Wednesday, August 9, 2023

கவியரங்கக் கவிதை

 காலம் : 02-08-2023 பி.ப.3 மணி

இடம் : வலி.தெற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (வலி.தெற்கு கலாசார பேரவை   கலைஞர் ஒன்றுகூடல்)

தலைமை : கவிஞர் த.ஜெயசீலன்

தலைப்பு : ‘காலப் பிழையோ அன்றிக் கடவுள் தரும் தண்டனையோ

        சாலப் பொருந்தி வந்து சா எமக்குத் தருகிறாயோ’

        வன்முறை




வேங்கட மலை முதல் வெண்ணுரைக் குமரியில் 

தீங்கெழில் செய்தமிழ் எந்தமிழே!

பூங்குழ லார்மொழி போலிள மென்மையும்

பொலிந்திடு நன்மொழி எந்தமிழே!

ஆங்கொரு பாரதி ஆர்த்திடு கவிதையில்

அருவியாய் பொழிந்ததும் எந்தமிழே!

தேங்கவி கம்பனும் வள்ளுவன் ஒளவையும்

திகட்டிடக் கவி தந்த எந்தமிழே!

நின்னைப் பணிந்தேன்


முந்துதமிழ் சந்தகவி தந்தஅழ காலே - எம்

முன்றிலுறை கின்றஎழில் ஜெயசீலத் தலைவ!

மந்தமரு தஞ்சேர்ந்த மணிக்கவிதைக் காரன்

மாண்புடைய கவித்தலைவ, வணக்கங்கள் என்றும்.

சுந்தரச் சொல்சேர்த்து சுற்றியுள்ள நிலைநோக்கி

மந்திரக் கவிசொல்லும் மதிப்புயர் கவிஞர்காள்!

வந்தமர்ந் தவையிலே தமிழ்ச் சுவை மாந்தும் எண்ணத்தில்

நந்தமிழ் நயங்கேட்கும் நல்ல சுவைஞர்காள்! வணக்கங்கள்


காலப்பிழையோ அன்றிக் கடவுள்தரும் தண்டனையோ

சாலப்பொருந்தி வந்து நீ சா எமக்குத் தருகிறாயோ?


கண்ட நேரமெல்லாம் செல்போனை நோண்டுகையில் 

மண்டை பிளந்தொருவன் மரித்திட்ட செய்தி வரும்

அண்டை வீட்டார் அடிபட்ட செய்தி வரும்

கொண்டை பிடித்திரு கோதையர்கள் வீதியிலே

சண்டையிடும் காட்சிகளை வலைத்தளங்கள் (நே) அலை காட்டும். 11

ஹொண்டாவில் குழுவாய் வந்து கொலைவாளைக் கையிலேந்தி

முண்டாசு கட்டி முகம் மறைத்து அடிதடி குத்துவெட்டு

சண்டாளர் செய்யும் சங்கதிகள் தினந்தினமும்.

பத்திரிகை ரிவியிலும் பதைபதைக்கும் செய்திகள்தாம்

கத்தை கத்தையாய் பணங் கொடுத்து ஆள்வைத்து – (கூலிக்கு) 11

சொத்துக்கள் சேதமிட்டு பெற்றோல் குண்டடித்து

நர்த்தனங்கள் புரிகின்ற நாடாச்சு நம்நாடு.

தத்துவஞானிகள் சிவபூமி என்ற மண்ணில்

குத்தும் கொலைவெறியும் கொண்டலையுங் கும்பல்களால்

சத்தியமாய் சாந்தி கெட்டு சவபூமியாகிறதே!

பக்திக்கு உரிய மண்ணில் பலிக்களங்கள் திறக்கிறதே!


கூட்டுக் குடும்பத்தில் கூடி வாழ்ந்தவர் நாம்.

வீட்டுக்குள்ளே விரிசலுக்குப் பொத்தலிட்டு – எவருக்கும்

கேட்டிடா வண்ணம் மூடி மறைத்தவர் நாம் - இன்றோ

கோட்டுப் படியேறி குடும்பத்துச் சங்கதியை – உலகம்

கேட்டிடச் சொல்கிறோம் கேடான செய்தியெல்லாம்.

வீட்டுக்குள்ளே வன்முறையின் சதிராட்டம்

கோட்டுச் சூட்டோடு குதூகலித்த மணப்பந்தல்

வாட்டமுற ; ஆயிரங்காலப் பயிர் சோர்ந்து மகிறது.


கல்லுவைத்த கோவிலெல்லாம் கைதொழுத எம்மவர்கள்

கல்லெறிஞ்சு கொல்லுகிற கலிகாலம் வந்ததையா!

பொல்லூன்றும் முதியவர்க்கு வலிந்துதவி செய்பவர்க்கு

கொல்லுகின்ற மனநிலையைக் கொடுவினையாய் கொடுத்தது யார்?

மல்லுக்குக் குழு சேர்த்து மனங்கவராப் பெயருமிட்டு

தில்லிருந்தால் வாவென்று தெருத்தெருவாய் அறைகூவும்

பொல்லாத வாலைகளின் துடுக்கடக்கப் போவது யார்?

