் அவர் காலமானார்.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் உள்ள மயிலங்கூடலில் 14.10.1939இல் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்திலும், பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியிலும் பெற்றார். ஆங்கில மொழி மூலம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற அவரை அவரது தமிழ் ஆசிரியரான கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை தமிழின்பால் ஆற்றுப்படுத்தினார். அவரது வழிகாட்டல், அயலவரான பண்டிதர் சி.அப்புத்துரையின் தொடர்பு என்பன அவரைத் தமிழ் இலக்கண இலக்கியங்களின்பால் ஈடுபட வைத்தது. கதிரேசர்பிள்ளையிடம் யாப்பிலக்கணத்தைக் கற்றுத் தேர்ந்தார்.  

மல்லாகத்தில் நடைபெற்ற பண்டித வகுப்பில் பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, பண்டிதர் வே.சங்கரப்பிள்ளை, பண்டிதர் பொன்னுத்துரை, பண்டிதர் நாகலிங்கம் முதலானவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று, பால பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தார். அந்த நேரத்தில் அவரது மைத்துனரது வேண்டுகோளின் பிரகாரம் வவுனியா  வண்ணான் சின்னக்குளத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பித்து அதில் ஆசிரியராக செயற்பட்டார். அதன் ஸ்தாபராகவும், தலைமை ஆசிரியராகவும் விளங்கினார். பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக நீண்ட காலம் பல பாடசாலைகளிலும் கடமையாற்றினார்.

சமூகவியல், வரலாறு, அறிவியல், இலக்கியம், இலக்கணம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதியுள்ள இவர் மரபுக் கவிதைகள் பலவற்றையும் எழுதியுள்ளார்.  ஆயினும் சிறுவர் இலக்கியத்துக்கே இவர் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவரது சிறுவர் இலக்கியங்கள் ஆடலிறை மழலைப் பாடல்கள், ஆடலிறை சிறுவர் பாடல்கள், மொழியாக்கச்  சிறுவர் கதைகளான சுதந்திரமாகப் பாடுவேன் ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. இறந்தவர்கள் நினைவாக வெளியிடப்படும் கல்வெட்டுகளில் சிறுவர் பாடல்களைப் பதிப்பித்து வெளியிட்ட இவரது செயற்பாடு பலராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தகக்கது. நல்லூர் ஆசிரிய வள நிலையப் பொறுப்பாளராக இருந்த வேளை- 1985இல் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் சிறுவர் இலக்கியக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை நடத்தியதுடன் பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவிகளுக்கு குழந்தைக் கவிதைகளை எழுதும் பட்டறையினையும் நடத்தினார். மாணவிகளால் எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுத்து பாலர் பா அமுதம் என்ற பெயரில்  நூலாகவும் வெளியிட்டார்.

கையெழுத்துச் சஞ்சிகைகள் உள்ளிட்ட பல சஞ்சிகைகளையும் அவர் வெளியிட்டதுடன் அத்தகைய முயற்சிகளை வரவேற்று ஊக்குவித்தார். மல்லாகத்தில் பண்டித வகுப்பில் பயின்ற வேளை பண்டிதம் என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார். பலாலி ஆசிரிய கலாசாலையில் பயின்ற வேளை அறிவியல் சஞ்சிகையான சுடரின் ஆசிரியராக இருந்து அதனை வெளியிட்டார். தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தில் பணியாற்றிய வேளை அதன் ஆங்கில செய்தி மடலான குறுஊ நேறள டுநவவநச இன் ஆசிரியராக இருந்து அதனை வெளியிட்டார்.

