மு.தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம்
-இயல்வாணன்
தமிழில் சூழலியல் குறித்த கவனமும், அது தொடர்பான ஆக்கங்களும் குறைவு. ஆயினும் காலத்துக்குக் காலம் பலரும் சூழல் கேடுறுத்தப்படுவது குறித்து எழுதி வந்திருக்கிறார்கள். ஊற்று, ஆதாரம், நங்கூரம் என்று எமது சுற்றுச் சூழலை முக்கியப்படுத்தி பல சஞ்சிகைகளும் வெளிவந்திருக்கின்றன. மில்க்வைற் கனகராஜா ஒரு காலத்தில் தனி மனிதனாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும், மரங்களை நடும் செயற்பாட்டையும் மேற்கொண்டார். நெல்லியடி மா.கனகராஜா வல்லைவெளியில் மரநடுகையைச் செய்தார். பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் பரந்தளவில் இப்பணியைச் செய்தது.
சுற்றுச்சூழல் அக்கறையுடன் தொடர்ந்து பயணிப்பவர் பொ.ஐங்கரநேசன். அவருடைய சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகள் முக்கியமானவை. அவை ஏழாவது ஊழி என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இத்தகைய பணியில் ஈடுபட்டிருப்பவர் மு.தமிழ்ச்செல்வன்.
மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மாவட்டத்தின் காடுகள் சூழ்ந்ததும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஊற்றுப்புலம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இயற்கையின் சீதளத்தை அளைந்து வளர்ந்தவர். பசிய மரங்களும், பறவைகளும், விலங்குகளும் கொண்ட இயற்கையில் ஊறித் திளைத்த அவரது வாழ்க்கை யுத்தத்தின் பின்னர் - அந்த அழகிய வாழ்க்கை- மெல்ல மெல்லச் சிதைவுறுதலைக் கண்டு அலைவுற்றவர்.
ஒரு ஊடகவியலாளனாக, ஒளிப்படக் கலைஞராக, பத்தி எழுத்தாளனாக, சமூக நோக்குடையவராக பலநிலைகளில் அவர் படிமலர்ச்சி கண்டாலும் இயற்கையுடன் இயைந்த வாழ்வின் சிதைவு அவரைப் பாதித்தே வந்துள்ளது. அதனால்தான் சமூகவியல், அரசியல் சார்ந்து அவர் எழுதியுள்ள போதும் சூழலியல் குறித்த அவரது எழுத்துகள் அழுத்தமானவையாக அமைந்துள்ளன. அவற்றை யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஈழநாதத்தில் எழுதியதில் இருந்து அவ்வப்போது கட்டுரைகளாக எழுதி வந்துள்ளார். ஒளிபடங்களாகவும் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளார்.
இவற்றை நஞ்சாகும் நிலம் என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய இக்கட்டுரைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் சூழலியல் அச்சுறுத்தல்கள், பாதிப்புகள், இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்பவற்றை விளக்குவனவாக எழுதப்பட்டுள்ளன. சூழலியல் பாதிப்புகள் எங்கோ ஓரிடத்தில் நடந்தாலும் அது ஒட்டுமொத்த பூமியையும் பாதிக்கும் என்பதை தமிழ்ச்செல்வன் இந்தக் கட்டுரைகள் ஊடாக அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.
இந்த நூலுக்கு மூத்த எழுத்தாளர் கருணாகரன் அறிமுகத்தை எழுதியுள்ளார். வாழ்த்துரையை வண.பிதா யோசுவா அடிகளார் வழங்கியுள்ளார். எழுத்தாளர் நிலாந்தன் முன்னுரை எழுதியுள்ளார். இவற்றில் தமிழ்ச்செல்வனின் பன்முகப் பரிமாணங்களை அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
முதலாவது கட்டுரை வன்னியின் வனாந்தரங்களைப் பாதுகாக்கத் தவறின் வாழ்விழந்து போவோம் என்பதை சொல்கிறது. தொடர்ந்து நடைபெறும் காடழிப்பு, காட்டின் ஆதாரமான கிரவல் மண்ணகழ்வு என்பவற்றால் மாரிமழை குறைவடைவது, வரட்சி, வன்னியின் கிணறுகள் வற்றுதல், அதனால் எழும் மனிதாயப் பிரச்சினைகளை இக்கட்டுரை பேசுகின்றது. இந்தக் கபளீகரங்களைப் பார்த்துக் கொண்டிருப்போரை, அதிகாரிகளை இக்கட்டுரை கண்டிக்கிறது. சூழலியல் பிரச்சினைகளுக்கான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது.
‘சாதாரணமாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியில் நிலத்தடி நீர்மட்டம் 20 முதல் 40 அடி வரை காணப்பட்டது. இன்றோ 100 முதல் 150 அடிகளுக்குக் கீழ் போய் விட்டது’ என்று அவர் சொல்வதில் இருந்து இதன் விபரீதத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். கிளிநொச்சி காடுகள் சூழ்ந்த பிரதேசமாக இருப்பினும் காடழிப்பினால் கடும் வெப்பம் நிலவும் சூழல் இருப்பதற்குக் காரணம் தோலிருக்க சுளை விழுங்கிய கதைதான். வன்னியின் வீதியோரங்களை அண்டி மரங்கள் நெருக்கமாக காடாக உள்ளன. உள்ளே சென்றால் மரங்கள் தறிக்கப்பட்டு, கிரவல்கள் அகழப்பட்டு வெட்டவெளியாக காட்சி தருகின்றது என்பதை அவர் சொல்லும் போது வெம்மையை உணர வைக்கிறது.