வல்ல காவலர்க்கு வாள் குழுவைத் தெரியாதோ?


வன்முறையின் நதிமூலம் எங்கூற்றாய் தோன்றியது?

வாள் வில் சூலம் வேல் கொண்டெங்கள் கடவுளர்கள்

நன்முறைப் படுத்த வன்முறையைக் கைக்கொண்டார்.

நம்புராண இதிகாச வழியெல்லாம் வன்முறைதான்!

மன்னர்கள் வரலாற்று வழியெங்கும் இரத்தந்தான்!

பொன்பொருள் சூறையாடி பெண்கொண்டு முடிமன்னர்

தன்னாட்டை நிறுவிய சங்கதிதான் வரலாறாம்!

சங்கமெனும் பொற்காலம் சண்டைகளின் இழிகாலம்.


சேரனொடு சோழன் பாண்டியனும் (தமக்குள்) சண்டையிட்டு

பேர்கொண்டு கொடிநாட்டி வீரத்தை விளைத்தார்கள்.

போரால் வென்ற எங்கள் திராவிட மன்னரெல்லாம் - தனியாக

ஆரியத்தின் எழுச்சியிலே அனைத்தையும் இழந்து போனார். – பின்னர்

வீறாக எழுந்த சோதரர்கள் பிளவுண்டு

வாராது வரவிருந்த மாமணியைத் தொலைத்தோமே!

கூறாகிக் குழுவாகி குழுவுக்குள் கூறாகி

நார்நாராய் கிழிகின்றார் நம்தமிழின் தலைவர்கள்!


நம்முன்னால் முரசறையும் சினிமாவும் நாடகமும் 

வன்முறைக் காட்சிகளை மண்டைக்குள் திணிக்கிறது.

அம்மென்னு முன்னே அடிதடிக் காட்சிகளை 

நம்சினிமா காட்டி நம்மனதைச் சிதைக்கிறது.

கம்மென்றிருந்து கல்வி கற்க வேண்டியவர்

கம்புடனே குழுவாக அடிதடியில் இறங்குகிற

வன்முறைக் காட்சிகளை சினிமாவே தருகிறது.

நாயகனின் இலக்கணமே வன்முறைதான் என்கிறது.


பாடம் புகட்டும் ஆசிரியர் கம்பெடுத்து

ஆடுகின்ற சன்னதமும் அணிசேர்ந்து கொள்கிறது.

பாடம் படித்தவர்கள் (அதேவழியில்) பாடம் எடுக்கிறார்கள்.

பார்த்து நாம் வாய் மூடி பதைபதைத்து நிற்கின்றோம்.

கேட்க ஒருவரில்லை; கிளர்ந்தெழுந்து இதற்கு ஒரு 

காட்டமாய் முடிவெடுக்கும் கவனமும் யார்க்குமில்லை.

வாட்டும் துன்பம் போக்கி வளமானசமு தாயத்தை

தேட்டமாக்கும் தலைப்பிறை தெரியவில்லை எம்வானில்.


இப்படியே இருந்து நாம் இறந்தழிந்து போவதுவோ?

செப்படி வித்தையென்று சொல்லிக் கடந்து போவதுவோ?

தப்பென்றுரைத் தவர்க்கு தகுந்தவழி காட்டி நல்ல

பக்குவ வாழ்வுக்குப் பதப்படுத்த முனைவோர் யார்?

துப்பாக்கி வேண்டாம் சுடுகுழல்கள் இனி வேண்டாம்

தப்பாக யாரும் பிறப்பதில்லை மண்மீது.

பக்குவமாய் எடுத்துரைக்கும் பாங்கான வழி காண்போம்

முப்போதும் அவர் வாழ முறையான வழி சமைப்போம்.


கல்வியில் இருந்து கலை(க்)கின்ற பிள்ளைகளே

நல்வழி கெட்டு நடுத்தெருவில் நிற்கின்றார்.

பல்லோராய் கூடி போதையினை மாந்தி நாளும்

அல்வழியில் சென்று அடித களவு செய்தார். – அவரை

நல்விதமாய் மாற்றுகின்ற நலமான கல்வி வேண்டும்.

நன்மனத்தோர் ஆசுநீக்கி அவரையாண்டு கொள்ள வேண்டும்.

பொல்லாத விதியாக தமிழ்ச்சாதி அல்லலுறும்

வல்வினை நீங்கி நல்லோரை பிறக்க வேண்டும்.


ஆற்றலாம் இளைஞர்க்கு அளித்து நல்ல பயிற்சியினால்

மாற்றத்தைக் காண மனப்புரட்சி செய்ய வேண்டும்.

தோற்றுத் துவண்டு விரக்தி மனச்சோர்வு 

ஊற்றெழா வண்ணம் (அவர்) உளத்தைக் காக்க வேணும்.

நாற்ற மெடுக்கும் போதை மது புகையொழித்து

தோற்றும் புதுச் சமுதாயம் திரண்டெழுந்து வரவேண்டும்.

ஆற்றலாம் இளைஞர்சக்தி வளமானால் எம்நாடு

ஏற்றமுறும் : எழுந்துயர்ந்து முன்னேறும்.










 


No comments:

Post a Comment