பல நூல்களின் தொகுப்பாளராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றிள்ளார். பல பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், எழுததாளர்களின் நூல்களுக்குழ், ஆய்வேடுகளுக்கும் உசாத்துணைத் தகவல்களைத் தேடி வழங்கி, பிழைகள் திருத்தி, ஒப்புநோக்கி அந்த நூல்களும் ஆய்வேடுகளும் சிறப்பாக வெளிவரக் காரணமாக இருந்துள்ளார். 1972இல் ஆ.சிவநேசச்செல்வனுடன் இணைந்து பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலரை உருவாக்கி வெளியிட்டார். அவருடன் இணைந்து தெல்லிப்பளை கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மறுமலர்ச்சிக்காலம் - இலக்கியச் சிறப்பிதழ் என்ற நூலையும் வெளியிட்டார். அத்துடன் 1971 முதல் 1976 வரையான மகாஜனன் இதழ்களின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

மூதறிஞர் சொக்கனால் உருவாக்கப்பட்ட முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட ஐந்து நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியையும் இவரே முன்னின்று மேற்கொண்டார். கலாநிதி க.சொக்கலிங்கம், பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோரின் இன்றளவும் பேசப்படும் தமிழியல் ஆய்வுநூல்களைப் பிழையறப் பதிப்பித்து வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. 

தமிழின் முக்கிய அரசியல் கவிதைத் தொகுப்பான மரணத்துள் வாழ்வோம் நூலின் தொகுப்பாளர்களுள் இவரும் ஒருவராவார். இவருடன் அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், உ.சேரன் ஆகியோர் இணைந்து 19 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகளைத் தொகுத்து  இந்த நூலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. பாவலர் துரையப்பாபிள்ளையின் சிந்தனைச் செல்வம் நூலை மீள்பதிப்புச் செய்து வெளியிட்டார். சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி : ஆக்கமும் ஆளுமையும் என்ற நூலையும் தொகுத்தார். இடப்பெயர் ஆய்வு, கைலாயமாலை ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.

வித்துவான் கலாநிதி க.சொக்கலிங்கத்துடன் இணைந்து கட்டுரைக் கோவை என்ற நூலையும், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவுடன் இணைந்து தமிழியற் கட்டுரைகள் என்ற நூலையும் எழுதினார். ஈழத்துத் தமிழறிஞர் என்ற தலைப்பில் சி.வை.தாமோதரம்பிள்ளை, கணேசையர் ஆகியோர் பற்றிய கட்டுரை நூலையும் எழுதி வெளியிட்டார்.

இத்தகைய பணிகளை விட அவர் ஆற்றிய பிரதான பணி கற்பித்தலும், வழிகாட்டலுமே. நூல்களை விலை கொடுத்து வாங்கி வாசிப்பதும், அவற்றைப் பற்றி தனது மாணவர்களுக்குக் கூறி வாசிப்பின்பால் அவர்களை ஆற்றுப்படுத்துவதும் அவரது தலையாய பணியாக இருந்தது. அத்துடன் தனது மாணவர்களிடத்தில் படைப்பு உந்தலை ஏற்படுத்தி, அவர்களது ஆக்கங்களைத் திருத்தி, தட்டிக் கொடுத்து, பிரசுர வாய்ப்பினை ஏற்படுத்தி அவர்களை வளர்த்து விட்ட நல்லாசிரியராக அவர் விளங்கினார்.

பின்னாளில் அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது தேர்ந்தெடுத்த கட்டுரைகளை கலாநிதி சி.ஜெய்சங்கர், இயல்வாணன், சி.ரமே~; ஆகியோர் ஈழத்தமிழர் தொன்மையும் வழக்காறுகளும் என்ற பெயரில் தொகுத்து நூலாக வெளியிட்டனர். ம.பா.மகாலிங்கசிவம், சி.ரமே~;, சி.சிவஞானசீலன் ஆகியோர் அவரது பெருந்தொகுப்பு ஒன்றினை ஆடலிறை ஆக்கங்கள் என்ற பெயரில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலம் வெளியிட்டுள்ளனர்.

ஒரு தகவல் களஞ்சியமாக மிளிர்ந்த அவர் ஒரு தனி மனித தோப்பாக விளங்கினார். பலரும் அவரது நிழலில் பயன்பெற்றனர். இன்றோ பெருவிருட்சம் சாய்ந்ததென அவரது வெற்றிடம் நேர்ந்திருக்கிறது. அவர் செய்த பணிகளிலும், அவரது படைப்புக்களிலும், அவரால் உருவாக்கப்பட்டவர்களது நினைவுகளிலும் அவர் சாசுவதமாய் வாழ்வார்.


தமிழ்முரசு 15-05-2022






No comments:

Post a Comment