மறுபுறத்தில் குளங்கள் காணாமல் போகின்ற அபாயத்தை இவரது கட்டுரைகள் பேசுகின்றன. காணாமல் போன குஞ்சுக்குளம் என்ற கட்டுரையில் வன்னேரியை அடுத்து மக்கள் வாழ்ந்த குஞ்சுக்குளம் பிரதேசம் உவர்நீராக மாறியமையால் அந்தப் பிரதேசத்தை விட்டு மக்கள் மெல்ல மெல்ல வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்த கதையைப் பேசுகிறது. மண்டைக்கல்லாறில் அணை கட்டப்படாததால் கடல்நீர் புகுந்து நன்னீர்க் குளத்தை உவர் நீராக்கி விட்டது. ஆயிரம் ஏக்கர் பயிர் செய்யப்பட்ட நிலத்தில் இன்று வெறும் 25 ஏக்கரில் பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. இதுவும் இல்லாமல் போகலாம் என்பது எவ்வளவு துயரமானது!
இன்று சுருங்கி வருகின்ற, ஒருநாள் காணாமல் போகப் போகின்ற கிளிநொச்சிக் குளத்தைப் பற்றிய கட்டுரையும் முக்கியமானது. கனகாம்பிகைக் குளத்தின் உபரி நீர் ரை ஆறாக வந்தும், இரணைமடுக் குளத்தின் இடதுகரை வாய்க்கால் மூலமும் நீரைப் பெறும் இக்குளம் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் நீரேந்து பிரதேசங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு, சூழல் கேடுறுத்தப்படுவது ஒரு புறம். சட்டவிரோதமாக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு மண் நிரவப்பட்டு குடிமனைகள் உருவாக்கப்படுகின்றமை மறுபுறம். அரசியல் மற்றும் அதிகாரத் தரப்புகள் இதற்கு மறைமுகமாக ஒத்துழைக்கின்றன. வடிவேல் பாணியில் குளத்தைக் காணவில்லை என்று சொல்லும் நிலை வரும் என்பதை தமிழ்ச்செல்வன் இக்கட்டுரையில் கோடிகாட்டுகிறார்.
வடக்கின் பெரிய குளமான இரணைமடுக் குளத்தின் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்க வேண்டும் என்ற கட்டுரை இரணைமடுக் குளத்தின் வரலாற்றைச் சொல்வதுடன் தற்போது 7ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் பயன்பெறுவதை வெளிப்படுத்துகிறது. யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்குவதன் பொருட்டு இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டு, அணை உயர்த்தப்பட்டது. தற்போது பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்கப்படுவது குறித்துச் சிந்திப்பதால் அந்த நீரை மேற்குப்புற கிராமங்களின் விவசாயத் தேவைக்குப் பயன்படுத்தப்படலாம் என காவேரி கலாமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயத்தை அவர் முன்வைக்கிறார். அத்துடன் விவசாயிகள் யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை வழங்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பான தனது விமர்சனத்தையும் அறிவுபூர்வமாக முன்வைக்கிறார்.
இவ்வாறே குழாய்க்கிணறுகள் : நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் என்ற கட்டுரையில் ஆழமாக அமைக்கப்படும் குழாய்க் கிணறுகள் நிலத்தை உவரடையச் செய்யும் ஆபத்தை வெளிப்படுத்துகிறார். அவ்வாறே மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்கான யுத்தமாக அமையும் என்பதை உலகளாவிய அனுபவங்களோடு ஒரு கட்டுரையில் முன்வைக்கிறார். இன்னொரு கட்டுரையில் இரசாயன உரம், மருந்துப் பாவனை காரணமாக நிலம் நஞ்சாவதை புள்ளிவிபர ஆதாரங்களோடு முன்வைக்கிறார். கண்டல் தாவரங்களின் அழிவு சூழல் சமநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பு, மர நடுகையின் அவசியம், பாலியாற்றுப் புனரமைப்பின் உள்ளடக்கம், கௌதாரிமுனை மணல் அகழ்வால் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட பல விடயங்களை இவரது கட்டுரைகள் பேசுகின்றன.
சுற்றுச்சூழல் குறித்த கூருணர்வு உடையவர்களால்தான் இத்தகைய கட்டுரைகளை எழுத முடீயும். எழுதுவது மட்டுமல்ல மணல் மாபியாக்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களுக்கு உதவும் அதிகாரத்தரப்புகளையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தும் வருகிறார். கருணாகரன் சொல்வது போல சூழலியல் பற்றிப் பேசுவது அதிகாரத் தரப்புக்களின் பகையைத் தேடுவது என்ற அச்சத்தில் பலருமிருக்க தமிழ்ச்செல்வன் ஆபத்துகளை எதிர்கொண்டு சுற்றுச்சூழலுக்காகக் குரல்கொடுப்பது பெரிய பணி.
03-03-2024 வீரகேசரி
No comments:
Post a Comment